En Ayul Neelumadi–EPI 10

273046404_1018660852054582_3314744799217173998_n-419afe67

அத்தியாயம் 10

(வணக்கம்..என்னடா எபிய முடிச்சிட்டு பேசுவா, இன்னிக்கு ஆரம்பத்துலயே பேச வந்துட்டான்னு நினைக்கறீங்களா? இந்த எபி ரெண்டு பார்ட்டா வர வேண்டியது. ரெண்டாவது பார்ட் ரொம்ப படுத்தி எடுக்குது. ரஷ் பண்ணா சரியா வராது. ஆதோட நீங்களும் எபிக்கு காத்திருக்கீங்க. மனசு கேக்கல. அதனால பார்ட் 1—எபி 10கவும். பார்ட் 2- எபி 11காவும் போடறேன். 11 நாளைக்கு வரும்னு நினைக்கறேன். ரெண்டு எபியும் ஒன்னோட ஒன்னு ஒட்டி வரல. சோ கண்ட்டினியூட்டி கெட்டுப் போகாது. படிங்க டியர்ஸ்)

 

அமுதமொழியின் அபார்ட்மெண்ட் வளாகத்தின் முன்னே காரை நிறுத்திய அருணகிரி, கைத்தொலைபேசியை எடுத்து,

“கம் நவ்!” என அனுப்பி விட்டுக் காத்திருக்க ஆரம்பித்தான்.

அருண் வீட்டில் இருந்து கிளம்பும் போதே வானம் மப்பும் மாந்தாரமுமாக இருந்தது. இதோ, இதோ வரப் போகிறேன் என மிரட்டிய மழை, இங்கே வந்து காரை நிறுத்தியதும் சோவென கொட்ட ஆரம்பித்திருந்தது.

பின்னால் சீட்டில் வைத்திருந்த குடையை எக்கி எடுத்து தன்னருகே வைத்துக் கொண்டவன், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலையேப் பார்த்திருக்கலானான். அமுதமொழி வெளியே வந்து வானத்தை அண்ணாந்துப் பார்த்து விட்டு, துப்பட்டாவை தலைக்குப் பிடித்தப்படி ஓடி வரலானாள். இவனோ குடையைக் கையில் வைத்துக் கொண்டே அவளை நனையாமல் அழைத்து வர வேண்டும் எனும் பிரக்ஞை இல்லாமல் மழையில் நனைந்தபடி வந்துக் கொண்டிருந்த கை கால் முளைத்த ரோஜாவை பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“யாரிடமும் தோன்றவில்லை இது போல்

நான் எனது ஏதுமில்லை இனிமேல்” எனக் கார் வானொலி கவிதையாய் இசைக்க, பட்டென பக்கத்து சீட்டில் வைத்திருந்த காமேராவை எடுத்து கார் சன்னலைத் திறந்து படபடவென கிளிக்கினான் அமுதமொழியை.

முடியை ஒதுக்கும் போது ஒரு க்ளிக், துப்பட்டாவை உதறும் போது ஒரு க்ளிக், கைப்பையை அழுத்தி நெஞ்சோடு அணைத்தப் போது ஒரு க்ளிக், புறங்கையால் கன்னத்தில் விழுந்த மழை நீரைத் துடைக்கும் போது ஒரு க்ளிக் என ஓடி வந்த பெண் கவிதையை காமேராவின் வழி பொக்கிஷமாய் பத்திரப்படுத்திக் கொண்டான்.

காரின் உள்ளே ஓடி வந்து அமர்ந்துக் கொண்டு மூச்சு வாங்கியவள்,

“ஷப்பா! இப்படி அடிச்சு ஊத்துது மழை!” எனச் சொன்னபடியே அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

சன்னல் வழி மழைச்சாரல் அடிக்க, கையில் கமேராவும், தொடையில் குடையுமாக அமர்ந்திருந்தான் அருணகிரி. குடையைப் பார்த்ததும் முணுக்கென கோபம் வர,

“கையில குடையை வச்சிக்கிட்டேத்தான் என்னை நனைய விட்டீங்களா சார்?” எனத் திட்டுவதாக எண்ணிக் கொண்டு சிணுங்கினாள் செல்லமொழி.

