emv23a
emv23a
எனை மீட்க வருவாயா! – 23A
மனதில் வந்த குழப்பத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாமல், தனக்குள் வைத்துப் புழுங்கினாள் திவ்யா.
ஜெகனும் பல முறைமைகளில் வந்து அவளிடம் கேட்டும், வாயைத் திறந்தாளில்லை.
“காலேஜ்ல எதுவும் பிரச்சனையா திவ்யா”
“வேற என்ன பிரச்சனைனாலும் எங்கிட்டச் சொல்லு திவ்யா”
“உடம்புக்கு எதுவும் முடியலையா. உங்க அம்மாகிட்ட பேசுனியா இதைப் பத்தி”
நீண்ட நாள்களாய் ஒரு எதிர்பார்ப்பு வந்திருந்தது ஜெகனுக்கு. அது குழந்தை பற்றியது. இடையில் ஒரு முறை மருத்துவனைக்கு தம்பதியர் சகிதமாய்ச் சென்று வந்திருந்தனர்.
மருத்துவரோ, “ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி ஒரு வருசம்தான முடிஞ்சிருக்கு. சின்ன வயசுதான். இன்னும் ஒன் இயர் வயிட் பண்ணலாம். இப்பவே ட்ரீட்மெண்ட் எதுவும் தேவையில்ல. நல்லா லைஃப் என்ஜாய் பண்ணுங்க, தேவையில்லாம எதையும் மண்டைல ஏத்திக்காதீங்க” என அனுப்பி வைத்திருந்தார்.
திவ்யாவிற்கு இன்னும் பிள்ளை பற்றிய எதிர்பார்ப்புகள் எதுவும் வந்திருக்கவில்லை. ஆனால் ஜெகனுக்கு குழந்தைகள் மீது பிரியம் அதிகம். ஆகையால் இவளின் அசைவுகளை கூர்ந்து கவனிப்பவனுக்கு, இதனால் அப்படியோ என யோசித்துக் கேட்டிருந்தான்.
“படிச்சிட்டு, வீட்டையும் பாக்கறது கஷ்டமா இருக்கா. வேலைக்கு வேணா ஆளு வைக்கலாமா?”
“உனக்கு என்ன அசௌகர்யம்னு சொன்னாத்தானே திவ்யா தெரியும்”
“ஏன் என்னைப் பக்கத்துலயே விடமாட்டுற”
“நீ முன்ன மாதிரி இல்ல. நான் அத்தாச்சிக்கிட்டப் பேசி, இங்க வரச் சொல்லவா?”
இப்படி, ஜெகனும் அவளை அவள் போக்கில் விட்டேற்றியாக விடாமல், வீட்டில் இருக்கும் வேளைகளில் கண்கொத்திப் பாம்பாய் அவளைக் கவனித்து, அவ்வப்போது எதாவது கேள்வியை முன்வைத்தான்.
அவள் மறுத்தும், இழுத்து வைத்துப் பேசினான். அவளோடு சமையலறையில் எப்போதும்போல உதவினான். அவள் முரண்டு பிடித்து ஒதுங்கினாலும், அவன் சல்லியும் மாறவில்லை.
ஆனால் திவ்யா, சின்ன தலையசைப்பால் மறுப்பையும், சில வேளைகளில் “ஒன்னுமில்ல”, “வேணாம்” எனக் கடப்பதையும் தொடர்ந்திருந்தாள்.
பேச்சுகள் அவளிடம் குறைந்திருந்தது. சாதாரணமாகப் பேசத் துவங்கி, தன்னையறியாமல் எதாவது பேசிவிட்டால், தான் கூறிவிட்டால் என எண்ணியே சுமுகமான பேச்சுக்காகக் கூட கணவனிடம் வாய் திறவாமல் இருந்தாள்.
அனுபவம் தந்திருந்த பாடம், அவளை வாயை இறுக மூடிக்கொண்டு சும்மாயிரு என படிப்பித்திருந்தது.
எப்போது கிருபாவுடனான காதலை வாழவைக்க எண்ணி, சிலரை நம்பி உளறி, அது தனக்கே வேதனையாய் முடிந்ததோ, அப்போதே சில விசயங்களில் இப்படிச் செய்தால் தனக்கு நன்மை விளையும், இப்படிச் செய்தால் நன்மையொன்றும் தனக்கு சாதகமாய் விளையாது எனும் தெளிவிற்கு வந்திருந்தாள் திவ்யா.
