En Ayul Neelumadi–EPI 1

269870723_998653174055350_1983985756058693881_n-132347e4

அத்தியாயம் 1

 

அருணகிரி

 

 

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்

“மைத்தீ!!!!!!!” என பெருங்குரலெடுத்துக் கத்தினான் அருணகிரி.

“சொல்லுங்க மை சன்!” என மகனின் அறைக்குள் பாடிக் கொண்டிருக்கும் அலைபேசியோடு நுழைந்தார் மைத்ரேயி.

“இந்தப் பாட்டுல இருந்து எனக்கு விடுதலையே கிடையாதா?” என சோம்பல் முறித்தப்படியே எழுந்தமர்ந்தான் இவன்.

தலைமுடி கலைந்து சிலிப்பிக் கொண்டு நிற்க, கண்கள் சிவந்துப் போய் கிடக்க, தூக்கம் போதாமல் முகம் லேசாய் வீங்கியிருந்தது.

“தூக்கமா வருதுமா” என்றவன், அருகில் வந்திருந்த மைத்ரேயியைக் இடுப்போடு கட்டிக் கொண்டு விட்டத் தூக்கத்தைத் தொடர்ந்தான்.

சின்ன வயதில் அடிக்கடி இப்படித்தான் காலையில் பள்ளிக்கு எழுப்பும் போதெல்லாம் தாயைக் கட்டிக் கொள்வான் அருணகிரி. இப்பொழுதெல்லாம் ஆளைக் காண்பதே அறிதாகி இருக்க, இந்த மாதிரி அணைப்பெல்லாம் ரொம்பவே குறைந்திருந்தது.

மகனின் தலைக் கோதி,

“காலையிலேயே என்னமோ வேலை இருக்குன்னு சொன்னியேடா! அதான் உன் ஃபேவரேட் பாட்டப் போட்டு எழுப்புனேன்” என சிரிப்போடு சொன்னார்.

“போம்மா! ஸ்கூலுல இருந்து காலேஜ் வரைக்கும் இந்தப் பாட்டப் பாடித்தான் என்னைக் கிண்டலடிச்சானுங்க! கொஞ்ச நாள் இந்தப் பாட்டு சத்தமே இல்லாம இருந்தேன், மறுபடி ஞாபகப்படுத்துறீங்க!” என சலித்துக் கொண்டவன், அணைப்பில் இருந்து விலகி எழுந்து நின்றான்.

அருணகிரிநாதர் என்பது அவனது தாத்தாவின் பெயர். நாதரை எடுத்து விட்டு அருணகிரி என மகனுக்குப் பெயர் சூட்டி இருந்தார் இவன் அப்பா கிரிதரன். அவர்கள் குடும்ப பெயர்களில் ஆண்களுக்கு எல்லாம் கிரி இலவச இணைப்பாய் அமைந்திருக்கும். திருப்புகழ் இயற்றிய அருணகிரிநாதரின் பெயர் கொண்ட இவன் ஒரு நாத்திகன். கடவுள் யாரென்றால் என் அம்மாவென்பான். நமக்கு மீறி ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது தாய்மையென்பான். மொத்தத்தில் இவன் ஒரு அம்மா கோண்டு.

குளியலறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்தே,

“மீ! ப்ரேக்பஸ்ட் சாப்டியா? மருந்துப் போட்டியா?” என கேட்டான்.

“எப்போ பாரு அதே ரெண்டு கேள்விதா கேப்பியா? புதுசா எதாச்சும் கேளேன்டா” என்றவாறே மகனது போர்வையை மடித்து வைத்து கட்டிலைத் தட்டிப் போட்டார் மைத்ரேயி.

“எனக்குக் கேக்கத் தெரியாம இல்ல! ஆனா என் கேள்விக்கான பதிலை உங்களுக்கு சொல்ல முடியுமான்னுதான் சந்தேகமா இருக்கு!” எனப் பல்லைத் துலக்கியபடியே கொள கொளவென பேசினான் அருணகிரி.

“அப்படி என்னடா பதில் சொல்ல முடியாத கேள்விய கேட்டுற போற!”

