En Ayul Neelumadi–EPI 11

273046404_1018660852054582_3314744799217173998_n-56bb85e7

அத்தியாயம் 11

 

மெல்ல நடந்து வந்து, கட்டிலில் அமர்ந்து காலை நெஞ்சோடு கட்டிக் கொண்டவளுக்குப் சில நாட்களுக்கு முன்பு பாட்டியிடம் பேசியது நினைவில் ஆடியது.

“என்னை விட்டுப் போக முடிவு பண்ணிட்டியாடி அமுதா?”

“பா…பாட்டி!” எனத் திக்கியவளுக்குக் கண்ணீர் உடைப்பெடுத்தது.

விடுவிடுவென அவளருகே வந்தவர், அவள் கைப்பிடித்து தனது அறைக்கு இழுத்துப் போனார்.

“மொழி!” என அருண் பின்னால் வர,

“இருங்க சார்! வந்துடறேன்” என அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தாள் இவள்.

உள்ளே நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்துக் கொண்ட வைதேகி, இவளையும் அருகே அமர்த்திக் கொண்டார்.

“பெட்டி படுக்கைலாம் கட்டற அளவுக்கு தைரியம் வந்திடுச்சுல்ல?”

“பாட்டி!” என்றவளுக்கு வெறும் காற்றுதான் வந்தது.

“நேத்து நீ புரண்டு, புரண்டு படுத்ததுல எனக்கும் தூக்கம் கெட்டுடுச்சி! நீ எழுந்து போகவும், உன் கிட்ட பால் சூடு செய்ய சொல்லிக் குடிக்கலாம்னு நானும் பின்னால வந்தேன். அப்போத்தான் என் மகன் அந்த அறிவுக் கெட்டவன் பேசனதையும் அதை நீ கேட்டதையும் பார்த்தேன். நான் உசுரோட இருக்கற வரை எது உனக்குத் தெரியக் கூடாதுன்னு மறைச்சு வச்சேனோ, அது இப்படி உன் காதுல வந்து விழும்னு நான் எதிர்ப்பார்க்கல அமுதா. காலையில நீ கிளம்பறப்ப கூட, தனியா இருந்து மனச தேத்திக்கட்டும்னு தான் கோபமா இருக்கற மாதிரி நடிச்சுப் போக விட்டேன்” எனப் பெருமூச்சுடன் சொன்னார்.

“பாட்டி! உங்களுக்கு இந்த விஷயம் எப்போ தெரியும்?” எனக் கேட்டு முடிப்பதற்குள் அப்படி ஓர் அழுகை பெண்ணுக்கு.

அவளை நிதானமாக ஏறிட்ட வைதேகி,

“இதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன செய்யப் போற? கடந்தது, நடந்தது எல்லாம் அப்படியே போகட்டும். பழச தூண்டித் துருவறதுல என்ன லாபம் சொல்லு?” எனக் கேட்டார்.

“ப்ளிஸ் பாட்டி, சொல்லுங்க! என் மனசுக்கு நிம்மதிய குடுங்க! ஒருத்தனோட புள்ளைக்கு இன்னொருத்தன அப்பாவா காட்டின எங்கம்மாவோட செய்கைக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியனும் பாட்டி! எல்லா குழந்தைகளுக்கும் அம்மா என்கிறவ மாசு மருவற்ற ஒரு தூய்மையான பிம்பம்! இப்போ என் அம்மாவ பத்தி என் மனசுல தப்புத் தப்பா என்னென்னமோ தோணுது! என்னால தாங்க முடியல பாட்டி!” எனக் கதறியவளை இறுக்கத்துடன் பார்த்தார் வைதேகி.

“உங்க அம்மா அஞ்சனா ஒரு ஏமாளிடி! காதல்னு வந்துட்டா முக்காவாசிப் பொண்ணுங்க ஏமாளிங்கத்தான். ஏன் தெரியுமா? காதல் பீடிச்சிட்டா மூளை முடங்கிப் போய், மனசு மட்டும் முழிச்சிக்குது! இந்தப் பாழாப் போன காதல்னால உங்கம்மா உடம்பால பாழாப் போனாளே தவிர அவ மனசு பாலை விட சுத்தமானதுடி!”

