Eedilla Istangal – 12

Eedilla Istangal – 12

ராஜசேகர் வீடு…

ராஜசேகரும் கீதாவும் அதிபனின் மரணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“திடீர்னு எப்படிக் கீதா?”

“திடீர்னு இல்லை ராஜ். ரொம்ப நாளா இந்த ஸ்கூல் இஸ்யூ போய்க்கிட்டு இருந்தது. எங்களைக் கூட திரெட்டென் பண்ணாங்கன்னு சொல்லிருக்கேனே…”

“ம்ம்ம், நியாபகம் இருக்கு. பட் மர்டர் அளவுக்குப் போவாங்கன்னு நினைக்கலை”

“பர்ஸ்ட் ஆப்போசிட் பார்ட்டி…ஸோ பெரிசா ஒன்னும் பண்ண முடியலை. பட் இப்போ அவங்க ரூலிங் பார்ட்டி”

“ம்ம்ம், எந்த இடத்தில நடந்தது?”

“கோயம்புத்தூர்ல”

“ஓ”

“நல்ல வேலை, டிவோர்ஸ் வாங்கிட்டு,
அங்கேயிருந்து வந்தது”

“ஏன் இப்படிச் சொல்ற?”

“இல்லைன்னா கோர்ட் கேஸூன்னு அலைஞ்சிக்கிட்டு இருப்போம்” என்றார் கீதா.

அப்போது ஒரு கத்தல்….
தாராதான்.

“எப்படி உங்களால இப்படிப் பேச முடியுது?” என்று கத்தினாள்.

அழுததால் கணத்திருந்த குரலிலும், அழுத்தம் இருந்தது.

“என்ன தாரா? உண்மைதானா… நாம அங்க இருந்தா… நமக்கும் இதே நிலைமைதான்”

“நாம அங்க இருந்தா… அப்பாவுக்கு இப்படி ஆகியிருக்காது”

‘என்ன பேசுகிறாள்?’ என்பது போன்ற பார்வை, அங்கிருந்த அனைவரிடமும்.

“அப்பாவைத் தனியா விட்டுவிட்டு வந்திருக்கக் கூடாதும்மா” என்றவள் குரலில் கவல் மண்டிக்கிடந்தது.

ராஜசேகர் எழுந்து, “தாரா… ஏன் இப்படி?” என்று கேட்டுக்கொண்டே, அவளருகில் வந்தார்.

“நான் என் அம்மாகூட பேசறேன். நீங்க… எனக்கும் அவங்களுக்கும் இடையில வராதீங்க” என்றாள் ஆத்திரங்களுடன்!

“தாரா…இப்படிப் பேசாத. இது தப்பு…” என்று கீதா கண்டித்தார்.

“கீதா, இப்ப எதுவும் சொல்லாத” என்று ராஜசேகர், கீதாவைக் கேட்டுக் கொண்டார்.

அதற்குள் தாரா, “நீங்க ஏன்-ம்மா என்கிட்ட கேட்கலை?” என்று அடுத்த கேள்வி கேட்டாள்.

“என்ன கேட்கணும் தாரா?” என்று புரியாமல், கீதா பதில் கேள்வி கேட்டார்.

“ஒரு முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி, நீங்க ஏன் என்கிட்ட கேட்கலை?”

“என்ன முடிவு?”

“அப்பாவைப் பத்தி ஒரு முடிவு எடுக்கிறப்போ, நீங்க ஏன் என்னைப் பத்தி யோசிக்கலை??” என்று தன் மனதின் வலியை வார்த்தையில் இறக்கி, கீதாவிற்கு வலிக்கச் செய்தாள்.

எவ்வளவு அர்த்தங்கள் நிறைந்த கேள்வி, அது!

“உன்னைப் பத்தி யோசிச்சிதான், இப்படியொரு முடிவு எடுத்தேன் தாரா”

“என்னைப் பத்தி யோசிச்சிருந்தா…
நீங்க, இந்த முடிவை எடுத்திருக்க மாட்டீங்க”

கீதாவின் வலிகள் அதிகமாயின.

“நம்ம ஊர்லயே இருந்திருக்கலாம். அட்லீஸ்ட் கோயம்புத்தூர்லயாவது இருந்திருக்கலாம். இங்க வந்திருக்கக் கூடாதும்மா”

தாரா வார்த்தைகள் கொடுக்கும் வலிகள், கீதாவின் விழியில் கண்ணீர் வடிவம் கொண்டன.

அதுவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சரத், அம்மாவின் கண்ணீர் கண்டதும், “அப்புறம் எதுக்கு இங்க வந்த?” என்று கேட்டான்.

“சரத்… பேசாம இரு” என்று ராஜசேகர் எச்சரித்தார்.

“என் அப்பா வந்து கூட்டிட்டுப் போயிருவேன்னு சொன்னாங்க. அதான் வந்தேன். போதுமா?”

தன்னிடம் சரியென சொல்லிவிட்டு, மகளிடம் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறாரா? என்று அதிபன் மேல் கீதாவிற்குக் கோபம் வந்தது.

“என்னாச்சு ராஜ் இவளுக்கு? ஏன் இப்படிப் பேசிக்கிட்டு இருக்கா?” என்ற கீதா, அருகிலிருந்த சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தார்.

“நீ டென்சன் ஆகாத கீதா… அவ ஏதோ வருத்தத்துல பேசுறா” என்று கீதாவை நோக்கிச் செல்லப் போனவர்,

“எல்லாம் உங்களால தான் தெரியுமா?” என்ற தாராவின் குரலில், ராஜசேகர் அதிர்ந்து நின்றார்.

“நான் என்னம்மா பண்ணேன்?” என்ற போது, ராஜசேகர் குரல் குறுகிப் போய் இருந்தது.

“ஏன் எங்க வாழ்க்கைல வந்தீங்க?”

இக்கணம், அவரே குறுகிப் போய் நின்றார்.

“என் அப்பா-ன்னா எனக்கு உயிரு. ஆனா, அவர்கிட்டருந்து என்னைய பிரிச்சிட்டிங்க” என்றவள் குரலில், வாழ்வின் மேலிருந்த பிடித்தம் விட்டுப் போயிருந்தது.

“நான்…” என்று அவர் விளக்கம் சொல்லத் தொடங்கும் போதே,

“கடைசியில அவர் முகத்தைக் கூடப் பார்க்க விடலை” என்று விசும்ப ஆரம்பித்தாள்.

“இதுல நான் என்ன பண்ணேன் தாரா?” என்று அழாத குறையாகக் கேட்டார்.

“ராஜ் விட்ருங்க… அவகிட்ட பேசிப் பிரயோஜனம் இல்லை” என்று கீதா அமைதியாகச் சொன்னார்.

தாராவின் விசும்பல் அதிகமானது.

“இவளுக்காக… இவ ப்யூச்சர்க்காகன்னு… அப்படித்தானே
யோசிச்சுப் பண்ணேன்” என்று கீதா, தன் பக்க நியாயத்தைச் சொன்னார்.

தாரா அழ ஆரம்பித்தாள்.

“அன்னைக்கு… அத்தனை பேர் திரும்பத் திரும்ப வந்து மிரட்டிறப்ப… நான் எப்படிப் பயந்திருப்பேன்? அதான் பிரிஞ்சி வந்தேன்”

“அப்பா கூட இருந்தா…எந்த பயமும் இருக்காது”

“உங்க அப்பா என்னைக்கு வீட்ல இருந்திருக்காரு?” என்றார் கோபமாக!

“அப்பாவோட வீட்ல இருந்தாலே போதும். பயமா இருக்காது. இந்த வீடு எனக்குப் பிடிக்கலை”

அதைக் கேட்ட கீதாவின் முகத்தில், அப்படியொரு அதிர்ச்சி! அழுகை!

அதைக் கண்ட சரத், “பேசாம இருக்க மாட்டியா?” என்று தாராவை நோக்கிச் செல்லப் போனவனை…

“சரத் சும்மா இருடா. அவ கவலைல பேசிக்கிட்டு இருக்கா” என்று ராஜசேகர் பிடித்து நிறுத்தினார்.

“இப்போ ஏன் எனக்கும் சரத்துக்கும் இடையில வர்றீங்க? அவன் என்கிட்ட கேட்கிறான்… நான் பதில் சொல்றேன். நீங்க ஏன் இடையில.. ” என்று ராஜசேகரிடம் கோபப்பட்டவளை,

“தாரா இந்த மாதிரி பேசாத…” என்று சரத் எச்சரித்தான்.

சிறிது நேரம் அமைதி நிலவியது.

“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. என்னைய ஹாஸ்டெல்ல சேர்த்து விடுங்க” என்றாள் கடைசியாக.

