En Ayul Neelumadi–EPI 14

273046404_1018660852054582_3314744799217173998_n-eab953f4

அத்தியாயம் 14

 

‘பாலும் கசந்ததடி— சகியே

படுக்கை நொந்ததடி

கோலக்கிளி மொழியும்—செவியில்

குத்தல் எடுத்ததடி’ என பாரதி இயற்றியதை

‘பெப்சியும் கசந்ததடா—கிரியே

பெட்(bed)டும் நொந்ததடா

ராஜாவின் ராகமும்—செவியில்

ரணகளமாய் குடையுதடா’’ என நவீனப்படுத்திப் பாடிக் கொண்டு திரிந்தாள் அமுதமொழி.

சாப்பிடப் பிடிக்கவில்லை, தூங்கப் பிடிக்கவில்லை, அனுதினமும் தவறாமல் செய்யும் முக பராமரிப்புக் கூட செய்யப் பிடிக்கவில்லை. என்னவோ உடலை சோர்வாய் அழுத்தியது.

தனது கைப்பேசியை எடுத்து அவள் வைத்திருந்த வாட்ஸாப் ஸ்டேட்டசை அருண் கவனித்திருக்கிறானா என நூறாவது முறையாகப் பார்த்தாள். இல்லை, பார்த்திருக்கவில்லை. மைத்தியில் இருந்து, சைந்து வரை அதைப் பார்த்திருந்தார்கள். ஏன் நமது கில்லாடி பாட்டி கூட அவளது ஸ்டேட்டசைப் பார்த்திருந்தார். ஆனால் எவன் பார்க்க வேண்டும் என ஆசை ஆசையாக வைத்திருந்தாளோ அவன் பார்த்திருக்கவில்லை

“என் நெஞ்சில் ஒரு பூ பூத்தததன்

பேர் என்னவென கேட்டேன்” என ஸ்டேட்டஸ் பாடல் ஒலிக்க, கண்களில் குளம் கட்டிக் கொண்டது இவளுக்கு.

அமுதமொழியின் நெஞ்சு முழுக்க காதல் நிரம்பி வழிந்தது அருணகிரியின் மீது. அவனைப் பிடித்தது, அவனது அன்பு பிடித்தது, அக்கறைப் பிடித்தது, கேலி பிடித்தது, கோபம் பிடித்தது, கிண்டல் பிடித்தது, குசும்பு பிடித்தது, கட்டைக் குரலில் பாடுவது பிடித்தது, மொத்தமாய் சித்தம் கலங்கிப் போகும் அளவுக்கு அருணைப் பிடித்துத் தொலைத்தது.

ஆனால் வாயைத் திறந்து சொல்ல இவளால் முடியவே முடியவில்லை. வெக்கமும் தயக்கமும் ஒரு பக்கம் அணைப் போட்டதென்றால் தனது தகுதியும் தராதரமும் இன்னொரு பக்கம் வாயை மூடி நிற்க வைத்தது. தகப்பன் பெயர் அறியாதவளை தோழியாய் ஏற்றுக் கொள்ளும் மனம், தாலி கொடுக்கத் துணியுமா? அன்பாய் அரவணைத்துக் கொள்ளும் மைத்தி, இவளது ஆசையை அசிங்கமாகப் பேசி விடுவாரோ எனப் பல போராட்டம் இவளுள்ளே!

பல சமயங்களில் அருணின் கண்களிலும் அதிகப்படி ஆர்வத்தைப் பார்த்திருக்கிறாள் மொழி. ஆரம்பத்தில் கண்ணை மட்டுமே பார்த்துப் பேசியவனின் பார்வை, கன்னம், மூக்கு, உதடு எனத் தடுமாறுவதும், தயக்கமே இல்லாது கைப் பிடித்துத் தோள் தொட்டு சகஜமாக பழகியவனின் தொடுதலில் இப்பொழுதெல்லாம் சிறு நடுக்கம் விரவியிருப்பதும், சாப்பிட்டாயா எனக் கேட்டது போய் இதை சாப்பிடு உடலுக்கு நல்லது என அக்கறை கூடி இருப்பதும் காதலின் அறிகுறி எனப் புரிந்தது. ஆனாலும் இதெல்லாம் இவளின் அதீத கற்பனையாக இருக்கக் கூடுமோ எனப் பயமாகவும் இருந்தது. உறுதியாய் ஒரு வார்த்தை ‘உன் மேல் காதலடி எனக்கு’ என சொல்லி விட மாட்டானா என இதயம் ஏங்கித் தவித்தது.