வாயைக் கொப்புளித்து விட்டு வந்தவன்,

“எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்க மை மைத்தி?” என சீரியசாக கேட்டான்.

“உனக்கெதுக்குடா கல்யாணம்? நீயே காடாறு மாசம் நாடாறு மாசம்னு சுத்துற! உனக்கு வரப் போற பொண்டாட்டி என்ன சீதா தேவியா, பதிபக்தியோட காட்டுக்குப் பொட்டியைக் கட்ட? நீ ஊர் சுத்தற ஆறு மாசமும் உன் பொண்டாட்டிக்கு நான் உட்கார வச்சு சேவகம் செய்யனுமா? நோ வே! அவளுக்கு ஆக்கிப் போடறது அரிச்சுப் போடறது எல்லாம் உன்னோட கடமை! அத என் தலையில கட்டப் பார்க்காதே, சொல்லிட்டேன்”

“அதாவது, வீட்டுக்கு வர மருமகளும் உன்ன மாதிரியே ஒன்னும் தெரியாம வருவான்னு முடிவே பண்ணிட்டீயா மீ? எங்கப்பா அந்த அப்பாவி மனுஷன் மாதிரி நான் குக்கிங், கிளினிங்லாம் எல்லா நாளும் செய்ய மாட்டேன். அவ மூனு நாள் செய்யனும், நான் மூனு நாள் செய்வேன்! ஈக்குவல் ரைட்ஸ்! அவ பெண்ணியம் பேசினா, நான் ஆணியம் பேசுவேன்!”

“கணக்குல மீதி ஒரு நாள் இடிக்குதேடா?”

“மகன் மருமகளுக்காக அந்த ஒரு நாள் நீ செய்ய மாட்டீயா மீ?” என கேட்டு அவர் தாடையைப் பற்றி ஆட்டினான் மைந்தன்.

“காத்திட்டு இருக்கேன்டா அருண். அதுக்காகத்தான் ஆவலா காத்திட்டு இருக்கேன்” என ஏக்கமாக சொன்னார் மைத்ரேயி.

நெற்றி வகிட்டில் குங்குமம் இல்லாமல், சின்னதாய் சிவப்பு வட்டப் பொட்டு வைத்து துலக்கி வைத்த குத்து விளக்குப் போல் இருந்தவரின் கண்கள் மட்டும் துக்கத்தைப் பிரதிபலித்தது. அன்னையைக் கட்டிக் கொண்ட அருண்,

“போன வாரத்தோட என்னோட எல்லா அசைன்மெண்டையும் முடிச்சுக் குடுத்துட்டேன்மா! இனிமே இங்கத்தான், உங்க கூடத்தான் இருப்பேன். ஆர் யூ ஹேப்பி நவ்?” எனக் கேட்டான்.

முகம் மலர்ந்துப் போனது மைத்ரேயிக்கு.

“நெஜமாவாடா? ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்குடா மகனே!” என்றவருக்கு அப்படி ஓர் ஆனந்தம்.

கிரிதரனின் மறைவுக்குப் பின் ஒரு வருடமாக வேலைக்காரர்களின் துணையுடன் இருந்தவருக்கு, ஆசை மகன் தன்னுடனே வந்து விட்டது அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

“இப்போ நீ கேட்ட கேள்விக்கு பதில் தரேன்டா அருண். இந்த வருஷத்துல டும்டும்டும், அடுத்த வருஷத்தில குவாகுவாகுவா!”

“டும்டும் மட்டும் நீங்க ஏற்பாடு பண்ணுங்க மீ! குவாகுவா எப்ப வேணும்னு என் வருங்காலம் முடிவு செய்யறாளோ அப்போத்தான் ரிலீசாகும்”

“இப்பவே பொண்டாட்டிக்கு கொடி புடிக்கறீங்களே மை சன்!”

