En Ayul Neelumadi–EPI 12

273046404_1018660852054582_3314744799217173998_n-8175975a

அத்தியாயம் 12

 

சென்னையின் மிக பிரசித்திப் பெற்ற அந்த திருமண மண்டபம் தேவலோகம் போல அழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. வண்ண விளக்குகள் கண் சிமிட்டி மனதை நிறைக்க, மெல்லிய இசை வருகை புரிந்திருந்தவர்களின் காதை சுகமாய் வருடிப் போனது. மேடையில் நின்றிருந்த மாப்பிள்ளையையும், மணப்பெண்ணையும் தனது காமிராவால் களவாடி, என்றென்றும் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும் நிழலுருவங்களாய் சேமித்துக் கொண்டிருந்தான் அருணகிரி.

ப்ரீ வெடிங் ஷூட்டுக்குக்காக ஊட்டி வரைக்கும் போயிருந்த ஜோடி, அவர்களது திருமண வரவேற்பிற்கும், திருமணத்துக்கும் கூட அருணையே புகைப்படம் எடுக்க நியமித்திருந்தார்கள். வீடியோவை இவனது உதவியாளன் எடுக்க, புகைப்படங்களை பல சிரமங்களுக்கிடையில் எடுத்துக் கொண்டிருந்தான் அருண். திருமண நிகழ்வைப் புகைப்படமாக்க அவ்வளவு செலவு செய்பவர்கள், படம் நன்றாக வருவதற்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் படுத்தி எடுப்பது இவனுக்கு எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

“செல்பி எடுத்துக்கறதுக்கு, எதுக்குடா நமக்கு இவ்வளவு பணத்தைக் கொட்டிக் கொடுக்கறானுங்க? பொண்ணு, மாப்பிள்ளை மூஞ்சுக்கு பதிலு அவங்க ப்ரேண்ட்ஸ் கையும் போனும்தான் கேமராவுல விழுந்து தொலைக்குது. இனிமே யார் வந்து கேட்டாலும் இந்த லைவ் வெட்டிங் ஷூட்டுக்கு மட்டும் ஒத்துக்கவேக் கூடாது! கடுப்பைக் கிளப்பறாங்க மை லார்ட்!” என எரிச்சலுடன் தன் உதவியாளனிடம் முணுமுணுத்தான் அருணகிரி.

வந்ததில் இருந்து செய்வது போல இவனது இன்னொரு உதவியாளன்,

“ம்மா கொஞ்சம் கேமராவை மறைக்காம நில்லுங்கம்மா! சார் நீங்க கொஞ்சம் லெப்டுக்கு வாங்க!” என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.

பிரிண்ட் அவுட்டுக்கு முடித்துக் கொடுக்க வேண்டிய போட்டோ எடிட்டிங் வேலை குவிந்துக் கிடக்க, முதல் நாள் இரவு நான்கு மணி நேரம்தான் தூங்கி இருந்தான் அருணகிரி. காலையில் ஸ்டூடியோவில் ஒரு ஷூட் முடித்து விட்டு, மதிய நேரமே கிளம்பி மண்டபத்துக்கு வந்து வரவேற்பிற்குப் படம் பிடிக்க வேண்டிய ஆயத்தப் பணியை ஆரம்பித்து இருந்தார்கள் அருணும் அவனது உதவியாளர்களும். மைத்தியோடும், மொழியோடும் சாப்பிட்டிருந்த மதிய உணவு எப்பொழுதோ கரைந்துப் போயிருக்க பசித்து வேறு தொலைத்தது இவனுக்கு. கை லேசாய் நடுங்க ஆரம்பிக்கவும் காமிராவை உதவியாளனிடம் கொடுத்து விட்டு,

“டேக்கிங் அ ப்ரேக்! கொஞ்ச நேரம் பார்த்துக்கோ” என சொல்லி மேடையில் இருந்து இறங்கி விட்டான்.

