ஈஸ்வரனின் ஈஸ்வரி
அத்தியாயம் 1
மதுரை ரத வீதியில் ஒரு வீட்டில் அதிகாலை சுப்ரபாதம் ஓடிக் கொண்டு இருந்தது. அதாவது அந்த வீட்டின் மூத்த பிள்ளை, செல்ல பிள்ளை, சோம்பேறி கழுதை என்று பற்பல பெயர்களால் அழைக்கப்படும் நம் நாயகி ஈஸ்வரிக்கு தான் அவள் தாயாரின் சுப்ரபாதம் ஓடிக் கொண்டு இருக்கிறது.
“மணி எட்டாக போகுது, இன்னும் மெத்தையை விட்டு எழுந்திக்கல. நாளைக்கு போற வீட்டுல எனக்கு என்ன பெயர் வாங்கி கொடுக்க போறான்னு தெரியல, அடியே இப்போ நீ எழுந்திக்கல அடுத்து பூரி கட்டையை தூக்கிட்டு வருவேன் பார்த்துக்க” என்று அவளின் தாயார் சாந்தா தேவி அவளை வசை பாடிக் கொண்டே காலை வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
“இந்த வீட்டுல அம்மாவோட சுப்ரபாதம் இல்லாம எழுந்தா, அது தெய்வ குத்தமாகிடும் அப்படினு தெரியாதா டாடி உங்க பொண்டாட்டிக்கு. எப்போ தான் புரிஞ்சிக்க போறாங்களோ, அது ஆண்டவனுக்கே வெளிச்சம்” என்று எப்பொழுதும் போல் அவளின் தாயை வம்பிழுத்து விட்டு குளிக்க சென்றாள்.
“எனுங்க! நீங்க கொடுக்கிற செல்லத்தில் தான் அவ இப்படி இருக்கிறா. நாளைக்கு புகுந்த வீட்டில் இப்படி இருந்தா, அவ மாமியார் என்னையும் சேர்த்து தான் திட்டுவாங்க, என்ன பிள்ளை வளர்த்து இருக்கீங்க அப்படினு” என்று கணவர் சங்கரனுகுக்கும் லட்சசார்சனை நடத்தினார்.
அவரோ எப்பொழுதும் பேசுவது தான் என்பது போல், சிரித்துக் கொண்டே காலை தினசரி பேப்பரை படித்துக் கொண்டு இருந்தார். சங்கரன், சாந்தா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள்.
மூத்தவள் தான் ஈஸ்வரி, பக்கத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் தான் b.a. (சமூகவியல்) எடுத்து படிக்கிறாள். இறுதி வருட படிப்பில் இருக்கிறாள், வீட்டின் செல்ல பிள்ளை இவள்.
அடுத்தது அவளின் தம்பி கணேஷ், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். ஆண்பிள்ளை பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று அவனின் தந்தை சொல்லி வளர்த்ததில், அவன் எப்பொழுதும் பொறுப்பாக எல்லாவற்றையும் செய்யக்கூடியவன்.
ஆகையால் அவ்வீட்டில் அவனுக்கு சலுகைகள் அதிகம், அவனின் அக்கா ஈஸ்வரி கூட சில சமயம் எனக்கு அண்ணாவா பிறந்து இருக்க வேண்டியவன் டா நீ, தப்பி தவறி தம்பியா பிறந்துட்ட என்று கிண்டல் செய்யும் அளவிற்கு அவன் மேல் அவளுக்கு பாசம் அதிகம்.
இருந்தும் இருவருக்கும் அவ்வப்பொழுது செல்ல சண்டைகள் நிகழாமல் இருக்காது. அதை தீர்த்து வைக்க அவர்களின் அன்னை சாந்தா தான், பெரும்பாடு படுவார்.
கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டு வந்தவள், உணவு மேஜையில் இருந்த இட்லி, சாம்பார், சட்னி அவளை வரவேற்றது.
“அம்மா! கொத்துகறி சொல்லிட்டு சாம்பார் வச்சு இருக்கீங்க, இது எல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்” என்று அங்கு இருந்தே கிச்சென் அறைக்குள் தோசை வார்த்துக் கொண்டு இருக்கும் அவள் அன்னையிடம் முறையிட்டாள்.
