~18~

அனைத்துச் சடங்குகளும் இனியதாய் முடிந்திருக்க, மதிய உணவுக்குப் பின் தம்பதிகளை மறுவீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

ராஜும் ரேகாவும் விகாஷ் வீட்டிற்குச் சென்றுவிட, ஆதிக்கும் மதியும் அவளது தாத்தா வீட்டிற்குச் சென்றனர்.

அங்கேயும் அனைத்துச் சடங்குகளும் விரைவாய் முடிந்திருக்க, வளர்ந்த வீட்டில் இருந்து கிளம்பும் சமயம் ரேகாவின் கண்கள் கண்ணீரை சிந்தியது..

அவளை மித்ரா சமாதானம் செய்ய, ராஜோ கையை பின்னாடி கட்டிக் கொண்டு வேறெங்கோ வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான்.

விகாஷின் ஒரு பார்வை அவர்கள் மீது இருந்த போதும், ராஜின் இந்த ஒதுக்கத்தை அவன் கவனிக்காமல் இல்லை.
ஒருவழியாய் அந்த ஜோடி வீட்டிற்கு வந்து சேரும் போது மாலை ஆறு மணி ஆகியிருந்தது.

அங்கே, மதியழகி அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள் என்றெல்லாம் எண்ணவில்லை என்றாலும், இவ்வளவு அமைதியை ஆதிக் அவளிடம் எதிர்பார்க்கவில்லை.

உள்ளே சென்ற வேகத்தில் தனது உடைமையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், அவனது அருகே வந்து அமர்ந்து கொண்டாள்..

எந்தவித வெட்கமோ ஒதுக்கமோ இல்லாமல் இயல்பாய் இருந்தாள்..ஆனால் அந்த உறவை அதே இயல்புடன் ஏற்றுக் கொண்டாளா? என்பது தானே முக்கியம்.

வீட்டில் அன்னை தந்தையிடம் விடைபெற்றவள் ஆதிக்கின் முகம் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கிளம்பலாமா..?” எனப் பார்வையால் அவள் கேட்டிருக்க

அவனும், “போகலாம்..” என விழி மூடித் திறந்தான்..

பார்வையின் பாஷைகளை இருவரும் தங்களை அறியாமலே கற்றுக் கொண்டனரோ..?கிளம்பும் தருவாயில் விடைபெற்று கொள்ள இருவரும் எழுந்து நிற்க, சரியாக மதியின் அலைப்பேசி அலறியது..

நாகரீகம் கருதி ஆதிக்கிடம் தலையசைத்தவள், தனியாகச் சென்று அழைப்பை ஏற்க, அவளது வருகையை எதிர்பார்த்து தலைமையதிகாரி பரபரத்தார்..

பாதியில் விட்டு வந்த வேலைகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர, தான் வேலைக்கு இப்போது செல்ல வேண்டும் என்ற அவசியமும் நினைவுக்கு வந்தது..

குரலைக் கொஞ்சம் சரி செய்தவள், “டேனி இன்னும் என்னோட லீவ் ப்ரீயட் முடியல..நான் சொன்ன டேட்ல ஜாயின் பண்ணுவேன்..இப்போ நான் இந்தியாவில் இருக்கிறேன்..” என்றவளின் பதிலுக்கு..

“சரி முடிந்த அளவிற்குச் சீக்கிரம் வாங்க மதி..” என்றவர் இப்போது அழைப்பைத் துண்டித்திருந்தார்..

ஒருவிரலால் தலையை தட்டி யோசித்தவள், ஆதிக்கை நெருங்க, குழலி மதியழகியின் பாஸ்போர்ட்டை கொண்டு வந்து அவளிடம் கொடுத்திருந்தார்.

தன்னிடம் கேட்காமல் பாஸ்போர்ட்டை கொண்டு வந்து கொடுக்கும் மனைவியை மருமகன் முன் முறைக்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் நின்றிருந்த செழியனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே வாங்கிய மதியின் இதழில் குறுநகை தோன்றி மறைந்தது.

