En Ayul Neelumadi–EPI 15

273046404_1018660852054582_3314744799217173998_n-7b9d72ed

அத்தியாயம் 15

 

‘வலியென்றால் காதலின் வலிதான்

வலிகளில் பெரிது

அது வாழ்வினும் கொடிது’ எனும் பாடல் வரியைக் கேட்கும் போதெல்லாம் அமுதமொழிக்கு சிரிப்பு சிரிப்பாய் வரும்.

‘மழைநேரத்துல பல் வலி வந்தா எப்படி இருக்கும்னோ, குளிர் காலத்துல கால் குடைச்சல் எடுத்தா எவ்ளோ ரணமா இருக்கும்னோ இந்த வைரமுத்துவுக்குத் தெரியாது போல என நினைத்து புன்னகைத்துக் கொள்வாள்.

இப்பொழுதோ அந்த வலி நன்றாகப் புரிந்தது பெண்ணுக்கு. கால் வலி, பல் வலிக்குக் கூட மருந்துப் போட்டால் சிறிது நேரம் வலி மறத்து விடுவது உண்டு. ஆனால் இந்தக் காதல் கர்மம் தரும் வலிக்கு, எந்த மருந்தும் வலி நிவாரணியாகாது என்பது அனுபவிக்கும் போதுதானே புரிகிறது.

“அமுதமொழி! அமுதமொழி” எனும் குரலில் நடப்புக்கு வந்தவள், நிமிர்ந்து தன் உன்னே அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.

நிர்மல்!!! நிர்மல் குமார்!

அன்று லக்மே ஃபேஷன் நிகழ்வில் அவள் அருகில் அமர்ந்திருந்தவன். அவளிடம் உரையாட முயன்று, இவள் கொடுத்த ஒற்றைப் பதிலில் சுருண்டுக் கொள்ளாமல், விடாமுயற்சியாய் மீண்டும் மீண்டும் வார்த்தையாடி, அவள் கிளம்ப எத்தனிக்கையில் வீட்டில் விடவா என கேட்டு, அவள் வேண்டாமென்றதை மதித்து அத்துடன் சந்திப்பை முடித்துக் கொண்டவன். அன்றைய சந்திப்பை முடித்துக் கொண்டானே தவிர, இவளைப் பற்றி சிந்திப்பதை முடித்துக் கொள்ளவில்லை.

“முன்னாடி நான் உட்கார்ந்துருக்கேன்றதே மறந்துப் போகிற அளவுக்கு மெனுல அப்படி என்ன இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு?” என புன்சிரிப்புடன் கேட்டான்.

“இல்ல..இப்படிலாம் பெரிய..ஹ்ம்ம்..ஹோட்டலுக்கு வந்தது இல்ல!” எனத் தடுமாறியவளை ஆச்சரியமாகப் பார்த்தான் நிர்மல்.

கொஞ்சம் கூட பந்தா காட்டாமல், உள்ளதை உள்ளபடி சொன்னவளை இன்னும் பிடித்தது.

“ஸ்வீட் இன்னசெண்ட் பியூட்டி” என முணுமுணுத்தான்.

“என்ன நிர்மல் சார்?”

“நம்மளோட ஃபர்ஸ்ட் அஃபிசியல் டேட்டிங்” என அவன் சொல்ல, இவள் முகம் கலவரமானது.

“மீட்டிங்னு சொல்ல வந்து டங்க் ஸ்லிப் ஆகிருச்சு அமுதமொழி. மீட்டிங்ல எதாச்சும் ஸ்வீட்டா சாப்பிடலாமேன்னு சொல்ல வந்தேன்.” என்றவன் அவளிடம் கேட்டே மொக்காச்சினோ பானமும்(கபுச்சினோ+மோக்கா), சாக்லேட் பேண்டசி எனும் சூடான ப்ரவுனியில் வென்னிலா ஐஸ்கிரீம் வைத்துத் தரப்படும் டிசர்ட்டும் ஆர்டர் செய்தான்.