அவள் குரலில்தான் சுற்றுப்புறம் உறைக்க, சட்டென காரின் கண்ணாடியை ஏற்றி விட்டான் செவிட்டுகிரி. அவனும் ஒரு பக்கமாக நனைந்திருந்தான்.

“அது வந்து மொழி..உன்னோட ஐ மீன் மழையோட அழகுல மெய் மறந்துட்டேன்! சாரி, ரொம்ப சாரி! மழையில நனைஞ்சிட்டியே, இருமல் வந்திடுமா? வேணும்னா நீ குடை எடுத்துக்கிட்டு மறுபடி வீட்டுக்கே போயிடறியா?” என அக்கறையாகக் கேட்டான்.

இவளுக்கு மழையில் நனைந்தால், குளிர்பானங்கள் அருந்தினால், மிக குளிர்ச்சியான பழங்கள் உட்கொண்டால் இந்த வறட்டு இருமல் பீடித்துக் கொள்ளும். ஒரு வாரம் பத்து நாட்கள் போல நன்றாக வைத்து செய்து விட்டுத்தான் கிளம்பும். அதற்குள் ஓய்ந்துப் போய் விடுவாள் அமுதமொழி. அதனாலேயே முடிந்த அளவு இதையெல்லாம் தவிர்த்து விடுவாள்.

“அதெல்லாம் இனிமே வராது சார்”

“ஏன் வராது? உன்னைப் பிடிக்கக் கூடாதுன்னு அந்த இருமலுக்கு தடா போட்டிருக்காங்களா?”

“அதுக்கு தடா போட முடியுமா? அதனாலத்தான் நைட்டு தூங்கும் போது வயித்துக்கு ஒரு கல்ப் விஸ்கி போடறேன்! அந்த சூட்டுல இருமல் சளிலாம் என்னைப் பார்த்து தெறிச்சு ஓடிடும்! யார்கிட்ட!” எனக் கேட்டப்படியே வலது கையால் சுடியின் காலரைப் பெருமையாக இழுத்து விட்டுக் கொண்டாள் அமுதமொழி.

“அடிப்பாவி! அமுதமொழியா நீ???? அல்கஹோல்மொழிடி!!!!”

கலகலவென நகைத்தவள்,

“மைத்தி ஆண்ட்டி என்னமோ ஒரு தூள் பொடி பண்ணிக் குடுத்தாங்க சார். அத பாலுல கலந்து குடிச்சா உடம்புல எதிர்ப்புசக்தி கூடுமாம்! அதைத்தான் தினமும் கோயில் தீர்த்தம் மாதிரி பயபக்தியா குடிச்சிட்டு வரேன்” என்றாள்.

“பயபக்தி, கோயில் தீர்த்தம்னுலாம் சொல்லி மைத்திய கடவுள் ரெஞ்சுக்கு தூக்கி வைக்கற நீ! இப்போலாம் என்னை விட மைத்தி உன்னைத்தான் நல்லா பார்க்கறாங்க! இந்த ஒத்தப் புள்ள வவுத்தெரிச்சல் உன்னை சும்மா விடாது மொழி! வரதட்சணை லொட்டு லொசுக்குன்னு தொல்லைப் பண்ணாத ஒருத்தன் உனக்கு புருஷனா வந்து, அன்பால உன்னை அர்ச்சனைப் பண்ணி, பாசத்தால உன் மேல பால் வார்த்து, கனிவால உன்னை களவாடி, காதலால தினம் தினம் சாகடிக்கப் போறான். இதுதான் நான் உனக்குக் குடுக்கற சாபம்”

பேசிக் கொண்டே சீட் பின்னால் எப்பொழுதும் ஆயத்தமாக வைத்திருக்கும் ட்ராவல் பேக்கில் இருந்து துண்டு ஒன்றை எடுத்து மொழியிடம் கொடுத்தான் அருண். அதை வாங்கி உடம்பைத் துடைத்துத் தலையைத் துவட்டியபடியே,

“சாபம் கூட ஒழுங்கா குடுக்கத் தெரியாத புள்ளையா மைத்தி ஆண்ட்டி உங்கள வளர்த்து விட்டுருக்காங்க” என்றாள் மொழி.