அவரோ, தோசை சுடுவதிலும் அவளுக்கு மதியத்திற்கு சாம்பார் சாதமும், வெண்டைக்காய் கூட்டும் டிஃபன் டப்பாவில் அடைத்துக் கொண்டும் வேலைகளில் கவனமாய் இருந்தார்.
“பட்டுகுட்டி! இன்னைக்கு கிருத்திகை டா, அதான் அம்மா அசைவம் வைக்கல. உனக்கு தான் தெரியுமே டா, அப்புறம் ஏன் டா அம்மாவை வம்பு இழுக்கிற, பாவம் தானே” என்று அன்னைக்கு சப்போர்ட்டாக பேசும் தன் தந்தையை பார்த்து புன்னகைத்தாள்.
“அப்பா! இனி அம்மாவை நான் ஒன்னும் சொல்லல போதுமா. அம்மா எனக்கு டைம் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன் காலேஜ்க்கு, அப்பா பை” என்று கூறிவிட்டு கிளம்ப முயன்றவளை தடுத்தார் அவளின் அன்னை.
“காலையில் சாப்பிட்ட ரெண்டு இட்லி எப்படி பத்தும் உனக்கு, இந்தா உனக்கு பிடிச்சது வச்சு இருக்கேன் போய் சாப்பிட்டு உருப்படியா படிச்சிட்டு வா, பார்த்து போக சொல்லு அந்த தடியனை”.
“அவன் பாட்டுக்கு ரேஸ் ஒட்டுறவன் மாதிரி, வேகமா போய்ட போறான். கொஞ்சம் பார்த்து வண்டியை ஓட்ட சொல்லு, இன்னைக்கு சாயிந்திரம் காலேஜ் முடிச்சிட்டு வீட்டுக்கு வர சொல்லு, அவனுக்கு பிடிச்ச கேசரி, வடை செய்து வச்சு இருக்கேன்” என்று அவன் கூறி முடிக்கவும், வீட்டின் வெளியே ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
“சரி மா, நான் கிளம்புறேன் இன்னும் லேட் பண்ணா சத்தம் போடுவான், பை மா, பை அப்பா” என்று கூறிவிட்டு சிட்டாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாள்.
பைக்கில் அவள் ஏறி உட்காரவும், வண்டி சீரான வேகத்தில் அவர்கள் கல்லூரி நோக்கி பயணமானது. அமைதியாக இருந்தால் அது ஈஸ்வரி இல்லையே, ஆகையால் அவனிடம் சலசலவென்று பேச தொடங்கினாள்.
“டேய் பீட்டர்! அம்மா உன்னை சயிந்திரம் வீட்டுக்கு வர சொன்னாங்க டா” என்று கூறியும் அவன் வாய் திறக்காமல் இருப்பதை பார்த்து, அவள் ஜெர்க்கானாள்.
அவள் அறிந்த பீட்டர் ஓயாமல் இவளை விட அதிகமாக பேசுபவன், இந்த மௌனம் இன்று ஏன் என்று அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. கல்லூரி வரும் வரை அவளும் சலிக்காமல் கேட்டு பார்த்து விட்டாள், அவன் வாயை மட்டும் திறக்கவே இல்லை.
“இன்னைக்கு பெட் கட்டினதுல நான் தான் மங்கம்மா வின் பண்ணேன், அதனால எனக்கு நீ நாளைக்கு கொத்து பரோட்டா செய்து தரணும் பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு காதில் இருந்த ப்ளூடூத் ஹெட்செட்டை கழட்டிவிட்டு ஈஸ்வரியை பார்த்தான்.
அவளோ இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, அவனை மிகவும் பாசமாக பார்த்தாள். அவளின் பார்வையை பார்த்தவன், அசடு வழிந்து கொண்டே தனக்கு சோறு முக்கியம் என்பது போல் சைகை செய்யவும், அவனை அடிக்க கையில் எதும் கிடைக்கிறதா என்று பார்த்தவள், தன் கையே தனக்கு உதவி என்று எண்ணி அவனை அடிக்க துறத்தினாள்.