இவன் இறங்கி வாசலை நோக்கி நடக்க, வலது புறத்தில் இருந்து வந்த இன்னொரு உருவம் இவன் பின்னோடு வந்தது. கையைப் பின்னோக்கி நீட்டி அவ்வுருவத்தின் கரத்தைப் பற்றிக் கொண்டவன்,

“நீங்க எங்க, இங்க மொழி மேடம்?” எனக் கேட்டான்.

“திரும்பி பார்க்காமலே நான்தான்னு எப்படித் தெரியும் சார்?” என ஆச்சரியமாக் கேட்டாள் இவள்.

“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேன்னு சொல்வாங்க! அதை அப்படியே மாத்தி மொழி வருவாள் பின்னே, அவள் வாசம் வரும் முன்னேன்னு சொல்லிடலாம். எந்த கூட்டத்திலும் உன்னோட வாசத்தைக் கரேக்டா கண்டுப்பிடிச்சிடுவேன் நான்” எனப் புன்னகைத்தான் அருணகிரி.

அவன் பதிலில் முகம் மலர்ந்தவள்,

“ஸ்டூடியோ வந்தப்போ என்னையும்தான் ரிஷப்சனுக்கு இன்வைட் பண்ணாங்க ரெண்டு பேரும்! அதான் வந்தேன்” என்றாள்.

“நீ என்னா அவங்களுக்கு மாமியா, மச்சியா? அது சும்மா லுல்லுலாய்க்கு கூப்பிட்டதுமா! அத நெஜம்னு நம்பி நீயும் ஃபுல் கட்டு கட்டலாம்னு கிளம்பி வந்துருக்க!’ எனக் கலாய்த்தான் மொழியை.

“லுல்லுலாய்க்கு கூப்டாங்களோ, லொல்லுலாய்க்கு கூப்டாங்களோ! எனக்கு வீட்டுல தனியா உட்கார்ந்திருக்க கடுப்பா இருந்தது. நீங்க இங்க இருப்பீங்களேன்னு வந்தேன்!”

இருவரும் பேசியபடியே மண்டபத்துக்கு வெளியே வந்திருந்தார்கள்.   

“ஓஹோ! அதாவது கல்யாண ஜோடிய பார்க்க வரல! இந்த கல்யாணமாகாத கேடியப் பார்க்க வந்திருக்க!!!”

“எங்க பாஸ்ஸ கேடினுலாம் சொல்லாதீங்க!”

“பார்டா! அவ்ளோ பாசமா உங்க பாஸ் மேல”

“அப்படிலாம் பாசம், பாயாசம்லாம் இங்க நெறைஞ்சு வழியல! அவர் வெறும் கேடி இல்ல, கேடியோ கேடி, கேடிக்கெல்லாம் கேடின்னு வேணா சொல்லுங்க!”

மெலிதாய் அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தவன்,

“சின்னப்புள்ள மாதிரி சின்சான்லாம் பார்க்காதேன்னு சொன்னா கேக்கறியா! கேக்கறியா!” என்றான்.

கைகள் இரண்டையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தவன் இவளைத் திரும்பிப் பார்த்து,

“பசிக்குது மொழி! எப்போதும் சாப்பிட்டு தெம்பா வருவேன். இன்னிக்கு அதுக்குக் கூட எனக்கு நேரம் வாய்க்கல!” எனப் பாவமாகச் சொன்னான்.

“பசிக்குதுன்னா ஏன் வெளிய வந்தீங்க? உள்ள பந்தி ஆரம்பிச்சிட்டாங்க! வாங்க சாப்பிடப் போகலாம்” என அவரப்படுத்தினாள் அமுதமொழி.

“லேங்குவேஜ் மேடம்! வெட்டிங் போட்டோகிராபர்னா சில பல ரூல்ஸ் இருக்கு! அதுல மிக முக்கியமானது, நிகழ்ச்சி முடிஞ்சு பொண்ணு மாப்பிள்ளை கிளம்பிப் போகிற வரைக்கும் அவனுக்கு வயிறுன்னு ஒன்னு இருக்குன்றதயே மறந்திடனும். அவனுக்கும் களைச்சுப் போகும், தண்ணி தாகம் எடுக்கும், பசிக்கும்ங்கறத எல்லாம் முக்கால்வாசி பொண்ணு வீட்டுக்காரங்களும் சரி, பையன் வீட்டுக்காரங்களும் சரி ஏத்துக்கவே மாட்டாங்க. நான்லாம் கொஞ்சம் வெல் டெவெலெப்ட்! சோ கொஞ்சம் இப்படி அப்படி டிமிக்கி குடுக்க முடியும். வளந்து வர போட்டோகிராபர் படற பாடுலாம் இருக்கே, அப்பப்பா ரொம்ப பரிதாபம்டா சாமி!”

