ee – 15(1)

IMG-20201028-WA0000-581cfbdd

ee – 15(1)

 

அத்தியாயம் – 15

அந்த இருட்டு அறையில் தலை கீழாக தொங்கிக் கொண்டு இருந்தான் சேத்திரன். மயக்க நிலையில் அதுவரை இருந்தவன், சிறிது சிறிதாக மயக்கம் தெளிந்து, கண் விழித்தவனுக்கு எல்லாம் தலை கீழாக தெரிந்தது.

பயத்தில் அவனால் பேச கூட முடியவில்லை, தனக்கு என்னவானது என்று யோசித்துப் பார்த்தான். எதுவும் அவனின் நினைவிற்கு, புலப்படவில்லை.

சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, யாராவது இருக்கீங்களா? என்று தன் பலம் கொண்டு கத்தினான். அப்பொழுது அந்த இடத்தில், வெளிச்சம் சிறிது பரவ அவனின் எதிரே வந்தனர் இருவர்.

அவர்களை பார்த்தவன் திகைத்தான், ஏனெனில் யாரை ஈஸ்வரி வைத்து பிடிக்க எண்ணினானோ அவனே தான் இப்பொழுது அவனின் கண் முன்.

“என்னடா! ஷாக்கா இருக்கா? இருக்கும் தானே!” என்று அவன் முன் வந்தான் ஈஸ்வர்.

“இங்க சார் பெயர் சேத்திரன், ஆனா மும்பையில் இவர் பெயர் தாதா சைத்ரா. இவரை பிடிக்க மும்பையில் தனி படையே அமைச்சு இருக்காங்க, ஆனா சார் எப்படி எல்லாம் டேக்கா கொடுக்கணும்ன்னு தெரிஞ்சு வச்சு இருக்கார்” என்று கூறிய விஷ்வாவை பார்த்து திகைத்தான்.

தன்னுடைய சரித்திரம் எப்படி இவர்களுக்கு தெரிந்தது? என்ற எண்ணம் ஓடிக் கொண்டு இருந்தது.

“அது மட்டுமா! இன்னும் பெரிய பெரிய மினிஸ்டர்களுக்கு எல்லாம், சார் தானே பினாமி. ஆமா, உன் கிட்ட ஒன்னு கேட்கணும் டா, அந்த போதை மாத்திரை சப்ளை பண்ணுறியே, அதுல மினிஸ்டர் ஹேமந்திரிக்கு என்ன பங்கு?” என்று கேட்டான் ஈஸ்வர்.

“நீ என் கிட்ட இருந்து உண்மை தெரிஞ்சிக்கணும்னா, முதல என்னை ரிலீஸ் பண்ணு டா. அப்புறம் நீ கேட்ட கேள்விக்கு எல்லாம், நான் பதில் சொல்லுறேன்” என்றவனை பார்த்து சிரித்தனர் இருவரும்.

“நீ சொல்லைனாலும், உன்னை விடுறதா இல்லை டா. ஏன்னா, நீ தான் உயிரோட இருக்க போகிறது இல்லையே” என்றவர்களை பார்த்து திகைத்தான்.

அவன் திகைத்து இருக்கும் பொழுதே, இவர்கள் அவனை வைத்துக் கொண்டு எப்படி போட்டு தள்ளுவது அவனை என்ற ரீதியில் பேசிக் கொண்டு இருந்தனர். அதைக் கேட்டவனுக்கு, பயத்தில் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

“நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன், தயவு செய்து என்னை விட்டுடுங்க” என்று கெஞ்சினான்.

அவனின் அந்த கெஞ்சலும், எதற்கு என்று அறிந்தவர்கள், கை முஷ்டியை இறுக்கிக் கொண்டனர். இருந்தாலும் சில விஷயங்கள் அவனின் மூலம் தெரிய வேண்டி இருந்தது, ஆகையால் மெதுவாக பேசி, பேசியே அவனிடம் விஷயம் வாங்கி, அப்படியே அங்கேயே அவனை கொன்று புதைத்தனர்.

இரவு வீட்டுக்கு வந்தவன், உடனே குளியறைக்குள் புகுந்து தலைக்கு ஊற்றிக் கொண்டான். வெளியே வந்து உடை மாற்றிக் கொண்டு, ஹாலிற்கு வந்தவன், அங்கே அவனின் சரிபாதி இன்னும் முறைத்துக் கொண்டு இருந்ததை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

“ஈசு பேபி! இன்னும் ஏன் டா முழிச்சு இருக்க? ஆமா எங்க பீட்டர்? ஆளையே காணோம்!” என்றவனை பார்த்து முறைத்தாள்.