“அதான் சொல்றாளப்பா… சீக்கிரம் சேர்த்து விடுங்க” என்ற சரத்தின் வாக்கியம் முடிந்த, அடுத்த நொடியில்
‘பளார்’ என்ற ஒரு சத்தம்.

சரத்தை ராஜசேகர் அடித்திருந்தார்.

கன்னத்தை தடவியபடி, அப்பாவைப் பார்த்தபடி நின்றவன்… பின், கீதாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

சரத்தின் கரத்தை மெல்ல வருடியபடியே, “ராஜ், பெரிய பையனைப் போய் அடிச்சிக்கிட்டு?” என்று வருந்தினார் கீதா.

“என்னைய என்ன பண்ண சொல்ற கீதா? அவளே வலில பேசிக்கிட்டு இருக்கான்னு சொல்றேன். கேட்காம…ச்சே” என்று எரிச்சலடைந்தார்.

மேலும், “சரத் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ..” என்று சரத்தைப் பார்த்தவர்… “கீதா நீயும்தான்” என்று கீதாவைப் பார்த்தார்.

‘என்ன சொல்லப் போகிறார்?’ என்பது போல், இருவரும் பார்த்தனர்.

“கீதா, நீ உன் பக்கத்து நியாயத்தை சொல்றதுக்கோ… சரத், நீ உன்னோட பாசத்தைக் காட்டுறதுக்கோ… இது நேரம் இல்லை” என்றார்.

கீதா தலை குனிந்து கொண்டார். சரத், அவரையே பார்த்திருந்தான்.

“ரெண்டு பேரும் கொஞ்சம் அவளோட நிலைமையை யோசிச்சுப் பார்த்துப் பேசுங்க” என்றார்.

“அதுக்காக அவ என்ன வேணாலும் பேசுவாளா?” என்ற சரத், “அம்மாவை பாருங்கப்பா” என்றான்.

ராஜசேகரின் பார்வை கீதா, தாரா இருவரையும் பார்த்தது.

கீதா, கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து போய்க் கொண்டிருந்தார். தாரா, முழுதும் உடைந்து போயிருந்தாள்.

தாரா, தன்னை ஆறுதல் சொல்ல விடமாட்டாள் என்று தெரிந்தது. ஜெகனைப் பார்த்துக் கண் அசைத்தார்.

விருவிருவெனச் சென்று தாரா அருகில் நின்று கொண்டான்.

ராஜசேகர் கீதா அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

“சரத்”

சட்டென “அம்மா” என்றழைத்து, கீதா முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“அப்படிப் பேசாதடா. அவ வீட்டை விட்டுப் போயிட்டு, அம்மா அவ்வளவுதான்டா” என்று குலுங்கிக் குலுங்கி அழுதார்.

“இல்லை! இல்லைம்மா… பேசமாட்டேன்… போகவும்மாட்டா… நான் போக விட மாட்டேன். நீங்க மட்டும் அழாதீங்க. ப்ளீஸ்-ம்மா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“அம்மாக்கு கொஞ்சம் தண்ணீ கொண்டு வர்றீயா?” என்று கீதா சொன்னதும்,

சரத் தண்ணீர் எடுக்க எழும்போதே,

“கீதா, உனக்கு என்ன செய்துன்னு சொல்லு” என்று ராஜசேகர் பதறினார்.

அவரின் பதற்றமான குரல் கேட்டதுமே, தாராவும்… ஜெகனும் கீதா அருகில் வந்திருந்தனர்.

“ராஜ், ரொம்பக் கஷ்டமா இருக்கு… இவ.. இவ…” என்று முடிக்கும் முன்னே மயங்கிச் சரிந்தார்.

ஒரு நாள் கழித்து…

மருத்துவமனை வளாகம்…

அவர்கள் மருத்துவமனைதான். அப்போது வெறும் ஐந்து தளங்கள் மட்டும் கொண்டிருந்தது.

இரண்டாவது தளத்தில் கீதா அனுமதிக்கப் பட்டிருந்தார். லேசான மாரடைப்பு வந்திருந்தது. இப்பொழுது பரவாயில்லை.

இங்கும் அங்கும் நகராமல், சரத்தான் கீதாவைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

ராஜசேகர் மருத்துவமனை பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

கீதா அறையின் வெளியே தாரா அமர்ந்திருந்தாள். அவளும் ‘அம்மாவிற்கும் ஏதும் ஆகிவிடுமோ?’ என்று பயந்திருந்தாள்.