பின் ஒரு பெருமூச்சுடன் அஞ்சனாவின் கதையை இவளுடன் பகிர்ந்துக் கொண்டார்.

“உங்கம்மாவோட அம்மா என்னோட பள்ளித் தோழி. கொஞ்சம் பசையுள்ள இடம். கல்யாணமானதும் வேற ஊருக்குப் போயிட்டா. நானும் கல்யாணமாகி செங்கல்பட்டுக்கு வந்துட்டேன். அதுக்குப் பிறகு எங்களோட நட்பு விட்டுப் போயிடுச்சு. ரொம்ப வருஷம் கழிச்சு உன் பாட்டிய ராமேஸ்வரத்துல வச்சி சந்திச்சேன். என் வீட்டுக்காரு இறந்து எனக்கு அட்டாக் வந்துட்டுப் போயிருந்த நேரமது. ரகுவுக்கும் சிங்கப்பூருல வேலை கிடைச்சிருந்தது.”

பேசிக் கொண்டே எழுந்துப் போய் அவரது பாடல் பிளேயரை ஒலிக்க விட்டார். அதுவோ,

“ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ” எனப் பாட என்னவோ ஏன் பிறந்தாய் மகளே என விதி கேட்பது போலத் தோற்ற மயக்கம் வர கண்ணீர் பெருக்கெடுத்தது அமுதமொழிக்கு.

“நாம பேசறது யாருக்கும் கேக்கக் கூடாதுன்னு பாட்டுத் தொறந்தேன்டி. அழுகையை நிறுத்து! மூச்” எனச் சின்ன வயதில் அவளை மிரட்டியதுப் போலவே வைதேகி மிரட்ட பட்டென அழுகையை அடக்கினாள் பெண். 

“உங்கம்மா, பாட்டி, தாத்தான்னு குடும்பமா வந்திருந்தாங்க கோயிலுக்கு. இவனும் நானும் போயிருந்தோம். வாடிப் போய் தெரிஞ்சாலும் உங்கம்மா அஞ்சனா அவ்ளோ அழகா இருந்தா. என் மவன் கண்ணு அவப் பின்னாடியே போறதப் பார்த்துட்டு, என் கிட்டத் தனியா பேசனும்னு அவங்க இருந்த விடுதிக்கு வர சொன்னா உன் பாட்டி. நானும் பழைய நட்பப் பார்க்கப் போறோம்ன்ற சந்தோசத்துல போனேன். அங்க உங்க பாட்டி மட்டும்தான் இருந்தா. உன் அம்மாவும் தாத்தாவும் டீ சாப்பிட போயிருந்தாங்க. அவங்க ரூமுக்குள்ள நான் நுழைஞ்சதும் மடார்னு என் காலுல விழுந்துட்டா உன் பாட்டி. நான் அப்படியே அதிர்ச்சியாகி நின்னுட்டேன்.”

அன்றைய நாளுக்கேப் போய் விட்டது போல சற்று நேரம் அமைதியாய் அமர்ந்து விட்டார் வைதேகி.

“அப்புறம்?” என இவள்தான் வைதேகியை உசுப்பினாள்.

“என் பொண்ணுக்கு வாழ்க்கைப் பிச்சைப் போடு வைதேகினு ஒரே அழுகை! அவள சமாதானப்படுத்தி விஷயம் என்னான்னு தெரிஞ்சிக்கறதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அவங்க ரெண்டு பேருக்கும் உங்கம்மா ஒத்த வாரிசு. ரொம்பவே அமைதியான குணம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கறவ. பொண்ணுங்க அழகா இருந்து அமைதியா இருந்துட்டா, அத திமிர்னு பச்சைக் குத்திடுவாங்களே! உங்கம்மா படிச்ச காலேஜிலயும் அப்படித்தான் நடந்துச்சு. பெட்டு கட்டி பொண்ணையோ, பையனையோ லவ் பண்ண வைக்கறத சினிமால கதை கதையா எடுத்து வெற்றியக் குவிச்ச காலமது. உங்கம்மா திமிரையும் அடக்கி அவள காதலுல விழ வைக்கறதுன்னு கூட்டாளிங்க கிட்ட பெட்டு கட்டன பொறம்போக்குத்தான் நீ பொறக்க காரணமான உங்கப்பா. கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையுங்கற மாதிரி அந்த நாயோட காதல் வலையில விழுந்து சின்னாபின்னமானவத்தான் உங்கம்மா.”

