EedillaIstangal-2.1

EedillaIstangal-2.1

நிமிர்ந்து பார்த்தவள், “நீதானா??” என்று அசட்டையாகச் சொன்னாள்.

“அக்கா” என்று அழைத்துக் கொண்டு விறுவிறுவென தாராவின் அருகில் வந்தவன், அவளது கையைப் பிடித்து இழுத்தபடியே, “அக்கா வா என்கூட” என்றான்.

“எங்க ஜெகன்?” என்று சலிப்புடன் கேட்டாள்.

“எமர்ஜென்சி பில்டிங்”

“இப்போ எதுக்கு? எனக்கு ஒரு ஐவிஎஃப் கேஸ் இருக்கு”

“அக்கா ப்ளீஸ்… ப்ளீஸ். ஒரு சின்ன ப்ராப்ளம்”

“ஜெகன்! அங்க இருக்கிற டாக்டர்ஸ்கிட்ட கேளு” என்று மறுத்தாள்.

“தெரியும் தாரா. பட் அவங்க டெசிஷன் எடுக்க மாட்டிக்காங்க”

‘தாராவா??’ என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.

“ஸாரி… ஸாரி-க்கா. ப்ளீஸ் வா” என்று அவள் நாடியைப் பிடித்துக் கெஞ்ச ஆரம்பித்தான்.

அதற்கு மேல் தாராவால் மறுக்க இயலவில்லை. மறுக்கவும் மாட்டாள்.

எனவே, “போதும் ஜெகன். லெட்ஸ் கோ” என்று சொல்லி, ஜெகனைக் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே நின்ற செவிலியரைப் பார்த்து, “சிஸ்டர். அந்த ஐவிஎஃப் கேஸ ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணச் சொல்லுங்க. ஐ வில் பி பேக் இன் அ பிட்” என்று சொல்லிவிட்டு, ஜெகனுடன் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் நோக்கிச் சென்றாள்.

அவசர சிகிச்சைப் பிரிவி செல்லும் முன் ஜெகனைப் பற்றி…

ஜெகன், அவனும் மருத்துவன்தான். ஆனால் வெறும் எம்பிபிஎஸ் மட்டும் கையில் வைத்திருக்கிறான்.

தாரா மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவன். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி யாரேனும் தாராவை கலங்க வைத்தாலோ, கவலைப் பட வைத்தாலோ தாங்கமாட்டான்.

மேலும் வீட்டின் கடைசிப் பிள்ளை என்பதால், வீட்டு உறுப்பினர்களிடம் சலுகை கிடைக்கும்.

தாராவிடம் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்.

எதற்கெடுத்தாலும் ‘அக்கா, அக்கா’ என்று அவளைச் சுற்றியே வருபவன்.

தாராவின் தம்பி என்றும், இந்த மருத்துவமனையின் உரிமையாளர் மகன் என்றும் அறியப்படுபவன்.

இதுவே ஜெகன்!!

ஐந்தாவது தளத்திலிருந்து மின்தூக்கி வழியே மூன்றாவது தளத்திற்குச் சென்றனர். அங்கிருந்து அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கு செல்ல ஒரு பாலம் உண்டு. இது மருத்துவர்கள், நோயாளிகள் மட்டும் உபயோகிக்கும் வழியாகும்.

அவசர சிகிச்சைப் பிரிவின் மூன்றாவது தளத்திலிருந்து இறங்கி, இருவரும் தரைத் தளத்திற்கு வந்தனர்.

“ப்ராப்ளம் எங்க ஜெகன்?”

“ரிசப்ஷன் பக்கத்தில-க்கா”

இரண்டு பேரும் வேகமாக நடந்து, வரவேற்பு பகுதிக்குச் சென்றனர். அருகில் செல்லும் முன்னரே, அங்கே தெரிந்த கூட்டத்தைப் பார்த்து, “என்ன ஜெகன் இதெல்லாம்?” என்று தாரா கடிந்துகொண்டாள்.

“அதான்-க்கா உன்னையைக் கூப்பிட்டேன்”

ஒற்றை விரலால் நெற்றியில் தடவி யோசித்தபடியே, அந்தக் கூட்டத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

அங்கே கூடி நின்றவர்கள்… இரண்டு மருத்துவர்கள். இரண்டு வார்டு பாய்ஸ். நான்கைந்து செவிலியர்கள்.