“எனக்கு சுத்தி வளைச்சிப் பேச வராது அமுதமொழி! என்னோட கெரியர்ல எத்தனையோ பெண்களோட பேசிருக்கேன், பழகிருக்கேன். அப்போலாம் எந்த தடுமாற்றமும் எனக்குள்ள வந்தது இல்ல. உங்கள முதல் முறை பார்த்தப்போ, அந்த இருட்டான ஹால்ல, மேடையில இருந்து வர ஸ்பாட்லைட் வெளிச்சத்துல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு தோணுச்சு. பேசிப் பார்க்கலாம்னு பார்த்தா, ரெண்டு வார்த்தைப் பேசவே அவ்ளோ தடுமாற்றம் உங்க கிட்ட. இத்தனைக்கும் உங்க பார்வை என் முகத்த ஓன் செகண்ட் பார்த்ததோட சரி! அதுக்குப் பிறகு நிமிர்ந்துக் கூட என்னைப் பார்க்கல! ஐ வாஸ் லைக்…என்னடா அவ்ளோ படுபயங்கரமாவா இருக்கோம்னு ரொம்ப ஃபீல் ஆச்சு! நான் நடந்துப் போனா ரெண்டு தடவையாவது பொண்ணுங்க திரும்பித் திரும்பிப் பார்த்துட்டுப் போவாங்க! நீங்க என்னன்னா என்னை நிமிர்ந்துக் கூட பார்க்காம என் ஈகோவ அடிச்சுத் துவைச்சிட்டீங்க! அதுக்குப் பிறகு என்னமோ உங்கள மறக்கவே முடியல! அப்புறம் என்னோட ப்ரேண்ட் வெடிங்ல உங்களப் பார்த்தேன்! யூ பீவிச்ட் மீ! பில்லி சூனியம் வச்சிட்டீங்க எனக்கு! அந்த போட்டோகிராபி கும்பலுக்கு டீ காபின்னு குடுத்துட்டு இருந்தீங்க! அன்றைக்கு என்னை சுத்தி ஒரே டிஸ்டபர்ன்ஸ்! அதான் உங்க கிட்ட வந்து பேச முடியல. ஓன் ஃபைன் டே, ஏஜி ஸ்டூடியோவுக்கு உங்களப் பத்தி விசாரிக்கப் போனேன்! ஐ மேட் அருண் தேர்! வெரி நைஸ் காய்! பேஷன் ஷோல ஆரம்பிச்சு, இப்போ இங்க வந்து நிக்கிது என்னோட தேடல்! ஓகே, வளவளன்னு இழுக்காம பட்டுன்னு சொல்லிடறேன் அமுதமொழி! ஐ லைக் யூ!”

தூக்கக் கலக்கத்தில் அருண் சொல்லிய ஐ லைக் யூ ஞாபகம் வர, தலையைக் குனிந்துக் கொண்டவள், கைகளைப் போட்டுப் பிசைந்தாள்.

“ஐ லவ் யூ சொல்லிட ஆசைதான்! சடனா ஒருத்தன் ஐ லவ் யூன்னு சொன்னா ஷாக்காகி ரிஜேக்ட் பண்ணீட்டீங்கனா! என்னால அதை ஏத்துக்கவே முடியாது! அதான் முதல்ல ஐ லைக் யூ! கொஞ்சமா பழகிப் பார்த்துட்டு, என்னை நீங்க புரிஞ்சி, உங்கள நான் அறிஞ்சிக்கிட்டதும் ஐ லவ் யூக்கு போயிடலாம்! சரியா அமுதமொழி?”

‘இல்லை, முடியாது, நோ’ என மனமும் மூளையும் பெருங் கூச்சல் போட்டது! அருண் சொல்லிய வார்த்தைகளுக்கு மரியாதைக் கொடுத்து அமைதியாக அமர்ந்திருந்தாள் அமுதமொழி.

