En Ayul Neelumadi–EPI 16

273046404_1018660852054582_3314744799217173998_n-166b085d

அத்தியாயம் 16

 

வேகமாக காரை அந்தத் தெருவின் ஓர் ஓரத்தில் நிறுத்தி, பூட்டக் கூட செய்யாமல் வேகமாக ஓடினான் அருணகிரி. போலிஸ் ஸ்டேஷன் உள்ளே அரக்கப் பறக்க நுழைந்தவன், முன்னே எதிர்ப்பட்ட ஏட்டய்யாவிடம்,

“சார், சார்! மொழி!” என மூச்சு வாங்க கேட்டான்.

“யாரு?”

சுற்றி முற்றிப் பதட்டத்துடன் பார்த்தப்படியே,

“இந்த ஸ்டேஷன்லதான் இருக்காங்கன்னு போன் பண்ணாங்க சார். அமுதமொழின்னு பேரு!” என படபடத்தான்.

“ஓ! அந்த ப்ராத்தல் கேசா?”

“சார்!!!” என குரல் எடுத்துக் கத்தினான் அருணகிரி.

“அட ஏன்ப்பா இந்தக் கத்து கத்தற? நான் என்ன செவிடா? ப்ராத்தல்னு நெனைச்சுப் புடிச்சிட்டு வந்த கேசான்னு கேக்க வந்தேன்!” என்றவர் தனது காவிப் பல்லைக் காட்டி ஈ என இளித்தார்.

அந்தப் பல்லை உடைத்துக் கையில் கொடுக்க வேண்டும் என வந்த வெறியை அடக்கியவன்,

“எங்க அவங்க?” என பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

“கிரி!” என ஓய்ந்துப் போன குரல் ஒன்று கேட்க, வலது புற மூலையைப் பார்த்தவன், முகம் கசங்க தேம்பியபடி பெஞ்சில் அமர்ந்திருந்த அமுதமொழியைக் கண்டுக் கொண்டான்.

இவன் வேகமாக அவள் பக்கம் விரைய, எழுந்து, பாய்ந்து வந்து இவனைக் கட்டிக் கொண்டாள் அமுதமொழி.

“கிரி! கிரி!’ என வாய் ஓயாமல் பாராயணம் செய்தது.

“அழாதம்மா! அழாதே! அதான் நான் வந்துட்டேன்ல! அழாதடா!” என முதுகைத் தடவி, தலையைக் கோதி சமாதானம் செய்தான் அருணகிரி.

“இந்த ஷோவ எல்லாம் ரூம் போட்டு வச்சிக்குங்க! வெளிய கொஞ்சம் டீசண்டா நடந்துக்குங்கப்பா!” எனும் சத்தம் கேட்கவும், மொழியை விலக்கி நிறுத்தி கையை இறுகப் பற்றிக் கொண்டான் அருணகிரி.

அவர்களிடம் கத்திய இன்ஸ்பெக்டர்,

“ஏன்பா! இந்தப் பொண்ணுக்கு நீ என்ன உறவு?” எனக் கேட்டார்.

“என் வைப் சார் இவங்க!”

அந்த பதிலில் மொழி அவனை இன்னும் ஒட்டி நின்றுக் கொண்டாள்.

“தாலியைக் காணோம், நெத்தியில பொட்டக் காணோம், காலுல மிஞ்சிய காணோம்! என்ன கதை விடறியா?” என நக்கலாகக் கேட்டார் அவர்.

“நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க சார்? தாலி, மிஞ்சி, பொட்டு எல்லாம் தனக்கு இஸ்டம் இருந்தா மட்டும் வச்சிக்கிற மாடர்ன் யுகத்துல இருக்கோம் நாம்! ஆணுக்கு எப்படி கல்யாண மோதிரம், மிஞ்சி எல்லாம் கழட்டி வச்சிட்டு சுத்துற சுதந்திரம் இருக்கோ அதே சுதந்திரம் பொண்ணுங்களுக்கும் இருக்கு சார்! என் வைப்புக்கு இதெல்லாம் போட்டுக்க இஸ்டமில்ல, அவள வற்புறுத்த எனக்கும் இஸ்டம் இல்ல!”(இப்ப இந்த மாதிரி இருக்கறவங்கள பத்தி உங்கள் கருத்து என்ன? நான் எப்பொழுதும் போல நடுநிலைதான். அவங்க வாழ்க்கை அவங்க இஸ்டம்னு கடந்திடுவேன். எப்படி ஒரு பெண்ணை வெள்ளை சேலைக் கட்டி மூலையில முடக்கறது தப்போ, அதே மாதிரி இவங்க சுதந்திரத்துலயும் தலையிடறது தப்புன்னு தோணும்! ஆம்பளையோ சரி, பொம்பளையோ சரி மிஞ்சி போடுங்க, போடாதீங்க! தாலி/மோதிரம் போடுங்க, போடாதீங்க! ஆனா எதிர்பாலர் கேக்கறப்போ கல்யாணம் ஆயிடுச்சுன்னு மட்டும் சொல்லிடுங்கப்பா! ஒரு தேவதாஸ்/ பொம்பள தேவதாஸ உருவாக்கிடாதீங்க!!! 😊 )

“பெண் சுதந்திரம், மயிறு மட்டைன்னு பேசினா மட்டும் போதாது தம்பி! கட்டின பொண்டாட்டிய கட்டிக் காக்கவும் தெரியனும்!” என்றவர்,

“யோவ் ஏட்டு! ஒரு டீ சொல்லுய்யா! வீட்டுக்குப் போகிற நேரத்துல வந்து நின்னு தாலியை அறுக்கறானுங்க!” எனக் கத்தினார்.

“சார் என்ன விஷயம்னு சொல்லுங்க! எதுக்கு இவங்கள ஸ்டேஷனுக்கு கொண்டுட்டு வந்தீங்க?” எனக் கேட்டான் இவன்.

அருணுக்கு போன் செய்தவள், ஸ்டேசனில் இருப்பதாக சொன்னாளே தவிர என்ன விசயம் என சொல்லி இருக்கவில்லை. இதை உருப்படியாய் சொல்வதற்கே அவ்வளவு அழுகை. இங்கே ப்ராத்தல் அது இதுவென கேட்கவும் இவனுக்கே தாங்க முடியவில்லை. மொழியைப் பற்றி சொல்லத்தான் வேண்டுமோ! அவளை எந்த களங்கமும் இல்லாமல் வெளியே கொண்டு வரத்தான் கௌரவமாக மனைவி என சொல்லி இருந்தான். தோழி என சொன்னால், இன்னும் என்னென்ன பேசுவார்களோ என அச்சமாக இருந்தது அருணுக்கு.

“என்ன விஷயம்னு போன் பண்ணப்ப, ஒன் போண்டா டீ சொல்லலியா?” என கடுப்பாகக் கேட்டவர்,

“ஆள் அரவம் இல்லாத இடத்துல ஒத்தையா நின்னிட்டிருந்துருக்கா! அங்க பைக்ல ஃபுல் மப்புல வந்த ஒரு நாதாரி ரேட்டு எவ்ளோன்னு கேட்டு கையைப் புடிச்சு இழுத்துருக்கான்! உன்னோட பெண் சிங்கம் செருப்பக் கழட்டி விளாசிருக்கு அவன” என சொல்லி நிறுத்த, கண்ணில் பாராட்டுதலுடன் இவளைத் திரும்பிப் பார்த்தான் அருணகிரி.

ஆமாவா என கண்ணசைவால் அவன் கேட்க, ஆமாமென இவளும் கண் ஜாடையில் பதில் சொன்னாள். அவளது கையை இறுக்கி அழுத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் அருண்.