இன்னும் இருவர்! ஆனால் அவர்கள் மருத்துவர்கள் போல தெரியவும் இல்லை. மருத்துவ உடையிலும் இல்லை. வெளி ஆட்கள் போல! இந்த இரண்டு பேரும் தாராவிற்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தனர்.

தாரா வருவதைப் பார்த்த மருத்துவர் ஒருவர், “தாரா மேம் வர்றாங்க” என்றார்.

அதுவரை இருந்த வாய்பேச்சுகள் நின்று, அனைவரும் அவள் வருவதைப் பார்த்தனர்.

அவர்களுடன் சேர்ந்து, அந்த இரண்டு வெளி ஆட்களும் திரும்பிப் பார்த்தார்கள்.

திரும்பியவர்களைப் பார்த்ததும், தாராவிற்குள் ஒரே ஒரு கேள்விதான் எழுந்தது.

அது ‘தேவா!! இவன் எப்படி இங்கே?’ என்பதுதான்!

ஆம்! அந்த இருவரில் ஒருவன் தேவா!!

அருகில் வந்துவிட்டாள். அங்கு நின்ற அத்தனை பேரையும் தவிர்த்துவிட்டு, தேவா முன்னே சென்று நின்றாள்.

கனவிலும் தாரா நினைக்கவில்லை, இப்படி ஒரு சூழ்நிலையில் தேவாவைச் சந்திக்க நேரும் என்று!

ஒரு நொடிக்குக் குறைவான நேரம்தான் தேவாவைத் தாரா பார்த்திருந்தாள்.

அதற்குள், “மேம்” என்று ஒரு மருத்துவர் அழைப்பில், சுயம் உணர்ந்தாள்.

தன்னை அழைத்தவரை நோக்கித் திரும்பும் போதுதான் தெரிந்தது… தலையிலிருந்து ரத்தம் கொட்டியபடி நிலையில் ஸ்ட்ரெச்சரில் இருந்தவர்.

அதற்கு அடுத்த நொடி, அவள் அங்கே மருத்துவர். ஒட்டுமொத்த கவனமும் வலியில் முணங்கிக் கொண்டிருப்பவர் மேல் வந்துவிட்டது.

“என்னாச்சு?” என்று தேவாவைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே ஸ்ட்ரெச்சரின் பக்கவாட்டில் சென்று நின்றாள்.

முதல்முறை! இதுதான் முதல்முறை!!

தாரா தேவாவிடம் பேசியிருக்கிறாள்! அதாவது ஒரு கேள்வி கேட்டிருக்கிறாள்!!

தாரா கேட்டக் கேள்விக்கு, தேவா பதில் சொல்லப் போகிறான்.

தேவா பேசப் போவதை, இத்தனை அருகிலிருந்து தாரா கேட்கப் போகிறாள்.

அவனும் பேசினான். அதாவது பதில் சொன்னான்.

அந்தப் பதில்,
“இன்னும் யாரெல்லாம் கூப்பிடணுமோ… அவங்களையும் கூப்பிட்டிருங்களேன்” என்று!!

பதில் சொல்லியவனைப் பார்த்து, திருதிருவென தாரா முழித்தாள்.

முதன் முதலாக அவளிடம் பேசுகிறான். ஆனால் அவன் பேச்சு அவளுக்குப் புரியவில்லை.

“ஐ டிட்டிண்ட் கெட் இட்” என்றாள், மிக மெல்லிய குரலில்.

“ப்ம்ச்” என்று சலித்துக் கொண்டவன், “என்ன நடந்திச்சுன்னு, பர்ஸ்ட் வார்டு பாய்கிட்ட சொன்னேன்… அப்புறம் இங்கிருந்த நர்ஸ்கிட்ட … அப்புறம் இந்த டாக்டர்ஸ்கிட்ட…” என்று நின்றுகொண்டிருந்த மருத்துவர்களைக் காட்டினான்.

தாராவின் பார்வை அந்த மருத்துவர்கள் மேல் திரும்பியது.

“அப்புறம் இவர் வந்தாரு” என்று ஜெகனைக் காட்டியவன், “ஏதாவது டெசிஷன் எடுப்பாருன்னு நினைச்சு இவர்கிட்டயும் சொன்னேன். ஆனா இவர் போய் உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கார்” என்றான்.

தாரா ஜெகனைப் பார்த்தாள்.

