அத்தியாயம் – 5
ஈஸ்வரிக்கு அவளது உள்ளுணர்வு, அவளை சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு கூறிக் கொண்டு இருக்கிறது போல் தோன்றியது. அவளால் என்ன ஏது என்று கூட யோசிக்க முடியவில்லை.
அங்கே நடக்கும் ஏற்பாடுகளை எல்லாம் பார்த்தால், இது அவசியமா இப்பொழுது என்று கூட தோன்றியது. இதுவரை அவளது உள்ளுணர்வு பொய்த்து போனது இல்லை, ஆகையால் இப்பொழுது அவளுக்கு மெலிதாக பதட்டம் ஏற்பட்டது, ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று.
“ஏய் பிள்ளை ஈசு! என்ன இங்கின நிக்கிறவ? உள்ளே உன்னை அயித்தை அப்போ பிடிச்சு சத்தம் போட்டுக்கிட்டு இருகிறாவ, விரசா போய் என்னனு கேளு பிள்ளை” என்று அங்கு வந்த ஒரு வேலைக்கார பெண்மணி, உள்ளே அவளின் பாட்டி அழைத்ததாக கூறிவிட்டு சென்றார்.
பின்பக்க தோட்டத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்து யோசித்துக் கொண்டு இருந்தவள், பாட்டி தன்னை ஏதோ சத்தம் இடுகிறார் என்று கேள்விப்படவும் உள்ளே வீட்டினுள் ஓடினாள் பெண்.
“வாடி மா ராசாத்தி! உம்மை தான் தேடுறேன், இன்னும் சின்ன பிள்ளையாட்டம் அங்கின, இங்கின ஒடாம, ஒரு இடத்தில் இருக்கணும்.இன்னும் செத்த நேரத்தில உனக்கு நலங்கு வைப்பாங்க, போய் உள்ளார இரு” என்று காமாட்சி பாட்டி கூறவும், அவளும் கீழே உள்ள அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.
அப்பொழுது உள்ளே வந்த ரேகாவை பார்த்த ஈஸ்வரி, அவளிடம் சந்தேகம் தீர்க்க எண்ணி அவளை அழைத்து பேசினாள்.
“ஆமா, நீங்க எப்படி அந்த ஐஷ்வர்யா பத்தி இம்புட்டு விபரம் சேகரிச்சு வச்சு இருக்கீங்க? உங்களுக்கு முன்னாடியே அவளை பத்தி தெரியுமா அக்கா?” என்று கேட்டாள் ஈஸ்வரி.
“என்னது! தெரியுமாவா? அவ பக்கா பிராடு, என் கொழுந்தனுக்கு பொண்ணு எடுத்த வீட்டுல தான் இவ வாழ போய் இருக்கா”.
“அங்க என்ன பிரச்சினை அப்படினு தெரியல, இவ நல்லா இது மாதிரி பணக்கார பசங்களுக்கு ரூட் விட ஆரம்பிச்சுட்டா. இவளை பத்தி அப்புறம் தான் விசாரிச்சு இருக்காங்க, மொத்த குடும்பமே இப்படின்னு தெரிஞ்ச உடனே என் வீட்டுகாரர் தான் கேஸ் ஃபைல் பண்ண சொன்னார் அவங்க மேல”.
“அப்புறம் கேஸ் நடந்து தண்டனை வாங்கி கொடுத்து, ஜெயில்ல இருந்தாங்க மொத்த குடும்பமும். எப்போ வெளியே வந்தாங்க தெரியல, இப்போ இன்னைக்கு காலையில் நீ ஈஸ்வர் கூட பார்த்த அப்படினு சொல்லவும் தான், உடனே அந்த கேஸ் ஃபைல் எடுத்து கொடுத்தேன்” என்று ரேகா கூறினாள்.