அது தாய், தமையன் மற்றும் கணவன் எனும் உற்ற உறவாய் இருந்தபோதும், எதைக் கூறுதல் நலம் என்பதை அனுபவப் பாடமாகவே பயின்றிருந்ததை, அவள் என்றுமே மறக்க நினைக்கவில்லை.
வாழ்க்கைப் பாடம் அதுதானே. அதனால் பட்டவள் திருந்தியிருந்தாள். ஆகையினால் வாயைத் திறக்காமலேயே, தனது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தினாள்.
மாலை கல்லூரியில் இருந்து திரும்பியது முதலே, கணவன் வரும்வரை தனிமையில் இருப்பவளுக்கோ, பழைய நினைவுகள் ஒவ்வொன்றும் நினைவில் வந்து, அவளைக் குழப்பத்தில் தள்ளியது.
கிருபாவை உண்மையில் அவள் மனம் நாடவில்லை. ஆனால் நடந்து முடிந்த விசயங்கள், அவனைக் கண்டது முதலே அவளுக்குள் குறுகுறுப்பையும், மன அளவில் களங்கப்பட்டதாகவும் தனக்குள்ளாகவே பறைசாற்றி, அவளை மற்ற நடைமுறை சம்பவங்கள் மட்டுமல்லாது உற்ற உறவுகளிடம் இருந்தும் ஒதுங்கி, ஒடுங்கச் செய்தது.
இது ஒரு வகையான ஆரம்பகட்ட மனப் பிறழ்வு நிலைதான்.
பெரும்பாலும் இக்கட்டான இதுபோன்ற மனநிலையின்போதும், ஒழுங்கற்ற தொடர் மாதவிடாய்ப் போக்கின்போதும், வேலைகளின்போது தவறிழைத்து அதனால் உண்டான பேரிழப்பு காரணமாய் விழையும் குற்றவுணர்ச்சியின்போதும் மற்றும் குழந்தைப்பேற்றிற்குப் பிறகு தொடர்ச்சியான ஓய்வில்லாமல் ஏற்படும் நெருக்கடி சூழலிலும், உண்டாகும் சிறிய அளவிலான மனபாதிப்புகளில் ஒன்றுதான் இது.
அதனால் தன்னைத்தானே குற்றவாளியாக்கி, அதிலிருந்து மீளமுடியாமல் தவித்தாள்.
யாரையும் நம்ப இயலாத மனம், என்னதான் தன்னைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ளும் கணவனாய் இருந்தாலும், மனதைத் திறந்து அவனிடம் கொட்டி, ஆசுவாசப்படுத்திக் கொள்ள இயலாத நிலை திவ்யாவிற்கு.
விசயத்தைக் கூறப்போக, அது வேறு ஏதேனும் புதிய சிக்கலில் கொணர்ந்து நிறுத்திவிட்டால் என்கின்ற பயம் கலந்த தயக்கம். கணவனை விட்டு விலகி நிற்கச் செய்தது.
இதுவரை கிருபாவுடனான காதலைப்பற்றியோ, அது சார்ந்த எதையும் கணவன் தன்னிடம் சொல்லிக் காட்டி துன்பப்படுத்தாதபோதும், கணவன் என்கிற நிலையில் அவனது நிலை, தன்னிடமான அவனது எதிர்பார்ப்பு என்ன? என்பதை இந்த குறுகிய காலத்தில் உணர்ந்திருந்தாள்.
தனது என்கிற அதிகாரப்பற்றும், தான் உயிருள்ள ஜீவனாக இருப்பினும், தன்னை ஒரு பொருளாகப் பாவித்து, அதனால் உண்டாகியிருந்த பொருள் பற்றும், தன்மீது தன் கணவனுக்கு வந்தது முதலே உண்டு என்பதை தெள்ளத் தெளிவாய் உணர்ந்திருந்தாள்.
இது தம்பதியரிடையே இயல்பான ஒன்றுதான் என்பதையும், அரசல்புரசலாய் அறிந்து கொண்டிருந்தாள்.