மேலும் தேவா, “இப்போ நீங்க வந்திருக்கீங்க. உங்ககிட்ட சொன்னா… நீங்க ஏதாவது டெசிஷன் எடுப்பீங்களா?? இல்லை நீங்களும் போய் யாரையாவது கூட்டிட்டு வருவீங்களா??” என்று கேள்வியாக நிறுத்தினான்.

தாராவிற்குப் புரிந்தது.

“உங்ககிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கிற நேரத்தில, வேற ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிருக்கலாம். பக்கத்தில இருக்கேன்னுதான இங்க தூக்கிட்டு வந்தேன்?.!”

‘தூக்கிட்டு வந்தேன்’ என்ற வார்த்தையில்தான் தேவாவை ஆராயும் பார்வைகள் கொண்டு பார்த்தாள்.

அவனது சட்டையில் அங்கங்கே ரத்தக் கறைகள். ஒரு ரெண்டு மணிநேரத்துக்கு முன்னாடி நன்றாகத்தானே பார்த்தேன். அதற்குள் எப்படி இப்படி? என்பது போல் தாரா யோசித்தாள்.

ஆனால் அவள் யோசிக்கும் போதே, “எங்ககிட்ட பேசின மாதிரி இவங்ககிட்டயும் பேச வேண்டாம்” என்று தாராவையும், ஜெகனையும் கைகாட்டி, அங்கு நின்ற மருத்துவர் கோபப்பட்டார்.

“ஏன்? எதுக்கு?” என்று தேவாவும் கோபத்தைக் காட்டினான்.

“ஏன்னா? அவங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டல் ஓனர் பசங்க”

“யாரா இருந்தா எனக்கென்ன?” என்று சர்வ சாதாரணமாகச் சத்தமாகச் சொன்னவன், “ஒரு உயிரைக் காப்பாத்த, இவ்வளவு கெஞ்சணுமா??” என்று முணுமுணுத்தான்

சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில், இப்படி ஒரு வாக்குவாதம் தாராவிற்குப் பிடிக்கவில்லை.

சட்டென்று தாரா, “ப்ளீஸ், கொஞ்சம் அமைதியா இருங்க” என்று பொதுவாகச் சொன்னாள்.

அதன்பின் யாரும் பேசவில்லை.

“சிஸ்டர் க்ளோவ்ஸ்” என்று தாரா கேட்டவுடன், அந்தச் செவிலியர் அவள் கேட்டதை எடுக்கச் சென்றார்.

தாரா, ஸ்ட்ரெச்சரில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பவரைக் கவனமாகப் பார்த்தாள். கொஞ்சம் ஆபத்துதான் என்று தெரிந்தது.

“இட்ஸ் எமர்ஜன்சி. ஏன் டிலே பண்ணீங்க??” என்று சிறு கோபத்துடன் மருத்துவர்களிடம் கேள்வி கேட்டாள்.

“நோ மேம். இது ஆக்சிடென்ட் கேஸ்”

“ஸோ வாட்”

“மேம்… இது போலீஸ் கேஸாகும்”

“ஐ நோ! இட்ஸ் ஜஸ்ட் எம்எல்சி(MLC-medicolegal case) . ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிட்டு, போலிஸூக்கு இன்பார்ம் பண்ணியிருக்கலாமே”

இக்கணம் செவிலியர் கையுறை எடுத்து வந்திருந்தார். அதை வாங்கி மாட்டிக்கொண்டு பரிசோதிக்க ஆரம்பித்தாள்.

“மேம்” என்று மீண்டும் மருத்துவர் அழைத்தார்.

“வாட்?” என்றவளின் கவனம் அடிபட்டவரிடமே இருந்தது.

“எங்களுக்கும் தெரியும் மேம். பட் சரத் சார்கிட்ட இன்பாஃர்ம் பண்ணி… அதுக்கப்புறம்…” என்று மிகவும் தயங்கித் தங்கிச் சொன்னார்.

“இன்பாஃர்ம் பண்ண வேண்டியதான”

“இல்லை மேம். சார் கொஞ்சம் பிஸி போல… போஃன் அட்டென் பண்ணல”

தாரா பதிலேதும் சொல்லாமல், அடிபட்டவரைப் பரிசோதித்தவள், ‘ஸ்கல் லைட்டா ஓபன் ஆகியிருக்கு’ என்று தனக்குள் பேசிக்கொண்டாள்.