அவளின் செயல்களை நன்கு அறிந்தவன், அடுத்து அவள் என்ன செய்வாள் என்பதை அறிந்து ஓட தொடங்கி இருந்தான். இருவரை பற்றி நன்கு அறிந்தவர்கள், அவர்களின் இந்த சண்டையை ரசித்து விட்டு சென்றனர்.
சிலர் அவர்களின் நட்பை கண்டு பொறாமை என்னும் தீயில் வெந்து கொண்டு இருந்தனர். ஆனால் அங்கு இதைக் கண்ட ஒருவன், கண்களில் கோபக் கனலை வைத்துக் கொண்டு அவர்களை எச்சரிக்கும் பார்வை பார்த்து சென்றான்.
அந்த பார்வையை புரிந்த பீட்டர், அமைதியாக கடந்து செல்ல நினைக்க ஈஸ்வரியோ அவனை அப்படி கடந்து செல்ல விடவில்லை.
“ஏன் டா இப்படி பம்முற? சின்ன வயசில் இருந்து நாம இப்படி தானே இருக்கோம். நீ நேத்து வந்த அந்த சிடுமூஞ்சி வாத்தியார் எதோ சொன்னான் சொல்லி, உடனே என் கிட்ட நீ டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுற”.
“இது கொஞ்சம் கூட சரியில்லை சொல்லிட்டேன், நாம நாமளா தான் இருக்கணும் அப்படினு சொல்லி இருக்கேன் இல்லையா. அப்படியே தான் இருக்கணும் புரியுதா! சும்மா அந்த ஆளை பார்த்து பம்முன்ன தெரிஞ்சது அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று மிரட்டிவிட்டு அவளின் வகுப்புக்கு சென்றவளை பார்த்து சிரித்துக் கொண்டான்.
பீட்டர், அவளின் உயிர் நண்பன்,
அண்ணன், பாதுகாவலன் எல்லாம் அவனே. சிறு குழந்தையாக அவளை எப்பொழுது, அவன் கைகளில் எந்தினானோ அப்பொழுதே அவளை பாதுகாக்க தொடங்கி விட்டான்.
இங்கு அவன் M.B.A. இறுதி வருடம் படிக்கிறான், தினமும் அவன் தான் அவளை கூட்டிக் கொண்டு வருவது. இருவரது தந்தையும் நெருங்கிய தோழர்கள், அருகருகே வீடும் கூட ஆகையால் அந்த நட்பு இன்னும் தொடர்கிறது.
இருவரின் தாய்மார்களும் அக்கா, தங்கை உறவு கொண்டாடி ஒரே குடும்பம் போல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பண்டிகையின் பொழுது இவர்கள் அங்கே செல்ல, இவர்கள் பண்டிகையின் பொழுது அவர்கள் இங்கே வர என அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது.
அவளின் வகுப்பறைக்கு வந்த ஈஸ்வாியோ, அங்கே தங்களுக்குள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த தோழிகளை பார்த்து என்னவென்று கேட்டாள்.
“ஹே ஈஸ்! நம்ம கிளாஸ்க்கு இனிமே ஈஸ்வரன் சார் தான் கிளாஸ் இஞ்சார்ஜ். நாம இனி அவர் கிட்ட தான் ரிபோர்ட் பண்ணனும், எதுனாலும்” என்று அவள் தோழி வசுமதி கூறவும், அவள் சிறிது தடுமாறினாள் மனதில்.
“ஆத்தி! அந்த சிடுமூஞ்சி வாத்தியாரா! அவனும் அவன் முறைப்பும், சிரிப்பே இருக்காது அந்த முகத்தில். இதுல ஸ்ட்ரிக்டா வேற இருப்பான், தப்பு பண்ணா உடனே கெட் அவுட் தான்”.
“ஆண்டவா! இந்த கிளாஸும், கிளாஸ் மக்களையும் அந்த வாத்தியார் கிட்ட இருந்து நீங்க தான் காப்பாத்தனும்” என்று மானசீக வேண்டுதல் வேறு நடத்தினாள்.
