Eluthukiren oru kaditham 1

Eluthukiren oru kaditham 1

எழுதுகிறேன் ஒரு கடிதம் – 1

‘நீல வானம் அதில் நீயும் நானும்’ பாடலைத் தன் காதுக்குள் கேட்டபடி, அந்த இயந்திரப் பறவையின் வணிகவர்க்கப் பிரிவில், நீல வானத்தில் பயணித்துக் கொண்டிருந்தான் மித்ரன் விஸ்வநாதன். நம் கதையின் நாயகன்.

ஏர் ஹோஸ்ட்ரஸ் முதல் சக பெண் பயணிகள் வரை அனைவரின் பார்வையும் இவன் மேல் இருக்க இவனின் பார்வையோ கையிலிருந்த லேப்டாப்பை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவில்லை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவன் ஏதோ முக்கியமான விஷயத்தை வாசித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் அவன் வாசித்துக் கொண்டிருந்ததோ அவனின் காதல் மனைவி சம்ரிதியின் அழகு முகத்தை.

பிரயாணம் தொடங்கிய நொடி முதல் இப்பொழுது வரை அவன் பார்வை அந்தப் புகைப்படத்தை விட்டு அகலவில்லை. தினமும் காலையில் கண்விழிப்பது “மிரு அத்தான்” என்று அவளின் குரலில் பதிவு செய்யப்பட்ட அலாரத்தில் என்றால் இரவு நித்திரா தேவி அணைக்கும் வரை இந்தப் புகைப்படமே துணை மித்ரனுக்கு.

ராஜ களை என்று சொல்வார்களே அது இயல்பாகவே பிறப்பிலேயே பொருந்தி இருந்தது மித்ரனுக்கு. தோற்றம் குணம் அனைத்தும் தன்னுடைய தாய்மாமனின் வார்ப்பு. சிறு வயதில் தாய்மாமா ராஜனிடம் வளர்ந்ததாலோ என்னவோ குணத்திலும் உருவத்திலும் அவரையே கொண்டிருந்தான்.

ஆறடி உயரம், அதற்கேற்றாற்போல் தவறாமல் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக இருக்கும் முறுக்கேறிய உடம்பு. நிறமும் திராவிட நிறத்தைவிட சற்றுத் தூக்கலான நிறம். ஒரே பார்வையில் கண் முன்னால் இருப்பவர்களை எடை போட்டு விடும் வல்லமை உடையவன். மிரட்டும் கண்களுக்குச் சொந்தக்காரன். அந்தக் கண்கள் காதலாகி கசிந்து உருகுவது தன் மனம் கவர்ந்தவளிடம் மட்டுமே…

தன் விருப்பப்படியே கணினித்துறையில் கால் பதித்து சொந்தமாக மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வரும் இளம் தொழிலதிபன்.

திருமணம் முடித்து கடந்த ஒரு வருடமாக இந்தியா பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. அதற்காக மனைவி மேல் காதலில்லை என்று அர்த்தமில்லை, அளவுகடந்த காதலும் அதனால் வந்த கோபமுமே இந்தப் பிரிவிற்குக் காரணம்.

பலவித யோசனைகளுடன் தங்கள் திருமணப் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் என்றும் போல் இன்றும் புகைப்படத்தில் தெரியும் தன்னவளின் கண்கள் காட்டும் பயத்திலும் மிரட்சியிலும் மனதுக்குள்ளே மருகிப்போனான்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்ற விமானப் பணிப்பெண்ணின் குரலில் கனவுலகத்திலிருந்து மீண்டு வந்தான். விமானம் தரையிறங்கப் போவதாகக் கூற, ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.

மனதின் ஓரம் சிறு தயக்கமிருந்த போதும் உதட்டில் புன்னகை மறையவில்லை, இருக்காதா முழுதாக ஒரு வருடம் கழித்துத் தன்னவளை சந்திக்கப் போகிறானே….

விமான நிலையத்திலிருந்து வெளிவந்தவன் டாக்சியில் ஏறிக் கொண்டு தன்னுடைய ஆருயிர் நண்பன் வாங் லீக்கு அழைப்பு விடுத்தான். இவர்கள் இருவரும் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து என்று மூன்று நாடுகளும் இணைந்து செய்த பாதுகாப்புத் தொடர்பான செயற்கைக் கோள் வடிவமைப்பில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.

மூன்று நாடுகளுமே தத்தமது நாட்டின் சார்பாக சிறந்த மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்து இந்த செயற்கைக் கோள் வடிவமைப்பில் ஈடுபடுத்தியிருந்தது, மித்ரன் ‘ஐஐடி’யிலிருந்து தேர்ந்தெடுக்கப்ப்பட்டான் என்றால் வாங் லீ சிங்கப்பூர் ‘என்யூஎஸ்”லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.