அப்படி இப்படி என தன் உள்ளத்தை செயலால் உரைக்க முயன்றாள் அழகுமொழி. ஆனாலும் அதெல்லாம் விழலுக்கு இரைத்த நீராய்தான் போனது. அசந்து நின்றானே தவிர அடுத்த அடியை எடுத்து வைக்கவில்லை அசமந்தகிரி(இந்தப் பெயர் கொடுத்த வாசகிக்கு(crvs) நன்றி).

அருணைப்ப் பார்க்கும் போதெல்லாம் சட்டையைப் பிடித்து உலுக்கி,

“சொல்லு, சொல்லு! ஐ லவ் யூன்னு சொல்லு!” என கத்த வேண்டும் போல இருக்கும் அமுதமொழிக்கு.

வாயைத் திறந்தால் காற்று மட்டும் வரும் பெண்ணுக்கு, கத்திக் காதல் சொல்லுமளவுக்கு கெத்து வர இன்னும் எத்தனை யுகமாகுமோ!

ஏதேதோ நினைவுகளில் இருந்தவளுக்கு சிங்கப்பூரில் இருந்து அழைப்பு வந்தது.

‘மறுபடியும் என்ன!’ என ஆயாசமாய் வர, அழைப்பை ஏற்றாள் இவள்.

“ஹலோ”

“டீ அமுதா!! என்னால இவக் கூட மல்லுக் கட்ட முடியலடி! மாமியாருன்னு ஒரு பயம் இல்லாம, மாமி யாரு அப்படிங்கற மாதிரி நடந்துக்கறா உங்க சித்தி!” என மூக்கை உறிஞ்சினார் வைதேகி.

பின்னாலிருந்து,

“டாட்டர் இன் லாகிட்டவே லா பாயிண்ட் பேசுனா மாமி யாருன்னு கேக்காமா, மாமி மோருன்னு கொண்டு வந்து நீட்டுவாங்களா?” எனக் கத்தினார் புவனா.

“பாரு, பாரு! கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ராட்சசி மாதிரி கத்துறா!”

“யாரு ராட்சசி? இல்ல யாரு ராசட்சசிங்கறேன்? காலையில எழுந்ததுல இருந்து நைட்டுப் படுக்கப் போகிற வரைக்கும் ‘புவனா காபி, புவனா டீ, புவனா டிபன், புவனா லன்ச்சு, புவனா ஸ்நாக்ஸ்’சுன்னு என்னைக் கொஞ்சம் கூட உட்கார விடாம உசுரப் போட்டு எடுக்கற நீங்கதான் ராட்சசி! அந்தக் கடவுளு வயித்தக் குடுத்துருக்கானா, இல்ல அரைக்கற மிசின குடுத்துருக்கானா தெரில!” என புவனாவின் குரல் இப்பொழுது பக்கத்தில் கேட்டது.

‘ஸ்பீக்கர்ல போட்டுட்டாங்க போல’ என நினைத்துக் கொண்டவளுக்கு, முன்பெல்லாம் மாமி, மருமவளே என இருவரும் கொஞ்சிக் கொண்ட காட்சிகள் கண் முன்னே விரிந்தன. எவ்வளவு அடக்கப் பார்த்தும் சிரிப்புப் பொத்துக் கொள்ள, இருமி இருமி அதை அடக்கினாள். தள்ளி இருந்தால்தான் உறவும் இனிக்கும் போல!

