emv23c

எனை மீட்க வருவாயா! – 23C

 

அருண், சென்னையில் சந்தித்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தமையன் வழியே தாயிடம் செய்தி கூறியிருந்தான்.

ஆரம்பத்தில் மறுத்த காளியிடம், “அப்ப நீ மட்டும் அவுக மயன்னு நினைச்சிட்டு இருக்கச் சொல்லு.  இனி அங்கிட்டே நான் வரலை.  எனக்குப் புடிச்ச அந்தப் புள்ளையத்தான் நான் கல்யாணம் பண்ணப் போறேன்” என ஒரே வார்த்தையில் முடித்திருந்தான்.

அதன்பின் காளி தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கிவர, திருமணத்தை சென்னையில் வைக்கும் முடிவுக்கு வந்திருந்தனர். அனைவரும் குடும்ப சகிதமாய் அங்கு கிளம்பிச் சென்றிருந்தனர்.

சென்னையிலேயே தனது குடும்பத்தை வைத்துக் கொள்ளும் முடிவோடு, அங்கேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தான் அருண்.

திருமணத்தன்றுதான் மணப்பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்பு காளியம்மாளுக்கு வாய்த்தது.

அப்போதுதான் அப்பெண் தனது நாத்தனாரின் மகள் என்பதும் தெரிய வர, தெரிந்தாற்போலவே காட்டிக்கொள்ளவில்லை காளி.

‘போயிம் போயிம் பொண்ணு கிடைக்காம, வேற சாதிக்காரனோட ஓடிப்போனவளோட பொண்ணையா கட்டுறான்’ என கணவனிடம் கத்த

“உங்கிட்டதான் அவன் எதுவுமே கேக்கலையே.  நீ ஏன் தேவையில்லாம எங்கிட்ட வந்து கத்துற” என்றிருந்தார் வீரம்.

வீரத்தைக் கண்டதுமே பிரபாவதி, கண்ணீர் மல்க, “அண்ணே, மாப்பிள்ளை உம் மயானாணே.  நாங்கூட யாரோ என்னவோன்னு பயந்தேன்.  இப்பத்தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு” என முன்பைக்காட்டிலும் அனைத்தையும் சந்தோசமாய் ஈடுபாட்டோடு செய்தார்.

அருணோ, “காளியம்மா, நீ ஊருல இருக்கற இடம் எனக்குத்தான்.  நீ சீக்கிரமா காலி பண்ணிட்டு, உம்மாமியா வீட்டுக்குப் போற வழியப் பாரு” என அந்நேரத்திலும் வம்பு வளர்க்க

காளியோ, அதைக் கேட்டாலும் கேளாததுபோல அமைதியாக இருந்தார்.

காளியின் அமைதியைப் பார்த்த திவ்யாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது.

‘நம்மளத்தான் இந்த அப்பத்தா அந்தப் பாடு படுத்துச்சு. எல்லாம் ராசிபோல’ என எண்ணினாலும், அருணின் மனைவி அருகே காளி சென்றால் உடனே, “என்ன வேணும்?” எனக் கேட்ட கொழுந்தனின் செயலை ரசிக்கவே செய்தாள் திவ்யா.

‘அவங்க அம்மாவைப்பத்தி நல்லா தெரிஞ்சதால, அவங்க வயிஃகு அவங்கனால எதுவும் கஷ்டம் வரக்கூடாதுன்னு கேர் பண்றாங்க’ என அதனை ஆமோதித்தது திவ்யாவின் மனது.

காளி சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து செல்லும் எண்ணத்தில் இருக்க, “கல்யாணம் முடிஞ்சிருச்சு.  ரெண்டு நாளு ஊரு சுத்திப் பாத்திட்டல்ல.  நாளையில இருந்து அவுகவுக வேலையப் பாக்க ஆளுக்கொரு பக்கமாப் போயிருவோம்.  அதேபோல உன்னோட பொழப்பைப் போயி பாக்கற வழியப் பாரும்மா” என பெற்றோரை ஊருக்கு அனுப்பி வைத்திருந்தான் அருண்.