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே என்னென்னவோ கற்பனைகள் சிறகை விரிக்க, மெல்லிய குரலில் பாடியபடியே வேலையைக் கவனித்தாள் இவள். நேரம் என்னவோ மெல்ல ஊர்ந்துப் போவது போல இருக்க, எப்பொழுதடா மாலையாகும் என தவியாய் தவித்தாள் மொழி. மணி மூன்றடித்ததும் குளியல் அறைக்கு சென்றவள், தனக்காக வாங்கி வைத்திருக்கும் பெரிய வட்ட வாளியை எடுத்து நடுவில் வைத்தாள். அதில் வெதுவெதுப்பான நீரை நிரப்பியவள் ‘பாத் பாம்ப்’ என சொல்லப்படும் வட்ட வடிவ அரோமாதெரப்பி பந்தைத் தூக்கி அந்த நீருக்குள் போட்டாள். அது நீரில் வட்டமடித்து வண்ணமயமாக்கி கரைந்துப் போனது. மெல்ல அந்த வாளியுள் இறங்கியவள் பாத் டப் போல அதில் அமிழ்ந்துப் போனாள். பாத் பாம்பில் இருந்த அரோமாதெரப்பி எண்ணெயும், அதன் வழவழப்பும், வாசமும் உடலை ரிலேக்ஸ்ஸாக்க, புன்னகையுடன் அதில் அமர்ந்திருந்தாள். வீட்டில் பாத் டப் இல்லாததால், இவள் கண்டுப்பிடித்த சிக்கன பாத் டப் இது!

“ஒரு தடவை சொல்வாயே

உன்னை எனக்குப் பிடிக்கும் என்று” எனப் பாடியபடியே நீரில் அரை மணி நேரம் அமிழ்ந்துக் கிடந்தாள். உடல் வழவழப்பாக, மினுமினுப்பாக மாறி இருக்க, எண்ணெய் பசை போக லேசாய் உடம்பைக் கழுவிக் கொண்டு தனது நீராடலை நிறைவு செய்தாள் அமுதமொழி. (வசதி இல்லைனாலும் வாழ்றாயா!!!!!)

தனது அலமாரியைத் தட்டிக் கொட்டித் தூர் வாரி, ஒரு அழகான காண்ட்ராஸ்ட் மஜெந்தா வர்ண டாப்ஸும், மஞ்சள் நிற லெகிங்கும் எடுத்து அணிந்துக் கொண்டாள். தலையை வாரி கட்டாமல் அழகாக விரித்து விட்டு, உதடு மட்டும் பளிச்சென தெரியுமாறு முக ஒப்பனையை முடித்தவள், ஸ்கூட்டில்யில் போனால் வியர்த்து எல்லாம் கலைந்து விடுமென ஓலா புக் செய்தாள்.

கண்டிப்பாக தன்னிடம் காதலை சொல்லி விடுவான் அருண் என எண்ணிக் கொண்டவளுக்கு மனதெல்லாம் மத்தாப்புதான்.

“மெரிடியன்ல எக்ஸ்பென்சிவா சொன்னாதான் காதலா? மெரினா பீச்ல பட்ஜெட்டோட சொன்னாலும் காதல்தான் கிரி! எனக்கு வேண்டியது எல்லாம் ‘தெ கியீரோ!’ன்ற ரெண்டே வார்த்தைதான்! அதை எங்க சொன்னா என்ன!” என்று சொல்லிக் கொண்டவளுக்கு சிரிப்பாய் வந்தது.

‘கிரி ஸ்பெயின் நாட்டுக்குப் போய்ட்டு வந்ததால ஐ லவ் யூவயும் ஸ்பேனிஷ்ல சொல்லுவாருன்னு நெனைக்கறது எல்லாம் ஓவரோ ஓவர் மொழி’ என தன்னையேத் திட்டிக் கொண்டவள், சந்தோசமாக கிளம்பினாள் ஹோட்டலுக்கு.

அங்கே லாபியிலேயே இவளுக்காக காத்திருந்தான் அருணகிரி. இவளைப் பார்த்ததும் கண்களை சிமிட்ட மறந்தவன், சட்டென தன்னை மீட்டுக் கொண்டான்.