“ஜெகன்”

“அக்கா”

“நியூரோ சர்ஜெனுக்குப் போஃன் பண்ணு…”

“பர்டிக்குலரா நேம் சொல்லு-க்கா?”

“ப்ச் யாருக்காவது..” என்று சொன்னவள், “ஓகே கால் டாக்டர் ஷீலா” என்று திருத்தினாள்.

ஜெகன் டாக்டர் ஷீலாவிற்கு அழைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில்,

“மேம், சரத் சாருக்கு தெரிஞ்சி… ஏன் இன்பாஃர்ம் பண்ணலைன்னு கேட்டா??” என்று மீண்டும் அந்த மருத்துவர் கேட்டார்.

“அப்படிக் கேட்கணும்னா, அவரை என்கிட்ட வந்து கேட்கச் சொல்லுங்க” என்றவளது குரலில் லேசாக எரிச்சல் தெரிந்தது.

அதன்பின் யாரும் பேசவில்லை. அதுவரை அவள் பேசியதை தேவாவும் பாபியும் பார்த்துக் கொண்டுதான் நின்றனர்.

அடுத்ததாக தாரா, “பாய்ஸ்” என்று அழைத்தாள்.

முழுதும் வெள்ளைச் சீருடையில் இருந்த இருவர் வந்து நின்றனர்.

“டேக் ஹிம் டு லெவன்த் பிளோர்” என்று அடிபட்டவரைக் காட்டினாள்.

“யெஸ் மேம்” என்று சொல்லி, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

இதற்கிடையே டாக்டர் ஷீலா அழைப்பில் வந்திருந்தார்.

ஜெகன் எதுவும் பேசாமல், “அக்கா” என்று அலைபேசியைத் தாராவிடம் கொடுத்தான்.

உரையாடல் அலைபேசி அலைவரிசையில்…

ஜெகனின் செல்பேசி இலக்கங்கள் தெரிந்ததால், “சொல்லு ஜெகன்” என்று ஷீலா சாவகாசமாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“தாரா ஹியர்”

“சொல்லுங்க தாரா” என்றவரின் குரலில், சடுதியில் மாற்றம் வந்திருந்தது.

அந்த மருத்துவமனையில், தாராவைவிட வயதில் பெரியவர்கள் அவளைப் பேர் சொல்லி, மரியாதை விகுதியோடு அழைப்பார்கள்.

“ஒரு எமர்ஜென்சி கேஸ். வித்தவுட் பர்தர் டிலே, ஸ்டார்ட் டு ட்ரீட். அண்ட் இட்ஸ் எம்எல்சி. அட்மிட் பண்ணி, பார்மாலிட்டிஸ் பார்த்துக்கோங்க.”

“ஓகே… பட் சரத்கிட்ட இன்பாஃர்ம் பண்ணியாச்சா??” என்று அவரும் கேட்டார்.

இன்னும் தாமதம் கூடாது என்ற எண்ணத்தில், “ஜஸ்ட் பாலோவ் வாட் ஐ செட்” என்று கொஞ்சம் கட்டளைக்கான தொனியில் பேசினாள்.

“ஷூயர் ஷூயர்” என்று அலைபேசி அழைப்பைத் தூண்டித்திருந்தார்.

ஜெகனிடம் அலைபேசியைத் தந்துவிட்டு, அங்கு நின்றிருந்தவர்கள் புறம் தாரா திரும்பினாள்.

“கேரி ஆன் யூவர் வொர்க்” என்றாள்.

‘ஓகே மேம்’ என்று சொல்லி அவர்கள் சென்றுவிட்டார்கள்.

“ஜெகன் நீயும் போ” என்று ஜெகனைப் பார்த்துச் சொன்னாள்.

‘சரியென்று’ ஜெகனும் அதே தளத்திலிருந்த அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

இப்போது தன் முன்னே நின்று கொண்டிருந்த தேவாவைப் பார்த்தாள்.

ஒரு நொடிகூட முழுமையாக முடிந்திருக்காது, “தேங்க்ஸ்” என்றான் தேவாவின் நண்பன்.

பார்வையைத் தேவாவின் நண்பன் பக்கம் திருப்பினாள்.

ஆனால் அவளது இதயமோ தேவாவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“இட்ஸ் ஓகே. பட் எப்படி இது நடந்தது??” என்று கேட்டாள்.

“ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறத கவணிக்காம, பைக்ல ஓவர் ஸ்பீட்ல வந்திருக்காரு. அதான் ஆக்சிடென்ட்… ஹெல்மெட் போடல. ஸோ இவ்வளவு மோசமா அடிபட்டிருக்கு. நாங்க பக்கத்தில டீக்கடையில இருந்தோம். அதான் ஹெல்ப் பண்ணலாமேன்னு”

“ஓ!”

“அப்புறம் நான் பாபி, வக்கீல்” என்று தேவாவின் நண்பன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ம்ம்ம்!” என்று சொல்லிவிட்டு, தேவா ஏதாவது பேசுவானா என்று மீண்டும் அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவன் பேசவில்லை.

“அவங்க வீட்டுக்கு இன்பாஃர்ம் பண்ணியாச்சு. வந்திருவாங்க. ம்ம்ம், நாங்களும் இருக்கணுமா??” என்று மீண்டும் பாபியே கேள்வி கேட்டான்.

தேவாவிடமிருந்து விழிப் பார்வையை வலியப் பிரித்தெடுத்து, தாரா பாபியைப் பார்த்தாள்.
மேலும், “யாராவது ஒருத்தர் இருந்தா போதும்” என்று பதிலளித்தாள் தாரா.

“அப்போ, பாபி நீ பார்த்துக்கோ. ஷர்ட் எல்லாம் ரத்தமா இருக்கு. ஸோ நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு, தேவா நகர ஆரம்பித்தான்.

தாராவின் கண்கள் தேவாவைப் பின் தொடர்ந்தன.

இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்தவன்… சட்டென்று திரும்பி நின்று, தாராவைப் பார்த்தான்.

‘என்ன பேசப்போகிறான்? தேவா ஏதாவது பேசினால், தானும் பேசலாம்’ என்று ஒருநூறு ஆசைகள் நிரம்பிய பார்வைப் பார்த்தாள்.

“தேங்க்ஸ்” என்று ஒற்றை வார்த்தைச் சொல்லிவிட்டு, தேவா திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

அந்தக் கணத்தில் மழைத் தூரல் நனைக்காத மரத்தடி பூமிப் பரப்பின் ஏமாற்றம் தாராவினுள் நிலவியது.

தொண்டைக்குள் நிராசைகள் வந்து அடைத்தது. அதைச் சரி செய்து கொள்ளத் தாரா திணறினாள்.

“தேவா, இங்க ரெஸ்ட்ரூம்ல ஷர்ட்ட கொஞ்சம் கிளீன் பண்ணிட்டு போ” என்று பாபி சொன்னான்.

பாபி சொன்னதற்கு, ‘சரி’ என்பது போல் பெருவிரலை மட்டும் உயர்த்திக் காட்டியபடியே தேவா நடந்தான்.

தேவா செல்வதையே, விழியசையாமல் தாரா பார்த்துக் கொண்டு நின்றாள்.

“லெவன்த் ஃபுளோர் எப்படிப் போகணும்?” என்று மீண்டும் பாபி குறுக்கிட்டான்.

கவனம் முழுவதும் தேவா மீது இருந்ததால், பாபியின் கேள்வியைத் தாரா காதில் வாங்கவில்லை.

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று கொஞ்சம் அழுத்தமாக அழைத்தான்.

அந்த அழுத்தத்தில், “ம்ம்ம்” என்று கேட்டுக்கொண்டே திரும்பினாள்.

“இல்லை லெவன்த் ஃபுளோர் இப்படியே போகலாமா?” என்று தாரா வந்த வழியைக் காட்டினான்.

“இட்ஸ் ஒன்லி ஃபார் டாக்டர்ஸ் அண்ட் பேஷன்ட்ஸ். நீங்க மெயின் பிளாக் என்ட்ரன்ஸ் வழியா லெவன்த் ஃபுளோர் போயிடுங்க”

“ஓ! ஓகே. நீங்களும் டாக்டரா??”

“ம்ம்ம். Gynecologist”

மற்றொரு முறை நன்றி சொல்லிவிட்டு, பாபியும் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தான்.

இன்னும் தாரா அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

சட்டையில் இருந்த கறையைச் சுத்தம் செய்ய வேண்டி, சற்றுத் தள்ளியிருந்த ஓய்வறைக்குள் தேவா நுழைந்திருந்தான்.