மேலும் ஒரு விசயம் இருந்தது. அது அவளின் கணவனது தன்னிடமான எதிர்பார்ப்பு சார்ந்தது. அதனால் தன்னை வெளிப்படுத்திவிடாமல் இருக்க, மிகவும் விழிப்போடு நடந்துகொண்டாள்.
………………………………..
திருமணமான புதிதில் சிலர் விருந்து வைக்கும் நோக்கோடு புதுமணத் தம்பதியரை வீட்டிற்கு அழைப்பது சகஜம்.
வெளியூர் அழைப்பு ஒன்று இருக்க, அப்போது தவிர்க்க இயலாமல் செல்லவேண்டிய நிர்பந்தம் காரணமாய் வெகுதூரம் என்பதால் பேருந்து பயணத்தை தம்பதியர் இருவரும் மேற்கொண்டிருந்தனர். அப்போது, நெருக்கடியான இடத்தில், ஜெகன் அவளை தனது புறம் இழுத்தும் அவளை லேசாக உரசிக்கொண்டு ஒருவன் செல்வதைக் கண்டவனுக்கு, அதை இலகுவாகக் கடக்க முடியாமல், எரிமலையாய் அவன் மாறிய தருணம் திவ்யாவால் என்றுமே மறக்க இயலாது.
இவளோ நடந்ததைக் கண்ணுறாமல், யூகமாய், “தெரியாமத்தாங்க இடிச்சிட்டாங்க அந்த அண்ணே. விடுங்க” என
“ஒரு ஆம்பிளை எந்த நேரத்தில எப்டி இருப்பான், நடப்பான்னு இன்னொரு ஆம்பிளைக்குத்தான் தெரியும்டீ. பேசாம கொஞ்ச நேரம் வாய மூடு” என அந்நேரம் அவளைக் கத்தி, அடக்கியிருந்தான்.
அன்றைய பேருந்து நிகழ்விற்குப்பின், எத்தனை தூரமானாலும், பேருந்தைத் தவிர்த்து, தன்னை இருசக்கர வாகனத்திலோ, அல்லது தனியே வண்டி ஏற்பாடு செய்தோ மட்டுமே கணவன் தன்னை வெளியே அழைத்துச் செல்வதை அறிந்தவள்தானே.
அதன்பிறகு கூட நீண்ட நாள் அதுபற்றி யோசித்திருக்கிறாள் திவ்யா. இந்த விசயத்திற்கே இவ்வளவு தூரம் கோபம் கொண்டு, இனி அதுபோல் ஒரு விசயத்தினை எதிர்நோக்கவே கூடாது என எண்ணி, அதற்கான நிரந்தரத் தீர்வை யோசிக்கின்றவன், தான் ஏற்கனவே ஒருவனை மனதால் நினைத்ததை அறிந்தும், எப்படி தன்னைத் திருமணம் செய்ததோடு, எந்த தயக்கமும் இன்றி, குறைவாய் தன்னிடம் மறைமுகமாய்க்கூட கூறாமல், ஏற்றுக் கொண்டிருக்கிறான் என.
அதை அவன் தன்னோடு இயல்பாய், இனிமையோடு இருந்த தருணத்தில் கேட்டாள் திவ்யா.
மனைவியின் கேள்வியில் நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவன், “அது கண்டிப்பா ஏன்னு தெரிஞ்சிக்கணுமா?”
“ஆமா” என திவ்யாவும் பிடிவாதமாய் நிற்க, “சட்டுனு காரணத்தை மட்டும் சொன்னா, நீ தப்பா அர்த்தம் எடுத்துக்க வாய்ப்பிருக்கு. அதனால, அப்டியே சுத்தி வளைச்சு நிறைய சொல்ற மாதிரி வருமே. கேக்க உனக்கு பொறுமை இருக்கா” என மனைவியின் மூக்கைப் பிடித்து ஆட்டியவனிடம், “ம்.. இருக்கு சொல்லுங்க” எனக் கேட்டறிந்து கொண்டாள் திவ்யா.
அதை தற்போது நினைவில் நிறுத்தியவளுக்கு, இப்போதுதான் ஜெகன் தன்னிடம் அதுபற்றிக் கூறியதுபோலத் தோன்றியது திவ்யாவிற்கு.
