emv22a

emv22a

எனை மீட்க வருவாயா! – 22A

 

மகளும், மருமகனும் கிளம்பியபின் தனது வீட்டு வழியே சென்ற விக்னேஷிடம், “என்ன விக்கி, ரொம்ப வேலையா!  இந்தப் பக்கமே வர மாட்டீங்கற?” ஈஸ்வரி வினவ

“ஆமாத்தை!  கடையில ஆளு மாத்த முடியாத அளவுக்கு வேலை” என்றவனிடம், திவ்யா வந்து சென்றதைப் பற்றிக் கூற, “உனக்கும் சரி, உம்மகளுக்கும் சரி.. எதாவது வேலை இருந்தாதான் என் நினைப்பே வருது!  அப்பத்தான் உங்க ரெண்டுபேரு கண்ணுக்குப் படறேன். இல்லைனா ரெண்டு பேருமே என்னைக் கண்டுக்கறதே இல்லை!” என தனது மனக்குறையை விக்கி வெளியிட

“அப்டி நினைப்பமா விக்கி! நீ இந்தப் பக்கமா வந்தா பாத்திருக்கலாம்.  ஒரு வாரமாவே உன்னை இந்தப் பக்கம் ஆளைக் காணோம்.  ரொம்ப பிஸியா இருப்பேன்னு நான்தான் அவகிட்ட தொந்தரவு பண்ணாதடீன்னு சொன்னேன்!”

“நீ சும்மா இருந்திருந்தாகூட எனக்கு போனைப் போட்டுருக்கும்.  நானும் ஒரு எட்டு வந்து, அதைப் பாத்துப் பேசிட்டுப் போயிருப்பேன்.  எல்லாத்தையும் நீதான் கெடுத்து வச்சிருக்கபோல!  நீ எல்லாம் என்ன அத்தை!” என மனச் சங்கடத்தோடு விடைபெற்றுச் சென்றான்.

அப்படியே அருகே இருந்த தாயிடம் சென்று பேசிக் கொண்டிருந்தவர், மகளின் செயல்களை, கணவனுக்காய் அவள் பரிந்து பேசிய பேச்சைப் பற்றி தாயிடம் சிலாகித்தார் ஈஸ்வரி.

அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர், “இனி எல்லாம் அவளே பாத்துக்குவா.  இன்னும் அவ குடும்ப விசயத்துல மூக்கை மூனு முழ நீளத்துக்கு நுழைக்காம, தள்ளி நின்னே வேடிக்கை பாரு!  அது போதும்.  ரொம்பக் கஷ்டம்னு நம்மகிட்ட வந்து சொன்னான்னா, விசயத்தைக் கேட்டுட்டு, அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு பண்ணு!  அதவிட்டுட்டு, அவளுக்காக இனிப் பேசப் போனா, மூக்குடைஞ்சு அசிங்கப்படறமாதிரி ஆகிரும்டீ! பொண்டாட்டி புருசனுக்குள்ள எல்லாம் சரியா இருந்தா, சுத்தி நடக்கிற அக்கிரமமோ, அநியாயமோ, மத்தது எதுவும் அதுகளுக்கு பெரிசா, தப்பாத் தோணாது!” என மகளுக்கு விளக்கினார்.

“ஆமாம்மா, நீ சொல்றதும் நிஜந்தான்!” என மகளின் செயலை எண்ணிப்  பார்த்து, தாயிடம் ஆமோதித்தார் ஈஸ்வரி.

“எப்டி அந்தப் பையலைத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நின்னவ, இப்டி டக்குனு மாறிட்டாளேம்மா!” ஆச்சர்யத்தோடு தனது தாடையில் கைவைத்தவாறு தாயிடம் வினவ

“அதுக்குள்ள நீயா ஒரு முடிவுக்கு வந்துறாதடீ!  அந்தப் பையலை எங்கையாவது பாத்த பின்னேயும், இதே மாதிரி புருசனுக்கு ஏத்துக்குட்டு பேசுறான்னா, அப்பவும் வீட்டுக்காரனுக்காகவே எல்லாம் பண்ணுறான்னாத்தான்… அவ உண்மையிலேயே மாறுனதா அர்த்தம்” எனும் குண்டை மகளை நோக்கி விட்டெறிய

“என்னம்மா சொல்ற?” கண்களில் பீதியோடு வினவினார் ஈஸ்வரி.