அப்போது அவளருகே வந்து ஜெகன் அமர்ந்தான்.

“அக்கா”

திரும்பிப் பார்த்தாள்.

“பயமா இருக்குக்கா… அம்மாக்கு எதுவும் ஆகாதுல்லா??”

‘ஆகாது’ எனத் தலையை மட்டும் ஆட்டினாள்.

பட்டென, “நீ ஏன் இப்படி இருக்க?” என்று கேட்டுவிட்டான்.

அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஜெகனைப் பார்த்தாள்.

“வீட்ல யாரையும் பிடிக்கலையா? ஏன் ஹாஸ்டல் போறேன்னு சொன்ன??” என்று மெதுவாகக் கேட்டுப் பார்த்தான்.

மௌனமாக இருந்தாள்.

“அவங்க யாரையும் பிடிக்கலைன்னா, நீ என்கூட இருந்துக்கோ. சரியா?”

அதற்கும் மௌனம்தான்.

“சாப்பிடப் போலாமா?”

“பசிக்கலை ஜெகன்”

“எனக்குப் பசிக்கிது. நீ என்கூட வர்றீயா? கேன்டீன் போய் சாப்பிட்டு வரலாம்”

“நீ இன்னும் சாப்பிடலைய்யா?” என்று கேட்டாள்.

“இல்லைக்கா…”

“சரத்தைக் கூட்டிட்டுப் போயேன்”

“அவன் அம்மாவை விட்டு வர மாட்டான்”

“கேன்டீன் ஃபோன் பண்ணி, ஃபுட் ஆர்டர் பண்ணலாம்ல”

உடனே, “நீ சாப்பிட வரலைன்னா… நானும் சாப்பிட மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தான்.

“ப்ச், ஏன் ஜெகன் இப்படிப் பண்ற?” என்று அலுத்துக் கொண்டாள்.

அவன் எதுவும் பேசாமல், பிடிவாதத்தின் சாயலைக் காண்பித்து உட்கார்ந்திருந்தான்.

அதைப் பார்த்தவள், “இரு, அம்மாகிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று எழுந்து அறைக்குள் சென்றாள்.

தாரா சென்றதும்,
சற்று மறைவிலிருந்து வெளியே வந்த ராஜசேகர்… ‘என்னாச்சு?’ என்று சைகையில் ஜெகனிடம் கேட்டார்.

“வர்றேன்னு சொல்லியிருக்கா-ப்பா”

‘எப்படியாவது சாப்பிட வச்சிரு’ என்று சைகையால் கேட்டுக் கொண்டார்.

‘சரியென்று’ ஒப்புக் கொண்டான்.

தாரா வந்ததும், ஜெகன் அவளை அழைத்துக் கொண்டு கேன்டீன் சென்றான்.

ராஜசேகருக்குப் புரிந்தது. தான், தாராவை நேரடியாக அனுகவோ, அன்பு செலுத்தவோ முடியாது என்று!

இனி எதுவானாலும் ஜெகனை முன்னிறுத்தித்தான் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்!!

கேன்டீன்

அவர்கள் நுழையும் போதே, ஒரு பெண் வந்து… “வாங்க… டாக்டர், இப்பதான் ஃபோன் பண்ணிச் சொன்னாங்க” என்றார்.

இருவருக்கும் ஒரு இருக்கையைக் காண்பித்து, அமரச் சொல்லிவிட்டு… உணவு எடுக்க உள்ளே சென்றார்.

“ஜெகன், நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வர்றேன்” என்று எழுந்து போகப் போனவளிடம்,

“சீக்கிரமா வா. நீ வராம… நான் ஒரு வாய்கூட சாப்பிட மாட்டேன்” என்றான் அன்பான கண்டிப்புடன்!

“சரி” என்று சொல்லிவிட்டு, ஓய்வறைக்குள் நுழைந்தாள்.

ஓய்வறை…

நல்லியையத் திறந்துவிட்டு, நீரை முகத்தில் வாரி தெளித்தாள். கொஞ்சம் வருத்தம் மட்டுப் படுவது போல் உணர்ந்தாள்.

சிறிது நேரம் அமைதியாக நின்றாள்.

அந்த அமைதி, ஆழ்மனதில் எழுதிய பெயரை அழுத்திச் சொல்லிப் பார்க்கச் செய்தது.