கீழே குனிந்து செல்லை பார்த்து கொண்டிருந்தவன் போல் இருந்தாலும் அவனது கண்ணில் இது எதுவும் தப்பவில்லை. அவனுக்குச் செழியனின் பார்வைக்கு அர்த்தம் என்னவென கேட்க நினைத்தாலும் தனக்கு என்ன வந்தது என்ற எண்ணத்தில் அமைதியாய் இருந்து கொண்டான்.

இருவரும் கிளம்பிய பின், குழலியின் அருகே வந்த செழியன் உறுத்து விழிக்க

“என்னங்க இப்படி உத்து பார்க்குறீங்க..?” என்றவரின் வெட்கம் கலந்த பார்வையில் தலையில் அடித்துக் கொண்டவர்

“என்ன அவசரம்னு இப்போ பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த..?” என்ற கேள்வியை தாங்கி மனைவியின் முகம் பார்க்க

“இல்லங்க..நேத்து நைட் மதி தாங்க கேட்டா..” என்றவரிடம் எதுக்கு? எனப் புருவம் உயர்த்திக் கேட்க

“நம்ம மாப்பிள்ளை ஹனிமூன்க்கு வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போறதா சொன்னாராம்..அதாங்க மதி நேத்து பாஸ்போர்ட் கேட்டா அதான் கொடுத்துவிட்டேன்…நான் கூட நம்ம மதி இப்படி மாறுவான்னு நினைச்சு கூட பார்க்கலங்க..புள்ள முகத்துல நேத்து பார்த்த வெட்கம் இருக்கே..” சிலாகித்து பேசிக் கொண்டிருக்கும் மனைவியை முறைத்தவர்

“அட அறிவு கெட்டவளே!” காது கிழியும் அளவிற்குக் கணவன் கத்தி வைக்க

“எதுக்கு இப்படி கத்தி வைக்கிறீங்க..?” என்றவருக்கு முறைப்பையே பதிலாய் கொடுத்த செழியன்..

“நேத்து மார்னிங் கல்யாணம் வேணாம்னு உன்கிட்ட சண்டை போட்டவ எப்படி டி ராத்திரி ஹனிமூன் பத்தி பேசுவா..லூசு லூசு..” தன்னை திட்டும் கணவனைக் கண்டு பேந்த பேந்த விழித்தவர்..

“என்னங்க என்ன சொல்ல வாரீங்க..?” குழப்பமாய் வினவும் மனைவியை முறைத்தவர்

“அடியேய் அவளைப் பத்தி தெரிஞ்சும் எதுக்கு டி என்கிட்ட சொல்லாம கொடுத்த..?” என்றவருக்குப் பதில் சொல்ல அங்கில்லாமல் ஓடியிருந்தார் குழலி.

ஓடும் போதும், “பாவி மக என்னைக்கு என் வயித்துல பொறந்ததோ அன்னையில இருந்து என்னுயிர வாங்குது..” எனத் திட்டவும் மறக்கவில்லை.

வழியெங்கிலும் அமைதியாய் பறக்க பார்த்துக் கொண்டிருந்த மதியைக் கவனித்தவன்,

“மதியழகி..” அழுத்தமான அவனது முழுநீள அழைப்பில் எப்போதையும் வந்த எரிச்சலை மறைத்தவள்

“சொல்லு ஆதிக் வர்மன்..” என்றாள் அவனைப் போலவே நிமிர்ந்து உட்கார்ந்து.
இதுவரையில் அவனை யாருமே முழுபெயரிட்டு அழைத்தது இல்லை. அதுவும் அவனது முதலாளி மற்றும் நண்பனான விகாஷ் கூட பெயரிட மாட்டான்..