“அதுவரை இந்த மாதிரி இருக்கறவளுகளை, இனுக்களவுக்குகூட நம்ப முடியாதுடீ.  செம்மறி ஆடு மாதிரி இவளுக! கட்டுனவனை கொஞ்சம் மனசுக்கு புடிக்கலைன்னாலும், இந்தப் புள்ளைக மனசு, வேற மாதிரி… யோசிக்க ஆரம்பிச்சிருவாளுக!”

“ம்மா…….”

“பொறுடீ… எப்டின்னா… இவனைக் கட்டுனதாலதான் அவ வாழ்க்கையே வீணாப் போயிருச்சுனு நினைச்சுட்டான்னா…, சில பொம்பளைக புருசனைத் திட்டியே மனச ஆத்திக்குவாளுங்க!”

“…” 

“சிலரு பழைய ஆளுகூடயே போயி விட்ட வாழ்க்கைய வாழ்ந்து, அவுகளை நிலை நிறுத்தப் போறேன்னு… அவ தலையில, அவளே மண்ணை அள்ளிப் போட்டுக்குவாளுங்க.. அப்புறம் ஊரே அதை கள்ளக் காதலுன்னு பேசி அசிங்கப்படுத்தும்!”

“…சில வைராக்கியம் புடிச்சவளுக மட்டுந்தான், நடந்ததை அப்டியே ஏறக்கட்டிட்டு, பழைய ஆளையும் கண்டுக்காம, புருசனையும் ஒரு பொருட்டா நினைக்காம, தான் உண்டு, தன்னோட வேலைன்னு அவளைப் பாத்துட்டு, புள்ளை குட்டி இருந்தா.. அதையும் பாத்திட்டு, காலத்தைக் கடத்திட்டு வெந்ததை திண்ணுட்டு, விதி வந்ததும் போயிச் சேருவாளுங்க!”

“…” 

“இன்னுமொன்னு… காளி மயன் இவளை எந்தக் குறையுமில்லாம நல்லா வச்சிகிட்டுருந்தான்னாக்கா… எதையும், எவனையும் பாத்து இவ சல்லியும் மாறமாட்டா! அப்பத்தான் நாம அவளை நினைச்சு பயப்படாம இருக்க முடியும்.  அதனால இதுக்கான பதிலு என்னவோ, அந்தக் காலத்திட்டதான் இருக்கு!”

“…”

“இப்டி எந்த புத்தி இவளுக்கு இருக்குதுனு படைச்சவனுக்குத்தான் தெரியும்.  அதனால நீ ரொம்பவும் உம்மகளை மெச்சுக்காதே!” என பெரிய அதிர்ச்சி தரும் செய்தியை சாதாரணமாகக் கூறியிருந்தார்.

“எல்லாம் நீ கும்பிடற சாமிக்கிட்ட விட்டுட்டு, உன் பொழைப்பைப் போயி பாரு!” என பரவெளியைப் பார்த்து கைகளை உயர்த்திக் கூறி முடித்திருந்தார்.

தாயின் பேச்சைக் கேட்ட ஈஸ்வரிக்கு மனக் குழம்பமே எஞ்சியிருந்தது. அதே மனப் பிராந்தியில், “கடவுளே, அந்தப் பைய இவ கண்ணுல… இனி படவே கூடாது!” எனும் ஆழ்ந்த பிரார்த்தனையோடு அங்கிருந்து அகன்றார்.

விரைவில் அவன் வருவதை இவர்களின் எண்ணமே செயலாக்கப் போவதை அறியாதவர்கள்!

……………………………..

வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே செல்லுமுன் ஒப்பாரியைத் துவங்கியிருந்தார் காளி.