ஆரம்பத்தில் சக மாணவனாக அல்லது தொழிலாளியாக ஆரம்பித்த இவர்களது நட்பு நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறியிருந்தது. பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்று சொல்வார்களே அந்த வகையறாவைச் சார்ந்தவன் வாங் லீ. சிங்கப்பூரில் மிகப் பெரிய தொழிலதிபரின் மகன். ஆனால் அந்த பந்தா சிறிதுமின்றிப் பழகுபவன்.

வாங் லீயின் இந்த எளிமையே மித்ரனை மிகவும் ஈர்த்தது. வாங் லீக்கோ மித்ரனின் ஆளுமையிலும் புத்திக் கூர்மையிலும் அதீத ஈர்ப்பு. விரைவிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிப் போனார்கள். அந்த நட்பே இருவரும் இணைந்து சொந்தமாகத் தொழில் தொடங்கவும் அஸ்திவாரமாகிப் போனது.

ஆரம்பத்தில் வாங் லீயின் தந்தைக்கு இதில் உடன்பாடு இல்லாத பொழுதும், மித்ரனின் புத்திக் கூர்மைக்காகவும், நிறுவனம் தொடங்கி சிறிது காலத்திற்குள் அவன் ஈட்டிய லாபத்திலும் வியந்து வாயை மூடிக் கொண்டார்.

(இவர்களின் உரையாடல் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அல்லது மென்டரின் (சைனீஸ்) மொழியில் இருக்கும். நமது புரிதலுக்காகத் தமிழில் தொடர்கிறது.)

போனை எடுத்த உடனேயே “மித்ரா எங்கடா இருக்க? உன்னை ஆபீஸ்ல காணோம்…” என்று வாங் லீ படபடவென்று பொரிய,

“டேய் கொஞ்சம் மூச்சு விட்டுப் பேசுடா. காது அடைக்குது. நல்லா கேட்டுக்கோ நான் இன்னைக்கு ஆபீசுக்கு வரமாட்டேன். வெளியில இருக்கேன். நாளைக்குத்தான் வருவேன். சும்மா சும்மா போன் பண்ணா பிச்சுப்புடுவேன் பிச்சு. புரிஞ்சுதா? என்றான் மித்ரன்.

“என்னடா இப்படி குண்டைத் தூக்கித் தலையில போடுற? நான் இன்னைக்கு ஈவ்னிங் என் பொண்டாட்டி கூட டின்னர் டேட் வர்றதா ஒத்துகிட்டு இருக்கேன்டா… நேரத்துக்குப் போகலை நான் காலி டா…”

“ஓ அப்படியா நான் வேணா லீ ஜிங் (வாங் லீயின் மனைவி) கிட்ட பேசவா?” என்று மித்ரன் கேட்க,

“தெய்வமே வேண்டாம். அப்படி மட்டும் பண்ணிடாதே. அப்புறம் நான் எவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போனாலும் ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்கன்னு கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லாம கேட்பாடா. அதனால நீ ஆணியைப் புடுங்க வேண்டாம். நானே சமாளிச்சுக்கிறேன்.”

“ஹா…ஹா…ஹா… என்னடா இது என் நண்பனுக்கு வந்த சோதனை! யாராலயும் அடக்க முடியாத ஒரு வீரனை, சூரனை…”

“போதும் நிறுத்திக்கோ. இப்ப என்ன நீ இன்னைக்கு அபீசுக்கு வரலை அவ்வளவுதானே? நானே சமாளிச்சுக்குறேன் விடு. ஆமா நீ எங்க இருக்க இப்போ?” என்று இடையிட்டுக் கேட்டான் வாங் லீ.