இவர்கள் இருவரின் மௌன பரிபாஷையைப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கு, மெல்லியப் புன்னகை வந்தது. அடக்கிக் கொண்டு,

“ஏற்கனவே மப்புல இருந்ததுனால அடிய வாங்கிட்டு அங்கயே மட்டையாகிட்டான்! இதே வேற எவனாவது கையைப் புடிச்சு இழுத்துருந்தா என்ன ஆகியிருக்கும்? பொண்ணுங்களுக்கு தைரியம் இருக்கனும், ஆனா குருட்டுத் தைரியம் இருக்கக் கூடாது! ராத்திரி சுதந்திரமா சுத்துற அளவுக்கா நம்ம நாடு பாதுகாப்பா இருக்கு? போலிஸ் கடைமையை செய்யலன்னு கூவினா போதுமா? ஒவ்வொரு பொண்ணுக்கும் பாதுகாப்பா நாங்க போக முடியுமான்னு யோசிக்கனும்! எதுக்கெடுத்தாலும் சண்டை முடிஞ்சுதான் போலிஸ் வருதுன்னு கிண்டல் மட்டும் அடிக்க தெரியும் உங்களுக்கு எல்லாம்! ஏதோ நான் ரவுண்ட்ஸ் போகறப்போ கண்ணுல படவும் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்தேன்! வந்ததுல இருந்து ஒரே அழுகை! யாரு, எவருன்னு ஒன்னும் சொல்லாம அழுதா, எங்களுக்கு வேற கேஸ் இல்லையா பார்க்கறதுக்கு! உன் சிங்கப் பொண்ணு, ஸ்டேஷன் வந்து அழுமூஞ்சி அசிங்கப் பொண்ணா ஆயிருச்சு!” என நக்கலில் முடித்தார்.

“அது..ஸ்கூட்டி ரிப்பேராச்சி சார்!..ஆட்டோ கிடைக்குமான்னு..கிடைக்கல..அப்போ இவன்..கையை..ஏதோ ஒரு வேகத்துல நம்மள காப்பாத்திக்கனுமேன்னு..ஹ்ம்ம்..அவன அடிச்சிட்டேன்! இங்க..இங்க..வந்ததும், உங்கள எல்லாம் பார்த்ததும்…பயமும் வந்துடுச்சு” எனத் திக்கித் திணறி சொன்னாள் அமுதமொழி.

அவள் உடலே உதறி நடுங்க, தோளில் கைப்போட்டு இறுக்கிக் கொண்டான் அருணகிரி.

“ஒன்னும் இல்லம்மா! ஒன்னும் இல்ல!” எனக் குழந்தையை சமாதானப் படுத்துவது போல இருந்தது அவனது குரல்.

அதற்குள் டீ வந்திருந்தது.

“எடுத்துக் குடிமா” என்றார் இன்ஸ்பெக்டர்.

வேண்டாமென தலையாட்டினாள் இவள்.

“குடின்றேன்!” என ஒரு சத்தம் போட, சட்டென கிளாசை எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள் இவள்.

“சார் மிரட்டாதீங்க சார்! ஏற்கனவே பயந்து நடுங்கறா!” என்றான் அருண்.

“மொதல்ல உன்னைப் புடிச்சு லாக்கப்ல போடனும்யா! பாதுகாப்பா பார்த்துக்க முடியலன்னா, நீலாம் ஏன்யா அழகான பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கற!” என இவனை ஒரு வாங்கு வாங்கினார்.

“அவர திட்டாதீங்க சார்! சொல்லாம வெளிய போனது என் தப்புதான்” என அவசர அவசரமாக இடை வெட்டினாள் அமுதமொழி.

“என்ன பதிபக்தியா?” என இவளுக்கும் விழுந்தது வசவு.

“சார்! என் மனைவி கையைப் புடிச்சு இழுத்தவன் எங்க சார்?”

“ஏன்? பார்த்து, அந்தப் பாவிப்பயல பாராட்டப் போறியா?”

“சார்!” எனக் கடுப்பாக இவன் சொல்ல,

“என்ன சாரு, சோறுன்னுகிட்டு! போயா போ! அட்ரஸ எழுதிக் குடுத்துட்டு பொண்டாட்டிய கூட்டிட்டுப் போ! நாங்க காட்டுன காட்டுல அந்தக் குடிகாரனுக்கு எழுந்து நடக்கவே ஏழு நாள் ஆகும்! பொட்டப்புள்ள விஷயத்தப் பெருசு பண்ணாம கெளம்புங்க ரெண்டு பேரும்” எனச் சத்தம் போட்டார்.

இவன் இன்னும் பேச முயல,

“போலாம் கிரி! போலாம், போலாம்!” என மெல்லிய குரலில் கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள் பயந்தமொழி.