‘தேவா’ என்று உச்சரித்தாள்.

உடனே,
தேவா எங்கிருப்பான்??
அவனுக்கு ஏதும் ஆகியிருக்குமோ? அந்த ஊரில் இல்லை என்றால், எங்கே? எப்படித் தேடுவது??
_என்ற கேள்விகள் வந்து, மீண்டும் வருத்தம் மோலோங்கியது.

உள்ளத்தில் உறுதியே இல்லாதது போல் இருந்தது. என்ன செய்ய? என்று எண்ணுகையில், அப்பா சொன்னது நியாபகத்தில் வந்தது.

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

“தேவாவ கண்டிப்பா மீட் பண்ணுவ. பட், அப்பாகிட்ட சொன்ன மாதிரி… பர்ஸ்ட் லைஃப்ல செட்டில் ஆகனும். அதுக்கப்புறம்… தேவாவைப் பத்தி தெரிஞ்சிக்கலாம். நம்பிக்கையா இரு” என்று தனக்குத் தானே ஊக்கம் தந்து கொண்டாள்.

இருந்தும் அடுத்த நொடி, “நீங்க இப்படி என்னைய தனியா விட்டுட்டுப் போயிருக்க கூடாதுப்பா” என்று அழுதுவிட்டாள்.

ஒரு இரண்டு மூன்று நொடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்டு, வெளியே வந்தாள்.

அன்றும் சரி, அதற்கடுத்து வந்த நாட்களிலும் சரி… ஜெகன்தான் தாராவைச் சாப்பிட வைத்தான்.

*****
அடுத்த நான்கு நாட்களில், உடல் நிலை சரியாகி, கீதா வீடு வந்தார்.

*****

நாட்காட்டியின் நாட்கள், ராஜசேகர் வீட்டில் சில மாற்றங்கள் என்ற வழியில் வாழ ஆரம்பித்தன.

கீதாவிடம்…

இத்தனை நாள், தான் செய்தது சரியென்று நினைத்தவருக்கு, தாராவின் கேள்விகளால், ‘முடிவெடுக்கையில், தன் மகளிடம் கேட்டிருக்க வேண்டுமோ??’ என யோசிக்க வைத்தது. அது மனதை உறுத்தியது.

மேலும், தன் உலகத்தை வீடு, கணவர், மூன்று பிள்ளைகள் என்ற வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டார்.

தாராவிடம்…

ஒரு வழியாக, இந்த வாழ்க்கைக்கு தாரா தன்னைப் பழக்கிக் கொண்டாள்.

தாரா என்ற பெயருக்கு!

அப்பா சொன்னது போல், அம்மாவைக் கஷ்டப் படுத்தாமல்… தனக்குள்ளே காயப் பட்டுக் கொண்டு வாழ!

ராஜசேகரிடம் பேசாமலே, அந்த வீட்டில் வசிக்க!

சரத்தின் வாக்குவாதங்களைச் சமாளிக்க!

ஜெகனின் அன்பில், இதையெல்லாம் மறக்க!

தனிமையில்??

அப்பாவை நினைத்து மனம் தவித்தாலும், தேவா தன் வாழ்வில் வந்து விட்டால் போதுமென்ற மனநிறைவில் திளைப்பாள்.

தன் பாச உண்டியலின் பயணச்சீட்டுகளைப் பார்த்து, வாழ்வு பரிதவித்தாலும்… தேவாவுடன் பயணிக்கப் போவதை நினைத்து, வாழ்வில் பற்றுதல் வரும்.

கடந்த கால அப்பாவுடனான வாழ்வில் நனைந்து கொண்டு… எதிர்கால தேவாவுடனான வாழ்வை நினைத்துக் கொண்டு… நிகழ்கால வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.

சுருக்கமாக,
தாரா, அதிபன் மீது வைத்த பாசமும், தேவா மேல் கொண்ட நேசமும்… ஈடில்லா இஷ்டங்கள்.

ராஜசேகரிடம்…

சரத்திடம், தாராவை எதுவும் சொல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். அதையும் மீறி இருவருக்கும் வாக்குவாதம் வந்தால், தாரா பக்கம் நிற்பார்.

சரத், ஜெகன்…

தாராவின் பேச்சிற்குப் பின், சரத் கீதாவை அதிக அக்கறை எடுத்துப் பார்த்துக் கொண்டான்.