அவள் துடைத்ததும் துண்டை வாங்கி மழை நீர் பட்டிருந்த தன் முகத்தைத் துடைத்தவன், அதிலிருந்து வந்த வாசத்தில் மூச்சடைத்துப் போனான்.

அவனிடமிருந்து கவுண்ட்டர் அட்டாக் வராது போக, கண்ணாடியைப் பார்த்து முடியை சீர் செய்துக் கொண்டிருந்தவள், அருணின் புறம் திரும்பினாள்.

பட்டென துண்டை முகத்தில் இருந்து எடுத்தவன்,

“எனக்குத்தான் சாபம் குடுக்கத் தெரியல! நீதான் துர்வாசருக்கு தூரத்து சொந்தமாச்சே! எங்க எனக்கு சாபம் குடு பார்ப்போம்!” என அவளது கவனத்தைத் திசைத் திருப்பினான்.

இவன் காரைக் கிளப்ப சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தாள் அமுதமொழி.

“என்னம்மா இவ்ளோ யோசனை?”

“உங்கள மாதிரி எந்நேரமும் மூளையும் வாயும் ஒரே நேரத்துல சிங்க் ஆகாது எனக்கு. சில சமயம்தான் அப்படிலாம் வேலை செய்யும். மத்த நேரம்லாம் நீங்க ஒரு கவுண்ட்டர் குடுத்தா, நாலு மணி நேரத்துக்குப் பின்னதான் என் மூளைக்குள்ள எதிர் கவுண்ட்டர் உதிக்கும். அவ்ளோ ஸ்லோ நானு!”

“அப்போ சாபத்த இன்னிக்கு நைட்டுக்குள்ள குடுத்துடு!”” எனச் சொல்லிச் சிரித்தான் அருணகிரி.

இவன் வளவளத்துக் கொண்டே வர, அதைக் கேட்டப்படியே வந்தாள் அமுதமொழி. மழை நேர நெரிசலில், அரை மணி நேரப் பயணம் ஒரு மணி நேரமாகி இருக்க, அந்த பிரபல ஹோட்டலில் காரை பார்க் செய்து விட்டு அவசர அவசரமாக லாபிக்கு ஓடினார்கள் இருவரும்.

“நம்ம கம்பெனிக்கு இங்க ரூம் புக்காகி இருக்கு. இந்தா ரூம் கார்ட்” என கார்ட்டை அவள் கையில் திணித்தான் அருண்மொழி.

இரண்டு கார்ட் கையில் திணிக்கப்பட்டிருக்க,

“கிரேடிட் கார்ட் எதுக்கு சார்?” எனக் கேட்டாளிவள்.

“உன்னோட இந்த ஸ்டைலிஷ் சுடி நான் குடைக் கொண்டு வராததாலதானே நனைஞ்சு நாசமாப் போச்சு! என் கார்ட்ல இங்கயே இருக்கும் புட்டிக்ல ஒரு ட்ரேஸ் எடுத்துக்கோ மொழி! கொஞ்சம் சாதாரணமானதே எடுத்துக்கோ! ரொம்ப கிராண்டா இருந்தா நீதான் மாடல்னு நினைச்சு மேடையில தூக்கி விட்டறப் போறாங்க! உனக்கு கேட்வால்க் வராது, டக்வால்க்தான் வரும்னு எனக்கு மட்டும்தானே தெரியும். எதுக்கு ரிஸ்க்!” எனச் சொல்லியபடியே அவசரமாய் ஈவண்ட் ஹாலுக்கு ஓடினான் அருணகிரி.

ஹால் கதவைத் திறக்கும் முன்னே,

“மஜெந்தா (பாப்பா செலெக்ட் பண்ணா இந்த கலர். போட்டோவும் அவ செலெக்ட் பண்ணதுதான்) கலர்ல நீ மகாலஷ்மி மாதிரி இருப்ப! அந்த கலர்ல எடு ப்ளிஸ்” எனச் சொல்லிவிட்டு உள்ளே விரைந்து விட்டான் அருண்.