“சரி போயிடலாம்டா! தோ, அட்ரேஸ் எழுதிக் குடுத்தவுடனே போயிடலாம்!” என சமாதானப்படுத்தினான் பரிவுகிரி.

அங்கே வேலையை முடித்துக் கொண்டு கிளம்ப,

“யோ ஹீரோ சார்!” என அழைத்தார் இன்ஸ்பெக்டர்.

“ஹீரோ இல்ல சார்! கேரெக்டர் ரோல்தான்!” என்றவன் அருகில் இருந்தவளைக் குறிப்பாகப் பார்த்தான்.

அவன் எழுதிக் கொடுத்த விஷயங்கள் அடங்கியத் தாளைப் பார்த்தவாறே,

“என்னவாவோ இருந்துட்டுப் போ! போட்டோகிராபராயா நீ?” எனக் கேட்டார்.

“ஆமா சார்!”

“நல்லதா போச்சு! அடுத்த வாரம் என் பொண்ணுக்கு பூப்புனித நீராட்டு விழா வச்சிருக்கேன்! வந்து போட்டோ புடிச்சுக் குடுக்கறியா?”

“ஏன் சார்! பெண்கள் பாதுகாப்பு பத்தி வாய் கிழிய பேசறீங்க! இப்படி ஊர கூட்டி என் பொண்ணு வயசுக்கு வந்துட்டான்னு சொல்லி அவ மேல கண்ட காவாலிப் பையனுங்க அட்டேன்ஷன கொண்டு வரது நல்லாவா இருக்கு?”

“கிரி! போலிஸ் கிட்ட என்ன வம்பு!” என மெல்லியக் குரலில் படபடத்தாள் அமுதமொழி.

“எங்க வீட்டுப் பொண்ண எப்படி பாங்கு பத்திரமா பார்த்துக்கனும்ங்கற ஈர வெங்காயம்லாம் எங்களுக்கு நல்லாவே தெரியும்! போட்டோ புடிக்க வர முடியுமா முடியாதா?”

அவர் சொன்ன தேதியின் மாலை வேளையில் வேறு வேலை எதுவும் இல்லாததால் சரியென ஒத்துக் கொண்டான் அருண்.

“இந்தாம்மா பொண்ணு! உன்னை ஜீப்ல பத்திரமா கொண்டு வந்து, டீலாம் வாங்கிக் குடுத்து பத்திரமா பார்த்திருக்கேன்! உன் புருஷன் கிட்ட சொல்லி பாதி விலை மட்டும் வாங்கிக்க சொல்லு!”

புருஷன் எனும் சொல்லில் உச்சிக் குளிர்ந்து விட,

“போட்டோ புடிக்க காசு குடுக்க வேணா சார்! ப்ரிண்ட் போட ஆகற செலவுக்கு மட்டும் குடுத்தா போதும்!” எனச் சொல்லியவளை முறைக்க முயன்ற அருணகிரிக்கு என்னவோ சிரிப்புதான் வந்து தொலைத்தது.

இருவரும் வெளியே வர,

“கிரி! என் ஸ்கூட்டி!” எனத் தயங்கினாள் இவள்.

“எந்த இடத்துல கிடக்கு?”

இடத்தை சொன்னாள் இவள். தனது உதவியாளனுக்கு போன் செய்து, அந்த இடத்தில் இன்னும் ஸ்கூட்டி கிடக்கிறதா எனப் பார்த்து அதை பழுது பார்க்க அனுப்பி வைக்க சொன்னான் அருண். போனில் பேசியபடியே, நடந்து காருக்கு வந்திருந்தார்கள். உள்ளே அமர்ந்ததும்,

“சாப்பிட்டியா?” எனதான் முதலில் கேட்டான்.

“இல்ல! பசிக்குது, ரொம்ப பசிக்குது!” என்றாள் இவள்.

அழுத முகம் வீங்கி இருக்க, கண்கள் சிவந்துப் போய் பாவமாய் இருந்தவளை நோக்கியவன்,

“பார்சல் வாங்கிட்டு வரேன்! வீட்டுக்குப் போயிடலாம்” என்றான்.