ஆனால் வெளியே எப்பொழுதும் போல், அவளின் கெத்து குறையாமல் பார்த்துக்கலாம் விடுங்கடி என்றுவிட்டு அவளின் இருக்கையில் சென்று அமர்ந்தாள். அதன் பிறகு பிரயேர் ஆரம்பிக்கும் முன் வரை ஒரே அரட்டை தான் அங்கே, எல்லாம் புது பட ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் தான்.
பிரயேருக்கான மணி அடிக்கவும், எல்லோரும் அங்கே வகுப்புக்கள் எழுந்து நின்றனர். சரியாக அதே நேரம் ஈஸ்வரணும் வகுப்புக்கள் நுழைந்து இருந்தான், இண்டர்காம் வழியாக பிரெயேர் ஆரம்பிக்கவும் கண்ணை மூடிக் கொண்டு எல்லோரும் இன்றைய நாள் நன்றாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
பிரேயேர் முடியவும், முதல்வர் சில முக்கிய அறிவிப்புகள் கூறி முடித்தார். அதன் பின் முதல் வகுப்புக்கான மணி அடிக்கவும், எல்லோரையும் அமர சொல்லிவிட்டு ஈஸ்வரன் பதிவேட்டு எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு பெயராக கூற தொடங்கினான்.
தங்களின் வருகையை எல்லோரும் பதிவு செய்த பின்னர், அன்றைய வகுப்பில் எடுக்க வேண்டிய பாடத்தை எடுக்க தொடங்கினான். Principles of psychology இது தான் அவனது பாடம், அதில் அவன் கற்று தேர்ந்து இருந்தான்.
ஆகையால், அதை எப்படி சுவாரசியமாக நடத்த வேண்டும் என்று நன்றாக தெரிந்த வித்தகன். அவன் வகுப்பு என்றால், எல்லோரும் விரும்பி கவனிப்பார்கள். அதிலும் ஈஸ்வரி, அவன் பாடத்தில் எப்பொழுதும் டாப்பாக தான் இருப்பாள்.
அவன் பாடம் எடுக்கும் முறை அப்படி அழகாக இருக்கும், இதில் யாரும் பரிட்சையில் தோர்க்க மாட்டார்கள். அந்த அளவிற்கு, அவன் ஒவ்வொருவருக்கும் ஏற்றபடியாக பாடம் எடுப்பான்.
“ஓகே! இன்னைக்கு இந்த டாபிக் போதும், இதில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் ஸ்டூடண்ட்ஸ்” என்று அவன் கூறிய அடுத்த நொடி ஈஸ்வரி எழுந்தாள்.
அவனின் புருவம் சுருங்கியது, ஏனெனில் அவனுக்கு நன்றாக தெரியும் அவளுக்கு எல்லாம் புரிந்தது என்று. வகுப்பில் ஒவ்வொருவரும் எப்படி என்று, அவன் நன்கு அறிவான். அதனால் தான் அவள் எழுந்தவுடன், அவனின் புருவம் யோசனையில் சுருங்கியது.
“சார்! ஐ ஹவ் டவுட். ஆண், பெண் நட்பு பற்றி இந்த பிரின்சிபில் என்ன சொல்ல வருதுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுறீங்களா சார். ஏன் கேட்கிறேனா சில பேருக்கு எத்தனை தடவை சொன்னாலும், மண்டையில் உரைக்க மாட்டேங்குது பாருங்க”.
“அதுக்கு நீங்க கொஞ்சம் புரிற மாதிரி இதை பத்தி டிடைல்லா சொன்னா, நானும் அப்படியே அதை அந்த ஜென்மங்களுக்கு கன்வே பண்ணிடுவேன்” என்று கூறிவிட்டு அமர்த்தலாக அமர்ந்தவளை பார்த்து, அவனுக்கு முதன் முறையாக நிறைய நாட்கள் கழித்து சிரிப்பு வந்தது.