லக்மீ பேஷன் வீக் எனும் நிகழ்ச்சி இந்த முறை சென்னையில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. அதற்கு புகைப்படம் எடுக்க ஏ.ஜி போட்டோகிராபியைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். வீடியோ ஷூட்டிங் வேறு ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. காலையிலேயே இவனது உதவியாளர்கள் வந்து தேவையான ஏற்பாடுகளை முடித்திருந்தார்கள். இது மாதிரி பேஷன் ஷோக்களை லைவ்வாக பார்த்ததில்லை என மொழி சொல்லவும்தான், அவளையும் அழைத்து வந்திருந்தான் அருணகிரி.

இவன் நிகழ்ச்சி நடக்கும் ஹாலுக்கு நுழைந்ததும், வேலை முழுதாக அருணை விழுங்கிக் கொண்டது. செட்டிங், லைட்டிங் எல்லாம் ஏற்பாட்டாளர்களே செய்திருந்தார்கள். ஏற்கனவே ரிஹர்சல் நடந்த தினத்தன்றே வந்து புகைப்படம் எடுத்திருந்ததால், இப்பொழுது எந்த கோணத்தில், எங்கிருந்து புகைப்படம் எடுத்தால் சரியாக வரும் எனத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது அருணுக்கு. இவன் மாடல்கள் நடந்து வந்து முன்னே நிற்கும் இடத்தைக் கவர் செய்ய, இவனது இரண்டு உதவியாளர்கள் ஆரம்பப் புள்ளியிலும், நடுவிலும் எடுப்பது என ஏற்கனவே தீர்மானித்திருந்தார்கள்.

அறைக்கு வந்தவள், தலையை ஹேர் ட்ரையர் கொண்டு உலர்த்தி, முகத்தைக் கழுவி மீண்டும் இன்னொரு முறை அலங்காரம் செய்துக் கொண்டாள். நனைந்த உடையை அகற்றி விட்டு அருண் கேட்டுக் கொண்டப்படியே வாங்கி இருந்த மஜெந்தா வர்ண ஈவ்னிங் ட்ரெஸ்சை அணிந்துக் கொண்டு முழு நீள கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள் இவள்.

“கியூட்” எனத் தன்னைத்தானே புன்னகையுடன் புகழ்ந்துக் கொண்டவள், ஈர உடையை லாண்டரி பேக்கில் போட்டு ஒரு ஓரமாய் வைத்தாள்.

அவனின் கிரேடிட் கார்ட்டைத்தான் உடை வாங்கப் பயன்படுத்தி இருந்தாள் மொழி. ஓசியில் கிடைத்ததை ஒய்யாரமாய் வாங்கிக் கொள்ளும் பழக்கமில்லை இவளுக்கு. தன்னிடம் காட்டப்படும் அக்கறையை ஊதாசினப்படுத்தக் கூடாது என்ற எண்ணமே அவனது கார்டைப் பயன்படுத்தியதற்கு முழு முதற் காரணம். மற்றவர்களை அக்கறையாய் பார்த்துக் கொள்ள பழகி இருந்தவளுக்கு, தன்னிடம் காட்டப்படும் சிறு அக்கறை கூட தித்திப்பாய் நெஞ்சினுள்ளே இறங்கி விடும்.

ஷோ நடக்கும் ஹால் உள்ளே நுழைய அனுமதி அட்டையை அருண் ஏற்கனவே கொடுத்திருக்க, அதைக் காட்டி உள்ளே பிரவேசித்தாள் இவள். அந்த இடமே கண்ணே கூசும் அளவுக்கு பளபளவென ஜொலித்தது. மொழி அருணை தேடிப் போக, இவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வைப் பார்த்தவன்,

“யாரிந்த தேவதை, யாரிந்த தேவதை!!!” என மெல்லியக் குரலில் பாடி,

“ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க ப்ரேண்ட்!” என்றான்.