“வா மொழி! வா, வா! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு!”

முகம் மலர புன்னகைத்தவள்,

“சொல்லுங்க கிரி” என எதிர்ப்பார்ப்போடு இவன் முகத்தை நோக்கினாள்.

அப்பொழுது அவர்கள் அருகே வந்து நின்ற இன்னொரு மனிதனைச் சுட்டிக் காட்டி,

“மொழி! இவர தெரியுதா உனக்கு?” எனக் கேட்டான்.

அருணின் பக்கத்தில் நின்றிருந்தவனை திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் குழப்பம்.

“எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு” என இவள் சொல்ல,

“நான் சொல்லல அருண்! கண்டிப்பா மேடத்துக்கு என்னை ஞாபகம் இருக்காதுன்னு! பாரேன் முழிக்கறத!” எனச் சிரிப்புடன் சொன்னான் நிர்மல்.

அவனோடு சேர்ந்து சிரித்த அருண்,

“எங்க மொழி ரொம்ப ஷை டைப்! மரியாதை நிமித்தம் ரெண்டு நிமிஷம் முகத்தப் பார்ப்பாங்க! அப்புறம் கை, தோள், பக்கத்துல உள்ள பொருள்னு தான் பார்த்துப் பேசுவாங்க!” என லாபியில் இருந்த பெரிய பூச்செடியைப் பார்த்தபடி நின்றிருந்தவளை வம்பிழுத்தான்.

பார்வையைத் திருப்பி மறுபடி இவர்கள் இருவரின் மேல் பதித்தவள்,

“வணக்கம் சார்!” என கைக் குவித்தாள்.

பதில் வணக்கம் சொன்ன நிர்மல்,

“ஏன் அருண், இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, வட்டில் சுமந்து மருங்கு அசையனு ஒரு கவிஞன் பாடினாராம்! அவர் நம்ம அமுதமொழிய நினைச்சுதான் பாடியிருப்பாரோ!” என்றான்.

“இது என்ன கவிதை? நான் இப்போதான் கேள்விப்படறேன்” என்றான் அருணகிரி.

“அம்பிகாபதி பாடனது அது!” என்றாள் அமுதமொழி.

“பாருங்களேன் நிர்மல், நீங்க பாடல் சொல்ல, நம்ம மொழி பாடனவரு பேர சொல்லன்னு, எவ்ளோ பொருத்தம் உங்க ரெண்டு பேருக்கும்” என்றான் அருண்.

சட்டென அருணை நிமிர்ந்துப் பார்த்தவளின் கண்கள் கலங்கிப் போய் விட்டது!

“என்னாச்சுங்க அமுதமொழி!” என பதறினான் நிர்மல்.

“ஒன்னும் இல்ல! இவங்களுக்கு ஏசி காத்துப் பட்டா சட்டுன்னு கண்ணு கலங்கிடும்! நீங்க போய் ரிசர்வ் பண்ண டேபிளில உட்காருங்க நிர்மல்! நான் மொழி கிட்ட ரெண்டு வார்த்தைப் பேசிட்டு அனுப்பிடறேன்!”

அவன் திரும்பிப் பார்த்தப்படியே போக,

“அம்பிகாபதிக்கு உணவு பரிமாற அமராவதி உணவு பாத்திரத்தோட வர, அந்த உணவு கலயத்தோட பாரத்தால நடந்து வர மென்மையான அவள் பாதம் தரையில் பட்டு நொந்துடுமோ! மேலும் நடந்தால் கொப்புளுச்சி கிப்புளுச்சி போயிடுமோன்னு வருந்தி இந்தப் பாட்ட பாடினானாம் அந்த அம்பிகாபதி! அமராவதி மாதிரி மிக மென்மையானவள் நீன்னு, கைக்கூப்பி வணக்கம் சொன்னதுலயே கண்டுப்பிடிச்சிட்டான் பார்த்தியா இந்த அம்பிகாபதி! நிர்மலுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்காம், கல்யாணம் செஞ்சிக்கற அளவுக்குப் பிடிச்சிருக்காம். உன்னைப் பத்தி விசாரிக்க வந்தப்போ, என் கிட்ட நேரிடையாவே சொன்னான். அவன் கிளம்பி போனதும், நானே களத்துல இறங்கி அவனோட வரலாறயே அலசி ஆராஞ்சி விசாரிச்சிட்டேன். ரொம்ப தங்கமானவன். உன்னைத் தங்கத் தட்டுல வச்சிப் பார்த்துப்பான் மொழி!” என்றான் அருண்.

