emvepilogue

emvepilogue

எனை மீட்க வருவாயா! – நிறைவுரை

(Epilogue)

 

குழந்தைதான், தன்னை இதுபோல பயமுறுத்தியது என்பதை அறிந்தவளுக்கு சற்று ஆசுவாசமான மனநிலை. அத்துடன் ஆவலோடு அதன் பின்னடைவுகளை அனுபவித்தவாறே, ரசித்து, சுகமாய் குழந்தையைச் சுமந்தாள் திவ்யா.

ஜெகனோ, முன்பைக்காட்டிலும் அதிகமாய் மனைவியைத் தாங்கினான்.

“லட்டு, உனக்கு என்ன வேணும்,  பாப்பாவுக்கு என்ன வேணும்” எனக் கேட்டு, திவ்யா கேட்டதை மட்டுமல்லாது, அவள் கேளாததையும் உடனே வாங்கித் தந்தான். தனது அன்பையும், நேசத்தையும் செயலின் வழியே காட்டி, மனைவியை திக்குமுக்காடச் செய்தான்.

காளி, அருணுக்கு திருமணமானபின் சற்றே மூத்த மகன் வீட்டிற்கு வந்து செல்வதைப் பழையபடித் துவங்கியிருந்தார். 

அருணுக்குத்தான் அந்த வீடு என்பதை ஜெகனிடமும், காளி சாடைமாடையாகக் கூறினார்.  ஜெகனோ, தாய் சொல்வதைக் கேட்டாலும், கேளாதவனைப்போலவே கடந்தான்.

அப்படி ஜெகன் வீட்டிற்கு காளியம்மாள் வரும் நேரத்தில், திவ்யாவை பொறுப்பாக என்பதைவிட, ஒருபடி மேலே கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்ட மகனை நேரடியாகவே வசைபாடினார். 

“ஏண்டா உனக்கு வெக்கமாயில்லை.  எப்பப் பாத்தாலும், பொண்டாட்டி முந்தியவே புடிச்சிட்டுத் திரியற”

“அப்பா இன்னும் உன்னோட முந்தியத்தானம்மா புடிச்சிட்டுத் திரியறாரு.  அதுக்கு நான் எதாவது இன்னைக்குவரை சொல்லியிருக்கேனாம்மா” எனப் பட்டெனக்கேட்டு, தாயின் வாயை அடைத்திருந்தான் ஜெகன்.

அத்தோடு விடாமல், “எம்பொண்டாட்டி மசக்கையினால ரொம்பக் கஷ்டப்படறா.  நீ வேணா இங்கேயே இருந்து, வாயிக்கு ருசியா அவளுக்கு எதாவது செஞ்சு குடு, நான் ஆம்பிளையா லட்சணமா வேலைக்குப் போனமா, வந்தமான்னு இருக்கேன்” என்று கூறிய அன்றே ஊருக்கு கிளம்பியிருந்தார் காளி.

அதன்பின் ஈஸ்வரியிடம் திவ்யா தாய்மையடைந்த விசயத்தைப் பற்றிக் கூற, அவரோ தன் தாயை அழைத்து வந்து மகளுக்கு உறுதுணையாக விட்டுச் சென்றிருந்தார்.

திவ்யாவின் தாய்வழிப்பாட்டி, அவளுக்கு பிடித்த உணவை பக்குவமாய் செய்துதர, முன்பைக்காட்டிலும் பிரச்சனையில்லாமல் இயன்றவரை உணவை உண்டாள்.

தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிட்ட காரணத்தால், “உன் மாமியா வீட்டு ஆளுங்க நல்லா பாத்துக்கிட்டா, அங்கேயே ஏழு மாசம் இரு திவ்யா.  இல்லைனா, பேசாம நம்ம வீட்டுக்கு வந்திரு” என ஈஸ்வரி கூற

ஜெகனோ, மனைவியை ஏழு மாதத்தில் அவளின் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டால், தானும் அவளோடு அங்கு அதிக நாள் சென்று தங்கியிருக்க நேரிடும் என எண்ணினான்.  அது அவ்வளவு சரியாக இருக்காது என எண்ணி, “அத்தாச்சி, ஏழு மாசத்துல வேணாம், ஒன்பது மாசம் வரை இங்கேயே இருக்கட்டும்.  நான் அவளை நல்லாப் பாத்துக்குவேன்.  நீங்க பயப்படாமப் போங்க” என்றிருந்தான்.