“அது சரி அந்த கேஸ் தான் முடிஞ்சது தானே, அப்புறம் எதுக்கு எப்போவும் ஃபைல்ல கையில் வைத்து இப்படி சுத்திக்கிட்டு இருக்க அக்கா ?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள் ஈஸ்வரி.
“ஹ்ம்ம்.. வேண்டுதல்! நேத்து தான் உங்க மாமா எடுத்து வை இதை, நமக்கு தேவைப்படும் அப்படினு சொன்னாங்க. நானும் எடுத்து வச்சேன், அப்புறம் நேத்து நடந்த சம்பவம் வச்சு பார்த்தா, அவங்களுக்கு முன்னாடியே தெரியும் நினைக்கிறேன்” என்று யோசனையுடன் ரேகா கூறவும், ஈஸ்வரி யோசனையனாள்.
“எதுக்கு டவுட்? மாமாவுக்கு போன் பண்ணி கேளு, அதுக்கு அப்புறம் சந்தேகம் தெளிஞ்சிடும்” என்று அவள் கூறவும், சரி என்று சொல்லி ரேகா போனில் அழைத்தாள் அவளின் கணவர் ஹரிக்கு.
அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்படவும், இவள் விபரம் கூறி விசாரித்தாள்.
“ஒஹ்! இவ்வளவு நடந்து இருக்கா? நான் எடுத்து வைக்க சொன்ன காரணம், அந்த ஐஷ்வர்யா நம்ம ஊர்ல இருக்கிற ஹெட்மாஸ்டர் பையன் சபரிஷ்க்கு ரூட் விடுறா அப்படினு, என் பிரென்ட் ஒருத்தன் சொன்னான். அதனால தான் எடுத்து வைக்க சொன்னேன், கண்டிப்பா தேவைப்படும் அப்படினு”.
“இங்க இவ்வளவு நடந்த பிறகு, கண்டிப்பா அவளும், அவ ஃபேமிலியும் ஊரை விட்டே போய் இருப்பாங்க. எப்படியோ, ஈஸ்வரன் தப்பிசிட்டான்” என்று கூறி போனை வைத்தார்.
உடனே ரேகா, அவளிடம் சொல்லிக் கொண்டு அடுத்த வேலைகளை பார்க்க சென்றாள்.
“மக்கும்! அவன் தப்பிசிட்டான், நான் மாட்டிகிட்டேன். அவன் எதோ பிளான் போடுறான்னு என் உள் மனசு சொல்லிகிட்டே இருக்கு, பார்க்கலாம் என்ன நடக்குது அப்படினு” என்று தனக்குள் மூழ்கி போனாள்.
அதற்குள் அவளை அடுத்து நலங்குக்கு அழைத்து வரும் படி, அவளின் பாட்டி கூற ரேகாவுடன் இன்னும் சில பேர் சேர்ந்து கொண்டு அவளை அழைத்துக் கொண்டு பின் பக்கம் சென்றார்கள்.
அங்கே கிணறு அருகே உள்ள அறைக்குள் சென்று, பாவாடையை மட்டும் அணிந்து கொண்டு வரும் படி ஈஸ்வரியிடம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
“ஹையோ! எனக்கு பிடிக்காதது இது தான், வெறும் பாவாடையை கட்டிட்டு அத்தனை பேர் முன்னாடி உட்கார்ந்து இருக்கணும். எங்க அம்மாவை தவிர்த்து யாரையும் தொட விட மாட்டேன், இன்னைக்கு அத்தை, சித்தி, பெரிம்மா, பாட்டி, அக்கா இப்படி ஊரே எனக்கு மஞ்சள் தடவுறேன்னு குளிப்பாட்டி விடுவாங்களே” என்று மனதிற்குள் நொந்து கொண்டு உடையை மாற்றிவிட்டு, மெதுவாக கதவை திறந்து எட்டி பார்த்தாள்.
“அட! இங்க இருக்கிறது பூரா பொம்பளைங்க தான், விசனபடாம வந்து இந்த முக்காலில உட்காருத்தா” என்று காமாட்சி பாட்டி அவளை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து, அங்கே அமர வைத்தார்.