அவளது அழைப்பிலும், தன்னைப் போலவே உடல் மொழியைக் கொண்டு வந்து பார்க்க முயற்சிக்கும் அவளது துடுக்குத் தனத்தையும் ஒருமுறை இரசித்தவன்..பின் தன்னை மீட்டு

“யாரோ கல்யாணத்தை நிறுத்தப்போறதா சொன்னாங்களே..” என்றவன் நிறுத்தி அவள் முகம் பார்க்க (இவனுக்கு வாயில சனி பகவான் டான்ஸ் ஆடுறார் போல)

அவளது உதடுகள் முணுமுணுவென சில ஆங்கில கெட்டவார்த்தைகளை உதிர்த்து பின் ஈயென சிரித்து, “இங்க பாரேன்..” என்றவள் இப்போது அவனது புறம் திரும்பி குதிங்காலை மடித்து உட்கார்ந்தாள்..

வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போது அவளது முகம் காண முடியாமல் ஒருமுறை திரும்பி பார்த்தவன், “சொல்லு..” என்பதைப் போல் விழியசைக்க

கொஞ்சமும் தயக்கமில்லாமல் அவனது தாடையைப் பற்றி தன்பக்கம் திருப்ப முயல, அவளது இயல்பான தொடுகையில் அவனுக்குத் தான் மூச்சிறைத்து நின்றது.

அதுவும் சில நொடிகள் தான், அதற்குள் வண்டியை அவன் ஓரமாய் நிறுத்தியிருந்தான்.

அவளுக்கு அவனைத் தொட்டது எதுவும் பெரியதாய் தோன்றவில்லை என்பது போல, அவனது வண்டி கிரீச்சிட்டு நிற்கவும், பயத்தில் அவனுடன் ஒன்றியிருந்தாள் மதி.

அவனை இதுவரை தாயை தவிர வேறு எந்தப் பெண்ணும் தொட்டுப் பேசி பழக்கமில்லாதவன், அதுவும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் தாயோடு கூட அளவாய் பழகியிருந்தவனுக்கு அவளது திடீர் ஸ்பரீசம் ஒருமாதிரி அன்-ஈசீயாக இருந்தது தான் உண்மை..

தொட்டதும் காதல் வர அவன் நடிகன் அல்லவே!

தன் இடது தோள் வளைவில் முகம் புதைத்திருந்தவளை அவன் தொட்டு எழுப்பும் முன் அவளே எழுந்தவள் அவனை விட்டு கொஞ்சமாய் விலகி அமர்ந்து

“எதுக்கு இப்படி பண்ணுன..இனி ரோட்ல இப்படி வண்டி ஓட்டாத உனக்கு சேஃப் இல்ல” என்றவளின் பார்வை ரோட்டின் மீதிருந்தது.

எது எப்படியோ இந்த நிமிடம் அவள் தன்மீதுள்ள அக்கறையில் மிதமாய் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தையும் மீறி சுகமாய் இருந்தது அவனுக்கு..

தன் மனம் அவள் பால் இலகும் அந்த நொடியை விரும்பாதவன், “சரி சொல்லு எதுக்கு உன்னை பார்க்க சொன்ன..?” என்றவன் இப்போது அவளது கண்களைத் தான் பார்த்திருந்தான்..

மதி எவ்வளவு தான் ஆண்களின் வட்டத்துள் வாழ்ந்திருந்தாலும் ஆண்களை அவர்களின் ஒற்றைப் பார்வையில் அளவெடுத்து அடக்கித் தூர நிறுத்திவிடுவாள்..

பொதுவாக ஆண்களின் நோக்கத்தை அவர்களின் பார்வையை வைத்தே கண்டுபிடித்து விடலாம்..அதாங்க, பெண் பிள்ளைகளோட பேசும் போது கண்கள் அலைபாயக் கூடாது..

மதி அவனைச் சந்தித்த இருமுறையும் ஏன் திருமணம் ஆன பின் கூட அவனது விழி கண்களைவிட்டு சிறிதும் கீழிறங்கியது இல்லை..அதை நன்றாகக் கவனித்த பின்பே அவனைத் தொட்டு பேசும் அளவிற்கு அவள் அவனை நம்பியிருந்தாள்.

மதி அறியாத ஒன்று திருமணம் ஆன பின்பும் கணவனின் பார்வை மனைவியை வருடும் போது கண்களையும் ஒரு அங்கமாய் கடக்க வேண்டும் என்பதை..