வெளியில் தனது தற்போதைய நிலையை, ஒதுக்கத்தை, எதையும் காட்டிக் கொள்ளாது மைத்துனரின் திருமணத்தில் கலந்து கொண்டு திரும்பியிருந்தாள் திவ்யா.

ஜெகனுக்கோ, இந்த சூழல் சற்று மனைவியை இலகுவாக்கியதாகவே எண்ணினான்.

………………………..

கிருபாவை அடுத்தடுத்து சந்தித்த நிகழ்விற்குப் பின், முன்பைக் காட்டிலும் ஓய்ந்து தெரிந்தாள் திவ்யா.

வாரயிறுதி வரை மனைவியின் செயல்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், அதற்குமேல் பொறுமை இல்லாமல், “திவ்யா, வாயத் திறந்து ஒழுங்காப் பேசு.  இல்லைனா உங்கம்மாகிட்ட கொண்டு போயி விட்ருவேன்” என்றதும், மன அழுத்தத்தை மீறி, கணவனோடு இலகுவாகப் பேச முனைந்தாள் திவ்யா.

அது ஜெகனுக்கு போதவில்லை. “கிளம்பு நீ முதல்ல!” என அடாவடியாக மனைவியிடம் பேச, வரவில்லையெனச் சாதித்தாள்.

அங்கு சென்றால் இதுபோல இருக்க இயலாது.  தாய் கேட்கும் கேள்விக்கு பயந்து ஒழுங்காய் இருக்க வேண்டும்.  மேலும் இங்குபோல ஒட்டாமல் கணவனிடம் தனது தாய் வீட்டில் இருக்க இயலாது.  ஆகையால் கணவனிடம் அங்கு செல்ல மறுத்தாள்.

“போனைப் போட்டு அத்தாச்சிய இங்க வரச் சொல்லப் போறேன்” என மனைவியிடம் கூறினான்.

“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“ஏன் உனக்குத் தெரியலையாக்கும்!”

“…”

“என்னானு வாயத் திறந்து சொல்லவும் மாட்டீங்கற!  கூப்பிட்டாக்கூட கேக்காத அளவுக்கு அப்டியென்ன யோசனை ஓடுது உம்மனசுல!”

“…”

தாயை அழைப்பேன் எனக் கணவன் கூறியதும், சிரமத்தோடு தன்னை மனஅழுத்தத்திலிருந்து மீட்க முனைந்தாள்.

இடையில் ராகேஷ் மற்றும் விக்கி இருவரிடமும் பேசி, காரைக்குடிக்கு அழைப்பு விடுத்தான். விசயம் தெரிந்ததும் இருவருமே பதறி வந்திருந்தனர்.

இருவரும் வந்தபோதும் அவளிடம் பெரிய அளவில் முன்னேற்றம் வரவில்லை. அதேநிலை நீடித்ததே அன்றி, அவர்களிடமும் வாயைத் திறக்கவே மறுத்தாள் திவ்யா.

அவர்களும் ஓரளவிற்கு முயன்று முடியாமல் போகவே, அதற்குமேல் ராகேஷ், “ஒரு வேளை எங்கப்பா மாதிரி பிரச்சனை இதுக்கும் இருக்குமோ” எனக் குழப்ப

ஜெகன், “அது யாரோ செஞ்ச செய்வினைப்பா.  அதுனால உங்கப்பா அப்டியிருக்காரு.  எம்பொண்டாட்டிய நானே பாத்துக்கறேன்.  நீ வேற எதாவது சொல்லி என்னைப் பயமுறுத்தாதே” என்றவன் “இதை உங்கம்மாகிட்ட எதுவும் சொல்லிக்க வேணாம்” என்றுகூறி திருப்பி அனுப்பி வைத்திருந்தான்.