“இந்த கஷ்டத்தைக் கேக்க, எனக்கு எந்த நாதியுமில்லையா! யாருக்கும் நான் எந்தக் கெடுதலும் நினைச்சதுகூடக் கிடையாதே!  எனக்கு மட்டும் ஏன் இந்தக் கஷ்டத்தை ஆண்டவன் குடுக்கறான்!” என மூக்கைச் சிந்தி அவரின் அழுகையின் தீவிரத்தை மற்றவருக்குத் தெரியப்படுத்தியவர்,  

“போனவ, அங்கிட்டே நிம்மதியா, குடும்பம் கோத்திரம்னு நல்லாயிருக்கான்னுல்ல நினைச்சிட்டு சந்தோசமா இருந்தேன்.  இப்ப அவளுக்கு என்ன கஷ்டமோ தெரியலையே! திடுதிப்புன்னு திரும்பி வந்து வீட்டைக் கேப்பான்னு, அப்போவே எனக்குத் தெரியாமப் போச்சே!  காலங்கெட்ட காலத்துல வந்து வீட்டை காலி பண்ணச் சொல்லுவான்னு நான் நினைக்கலையே! இனி நான் எங்கிட்டுப் போவேன்!” என்றவர் மகன் தன்னையே பார்த்தபடி தன்னருகே வந்ததும்,

“வரதுதான் வார, கொஞ்சம் வெள்ளன(விரைவாக) வந்தா என்னடா?” வெடுக்கெனப் பேசினார்.

“ஏம்மா? இப்ப உனக்கு என்னாச்சு? உள்ள நுழைஞ்சதும் ஒப்பாரி வைக்கிறதோட, எம்மேல எரிஞ்சி விழற!” ஜெகன்

“அத எப்டிச் சொல்லுவேண்டா செகனு! எந்தலைக்குமேல வெள்ளம் போயிருச்சே! எல்லாம் எந்தலையெழுத்து!  உங்க அப்பாவுக்கு வெவரம் பத்தாது!  நான் வெள்ளனத்துல(விரைவாக) ஊருக்குப் போவணும்!” என அரற்றியபடியே அங்கும் இங்கும் கிடந்த, அவரது பொருள்களை சேகரிக்கத் துவங்கி இருந்தார் காளி.

“என்னானு தெளிவாச் சொல்லும்மா!  ஆதியும் புரியல! அந்தமும் புரியல!  அரைகுறையாச் சொன்னா எனக்கு எப்டித் தெரியும்?”

“சின்னவனுக்குப் போனைப் போட்டேன்டா செகனு.  அவந்தேன் உன் அத்தைக்காரி ஊருக்கு வரப்போற விசயத்தை எங்கிட்டச் சொன்னான்!”

“…” உண்மையாகவா என்பதுபோலத் தாயைப் பார்க்க

“நான் முதல்ல நம்பலை!  ஏதோ பயபுள்ள விளையாடறான்னு நினைச்சேன்.  ஆனா அவுக நம்ம ஊரு பிரசுரண்டுட்டப் போயி விசாரிச்சாகலாம்!  எங்க இடத்தில இப்ப யாரு வந்து வீடு கட்டிட்டு இருக்காகன்னு!  அத்தோட பிரசுரண்டுதான் நமக்குப் போனைப் போட்ருக்காக!  போனை அருணு எடுக்க, அவுக… உங்க அப்பனைக் கேக்க, இவன்.. நாந்தான் அவுக மயன் பேசறேன்னு சொல்லியிருக்கான்.  அப்பத்தான் அவரு விசயத்தைச் சொல்லியிருக்காரு… இப்டி சொல்லாமக் கொள்ளாம வந்து இறங்குவாளா உங்க அத்தைக்காரி!”

“…”

“சரி வரதுதான் வர்றா, எப்போனு கேட்டா, இன்னைக்கேகூட வருவாங்க அப்டிங்கறான்!” சேலைத் தலைப்பில் கண்ணீரையும், மூக்கையும் மாறி மாறித் துடைத்துக் கொண்ட காளி, “இப்ப எப்டி இந்நேரத்துக்கு ஊருக்குப் போறது?” என புலம்ப

“போறதுன்னா நீ அப்போவே கிளம்பிப் போயிருக்கலாம்ல!”

“வீட்டைப் போட்டுட்டு எப்டிப் போறதுன்னுதான், வாசல்லையே குத்தவச்சிட்டு, நீ வரதைப் பாத்திட்டு இருந்தேன்!”