வைதேகி சொன்னதை இவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. கல்லாய் சமைந்துப் போனாள் அமுதமொழி.

“வேலையை முடிச்சதும், ஆள் காணாமப் போயிட்டான். இவ அவனத் தேடித் திரிஞ்சப்பத்தான் பெட்டு கட்டி இவ வாழ்க்கையில விளையாடன விஷயமே தெரிய வந்தது. அவன் உடம்புத் திமிர தீர்த்துக்க ஏமாத்தி இருந்தாலும், இவளோடது தூய காதலாச்சே. விஷத்தக் குடிக்க முயற்சிப் பண்ணிருக்கா. நல்ல வேளை பாதி குடிக்கறப்பவே உங்க பாட்டி பாட்டிலைத் தட்டி விட்டுக் காப்பாத்திட்டாங்க. ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு ஓடுனப்பத்தான் வயித்துல நீ இருக்கன்றதே தெரிய வந்துச்சாம். பெத்தவங்க நொந்துப் போயிட்டாங்க. பாசத்தக் கொட்டி, ஆசை ஆசையா வளத்தப் பொண்ணாச்சே! கருவ கலைச்சிட்டு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நெனைச்சா, உங்கம்மா, படக் கதாநாயகி மாதிரி, என் வாழ்க்கைக்கு ஆதாரம் இந்தக் குழந்தை மட்டும்தான்னு ஒரே ஒப்பாரி. இவங்க புள்ளை உசுர புடிச்சு வைக்க, அவ புள்ளை உசுரு, அதாண்டி உன் உசுரு தேவையாகிப் போச்சு உன் தாத்தாவுக்கும் பாட்டிக்கும். இதெல்லாம் ஏன் என் கிட்ட சொல்றாங்கன்னு யோசனையா உட்கார்ந்திருந்தேன். பிறகுதான் உன் பாட்டி, ரகுவ அஞ்சனாவுக்குக் கட்டிக் குடுக்கறியான்னு கேட்டா. நான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லத்தான் வாயத் திறந்தேன். ஆனா உங்க பாட்டி ஒரு கைத்தேர்ந்த வியாபாரிடி. வரதட்சணைன்னு அவ சொன்ன தொகையக் கேட்டு மறுக்க வந்த என் வாய் கப்புன்னு மூடிக்கிச்சு”

சமைந்துப் போய் இருந்தவளுக்கு மெல்ல தன்னிலை வந்தது. வைதேகி சொன்ன காரணத்தைக் கேட்டதும் வாயெல்லாம் கசந்து வழிந்தது அமுதமொழிக்கு.

“எனக்கு சிகிச்சைக்குப் பணம் ரொம்ப செலவாகி இருந்துச்சு. அதோட ரகுவுக்கு சிங்கப்பூர்ல கிடைச்ச வேலைக்கும் சூரிட்டி குடுக்க வீட்டு மேல கடன் எடுக்க வேண்டிய நிலை வேற. தட்டுக் கெட்டுப் போய் வயித்துல வாங்கிட்டு வந்தவளையா மானமும் மரியாதையுமா வாழற நான் மருமகளாக்கிக்கிறதுன்னு ஒரே வினாடிதான் யோசிச்சேன். பிறகு அந்த எண்ணத்துக்கே சமாதி கட்டிட்டேன். பணத்தட்டு கீழ இறங்கி மானம் மரியாதை மேல ஏறிடுச்சு. இந்த குடும்ப கௌரவம், மானம், வெக்கம், ரோஷம்லாம் பட்டினின்னு ஒன்னு வந்துட்டா பின்னங்கால் பிடரில பட ஓடிப் போயிடும் தெரியுமாடி! இந்த உலகத்துல பணம்தான்டி எல்லாம். பணம் இல்லாம ஓலைக் குடிசையில ஒரு வாய் கஞ்சி குடிச்சு நிம்மதியா வாழ்ந்துடலாம்னு சொன்னவன்லாம் யாரு? பணம் பொரட்ட துப்பில்லாதவனுங்கத்தான்!” எனப் படபடத்தவர் ஜக்கில் இருந்த நீரை அருந்தி தன்னை சமன் செய்துக் கொண்டார்.