காலை சம்மணங்கூட்டி அமர்ந்து கொண்டு, கைகளை மார்பின் முன்னே குவித்து வைத்தாள். ஈஸ்வரனின் அன்னை, அவளுக்கு முதல் தண்ணீரை எடுத்து ஊற்றி நலங்கை ஆரம்பித்து வைத்தார்.
சிறிது நேரத்தில் அவளுக்கு மஞ்சள் பூச, எல்லோரும் வரிசையில் நின்று அவள் முகத்தில் மஞ்சள் தடவி முடித்த பின், ரேகா அவளின் கால்களை நீட்ட சொன்னாள்.
கூச்சமாக இருப்பினும், அவள் சொன்னதை செய்தாள் ஈஸ்வரி. இல்லையெனில் அவளை பெற்றவளும், பாட்டியும் சேர்ந்து காதில் இரத்தம் வழியும் அளவிற்கு சொற்பொழிவு நடத்தி விடுவார்களே. அதற்கு அஞ்சியே சொன்னதை செய்தாள், ஆனால் இப்பொழுது அவளின் நெஞ்சு குறுகுறுக்க யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்ந்தாள்.
“உன்னை சுத்தி பத்து பேர் இருக்காங்க, எல்லாரோட கண்ணும் உன் மேல தான் இருக்கும். அப்போ குறுகுறுக்காம என்ன செய்யும்?” என்று அவளின் மனசாட்சி அவளை கேலி செய்தது.
“ஆத்தா ஈஸ்வரி! நல்லா முட்டிங்கால் தெரிற மாதிரி பாவாடையை தூக்கி வைத்தா, மஞ்சள் தடவனும்ல” என்று ஒரு மூத்த பெண்மணி ஒருவர் கூறவும், அதிர்ந்து விழித்தாள்.
“ஹையோ! என்னை விட்டுருங்களேன்!” என்று கத்த வேண்டும் போல் இருந்தது.
தன்னை நொந்து கொண்டே, பாவாடையை சற்று மேலே ஏற்றிக் காட்டிவிட்டு, முகத்தை சற்று மேலே தூக்கவும், அங்கே அவள் கண்ட காட்சியில் உறைந்து போனாள்.
“பாட்டி! கொஞ்சம் மேல பாருங்க, உங்க பேரன் எட்டி பார்க்கிறார்” என்று ஒப்பாரி வைத்ததோடு அல்லாமல், தன்னை குறுக்கிக் கொண்டாள்.
“அடேய்! அடுத்து உனக்கு தான் நலங்கு, போய் உன் தாத்தா வேஷ்டியை மட்டும் கட்டிட்டு வாலேய்” என்று காமாட்சி பாட்டி கூறவும், ஈஸ்வர் அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விட்டான்.
“ஏன் ஆச்சி விரட்டுற? உரிமைபட்டவளை தானே மாப்பிள்ளை பார்க்கிறார், பார்த்திட்டு போகட்டும்ன்னு விடுவியா” என்று அங்கே ஒரு கிராமத்து பெண், இவரிடம் கூறவும், அந்த வார்த்தை ஈஸ்வரியை சிவக்க வைத்தது.
ஆனால், அதை காட்டிக் கொள்ளாமல் அங்கே கல் போல் அமர்ந்து இருந்தாள். நெஞ்சம் படபடக்க அவள் அமர்ந்து இருப்பதை ரேகா புரிந்து கொண்டாலும், அடுத்து அடுத்து செய்ய வேண்டிய சடங்கை செய்தாக வேண்டும் என்று, ஈஸ்வரியை வலுக்கட்டாயமாக அதில் முழு ஈடுபாட்டுடன் பங்கு கொள்ள செய்து, அடுத்து அடுத்து பன்னீர் தண்ணீரால் அவளை குளிப்பாட்டி விட்டு, சில சடங்குகள் முடித்துவிட்டு உள்ளே அழைத்து வந்தனர்.