ஆகையினால் ஒன்பது மாதம் வரை காரைக்குடியில் இருந்துவிட்டு, அதன்பின் மொத்தமாக இராமநாதபுரத்திற்கு ஜாகையை மாற்றியிருந்தனர் தம்பதியர்.

ஆண் குழந்தை பிறந்ததும், அதுவரை சாதுபோல தெருக்களில் சுற்றித் திரிந்த, ஈஸ்வரியின் கணவரான முரளி, யாரும் அவரிடம் சென்று கூறாமலேயே, பேரனை வந்து பார்த்தார்.

ஆனால் பேச்சுகள் முற்றிலும் இல்லை.  அமைதியாகவே வந்திருந்து, பேரனைப் பார்த்துவிட்டு, அதன்பின் வீட்டில் வந்து தங்குவதை வாடிக்கையாக்கியிருந்தார்.

அதுவரை நாடோடியாகத் திரிந்தவர், அவராகவே வீட்டிற்கு வந்ததை எண்ணி குடும்பமே ஆச்சர்யப்பட்டது.

ஈஸ்வரியைப் பொறுத்தவரையில் அவரின்மீது எந்தத் துவேசமும் இல்லாமல், கணவருக்கு வேண்டியதைச் செய்தார்.

மனைவியிடம்கூட சைகையில் ஏதேனும் கேட்டாரே அன்றி, பேசவில்லை.

முரளியின் போக்கினால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியிருந்தாலும், தற்போதைய அவரின் நிலை கண்டு தணிந்து போனார் ஈஸ்வரி.

குழந்தைப்பேற்றிற்குப்பின், திவ்யா, ஜெகன் இருவருமே, ஈஸ்வரியின் வீட்டருகே வீடு பார்த்து குடிபோயிருந்தார்கள்.

தனக்கு பாரமாய் எதுவும் ஆகிவிடும் என அதுநாள்வரை அமைதிகாத்த காளி, அதன்பின் “ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுசனக் கடிச்ச கதைதான் இங்க” என சாடைமாடையாய் ஜெகன் கிராமத்திற்குச் செல்லும்போது, திவ்யா தாயின் வீட்டருகே வீடு பார்த்துக் குடியேறியதைப் பற்றிப் பேசத் துவங்கினார்.

ஜெகனும் தாய் பேசியதை அப்படியே விட்டுவிடாமல், மனைவியிடம் வந்து ஒன்றுவிடாமல் கூற, திவ்யா அதை தாயிடம் கூற, பின் ஈஸ்வரி பொறுக்க இயலாமல், காளிக்கு அழைத்திருந்தார்.

“பேரன் பிறந்ததை, நாப்பது அடி தள்ளி நின்னு, நாலாவது மனுச கணக்கா பாத்திட்டுப் போனதுதான்.  அப்புறம் காச்சி ஊத்திக் கூப்பிடக்கூட வக்கத்துப் போயி இருந்திட்டு, இப்ப உங்க பேரனை நாங்க என்னமோ புடிச்சு வச்சிட்டமாதிரிப் பேசுனா, என்ன அத்தை அர்த்தம்” என காளியிடமே நேரிடையாகக் கேட்க

“ஆத்தா ஈஸ்வரி, உம் பேச்சோ, உம் மக பேச்சோ நாம் பேசியே வருசமாச்சுடீ.  யாரு வந்து இப்டியெல்லாம் உங்கிட்ட ஒன்னுக்கும் இல்லாததை, பொல்லாததையெல்லாம் சொல்லி, நல்லா இருக்கற நம்ம உறவை நாசம் பண்ணத் தெரியறது” எனக்கேட்டு, அந்தப் பேச்சிற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோலப் பேசியிருந்தார் காளி.