இரவில் உறங்கிக் கொண்டிருந்தவள் ஒரு நாள் திடுமென, “ச்சீய் ஒரே அருவெறுப்பா இருக்கு என்னை நினைச்சாலே” என்கிற திவ்யாவின் குழறலான பேச்சைக் கேட்டவனுக்கு, ஏதோ மனதில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாய் அவ்வாறு பேசுகிறாள் என்றுணர்ந்தவன், இயற்கை மருத்துவ முறையின் அங்கமான மலர் மருத்துவத்தைப் பற்றி அறிந்திருந்தமையால் அடுத்து வந்த நாளில் வற்புறுத்தி, திவ்யாவை அங்கு அழைத்துச் சென்றான்.

வெளிநாட்டில் பணியில் இருக்கும்போது, சிலர் குடும்பத்தை நீண்ட நாள் பிரிந்திருக்கும் ஏக்கம் காரணமாக ஒழுங்கான தூக்கமின்றி துயரம் கொள்ளும்போது, பயன்படுத்திக் கொள்ளவென எடுத்து வந்திருந்த மருந்தைப் பற்றி, அவனது அறையினை பகிர்ந்து கொண்ட நண்பர் வாயிலாக அறிந்திருந்தான்.  அந்த நினைவில், தற்போது அவர்கள் வசிக்கும் பகுதியில் விசாரித்து, மனைவியை அங்கு அழைத்துச் சென்றான்.

தோழமையோடு திவ்யாவிடம் பேச்சுக் கொடுத்த மலர் மருத்துவரிடம், தனது மனதின் வேதனையை ஆரம்பத்தில் கூற தயங்கினாள்.

உடன் இருந்த ஜெகனை வெளியே அனுப்பிவிட்டு, பேச்சுக் கொடுத்தார் மருத்துவர்.

நீண்ட நேர அன்பான, ஆதரவான பேச்சிற்குப்பின், அவர்களின் வினாவிற்கு உள்ளது உள்ளபடியே அவளின் தற்போதைய நிலையை உரைத்திருந்தாள் திவ்யா.

அவரும் அதற்கான மருந்தினைக் கொடுத்து, “இது ஒரு நாளைக்கு மூனு மணி நேரத்துக்கு ஒரு தடவை அஞ்சு ட்ராப் வாட்டர்ல விட்டு யூஸ் பண்ணுங்க” என அனுப்பி வைத்திருந்தார்.

அதனைப் பயன்படுத்தி வந்தவளுக்கு, அவளின் மீதான அருவெறுப்பு மற்றும் பழைய சிந்தனையின் தாக்கத்திலிருந்து சிறிதுசிறிதாக மீளத் துவங்கி, அதன் அழுத்தம் குறையத் துவங்கியது. மேலும் தாழ்வு மனப்பான்மை காரணமாக கணவனைத் தவிர்த்தவளுக்கு, நேர் நிறை உணர்வும் மாற, படிப்படியாய் இயல்புக்கு திரும்பினாள்.

பழைய சிந்தனைகள் அகன்றது.  குற்றவுணர்விலிருந்து முழுவதுமாய் மீண்டிருந்தாள்.

அதுவரை அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல், அவளுக்காக அனைத்தையும் பொறுமையோடு கையாண்டு காத்திருந்தவனை எண்ணி அக மகிழ்ந்தாள் திவ்யா.

பதினைந்து நாள்களில் ஓரளவிற்கு நல்ல மாற்றம் திவ்யாவிடம் தோன்றியது.