“சரி, இப்போ இங்க எங்க போறீங்க?”

“கார்ல பிஸ்கட் பாக்கேட் இருக்கும். வா போய் சாப்பிடலாம்” என இவளையும் அழைத்தான்.

“எனக்கு உள்ள கல்யாண சாப்பாடே கிடைக்கும். அந்தக் காஞ்சிப் போன பிஸ்கட்ட நீங்களே சாப்பிடுங்க!” என்றவள் இவன் கூப்பிட கூப்பிட மண்டபத்தின் உள்ளே விரைந்து விட்டாள்.

“அப்பாவிமொழின்னு நெனைச்சா, அடிப்பாவிமொழியா இருக்காளே! பிரியாணியப் பார்த்ததும், ப்ரண்ட கழட்டி விட்டுட்டு ஓடிட்டா! ராட்சசி!” என முனகியபடியே காரை நோக்கிப் போனான் இவன்.

காரில் அமர்ந்து மினரல் வாட்டரை எடுத்துப் பருகியவன், அவனது பேவரேட் மில்க் பிக்கிஸ் பேக்கேட்டை பல்லால் கடித்துத் திறந்தான். இரண்டு பிஸ்கட்டை உள்ளே தள்ளி விட்டு மூன்றாவதை எடுக்கும் நேரம், கார் கண்ணாடி தட்டப்பட்டது. வெளியே அமுதமொழியைப் பார்த்ததும் கார் கண்ணாடியைக் கீழே இறக்கியவன்,

“என்ன பாப்பா, இந்தப் பக்கம்? பிரியாணி காலியாகிடுச்சா? அச்சோ பாவம்! நான் வேணும்னா காக்கா கடி கடிச்சு இந்த பிஸ்கட்ட குடுக்கவா?” என கிண்டலாகக் கேட்டான்.

அவளது கைப்பையைத் திறந்து உள்ளே டிஷூ பேப்பரில் மடித்து வைத்திருந்ததை வெளியே எடுத்தவள், அதிலிருந்து ஒரு சமோசாவை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.

அதை மென்றபடியே,

“அடிப்பாவி! சமோசாவா லவட்டிட்டு வந்துட்டியா? இன்னும் அந்த அட்சய டிஷூ பேப்பர்குள்ள வேற என்ன ஒழிச்சு வச்சிருக்க?” எனக் கேட்டான்.

சுற்றி வந்து காரின் மறுபக்கம் ஏறிக் கொண்டவள் இன்னொரு சமோசாவை எடுத்து இவன் கையில் வைத்தாள்.

“பஃபே முறையில பந்தி நடக்குது. சமோசாவே வகை வகையா வச்சிருக்காங்க. இன்னும் விதவிதமான ஐட்டம்ஸ் இருக்கு. பேக் சின்னது, சோ நாலு சமோசாதான் எடுக்க முடிஞ்சது.”

“சமோசாவுக்கு தொட்டுக்க ஒன்னும் இல்லையா மொழி?”

அவனை நன்றாக திரும்பிப் பார்த்து முறைத்தாள் மொழி.

“சரி, சரி! முறைக்காதே தாயே! பச்சைப் புள்ளய ப்ரண்டா வச்சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே!”

“பாவம்னு சாப்பிட எடுத்துட்டு வந்தா, என்னையே பச்சைப் புள்ளன்னு சொல்வீங்களா?” எனத் தன் அழகான கண்களை உருட்டினாள் அமுதமொழி.