“எனக்கு உங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு, அதான் இன்னைக்கு ஒரு நாள் விஷ்வா அண்ணா கூட அனுப்பி வச்சு இருக்கேன்” என்று கூறியவளை பார்த்து அதிர்ந்தான்.

அவனின் மனசாட்சி சட்டென்று ஆஜாரகி உடனே அவனிடம், செத்தடா ஈஸ்வர் என்று கூறிவிட்டு சென்றதை பார்த்து, அவனுக்கு இன்று இதை பற்றி பேச வேண்டுமா என்று இருந்தது.

ஆனால், அவனின் மனையாள் எனக்கு தெரிய வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பதை பார்த்து, ஒரு பெருமூச்சு விட்டுட்டு அவளின் கேள்விகளை எதிர்நோக்க தயாரானான்.

“அந்த சேத்ரனை உங்க கிட்ட ஒப்படைக்கணும் அப்படினு, நான் நினைச்ச ஒரே காரணம், சட்டம் இவனுக்கு கொடுக்கிற தண்டனை வச்சு, நாளைக்கு இவனை மாதிரி தப்பு செய்ய யாருக்கும் துணிவு வராது அப்படின்றதால தான்”.

“ஆனா அப்படி ஒருத்தன் இருந்ததையும், அவன் பண்ண தப்பையும் மறைச்சு, அவனை இப்படி கொல்லுறதுல என்ன லாபம் இருக்கு?”.

“இன்னும் தப்பு பண்ணுறவன், பண்ணிகிட்டு தான் இருப்பான். சட்டத்தால் ஒன்னும் பண்ண முடியாது அப்படின்ற தெனாவட்டு எல்லாம் இன்னும் கூட தான் செய்யும்”.

“நீங்க அதை தான் எதிர்பார்க்கிரீங்களா?” என்று அழுத்தம் கூட்டி கேட்டவளை பார்த்து சிரித்தான்.

“என்ன சிரிப்பு?? உயிர் என்ன உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா?” என்று கேட்டவளை பார்த்து, இப்பொழுது இறுக்கத்துடன் அமர்ந்து இருந்தான்.

“உயிர் ஒன்னும் சாதாரணம் கிடையாது தான், அவன் எத்தனை எத்தனை சின்ன குழந்தைகளுடைய உயிரை எடுத்து இருக்கான்னு, உனக்கு தெரியுமா?”.

“சும்மா ஒன்னு ரெண்டு பேர் இல்லை, இதுவரைக்கும் அவன் கடத்தின குழந்தைகள் லிஸ்ட், அவனுக்கே தெரியாது. கடத்தி கொண்டு போன பிள்ளைங்க, எங்க இருக்காங்க? என்ன ஆச்சு அவங்களுக்கு? உயிரோடு இருக்காங்களா, இல்லையா?”.

“இப்படி எல்லா கேள்விகளுக்கான விடை, என்னனு தெரியுமா உனக்கு? அந்த பசங்களை மீட்க கூட வழியில்லாம எல்லாம் பெரிய பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வக்கீல்கள் அப்படினு லிஸ்ட் பெரிசா இருக்கு”.

“இவனை மாதிரி, இன்னும் எத்தனை பேர் இந்தியா சுத்தி இருக்காங்கன்னு நமக்கு தெரியாது. இந்த சேத்ரன் மாதிரி ஆட்கள் எல்லாம், இந்த பெரிய கைகளுக்கு பினாமி”.

“வெளிநாட்டுல கோடி, கோடியா பணம் வாங்கிட்டு இங்க இருக்கிற பிள்ளைகளை எல்லாம் அவங்களுக்கு வித்துகிட்டு இருக்காங்க. அவங்களை வச்சு என்ன வேலை எல்லாம் பார்கிறாங்கன்னு கேட்டா, அவ்வளவும் தீவிரவாதம் தாக்குதல்களுக்கு உபயோகிக்க, அதாவது மனித வெடிகுண்டாக மாத்துறது”.

“இப்போ சொல்லு, இவனை கோர்ட்ல வச்சு தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா? அதான் எங்க வழியில் நாங்க அவனை முடிச்சிட்டோம்.