கிருபாவைக் காதலித்து, காதல் தோல்வியுற்று வாதனையோடு நின்றபோதும் சரி, அதன்பின் காளி அவளைத் துன்புறுத்தி, தம்பதியர் பிரிந்த நிலையில், கணவன் மீதான அன்பை உணர்ந்து கொண்டு அவனைத் தேடித் தொலைந்த போதும், மீண்டும் கிருபா தனது வாழ்வில் வந்து, அதனால் அவளுக்குள் ஏற்பட்ட குழப்பத்திலிருந்து எவ்வாறு மீளப்போகிறோம் என்கிற பதைபதைப்பில் இருந்தபோதும், தகுந்த நேரத்தில் உரிய செயல்பாடுகளின் வழியே, மீளாத் துயரில் மூழ்கிய தன்னை மீட்க வந்தவனாய் ஜெகனை எண்ணியவளுக்கு, அவன்மீது உண்டான அளவற்ற அன்பு, அவளின் குருதி நாளங்களின் வழியே குருதியோடு கரைபுரண்டோடியது.

செல்கள் அனைத்தும் குருதிவழியே பெற்றுக்கொண்ட அன்பு, நேசம் இவற்றால் குதூகலித்துக் கொண்டாடியது.

பதினைந்து நாள்களில் தெளிவடைந்த நிலையில் இருந்தவளை, அதற்குமேலும் தொந்திரவு செய்யாமல் அவன் உண்டு அவன் வேலையுண்டு என இருந்த ஜெகனை எதிர்நோக்கி அன்போடும், காதலோடும் நீண்ட இடைவெளிக்குப்பின் காத்திருந்தாள் திவ்யா.

வழமைபோல இரவில் வீடு திரும்பியவன், தன்னை சரிசெய்துகொண்டு வந்து, சமையலுக்கு உதவ வர, “நீங்க போங்க.  நானே செய்து எடுத்துட்டு வரேன்” என ஹாலில் சென்றமர்ந்தான்.

தற்போதைய அவளின் மாற்றம் அவனறிந்தாலும், அவளை நெருங்கி தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் விலகியே இருந்தான்.

உண்டு முடித்து, தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்திருந்தவனை அண்டி அமர்ந்தவள், அவனது தோளில் நீண்ட நாளுக்குப்பின் உரிமையோடு சாய்ந்து கொண்டாள்.

நீண்ட நாளுக்குப்பின் தன்னை அணுகிய மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டான்.

அதன்பின் வந்த நாள்கள் படிப்படியாக மீண்டும் வசந்தத்தை மீட்டெடுத்திட, இருவரும் பழையபடி காதல் பறவைகளாக மாறியிருந்தனர்.

இனிமை மீண்டிருக்க, திவ்யாவை முழுமையாய் மீட்டிருந்தான் ஜெகன்.

……………….

எப்போதும் அதிகாலையில் வழமையாய் எழுபவள் அன்று எழவில்லை.  ஆனால் ஜெகன் அதைப் பெரிதுபடுத்தாமல் அவன் செய்யும் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கேப்பி…”

“என்னடீ!”

“எனக்கு எந்திரிக்கவே முடியலை.  தலையை சுத்துது.  இறங்கி நின்னா தள்ளாடறேன்.  குடிகாரன்கணக்கா இருக்கேன். எனக்கு என்னவோ ஆகிருச்சு” தள்ளாட்டம் தெரிய, விழுந்து விடுவோமோ எனப் பயந்து படுக்கையில் படுத்தபடியே பேசினாள்.

“…” படுக்கையறை வாயிலில் வந்து நின்றபடியே மனைவியையே உற்றுக் கவனித்தான் ஜெகன்.

கையை நீட்டி, அருகே வாவென அழைத்தவளிடம் நெருங்கினான்.

அருகே வந்தவன், அவளின் கன்னக் கதுப்பைக் கீழிழுத்து, இரண்டு கண்ணையும் பார்வையிட்டான். கணவனது செயலில் கடுப்பாகிப் போனவள், “பெரிய டாக்டரூ இவரு.  எங்கண்ணைப் பாத்தா அதுல என்ன தெரியுது”

“ரத்தமெல்லாம் இருக்கானு பாத்தேன்”

“சரி.. வேற என்ன தெரிஞ்சுது”

“அதல்லாம் நல்லாயிருக்குது.  இது வேற ஏதோ” என்றவன், “இன்னிக்கு காலேஜ் போகாத.  டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்”

“எனக்கு எதுவோ பெருசா வியாதி வந்திருச்சோ?”