“பசிச்ச வயித்துக்கு சாப்பாடு போட்டுட்டு அதைச் சொல்லிக் காமிக்கறியே, நல்லா இருப்பியா நீ!” என வைதேகி எகிற,

“அதான் எமனோட எருமைய ஏரோப்ளேன்ல ஏத்திட்டு வந்திருக்கோமே, இனி எங்க ஏகபோகமா இருக்குறது!” எனக் குமுறினார் புவனா.

“யாரப் பார்த்துடி எருமைன்னு சொன்ன?”

“மன்னிச்சிருங்க மாமி!”

“அந்தப் பயம் இருக்கட்டும்! யார்கிட்ட!”

“எருமைன்னு உங்கள சொன்னா உழைச்சுக் களைச்சுப் போற எருமைக்கு கோபம் வந்திடப் போகுது! இனிமே அப்படி சொல்லல”   

“பாரு அமுதா உன் சித்திக்கு இருக்கற திமிர!”

“பாரு அமுதா உன் பாட்டிக்கு இருக்கற தெனாவெட்ட!”

கதவு திறக்கப்படும் சத்தமும்,

“வாயா ரகு!” எனும் பாட்டியின் குரலும்,

“வாங்க டியர்” எனும் புவனாவின் குரலும் இவளுக்குக் கேட்டது.

“என்ன சத்தம்? கதவு தொறக்கறப்பவே ரெண்டு பேர் குரலும் காரசாரமா கேக்குது!” என அவர் கேட்க,

“சத்தம்லாம் ஒன்னும் இல்லீங்க! மாமிக்கு மாலை பலகாரம் என்ன வேணும்னு கேட்டுட்டு இருந்தேன்” என்றார் புவனா.

“ஆமாடா! வெங்காய பஜ்ஜிக்கு ரெடி பண்ணு! நான் வந்து சுட்டுத் தரேன்னு நானும் சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்றார் வைதேகி.

‘பொய்யி, பொய்யி!’ என மனதில் நினைத்தவளுக்கு இந்த ஜாடிக்கேத்த மூடி மாமியார் மருமகளை நினைத்துப் புன்னகை வந்தது. மகனுக்கு மனைவி மேல் எவ்வளவு காதல் எனத் தெரிந்த வைதேகி சண்டையெல்லாம் மகனுக்குத் தெரியாமல்தான் வைத்துக் கொள்வார். கணவனுக்கு அம்மா மேல் எவ்வளவு பாசம் எனத் தெரிந்த புவனா பிணக்கையெல்லாம் கணவன் கண் மறைந்ததும்தான் வைத்துக் கொள்வார்.

அவர் இல்லாத போது, மாற்றி மாற்றி இருவரும் இவளுக்குப் போன் செய்து இவளை ரெஃப்ரீயாக்கி சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒரு தடவை, அப்படி போன் வந்த பொழுது இவளது முக வாட்டத்தைப் பார்த்து அழைப்பை லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டான் அருணகிரி. மாமியாரும் மருமகளும் சண்டைப் போட, இவன் இங்கே அவர்கள் இருவர் போல மாறி மாறி நின்று வாயைத் திறக்காமல் கை காலை ஆட்டி, முகத்தைக் கோணி, டப்ஸ்மாஷ் செய்து இவளை ஒரு வழி செய்துவிட்டான். அவர்கள் அழைப்பில் இருக்கும் போது சிரிக்கவும் முடியாமல், அழைப்பை நிறுத்தவும் முடியாமல் திண்டாடித் திணறிப் போனாள் அமுதமொழி.

அவர்கள் அழைப்பைத் துண்டித்ததும்,

“மொழி! நம்ம வாழ்க்கையில இரவு-பகல், இன்பம்-துன்பம், ஆண்-பெண், இறப்பு-பிறப்புன்னு எல்லாம் கலந்துதான் இருக்கும். மனுஷங்க கிட்ட மட்டும் எல்லாமே நல்லதாதான் இருக்கும்னு எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? அவங்க கிட்டயும் நல்லது கெட்டதுன்னு ரெண்டு குணமும் இருக்கும். உனக்கு இவங்கள பிடிக்கலையா, இவங்க நெகட்டிவ் என்ர்ஜி தேவை இல்லைன்னு நெனைக்கறயா ஒரேடியா உறவு வேணான்னு வெட்டி விடு. அத விட்டுட்டு வளத்த பாசம் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்குன்னு கிட்ட சேர்த்துக்கறதும் பின்னே அவங்க புத்தியக் காட்டறப்போ சோர்ந்து போகறதும் நல்லாவா இருக்கு!” என்றான்.