அவன் பேசப் பேச கண்களில் கண்ணீர் வழிந்தப்படியே இருந்தது இவளுக்கு.

“அம்பிகாபதி கடைசில செத்துப் போயிட்டான்! அவனோட சேர்ந்து அமராவதியும் செத்துட்டா! அதுதான் உங்களுக்கு வேணுமா கிரி?”

“பைத்தியம் மாதிரி உளறாதே மொழி! இதைப்பத்தி மேலும் பேச இப்போ நமக்கு டைம் இல்ல! உங்க சந்திப்பு முடிஞ்சதும், நாம ரெண்டு பேரும் பேசிக்கலாம்! இப்போ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சுக் குடு” என கையை நீட்டினான்.

அவன் கரமோ லேசாக நடுங்கியது.

“என்னன்னு முதல்ல சொல்லுங்க அப்புறம் முடியுமா முடியாதான்னு சொல்லுறேன்! தசரதன் செஞ்சு குடுத்த சத்தியத்தால ஒரு ராஜ்ஜியமே ஆடிப் போச்சு! நான் செஞ்சுக் குடுக்கற சத்தியத்தால நம்ம வாழ்க்கை பூஜ்ஜியமா ஆகிடக் கூடாது கிரி”

சற்று நேரம் அவளை ஆழ்ந்துப் பார்த்தவன், பட்டென மெல்லமாய் தலையில் கொட்டினான்.

“மைத்தி கூட சேராதென்னு சொன்னா கேக்கறியா? பாரேன் திக்கித் திணறாம நல்லா ரைமிங்கா பேச வரது இப்போலாம்” எனப் புன்னகையுடன் சொன்னான் அருணகிரி.

“உங்க கிட்ட மட்டும்தான் இப்படி பேச வரும் எனக்கு” என மூக்கை உறிந்துக் கொண்டே சொன்னாள் இவள்.

அவள் மூக்கைப் பிடித்து ஆட்டப் போனவன், கையை இழுத்துக் கொண்டான்.

“மொழி! நான் எது செஞ்சாலும் உன் நன்மைக்குத்தான்னு நம்பறியா?”

ஆமென தலையாட்டினாள் இவள்.

“உள்ள நிர்மல் என்ன சொன்னாலும் பிடிக்கலன்னு சொல்லாம யோசிச்சு சொல்லறேன்னு சொல்லனும்! ப்ராமிஸ் பண்ணு”

“முடியாது!”

“மொழி ப்ளிஸ்! எனக்காக!”

அவன் முகத்தில் தெரிந்த கெஞ்சலில், தலை தானாக சரியென ஆடியது அருண்மொழிக்கு. அவள் தலையாட்டலில் முகம் மலர்ந்தது அமுதகிரிக்கு!

அதை நினைத்துக் கொண்டவள், நிர்மல் கேட்ட கேள்விக்கு,

“நான் யோசிச்சு சொல்லவா நிர்மல் சார்?” எனக் கேட்டாள்.

அப்பாவியாகக் கேட்டவளை இன்னும், இன்னும் பிடித்தது நிர்மல் குமாருக்கு.

“சரின்னு சொல்லறதா இருந்தா, எவ்ளோ நாள் எடுத்துக் கிட்டு வேணும்னாலும் யோசிங்க அமுதமொழி! நோ சொல்ல சான்ஸ் இருக்குன்னு கொஞ்சமா டவுட் இருந்தா கூட, நீங்க யோசிக்கவே வேணா! இப்பவே யெஸ் சொல்லிடுங்க!” என்றான் இவன்.