“ஏற்கனவே உங்கிட்ட சொன்னதுதானம்மா!  நீ போறதுன்னா, பூட்டிட்டு, பக்கத்துல சாவியக் குடுத்துட்டு போயிருக்க வேண்டியதுதான!”

“நீ எல்லாம் சொல்லுவ!  ஆனா எதாவது பொருளு காணாமப் போச்சுன்னா, இராமனாரத்துக்காரிக வந்து எம் ம..ர விட்டு வப்பாளா.  ஆஞ்சுபுர மாட்டா ஆஞ்சு?” என சற்றுநேரத்தில் மாற்றுடை அணிந்து வந்தார்.

தாயின் பேச்சைக் கேட்டதும் ஜெகனுக்குமே, சட்டென ஒரு வருத்தம் சூழ்ந்தாற்போலிருந்தது.

சொந்த ஊருக்குச் சென்றால் வீடு இருக்கிறது.  ஆனாலும், புதிதாய் வாங்கிய நிலபுலன்களை அங்கிருந்துகொண்டு பராமரிப்பது கடினம்.  அத்தோடு வீட்டில் வளர்க்கும் ஜீவன்களை இடமாற்றம் செய்வதும், அத்தனை லேசான காரியமல்ல, என அவனது எண்ணம் ஓட, விசயத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டி, தம்பிக்கு அழைக்க முடிவு செய்தான்.

அருணுக்கு அழைத்தவன், குரலை மட்டுப்படுத்தி “டேய், நான் ஜெகன் பேசுறேண்டா.  நல்லாருக்கியா?”

“இருக்கேன்! இருக்கேன்!  என்ன இந்த நேரத்தில கூப்பிட்டுருக்க! என்ன விசயம்?”

“அம்மாகிட்ட என்ன சொன்ன?”

சிரித்தவன், “அத எதுக்கு இப்ப கேக்குறண்ணே!”

“ஒரே பொலம்பலாப் பொலம்புதுடா! அது சொல்றதெல்லாம் உண்மையா? பிரசிடெண்டுகிட்ட உன்னோட நம்பர் எப்ப, யாரு குடுத்தது? அப்பா நம்பருதான எல்லாத்துலையும் குடுத்து வச்கிருக்கோம், அத்தை நெசமாலுமேவா இங்க வருது” என அடுக்கடுக்காய், மூச்சுவிடாது கேள்வி எழுப்ப

“பொறுண்ணே! அம்மாக்கு மேல நீதான் டென்சன் பார்ட்டீயா இருக்கபோல! அது ஒன்னுமில்ல! நீ கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நிலமையில இப்ப நான் இல்லை. நீ ரொம்ப பெரிசுபடுத்தாம உன் வேலையப் போயி… இப்பப் பாரு!  இப்ப நான் சொன்னதை அப்டியே அம்மாகிட்டப் போயி சொல்லித் தொலைஞ்சிராத! வேலை முடிஞ்சு நானே கூப்பிடுறேன்! வைக்கட்டா” என டக்கென வைத்துவிட்டான்.

அதற்குள் கிளம்பி வந்த காளி, “செத்த என்னைக் கொண்டுபோயி ஊருல விட்டுட்டு வாவேன்!” மகனிடம் கூறியவாறே, சுருக்குப் பையிலிருந்து காசை வெளியில் எடுக்காமலேயே எண்ணிச் சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

“நிறையக் காசு வச்சிருக்க போலயேம்மா!” என ஜெகன் நேரங் காலம் புரியாமல் தாயிடம் சென்று அவரின் சுருக்குப் பையை எட்டிப் பார்த்தபடியே கேட்டான்.

வாகாய் மகனுக்குத் தெரியாமல் மறைத்தவாறே, இடுப்பில் சொருகியவர், “அட போடா எடுபட்ட பயலே! பத்து காசு அப்பன், மயன், எவனுமே எங்கண்ணுல காட்டாதீங்க.  இங்க சுருக்குப் பையில பணத்தை மூட்டையா முடிஞ்சு நான் வச்சிருக்கேன்!” என கோபமாய் கூறினார்.