“உடனே ஒத்துக்கிட்டா என் கெத்து என்னாகிறது? என் மகன் வீரன் அசகாய சூரன்னு, அவனுக்குப் போய் எப்படி இப்படின்னு பேசி நிறுத்தினேன். உன் பாட்டி என் கையைப் புடிச்சிட்டு மறுபடி அழ ஆரம்பிச்சிட்டா. எங்க சொந்தத்துல யாருக்காச்சும் கட்டி வச்சா, விஷயம் வெளிய கசிஞ்சு நாங்க கட்டிக் காத்த மானம் மரியாதையெல்லாம் காத்தோட போயிடும். உன் பையனுக்கு என் பொண்ண பிடிச்ச மாதிரி தெரியுது! அதான் வெட்கத்த விட்டு உன் கிட்ட கேக்கறேன்னு அழுதா. ரொம்பவும் பிகு பண்ணிக்கிட்டா உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணாவாகிடும்னு, ஒரு வழியா நட்புக்காக சம்மதிக்கற மாதிரி காட்டிக்கிட்டேன். ரகு கிட்ட இப்படி விஷயம்னு சொல்லியே கல்யாணம் செய்யலாம்னுதான் உன் பாட்டி சொன்னா!  நாந்தான் வேணாம்னு சொல்லி வச்சேன். எனக்கு விஷயம் தெரியும்னு அஞ்சனாகிட்ட வாய விட்டுற வேணாம்னு கேட்டுக்கிட்டேன். ரகு கிட்ட கல்யாணத்துக்கு முன்னயே சொல்லி எதுக்கு ரிஸ்க்கு எடுக்கனும்! கல்யாணம்னு ஒன்னு நடந்து, நடக்க வேண்டிய மத்ததும் நடந்துட்டா, உங்கம்மா அழகுல அப்படியே பெட்டிப் பாம்பா அடங்கிடுவான்னு கணிச்சேன். என் மகனோட சபலப் புத்தியப் பத்தி எனக்குத் தெரியாதா! நான் பார்த்துக் கட்டி வச்ச கல்யாணத்த முறிக்க அவனுக்கு தைரியமும் வராது. என்னோட உடல்நிலையப் பத்தியும் யோசிப்பான்னு பக்காவா ப்ளான் போட்டேன். அதோட..” என்றவர் லேசாய் தயங்கினார்.

“சொல்லுங்க பாட்டி, எதுவா இருந்தாலும் சொல்லுங்க!” என மனப்பாரத்துடன் சொன்னாள் இவள்.

“என்னதான் என் மகன் அம்மான்னு உருகனாலும், கல்யாணம்னு ஆகிட்டா எங்க என்னை விட்டுடுவானோன்னு உள்ளுக்குள்ள பயமா இருந்துச்சு. உங்கம்மா என்னை மீறி நடக்க நினைச்சா, அவள என் கைப்பிடியில வச்சிக்க இந்த கெட்டுப் போன விஷயம் ஒரு ஆயுதமா இருக்கும்னு நெனைச்சேன்”