“கிளம்பு.  போயிட்டு வந்தா தெரிஞ்சிரும்” என நகர

“எனக்கு எழவே கஷ்டமா இருக்கு.  அப்டியே என்னைத் தூக்கிட்டு போயி, பிரெஷ் பண்ண விடுங்களேன்”

மறுக்காது தூக்கிச் சென்றான். பிரஸ்ஸில் பேஸ்டை வைத்து அவளிடம் நெருங்க, “தாங்க, நானே விளக்கிப்பேன்” என பிடுங்கினாள். சிரித்தபடியே அவளிடம் கொடுத்துவிட்டு நகர, அவளோ  பல் துலக்கவே சிரமப்பட்டாள். 

“வாந்தி, வாந்தியா வருது! ச்சேய்…” எனும் அவளின் குரல் கேட்டவன்

“வந்தா எடு!”

“யாரோ எம்மேல பொறாமை புடிச்சிப்போயி, எனக்கு சூன்யம் வச்சிட்டாங்கபோல கேப்பி!” என திவ்யா அசதியோடு புலம்ப

“அது யாருன்னு தெரிஞ்சா என்ன செய்வ?” ஜெகனுக்கு ஏதோ உள்ளுணர்வு அது குழந்தை என்று கூற, அதை தெளிவுபடுத்தாமல், மனைவியிடம் எதையும் கூறவேண்டாம் என விசயத்தைக் கூறாமல், பேச்சுக் கொடுத்தான்.

“இருக்கற கடுப்புல, என்ன செய்வேன்னே தெரியலை! இப்ப அதை ஏன் நீங்க கேக்குறீங்க?”

“இல்ல சும்மா கேட்டேன்” என அங்கிருந்து நகர்ந்தவன், காலை ஆகாரத்தை தயார் செய்து வந்து மனைவிக்குத் தர, “எனக்கு எதுவுமே புடிக்கலைங்க!” என உண்ண மறுத்தாள்.

“வேற எதாவது சாப்பிட வேணுமா?”

“ஒரு மண்ணும் வேணாம்!” என மீண்டும் படுக்கையை நாடியவளை, வற்புறுத்தி உண்ணச் செய்தான். உண்டு கொண்டிருந்தவள் எழுந்து சென்று வாந்தியெடுக்க, அவளுக்கு சுடு தண்ணீரைக் கொடுத்து வாயைக் கொப்பளிக்கச் செய்தான்.  “போயி வேற ட்ரெஸ் மாத்திட்டு சீக்கிரமா கிளம்பு திவ்யா!” என்றுவிட்டு, அந்த இடத்தினைத் தூய்மை செய்துவிட்டுத் திரும்ப, திவ்யாவைக் காணவில்லை.

ஆடையை மாற்றிக்கொண்டு படுக்கையில் படுத்து இருந்தவளைக் கண்டவன், “எழுந்து வா திவ்யா!” படுத்தபடியே முடியாது என மறுத்தாள்.

கிளம்பி வந்தவன், உள்ளே சென்று அவளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு வெளியேற, “ஏங்க, எங்க என்னைத் தூக்கிட்டுப் போறீங்க.  இறக்கி விடுங்கங்க!” எனக் கத்தினாள்.

“ஹாஸ்பிடல் கிளம்பச் சொன்னா, கிளம்பிப் போயி திரும்பவும் படுக்கற!” என கீழே இறக்கிவிடாமல் வெளியில் சென்று இறக்கிவிட்டவன், கதவைத் தாழிட்டுவிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அனுமானமாய் ஏதோ உணர்ந்தாலும், மருத்துவமனைக்குச் சென்று அறிந்துகொள்ளலாம் என மனைவியோடு விரைந்தான்.

நல்ல செய்தியோடு நலமாய் இருவரும் வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.

……………………………………………………………………