“உன்னை நான் கல்யாணம் பண்றதுக்கு முன்ன, உன் வாழ்க்கையில நடந்தது அந்த விசயம். அப்ப உங்க அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமானு அவங்கதான் உன்னை ஒழுங்கா பாத்துக்கணும். உங்க வீட்டு ஆளுங்க உம்மேல பொறுப்பா இருந்திருந்தா, ஒழுங்கா அன்பு செலுத்தியிருந்தா, அவங்களோட கடமை தெரிஞ்சு, உனக்கு வேண்டியதை பரிபூரணமாச் செய்திருந்தா, அந்த வயசுக்சே உரிய ஹார்மோனோட சக்தினால வரக்கூடிய சதியை, கட்டாயமா, சட்டைசெய்யாம நீ ஒழுங்காத்தான் இருந்திருப்பே!”
இதைக் கேட்ட திவ்யாவிற்கோ, அன்றைய நாள்களில் தனது நிலையை யோசித்துப் பார்த்தாள். ஜெகன் கூறுவது உண்மையாகவே தோன்றியது, ஆனாலும் இடையுறாது அடுத்து அவன் கூறுவதைக் கேட்டபடி இருந்தாள்.
ஜெகன், “…அதுக்காக, உம்மேல எந்தத் தப்பும் இல்லைனு நீ புரிஞ்சிக்கக் கூடாது. சரிக்கு சரியா ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு” என்றவனை ஆச்சர்யமாய் பார்த்திருந்தாள் திவ்யா.
“…ஆனா உங்க வீட்லயே உனக்கு ஏதோ நிம்மதியில்லாமப் பண்ணப்போயி, அப்டி ஒரு சூழல் உனக்கு வந்ததும், அந்த விசயத்துல ஆர்வம் வந்திருக்கலாம்”
“…”
“கானல் நீருங்கறதை தெரியாம நம்பிப் போறதுதான் அந்த வயசு. அப்டி தன் வீட்டுல உள்ள பிள்ளை தெரியாம வழி மாறினாலும், தெரிஞ்சே வீம்புக்குத் தப்பு பண்ணாலும், அதை சரி பண்ண வேண்டியது, அவங்க வீட்டுல உள்ள பெரிய ஆளுங்களோட கடமை!”
“…”
“அப்ப நீ எப்டி நடந்தாலும், உங்க வீட்டு ஆளுங்களைத்தான் ஊரு பழி சொல்லும். இன்னாரு மக இப்டிப் பண்ணிட்டா, இப்டி ஆகிருச்சு, இந்த மாதிரி அப்டினு டீசண்டாவோ, கேவலமாவோ ஏதோ சாடைமாடையா பேசுவாங்க.”
“…”
“அப்டி வெளியே, அந்த விசயம் தெரிஞ்சிறதுக்குள்ள, உன்னை வீட்டைவிட்டு பேக்கப் பண்ணி அனுப்பிறனும்னு உங்க அம்மா ரொம்ப அவசரமா பிளான் பண்ணாங்க!”
‘நல்லாவே டீட்டைலு சொல்றீங்களே. இவ்ளோ விசயம் தெரிஞ்சும் எப்டி கல்யாணம் பண்ணீங்க. முதல்ல அதச் சொல்லுங்கோ’ என்பதாகப் பார்த்திருந்தாள் திவ்யா.
மனைவியின் பார்வையில் இருந்த பொருள் விளங்க, “இவ்ளோ தெரிஞ்சிருந்தும், அப்புறம் ஏன்டா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டனுதான கேக்க வர்ற! இரு சொல்றேன்” என்றவன், “களங்கமில்லாதவன் கடவுள் மட்டுந்தான். களங்கமில்லா மனுசங்கனு யாரும் உலகத்துல இருக்க மாட்டாங்க. திருந்தினவங்க வேணா இருப்பாங்க. ஆனா அப்டித் தப்பு பண்ணவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுத்து, சரி செய்யலாம். எனக்கு அப்டி ஒரு வாய்ப்பை கடவுள் குடுத்தாரு. அப்படித்தான் நினைச்சு, அதை பெருசுபடுத்தாம உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
‘தத்துவம் சொல்ற அளவுக்கு இவரைப் பெரிய ஆளாக்கிட்டேனோ’ ஒரு கனம் அவளால் அப்டி எண்ணாமல் இருக்க முடியவில்லை.