“நீ க்ரீன் பேபிதான்! தொட்டுக்க ஒன்னும் இல்லையான்னு ஒரு ஆம்பளப் பையன் கேட்டா ஒரு பொண்ணு என்ன சொல்லனும்னு கூட தெரியல!”

“என்ன சொல்லனும்?”

“அதான் பக்கத்துல பளபளன்னு பைங்கிளி நான் இருக்கேனே! என்னைத் தொட்டுக்குங்கன்னு சொல்லனும்!”

முகம் சட்டென சிவந்துப் போக, வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள் மொழி. பக்கவாட்டில் தெரிந்த அவளது சிவந்த முகத்தையே சற்று நேரம் வெறித்திருந்தான் கிரி. காரின் ஏசி குளிரையும் மீறி அவ்விடமே வெப்பமாகிப் போனதைப் போலாக, சட்டென தன்னை மீட்டுக் கொண்டான் அருண். மெல்ல கை நீட்டி மொழியின் கரத்தைப் பற்றி உள்ளங்கையில் ஒரு சமோசாவை வைத்தவன்,

“நீயும் சாப்பிடு மொழி!” என மிக மென்மையாக சொன்னான்.

“இல்லல்ல! பரவாயில்ல!” எனத் திக்கினாள் இவள்.

“சாப்பிடு மொழி! எங்க மூனு பேருக்கும் இன்னிக்கு காபி, டீன்னு நீதான் வெய்ட்டர் வேலைப் பார்க்கப் போற! அதுக்கு தெம்பு வேணும்ல! சாப்பிடு!” என்றவனை முறைக்க முயன்று சிரித்து வைத்தாள் இவள்.

இருவரும் சாப்பிட்டு முடித்து, காரை பூட்டிக் கொண்டு மண்டபத்துக்கு நடக்க ஆரம்பித்தனர்.

“மொழி! இந்த ஆலிவ் கிரீன் சாரில நீ ரொம்ப அழகா இருக்க!”

சட்டென நின்றவள், அவன் முன்னே ஒரு முறை சுழன்று காட்டி,

“நல்லாருக்குல்ல சார்! பர்ஸ்ட் டைம் இந்த டைப் சாரி வாங்கிருக்கேன். இதோட பேரே பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு! உடனே ஆர்டர் போட்டுட்டேன்”

“அப்படி என்ன பேர் அது?”

“மங்களகிரி சாரி!” என அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்து சொன்னவள், விறுவிறுவென நடந்துப் போய் ஓர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

அப்படியே அசந்துப் போய் நின்றவனை,

“ண்ணா, வாங்க! ரொம்ப பெரிய க்ரவுட். எல்லாரையும் சேர்த்து போட்டோ எடுக்கனுமாம். நீங்க எடுங்க!” எனும் உதவியாளனின் அழைப்புதான் நடப்புக்குக் கொண்டு வந்தது.

அமுதமொழியைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே மேடைக்குப் போனான் இவன். அவளோ பார்வையை நிமிர்த்தவேயில்லை.

அதற்கு மேல் அருணை வேலை வாரி சுருட்டிக் கொண்டது. இவன் சொன்னது போல ஜூஸ், காபி, என இவர்கள் மூவருக்கும் கொண்டு வந்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அமுதமொழி. ஒரு வழியாக மணமக்கள் சாப்பிடும் நேரம் வர, மிச்ச சொச்ச வேலைகளை உதவியாளர்களிடம் கொடுத்து விட்டு கிளம்பி விட்டான் அருணகிரி. ஏற்கனவே மொழியை இவன் காத்திருக்க சொல்லியிருக்க, அவளும் கிரியின் வரவுக்காக ஒர் ஓரமாய் அமர்ந்திருந்தாள்.

“இங்க சாப்பிடப் போறியா?” என இவன் கேட்க, வேண்டாமென தலையசைத்தவள்,

“வெளிய போய் சாப்பிட்டுக்கலாம் சார்” என்றாள்.

“போகலாம்! கார்ல பொருட்களையெல்லாம் வச்சி எடுத்துட்டு வரனும்னு கீய அசிஸ்டண்ட் கிட்ட குடுத்துட்டேன்! வில் யூ கிவ் மீ அ ரைட் மொழி?”