“நீங்க சொல்லுறது எல்லாம் சரி, ஆனா இந்த பாவம் நாளைக்கு நம்ம பசங்க மேல விழுந்தா என்னங்க செய்றது?” என்று கேட்டவளை பார்த்து முறைத்தான்.

“என்னமோ நல்லவனை நாங்க அடிச்சு கொன்ன மாதிரி பேசுற, அடியே அவனை கொண்ணு போட்டத்தால புண்ணியம் தான் சேரும் நமக்கு. இவனால எத்தனை சின்ன குழந்தைகள், என்னனு தெரியாம பலியாகி இருப்பாங்க” என்று ஈஸ்வர் கூற கூற தான் அவளின் பயம் சற்று தெளிந்தது.

இருந்தாலும், இதனால் பின்னாடி கணவனுக்கு எதுவும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்ற பயமும் அவளுக்கு இருந்தது. அவளின் பயத்தை கண்களில் கண்டவன், அவளுக்கு புரியும்படியாக சில விஷயங்களை கோடிட்டு காட்டினான்.

அதை நன்கு புரிந்து கொண்டவள், அவனை பார்த்து சிரித்து விட்டு, அடுத்து தன்னுடைய ஆசையை கூறினாள்.

“இனி அடுத்து எங்கேயும் போகல தானே, பர்த்டே இவெண்ட் எடுத்து நான் நடத்துறேனே. எனக்கு பொழுது போகும், பிள்ளைங்களோட பிள்ளையா ஜாலியா போகும் நேரமும். அது மட்டும் இல்லை, இனி சஞ்சனாவை அங்க விட்டு வைக்கிறது சரின்னு தோணல எனக்கு. அதனால, நான் அவளையும் கூட வச்சுக்க போறேன்” என்றவளை பார்த்து சம்மதம் சொன்னான்.

அவன் சம்மதம் சொன்ன அடுத்த நொடியே, சஞ்சனாவை எங்கு தங்க வைப்பது என்று யோசிக்க தொடங்கினாள். தன் கண் பார்வையில் அவளை வைத்துக் கொண்டால், அவளுக்கு பாதுகாப்பு என்று கருதினாள்.

உடனே அவளுக்கு அழைத்து, விஷயத்தை பகிர்ந்ததோடு மட்டுமில்லாமல் இன்று ஒரு நாள் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறினாள்.

ஈஸ்வருக்கு, இன்னும் இந்த கேஸ் முழுவதுமாக தோண்டி எடுத்தால் தான் என்ன என்று, தோன்ற தொடங்கி இருந்தது. தன் மனைவி தன்னை விட்டு எங்கும் போக போவதில்லை, ஆகையால் இந்த கேஸ் சீக்கிரம் முடித்துவிட்டு அதன் பின், அவளிடம் தான் அவள் மேல் காதலில் விழுந்த விஷயத்தை சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டான்.

அவன் அறியவில்லை, இந்த கேஸ் முடியுமுன்னே அவளிடம் தன் காதலை சொல்ல போவதையும், அதை கேட்க அவள் தான் அவனருகில் இருக்க போவதில்லை என்பதையும்.

கணவன் சம்மதித்த சந்தோஷத்தில், அவள் அடுத்து செய்ய வேண்டியவகளை எல்லாம் பட்டியலிட்டு கொண்டு இருந்தாள்.

அப்படியே தங்கள் அப்பார்ட்மெண்ட்டில், ஒரு வீடு காலியாக இருப்பதை அறிந்து, அங்கே சஞ்சனாவை வரவழைத்து அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து, கூடவே ஒரு வயதான அம்மாவையும் அவளுக்கு துணையாக வேலைக்கு அமர்த்தினாள்.

சென்னையில் இவெண்ட் பிளானர் தொழில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதத்தில் புதிதாக முளைக்க தொடங்கி இருந்தது. போட்டி நிறைந்த இந்த உலகில், ஈஸ்வரி அவளுக்கே உரிய தைரியத்திலும், துடுக்குத்தனதிலும் விரைவாக அந்த மாதத்திலே இரண்டு பெரிய வீட்டின் இளவரசர்களின் பிறந்தநாள் விழாவை ஏற்று நடத்த, ஒப்பந்தம் வாங்கிக் கொண்டாள்.

“அடிப்பாவி! எப்படிடி?? ஹை கோர்ட் ஜட்ஜ் வீட்டு விசேஷம், இன்னொன்னு மினிஸ்டர் வீட்டு விசேஷம்”.

