EN Ayul Neelumadi–EPI 17

273046404_1018660852054582_3314744799217173998_n-b36ea088

அத்தியாயம் 17

“கூச்சப்படாம சாப்பிடுங்க தம்பி! இன்னும் கொஞ்சம் கோழி வறுவல் வைக்கவா?” எனக் கேட்டார் மைத்ரேயி.

“இதுக்கும் மேல ஒரு பிடி கூட உள்ள இறங்காது ஆண்ட்டி! வயிறு வெடிச்சிடும்!” எனத் தட்டை இரு கரங்களாலும் மறைத்துக் கொண்டான் நிர்மல்.

“சரி பரவாயில்ல! கடைசி ஐட்டமா நுங்கு பாயாசம் இருக்கு, அதயாச்சும் சாப்பிடுங்க!”

“புதுசா இருக்கே ஆண்ட்டி!”

“எல்லாம் பழசுதான் தம்பி! காலம் காலமா செஞ்சுட்டு வரதுதான். உடம்பு சூட்டத் தணிக்கவும், ஜீரண சக்தி அதிகரிக்கவும் முன்னெல்லாம் அடிக்கடி செய்வாங்க! இப்போலாம் டூ கே கிட்ஸ் கிட்ட போய் நுங்குன்னு சொல்லுங்களேன்! வாட் இஸ் நுங்குன்னு நம்மள விநோதமா பார்ப்பாங்க! மில்க் ஷேக்க, ஷோக்கா குடிக்கற காலமிது!”

“ஆண்ட்டி! நீங்க முன்னாள் லெக்சரர்னு அமுதமொழி சொன்னா! வேலையை விட்டுட்டாலும் இன்னும் லெக்சர் அடிக்கறத விடல நீங்க” எனச் சொல்லிப் புன்னகைத்தான் நிர்மல்.

அவனுக்கு பாயாசத்தை ஊற்றிக் கொடுத்தவர், உலகில் நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல தவ நிலையில் உணவை அளைந்துக் கொண்டிருந்த அமுதமொழியின் தோள் தட்டினார்.

“உன் ஆள் கண் முன்னவே உட்கார்ந்திருக்க, நீ கனவுல எங்க டூயட்டுக்குப் போயிட்ட? பின்னால ஆடற தேவதைகளில நானும் இருக்கேனா மொழிம்மா?” எனச் சிரிப்புடன் கேட்டார்.

“நானே அந்த டூயட்ல இருக்கேனான்னு தெரில! அப்புறம் நீங்க எங்க இருக்கப் போறீங்க ஆண்ட்டி!” என்ற நிர்மலை யோசனையாகப் பார்த்தார் மைத்தி.

“நீங்க வராம வேற யார் வந்திடுவா? எங்க மொழிய என்னன்னு நெனைச்சீங்க நீங்க? ரொம்ப நல்லப் பொண்ணு அவ! எங்களுக்கு வேலை செஞ்சாலும், அவள நான் ஒரு மகளாதான் நடத்தறேன்! வள்ளுவர் சொன்ன

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்’ குறளுக்கு முன் மாதிரியா நடந்துக்கறவ எங்க மொழி. உங்களுக்கு ஓகே சொல்லிட்டு வேற யார் கூட டூயட் பாடுவா அவ? இப்படிலாம் இனிமே பேசாதீங்க! உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிட்டா கூட, மொழி கண்ணக் கசக்கனா, காணாமப் பண்ணிடுவேன் உங்கள!” எனப் படபடத்தார் மைத்தி.

“ஆண்ட்டீ! கூல் டவுன், கூல் டவுன்! மொழி இன்னும் எனக்கு ஓகே சொல்லவேயில்ல! அதனாலதான் அப்படி சொன்னேன்! உடனே கரகம் எடுத்த காளியாத்தா மாதிரி என்னை காணாமப் பண்ணிடாதீங்க! நான் குடுக்கற சம்பளத்த நம்பிப் பல குடும்பம் பொழப்பு நடத்துது! சீக்கிரம் மலை இறங்குங்க” என்றான் இவன்.

“ஒகே சொல்லலியா? ஏன் ஏன்? உனக்கு என்னப்பா குறைச்சல்? அம்சமா தெரியற, அன்பா இருக்க, கலகலன்னு பேசற, ரொம்ப நல்லப் பையன்னு அருண் சொன்னான்! அப்புறம் ஏன் இன்னும் கிரீன் சிக்னல் வரல?” என்றவர் மொழியை ஆராய்ச்சியாய் பார்த்தார்.

“வந்து..ஆண்ட்டி..அது..நான் சூப்பர் ஸ்டார் ரசிகை ஆண்ட்டி”

“அவருக்கு ரசிகையா இருக்கறதுக்கும் சம்மதம் சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?”