“அம்மா முந்தானையப் புடிச்சிட்டு சுத்தற மகன், கல்யாணமானதும் அப்படியே பல்டி அடிச்சு பொண்டாட்டியோட டீஷர்ட் முனையைப் புடிச்சுப்பான்னு அந்தக் காலத்துலயே தாய்க்குப் பின் தாரம்னு சொல்லிருக்காங்க மீ!” என கண்ணடித்து சொன்னவன் மீண்டும் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

மகன் கிளம்பி வரட்டும் என மாடியில் இருந்து கீழே சமையலறைக்கு இறங்கி வந்தார் மைத்ரேயி. சமையல்கார அம்மாவிடம் சூடாக அருணுக்கு முட்டை தோசை வார்க்க சொன்னவர், தன் கையாலேயே அவனுக்குப் பிடித்த விதமாய் காபி கலந்து ப்ளாஸ்கில் ஊற்றி வைத்தார். மகன் வருகிறேன் என சொன்னதால் அன்று விடுமுறை எடுத்திருந்தார். இல்லையென்றால் அவரது காலை வேளையும் பரபரப்பாகத்தான் இருக்கும். தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியவர் தற்பொழுது மாணவர்களுக்கு ‘ஜாப் கவுண்சலிங்’ கொடுப்பவராக இருக்கிறார்.

மகன் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் பணி நிமித்தமாய் தங்கி இருந்த போது, இவரும் கணவரும் மட்டும்தான் நாளொரு சண்டை நித்தம் ஒரு சமாதானமென காதலாய் வாழ்ந்து வந்தார்கள். ஒரு சாலை விபத்தில் கிரிதரன் உலகை விட்டுப் போனதில் இருந்து ஏதோ ஒரு வெறுமை மைத்ரேயிக்கு. மகனும் எடுத்த வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வெளிநாட்டில் தங்கி இருக்க, இவருக்கு தனிமையே மன அழுத்தத்தைக் கொடுத்து ஸ்ட்ரோக் வரை கொண்டு வந்து விட்டு விட்டது. கடவுள் புண்ணியத்தில் மைல்ட் ஸ்ட்ரோக்காக போய் விட, வாய் மட்டும் லேசாக கோணிக் கொண்டது. பேச்சும் குளறலாகவே வந்தது. தெரப்பி, சரியான உணவு, உயர்ந்த மருத்துவம் என போராடி தன் தாயை மீட்டிருந்தான் அருணகிரி. இப்பொழுது ஓரளவு நன்றாக பேச வந்தது.

வரவேற்பறைக்கு வந்தமர்ந்தவர், புன்னகையுடன் கண்களை சுழல விட்டார். சுவற்றில் அழகாக கலைநயத்துடன் அருணகிரி எடுத்திருந்த புகைப்படங்களை மாட்டி வைத்திருந்தார் கிரிதரன். மகன் எடுக்கும் புகைப்படங்களுக்கு அவர்தான் முதல் ரசிகன். பரம்பரைப் பணக்காரர்களாக இருந்தாலும், கிரிதரனுமே வீட்டில் சோம்பி இருக்காமல் சென்னையில் பல இடங்களில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். நான்கு வயதில் விளையாட்டாக இவரது காமிராவை எடுத்து படம் பிடிக்கிறேன் என போட்டு உடைத்த மகனை திட்டித் தீர்க்காமல், அப்பொழுதே அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புகைப்படமெடுக்கும் கலையை ஊட்டி வளர்த்தவர் கிரிதரன். மகனின் ஆர்வத்தைப் பார்த்து அந்த துறையிலேயே பயில வைத்தார் அவர். புகழ்பெற்ற வெளிநாட்டு மாத இதழ் ஒன்று மகனை வேலைக்கு அழைக்க, மனைவி அழுது கரைந்தாலும் சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார் கிரிதரன்.

“எனக்கு அடுத்த பெஸ்ட் போட்டோகிராபர்னா அது என் மகன்தான்டி” என பெருமையாய் சொல்லிக் கொள்வார் மனைவியிடம்.

“நெனைப்புத்தான் பொழப்ப கெடுக்குமாம்! என் மகன்தான் பெஸ்ட்டு! நீங்க வொர்ஸ்ட்டு! கல்யாணம் ஆனப் புதுசுல என்னைப் போட்டோ புடிங்கன்னு கேட்டதுக்கு, என் மூக்க மட்டும் போட்டோ புடிச்ச ஆளுலாம் போட்டோகிராபி பத்திப் பேசக் கூடது மேன்” என இவர் கடுப்படிப்பார்.