“அதை நான் நாளைக்கு வந்து சொல்றேன்” என்று கூறி மித்ரன் அதற்குப் பதிலாக வாங் லீயிடமிருந்து கெட்ட கெட்ட வார்த்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.

~~~~~*****~~~~~

சென்னை விமான நிலையம்…

வெள்ளை நிற சட்டையும் மெல்லிய லேசால் ஆன சிறிய கறுப்பு ஓவர்கோட்டும், கறுப்பு ஜீன்ஸ்சும் அணிந்த தேவதை ஒன்று கண்களில் மிரட்சியோடும் பயத்தோடும் நின்றிருந்தது. தேவதையின் பெயர் சம்ரிதி நம் கதாநாயகி.

“நிச்சயமா மித்ரன் மாமா அங்க ஏர்போர்ட்டுக்கு வந்துடுவாங்களா மாமா?” என்று இன்று நாள் தொடங்கியதில் இருந்து நூற்றி இருபதாவது முறையாக கேட்கும் தன் மாமன் மகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர் பார்த்திபனும் அவன் மனைவி நேஹாவும், மித்ரனின் கடைசி அண்ணன் மற்றும் அண்ணி.

“இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ரித்துமா? மிதரன் புது ஆளா என்ன, உன் அத்தைப் பையன் தானே!! நான் எப்படியோ அதே மாதிரிதானே மிதரனும் உனக்கு!! அப்புறம் எதுக்கு புது ஆளைப் பார்க்கப் போற மாதிரி இவ்வளவு பயம் உனக்கு? ப்ளைட்டில போறதுக்கு பயம்னு சொல்லாத அங்கங்க பொண்ணுங்க ராக்கெட்லயே போறாங்க..” என்று மூச்சுவிடாமல் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் கவலை அவனுக்கு இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பதற்கு அவன் படும்பாடு… நேஹாவைக் காதலித்துத் திருமணம் செய்வதற்குக் கூட இவ்வளவு போராட்டம் இல்லை. இவர்கள் மேல் எப்பொழுதுமே மிகுந்த அக்கறை உண்டு பார்த்திபனுக்கும் நேஹாவிற்கும்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப் போல் காதலித்து மணமுடித்தவனுக்குத் தெரியாதா தன் தம்பியின் காதல் பார்வைகளும் ரகசிய பாஷைகளும். மித்ரனுக்கும் தன்னுடைய மற்ற இரு சகோதரர்களைவிட பார்த்திபன் மேல் கூடுதல் பாசம். நேஹாவும் மித்ரனின் தோழியாகிப் போன காரணத்தால் மிகவும் ஒட்டுதல் இந்த அண்ணனிடம்தான்.

சம்ரிதி பள்ளியில் படிக்கும் காலத்தில் ‘சின்னப் பொண்ணுடா’ என்று மித்ரனை அடக்குவதே பார்த்திபன் தான். அப்பொழுதெல்லாம் தன்னுடைய வெட்கத்தை மறைக்க மித்ரன் படும் பாட்டை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும் பார்த்திபனுக்கு.

இவர்கள் விஷயத்தை முதலில் கண்டுபிடித்தது நேஹா. அவள் திருமணம் முடிந்து வந்த கையோடு துப்பறிந்த முதல் விஷயம் இவர்கள் காதல்தான். அதற்காகப் பலப்பல திட்டுகளையும் மித்ரனிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

“டேய் காலேஜ்ல நான் உனக்கு சீனியர், இப்போ உன் அண்ணி கொஞ்சமாவது மரியாதை கொடுக்க கூடாதா” என்று மித்ரனிடம் கெஞ்சியது தனிக்கதை.

“நீதானே காலேஜ்ல அக்கானெல்லாம் கூப்பிடாதேன்னு சொன்ன இப்ப மட்டும் என்ன மரியாதை, ஹ்ம்ம்” என்று கூறி வழக்கம்போல் அவள் தலையில் கொட்டிவிட்டு ஓடி விடுவான் மித்ரன்.

அவளும் என்ன செய்வாள் மித்ரன் உயரத்திற்கும் அவள் உயரத்திற்கும் ஏணி வைத்துதான் அவன் தலையில் கொட்ட முடியும். இந்த உயரத்திற்கு பயந்து தான் இவ்வளவு பெரிய பையன் அக்கா அக்கா என்று கூறி மானத்தை வாங்குகிறானே என்று காலேஜில் பெயர் சொல்லிக் கூப்பிடும்படிக் கூறினாள்.

பின்பு படிப்பு முடித்து வேலைக்குச் சென்ற இடத்தில் பார்த்திபனை சந்தித்துக் காதலித்து மித்ரனுக்கே அண்ணியாக வருவோம் என்று நேஹாவுக்கு அப்பொழுது தெரியாதே.. சரி நாம் இப்பொழுது சம்ரிதியிடம் செல்வோம்…

நேஹாவிடம் திரும்பிய சம்ரிதி, “அக்கா, இந்த டிரஸ் வேற ஒரு மாதிரி அனீசியா இருக்குக்கா, நான் எப்போதும் போல சுடிதாரே போட்டிருப்பேனே” என்று புலம்பியவளை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து வைத்தாள் நேஹா.