“’முதலில் யோசிக்கனும்

பிறகு நேசிக்கனும்

மனசு ஏத்துக்கிட்டா சேர்த்துக்கிட்டு வாழு’ன்னு அவர் சொல்லிருக்கார். எனக்கு யோசிக்க டைம் குடுங்க ஆண்ட்டி! அப்புறம் நேசிக்கறத பார்க்கலாம்” என்றாள்.

“இந்த அருண் கூட சேராதேன்னு சொன்னா கேக்கறியா! பாரு அவன மாதிரியே நல்ல வியாக்கியானமா பேச ஆரம்பிச்சிட்ட! ஆனா உன் ப்ரேண்ட் எவ்ளவோ தேவலாம்டியம்மா! நான் பார்த்த பொண்ணுக்குப் பச்சைக் கொடி காட்டிட்டான்.”

“வாவ்! வாவ்! சூப்பர் ஆண்ட்டி! பொண்ணு பேரு என்ன, என்ன செய்யறாங்க?” எனக் குதூகலமாகக் கேட்டான் நிர்மல்.

அமுதமொழிக்கோ அவர் சொன்னதைக் கேட்டு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. உணவை அளைந்துக் கொண்டிருந்த கைகள் அசைவற்று நின்று போனது. படங்களில் காட்டுவது போல அவளைச் சுற்றி எல்லாம் நிலைக்குத்தி நின்றன. மைத்தியின் கை அந்தரத்தில் நிற்க, நிர்மலின் வாய் திறந்து கிடக்க, காற்றாடி ஓடாமல் தன் செயலை நிறுத்தி இருக்க அண்ட சராசரமும் ஸ்தம்பித்துப் போனது இவளுக்கு.

அருண் எனும் வார்த்தையில் நடப்புக்கு வந்தவள், தன்னை மீறி எங்கே கதறி விடுவோமோ எனப் பயந்து சோற்றை அள்ளி வாயில் திணித்தாள்.  

“அருணுக்குப் பார்த்திருக்கற பொண்ணு எங்காளுங்கதான். நல்ல மதிப்பும் மரியாதையுமான குடும்பம். பொண்ணு அப்பா ஜாதி சங்க தலைவரா இருக்காரு. என் மருமக படிச்சு, முடிச்சு ஐ.டில வேலைப் பார்க்கறா! இவன மாதிரியே அவுட்கோயிங் பர்சனாலிட்டி! அவனே உங்க கிட்டலாம் சொல்லறேன்னு சொன்னான். ஆனா நாந்தான் ஓட்டைவாய்! உளறிட்டேன்!” எனச் சந்தோசமாகப் பகிர்ந்துக் கொண்டார் மைத்தி.  

பட்டென அமுதமொழி எழுந்துக் கொள்ள,

“ஹலோ மேடம்! என்ன பாதி சாப்பாட்டுல எழுந்துட்ட! ஒழுங்க உட்காரு!” எனச் சத்தம் போட்டார் மைத்தி.

“பசி அடங்கிடுச்சு ஆண்ட்டி!”

“ஒன்னுமே சாப்பிடாம, என்ன குட்டிப் புள்ள மாதிரி சாக்கு சொல்லற! ஆ காட்டு!” என மிரட்டியவர், அவளுக்குத் தன் கையாலேயே ஊட்டி விடலானார்.

கண்கள் கலங்க இவள் அவரைப் பார்க்க,

“என்ன மொழிம்மா? காரமா? இரு, இரு! தயிர் சேர்க்கறேன்!” என்றவர் முழுதாக அவளுக்கு ஊட்டி முடித்தே கைக் கழுவ போக விட்டார்.

அவள் அந்தப் பக்கம் போனதும்,

“ரொம்ப சென்சிடிவ்வான பொண்ணு இந்த மொழி. அமைதி வேற! பாசத்துக்கு ஏங்கறவபா! நீ நல்லா பார்த்துக்கனும் அவள” என்றார் இவனிடம்.

“கண்டிப்பா ஆண்ட்டி! அவ சான்ஸ் குடுத்தா, ரொம்ப நல்லா பார்த்துப்பேன்” என்றான் நிர்மல்.

அம்மாவும் மகனும் அமுதமொழி மேல் காட்டும் பாசம் இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று இவள் வீட்டுக்குப் பத்திரமாகப் போய் விட்டாளா என போன் செய்ய, அது ஸ்விட்ச் ஆப் என வந்தது. மனது ஏதோ சரியில்லை என சொல்ல, மீட்டிங் முடிந்து அமுதமொழியைப் பார்க்க அவள் வீட்டிற்கு வந்தான் நிர்மல். கதவை அருண் திறக்கவும், இந்த நேரத்தில் இவன் எங்கே இங்கே எனத் தோன்ற, அதை வாய் விட்டும் கேட்டான்.