“தத்துவம்லாம் கிடையாது. இது கிராமத்துல காலங்காலமாச் சொல்லி வர்ற விசயம்தான். நான் பிறந்து வளந்தது எல்லாமே கிராமம்னு உனக்கேத் தெரியும். இங்க ஒரு விசயம் சொல்லுவாங்க. அது என்னனா.. ஒரு பொண்ணு ஏதோ சமய சந்தர்ப்பத்தால, அவ தப்பா நடந்திருந்தாலும். அதை வெளியே எஸ்டேபிளிஷ் பண்ணி அவளை மேலும் அசிங்கப்படுத்திப் பாக்க நினைக்கக் கூடாது”
‘துரை இங்கீலீசெல்லாம் பேசுது’ திவ்யா
“ஏன்னா, அந்தப் பொண்ணு பண்ண தப்பு எல்லாத்துக்கும் தெரிஞ்சிட்டா, அவ எதிர்காலம் மட்டுமல்லாம, அவளைச் சார்ந்த குடும்பத்தையும், அந்த வம்சா வழியில பிறக்கற பொண்ணுங்களையும் அதே மாதிரி எதிர்பாக்கறது இந்த சமூகத்தோட சாபக்கேடு. அதனால அந்தப் பொண்ணு மட்டுமல்லாம, அந்த வம்சா வழியில வர்றவங்க எல்லா பொண்ணுங்களுமே ரொம்ப பாதிக்கப்படற மாதிரி ஆகிரும்”
“…”
“ஆனா, அப்படிப்பட்ட பொண்ணுங்களுக்கு, நெருக்கடி இல்லாத வாழ்க்கை தந்து நல்ல வச்சிட்டா, நம்ம வாழ்க்கையில வரக்கூடிய பெருங்கஷ்டம்கூட, அதாவது சஞ்சீத கர்மாகூட குறையலாம். செவ்வாய் தோஷம் இருக்கற மாதிரியான பிள்ளைகள் அந்த வம்சாவழியில பிறக்கவே மாட்டாங்கனு சொல்லுவாங்க. அதாவது அது ஒரு புண்ணிய காரியம். அப்டி ஒரு விசயம் செய்திட்டா, நல்ல பலாபலன்களை மட்டுமே தரக்கூடிய வகையில ஜாதகம் அமைஞ்ச வம்சம் அமையும் அப்டினு சொல்லுவாங்க. இதுவும் ஒரு காரணம். எல்லாம் சுயநலந்தான்!”
“….”
“இன்னொன்னு, நீ பண்ணது அவ்ளோ பெரிய தப்பான காரியம் இல்லைனாலும், எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருந்தது திவ்யா” என்றவன்,
“அருவெறுப்போ, சந்தேகமோ உண்டாகாம, முழு மனசோட உன்னை ஏத்துக்கற மனசு இருந்தது. அதனால உன்னை ஏத்துக்கிட்டு வாழவைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
“எப்போ இருந்து என்னை உங்களுக்குப் புடிக்கும்”
“ஆரம்பத்திலே உங்க வீட்டுக்கு வரும்போதே, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போ ஏன்னு தெரியலை. அத்தோட உங்கம்மாவும் எனக்கு உன்னைக் கல்யாணம் செய்துதரேன்னு சொல்லியிருந்தாங்களா! அத்தோட இன்னும் புடிச்சுப்போச்சு. அத்தோட இவதான் என்னோட வருங்கால மனைவின்னு செட்டாயிட்டேன். அதான் அப்பவே உனக்கு வளையல் எல்லாம் வாங்கி வச்சிருந்தேன்”
திவ்யா ‘அப்பவேவா’
“அத்தோட இந்த விசயத்தை நீ சொல்லிக் கேட்டதும், அத்தாச்சிக்கிட்ட பேசுனேன். அத்தாச்சி முதல்ல உன்னோட விசயம் எனக்குத் தெரிஞ்சிட்டதால, தரமாட்டேனுதான் சொன்னாங்க. நாந்தான்.. எனக்கே பண்ணிக் குடுத்துருங்கனு ரொம்பப் பிடிவாதமாக் கேட்டேன்”
“அப்பத்தா என்னைப் பத்தித் தெரிஞ்சும், எப்டி ஒத்துக்கிட்டாங்க?” நீண்ட நாளாய் அவளுக்குள் குடைந்த விசயம் இது.