ஈஸ்வரியும் மறைக்கும் எண்ணமில்லாமல், “வேற யாரோலாம் வந்து இங்க சொல்லலை அத்தை.  எல்லாம் உங்க மயன் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்” என படாரென உண்மையைப் போட்டு உடைத்தவர், “சொன்னதை நாந்தான்னு சொல்ற தைரியம் இல்லாம, எதுக்கு எம்பேச்சை எடுக்கறீங்க.  இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை.  தாராளமா இங்கவந்து காச்சி ஊத்திக் கூட்டிட்டுப்போயி, உங்களுக்கு எங்க தோணுதோ அங்க உங்க மயன் குடும்பத்தைக் குடி வையுங்க.  அப்டியே பேரனையும் பக்கத்தில இருந்தே பாத்துக்கலாம். நாங்களும் வேலைவெட்டினு அலையறவங்க.  எங்களால முடியும்போது வந்து எட்டிப் பாத்துக்குறோம்” என

“எனக்கே முடியாம இருக்கேன்.  நான் எப்டி பேரனைப் பாக்கறது.  நீந்தான் இளவயசு.  அதனால நீயே பாத்து வளத்துவிடு” என ஈஸ்வரியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டதோடு, கணவரிடம் புலம்பித் தள்ளியிருந்தார்.

அத்தோடு விடாமல் மகனுக்கு அழைத்து, வசைபாட, தாய் திட்டியதைத் தாங்க முடியாமல் மனைவியிடம் ஜெகன் பேச, மீண்டும் ஈஸ்வரியிடம் வந்தது அடுத்த பஞ்சாயத்து.

இப்படி மூவருக்கும் இடையே ஜெகன் மாட்டிக் கொண்டு விழித்தான்.

இதுபோல விசயங்களைப் பகிரும்போது, உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றிய புரிதலின்றி ஆரம்பத்தில் பகிர்ந்திருந்தவன், பிரச்சனைக்குப்பின் தாய் பேசுவதைக் கேட்டு, மனைவியிடம் சொல்வதோ, மனைவி அல்லது மாமியார் பேசுவதைக் கேட்டு, தாயிடம் சொல்வதையோ அறவே நிறுத்தியிருந்தான் ஜெகன்.

ஜெகனைப் பொறுத்தவரை, முன்கூட்டியே யூகித்து சரியாகச் செய்யக்கூடிய வகையினனாக இல்லாமல், பட்டுத் தெரிந்து, பிறகு படிப்படியாக மாற்றிக் கொள்ளக் கூடியவனாகவே இருந்தான்.

வாழ்க்கைப் பாடத்தை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் கற்றுத் தெளிந்தவாறே ஜெகனது வாழ்வு இருந்தது.

அதேசமயம், அருண் மிகவும் தெளிவாய் ஒவ்வொன்றையும் யோசித்து, வருமுன் அதற்கேற்ற வகையில் முடிவுகளை முன்கூட்டியே யோசித்து எடுத்து, சீரான முறையில் வாழ்வை மேற்கொண்டான்.

தற்போது இருக்கும் வீடு அவன் மனைவிவழிச் சொத்து என்பதால், அதனை மனைவி பெயருக்கு மாமியாரிடம் எழுதி வாங்கிக் கொண்டவன், அவ்வப்போது தாயிடம் நினைவுறுத்தியபடியே இருந்தான்.

“ம்மா.. இது எம்பொண்டாட்டி வழிச் சொத்து.  இதுல நீ வீடு கட்டியிருந்தாலும், இடத்துக்கு வாடகையா மாசம், மாசம் ஒரு தொகையா, இத்தனை வருசத்துக்கு மொத்தமாக் குடுத்துரு” என தாயிடம் கூறி, காளியின் பீ ப்பீயை ஏற்றி, அவரைப் புலம்பச் செய்தான்.