“இம்மாம் பெரிய உருவத்த என் ஸ்கூட்டி தாங்குமா?”

“உன் ஸ்கூட்டியும் தாங்கும்! நீயும் தாங்கிப்ப!” என முணுமுணுத்தவன்,

“அதெல்லாம் தாங்கும்! அப்படி தாங்கலன்னா அந்த டப்பா ஸ்கூட்டிய தூக்கிப் போட்டுட்டு உனக்கு நான் புல்லட் வண்டி வாங்கித் தரேன்! அதுல ஏறிக்குனு நாம ரெண்டு பேரும்,

“நீ புல்லட்டு பண்டிக்கு வச்சதெப்பா

டுக்கு டுக்கு டுக்கு டுக்கு டுக்கு”னு தெலுங்குல பாடிக்கிட்டே ஒரு ரைட் போவோம்! சரியா?” என்றான்.

“நைட்டுல இப்படி பாடி பயங்காட்டாதீங்க சார்! ஏத்திக்கிறேன்! ஆனா நான் தான் ஓட்டுவேன்!”

“ஓகே டன்! இதுதான் சமத்துவம்! ஐ லைக் இட்!” என்றவன் ஒய்யாரமாய் அவள் ஸ்கூட்டி பின்னால் அமர்ந்துக் கொண்டான்.

“போலாம் ரைட்!” என ஆரம்பித்தவன், காற்றைக் கிழிக்கும் குரலில் பாடியபடியே பயணித்தான்.

“ட்ரீயோனா ட்ரியோ ட்ரீயோ ட்ரீங்குனா

மெட்ராஸ சுத்திப் பார்க்கப் போறேன்” என ஆரம்பித்து,

“இது சென்னைடா சென்னைடா சென்னை சென்னை

ஐம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டர்” என தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

இவள் படக்கென பிரேக் அடிக்க, அவள் முதுகில் மோதி தோளைப் பற்றிக் கொண்டவன்,

“ஐயோ கொலை, கொலை! நட்ட நடு ராத்திரியில, கலையான முகம் கொண்ட காளைய காருக்கடியில தள்ளி மர்கயா சாலா பண்ண பார்க்கறா இந்த மர்டர்மொழி” எனக் கத்தினான் மஞ்சமாக்கான்கிரி.

“கத்திக்கிட்டே வர இந்த வாய வெட்டி காக்காய்க்குதான் போடனும்! எவ்ளோ நேரமா எங்க சாப்பிடலாம்னு கேட்டுட்டே வரேன். பதில் சொல்லாம பாடிட்டே வரீங்க!”

“ஓ, கேட்டியா? நீயும் என்னமோ மொல்லமா பாடிட்டு வரியோன்னு நெனைச்சேன்” என்றவன்,

“நீ சொல்லு! என்ன வேணும் சாப்பிட?” எனக் கேட்டான்.

“எதாவது ஒரு ரோட்டுக் கடையில சாப்பிடலாமா? அங்கலாம் நான் சாப்பிட்டதே இல்ல. அம்மா இருந்த வரைக்கும், வெள்ளி கோயிலுக்கு போயிட்டு சரவணபவன் கூப்டு போவாங்க! நானா வெளிய தெருவ போக ஆரம்பிச்சப்போ கூட, ரோட்டுக் கடைகளில எல்லாம் நெறையா ஆம்பளைங்க இருப்பாங்களா, போய் சாப்பிட கூச்சமா இருக்கும். இன்னிக்குப் போலாமா?” என கண்களில் ஆசை மின்னப் பேசியவளை வாஞ்சையுடன் பார்த்தான் இவன்.

“என் பர்சுக்கு எங்க பெருசா வேட்டு வச்சிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்! நல்ல வேளை சிம்பிளா கேட்டுட்ட! நானும் அப்பாவும் மைத்திய டபாய்ச்சுட்டு அடிக்கடி போய் சாப்பிடற ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்!” என்றவன் அவளுக்கு வழி சொல்லிக் கொண்டே வந்தான்.