சரத்தின் பேச்சால், தாரா காயப் பட்டுவிடக் கூடாது என, ஜெகன் அவளை அன்பாகப் பார்த்துக் கொள்ளவான்.

மற்ற மூவரையும் விட்டுவிட்டு, இந்த வீட்டில் தாரா, ராஜசேகர் இருவரையும்
எடுத்துக் கொண்டால்,

இருவரும் என்ன தவறு செய்தார்கள். எதுவுமே இல்லை. இருவருமே நல்ல மனிதர்கள்.

தராசுத் தட்டில் வைத்துப் பார்த்தால், இருவரின் பக்கமும் நியாயங்கள் சரிசமமாக இருக்கும்.

ஆனால் அந்த வீட்டில்,

ராஜசேகர் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்கிறார்.
தாரா குறைபட்டுக் கொண்டே வாழ்கிறாள்.

காலம்தான் இருவரையும் சரி செய்யும்.

*****
நாட்காட்டியின் நாட்கள், மூன்று பேரும் மருத்துவப் படிப்பு படித்து முடிக்க வேண்டும் என்ற லட்சியப் பாதையில் நடந்தன!

இதில் தாராவும், சரத்தும் எம்எஸ் முடித்தனர்.

ராஜசேகரின் உழைப்பு,
கனிவான சேவை,
திறமையான மருத்துவர்கள்…
இப்படி அனைத்தும் கை கொடுத்ததால் மருத்துவமனை, பன்முக மருத்துவமனையாக மாறியது.

சொத்துக்களும் ஏராளமாயின!

வெளியில் இருந்து பார்ப்போருக்கு, ராஜசேகர் குடும்பம் என்ற பிரம்மிப்பு உண்டு.

ஆனால் உள்ளே இருக்கும் பிரச்சனைகள் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

வீட்டில் உள்ளவர்களும் வெளியே சொல்ல மாட்டார்கள்.

இன்னொன்று, தாரா மருத்துவம் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போதே, தேவா பற்றித் தெரிந்து கொண்டாள்.

ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில்தான் தேவாவைப் பார்த்தாள்.

நீளமான முடி, கண்ணாடி என ஆளே மாறிப் போயிருந்தான்.

தான் வாழ்ந்த இடம் பற்றிச் சொன்னது…
தனது வழிகாட்டி என அதிபனைச் சொன்னது…
_ இவையெல்லாம் வைத்து தாரா, தேவாவை அடையாளம் கண்டாள்.

அன்றிலிருந்து அவனைப் பின் தொடர்கிறாள்.

ஆனால், தன் அப்பா சொன்ன குணங்களுடன், சற்றும் அவன் ஒத்துப் போகவில்லை.

பட்டு பட்டுன்னு பேசவில்லை… பார்த்துப் பார்த்துப் பேசினான்.

பொறுமையாக மட்டுமின்றி, பொறுப்பாகவும் இருந்தான்.

எதற்கும் கோபப்படவில்லை.
என்றும் அமைதியாகத் தெரிந்தான்.

ஏன் இந்த மாற்றம்? எதற்காக இது? என்று மட்டும் தாராவிற்குப் புரியவில்லை.

அவனிடம்தான் கேட்க வேண்டும்!

நாட்காட்டியின் நாட்களில் இன்று…

தாரா??

தலையணையில் முகம் புதைத்திருந்தாள். தலையணை முழுதும் விழியின் ஈரங்கள்.

சட்டென எழுந்து விட்டாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

‘சீயர் அப் தாரா’ என்று சொன்னவள், இதையெல்லாம் தேவாவிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

சற்று யோசித்தாள்…
அப்பா சொன்னதால்தான் தேவாவைத் தனக்குப் பிடிக்கிறதா? என்று தனக்குள்ளே கேட்டுப் பார்த்தாள்.

அப்படித்தான்! ஆனால், இப்போதெல்லாம் தேவாவைத் தேவாவிற்காகப் பிடிக்கிறது.

அதுதானே காதல்!

சிரித்துக் கொண்டாள். திருமணமே பண்ணிக் கொள்ள மாட்டேன் என்று அப்பாவிடம் சொன்னவன்.

கண்டிப்பாக மறுப்பான்!

அவனிடம், எப்படி இவ்வளவும் சொல்லிப் புரிய வைப்பது? என்று நினைக்கையில் ஒரு பெரு மூச்சி வந்தது.