அத்தோடு, “நீ காசா குடுக்கலைன்னாலும், உங்கழுத்துல போட்டிருக்கறதை அதுக்குப் பதிலாக் குடுத்தாலும், கழிச்சிக்கலாம்” என சிரிக்காமல் பேசி, காளியை சிதறடித்தான்.

விளையாட்டாய் பேசுகிறான் என ஆரம்பத்தில் இருந்தவர்களுக்கோ, போகப்போக அது விளையாட்டுப் பேச்சல்ல என்பது புரிய வந்தது.

அதன்பின் வீரம் உரிய வகையில் மகன்களுக்கு வேண்டிய சொத்தினை பிரித்திடும் வகையில் உயிலை எழுதி சரி செய்தார்.

…………………………..

வருடங்கள் ஓட, ராகேஷிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்குப்பின், சில மாதங்களிலேயே ஈஸ்வரியும் மருமகளின் பேச்சு, செயல், என குற்றங்களை மகளிடமும், தாயிடமும் வந்து அடுக்கி, ஓய்ந்தார்.

மேலும் மகனைப்பற்றி, “என்னம்மா இப்டி ஒரு விளங்காப் பயலா இருக்கான்.  எதிலயும் ஒரு தெளிவில்லாம, இப்டியா எதுக்கெடுத்தாலும், அவ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருப்பான்.  எவ்வளவு அரும்பாடுபட்டு அவனை இந்த நிலைமைக்கு நான் கொண்டு வந்திருப்பேன்” எனப் புலம்பி, தன்னைத் தேற்றினார்.

திவ்யா, தாய் தன் தமையன் பற்றி தன்னிடம் கூறுவதைக் கேட்டுக் கொண்டாலும், அண்ணனைப் பற்றியோ, அண்ணியைப் பற்றியோ எதுவும் பதில் கூறமாட்டாள்.

ஏறத்தாழ ஜெகனைப்போலவே ராகேஷூம் பெரும்பாலான விசயங்களில் இருந்தான்.

ஈஸ்வரியின் தாயோ, “அவன் மூத்தவந்தான… நீ கல்யாணம் முடிச்சுப்போயி, உம்புருசனை, அந்த வீட்டைப்பத்தி, வாழ்க்கையப்பத்தி, அதோட நெளிவு சுழிவு தெரிஞ்சுக்கும்முன்னே இவன் ஜனிச்சதால, அப்டித்தான் இருப்பான்.  வேகமோ, விவேகமோ அவங்கிட்ட நீ ரொம்பவெல்லாம் எதிர்பாக்கக் கூடாது” என விளக்கம் கூற

“பய கொஞ்சம் விவரமா பிறக்காம, அந்தப் பொட்டைப் புள்ளை மட்டும் நல்லா விவரமா பிறந்திருக்கே” என அங்கலாய்ப்போடு, திவ்யாவைப்பற்றி ஈஸ்வரி தனது தாயிடம் கூற

“அது உங்கல்யாணம் முடிஞ்சி, இரண்டரை வருசம் கழிச்சிப் பிறந்தது.  அதுக்குள்ள அந்த வீட்டு ஆளுங்க பண்ண நெருக்கடியில, இக்கட்டுல, உனக்கு ஓரளவு உலகம் புரிய, தெரிய ஆரம்பிச்சிருக்கும். சின்னப் புள்ளைத்தனமெல்லாம் மாறி, எல்லாத்துலயும் தீவிர மனசோட, என்ன, ஏதுன்னு ஒவ்வொன்னையும் நீயாத் தேடித் தெரிஞ்சிட்டதுக்குப்பின்ன அவ பிறந்திருப்பா. வெள்ளந்தையா இல்லாம நீ விவரமான பின்ன, அவ ஜனிச்சதால அப்டித்தான் இருப்பா.  எப்பவுமே ரெண்டாவதா பிறக்கறது, அதுக்குப்பின்ன பிறக்கறது எல்லாமே, விவரமா மட்டும் இல்ல, பயங்கர விசமாவும் இருக்குங்க”