“பாட்டி!!!” என இவள் அதிர்ச்சியாக அழைக்க,

“என்னடி, என்ன? என்னை சுயநலம் பிடிச்சவன்னு நெனைக்கறியா? அப்படிப் பார்த்தா உங்கம்மாவும் சுயநலம் கொண்டவத்தான். தன் புள்ளை இந்த சமுதாயத்துல அந்தஸ்த்தா நடமாடனும்னு நாடகக் கல்யாணம் மாதிரி என் புள்ளைய கட்டிக்கிட்டா! அவ நெனைச்சுப் பார்த்தாளா கட்டிக்கிட்டவன் எவ்வளவு எதிர்ப்பார்ப்போட இருந்திருப்பான்னு! மக வாழ்க்கை சிறக்கனும்னு என் புள்ளைய பலிகடாவா ஆக்கின உன் தாத்தா பாட்டிக்கு இல்லாத சுயநலமா? பொண்டாட்டியா நடந்துக்கலைனாலும் பரவாயில்ல, அவ குடுத்த டெப்பாசிட்ட வச்சி வீடு வாங்கி, இன்னொரு கல்யாணம் கட்டி அவ முன்னாலயே புள்ள குட்டின்னு வாழ்ந்த என் மகனுக்கு இல்லாத சுயநலமா? நீ மட்டும் பெரிய ஒழுங்காடி? இத்தனை வருஷம் சொந்தப் பேத்திக்குக் காட்டாத அன்ப உனக்குக் காட்டி வளத்தேனே, விஷயம் தெரிஞ்சதும் இவ எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு பெட்டியத் தூக்கிட்ட உனக்கில்லாத சுயநலமா? யார் வேணும்னாலும் யாரை வேணும்னாலும் குத்தம் குறை சொல்லலாம்டி! ஆனா அவங்கவங்க நிலைல இருந்துப் பார்த்தாத்தான் அவங்கவங்க நிலைமைப் புரியும்!” என அழுதார் வைதேகி.

சற்று நேரத்தில் தன்னையேத் தேற்றிக் கொண்டவர்,

“நான் உங்க பாட்டிக்கு சொல்லி இருந்த மாதிரியே, மாப்பிள்ளை வீட்டுக்கு எதுவும் தெரியாதுன்னு நெனைச்சிக்கிட்டுத்தான் உங்கம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டு என் வீட்டுக்கு வந்தா. உங்கப்பன சுமந்த உடலாலயும், மனசாலயும் என் மவன சுமக்க அவளுக்கு இஸ்டமில்ல. கல்யாணம்னு அவ பண்ணிக்கிட்டதே உனக்காக மட்டும்தான். கல்யாணமாகி கொஞ்ச நாளுலயே ரெண்டு பேருக்கும் ஒன்னும் சரியில்லன்னு எனக்கு புரிஞ்சது. அவன் கண் பார்வைப் படற தூரத்துல கூட இவ நிக்க மாட்டா. உங்கப்பாகிட்ட மட்டும் இல்லை, எந்த ஆம்பளைக் கிட்டயும் ஒதுக்கம்தான். இவன் என்னான்னா அவளையே வெச்ச விழி வாங்காம பார்ப்பான். நம்ம கிட்ட பஞ்சாயத்துக்கு வராத வரைக்கும் ஒன்னும் கண்டுக்க வேணான்னு இருந்தேன். ஒரு சில மாசத்துல சென்னையில இந்த வீட்ட வாங்கி, எங்க ரெண்டு பேரையும் இங்க விட்டுட்டு இவன் சிங்கப்பூர் போயிட்டான். பிறகு நீ பொறந்த! அதுக்கு பின்னதான் என் கிட்ட வந்து நின்னா உங்கம்மா! நானும் உங்க மகனும் விவாகரத்துப் பண்ணிக்கப் போறோம்! நான் தனியா போயிடறேன் என் பிள்ளையோடன்னு.”

“அப்படியே ரோஜாப்பூவாட்டம் வெள்ளை வேளேர்னு இருந்த உன்னைக் கையில தூக்கி வச்சிக்கிட்டு கண்ணுல கடலளவு சோகத்த தேக்கி வச்சிக்கிட்டு நின்னா அஞ்சனா! உன்னை அவ கையில இருந்து வாங்கிக்கிட்ட நான் சொன்னேன், எனக்கு மருமகளா இருந்தது போதும்! இனிமே என் மகளா என் கூடவே இருந்துடுன்னு! அப்படி ஒரு அழுகை அவளுக்கு. கதறிகிட்டே உண்மைய எல்லாம் சொன்னா. எனக்கு ஏற்கனவே தெரியும்னு சொன்னேன். எனக்கு தெரியும்ன்ற விஷயத்த என் மகன்கிட்ட சொல்லிடாதே, அவனோட கோபத்தையோ முகத் திருப்பலையோ என்னால தாங்கிக்க முடியாதுன்னு கேட்டுக்கிட்டேன். ஆரம்பத்துலயே அஞ்சனா கிட்ட இத சொல்லாததுக்கும் இதான் காரணம். என் ரகு, அம்மா நம்ம வாழ்க்கையை வீணாக்கிட்டாங்கன்னு நெனைச்சிடக் கூடாதேன்னு ரொம்ப கவனமா காய் நகர்த்துனேன். அஞ்சனாவ கட்டிக்கிட்டதுல அவளோட அன்பும் காதலும் மட்டும்தான் இவனுக்குக் கிடைக்காம போச்சு, ஆனா பணம், வீடு, நல்ல வேலைன்னு அழகா செட்டிலாகிட்டான் என் மகன். ஒரு அம்மாவா அவனுக்கு நான் நல்லததான் செஞ்சிருக்கேன்”   