அவள் முகம் வாடிப் போக,

“சரி, சரி! ஒட்டிக்கவும் வேணா வெட்டிக்கவும் வேணா! ஒட்டியும் ஒட்டாம நம்ம சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி

‘பட்டும் படாமலே

தொட்டும் தொடாமலே

தாமரை இலைத் தண்ணீர் போல் நீ

ஒட்டி ஒட்டாமல் இரு’

சாயா சாயா சாயா வாங்கிக் குடு சாயா!” என அவளை வம்பிழுத்து சிரிக்க வைத்து, அவள் செலவில் சாயாவும் வாங்கிக் குடித்திருந்தான்.

இவ்வளவு நேரம் இவர்களின் அலப்பறையில் மறந்திருந்த அருணகிரியின் நினைவுகள் மீண்டும் வந்து அலைக்கழித்தது மொழியை. அவர்களோ ரகுவரன் வந்ததும் இவள் ஒருத்தி இங்கே லைனில் இருக்கிறாளே என்பதையே மறந்து அழைப்பைத் துண்டித்திருந்தனர்.

பெருமூச்சுடன் போனில் மீண்டும் ஸ்டேட்டசை பார்க்க, மைத்தியிடம் இருந்து மேசேஜ் வந்திருந்தது.

“ஷோப்பிங் போலாமா? உங்க சார் இல்லாம செம்ம போர்”

வேலை இல்லாத சனிக்கிழமையை மோட்டுவளையைப் பார்த்தப்படி கழிப்பதற்கு பதில் வருங்கால மாமியாருடன் கழிப்பது எவ்வளவோ மேல் என முடிவெடுத்தவள், ஓகே என பதிலளித்து விட்டுக் கிளம்ப ஆரம்பித்தாள்.

‘வருங்கால மாமியாரா??? ரொம்ப ஆசைடி உனக்கு! கிரி கிட்ட இருந்து கிரின் சிக்னல் வர வரைக்கும் அவங்க உனக்கு வெறும் ஆண்ட்டி தான்! பீ கேர்பூல்!’ என மனசாட்சி கிழித்துத் தொங்க விட,

“வரும்! வரும்! கிரின் சிக்னல் சீக்கிரமா வரும்” எனக் கத்தி சொன்னவள், வீட்டுக் கதவையும் கிரிலையும் மூடி விட்டுக் கிளம்பி விட்டாள்.

அருணகிரி, ‘ல தொமாத்தினா’ எனும் தக்காளி சண்டை திருவிழாவைப் புகைப்படம் எடுக்க ஸ்பெயின் நாட்டில் உள்ள வலேன்சியா எனும் ஊருக்கு சென்றிருந்தான். இந்தத் தக்காளி திருவிழா ஆரம்பித்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். 1940ல் தக்காளி லாரி ஒன்று கவிழ, அதில் இருந்த தக்காளியை எடுத்து ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்து விளையாடியதாக, சின்னப் பையன்கள் இடையே விளையாட்டாய் ஆரம்பித்த சண்டை தக்காளி சண்டையாய் மாறிப் போனதாக, உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் மேல் உள்ள ஆத்திரத்தில் மக்கள் தக்காளியை விட்டு எறிந்து கலவரமாக்கியதாக, இன்னும் பல காரணங்கள் அடுக்கப்படுகின்றன. என்னவோ இந்த விளையாட்டுப் பிடித்துப் போக ஒவ்வொரு வருட ஆகஸ்டின் கடைசி புதனன்று இந்த நிகழ்ச்சி கோலாகலமாய் நடக்கிறது. இப்படி வித்தியாசமான நிகழ்வுகளைப் புகைப்படம் எடுப்பது அருணுக்கு மிகப் பிடித்த விஷயம். அதற்காகவே பல மாதங்களுக்கு முன்னமே இந்நிகழ்வுக்கு நுழைவுச் சீட்டு வாங்கி இருந்தான். இதில் கலந்துக் கொண்டு இன்னும் சில நாட்களுக்கு ஸ்பெயின் நாட்டை சுற்றி வருவதாகச் சொல்லிக் கிளம்பி இருந்தான். ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுலா என்பதால், அந்த சமயத்துக்கு எந்த அப்பாயிண்மெண்டும் வைத்துக் கொள்ளவில்லை அவன்.