இவள் ஆவென பார்க்க, பட்டென சிரித்து விட்டான் நிர்மல்.

“ஜஸ்ட் ஜோக்கிங்!”

அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்திருந்தது. கடமைக்காக எடுத்து வாயில் வைத்தாள் அமுதமொழி. மனதில் மகிழ்ச்சி இல்லாததால் ப்ரவ்னி கூட கசந்து வழிந்தது.

சாப்பிட்டப்படியே தன்னைப் பற்றி எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொண்டான் நிர்மல். மரியாதை நிமித்தம், ஹ்ம்ம் கொட்டினாள் இவள்.

“உங்களப் பத்தி சொல்லுங்க அமுதமொழி!”

“அம்மா இறந்துட்டாங்க! பெர்த் செர்ட்ல இருக்கறவரு என் அப்பா கிடையாது. சொந்த அப்பா யாருன்னு எனக்கே தெரியாது” என பட்டென சொல்லி விட்டாள்.

பிடிக்கவில்லை என்றுதானே சொல்லக் கூடாது! தன்னைப் பிடிக்காமல் போவதற்கான காரியம் எதையும் செய்யக் கூடாது என கிரி சொல்லைவில்லையே என நினைத்துக் கொண்டவளுக்கு, உள்ளே உற்சாகம் குமிழியிட்டது.

சற்று நேரம் பேரமைதி நிர்மலிடம். அவளையே ஆழ்ந்துப் பார்த்தவன்,

“இப்போத்தான் உன்னை இன்னும், இன்னும், இன்னும் பிடிக்குது மொழி!” என மரியாதைப் பன்மையை விட்டொழித்து நெருங்கி வருவதற்கு ஆவன செய்தான்.

‘என்னடா இது! பெரிய குண்டா தூக்கிப் போட்டா, அதை துண்டு துண்டாக்கிட்டான்’ என நொந்துப் போனாள் பெண்.

“நீ கண்ணுக்கு குளிர்ச்சியா மட்டும் இல்ல, இதயத்துக்கு இதமாவும் இருக்க மொழி! எதையும் மறைக்காம ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கறது தான் நல்ல தாம்பத்தியத்துக்கு அழகு! பொய்யில நம்ம லைப்ப ஆரம்பிக்காம, நெஜத்த சொல்லி என் நெஞ்சுல ஜம்முன்னு உக்காந்துட்ட நீ!”

‘உண்மைய சொன்னா அனக்கோண்டா மாதிரி பிஹேவ் பண்ணுவான்னு பார்த்தா, அன்ப அண்டா அண்டாவா கொட்டுறானே!’ என நினைத்தவளுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது.

“கிளம்பலாமா நிர்மல் சார்! நைட் எனக்கு ஃபேசியல் அப்பாயிண்ட்மேன்ட் இருக்கு” எனத் தயங்கி சொன்னாள்.

“ஸ்யூர்! கெளம்பிடலாம் மொழி!”

அவன் கார்ட் கொடுத்து பில் செட்டில் செய்ய, இருவரும் எழுந்து வெளியே நடந்தனர். அவர்களுக்காகவே காத்திருந்தது போல, வந்து நின்றான் அருண்.

“நீங்க கெளம்பலியா அருண்?” எனக் கேட்டான் நிர்மல்.

“வேலை விஷயமா மொழிக்கிட்ட பேசனும்! பேசிக்கிட்டே ட்ராப் பண்ணிடலாம்னுதான் வேய்ட் பண்ணேன்!” என்றான் இவன்.

“ஓ! நானே ட்ராப் பண்ணலாம்னு நெனைச்சேன்!” என ஏமாற்றமாக சொன்னான் நிர்மல்.