உள்ளே அவளின் அறைக்கு, ரேகாவுடன் வந்தவள், அங்கே தனியே உள்ளே இருக்கும் உடை மாற்றும் அறைக்குள் புகுந்து கொண்டாள். பின்னர் மெதுவாக தன்னை சுத்தம் செய்து கொண்டு, சட்டையும் பாவாடையும் அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
அதன் பின் ரேகாவின் உதவியோடு புடவைக்கு மாறி இருந்தாள், ஈஸ்வரி. தலை முடியை நன்றாக காய வைத்துவிட்டு, அது உலர்ந்த பின் ரேகா அவளுக்கு தலையை பின்னி பூ சூடி வைத்து விட்டாள்.
“ஆத்தா ஈசு! சீக்கிரம் வாத்தா, எல்லோரும் வந்துட்டாக” என்று காமாட்சி பாட்டி குரல் கொடுக்கவும், ரேகா அவளை அழைத்துக் கொண்டு சபைக்கு வந்தாள்.
அங்கே நடு கூடத்தில் போட்டு இருந்த நாற்காலியில், அவள் அமர வைக்கப்பட்டாள். இப்பொழுது அங்கே மொத்த குடும்பமும் இருந்தது, கூடவே சில முக்கிய உறவினர்களும், ஊர் மக்களும்.
“சாரதா, வந்து பிள்ளைக்கு முதல மாலையை போட்டு ஆசிர்வாதம் பண்ணு. சாந்தா, அப்படியே உன் மாப்பிள்ளையை கூட்டிட்டு, நீயும் வந்து திருநீர் எடுத்து பூசி விடு” என்று ஒவ்வொருவருக்கும் அங்கே காமாட்சி பாட்டி வேலை கொடுத்தபடி இருந்தார்.
எல்லாம் முடிந்து, அவளுக்கு ஆரத்தி சுற்றி கரைத்து விட்டு, அவளை அறைக்கு அனுப்பி வைத்தனர். இவள் உள்ளே வந்த பின், அங்கே ஈஸ்வரன் அமர வைக்கப்பட்டான்.
அவனுக்கும் நலங்கு வைத்து முடித்த பிறகு, சாப்பிட வெளியே தின்னை அருகே போடபட்டு இருந்த பெரிய சாமியானா உள்ளே டேபிலும், சேரும் உள்ள இடத்திற்கு ஆண்கள் எல்லோரும் முதலில் அமர வைக்கப்பட்டனர்.
அவர்கள் சாப்பிட்டு முடித்த பின், பெண்கள் எல்லோரும் அமர வைக்கப்பட்டனர். ரேகா அக்காவுடனும், ராஜியுடனும் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள், எதோ தோன்ற திரும்பி பார்த்தாள்.
அங்கே ஒரு அறையின் ஜன்னல் அருகே, ஈஸ்வர் இவளை தான் குருகுருவென்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
“இவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே? இன்னைக்கு ஒரு தினுசாவே பார்க்கிறான் என்னை, நம்ம நினைச்சா மாதிரி எதோ நடக்க போகுதோ?” .
“பாவி! இவனை ஏன் விரும்பி தொலைச்ச? இவன் போக்கே சரியில்லை கொஞ்ச நாளா, என்னவா இருக்கும்?” என்று யோசித்தாள்.
“அடியே! சீக்கிரம் சாப்பிட்டு முடி, தூங்க போகனும். நாளைக்கு எல்லோரும் வர ஆரம்பிச்சிடுவாங்க, வேலை நிறைய இருக்கு” என்று ரேகா அவசரப்படுத்தவும் வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு, அவளின் அறைக்கு சென்று ராஜியை துணைக்கு வைத்துக் கொண்டு படுத்து நன்றாக தூங்கினாள்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும், இரண்டு நொடி போன்று ஓடி மறைந்து இருந்தது. கோவிலில் வைத்து இன்று திருமணம் என்பதால், எல்லோரும் அங்கு செல்ல விரைந்து கிளம்பிக் கொண்டு இருந்தனர்.