அவன் வெளியே வரும்போது பேசலாம் என்று நினைத்துக் கொண்டு, தூரத்தில் தாரா காத்திருந்தாள்.

ஆனால் தேவா வெளியே வரும்போது, ‘தேவா நானும் வர்றேன்’ என்று சொல்லி, இங்கிருந்து சென்ற பாபி அவனுடன் சேர்ந்து கொண்டான்.

பாபியுடன் பேசிக் கொண்டே செல்லும் தேவாவைப் பார்த்தபடியே தாரா நின்றாள்.

அந்த நடைக்கூடத்தின் பிரம்மாண்டம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, தேவா என்ற ஒற்றை மனிதனை மட்டும் தாராவின் விழிகள் பிரத்யேகமாகப் பார்த்தன.

இதுதான் முதல் சந்திப்பு!

இச்சந்திப்பின் முடிவில் சரியாகப் பேசக்கூட முடியவில்லை.

ஏன்?? தன் பெயரைக் கூடத் தேவாவிடம் சொல்ல முடியவில்லை.

தேவாவைத் தனியாகச் சந்தித்து இருந்தாலோ… இல்லை மருத்துவமனை தவிர வேறு இடத்தில் சந்திப்பு நடந்திருந்தாலோ… கொஞ்சம் சங்கோஜமின்றி பேசியிருக்கலாமோ??

இனி அடுத்த சந்திப்பிற்காகக் காத்திருக்க வேண்டுமா??

இப்படியெல்லாம் நினைத்து, தாராவின் மனம் அடர்த்தியான கவலைக் கொண்டது.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் சென்றுவிட்டாள்.

*****

தேவாவும்… பாபியும் … நடந்து செல்லுகையில் பேசிக் கொண்டது.

“நீ லெவன்த் ஃபிளோர் போகாமா என்கூட வர்ற??” – தேவா.

“மெயின் பிளாக் வழிதான் போகணுமாம்”

“ஓ!”

“நல்லவேளை, அந்த லேடி டாக்டர் ஒரு டெசிஷன் எடுத்து, டிரீட்மென்ட் நடக்க ஹெல்ப் பண்ணாங்க!”

“ம்ம்ம். பட் இது அவங்க கடமையும் கூட”

“கரெக்ட்தான். அவங்களும் டாக்டர்தான். Gynecologist. ஆனா அவங்க பேரைக் கேட்க மறந்துட்டேன்”

“விடு! டெய்லியா பார்க்கப்போறோம் பேர் தெரிஞ்சிக்க. அதான் தேங்க்ஸ் சொல்லியாச்சுல… போதும்” என்று தேவா சாதரணமாகச் சொன்னான்.

இப்படியே பேசிக்கொண்டே இருவரும் நடந்து சென்றனர்.

இவர்கள் விடைபெறும் முன் பாபியைப் பற்றி,

தேவாவின் நண்பன். வழக்கறிஞர்.

சமூக நலனிற்காக தேவா செய்யும் விடயங்களாலோ… இல்லை அவனது பேச்சுக்களாலோ… அவன் மேல் ஏதெனும் வழக்கு பதிவு செய்யப்பட்டால், பாபி தேவாவிற்கு ஆதரவாக வாதாடுவான்.

தேவாவிற்கு ‘இதைச் செய்’, ‘இப்படிச் செய்’ என்றெல்லாம் சொல்ல மாட்டான். ஆனால் எப்போதாவது பாபி அப்படிச் சொன்னால், தேவா அதைத் தட்ட மாட்டான்.

பாபி திருமண ஆகாதவன். தேவாவைவிட வயதில் மூத்தவனும் கூட!

இதுவே பாபி!

*****
திரும்பவும் ஐந்தாவது தளம்…

காத்திருந்த ஐவிஎஃப் கேஸைப் பார்த்து முடித்தாள். அது முடிந்து வரவே மதியம் 3:30-க்கு மேல் ஆகிவிட்டது.

அறைக்குள் வந்தமர்ந்தாள்.
இன்னும் சாப்பிடவில்லை. பசிக்கவும் இல்லை.

மனதில் ராட்டினம் போல, அத்தனை அருகில் தேவாவைச் சந்தித்த கணங்கள் சுற்றிக் கொண்டு வந்தன.

அந்த நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு, சரத் என்பவன் உள்ளே வந்து நின்றான்.

error: Content is protected !!