“இனிமே பிக்கப், ட்ராப் ஆஃப் எல்லாம் நீங்கதானே நிர்மல். இன்னிக்கு ஒரு நாள் என் தோழிய என் கிட்ட குடுத்துடுங்க”

சிரிப்புடன் அருணின் தோள் தட்டியவன்,

“பாய் மொழி!” எனச் சொல்லிக் கிளம்பி விட்டான்.

“வந்த மாதிரி, போய்க்கவும் தெரியும் எனக்கு” என்ற மொழி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பின்னால் ஓடி வந்த அருண்,

“நிர்மலுக்கு என்ன பதில் சொன்ன நீ?” எனக் கேட்டான்.

“என்னமோ சொன்னேன்!” எனக் கத்தினாள் இவள்.

கத்தல் என்றால் காதை கிழிக்கும் அளவுக்கு இல்லை அவள் சத்தம். அருகில் இருந்த அருணுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு இருந்தது அது.

“மொழி! இதென்ன சின்னப் புள்ள மாதிரி கோபம்! உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கனும்னு உனக்கு ஒரு நல்லப் பையன செட் பண்ணி விட்டது தப்பா?”

“எனக்கு செட் பண்ணி விட நீங்க யாரு?”

“நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நண்பன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? கிரின்னா என்னான்னு தெரியுமா உனக்கு? உன் கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன் உனக்காக என் உயிர குடுப்பேன். எடுத்துக்கோ எடுத்துக்கோ!!!!!” என தளபதி ரஜினி போல வசனம் பேசியவனைப் பார்த்து கோபத்தையும் மீறி சிரிப்பு வரப் பார்த்தது இவளுக்கு.

“ஐ சிரிச்சிட்ட! ஜாலி ஜாலி!” என்றவன் அவள் கைப்பற்றி காருக்கு அழைத்துப் போனான்.

உள்ளே அவள் அமர்ந்ததும், ஏசியைப் போட்டு விட்டுக் காரைக் கிளப்பினான் அருணகிரி.

“உன் நண்பன் நான்! யார் உனக்கு வாழ்க்கைத் துணையா வந்தா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும் மொழி! நிர்மல் இஸ் அ ஜெம் ஆப் அ பெர்சன். உன்னோட பேக்ரவுண்ட், உன்னோட பிறப்பு, அதெயெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாரு! அவருக்கு பேரெண்ட்ஸ் இல்ல, தனிக்காட்டு ராஜா. உனக்கு எந்த விதமான இமோஷனல் டார்ச்சரும் மத்தவங்களால வராது. இப்போ அம்மா, அப்பா, சிப்லிங்ஸ்னு இருக்கற பேமிலிக்கு போனேன்னு வையேன், இதெல்லாம் அலசி ஆராஞ்சி உன்னை காயப்படுத்துவாங்க! ஃபோர் எக்ஸாம்பிள் என்னை மாதிரி ஒரு பாரம்பரியமான வீட்டுக்கு மருமகளா நீ போகனும்னு நினைச்சா, என்னை சுத்தி உள்ளவங்க கண்டிப்பா உனக்கு என்னத் தகுதி இருக்குன்னு கேப்பாங்க! என்ன குலமோ, என்ன கோத்திரமோ, எப்படி நம்ம வீட்டுக்குள்ள விடறதுன்னு யோசிப்பாங்க! அதனாலத்தான் சொல்லறேன், நிர்மல் இஸ் தெ பெஸ்ட் சாய்ஸ் ஃபார் யூ” என்றான்.

‘எதையும் மறைக்காம ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கறது தான் நல்ல தாம்பத்தியத்துக்கு அழகு!’ என சற்று முன் நிர்மல் சொன்னது மனதில் வந்துப் போனது இவளுக்கு.

‘நீங்க சொன்னது ரொம்பத் தப்பு நிர்மல்! மனசுக்கு நெருங்கனவங்களா இருந்தாலும், நம்மள பத்தின ஒரு ரகசியத்தை சொல்லிட்டோம்னா, நேரம் வரப்போ அதை இப்படி நமக்கே எதிரா உபயோகிச்சு மனச குத்திக் கிழிச்சிடுவாங்க! ரகசியம்ன்றது நமக்குத் தெரியற வரைக்கும் மட்டும்தான் ரகசியம். ரெண்டாவது ஆளுக்குத் தெரிஞ்சிட்டா அது ஒரு ஆயுதம்!’ என நினைத்துக் கொண்டவளுக்கு அழுகை தொண்டை வரை வந்து நின்றது.