ஒருத்தியுடைய பலவீனத் தருணத்தைப் பயன்படுத்தி ஒட்டு மொத்தமாய் அவளை உரிந்து எடுத்து, அவளையே தனக்கு வேலைக்காரி போல மாற்றிக் கொண்ட இவர் மனித பிறவிதானா எனத் தோன்றியது அமுதமொழிக்கு. இவருக்கா பன்னிரெண்டு வயதில் இருந்து பார்த்து பார்த்து இவ்வளவும் செய்தோம் என மனதுக்குள் புழுங்கினாள்.

அதையே அவரும் எதிரொலித்தார்.

“இவன் இன்னொரு கல்யாணம் பண்ணி சிங்கப்பூருக்கு போய் செட்டிலாகிட முடிவெடுத்தான். என்னையும் வரச் சொன்னாந்தான். ஆனா வாழ்ந்து வளந்து பூமிய விட்டுப் போகப் பிடிக்கல. எனக்கு ஒரு துணையா, பாதுகாப்பா இருக்கட்டும்னுதான் அஞ்சனாவ என் கூடவே வச்சிக்கிட்டேன். என்னோட சுயநலம் தெரியாம, தப்பு செஞ்சிருந்த அவளைப் பெரிய மனசுப் பண்ணி மன்னிச்சு மகளா ஏத்துக்கிட்டாங்களேன்னு உங்கம்மா ஒரு தெய்வத்தைப் போல என்னைத் தாங்கினாடி! என் மகன் கூட வாயாலத்தான் வடை சுடுவான். ஆனா உங்கம்மா உன்னை மாதிரியே ரொம்ப அமைதி! பாசத்தக் காட்டறது எல்லாம் செயலாலத்தான். அவ காட்டுன அன்பால என் மனச ஜெயிச்சிட்டாடி அமுதா! உங்கம்மா இந்த உலகத்த விட்டுப் போனதும், உன் மூலமா அவளப் பார்த்துகிட்டு வரேன்! அவளுக்குப் பிறகு எனக்கு எல்லாமே நீதாண்டி அமுதா!” என்றவருக்குக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

“அழாதீங்க பாட்டி” எனத் தன்னையும் மீறி இத்தனை வருட பாசத்தில் சமாதானப்படுத்தியவளை வாரிக் கட்டிக் கொண்டார் வைதேகி.

“என்னை விட்டுப் போக பெட்டியைக் கட்டிட்டல்ல நீ! உனக்கு என்னடி குறை வச்சேன் நானு? ஒவ்வொருத்தங்க மாதிரி பிரம்பால அடிச்சேனா, பட்டினி போட்டேனா, இருட்டு அறையில வச்சுப் பூட்டுனேனா, இல்ல கிழிஞ்ச சட்டையைப் போட்டுக்க விட்டேனா? நல்லாத்தானடி பார்த்தேன்! நான் என்ன செய்ய? எனக்குப் பாசத்த மிரட்டலாத்தான் காட்ட வரும்! எனக்குத் தெரிஞ்ச வழியில பாசத்தக் காட்டுனேன்! ஓவரா அன்ப பொழிஞ்சாலும், உங்க சித்தி உள்ளதுக்கும் ஆப்பு வச்சிடுவான்னு பயம் வேற! உனக்குப் புடிச்சப் படிப்ப படிக்க வைக்க முடியலைனாலும், நீ சொந்தக் காலுல நிக்கனும்னு தானே கார் பழக வச்சேன், இவனப் போட்டுக் கொடஞ்சி உனக்கு தேவையான மேக்காப்பு மிசினெல்லாம் வாங்கித் தர வச்சேன்! இவன் திட்டுரான்னு விலகிப் போறியே, உனக்கு ஒரு பிடிப்பு வேணும்னுதானே உங்கப்பா, உங்கப்பான்னு ஒவ்வொரு தடவையும் அழுத்தி சொல்லிக் கிட்டே வரேன். நான் போய் சேர்ந்துட்டா இவன் ஒன்னைப் பார்த்துக்க மாட்டான்னு பயந்துதானே, கல்யாணம் பண்ணி வைடான்னு ஒத்தக் காலுல நிக்கறேன். கடைசி வரைக்கும் என் கூடவே நீ இருக்கனும்னுதான் வீட்டோட மாப்பிள்ளைப் பார்க்க சொல்லுறேன் அமுதா!” என மனத்தாங்கலோடு பேசினார் வைதேகி.