எல்லைகள் இல்லா புனிதமான உறவு என்பதை அந்நேரம் உணராமல் போயிருந்தனர் இருவரும்.

அவன் சொல்லு என்றதும் தனது தொண்டையை செருமிக் கொண்டவள், “ஆதிக் எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை” என்றாள் ஏதோ எனக்கு வாழைப்பூ பிடிக்காது என்பது போல

“சோ வாட்..” என்றவனிடம்

“சோ..எதுக்கு இப்படி பிடிக்காம நாம இருக்கனும்..” என்றவள் புரிந்ததா என்பது போல் அவனது முகம் பார்க்க
அவனோ நிறுத்தி நிதானமாய்,”சோ” என்றான் நிதானமாய்

“சோ..நான் என் வழியில போறேன் நீ உன் வழியில போ..”

அவள் முடிக்கும் போதும் அதே நிதானத்துடன், “அப்புறம்..” என்றான் கதை கேட்கும் பாவனையில்
காலையில் தான் திருமணம் முடிந்திருக்கும் அதற்குள்ளாக இவள் பேசும் பேச்சு என்ன தான் பிடிக்காத திருமணமாய் இருந்தாலும் வேப்பங்காயாக தான் கசந்தது..

அவனது கேள்வியில் புருவத்தை ஒரு முறை சுருக்கி விரித்தவள், “நான் என் வீட்டுக்கு போறேன்..” என்றாள்..

“உன் வீட்டுக்கு மீன்ஸ்..?” என்றவனது கேள்வியில் ஒரு முறை இவன் என்ன லூசா என்ற பார்வையை அவள் செலுத்த..

“நான் லூசு இல்ல டி நீ தான் லூசு..” என்றவனது குரல் எப்போதையும் போல் அவளை வசீகரிக்கத் தவறவில்லை..

ஒரே ஒரு நிமிடம் அசையா பார்வை பார்த்தவள் அடுத்த நிமிடம் தலையை சிலுப்பி, “நான் ஊருக்கு போறேன்..” திடமாய் ஒலித்த குரலில் இருந்தே இது அவள் ஏற்கெனவே எடுத்த முடிவு என்பது புரிந்த போதும், அவளை ஊருக்கு அனுப்ப அவன் விரும்பவில்லை..

“ஊருக்கு போறதா இருந்தா நேத்தே போயிருக்கலாமே..” என்றவனின் நிதானம் இப்போதும் அவளை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.

அவனிடம் தன் தாய் தந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாதவள், “ஊருக்கு போறதும் போகாததும் என் இஷ்டம்..” என்றவளின் குரலும் அகமும் திமிரில் சிலிர்த்திருந்தது..

“சரி உன் இஷ்டம் தான் அப்புறம் எதுக்கு என்கிட்ட கேள்வி கேட்டு டையத்தை வேஸ்ட் பண்ணுற..” என்றான் நிதானத்தின் நிதானமாய்..

“ஆம் இவன் சொல்றதும் சரிதான் நாம எதுக்கு இவன்கிட்ட இதெல்லாம் சொல்லுறோம்..?” மனதிற்குள் நினைத்தவள் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல்

“நீ என் ஹஸ்பெண்ட் தான அதான் சொல்லி வச்சேன்..” என்றவளை பார்த்து அவனது விழிகள் சிரிப்பை சிந்த, பதிலேதும் சொல்லாமல் வண்டியைக் கிளப்பியிருந்தான் ஆதிக்..

தனக்குப் பதில் சொல்லாத அவன் மீது கோபம் வந்தது என்றால், தன்னை நினைத்து அவளுக்கே ஆத்திரமாய் இருந்தது..

பல யோசனைகளுடன் இருவரும் வீட்டை அடைந்திருக்க, வீட்டின் பக்கவாட்டில் வண்டியை நிறுத்தியவன்
“மதியழகி..லிஸன் மீ..எனக்கு ஒரு விசயத்தை ஒயாம பேசுறது பிடிக்காது..சோ..” என்றவன் நிறுத்தி தனது ஸீட் பெல்ட்டை எடுத்துவிட்டு அவள் புறம் திரும்பி அமர்ந்தவன்..