சென்னை பாரிஸ் கார்னர் பின்புறம் இருந்தது அந்த கையேந்தி பவன். அந்த நேரத்தில் கூட ஜன நெரிசலாகதான் இருந்தது அவ்விடம். அவள் அருகே குனிந்து, மீசை முடி அவள் காதை உரச மெல்லிய குரலில்,

“இங்க காக்கா பிரியாணி செம்மையா இருக்கும்! ஓன் ப்ளேட் சொல்லவா?” எனக் கேட்டான்.

அவனது மீசை தீண்டிய குறுகுறுப்பில் மயங்கி நின்றவள், காக்கா பிரியாணியில் தரை இறங்கினாள். அவனை விட்டுத் தள்ளி நின்றுக் கொண்டவள், அவனது கையை வலிக்கக் கிள்ளினாள்.

“ம்மா!!!!!!!” என இவன் கத்த, மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, பட்டென அவன் வாயைத் தன் கைக் கொண்டு பொத்தினாள் அமுதமொழி.

“ஐயோ ஆடம் டீசிங்! இதெல்லாம் கேக்க இந்த நாட்டுல ஆள் இல்லையா?” என ஆரம்பித்தவனை,

“ப்ளீஸ் கிரி! எல்லாம் நம்மளையே பார்க்கறாங்க!” எனும் அவளது கெஞ்சல் மொழி குறும்புத்தனத்தைக் கை விட வைத்தது.

“சரி, சரி! இனி சாப்பிட மட்டும் வாயைத் திறக்கறேன்! நீ நெளியாதே!” என்றவன்,

“ண்ணா! லெக் பீஸ் வச்சு ரெண்டு பிரியாணி” என ஆர்டர் சொன்னான்.

“ஒரு லெக் பீஸ்தான் இருக்கு தம்பி. இன்னிக்கு நல்ல வேயாபாரம்” என்றார் கடைக்காரர்.

“சரிண்ணா! குடுங்க!” என வாங்கிக் கொண்டான்.

தட்டில் ஒரு லெக் பீஸ் இருக்க, மீதமிருந்த குஸ்காவை அள்ளிப் போட்டிருந்தார் கடைக்காரர். அவன் தட்டைப் பிடித்துக் கொள்ள, இவள் அள்ளி சாப்பிட்டாள். பின் அவள் பிடித்துக் கொள்ள, இவன் அள்ளி சாப்பிட்டான். இருவரும் குஸ்காவை மட்டும் சாப்பிட்டார்களே தவிர அந்த லெக் பீஸ் அப்படியே இருந்தது.

“நீ சாப்பிடு!” என அவன் சொல்ல,

“நீங்க சாப்பிடுங்க!” என இவள் சொன்னாள்.

“சரி, காக்கா கடி கடிச்சிப்போம்!” என இவன் ஒரு பக்கம் கடித்து விட்டு அவளிடம் தர, கொஞ்சம் தயங்கியவள், பின் அவன் கண்களைப் பார்த்தப்படியே அதை வாங்கிக் அவன் கடித்த இடத்திலேயே கடித்து சாப்பிட்டாள்.

அன்றைய நாளில் இரண்டாவது முறையாக அசந்து போய் நின்றான் அருணகிரி.

அன்றெல்லாம் இவள் செயலால் அசந்துப் போய் நின்றவன், மறுநாள் அமுதமொழிக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தான்.

 

காதலை சொல்ல சாக்லேட்தான் வேண்டும் என எந்த மடையன் சொன்னது? இனி புது விதி செய்வோம்! காதலை காலால் சொல்வோம்! கோழியின் காலால் சொல்வோம்!!!!!!!!!!!

சைவ பேர்வழிகள் மனம் தளர வேண்டாம். காதலை சொல்ல கோழிதான் வேண்டும் என்பது இல்லை. ப்ரோக்கோலியும் காதல் சொல்லும்!!!!! ஜெய் ப்ரோக்கோலி!!!!!!

 

(நீளுமா….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். இனி அடுத்த எபில சந்திக்கலாம். லவ் யூ ஆல்.)