அவன் கிளம்பிப் போய் மூன்று நாட்கள் ஆகி இருந்தன. எப்பொழுதும் போல குட் மார்னிங் மற்றும் குட் நைட் மட்டும் கடமைக்கு அனுப்பப்பட்டது போல மேசேஜாய் வந்தது இவளுக்கு. மற்றப்படி வேறு எந்த தகவலும் இல்லை. இவள் எதாவது மேசேஜில் கேட்டாலும் பதில் வரவில்லை.

‘கிளிக் பண்ண ஆரம்பிச்சிட்டா, நாம கிளுகிளுப்பா போய் நின்னா கூட அசைய மாட்டார் போலிருக்கே!’ என நினைத்துக் கொண்டவளுக்கு குபீரென சிரிப்பு வந்தது.

“அமைதிமொழியா இருந்த என்னை அசைவமொழியா மாத்திட்டாரே இந்த கிரி” என முணுமுணுத்தப்படியே ஸ்கூட்டியைப் பார்க் செய்து விட்டு பீனிக்ஸ் மால் உள்ளே நுழைந்தாள் இவள். மைத்தி சொல்லி இருந்த காபி ஷாப் உள்ளே இவள் நுழைய, அமர்ந்த இடத்தில் இருந்து கையாட்டினார் மைத்தி. புன்னகையுடன் அவர் முன்னே அமர்ந்தாள் இவள்.

“ஒரு கப் காபி குடிச்சிட்டு, நல்லா கால் வலிக்க சுத்திட்டு, அப்புறம் டின்னர் சாப்பிடலாம்! உனக்கு ஓகேவா மொழிம்மா?”

“ஓகே ஆண்ட்டி!”

காபியோடு கேக்கும் ஆர்டர் கொடுத்தவர், வளவளவென பேசிக் கொண்டே இருந்தார்.

“கொஞ்ச நாளா கூடவே இருக்கானா, மீ மீன்னு திரும்பற திசையெல்லாம் சத்தம் கேட்டுட்டே இருக்கும். இப்போ வீடே வெறிச்சோடிக் கிடக்கு! திரும்பி வந்ததும் கண்டிச்சு சொல்லப் போறேன், சீக்கிரம் கல்யாணம் பண்ணுடான்னு. மருமக, பேரப் புள்ளைங்கன்னு இருந்தா இவன் எங்க கிளம்பனாலும் எனக்கு போரடிக்காது பாரு!”

மனம் படபடவென அடிக்க, காபியை மெல்ல உறிஞ்சியபடியே மனதில் உள்ளதை தயக்கத்துடன் கேட்க ஆரம்பித்தாள் இவள்.

“ஆண்ட்டி! உங்களுக்கு…வந்து..எப்படிப்பட்ட மருமக வேணும்?”

சற்று நேரம் அவள் முகத்தை உற்று நோக்கியவர்,

“நானா கட்டிட்டு வாழப் போறேன்! அருணுக்குப் யாரப் பிடிச்சாலும் ஆட்டோமட்டிக்கா எனக்கும் பிடிக்கும்” என்றார்.

அதற்கு மேல் இவள் ஒன்றும் கேட்காமல் காபியில் கவனம் வைக்க,

“ஒரு தடவை எந்த மாதிரி பொண்ணு வேணும்னு ரொம்ப ரசிச்சு சொன்னான் அருண்!” என்றார் மைத்தி.