“ட்ரெஸ் வாங்கிக்க சொல்லி கார்ட் குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்ரேண்ட்” என்றாள் இவள்.

“மை பிளஷர்! நம்ம நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட சீட் நம்பர் பாஸ்ல இருக்கும் பாரு மொழி! போய் உக்காந்துக்க! இன்னும் அரை மணி நேரத்துல ஆட்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க. இங்க முடிஞ்சதும், சட்டுன்னு பேக்கப் பண்ண முடியாது! பிஹைண்ட் தெ சீன்னு அதெல்லாம் வேற போட்டோ எடுக்கனும். எப்படியும் ராத்திரி ஒன்னு, ரெண்டு கூட ஆகிடும். ஹோட்டல் ரிஷப்சன்ல உனக்கு டாக்சி அரேஞ் பண்ண சொல்லிருக்கேன். பத்து மணிக்கு இங்கருந்து கிளம்பிடு. கிளம்பறப்பவும், வீட்டுக்குப் போனதும் ஒரு மேசேஜ் போட்டிடு எனக்கு! சரியா?” என வேலையை நிறுத்தி விட்டு இவன் லெக்‌ஷர் எடுக்க, சரியெனத் தலையாட்டினாள் அமுதமொழி.

அருண் சொன்னதைப் போல இவள் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டாள். அரை மணி நேரத்தில் அந்த அரங்கம் நிரம்பி விட, மேடை லைட் மட்டும் பிரகாசமாக்கப் பட்டு ஏனைய விளக்குகள் அணைக்கப்பட்டன. மேடையில் ஒயிலாக பெண் மயில்கள் அன்ன நடையிட, இடைவிடாது புகைப்படங்களை எடுத்துத் தள்ளினான் அருணகிரி. ஒவ்வொரு மாடல் நடந்து வரும் போதும் போடப்பட்ட பிண்ணனி இசையும், பார்க்க வந்தவர்களின் கைத்தட்டல்களும் என அரங்கமே அதிர்ந்தது. ஸ்பாட் லைட் வெளிச்சம், மின்னி மறையும் காமேராக்களின் ஒளி, மாடல்களின் வண்ண வண்ண உடைகள் என அவ்விடமே ஜொலிஜொலித்தது.

தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என எண்ணிக் கொண்டே புன்னகையுடன் அந்தச் சூழலை ரசித்திருந்தாள் அமுதமொழி. வேலையின் நடுவே இவளைக் கண்கள் தேடிக் கண்டுப்பிடிக்க, மொழியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த அவள் பக்கத்து இருக்கை ஆடவனை எரிச்சலுடன் பார்த்தான் அருணகிரி. அவன் கேட்பதற்கெல்லாம் தலையை மட்டும் உருட்டி, மரியாதை நிமித்தமாய் ஓரிரு வார்த்தை மட்டுமே பதிலளித்தவள் நெளிந்தப்படி அமர்ந்திருப்பதையும் உணர்ந்துக் கொள்ள முடிந்தது அருணால்.

கடிகாரத்தைப் பார்க்க, மணி 9.45 எனக் காட்டியது. சட்டென தொலைபேசியை எடுத்தவன்,

“எனி இஷ்யூ?” என அனுப்பிவிட்டு வேலையைப் பார்த்தான்.

“கெளம்பப் போறேன்” என தங்கிலிஷில் பதில் வந்தது ஸ்கிரினில் தெரிய, திரும்பி அவளைப் பார்த்தான் அருண்.

அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். இவன் சரியென தலையசைக்க, அவள் படக்கென எழுந்துக் கொண்டாள். பக்கத்து இருக்கைக்காரனும் எழுந்து என்னவோ சொல்ல, இவள் வேண்டாமென தலையாட்டுவது தெரிந்தது அருணுக்கு. விடுவிடுவென மொழி நடந்து விட, அந்த ஆடவன் அவளைப் பின் தொடராது மீண்டும் இருக்கையில் அமர்ந்ததும்தான் அருணுக்கு மூச்சு ஒழுங்காக வந்தது.