“காலையில் இருந்தே மனசு சரியாகவே இல்லை, எதோ பெருசா நடக்க போற மாதிரியே ஃபீல் பண்ணுறேன். கடவுளே! கல்யாணம் நல்ல படியா நடக்கணும், உனக்கு உண்டியில் என் முதல் மாச சம்பளம் காணிக்கையாக செலுத்துறேன்” என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டு கிளம்பி ரேகாவுடன் கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்.
அங்கே சில பல சச்சரவு இருக்க, இவர்கள் என்னவென்று விசாரித்தார்கள்.
“இந்த முத்து பையலும், மாப்பிள்ளையும் போய் மச்சானை கூப்பிட போய்ட்டு வரோம்ன்னு போனாங்க மா, ஆளையே காணோம். சாரதா வேற புலம்பிகிட்டு இருக்கு, இந்த ஆளை யாரு வர சொன்னதுன்னு?” என்று ரேகாவின் தந்தை கூறிய செய்தியில் ரேகா மட்டுமே அதிர்ந்தாள்.
ஈஸ்வரியோ, இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல் இருந்தாள். அவள் தான் அங்கே தன் தாயையும், அத்தையையும் தேற்ற வேண்டியதாகி இருந்தது.
லீலா பாட்டிக்கு சிறிது உடம்பு முடியாததால், அவருக்கு வீட்டிலே உறவு பெண்மணி ஒருவரை துணைக்கு வைத்துவிட்டு வந்து இருந்தனர்.
சிறிது நேரத்தில் அங்கே ஈஸ்வர் தன் தந்தையுடன், அவனின் அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்று மொத்த குடும்பத்துடன் வந்து சேர்ந்தான்.
“எல்லோரும் என்னை மன்னிக்கணும், இந்த கல்யாணம் நடக்காது, எங்க அப்பாவுக்கு அன்னைக்கு நடந்த கொடுமையை யாரும் மறந்து இருக்க மாட்டீங்க”.
“இன்னைக்கு அப்படி உள்ள ஒரு சூழ்நிலையை தான், உங்க வீட்டு பொண்ணுக்கு நான் கொடுத்து இருக்கேன். எங்க அப்பாவுக்கு அப்புறம் என்னதான் எங்க அம்மாவை கட்டி வச்சாலும், அவருக்கு இதே போல உங்க வீட்டு பெண்ணால தானே அவமானம் நடந்துச்சு”.
“அது மட்டுமா! அப்புறம் கூட சரியான வருமானம் இல்லைன்னு, அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட கொடுக்கவே இல்லையே”.
“இதனால பாதிக்கப்பட்டது அவர் மட்டுமா? அவர் கூட எங்க அம்மாவும் இத்தனை வருஷமா, அவங்க அம்மாவை கூட பார்க்க முடியாம இருந்து இருக்காங்க”.
“இதெல்லாம் யாரால்? எல்லாம் உங்க பெண்ணால் தானே. உண்மையா? இல்லையா?” என்று அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தவித்தனர் அங்கு இருந்த அனைவரும்.
அவன் கூறிய அனைத்தும் உண்மை தானே, இப்பொழுது தானே அவருக்கு மரியாதை கொடுத்து பேசுகிறோம் என்ற எண்ணம் ரேகாவின் தந்தைக்கு புரிந்தே இருந்தது.
ஆனால், இதில் தான் செய்ய ஒன்றும் இல்லை என்று புரியவும், அவன் அடுத்து என்ன செய்ய நினைக்கிறான் என்று கவனிக்க தொடங்கினார்.