“பாவி! அத்தனை பேரு முன்னால இப்படி எல்லாம் நடந்துகிட்டா, நாளைக்கு சில பேரு இதே மாதிரி நமக்கு ஏன் இல்லை அப்படின்ற எண்ணத்தில், தப்பான ஆட்கள் கிட்ட விழுந்துடுவாங்களே அப்படின்ற பயத்தில் சொன்னா, எனக்கே இப்படி பாடம் எடுக்கிறா பாரேன்”.
“ஷீ இஸ் ஸ்மார்ட் அண்ட் டேஞ்சரஸ். ஐ ஹவ் டூ பீ கேர்புள் வித் ஹேர், ஆல்வேஸ்” என்று எண்ணிக் கொண்டு தனக்குள்ளே சிரிப்பை மறைத்து விட்டு, அதற்கான பதிலை கூற தொடங்கினான்.
அவன் கூற கூற, கேட்டு இருந்தவளுக்கு தலையே சுற்றியது. தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள், தனக்கே திருப்பி விட்ட அவன் பதிலை கேட்டு.
அதற்குள் அடுத்த வகுப்பிற்க்கான மணி அடிக்கவும், அவன் உடனே அன்றைய பாடத்தின் ஒரு பகுதியை அஸைன்மெண்ட் கொடுத்துவிட்டு வெளியேறினான். அதன் பிறகு ஈஸ்வாிக்கு அடுத்த பாடத்தில் கவனம் சென்றாலும், அவன் கூறிய பதிலில் மனம் நின்று விட்டது.
அதை பற்றி மேலும் எண்ணாமல் இருக்க, அவளுக்கு அடுத்த அடுத்த வேலைகள் அடுத்து வரிசை கட்டி நிற்கவும், இதை ஒதுக்கி வைத்துவிட்டு கவனத்தை அதில் செலுத்தினாள்.
கல்லூரி முடிந்து மாலை பீட்டருடன் வீட்டுக்கு வந்தவள், அமைதியின் சொரூபமாக இருந்தவளை எல்லோரும் விநோதமாக பார்த்தனர்.
“பீட்டரு! இவ எதோ மந்திரிச்சு விட்டவ மாதிரி, இப்படி அமைதியா இருக்கா, என்ன விஷயம்?” என்று அவனிடம் ரகசியமாக கேட்டார் சாந்தா.
“அது ஒன்னும் இல்லை சாந்தா மா, காலையில் அவ கிட்ட கொஞ்சம் விளையாடிட்டேன் அதான் அந்த கோபத்தை இப்போ அவ காட்டிக்கிட்டு இருக்கா, வேற ஒன்னும் இல்லை” என்று அவரை சமாதானப்படுத்தினான்.
“அவ்வளவு தானா! நான் கூட எதோ நல்ல புத்தி வந்திருச்சுண்ணு நினைச்சுட்டேன். அம்மா அவளை பத்தி தெரிஞ்சும், நீங்க இப்படி பதறலாமா?” என்று அப்பொழுது தான் ஸ்பெஷல் கிளாஸ் முடித்துக் கொண்டு வந்த அவள் தம்பி கணேஷ், அவளை வம்பு செய்தான்.
அவ்வளவு நேரம் யோசனையில் இருந்தவள், தம்பியின் சீண்டலை உணர்ந்து அவனை பார்த்து முறைத்தாள்.
“பார்த்தீங்களா! அவளாவது! அமைதியா!” என்று மீண்டும் வம்பு செய்தவனை இப்பொழுது துரத்தி அடிக்க ஓடினாள்.
இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் அடுத்த அரை மணி நேரத்திற்கு அங்கு நடந்தேறியது. பின்னர் பீட்டர், சிறிது நேரத்தில் அவன் வீட்டிற்கு கிளம்ப, ஈஸ்வரி இரவு உணவிற்கு அன்னைக்கு உதவிவிட்டு அப்பொழுதே உணவையும் முடித்துக் கொண்டு, அவளின் அறைக்கு வந்து அசைன்மெண்ட் எழுத தொடங்கினாள்.