வீட்டுக்கு வந்ததும்,

“ரிச் சேஃப்லி” என அருணுக்கு ஒரு மேசேஜ் போட்டவள், கசகசப்பு நீங்க குளித்து விட்டு வந்தாள். பாட்டியும் அவரது பாட்டு சத்தமும் இல்லாமல் வீடே அமைதியாக இருந்தது. கண்ணாடி முன் அமர்ந்தவள், ஏற்கனவே ஃபேசியல் வாஷ் போட்டு கழுவி இருந்த முகத்தை, பஞ்சில் ட்டோனரை நனைத்து சுத்தப்படுத்தத் தொடங்கினாள். அதன் பிறகு, கண்களுக்கான க்ரீம் பூசியவள், மோய்ஸ்ச்சுரைசரை மிருதுவாக முகம் கழுத்து எல்லாம் தடவினாள். இடியே விழுந்தாலும் இரவில் முகத்துக்கு இதையெல்லாம் செய்யாமல் படுக்க மாட்டாள் அமுதமொழி. இரவு நேர முகப்பராமரிப்பு முடிந்ததும், தனது அன்னையின் படத்தின் அருகே வந்து நின்றாள் பெண்.

“ம்மா! எப்போவும் உன் படத்தப் பார்க்கறப்போ இவ்ளோ சீக்கிரம் என்னை விட்டுட்டு ஏன்மா செத்துப் போனேன்னு தோணும். ஆனா இப்போ என் கிட்ட ஏன்மா எதையும் சொல்லாம போனேன்னு தோணுது! ஏன்மா, ஏன்? பன்னிரெண்டு வயசுல இவளுக்கு வாழ்க்கையோட சிக்கல் என்ன புரியும்னு நெனைச்சிட்டியாமா? நீ உடம்பு முடியாம படுத்திருந்தப்போ அடிக்கடி என்னமோ சொல்ல வந்து, ஒன்னும் இல்லடான்னு மழுப்புவியே, அது என் அப்பா யாருன்ற ரகசியத்ததானாம்மா? பரவாயில்லம்மா! அவர் யாருன்னு எனக்குத் தெரியாமலே போகட்டும். கிரி சொல்றாங்க, நான் கடவுள் குழந்தையாம்! ஆமாவாமா? என்னமோ போம்மா, கிரி பக்கத்துல இருக்கறப்போ எதுவும் என்னைப் பாதிக்கறது இல்ல. ஆனா தனிமையில இருக்கறப்ப கண்டதும் மண்டையைப் போட்டு உலுக்கி எடுக்குதுமா! என்னடா வாழ்க்கை இதுன்னு ரொம்ப டிப்ரேஸ்ட்டா இருக்குமா! பாட்டி!!! அப்படி சொல்லறதுக்கு எனக்கு உரிமை இருக்காமா? இல்லத்தானே?”

படத்தில் உள்ளத் தாய் எதாவது பதில் சொல்வாளா என்பது போல சற்று நேரம் பார்த்திருந்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“அவங்க நேத்து சிங்கப்பூர் கிளம்பிட்டாங்கம்மா! இப்போ நான் தனியாத்தான் இருக்கேன்! கிரி லேடிஸ் ஹாஸ்டல் போய்டுன்னு சொல்லறாங்க! ஆனா எனக்கு உங்க கூட வாழ்ந்த இந்த வீட்ட விட்டுப் போகப் பிடிக்கலம்மா! ரத்த சொந்தம் நீங்க உயிரோட இல்லைனாலும், நீங்க தொட்டுத் தடவின சுவர், பாவிச்ச பண்ட பாத்திரம், கால்தடம் பதிச்ச இந்த தரைன்னு உயிரில்லாத இதனோடெல்லாம் எனக்கு ஆத்மார்த்தமான பந்தம் இருக்கு ம்மா” என்றவளுக்கு கண்ணீர் கரகரவென கொட்டியது.

 

‘தாயே உயிர் பிரிந்தாயே

என்ன தனியே தவிக்க விட்டாயே’

 

(நீளுமா….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர். அடுத்த எபில சந்திக்கும் வரை, லவ் யூ ஆல்)