அத்தோடு, “செத்த ஊருல கொண்டு வந்து விட்டுருவேன் செகனு” என மீண்டும் மகனிடம் கேட்க

“போம்மா!  ரொம்ப டயர்டா இருக்கு!  உன்னை காரைக்குடில பஸ்ஸு ஏத்தி விடறேன்.  நீ அப்பாக்கு போனபோட்டு, சீக்கே மங்கலத்துல வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லு”

“அந்த மனுசன் வரமாட்டேனு சாதிப்பாரே!  அப்டி என்ன மாமியா வீட்டுல போயி வெட்டி முறிச்சிட்டு வந்த!” என்றவர், “இப்டி ஒன்னுத்துக்கும் உதவாத புள்ளைகளையும், சூதுவாது தெரியாத புருசனையும் வச்சிட்டு, நான் என்ன சொகத்தைக் கண்டேன்.  எல்லாம் என் நேரம்!” என அங்கலாய்த்தபடியே வாசலுக்கு விரைந்தார்.

வண்டியை எடுக்க வெளியில் சென்றவன், விசயம் உண்மையோ, பொய்யோ ஆனால் தற்போது பிரச்சனை எதுவும் இல்லை என்பது ஜெகனுக்குப் புரிய, இலகுவான மனநிலையில் தாயை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.  அருண் பேசியதைப்பற்றி தாயிடம் வாய் திறக்கவில்லை.

அனைத்தையும் அமைதியாகப் பார்த்தபடி, அவளது வேலையில் கவனமாய் இருந்தாள் திவ்யா.

செல்லும் வழியில் தாயிடம் இவனது பங்கிற்கு எத்தனை நாளுக்குள்ள காலி பண்ணித் தரணுமாம்மா எனக் கேட்க, “அதையெல்லாம் கேக்கணும்னே தோணலையே எனக்கு.  அவஞ் சொன்னதைக் கேட்டதுமே தலையில இடி இறங்குன மாதிரிப் போயிருச்சே செகனு.  இதையெல்லாம் நான் யாருகிட்டப் போயி, என்னானு சொல்ல!” என புலம்பியவாறே மகனோடு சென்று காரைக்குடி பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டவரை, உரிய பேருந்தில் ஏற்றிவிட்டுத் திரும்பினான் ஜெகன்.

வீட்டிற்கு வந்து நெடுநேரம் கழித்து அருண் அழைத்து, “ஏண்ணே, உனக்கு எம்புட்டுப்பட்டாலும் புத்தியே வராதா!” எனக் கேட்க எதிர் முனையில் இருந்தவனுக்கு புரியவில்லை.

“என்னடா!  ஏன் திடீர்னு இப்டி ஆரம்பிக்கறே!  என்னாச்சு!” ஜெகன்

“இப்பத்தான் பஞ்சாயத்து அது இதுன்னு தனிக் குடித்தனம் வந்த!  அப்புறம் ஆத்தாவக் கூட்டிட்டு வந்து, ஏன் உங்ககூட வச்சிருக்க?”

“நான் எங்கடா போயி கூட்டிட்டு வந்தேன்?”

“பின்னே!”

“அதுவா வந்துச்சு!”

“வந்தா, ஒரு வேளை சோத்தைப் போட்டு.. திண்ணதும், பஸ்ஸூல ஏத்தி விடாம, வீட்டை அவுக பொறுப்புல ஒப்படைச்சிட்டு, கோவிச்சுக்கிட்டு போன பொண்டாட்டிய சமாதானம் பண்ணிக் கூப்பிடப் போனியாக்கும்” கிண்டல் தொனியில் கேட்டான் அருண்.

“நீ வேறடா! பெத்திருச்சு!  அதனாலதான நம்ம இருக்கற இடந்தேடி வருது!  வீட்டுக்கு வந்ததை, வேற என்ன செய்யச் சொல்லுற?”

“அதுக்காக ரொம்பத்தான் அம்மா பாசத்துல இருக்கபோல!”

“இல்லாமப் போகுமா?”

“அதுதேன் நான் சின்னதா ஷாக் குடுத்தேன்!”

“என்ன ஷாக்கு!”

“எப்டி.. இன்னியாரம் ஊரப் பாத்து காளி கிளம்பியிருக்குமே!” என அருண் சிரிக்க

“டேய்…! என்னடா குழப்பம் பண்ணி வச்சே!  ஒழுங்கா உண்மையச் சொல்லுடா!”

அந்த உண்மை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!