“அப்ப இந்த ராகேசுப் பயலுக்கு, மூத்த புள்ளையா பிறந்தவளைப் பாத்துக் கட்டியிருந்தா, நம்ம சொன்னதைக் கேட்டுட்டு, எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டே சும்மாயிருந்திருக்கும்லம்மா” என ஈஸ்வரி தனது எண்ணத்தைப் பகிர

“அதுக்குத்தான.. மூத்த புள்ளைக்கு மூத்த புள்ளையப் பண்ணக்கூடாதுன்னு சொல்றது.  ஒன்னு மோழையா இருந்தாலும், இன்னொன்னு காளையா இருந்தாத்தான அதுக வாழ்க்கை ஓரளவு நல்லாயிருக்கும்.  ரெண்டும் மோழைனா, அதுக வாழ்க்கையில எப்டி முன்னுக்கு வருங்க” என மகளிடம் விசயத்தைப் பகிர்ந்தார்.

தாயின் பேச்சில் பெருமூச்சொன்றை விட்டவாறே, இனி நடக்கும் எதற்கும் தான் கண்டுகொள்ளாமல் இருப்பதே உத்தமம் என்றெண்ணியபடியே தாயிடம் விடைபெற்றிருந்தார் ஈஸ்வரி.

……………………………

விக்னேஷ், திவ்யாவின் கல்லூரித் தோழியான கயலை மணந்து கொண்டான்.

பத்திரிக்கை வந்து கொடுக்கும்வரை மறைத்த இருவரின் காதலைக் கண்டு, திவ்யாவிற்கு ஆனந்தக் கண்ணீர் வரவில்லை. 

மாறாய், “பக்கிங்களா, ரெண்டு பேரும் எம் பேரைச் சொல்லியே, எனக்கு ஹெல்ப் பண்றதா ஒன்னு சேந்து திரிஞ்சு, லவ்வாங்கியா மாறுனதையே எனக்குத் தெரியாம ஏமாத்திட்டீங்க” என பழிபோட்டு மனதைத் தேற்றினாள் திவ்யா.

தோழிக்காக இருவரும் இணைந்து பயணித்த பொழுதுகளில், காதல் அரும்பி, இருவரும் திருமணமெனும் பந்தத்தில் இணைந்தனர்.

திவ்யா இருவரையும் கிண்டல் செய்து தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

………………………………..

தன் தோழமைகளின் திருமண விழாவில் மீண்டும் கிருபாவைச் சந்திக்க நேர்ந்தது திவ்யாவிற்கு.

முன்பைப்போல அல்லாமல் மிகவும் நேர்த்தியாக அவனிடமிருந்து எந்த பாதிப்பும் இன்றி தன்னை மீட்டுக் கொண்டாள் திவ்யா.

ஆனால் அவன் விடாமல் அவளைத்தேடி வந்து பேசினான்.  திவ்யாவின் கையில் இருந்த அவளின் மகனைப் பார்த்து சிறுவனிடம் விளையாட்டுக் காட்டி, கைகளை நீட்டி அழைத்தபடியே, “எப்டி இருக்கான் நம்ம பையன்” எனக்கேட்க

அவனை முறைத்தவள், “எதே… ம்ஹ்ம்.. அவன் எம் பையன்” என்றாள்.

“ஓஹ்… சாரி” என்றவனிடம், “யோசிக்காம எதையாவது வந்து தத்து, பித்துனு பொது இடத்துல இனி வாயில வர்றதையெல்லாம் பேசற வேலை வச்சிக்காத கிருபா!” என சட்டெனக் கூறியதோடு, “பெருசாப் பேச வந்துட்டான்! வெக்கமில்லாம.. நல்லவங்கணக்கா!” என அவனுக்குக் கேட்கும்படியாக முணுமுணுத்தபடியே, மற்றவர்கள் இருந்த இடம் நோக்கி மகனோடு நகர்ந்திருந்தாள்.

திவ்யாவின் செயலில் அறை வாங்கிய உணர்வு வந்திருந்தது கிருபாவிற்கு.