“நல்ல காரியத்தைக் கெடுத்தடீ. அதுக்கு எதுவும் தெரியாது. நீ பாட்டுக்கு எங்கம்மாகிட்ட எதையாவது போயி உளறி வச்சிராத. நல்லவேளை இதுவரை உளராம இருந்தியே” என அவசரமாய்க் கூறியவன், “எங்கம்மாவுக்குகூட இந்த விசயத்தைச் சொல்லக்கூடாதுன்னு, உங்கம்மாகிட்ட கண்டிப்பாச் சொல்லிட்டுத்தான், நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னேன்” என அன்றைய தனது நிலையையும் எடுத்துரைத்திருந்தான் ஜெகன்.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.
“…ஆனா இப்ப நீ என்னோட பொண்டாட்டி. சமுதாயத்தில என்னோட மரியாதை, மதிப்பு, பேரு எல்லாம் எனக்குன்னு நான் இதுவரை வாழ்ந்த காலத்துல நடந்திட்ட முறை மூலமா சம்பாதிச்சு வச்சிருந்தாலும், நீ நடந்துக்கிற விசயத்தால என்னோட இமேஜை உயத்தவோ, தாழ்த்தவோ முடியும். அப்போ அதுக்கு நாந்தான் உன்னை எப்டி வச்சிருக்கணுமோ அப்டி வச்சிக்கணும்.”
“அப்ப இனி நான் யாரு கூடவும் முன்னபோல ஃபிரண்ட்லியாலாம் பேசக்கூடாதா?” எனத் தனது சந்தேகத்தைக் கேட்டாள் திவ்யா.
“அப்டியெல்லாம் இல்ல. அவப்பெயர் உண்டாக்கிற மாதிரியான சில உறவுகள் நமக்கு இருக்கும். அவங்க பேச வரும்போது நீயா அவாய்ட் பண்ணிறது நல்லது. எல்லா இடத்திலயும் உங்கூடவே நான் இருக்க முடியாதில்லையா. அதனால நல்லது கெட்டதுன்னு உன்னால இனி தரம்பிரிச்சுப் பாக்கத் தெரியணும். அத்தோட அதுக்கேத்த மாதிரி, வெளி ஆளுங்ககூட பேச, பழக, நீதான் கத்துக்கணும்”
“…”
“எப்பனாலும், எங்கனாலும், உங்கிட்ட யாருனாலும் என்ன வேணாலும் பேசலாம், எப்டி வேணா உங்கூட இருக்கலாம்னு, இல்ல நடக்கலாம்னு நினைச்சு வந்தா, அதப்பாத்திட்டு சும்மா நான் கையைக்கட்டிட்டு, வேடிக்கை பாத்திட்டு இருக்க முடியாது” என்றவன், “நான் என்ன சொல்ல வந்தேன்னு உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்” என தி.மு, தி,பி என இரண்டுக்குமிடையேயான வேறுபாட்டோடு, தான் அவளை ஏற்றுக் கொண்டமைக்கான காரணத்தையும் தெளிவாகக் கூறியதோடு, மனைவி இதனை எதனால் தன்னிடம் கேட்டாள் என்பதை யூகித்து, அதற்கேற்ற பதிலையும் சேர்த்துக் கூறி, தனது எதிர்பார்ப்பையும் மனைவியிடம் பதிவு செய்திருந்தான் ஜெகன்.
ஆகையினால் கணவன் என்பவனது சொரூபம் குரூரமாக இல்லாதபோதும், திருமணத்திற்குப் பிறகான கிருபாவுடனான சந்திப்பை, அதனால் உண்டான தனது மனக்குழப்பம் மற்றும் தாழ்வு மனப்பான்மையுடனான குறுகுறுப்பை, கணவனிடம் இலகுவாகப் பகிர்ந்துகொள்ளும் மனநிலை திவ்யாவிற்கு இல்லை.
………………………………