சரியென தலையை ஆட்டியவள், அப்படியே கார் சீட்டில் சரிந்துக் கொண்டாள்.

பிட்சா ஹட் அருகில் காரை நிறுத்தியவன், எப்பொழுதோ ஒரு தடவை அவள் பிடிக்கும் என சொல்லி இருந்த சிக்கன் டிக்கா சுப்ரீம் பிட்சாவையும், அவனுக்குப் பிடித்த டபுள் சீஸ் பிட்சாவையும் வாங்கி வந்தான். அதன் பிறகு மிக மிக அமைதியாகவே போனது பயணம். அவளது அபார்ட்மேன்ட் வளாகத்தில் இறக்கி மட்டும் விடாமல் அவனும் கூட வர, கேள்வியாய் நோக்கினாள் இவள்.

“எனக்கும் வயிறு இருக்கு! எனக்கும் பசிக்குது! எனக்கும்தான் வாங்கிருக்கேன்!” என அடமாய் சொன்னான் இவன்.

தோளைக் குலுக்கியவள், நடக்க ஆரம்பிக்க இவனும் அவளோடு சேர்ந்து நடந்தான். கிரீலையும் கதவையும் திறந்து இவள் உள்ளேப் போக, இவனும் பின் தொடந்து வந்தான். சமையலறையை நோக்கிக் கையைக் காட்டியவள்,

“தட்டுலாம் அங்க இருக்கு! சாப்பிடுங்க! நான் குளிச்சிட்டு வரேன்” என சொல்லி விட்டு விடுவிடுவென அறைக்குப் போய் கதவடைத்துக் கொண்டாள்.

குளித்து முடித்து, வீட்டுக்குள் போட்டுக் கொள்ளும் ‘லெட் மீ ஸ்லீப்’ என எழுதி இருக்கும் தொளதொள டீ ஷர்ட்டும், நீள பைஜாமா பேண்ட்டும் அணிந்து வந்தவளை பார்த்தவனுக்கு தன்னையும் மீறி புன்னகை வந்தது.

“மெஸ்மரைசிங்!” என முணுமுணுத்தவனை,

“என்ன?” எனக் கேட்டாள் இவள்.

“மேசையில எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்னு சொல்ல வந்தேன்” எனவும்தான், வரவேற்பறையில் இருந்த டீபாயில் இரண்டு தட்டு, கிளாசில் ஆரஞ்சு ஜீஸ், பிட்சா பெட்டி எல்லாவற்றையும் அழகாய் அடுக்கி இருந்ததைப் பார்த்தாள் இவள்.

“காண்டில் மட்டும்தான் மிஸ்ஸிங்” என முனகியவள், மேசையின் ஒரு பக்கமாகத் தரையில் அமர்ந்தாள்.

அவளைப் போலவே, தனது நீளக் கால்களை மடக்கி இன்னொரு புறம் அமர்ந்துக் கொண்டான் இவன்.

தட்டில் அவளுக்கு வேண்டியதை எடுத்து வைத்தவன், இவனும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

“லேங்குவேஜ்! உன்னோட ஃபேவரேட் சிக்கன் டிக்கா பிட்சா ரொம்ப நல்லாயிருக்கு. எனக்கும் பிடிச்சிருச்சு”

அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் அவனை நிமிர்ந்து ஆழ்ந்துப் பார்த்தாள். மனதுக்குள்,

‘சுகமான குரல் யார் என்றால்

சித் ஸ்ரீராமின் குரல் என்றேன்

எனக்கும் அந்த குரலில் ஏதோ

மயக்கம் என நீ சொன்னாய்

சிக்கன் டிக்கா பிட்சா துண்டு

என் வாயில் போவது பிடிக்கும் என்றேன்

தயக்கம் என்பதே சிறிதும் இன்றி

அது எனக்கும் எனக்கும்தான் பிடிக்கும் என்றாய்

அடேய் உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க

என்னை ஏன் வேண்டாமென்றாய்!’ என மனம் சோக கீதம் வாசித்தது.(இந்த மொழியோட பாட்ட ஒரிஜினல் பாட்டோட பாடி பார்த்து மேட்ச் ஆக்க நான் பட்ட பாடிருக்கே!!!!! நீங்களும் பாடிப் பார்க்கலாம். சரியா வரலனா, வர வரைக்கும் பாடவும்)

“என்ன பார்க்கிற?”