அவளை விலக்க முயற்சித்தும், அவனால் இயலவில்லை.  ஏதோ அபஸ்வர உணர்வு அவளைக் கடக்கும் நொடியில், ஒவ்வொருமுறையும் அவனுக்குள் தோன்றி நிலைதடுமாறச் செய்தது.

உண்மையில் அது ஏன் என இன்னும் புரியாமல்தான் திவ்யாவைக் கடக்கிறான்.

உண்மையில் உள்ளம்வரை ஊடுருவிப் போனவளை, தன் ஆழ்மனம் புரியாமல் தானாக தனது எதிர்காலம், குடும்ப நலம், அந்தஸ்து என பலதைக் கருதித் தவிர்த்து விலகியிருந்தாலும், அதை அறிவு ஏற்றுக்கொண்ட அளவிற்கு, அவன் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளவோ, ஒப்புக்கொள்ளவோ மறுத்ததை அவன் உணராமலேயே இன்றுவரை இருந்தான்.

அந்நிகழ்விற்குப்பின் தோழர்களோடு நேரத்தைச் செலவிட்டவன், எப்போது அங்கிருந்து சென்றான் என்பதே யாருக்கும் தெரியவில்லை.

கிருபாவின் செயலைப்பற்றி அனைவரும் முன்பே தங்களுக்குள் விவாதித்திருக்க, இதுபோல பொதுவான இடங்களில் தோழமைகள் கூடும்போது, அவனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

பெயருக்கு ஒரு ஹாய் அவ்வளவோடு ஒதுங்கிக் கொண்டனர்.

பணமும், வசதியும் இருந்த தன்னை அவ்வாறு தனது நெருங்கிய நண்பர்கள ஒதுக்கியதை இலகுவாக எடுத்துக்கொள்ள இயலாத நிலைக்கு வந்திருந்தான் கிருபா.

அதை அனைவரும் ஒன்றுபோலச் செய்வதை அறிந்தவன், அதன்பின் கல்லூரித் தோழமைகளின் விழாக்களில் கலந்து கொள்வதையே தவிர்க்க எண்ணினான்.

………………………………….

ஜெகன், திவ்யாவின் வாழ்க்கையில் அவ்வப்போது சிறுசிறு மனவருத்தங்கள் வந்தாலும், அதை அப்போதே சரி செய்து ஒருவருக்கொருவர் அணுசரணையோடு வாழ்ந்தனர்.

திவ்யா, தாயின் பிடிவாதத்தால் ஜெகனைத் திருமணம் செய்து கொண்டு ஆரம்பத்தில் திண்டாடியிருந்தபோதும், சில அசௌகர்ய நிலைக்குப்பின் அனைத்தும் சரியாகி, தாய் தன் திருமணத்தில் எடுத்த முடிவு, தனக்கு நன்மையே விளைவித்து, நல்வாழ்க்கையைத் தந்திருப்பதாக முற்றிலும் நம்பினாள்.

மகனுக்கு மூன்றரை வயது வரை வீட்டில் இருந்தவள், அதன்பின் பணிக்குச் செல்லத் துவங்கியிருந்தாள்.

சின்னஞ்சிறு குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும், இனிமைக்கும் குறைவில்லாது நிறைவாய் வாழ்ந்தனர்.

நாமும் அவர்களை வாழ்வாங்கு வாழ, வாழ்த்தி விடைபெறுவோம்.

………………………….

முற்றும்.

 

இந்நாவலின் துவக்கம் முதல் நிறைவுவரை எம்முடன் பயணித்த வாசகர்களுக்கு அன்பார்ந்த நன்றிகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கத்தினாலேயே இந்நாவலை இரண்டு மாதங்களில் நிறைவு செய்திருக்கிறேன்.

அடுத்து  “மது பிரியன்” எனும் நாவலோடு விரைவில் உங்களைச் சந்திக்கிறேன் தோழமைகளே!

அதுவரை தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

அன்புடன்………….. சரோஜினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!