“ICWA படிச்ச பொண்ணு மாதிரியா பேசுற, இதுல என்னடி உனக்கு அனீசியா இருக்கு ஹ்ம்ம்?? கல்யாணம் முடிச்சு முழுசா ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு, எத்தனை நாள்தான் மித்ரன் தனியாவே இருப்பான் பாவமில்லையா அவன்?” என்று கோபமாக ஆரம்பித்து அக்கறையுடன் முடித்தாள்.

சம்ரிதி தன் மனதிலிருப்பதை வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக தலை குனிந்து கொண்டாள். அவளைப் பார்த்து நேஹாவிற்கு மனம் பொறுக்கவில்லை,

“ஏண்டா என்ன பயம்டா உனக்கு??? எதுவாயிருந்தாலும் மித்ரன்கிட்ட மனசு விட்டுப் பேசு. அவன் ரொம்ப நல்லவன்மா. இதை நான் உனக்கு சொல்லணுமா? எனக்கு முன்னாடியே உனக்கு அவனைப் பத்தி தெரியும்தானே!! சின்னப் பிள்ளையிலிருந்து ஒண்ணா வளர்ந்தவங்கதானே?? என்று அவள் கையை ஆதரவாக பற்றிக் கொண்டு சொன்னாள்.

“எனக்கு ஒரு சந்தேகம் நீங்க ரெண்டு பேரும் போன்ல பேசிக்கிறீங்களா இல்லையா? நான் எப்போ சித்திக்கிட்ட (சம்ரிதி அம்மா) கேட்டாலும் மித்ரன் தினமும் போன் பண்றதா தான் சொன்னாங்க, ஆனா உன் முகத்தையும், நீ முழிக்குற முழியையும் பார்த்தா அப்படித் தோணலையே!” என்று கேட்பவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குத்துமதிப்பாக அனைத்து பக்கமும் தலையாட்டி வைத்தாள் சம்ரிதி.

என்னவென்று பதில் சொல்வாள், அவசரகதியில் நடந்த திருமணம், அதற்குப்பிறகு மித்ரன் இந்தியாவில் ஒரு வாரம் மட்டுமே இருந்தான். அந்த ஒரு வாரமும் முடிந்த அளவுக்கு அவளைத் தவிர்த்தான். அப்படியும் தனியாக இருக்கும்பொழுது அவனிடம் பேச வாய் திறந்தாலே தன் இதழ் கொண்டு மூடி விடுவான்.

அந்த முத்தத்தில் காதலும் இல்லை காமமும் இல்லை, பிடிவாதம் மட்டுமே இருந்தது. உன்னைப் பேச விட மாட்டேன் நானும் பேச மாட்டேன் என்கிற பிடிவாதம். பிறகு எங்கிருந்து பேசுவது?? சம்ரிதிக்கு வெறும் காத்து மட்டும்தான் வரும். இந்த நிலையை பயன்படுத்தி ரூமைவிட்டு வெளியேறிவிடுவான்.

இப்பொழுதும் அந்த முத்தத்தை நினைத்தவுடன் கன்னங்கள் சிவந்து போயின சம்ரிதிக்கு. அவளை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தன கூலர்சுக்குள் ஒளிந்திருந்த இரு கண்கள்.

அவளின் கன்னச்சிவப்பையும் விட்டு வைக்கவில்லை அந்தக் கண்கள். உயரத்திற்கேற்ற அளவான உடல்வாகு, பாலில் கொஞ்சமே கொஞ்சம் குங்குமப்பூவைக் கலந்தால் வருமே ஒரு நிறம் மஞ்சளும் ரோசும் கலந்த கலவையாக அப்படி ஒரு நிறம்தான் சம்ரிதி. அழகான முகம், முடியைத் தளர விரித்து விட்டிருந்தாள், அது அவளுக்குக் கூடுதல் அழகைத் தந்தது.

மறுபடியும் ஒருமுறை பார்த்திபன் சம்ரிதிக்கு அனைத்து விமானப்பயண நடைமுறைகளையும் கூறி, ஆயிரம் முறை பத்திரமாக இருக்குமாறு சொல்லி முடித்தான்.

“எத்தனை தடவைதான் திருப்பித் திருப்பி சொல்லுவீங்களோ? அவ என்ன சின்ன குழந்தையா? அதெல்லாம் உங்க தம்பி உங்களைவிட நல்லாவே அவன் பொண்டாட்டியைப் பார்த்துக்குவான்… எல்லாம் அவன் சமாளிச்சுப்பான்” என்று நேஹா சலித்துக் கொண்டாலும் அவளும் தன் பங்கிற்கு சம்ரிதிக்குத் தேவையானவற்றை மறுபடியும் கூற தவறவில்லை.

ஒருவழியாகத் தன்னை சமாளித்துக் கொண்டு பார்த்திபன் மற்றும் நேஹாவிடமிருந்து பிரியாவிடைப் பெற்று போர்டிங் பாஸ் எடுத்து,  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செல்வதற்கான கேட்டை நோக்கி நடந்தாள்.

யாரோ தன்னை உற்று நோக்குவது போலும், பின் தொடர்வது போலவும் தோன்ற எப்பொழுதும் போல் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தோன்ற நடையை விரைவாக்கி வேகமான எட்டுக்களை எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள். அப்பொழுது வலியகரம் ஒன்று அவள் கையைப் பிடித்து நிறுத்தியது. அரண்டு போய் திரும்பிப் பார்த்தாள் சம்ரிதி.

error: Content is protected !!