“ஆரம்பமே, நீ இப்படி பெரிய இடத்தில் தான் உன் பிஸினசை நுழைக்கணுமா? கொஞ்சம் கொஞ்சமா முன்னேற ஐடியா இருக்கா! இல்லையா” என்று கேட்டான் பீட்டர் அக்கறையாக.

“அதுகுள்ள வயசு ஓடி போய்டும் டா, நான் இந்த பீல்ட்க்கு ஒன்னும் புதுசு இல்லையே. நீ ஒன்னும் கவலைபடாதே, ரெண்டையும் நான் ஜமாய்சிடுவென்” என்று அவனின் பயத்தை போக்கியதோடு அல்லாமல், அந்த இரு இளவரசர்கள் விருப்பப்படி, அவர்களின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக நடத்தியும் கொடுத்து விட்டாள்.

அப்படி அவள் நடத்திக் கொடுத்த, அந்த இரண்டு வீட்டு இளவரசர்களின் பெற்றவர்கள் அவர்களின் நெருங்கிய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் இவளின் திறமையை எடுத்துக் கூற, அடுத்து அடுத்து அவளுக்கு ஆர்டர்கள் வந்து குவிந்தது.

அதன் பிறகு, அவள் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம் ஈஸ்வரன், அந்த கேசை அன் அப்சியலாக எடுத்து பார்த்துக் கொண்டு இருக்க, மறு பக்கம் ஈஸ்வரி தன் தொழிலை வளர்க்க ஓடிக் கொண்டு இருந்தாள்.

பீட்டருக்கு ஒரு நாள் போன் செய்த காமாட்சி பாட்டி, அவனிடம் அவர்களை பற்றி விசாரித்தார்.

“பாட்டி! கொள்ளு பேரன், பேத்தி பார்க்கிற ஆசை எல்லாம் இருந்தா மூட்டை தூக்கி போட்டுடு அதை எல்லாம். இதுங்க ரெண்டும் தேறாது, ரெண்டும் அது அது தொழிலை தான் பார்க்க போகுதுங்க”.

“வீட்டுல இருக்கிற நேரம் தூங்குற நேரம் தான், அதுவும் ஆளுக்கு ஒரு இடத்தில. எனக்கு இனி இங்க வேலை இருக்கிற மாதிரி தெரியல, நான் தனி வீடு எடுத்து போக போறேன்” என்றான்.

“அடேய்! உனக்கு அந்த சோபியா பிள்ளையை கட்டிக்க வேணுமா, வேண்டாமா?” என்று அவர் கிடுக்கு பிடி போட, அவன் அரண்டு விட்டான்.

“பாட்டிடிடி!!! என் வாழ்க்கையோட விளையாடாதிங்க, என்ன பண்ணனும் சொல்லுங்க பண்ணிடுறேன்” என்று அவன் தான் இறங்கி வந்தான்.

“அப்படி வா வழிக்கு! ரெண்டு நாளில் நான் அங்க வரேன், ஈஸ்வரி அம்மா சாந்தாவை கூட்டிட்டு” என்று கூறி அவர் போனை வைக்கவும், பீட்டர் பெருமூச்சு விட்டான்.

“இனி ஈஸ் அண்ட் ஈஸ் நிலமை, ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை” என்று சிரித்துக் கொண்டே வேலையை தொடர்ந்தான்.

அடுத்த இரண்டு நாளில், ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து இறங்கிய அன்னையையும், பாட்டியையும் பார்த்து முழித்தாள் ஈஸ்வரி.

“என்னடி இது? இப்படி முழிச்சிகிட்டு நிக்குற? உன் வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கூப்பிட மாட்டியா?” என்று அவளின் அன்னை சாந்தா வந்த உடனே, அவளை ஒரு பிடிப்பிடிக்க உடனே சுதாரித்தாள்.

“எம்மா! நானே இது கனவா, இல்லை நனவான்னு ஒரு நிமிஷம் பிரீஸ் ஆகிட்டேன். அதனால கொஞ்சம் முழிச்சு நினுட்டேன், அதுக்கு இப்படி உடனே என்னை திட்ட கூடாது” என்று கூறிவிட்டு அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றாள்.