பாட்டியின் பேச்சைக் கேட்டிருந்த இவளுக்குத் தலையே சுற்றியது. உருட்டு என இப்பொழுதெல்லாம் சொல்கிறார்களே, உண்மையைப் போலவே பேசுவது, அது போல இவரும் தன்னிடம் உருட்டிப் பார்க்கிறாரா எனக் கூடத் தோன்றியது பெண்ணுக்கு. இவர்கள் தனக்கு செய்ததை விட தன் அம்மாவும், அம்மாவின் குடும்பமும் இவர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்கள் எனக் கேட்டதில் இருந்து மனதுக்குள் வெறுப்பு மண்டியிருந்தது.   

வாழ்க்கையில் சந்திக்கும் பலரை நம்மால் புரிந்துக் கொள்ளவே முடியாது. வெளியே சிரித்துப் பேசும் அவர்களின் மனதினில் நிஜமாய் என்ன இருக்கின்றது என்பது படைத்தக் கடவுளுக்கு மட்டுமே நிச்சயம். அடுத்தவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வது என்பது குண்டூசியை வைத்து மலையைக் குடைவது போல முடியாத காரியம். அது ஈருடல் ஓருயிராய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கணவன் அல்லது மனைவி என்றாலும் சரிதான்.

பாட்டியை நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு,

‘சொல்லுங்க! நீங்க நல்லவரா கெட்டவரா?’ எனும் நாயகன் பட வசனம்தான் மனதில் ஓடியது. யாரடித்தாரோ யாரடித்தாரோ என பாடல் ஓடாதது மட்டும்தான் பாக்கி.

சற்று முன் தான் அழுத போது சமாதானப்படுத்தியவள், இப்பொழுது கல்லாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து என்ன நினைத்தாரோ,

“நான் கொஞ்ச நாளைக்கு ரகு கூட சிங்கப்பூருக்கு போய் இருந்துட்டு வரேன்! நீ எங்கயும் போக வேணா! இங்க இருந்தே நல்லா யோசி! பாட்டி உன்னை எப்படிலாம் பார்த்தேன்னு உனக்குப் புரியும். என் கிட்ட இருக்கறப்போ கிடைக்கற பாதுகாப்பு, வயசுப் புள்ள நீ வெளியப் போனா கிடைக்காது! யோசிச்சு நடந்துக்கடி அமுதா! இப்போதைக்கு வேலை விஷயமாத்தான் நீ வெளியூர் கிளம்பி இருக்கன்னு ரகுகிட்ட சமாளிக்கறேன். அவனுக்கு இது எதுவும் தெரிய வேணா! புரியுதா?” என்றவர், கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அமைதியாகவே எதுவும் சொல்லாமல் எழுந்துக் கொண்டாள் மொழி. மனதில் மட்டும் ஒரு வைராக்கியம். குற்ற உணர்ச்சியாலும் நன்றி உணர்ச்சியாலும் தனது அம்மா இவர்களுக்கு அடிமையாக இருந்திருக்கலாம். இதில் எந்த தப்புமே செய்யாத தான் எதற்கு அடிமையாக இருக்க வேண்டும் என மனம் கேள்விக் கேட்டது.