ஒன்றும் இல்லையென தலையாட்டியவள் மெதுவாய் சாப்பிட ஆரம்பித்தாள். இவனும் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் சாப்பிடுவதே தன் தலையாய கடமை என்பது போல உண்ண ஆரம்பித்தான். இருவரும் கடித்து விழுங்கும் சப்தமும், காற்றாடி ஓடும் சத்தமும், இரு பல்லிகள் சத்தமிட்டு ஓடி பிடித்து விளையாடும் ஓசையும், கடிகார முள்ளின் டிக் டிக்கையும் தவிர மௌனமே ஆட்சி செய்தது அங்கே.

சாப்பிட்டு முடித்து இவள் தட்டுக்களை எடுக்க, அவள் கையிலிருந்து இவன் வாங்கிக் கொண்டான்.

“நான் கழுவி வைக்கறேன்! மேசையை நீ துடைச்சிடு” என்றவன் சமையலைக்குள் நுழைய, இவள் பேப்பர் நாப்கின் கொண்டு மேசையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் படாரேன சத்தம் கேட்க, சமையலறைக்குள் ஓடினாள் இவள். அங்கே தரையில் அமர்ந்து கை நடுங்க உடைந்துப் போன பீங்கான் தட்டு சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான் அருண்.

“கிரி! விரலை வெட்டிடப் போகுது! நீங்க எழுந்துக்கோங்க! நான் சுத்தம் பண்றேன்!” என்றாள் இவள்.

“தூக்கி விடு! அப்போத்தான் எழுந்துப்பேன்” என வம்பு செய்தான் இவன்.

“கிரி!!!!!”

“மொழி!!!!”

“எழும்புங்க!”

“தூக்குங்க!”

“கடவுளே!” எனச் சலித்துக் கொண்டவள், அவனது கரத்தைப் பிடித்து தூக்க முனைந்தாள்.

“ஃபோர்ஸ் பத்தல! இன்னும் கொஞ்சம் தம் கட்டித் தூக்கு”

“இதென்ன விளையாட்டு கிரி!” எனக் கடிந்துக் கொண்டவள், மூச்சு வாங்க அவனைத் தூக்கி நிறுத்த முயல, புன்னகையுடன் இவனே எழுந்துக் கொண்டான்.

“சாரி மொழி! கை தவறிடுச்சு” எனத் தப்பு செய்த சின்னக் குழந்தை போல அவன் நிற்க,

“உங்களுக்கு நல்லத தவற விடறது ஒன்னும் புதுசில்லையே” எனச் சொல்லியபடியே கூட்டி சுத்தம் செய்தாள் மொழி.

அமைதியாக அவளையேப் பார்த்தப்படி நின்றிருந்தான் இவன்.

வேலையை முடித்துக் கொண்டு இவள் வர,

“மொழி!” என அழைத்தான் அருண்.

“ஹ்ம்ம்!”

“வயிறு ஃபுல்லாச்சா?”

“ஆச்சு!”

“அழுத களைப்பு போயிடுச்சா?”

“போச்சு!”

கைகளை பாண்ட் பாக்கேட்டில் விட்டுக் கொண்டவன், அவள் விழிகளை நேராகப் பார்த்து,

“சரி, இப்போ சொல்லு! என்ன எழவுக்கு நைட்டுல தனியா எங்கயோ போன நீ?” என்றவனின் குரலில் அவ்வளவு கோபம் இருந்தது.

“அத கேட்க நீங்க யாரு?”

“திமிரா மொழி? கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லாம என்ன எதிர் கேள்வி இது?”

“நீங்க மொதல்ல பதில் சொல்லுங்க! பிறகு நான் பதில் சொல்லறேன்!”

“மொழி!!!” குரலை உயர்த்தினான் கோபகிரி.

அலட்சியமாக நின்றிருந்தாள் கோதைமொழி.