அப்பொழுது அங்கே வந்த ஈஸ்வர், இவர்களை பார்த்து வரவேற்றுவிட்டு மனைவியின் புறம் திரும்பி முறைத்தான். அவளோ, அவனின் முறைப்பை அசட்டை செய்துவிட்டு, இருவருக்கும் ரூம் ஒன்றை ஒதுக்கி கொடுத்தாள்.

அவர்களின் தேவையை கவனித்துவிட்டு, பீட்டரை அழைத்துக் கொண்டு காலை உணவை தயாரிக்க தொடங்கினாள்.

“இன்னும் உன்னை தான் வேலை வாங்கிட்டு இருக்காளா இவ, நீ போய் மாப்பிள்ளையை கவனி ஈஸ்வரி. டேய் பீட்டர்! நீ தட்டை எடுத்து டேபிள் மேல வை, இன்னும் ரெண்டு சட்னி அரைச்சு கொண்டு வரேன்” என்று சாந்தா சமையல் பொறுப்பை தான் எடுத்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு வேலையை கொடுத்து அனுப்பினார்.

அறைக்குள் வந்த ஈஸ்வரியை பார்த்து, ஈஸ்வர் முறைத்தான்.

“நீ தான் அவங்களை வர சொன்னியா, இங்க என்ன பிரச்சினை ஓடுதுன்னு தெரியும்தானே உனக்கு?” என்று சற்று கோபத்துடன் கேட்டான் ஈஸ்வர்.

“அது தெரிஞ்சததால தான், யாரையும் நான் கூப்பிடல. ஆனா அவங்க இங்க இத்தனை நாள் கழிச்சு, சொல்லாம கொள்ளாம வந்து இருக்காங்க அப்படினா, என்ன விஷயமா இருக்கும்னு தான் தெரியல எனக்கு” என்று கட்டிலில் அமர்ந்து யோசித்த அவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.

“நீ குடும்பம் நடத்துற அழகை பார்க்க தான், அவங்க வந்து இருப்பாங்க. எனக்கு என்னமோ, இது ரெண்டு பாட்டி வேலையா தான் இருக்கும்னு தோணுது” என்று ஈஸ்வர் சொல்லவும், அவளுக்கு அப்பொழுது தான் தலைக்கு மேல் பல்ப் எரிந்தது.

“அது மட்டும் இல்லை, சஞ்சனாவை பார்க்கணும் அப்படினு சொன்னாங்க தானே, அதனால அவங்க அதுக்காகவும் வந்து இருக்கலாம்” என்றான்.

“அட! சூப்பரு! எத்தனை நாள் என்னை சுத்தல்ல விட்டு இருக்கான், இன்னைக்கு மாட்டின டா. எங்க மம்மி, பாட்டியை வச்சே உன்னை கதறடிக்கிறேன்” என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டாள்.

“ஈஸ்வரி! அவங்க எப்படியும் ரெண்டு நாள் இருந்துட்டு, நீ என்ன செய்ற என்னனு பார்த்துட்டு போய்டுவாங்க. அதனால, நீ வேற எதுவும் உளராம இரு” என்றுவிட்டு ஹெட் ஆபிஸ் செல்ல ஆயத்தமானான்.

“நான் சொல்ல எல்லாம் போறது இல்லை டா, எல்லாம் ஆக்சன் மட்டும் தான்” என்று நினைத்துக் கொண்டவள், அதை செயல்படுத்த தயாரானாள்.

இவன் எப்பொழுது இந்த கேசை அவன் கையில், அண் ஆபிஷியலாக எடுத்தானோ, அப்பொழுதே அவன் ஈஸ்வரியிடம் பேசும் நேரம் எல்லாம் குறைந்து போனது.

அவளுக்கோ, அவனின் இந்த செயல் எரிச்சலை கொடுத்தது. சற்றுநேரம் கூட பேச முடியாதபடிக்கு, அவன் இப்படி ஓடிக் கொண்டு இருப்பது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை.

அவன் மனதில் என்ன இருக்கிறது என்றும், அவளுக்கு புரியவில்லை. புரியவில்லை என்பதை விட அவன், அதை அவளிடம் தெரியப்படுத்தியது இல்லை. ஆகையால் தான் அவன் போக்கில், அவனை விட்டாள்.

ஆகையால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முனைந்தாள்.

ஆனால், அது அவள் தெரிந்து கொள்ளும் முன்னே அன்னையோடு கிளம்பி விட்டாள், இவனை திரும்பியும் பாராது.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!