“சிங்கப்பூருக்குப் போய்ட்டு வாங்க பாட்டி! நான் இங்கத்தான் இருப்பேன்! எங்கம்மா வாழ்ந்த இந்த வீட்டுலத்தான் இருப்பேன். மாசம் இவ்வளவுன்னு என் செலவுக்கு பணம் குடுத்துடறேன். இனிமே இந்த வீட்டுல நான் வெறும் பேயிங் கெஸ்ட்தான்” என்றவள் விடுவிடுவென வெளியேறிவிட்டாள்.

அவள் குணத்துக்கு இவ்வளவு பேசியதே பெரிய விஷயம். அதைப் பேசிய போது கூட உடலெல்லாம் நடுங்கிப் போய் விட்டது அமுதமொழிக்கு.

இவ்வளவு பேசி விட்டாளே இந்த ஊமைச்சி என வைதேகி பாட்டிக்கு பேரதிர்ச்சிதான். வீட்டை விட்டுப் போக மாட்டேன் என்றதே திருப்தியாகி விட, மகனோடு சிங்கப்பூருக்கு கிளம்பி இருந்தார் அவர். அங்கே புவனாவை ஒரு கேள்விக்குறியாக்குவாரோ (படத்தலைப்பு—யூத் ரீடருக்கு இந்த படம்லாம் தெரியாதுல..அதான் விளக்கம்) இல்லை உணர்ச்சிக்குறி(!)யாக்குவாரோ, அது அவருக்குத்தான் வெளிச்சம்.

அதையெல்லாம் நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தவளுக்கு, போன் மேசேஜ் சத்தம் கேட்டது. எடுத்துப் பார்த்தாள் இவள்.

“எனக்கு குடுக்கறேன்னு சொன்ன சாபம் எங்க?” என அருணிடம் இருந்து வந்திருந்தது அது.

நடு இரவில் சாபம் கேட்கும் அருணை நினைத்து புன்னகைப் பூத்தது இவள் உதடுகள்.

“வைரமாலை லொட்டு லொசுக்குன்னு தொல்லைப் பண்ணாத ஒருத்தி உங்களுக்குப் பொண்டாட்டியா வந்து, அமைதியால உங்களை அர்ச்சனைப் பண்ணி, பதிபக்தியோட உங்க மேல பால் வார்த்து, கப்சிப்னு உங்கள களவாடி, காதலால தினம் தினம் சாகடிக்கப் போறா. இதுதான் நான் உங்களுக்கு குடுக்கற சாபம்”

அனுப்புநர் புன்சிரிப்புமொழியாகிட, பெறுநர் புன்னகைகிரியாகினான்.

 

(நீளுமா….)

 

(வணக்கம் டியர்ஸ்…பாட்டி உங்கள எல்லாம் நல்லா வச்சி செஞ்சாங்களா? என்னையும் வச்சி செஞ்சிட்டாங்க! எழுதி முடிச்ச எனக்கே பாட்டி நல்லப் பாட்டியா, கெட்டப் பாட்டியான்னு டவுட்டு. இப்படி இருக்கு ஆனா இல்லைனு ஒரு கேரெக்டர கதைல கொண்டு வரனும்னு ரொம்ப ஆசை. ஒரு பக்கம் பார்த்தா நல்லவங்க மாதிரியும் இருக்கனும், இன்னொரு பக்கம் பார்த்தா கெட்டவங்க மாதிரியும் இருக்கனும். அதை இந்தக் கதையில நிறைவேத்திக்கிட்டேன். பார்க்கப் போனா நம்ம எல்லார்குள்ளயும் ஒரு நல்லவன் ஒரு கெட்டவன் இருக்கறது நெஜம்தானே? சாகப் போற வயசுல பாட்டிக்கு ஏன் பாயசத்தப் போடனும்னு, கிளப்பி விட்டாச்சு சிங்கப்பூருக்கு! ஹஹஹ. ஓகே டியர்ஸ். படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..நேத்து எபிக்கு லைக் காமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. கதைய கொண்டு வந்து க்ருஷியலான இடத்துல நிறுத்திட்டு பேஷன் ஷோ காட்டுன உனக்கு எவ்வளவு தில்லுன்னு கலாய்ச்ச தோழிக்கு நன்றி..ஹஹஹ! அடுத்த எபில சந்திக்கலாம் டியர்ஸ். அடுத்த ஆப்பு வர வரைக்கும் கதை ஜாலியா போகும். லவ் யூ ஆல்)