அவளது அலட்சியம் கூட அழகாய் பட்டது போல இவனுக்கு. வாய்க்குள்ளேயே என்னவோ முணுமுணுத்தவன்,

“உன் மேல எனக்கு, இந்த அண்டசராசர அளவுக்கு அக்கறை இருக்கு மொழி! உனக்கு எதாச்சும்னா எனக்கும் வலிக்கும்! ஏன்னா நீ என் பிலவ்ட்” என சொல்லி தொண்டையை செறுமிக் கொண்டவன்,

“என் பிலவ்ட் தோழி!” என்று முடித்தான்.

“தோழி கோழி

முடிஞ்சது என் சோலி” என இவள் முணுமுணுக்க,

“என்ன?” எனக் கேட்டான் அருண்.

“தொண்டை தண்ணி வத்த வசனம் பேசுனீங்களே, குடுக்க கோலி சோடா கூட இல்லையேன்னு சொன்னேன்”

நம்பாதது போல பார்த்தான் அருண்.

“உங்களாலதான் வெளியே போனேன்”

“என்னாலயா?”

“ஆமாம்! நீங்கதானே நிர்மல் நல்லவரு வல்லவருன்னு சொல்லி எனக்கு ஜோடியா செட் பண்ணீங்க! அவருதான் டின்னர் போகலாம்னு வர சொன்னாரு! அங்க போய் காத்திட்டு இருக்கறப்போதான், போன் பண்ணி அவசரமா என்னமோ மீட்டிங் வந்திடுச்சு! சாரி அமுதமொழி, நீ கிளம்பிடுன்னு சொன்னாரு! கிளம்பி வரப்போ ஸ்கூட்டி மக்கர் செஞ்சிடுச்சு! அப்புறம்தான் அவன்..அவன்..ரேட்..ரேட் எவ்ளோன்னு, இன்னும் அசிங்கம் அசிங்கமா கேட்டான்! எனக்கு எவ்ளோ ரேட்டு கிரி?” எனக் கேட்டவளுக்கு கண்களில் நீர் குற்றால அருவியைப் போலக் கொட்டியது.

தாவி அவளை அணைத்துக் கொண்டவன்,

“அப்படிலாம் சொல்லாதடி! அவன் ஒரு கிறுக்குக் குடிகாரன்! அவன் சொன்னத எல்லாம் மனசுக்குள்ள ஏத்திக்காதே! இனிமே நிர்மல் கூட வெளிய போனா கூட எனக்கு வாட்சாப்ல லோகேஷன் ஷேர் செஞ்சிட்டுப் போ! நீ வீடு வர வரைக்கும் உன்னை ட்ரேக் பண்ணிக்கிறேன்! எதாச்சும்னா ஓடி வந்துடறேன்” என்றான் இவன்.

“நிர்மல் கூட ஹனிமூனுக்கு போனா கூட என்னை ட்ரேக் பண்ணுவீங்களா கிரி?”

ஆங்கில கெட்ட வார்த்தை எதையோ முணுமுணுத்தவன், அவளை விலக்கி நிறுத்தினான்.

அந்த நேரம் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. இருவரும் கதவை நோக்க,

“அமுதமொழி!” எனும் நிர்மலின் குரல் கேட்டது.

“இந்நேரத்துக்கு ஒரு பொண்ணு தனியா இருக்கற இடத்துக்கு இவன் ஏன் வரான்?” என கடுப்பாய் மொழிந்த அருண், கதவைத் திறந்து விட்டான்.

இவனைப் பார்த்ததும் நிர்மலுக்கும் அதேதான் தோன்றியது போல!

“நீங்க எங்க இங்க?” எனக் கேட்ட வாய் மூடுவதற்குள், நிர்மலை பளாரென அறைந்திருந்தான் அருணகிரி.

“கிரி!!!!!” என அலறினாள் அமுதமொழி.

 

பாரதி சொன்னது ஔடதம் குறை(ஔடதம்னா மருந்து)

ஓங்கி ஒலிக்குது தமிழனின் பறை

யார் இருப்பாரோ இவள் மனதில் சிறை

அருணே!!!!! எதுக்குடா இந்தப் பேயறை??????

 

(நீளுமா…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த எபியில் சந்திக்கும் வரை லவ் யூ ஆல் …)எ