“பாவி! பாவி! படுபாவி! அம்மா உங்களை ஜெய்க்க வைக்கிறேன் சொல்லி, என்னை தோற்க வச்சுடியே டா” என்று கூறி அவனை அடிக்க தொடங்கினார்.
அவனோ அடிகளை வாங்கிக் கொண்டே, உங்களுக்காகவும் சேர்த்து தான் பேசினேன் மா, அது ஏன் உங்களுக்கு தெரியல? என்று கேட்டான்.
“என்னது? எனக்காக பேசுனியா! நீ சொன்ன அத்தனையும் உங்க அப்பாவுக்கு நீதி கேட்க நினைக்கிற மாதிரி தான் இருக்கே தவிர, உங்க அம்மாவுக்கு நீ நியாயம் செய்ய இல்லை”.
“எங்க அம்மா தப்பு பண்ணினாங்க தான், அவ்வளவு ஏன் எங்க அப்பா வீட்டு வழி சொந்தம் எல்லாம், உங்க அப்பாவை மதிக்க கூட மாட்டாங்க”.
“ஆனா, நான் என்ன பாவம் பண்ணேன்? எனக்கு ஏன் உங்க அப்பா இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கணும்? எங்க அம்மா நீ பிறந்த பின்னாடி, அவங்க தப்பை உணர்ந்து உங்க அப்பாகிட்டவும், உங்க ஆச்சிகிட்டவும் மன்னிப்பு கேட்டாங்க”.
“ஆனா அதுக்கு உங்க அப்பா அன்னைக்கு பேசிய பேச்சு, நான் இன்னும் மறக்கல. மறக்ககூடிய தப்பையா அவங்க அப்போ பண்ணினாங்க”.
“உங்க அப்பா கிட்ட கேளு, அன்னைக்கு அவர் என்ன பேசினார்ன்னு? சத்தியமா அதுவரை, உங்க அப்பா பக்கம் நியாயம் இருக்கு, நம்ம சைடு தப்பு இருக்குன்னு பொறுத்துகிட்டேன்”.
“ஆனா! உங்க அப்பா, என் கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டார். அவரை கல்யாணம் பண்ண நாள் முதலில், ஒரு மூணாவது ஆள் கிட்ட பேசுற மாதிரி தான், இப்போ வரைக்கும் என் கிட்ட பேசிக்கிட்டு இருக்கார்”.
“இப்போவும் உன் கல்யாணத்துக்கு சொல்ல வந்தோமே, எதுக்கு தெரியுமா? அவரோட செல்வாக்கை காட்டிக்க தானே ஒழிய, என்னை என் மனசை புரிஞ்சு ஒன்னும் அவர் இதற்கு சம்மதிக்கல அது தெரியுமா உனக்கு?”.
“இதுல எங்க இருந்து நீ எனக்காக பேசின? அவர் மரியாதையை காப்பாத்த தான், இல்லை இல்லை போன மரியாதையை மீட்க, இவங்களை எல்லாம் அவமானப்படுத்த உன்னை நல்லா பயன்படுத்திகிட்டார்”.
“உன்மைக்குமே நீ உங்க அம்மாவை ஜெய்க்க வைக்க நினைச்சா, நீ இந்த நிமிஷமே ஈஸ்வரி கழுத்தில் தாலி கட்டி, உனக்கு பொண்டாட்டியா, எனக்கு மருமகளா கூட்டிட்டு வா” என்று கூறிய சாரதாவை எல்லோரும் விழி விரித்து பார்த்தனர்.
இவர்களை விட ருத்ரன், ஈஸ்வரனின் தந்தை தான் தன் மனைவியின் பேச்சை கேட்டு அதிர்ந்து போய் இருந்தார். எப்பொழுதும் சில குள்ள நரிகள் சில பேரை, விஷ ஜந்துக்கள் போல் சுற்றிக் கொண்டே திரியும்.