“எந்த மாதிரி பொண்ணு வேணுமாம்?” எனச் சட்டென கேட்டு விட்டவள், பின் தலையைக் குனிந்துக் கொண்டாள்.

அவள் அவசரத்தைக் கண்டுக் கொள்ளாமல், ப்ளூபேரி சீஸ் கேக்கை வாயில் வைத்து, கண் மூடி அதன் ருசியை உணர்ந்து, சில நிமிடங்கள் கழித்தே விழுங்கினார் மைத்தி. அந்த சில நிமிடங்கள் இவளுக்கு பல யுகங்களாக நீண்டன.

“என்ன கேட்ட? ஓ, உங்க சாருக்கு என்ன மாதிரி வைப் வேணும்னு கேட்டியா? ஐயாவுக்கு கலகலன்னு இருக்கற, கெக்கேபெக்கேன்னு சிரிக்கற, டமால் டுமில்னு சண்டை போடற, தடதடன்னு ஓடற, துருதுருன்னு திரியற, தொண தொணன்னு பேசற மாதிரி ஒரு அவரேஜ் லுக்கிங் பொண்ணு வேணுமாம்“ எனப் பெரிய குண்டாகத் தூக்கி இவள் நெஞ்சில் போட்டார்.

‘கலகல—இல்லை, கெக்கேபெக்கே—அவுட், டமால் டுமில்—சான்ஸ் இல்ல, தடதட—இல்லவே இல்லை, துருதுரு—நாட் மீ, தொண தொண—ஹ்க்கும், அவரேஜ் லுக்கிங்—இதுவும் இல்ல! ச்சே, ஒன்னுல கூட என் பாஸ்க்கு(boss) ஏத்த மாதிரி நான் பாஸாகலியே!(pass)’ என நினைத்தவளுக்கு மனம் சோர்ந்துப் போனது.

அதற்கு மேல் எதையும் யோசிக்க முடியாத வண்ணம், இவளை அங்கேயும் இங்கேயும் அலைய வைத்து, அதையும் இதையும் சாப்பிட வைத்து ஒரு வழியாக்கிதான் வீட்டுக்கு அனுப்பினார் மைத்ரேயி.

அதன் பிறகான நாட்கள், மிக மிக மெல்லவே கடந்துப் போனது அமுதமொழிக்கு. அன்று வீட்டுக்கு மூன்று பேர் த்ரேடிங் செய்ய வந்திருந்தார்கள். அவர்களை கவனித்து அனுப்பி விட்டுக் குளிக்கப் போனாள் இவள். குளித்து வருவதற்குள் மூன்று முறை விடாமல் போன் அடித்து ஓய்ந்தது. வேக வேகமாக வந்து போனை எடுத்துப் பார்த்தால், அருண் அழைத்திருந்தான். இவள் அவனுக்கு அழைக்க முனைய, அவனே மறுபடி அழைத்தான்.

அழைப்பை ஏற்று ஹலோ என்பதற்குள்,

“கதவ திற மொழி” என்றவன் அழைப்பை நிறுத்தி விட்டான்.

அரக்கப் பரக்க ஒரு சுடிதரை எடுத்து அணிந்துக் கொண்டவள், ஓடிப் போய் கதவைத் திறந்தாள். அங்கே லக்கேஜ் பேக்குடன் நின்றிருந்தான் அருணகிரி.

ஈரம் சொட்டும் தலை முடி, சுகந்தமான சோப் மணம், அங்கங்கே லேசாய் நனைந்து உடலோடு ஒட்டி இருந்த சுடிதார், அவனைப் பார்த்த சந்தோசத்தில் மின்னிய கண்கள், துடித்த ஈர உதடுகள் என பேரழகியாய் நின்றிருந்தாள் அமுதமொழி.

கஸ்டப்பட்டு தன் பார்வையை அவள் முகத்தில் இருந்துப் பிரித்தெடுத்த அருண் குரலை செறுமி,

“நாளைக்கு ஈவ்னிங் மெரிடியன் ஹொட்டல் காபி ஷாப்கு வந்திடு மொழி. முக்கியமான விஷயம் பேசனும்! அத சொல்லத்தான் ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்குப் போகிற வழியில இப்படி ஒரு எட்டு வந்தேன்” என்றான்.