தாராவிற்கு… தேவாவிடம் எந்தவொரு எதிர்பார்ப்பும் கிடையாதுதான்.

ஆனால் சில சமயங்களில், தேவாவும் ‘தாராவைத் தாராவிற்காகப் பிடிக்கிறது’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? என்ற காதல் ஆசை வரும்.

இன்றும் அதை நினைத்துக் கொண்டு, மீண்டும் தலையணையில் தலை சாய்த்து உறங்கிப் போனாள்.

அடுத்த நாள்… ராஜசேகர் வீடு

மத்தியானமே மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டாள்.

கீதா கேட்டதற்கு, “முக்கியமான ஒருத்தரைப் பார்க்கப் போறேன்மா” என்று சொல்லி, தன் அறைக்குள் புகுந்தாள்.

அவளது அறையில்…

என்ன புடவை கட்டலாம் என்று, படுக்கை விரிப்பின் மேல் பட்டிமன்றம் நடத்தினாள்.

கடைசியில், அடர் சாம்பல் நிறத்தில் புடவை. அதுவும் முழுதும் எந்தவொரு வேலைப்பாடும் இல்லாமல் இருந்தது. அதற்கு ஏற்றார் போல அடர் சிவப்பு வர்ண சட்டை… இப்படி ஒரு கலவையில் ஆடையைத் தேர்ந்து எடுத்தாள்.

எல்லாம் முடித்துக் கிளம்பும் போதும், கீதா சந்தேகமாகப் பார்த்தார்.

அதைக் கவனிக்காமல், “பை ம்மா” என்று சொல்லிவிட்டு, கிளம்பினாள்.

கேக் பக்கெட், பெசன்ட் நகர்.

ரூப் டாப் ரெஸ்டாரென்ட்

இரவு 6:30

அன்று அந்த இடம் முழுவதையும், அவளுக்காகப் பதிவு செய்திருந்தாள்.

எனவே, மற்ற மேசைகளையெல்லாம் எடுத்துவிட்டு, அந்த இடத்தின் நடுவில், ஒரே ஒரு வெள்ளை நிறத்தில் மேசை போடப்பட்டிருந்தது.

அதன் இருபுறமும் அதே வெள்ளை நிறத்தில் நாற்காலி!

மேசையின் நடுவே வெள்ளை நிற பீங்கான் பூ சாடி, அதில் ஒற்றை ரோஜா!

நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
எத்தனை நாள் ஆசை? இல்லை, எத்தனை வருட இதயத்தின் இஷ்டம்?

நகரின் விளக்கு வெளிச்சம் வர முடியாத உயரம்.
ஆதலால் சுற்றிலும் இருள்!

அலங்காரத்திற்காக இருந்த சீரியல் விளக்குகளின் வெளிச்சம் மட்டுமே!

அந்த வெளிச்சத்தில் பறக்கும் சிறுசிறு பூச்சிகள்.

ஆங்காங்கே இதய வடிவ பலூன்கள். சில இடங்களில் செடி வகைகள்.

மெல்லிய ஒலியில், த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடல்…

ஜஸ்ட் எ ரிமைன்டர்: ஐ லவ் யூ என்ற புத்தகத்தை எடுத்து, மேசையில் வைத்தாள்.

ஒரு சிப்பந்தி வந்து, ரெட் வெல்வெட் கேக்கை மேசையில் வைத்து விட்டுச் சென்றார்.

இப்படி ஒரு சூழலில்,
அடர் சாம்பல் மற்றும் சிவப்பு நிறக் கலவையில் புடவை!
விளக்குகளின் வெளிச்சத்தில் தங்க நிறமாக மின்னும் கூந்தல்!
இன்று ஆன்ட்டிக் வகை மூக்குத்தி! ஆள்காட்டி விரலில் அடர் சிவப்பு நிறத்தில் கல் வைத்த மோதிரம்! காலில் சிவப்பு வர்ணத்தில் குதி உயர் காலணி!

அவ்வளவுதான்!!

போதுமானதாக இருந்தது… அவளது பொதுவான தோற்றத்தில் இருந்து மாறுபட்டு காட்ட!

மேலும் ரசனைக்குரியதாக இருந்தது.

காத்திருக்கிறாள் நங்கை…
தன்
நாயகனின்
நயனங்கள் பார்த்து
நாழிகை பாராமல்
நேயங்கள் நவின்றிட!!

error: Content is protected !!