அப்படிப்பட்ட ஒரு குள்ளநரி கூட்டம் தான், ருத்ரனை சுத்திக் கொண்டு இருந்தது இத்தனை வருடமும். அதை கண்டுகொண்ட சாரதாவும், அவர்களை விரட்டி அடிக்க நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அதற்கான முதல் படி தான், இந்த திருமணம். அதை அந்த குள்ளநரி கூட்டம் கண்டுகொள்ளும் முன்னர், இவர் முந்திக் கொள்ள எண்ணினார்.
“அடேய்! நீ எல்லாம் எப்படிடா கிரிமினல் psychology படிச்ச, அதுவும் உன்னை போலீஸ்ல எடுத்து இருக்காங்க பாரு, அங்க தான்டா நீ நிக்குற”.
“உனக்கு நிறைய டியூனிங் பண்ணனும், உனக்கு இனி நான் தான். இதுல இருந்து நீ தப்பிக்கவே முடியாது, இந்தா வரேன்” என்று எண்ணிக் கொண்டே பேச தொடங்கினாள் ஈஸ்வரி.
“அத்தை! இப்படி கட்டாயத்தில் பண்ணுற கல்யாணம் தேவையா? அதுவும் உங்க மகனுக்கு உங்க மேல பாசம் இருக்குன்னு, என்னை கல்யாணம் பண்ணி தான் நிருப்பிக்கணும் இல்லை”.
“அவருக்கு உங்க மேல எக்கச்சக்க பாசம் இருக்கு, பாவம் அவருக்கு அதை எப்படி கட்டணும் அப்படினு தான் தெரியல. அதுவும் உங்க மகனுக்கு நான் அப்படினா, ரொம்ப பயம்”.
“எங்க அவரோட வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏத்தி விட்டுடுவேனோ அப்படினு, என் மேல செம பயம். உங்க பையன் பாவம் அத்தை, சின்ன பாப்பா அவரால எடுப்பார் கைபிள்ளையா தான் இருக்க முடியும்”.
“சொந்தமா மூளையை பயன்படுத்த தெரியவே தெரியாது, இப்படிபட்ட அப்பாவி ஜீவன் கிட்ட நீங்க என்னை தள்ளி விடலாமா அத்தை?” என்று அவள் பாடிய பாட்டில் அதுவரை அங்கே இருந்த இறுக்கமான சூழ்நிலை சற்று மாறியது.
அதுவரை இவளை எப்படி திருமணம் செய்து கொள்வது? தனக்கு, இவளை பார்த்தாலே எரிச்சல் வருவதோடு, சில சமயம் முத்தம் கொடுக்க தோன்றும் இந்த உணர்வை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தான், ஈஸ்வரி இவனை சீண்டி விட்டாள்.
“பாவி! எனக்கு சொந்தமா மூளையை பயன்படுத்த தெரியாதா? இருடி, உன் கழுத்தில் தாலி கட்டி, இந்த ஈஸ்வரனுக்கு இந்த ஈஸ்வரி தான்னு சொல்லுறேன் இந்த உலகத்துக்கே” என்று மனதிற்குள் சூளுறைத்தவன், யாரும் எதிர்பாராவண்ணம் அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு அவளை தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.
ஈஸ்வரி தான் நினைத்ததை சாதித்து விட்ட நிம்மதியில் இருக்க, சாரதா மகன் தன்னை ஜெய்க்க வைத்த பெருமை இருக்க, ருத்ரனுக்கு தான் எங்கு தவறு செய்தோம் என்ற யோசனையில் இருந்தார்.
ஆனால், அந்த குள்ளநரி கூட்டமோ, தங்கள் ஆட்டம் இனி முடிவுக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்தனர். ஆம்! பயமே தான், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஈஸ்வரனின் ரகசியம், இன்று ஈஸ்வரிக்கு தெரிந்ததை நினைத்து, இனி தங்கள் அதிகாரத்தை யாரிடமும் செலுத்த முடியாதே என்ற பயத்திலும், வெறுப்பிலும் இருந்தனர்.
தொடரும்..