“உள்ள வாங்க சார்! எதாச்சும் சாப்பிடலாம்” என்றவளுக்கு அவன் முகத்தில் இருந்துப் பார்வையை விலக்கவே முடியவில்லை.

அவ்வளவு மிஸ் செய்திருந்தாள் அவனை. தலையை இடம் வலம் ஆட்டியவன்,

“டேம்ன் டயர்ட் மொழி! உன்னைப் பார்க்கனும்னு… ஐ மீன் உன் கிட்ட நாளைக்கான சந்திப்பைப் பத்தி சொல்லத்தான் வந்தேன். சொல்லிட்டேன், இப்போ கிளம்பறேன். பாய்” என இரண்டடி நடந்தவன் திரும்பிப் பார்த்து,

“நல்லா அழகா உடுத்திட்டு வா! யார் பார்த்தாலும் அப்படியே மயங்கிடற மாதிரி இருக்கனும்! சரியா?” எனக் கேட்டான்.

சரியென தலையை ஆட்டியவளுக்கு முகமெல்லாம் புன்னகை.

“சீ யூ டூமோரோ லேங்குவேஜ்” என்றவன் அதன் பின் திரும்பிப் பாராமல் விடுவிடுவென நடந்துவிட்டான்.

மறுநாள் மெரிடியன் ஹோட்டலில், இவள் அழகைப் பார்த்து மயங்கி கிறங்கி நின்றவனைக் கண்டு நெஞ்சடைத்தது அமுதமொழிக்கு.

 

(நீளுமா…)

(வணக்கம் டியர்ஸ்..போன எபிக்கு லைக், கமேன்ட் போட்ட அனைவருக்கும் மிக பெரிய நன்றி. இந்த கதைல ஏன் இன்னும் லவ்வ சொல்லிக்கல ரெண்டு பேரும்னு நெறைய பேர் கேக்கறீங்க. இது படக்குன்னு லவ்வ சொல்லி, சட்டுன்னு கல்யாணம் பண்ணி செட்டிலாகற கதை இல்ல. இனி என்ன நடக்கும், எப்படி போகும் கதைன்னு ஒன்னா பயணிச்சு தெரிஞ்சுக்கலாம் டியர். அமுதமொழி கேரெக்டர் எப்படி, அவளோட பிறப்ப அறிஞ்சதுல இருந்து அவ மனநிலை எப்படின்னு சொல்லிட்டேன். அவ திடீர்னு பக்கம் பக்கமா வசனம் பேசி, ப்ரேவா நடந்துகிட்டா கதைல பெரிய லாஜிக் ஓட்டையே விழுந்துடும். இவ கேரெக்டர் எனக்கு ரொம்பவே சவால். என்னோட நாயகிலாம் ரொம்ப வாயாடிங்க! ஆனா இவ ரொம்ப சாது! பழகிப் பார்த்தா தான் அவ கூட்டுல இருந்து வெளி வருவா! இப்படிலாம் ஆள் இருக்காங்கலான்னு கேக்கறீங்களா? நானே அப்படிதான். ரொம்ப அமைதியா தெரிவேன். என் கிட்ட வராதீங்கன்னு உடல்மொழிலாம் இருக்கும். மேசேஜ்ல பேசற மாதிரி நேருல யாராச்சும் வந்து நிஷான்னு நின்னீங்கன்னா, கண்டிப்பா என்னால பேச முடியாது. அப்படியே நாக்கு பாய் போட்டுப் படுத்துக்கும். அதையும் தாண்டி நெருங்கிட்டா ரொம்ப ஜாலியா பழகுவேன். என்னை மாதிரி, மொழி மாதிரி பலர் இருப்பீங்கன்னு நினைக்கறேன். அடுத்த எபில சந்திக்கற வரைக்கும் லவ் யூ ஆல்! டேக் கேர்)