பின்னர் அன்றைய பாடத்தை ஒரு முறை ஓட்டி பார்த்தவள், ஈஸ்வர் நடத்திய பாடத்தை படிக்கும் பொழுது, அவன் பதிலை ஒரு தடவைக்கு பல தடவை நினைத்து பார்த்தாள். இதே பதிலை வீட்டினரே சில வருடத்திற்கு முன் சொல்லி இருந்தனர், அதை அப்பொழுது வேடிக்கையாக கடந்து சென்று இருக்கிறாள்.
இன்று ஒரு ஆசிரியராக, அவன் நடத்தும் பாடத்தின் ஒரு பிரிவாக இவளின் கேள்விக்கு அவன் பதிலை கொடுத்த விதம், இவளை சற்று யோசிக்க வைத்து இருக்கிறது. அதன் விளைவாக மறுநாள் அவள் எடுத்த முடிவில் வீட்டினர் நம்ப முடியாமல், அவளை ஏற இறங்க பார்த்து வைத்தனர்.
அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவள் கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.
“எனுங்க! திடீர்னு நம்ம பிள்ளைக்கு என்ன ஆச்சு? யாரோ இவளை போதிமரத்துகு அடியில் தள்ளி விட்டுட்டாங்களா என்ன?” என்று அவளின் அன்னை சாந்தா, நம்ப முடியாமல் கணவரிடம் கேட்டார்.
“இப்போ தெளிவா யோசிக்க ஆரம்பிச்சுட்டா, இனி அதை நினைச்சு மட்டும் சந்தோஷப்படு. சரி எனக்கு நேரமாகிடுச்சு, நான் கிளம்புறேன் சாந்தா” என்று கூறிவிட்டு அவர் கிளம்பினார்.
இங்கே கல்லூரிக்கு வந்த பீட்டர், தோழியின் மாற்றம் கண்டு அவளை தான் கவனித்துக் கொண்டு இருந்தான்.
“இவ எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தா? யாரும் எதுவும் சொல்லி இருப்பாங்களா? இருக்காது! அப்படி இருந்தா அவ அவங்களை வச்சு செய்து இருப்பாளே, சம்திங் நாட் ரைட்” என்று அவன் ஒரு பக்கம் அவளை நினைத்து வருந்தினான்.
இப்படி எல்லோரையும் குழப்பிவிட்டு வந்தவளோ, ஒருவனின் வருகைக்காகவும், அவனின் பதிலுக்காகவும் காத்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால் அவனோ, பாடம் எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தானே தவிர, அவளின் செய்கைக்கு எந்த ஒரு பாராட்டோ, ஒரு சின்ன செய்கையோ அவளுக்கு பிரதிபலிக்கவில்லை. அதில் அவள் ஏமாற்றம் அடைந்தாலும், விக்ரமாதித்தன் போல் அவனிடம் இதற்கு ஒரு சின்ன பிரதிபலிப்பு கூட பார்க்காமல் விட போவதில்லை என்பது போல், அடுத்து வந்த நாட்களிலும் அவளின் செயலை நிறுத்தவில்லை.
அவனுக்கு, அவளின் முயற்சி புரிந்தாலும் அவள் இதை எதற்காக செய்து இருப்பாள் என்பதையும் நன்கு புரிந்து இருந்ததால், அவளை அவன் கண்டுகொள்ளாமல் இருக்கிறான்.
“டேய் ஈஸ்வரா! இத்தனை நாள் இருந்த என்னோட கொள்கை எல்லாம் விட்டுட்டு, நீ சொன்னது கொஞ்சம் யேத்துக்கிற மாதிரி இருக்கவும் தான் இதை ஃபாலோ பண்ணேன். இனி நான் பழைய ஈஸ்வரியா மாற போறேன், உன்னை இனி வச்சு செய்றேன் பார்” என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டு, அவள் அவனை முறைத்து விட்டு சென்றாள்.
போகும் அவளையே பார்த்தவனுக்கு, மனதிற்குள் நான் போடும் கணக்கு சரியாக வேலை செய்கிறது என்ற எண்ணம் வலுவாகிக் கொண்டு இருந்தது.
தொடரும்..