“உன் முகத்துல எது அழகா இருக்கோ அததானே கேப்ச்சர் பண்ண முடியும்!” என அவர் வம்பிழுக்க, ரகளையாய் போகும் அவர்களின் பொழுது.

மெல்லிய பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்ட மைத்ரேயியின் தோளைத் தொட்டான் அருண். அதன் பிறகு அவர் பொழுதுகளை மகன் ஆக்ரமித்துக் கொண்டான். வெளியே போகும் போது கூட இவரையும் அழைத்துக் கொண்டுதான் போனான்.

“வேலையை விட்டுட்டீங்க! இனிமே பூவாக்கு என்ன செய்யறதா உத்தேசம்?” என காரில் மகன் அருகே அமர்திருந்த மைத்ரேயி கிண்டலாகக் கேட்டார்.

“எம்பாட்டன் சொத்து இருக்கு! எங்கம்மா சம்பாதிக்கிறாங்க! எங்கப்பா எனக்கு விட்டுட்டுப் போன கடைங்க இருக்கு! பிறகு என்ன கவலை எனக்கு? ஜாலியா காலை ஆட்டிக்கிட்டே உக்காந்து சாப்பிடுவேன் மீ”

“உத்யோகம் புருஷ லட்சணம்டா மவனே!”

“இதை நான் வன்மையா கண்டிக்கறேன்! இனிமே உத்யோகம் பொண்டாட்டி லட்சணம்னு மாத்தி வைங்க! அது என்ன எப்போ பாரு எங்க இனத்தையே சம்பாதிச்சுப் போட சொல்றீங்க! எப்போ ஒரு ஆண் ஹவுஸ் ஹஸ்பண்டா இருக்கறத இந்த நாடு ஏத்துக்குதோ, அப்போத்தான் இந்தியா வல்லரசு ஆகும்”

மகனின் கூற்றில் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது மைத்ரேயிக்கு. மனம் விட்டு சிரிக்கும் தன் அன்னையை காரோட்டியபடியே திரும்பிப் பார்த்தான் அருண். அவருக்காகத்தானே ஆசையாய் அவன் செய்யும் தொழிலைக் கூட விட்டுவிட்டு ஓடோடி வந்திருக்கிறான். தந்தையை இழந்து தனிமையில் தவித்துக் கொண்டிருப்பவரை இனி உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொள்வது எனும் முடிவோடுதான் தாய் நாட்டுக்கே வந்திருந்தான்.

சிரித்து முடித்தவர்,

“பீ சீரியஸ்டா அருண்! சொல்லு என்ன ப்ளான் வச்சிருக்க?” என கேட்டார்.

“பூ, செடி, கொடி, புலி, எலி, புயல், மழைன்னு படம் புடிச்சு அலுத்துப் போச்சுமா! இனிமே மனுஷப் பயப்புள்ளைங்கள படம் புடிக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்”

“அப்பா மாதிரி ஸ்டூடியோல நிக்கப் போறியா?”

“இனிமே போட்டோ ஸ்டூடியோலாம் வேலைக்காகாது மீ! போட்டோகிராபி ப்ரோபெஷன் வேற லெவலுக்குப் போயிருச்சு. நான் இதுல டச்லயே இருக்கவும் என்ன நடக்குதுன்னு அனலிசிஸ் செஞ்சு வச்சிருக்கேன்! நம்ம கடையை ஒன்ன மட்டும் என் வேலைக்கு வச்சிக்கிட்டு மத்தத எல்லாம் வேற வியாபாரத்துக்கு வாடகைக்கு விட்டுடலாம்னு ஐடியால இருக்கேன்! எனக்கு பிஸ்னஸ் செட் அப் செய்யவும், அப்புறம் அட்மின் ஜாப் செய்யவும் உதவியா நீங்க வரீங்களா மீ?”