‘தகுதி தராதரம் இல்லாதவளுக்கு வந்த காதல் மனசுக்குள்ளயே செத்து சமாதியாகிப் போகட்டும்! தோழிக்கு தாலி குடுக்கப்பாங்கன்னு தவம் இருந்தது என் தப்புதான். சிரிச்சு சிரிச்சுப் பழகினத பார்த்து சிந்தைத் தடுமாறிப் போனது என் தப்புதான். அக்கறைக் காட்டனத பார்த்து ஆசைப்பட்டது என் தப்புதான். கனிவு காட்டனத பார்த்து காதல் கொண்டது என் தப்புதான். என் தப்புக்கு தண்டனையா இந்தத் தப்பான காதல தப்பித் தவறிக் கூட வெளிய காட்டிடக் கூடாது’ என முடிவெடுத்தவள், அழுகையை அடக்கிக் கொண்டாள்.

அருணகிரி இன்னும் பேசிக் கொண்டிருக்க இவள்,

“எனக்கு சம்மதம்!” என்றாள்.

“எ…என்ன?”

“எனக்கு நிர்மல் கூட பேசிப் பழகி, பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க சம்மதம்!”

கார் சற்றுத் தடுமாறி பின் நேராய் ஓட ஆரம்பித்தது.

“எடுத்து சொன்னா நீ புரிஞ்சுப்பன்னு எனக்குத் தெரியும் மொழி! ஐ அம் சோ ஹெப்பி ஃபார் யூ!” என்றவன் அதற்குப் பின் அமைதியாகவே வந்தான்.

வீட்டு வளாகத்தில் அவளை இறக்கி விட்டவன்,

“மேல போய் கதவ பூட்டனதும் ‘காட் இன் சேப்லி’னு எனக்கு மேசேஜ் போடு! பச்சைத் தண்ணில குளிக்காம சுடுதண்ணில குளிச்சிட்டுப் படு” என்றான்.

சற்று நேரம் அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவள்,

“என் மேல கேர் எடுத்துக்க ஆள் வந்தாச்சு! இனி உங்க அக்கறை தேவைப்படாதுன்னு நினைக்கறேன்” என்றவள் விடுவிடுவென நடந்தாள்.

“உன் நண்பனா என் உரிமைய நான் யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டேன் மொழி!” என இவன் கத்தியது கேட்டும் கேட்காதது போல நடையை எட்டிப் போட்டாள் மொழி.

இவன் எப்பொழுதும் போல பேசிப் பழக, இவளோ மீண்டும் தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்ள அப்படியே சில வாரங்கள் ஓடி இருந்தன.

ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு, அருணுக்கு மொழியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ மொழி!”

“கிரி, கிரி!!!!” என அவளின் அழுகை சத்தத்தில் பயந்துப் போனான் அருணகிரி.  

 

காதலில் ஏன் கண்ணாமூச்சி

தவித்து கலங்குது பட்டாம்பூச்சி

அவள் மனதிலே உனது அரசாட்சி

பாவிமகனே இல்லையா உனக்கு மனசாட்சி!!!!

 

(நீளுமா…..)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! அடுத்த எபியில் சந்திக்கும் வரை லவ் யூ ஆல் டியர்ஸ். இன்னிக்கு எபி போட்டே ஆகனும்னு டைப் பண்ணேன். பாப்பாவோட போன்ல ஏதோ ப்ராப்ளம். லெப்டோப் என் கையில குடுக்கவே மாட்றா. இப்போதான் கிடைச்சது. தூக்கக் கலக்கத்துல எழுத்துப் பிழை விட்டிருந்தா மன்னிக்கவும்.)