“நான் அல்ரெடி உன்கிட்ட போன்ல இதைப்பத்தி சொன்னதா நினைவிருக்கு இருந்தாலும் இன்னொரு முறை சொல்றேன் கேட்டுக்கோ..” என்றவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுக்கத் தன்னிச்சையாய் அவள் பின்னடைந்தாள்..

“இதோ இதை கட்டுற வரைக்கும் தான் என்னைவிட்டு போறத பத்தி யோசிக்கணும் எப்போ இதை நான் உன் கழுத்தில் கட்டுனேனோ அப்போவே உன்னோட மிச்ச லைஃப் என்னோட டைரில எழுத ஆரம்பிச்சாச்சு..காட் இட்..என்னை விட்டோ இங்கயிருந்து போறத நினைச்சோ இனியும் நீ யோசிக்க ஒண்ணுமில்லை..இதுக்கு மேல தேவையில்லாம நீயும் யோசிச்சு என்னையும் கோபப்பட வைக்காத..” அதிர்ந்திருந்த அவளது முகத்தை உற்று நோக்கி..

“முகத்தை கொஞ்சம் நார்மலா வச்சிட்டு கீழிறங்கு..” என்றவன் இப்போது காரில் இருந்து கீழிறங்கி அவள் பக்க கதவைத் திறந்து விட்டிருந்தான்..

அவர்களின் ஊடல் புரியாத குடும்பத்திற்கு ஆதிக் காரின் கதவைத் திறந்து விடுவது சந்தோசத்தை கொடுக்க, அதே சிரித்த முகத்துடன் மித்ரா ஆரத்தியெடுக்க வலது காலை அவள் அறியாமல் எடுத்து வைத்து வாழ்க்கையின் முதல் படியை எட்டியிருந்தாள் மதியழகி..

உள்ளே நுழைந்தவர்களை சோபாவில் அமர்ந்திருந்த ராஜும் ரேகாவும் வரவேற்க, ஆதிக்கை விடுத்து வேகமாய் ரேகாவை அடைந்த மதி..

“ஹே ரேக்ஸ்..” சத்தமாய் அழைத்தவள் அவளை இடித்துக் கொண்டு அமர்ந்து கொள்ள, அவளின் சுபாவம் வேணிக்கு மிகவும் பிடித்து போனது..

தேவையில்லாத அலட்டல் எதுவுமில்லாதவளை பிடிக்காமல் போகுமா..?

மதியின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்து சிரித்தவளின் கண்கள் அழுது தடித்திருக்க

“எதுக்கு ரேக்ஸ் அழுற உன்னை யாரும் திட்டுனாங்களா..?” என்றவளின் பார்வை இப்போது சுற்றத்தை தழுவ
எதிரே அமர்ந்திருந்த விகாஷிற்கு கூட அவளது குணம் பிடித்துவிட்டது..

“இல்ல என்னை யாரும் திட்டல..கண்ணுல தூசி விழுந்துட்டு..” என்றதும்

“தூசியா விழுந்துட்டு..” என்றவள் தனது சேலை முந்தானையைச் சுருட்டி வாயில் இலேசாக வைத்து உதடு குவித்து அதில் ஊதி..

“ரேக்ஸ் எந்த கண்ணுல தூசி விழுந்துட்டு..” என்க

சும்மா சொன்ன காரணத்திற்கு எந்தக் கண்ணை சொல்ல என்று தெரியாமல் விழிக்க

“ஓ ரெண்டு கண்ணுலையுமா…சரி..” அவளே ஒரு காரணம் கண்டுபிடித்து அவளது கண்ணில் ஒத்தடம் வைத்துவிட சுற்றியிருந்தோர் இப்போது மதியைத் தான் பார்த்துக் கொண்டிருக்க, ஆதிக்கின் பார்வையோ ஒருவித இரசனையில் அவளை வருடியது..

ஆதியும் மதியும் இணைவார்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!