மகன் தன்னை அவனது கண்காணிப்பிலே வைத்திருக்க விரும்புகிறான் என புரிந்துக் கொண்ட மைத்ரேயி,

“நான் வேலையை விடனும்னா உன்னோட ஆஃபார் பெட்டரா இருக்கனும் மை சன்!” என்றார்.

“20% உங்களுக்கு 80% எனக்கு!”

“முடியாது, முடியாது!”

“சரி உங்களுக்கும் வேணா, எனக்கும் வேணா! 30% உங்களுக்கு 70% எனக்கு”

“நோ வே! பிப்டி பிப்டி! டீல்ஆர் நோ டீல்?”

“இதெல்லாம் ரொம்பவே அநியாயம் மீ! ஐ ஹேட் யூ”

“ஹேட்டு பூட்டு

சொரக்காஆஆஆ கூட்டு!

போங்க மை சன்! டீலுக்கு ஒத்து வந்தா நாளைக்கே கவுண்சலிங்  வேலைக்கு கடுதாசி குடுக்கறேன்! இல்லைனா நான் உண்டு என் பேச்சைக் கேக்கும் என் ஸ்டூடண்ட்ஸ் உண்டுன்னு நிம்மதியா இருப்பேன்!”

“சரிம்மா சரி! டீல் இஸ் அக்செப்டேட்!” என்றவன் அவர்கள் கடையின் முன்னே காரை பார்க் செய்தான்.

வேகமாய் சுற்றி வந்து மைத்ரேயியின் பக்கக் கதவைத் திறந்தவன்,

“வெல்கம் டூ அவர் ஏ.ஜி போட்டோகிராபி ஸ்டூடியோ மாம்” என சிரம் தாழ்த்தி வரவேற்றான்.

அவன் பிடித்தப் படங்களில் எல்லாம் ஏ.ஜி எனும் அவன் பெயர் சுருக்கத்தை வாட்டர்மார்க் செய்திருப்பான். அந்தப் பெயரில் சோடியல் மீடியாவில் இவன் பிரபலமாகி இருக்க, அதையே புதிதாக திறந்திருந்த அவனது பிஸ்னசுக்கும் சூட்டி இருந்தான். அந்த இரண்டு மாடி கடையின் வாசற் கதவில் ரிப்பன் கட்டி இருக்க, அவனோடு பணி புரிய போகும் சிலர் வெளியே இவர்கள் வருகைக்காக நின்றிருந்தார்கள்.

“கம் மீ! நீங்கதான் நம்ம ஸ்டூடியோவுக்கு திறப்பு விழா செய்யப் போறீங்க! வாங்க, வாங்க”

சிரித்த முகத்துடன் ரிப்பனை இவர் வெட்ட, தனது ஃபேவரேட் நிக்கோன் கேமராவில் ஒவ்வொரு நொடியையும் கிளிக் செய்தான் மைந்தன்.

அம்மாவை உள்ளே அழைத்துப் போய் மறு சீரமைப்பு செய்யப்படு வரும் கடையை சுற்றிக் காட்டினான் அருண்.

“மாடியில இண்டோர் ஷூட் வச்சிக்க ப்ளான் மீ! நாமளே வெட்டிங் கவுன்ஸ், மேக்கப், எல்லாம் ஆஃபர் பண்ண போறோம். இப்போ இதெல்லாம் ஓன் பேக்கேஜா குடுக்கறதுதான் ட்ரேண்ட். அவுட்டோர் ஷூட்கு வேற பேக்கேஜ்னு எல்லாம் ரெடியாகிட்டு இருக்குமா! உங்க ட்ரீட்மேண்டுக்கு வரப்பவே இதெல்லாம் டிசைட் பண்ணி வேலையை ஆரம்பிக்க சொல்லிட்டேன். இனிமே இண்டீரியர்லாம் முடிச்சு ஓன் மந்த்ல வீ ஆர் குட் டூ கோ!” என்ற மகனை வாஞ்சையாகப் பார்த்தார் மைத்ரேயி.

தனக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்தில் அவனது அலைச்சலை நன்றாகவே உணர்ந்திருந்தார். நிற்க நேரமில்லாமல் ஸ்பீச் தெரபி, பிசியோதெரபி என அவரோடு அலைந்துக் கொண்டே திரும்பி சொந்த ஊருக்கு வந்து விடுவதற்கான வேலையையும் பார்த்திருக்கிறான் மகன் என நெகிழ்ந்துப் போனார்.

அவரை அமர வைத்து விட்டு, தன்னோடு பணி புரிய போகிறவர்களை அறிமுகப்படுத்தினான் அருண்.

“இந்தாங்க ஜூஸ் குடிங்கம்மா! நான் பின்னால வேலை எப்படி போகுதுன்னு பார்த்துட்டு வரேன்”

கடையை சுற்றிப் பார்வையை ஓட்டினார் மைத்ரேயி. முன்பு கணவர் வைத்திருந்த பொழுது, காமேராக்கள் விற்கும் இடமாகவும், போட்டோ ஸ்டூடியோவாகவும், போட்டோ ப்ரிண்ட் செய்துக் கொடுக்கும் இடமாகவும் இருந்தது அந்தக் கடை. இப்பொழுது முற்றிலும் மாற்றி அமைத்திருந்தான் மகன். கீழ் போர்சனில் வருபவர்களை அமர்த்தி பேசும் வரவேற்பறை போல அமைத்திருந்தான். இன்னும் தளவாடப் பொருட்கள் வந்து இறங்கியிருக்கவில்லை. வால் பேப்பர் எல்லாம் கண்ணைக் கவரும் வண்ணங்களில் இருந்தது. மெல்ல எழுந்து பின்னால் போய் பார்த்தார் மைத்ரேயி. அங்கேதான் போட்டோ எடுத்தப் பின் செய்யப்படும் டெக்னிகல் வொர்க் நடக்கும் அறை அமைக்கப்பட்டிருந்தது. ஆபிஸ் அறை போல மேசை நாற்காலி என இருந்தது அது. பேண்ட்ரீ அமைக்க சின்ன இடத்தையும் ஒதுக்கி இருந்தான் அருண். வாடிக்கையாளர்களுக்கு காபி, டீ, குளிர்பானம் வழங்க இந்த ஏற்பாடு.

‘உங்க மகன் நீங்க செஞ்ச வேலையையே அடுத்த லெவலுக்கு எடுத்துட்டுப் போறான்! ரொம்ப பெருமையா இருக்கு தரன்! அந்த வளர்ச்சிய எங்க கூட இருந்து நீங்க பார்க்க முடியலைன்னு நினைக்கறப்போ, மனசு கனத்துப் போகுது!’ என நினைத்தவரின் கண்ணில் கண்ணீர் ஊற்றாய் இறங்கியது.

சட்டென முகத்தைத் துடைத்துக் கொண்டார் மைத்ரேயி. தனது கவலையை உள்ளேப் புதைத்துக் கொண்டு, தன்னை மீட்டெடுக்க மகன் படும் பாட்டை அறிந்தவர் முயன்று தன்னிலை அடைந்தார். அங்கே ஒரு மணி நேரம் செலவிட்டவர்கள், வெளியே சாப்பிட்டுவிட்டு அந்தி நேர காற்றை அனுபவிக்க மெரினா கடற்கரைக்குப் போனார்கள்.

சுண்டல் வாங்கி மென்றபடியே,

“உனக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும் மகனே?” எனக் கேட்டார் மைத்ரேயி.

சற்று நேரம் கடல் அலையைப் பார்த்தபடி யோசித்தவன்,

“வேலை, அலைச்சல், அடிக்கடி பயணம்னு யாரையும் பார்த்துப் பழகி காதலுல விழ வாய்ப்பே அமையல மீ! ஆனாலும் மனசுல இப்படிதான் என் பெட்டர் ஹால்ப் இருக்கனும்னு சில பல கனவு இருக்கு” என்றான்.

“சொல்லு, சொல்லு கேப்போம்”

“உங்கள மாதிரி சுமாரா இருக்கனும்”

“யார்டா சுமார்? நானா, நானா?” என சந்திரமுகியானவரை சிரிப்புடன் பார்த்தான் மகன்.

“சரி, சரி! நீங்க ரொம்ப அழகுதான்! நீங்க அழகா இருக்கவும்தான் உங்க மகன் நான் பேரழகனா இருக்கேன்!”

தன் கணவரைப் போலவே நெடு நெடு வளர்த்தி, ஒல்லி உடல்வாகு, மாநிறமென இருப்பவனை பாசமாகப் பார்த்தார் மைத்ரேயி. தோற்றத்தில் கிரிதரனைப் போல இருந்தாலும், குணத்தில் அப்படியே மைத்ரேயிதான் இவன். சிரித்த முகம், கலகல சுபாவம் என அவன் இருக்கும் இடமே சந்தோஷமாக இருக்கும்.

“நெஜமாலுமே எனக்கு அழகெல்லாம் முக்கியமில்லை மீ! காமேரா கண் கொண்டுப் பார்த்தா நம்ம சுத்தி உள்ள எல்லாமே அழகுதான்! சேத்துல உள்ள தாமரையும் அழகு, ஆத்துல உள்ள அயிரையும்(மீன்) அழகு. சோ அவ சுமாரா இருந்தாலும், என் கண்ணுக்கு சூப்பராத்தான் தெரியும். எனக்கு வாழ்க்கைக் குடுக்கப் போற பொண்ணு என்னை விட கலகலப்பா இருக்கனும், பெரிய வாயாடியா இருக்கனும், எங்க வாழ்க்கையை சுவாரசியமா வச்சுக்கனும்! எந்தக் கட்டத்துலயும் எனக்கு என்னடா வாழ்க்கை இதுன்னு சலிப்பு வந்திடாம என் கூட கைக் கோர்த்து நான் போற ஜங்கள் ட்ரேக்கிங், ஸ்கூபா டைவிங், ஃபஞ்சி ஜம்ப்பிங்னு எல்லாத்துலயும் எனக்கு ஈக்குவலா பங்கெடுக்கனும். அப்படி ஒரு பொண்ணுப் பாருங்க மீ”

“ஒவ்வொருத்தன் குடியும் குடுத்தனுமா இருக்கப் பொண்ணு தேடுனா, நீ குதிக்கவும் குளிக்கவும் பொண்ணு தேடற! கஸ்டம்ரா ரேய்!!!!! எப்பவுமே நாம தேடற மாதிரி இல்லாம ஆப்போசிட்டாதான் கோத்து விடுவாரு ஆண்டவரு! நீ வேணா பாரேன், உனக்கு உம்மணாம்மூஞ்சியா ஒரு பொண்ணு வரப் போகுது! நீ நூறு வார்த்தைப் பேசனா அவ யெஸ், நோன்னு ஒத்த வார்த்தைல பதில் சொல்லப் போறா! குட் லக்டா மவனே!”

“மீ! உனக்கு என் மேல ஏன் இந்த கொல காண்டு! போ மீ, போய் அந்த உப்புத் தண்ணியில வாய கழுவிட்டு வா மீ!”

“முடியாது, முடியவே முடியாது!”

“அப்போ நானே கழுவி விடறேன்” என சொல்லி கடல் நீரை அள்ள சென்றவனை,

“போனையும் வாலட்டையும் குடுத்துட்டுப் போ! தண்ணியில விழுந்துடப் போகுது” என சொல்லி வாங்கிக் கொண்டார் மைத்ரேயி.

அவன் விளையாட்டாய் கீழே குனிந்து இரு கைகளால் நீரை அள்ள, பின்னால் இருந்து அவனை பொத்தென தள்ளி விட்டு விட்டு ஓடிப் போய் சற்று தூரத்தில் நின்றுக் கொண்டு கலகலவென நகைத்தார் மைத்ரேயி. சிரிக்கும் தன் அன்னையைப் புன்னகையுடன் பார்த்திருந்தான் அருணகிரி.

 

(நீளுமா………..)

(வணக்கம் டியர்ஸ்..உங்க எல்லாருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். கதையைப் பற்றிய உங்க கருத்தப் பகிர்ந்துக்குங்க. அடுத்த வாரத்துல இருந்து வாரத்துல ரெண்டு எபி குடுக்க ட்ரை பண்ணறேன். அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல்)