கேட்ட கேள்விக்கு வாயால் பதில் சொல்லாமல், கையால் அவன் பதில் சொன்னதில் இவனுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இவன் என்ன ஏசுநாதரா, இன்னொரு கன்னத்தைக் காட்ட! கோபத்தில் இவனும் அருணுக்கு காட்டு காட்டென காட்டி விட்டான்.

“நிறுத்துங்க!!!!!!!!!!”

வாழ்நாளிலே அன்றுதான் நம் அமுதமொழி தொண்டையைத் திறந்துக் காட்டுக் கத்தல் கத்தி இருந்தாள். புதிதாய் கொடுக்கப்பட்ட வேலையால் தொண்டையார் கலவரமாகிக் காய்ந்துப் போனதில், இவள் கழுத்தைப் பிடித்துக் கொண்டு லொக் லொக்கென இரும ஆரம்பித்தாள்.   

முகம் கழுத்தெல்லாம் சிவந்துப் போக, கழுத்தைத் தடவிக் கொண்டு, படுபயங்கரமாக இருமிக் கொண்டிருந்தவளைப் பார்த்து ஆண்கள் இருவருமே பயந்துப் போனார்கள். அருண் பாய்ந்து வந்து ஒரு பக்கம் பிடித்துக் கொள்ள, நிர்மல் இன்னொரு பக்கம் பிடித்துக் கொண்டான்.

“த… லொக் லொக்..த…லொக்லொக்!”

“என்ன தரனும்? சொல்லு” என நிர்மல் கேட்க, அருண் ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தான்.

வேகமாய் வாங்கி அதைப் பருகியவள், அப்படியே சோபாவில் பொத்தென அமர்ந்துக் கொண்டாள்.

இருவரும் அவள் முகத்தையேப் பார்த்திருக்க,

“தயவு செஞ்சு ரெண்டு பேரும் அடிச்சுக்காதீங்க! ப்ளிஸ்” என இறைஞ்சுதலாக சொன்னாள் மொழி.

“அருண்தான் முதல்ல கை நீட்டினாரு! உன் அட்வைஸ அவர் கிட்ட சொல்லு அமுதமொழி” என்றான் நிர்மல்.

“ஒரு பொண்ண அவுட்டிங் கூப்பிட்டா, அவளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்யனுமா இல்லையா? அதென்ன வர சொல்லறது, அப்புறம் பிசின்னு போக சொல்லறது? இன்னிக்கு நல்ல நேரமா இருக்கவும் போலிஸ் ஸ்டேசன் வரைக்கும் மட்டும் போச்சு! வேற ஏதும் ஆகி ஹாஸ்பிட்டல் போகிற நிலை வந்திருந்தா இப்படி நின்னு நிதானமா பேசிட்டு இருப்பாரான்னு கேளு மொழி” என்றான் அருணகிரி.

“என்ன, என்ன? போலிஸ் ஸ்டேஷனா? என்னாச்சு அமுதமொழி? சொல்லு” எனப் படபடத்தான் நிர்மல்.

மீண்டும் ஆதி முதல் அந்தம் வரை என்ன நடந்தது என அவனிடம் சொன்னாள் இவள். ரேட் என்ன என அவன் கேட்டதையும், இஸ்பெக்டர் இவர்களை கணவன் மனைவி என எண்ணிக் கொண்டதையும் மட்டும் சொல்லவில்லை.

“நெஜமா சாரி அமுதமொழி! ரொம்ப இம்பார்டாண்ட் மீட்டிங்கா போகவும் என்னால கான்சல் பண்ண முடியல. ஆனாலும் உனக்கு கால் பண்ணிட்டேத்தான் இருந்தேன். அழைப்பு கிடைக்கவேயில்ல. வீட்டுக்கு வந்திட்டியா இல்லையான்னு நேருல பார்க்கனும்னுதான் வந்தேன்! ஐ எம் ரியலி சாரி அமுதமொழி! வெரி சாரி! இனிமே இப்படிலாம் நடக்காது!” என உணர்ந்து சொன்னான் நிர்மல்.

அருணிடம் திரும்பியவன்,

“சாரி அருண். இனிமே உங்க தோழிய ரொம்ப பத்திரமா பார்த்துப்பேன். ட்ரஸ்ட் மீ!” என்றவன்,

“அண்ட் ஓன் மோர் திங்க்” என நிறுத்தினான்.

“சொல்லுங்க நிர்மல்!” என்றான் அருண்.

“எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப நம்பிக்கை இருக்கு! ஆனாலும் எல்லாரும் என்னை மாதிரி இருக்க மாட்டாங்கல்ல! அன்டைம்ல இனிமே நீங்க அமுதமொழி வீட்டுக்கு வராதீங்க ப்ளிஸ்! என் வருங்கால மனைவிய மத்தவங்க யாரும் தப்பா பேசறதுல எனக்கு துளி கூட இஸ்டமில்ல! மத்த ஹஸ்பண்ட் மாதிரி கல்யாணமானதும் ஆண் நட்பை வெட்டி விடனும்னு சொல்ற அளவுக்கு நான் நேரோவ் மைண்டட் இல்ல! பட் அந்த நட்பு மத்தவங்க கண்ணுக்கு கண்ணியமா தெரியனும்னு நெனைக்கறவன் நான்! சோ புரிஞ்சுப்பீங்கன்னு நெனைக்கறேன்”

கை முஷ்டி இறுக, உடல் லேசாய் நடுங்க, கண்ணில் சிவப்பு ஏற, கோபத்தை அடக்கப் போராடினான் நரசிம்மகிரி. அவன் போராட்டத்தைப் பார்த்து, கதிகலங்கிப் போனாள் நங்கைமொழி.

“நிர்மல், இந்த மாதிரிலாம் பேசாதீங்க! எனக்கு கிரிதான்..” என இன்னும் சொல்ல வந்தவளை,

“மொழிக்கு நான்னா ரொம்ப இஸ்டம் நிர்மல். தன் கூட்டுக்குள்ள சுருங்கி இருந்தவள வெளிய கொண்டு வந்து, ஃபைனான்சியலா இண்டிபெண்டண்டா இருக்க வச்சிருக்கேன்ல, அந்த நன்றி உணர்ச்சி நெஞ்சு வரைக்கும் நிக்கிது! வேற ஒன்னும் இல்ல. ஆனா நீங்க சொல்றதும் சரிதான் நிர்மல். ஆண் பெண் நட்புக்குன்னு ஒரு லிமிட் இருக்கு, கண்ணியம் இருக்கு, கட்டுப்பாடு இருக்கு. அதெல்லாம் இருக்கவும்தான் அங்க களங்கமில்லா நட்பு மட்டும் நிலைச்சிருக்கு! உங்க வருங்காலத்தோட பேர் கெட்டுப் போயிடற மாதிரி இனிமே நான் நடந்துக்க மாட்டேன்” எனப் புன்னகையுடன் சொன்னவன்,

“அடிச்சதுக்கு சாரி” என முடித்தான்.

“நானும் சாரி அருண்!” என இவன் தோளைத் தட்டினான் நிர்மல்.

“எங்க மம்மீ உங்க ரெண்டு பேரையும் விருந்துக்கு வர சொன்னாங்க! என்னிக்குன்னு நான் மொழி கிட்ட சொல்லிடறேன்! கண்டிப்பா வாங்க நிர்மல். அவங்க உங்கள சந்திக்கனுமாம்” எனச் சொல்லியவன்,

“நீங்க மொழி கிட்ட பேசறதுனா சீக்கிரம் பேசிட்டு கிளம்பிடுங்க! லேட் நைட்டாச்சு” எனச் சொல்லி, மொழியைத் திரும்பிக் கூட பார்க்காமல் கிளம்பி விட்டான் அருண்.

போன் சத்ததில் சிந்தனைக் கலைந்த நிர்மல்,

“அமுதமொழி! உன் போன் அடிக்குது” எனக் குரல் கொடுத்தான்.

சமையல் அறையில் மைத்தியுடன் பேசிக் கொண்டிருந்தவள், டைனிங் மேசைக்கு வந்து அழைப்பை ஏற்றாள்.

“சொல்லுங்க அருண் சார்”

“சரி, வரேன்!”

“அந்த பொண்ணு என்ன நிறம்?”

“லேஹெங்காவா, சாரியா? என்ன கலர்?”

அந்த வீட்டினரிடம் விசாரித்து, பதில் சொன்னான் அருண்.

“ஓ சரி! அட்ரஸ் மேசேஜ் பண்ணுங்க”

“பாய்”

அழைப்பைத் துண்டித்தவள்,

“அருண் கூப்பிட்டாரு! அர்ஜெண்ட் மெக்கப் வேலை இருக்காம்! வர சொன்னாரு! போகனும்!” என்றாள் ரத்தின சுருக்கமாக.

அருண் இன்ஸ்பெக்டர் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு புகைப்படம் எடுக்க சென்றிருந்தான். மாலையில் நான்கு மணிக்கு மேல்தான் நிகழ்ச்சி. இவன் இரண்டு மணி போல, இட வசதியெல்லாம் பார்த்து வைக்க சென்றிருந்தான். அங்கே அவர் மகளுக்கு அலங்காரம் செய்ய வர வேண்டிய பெண்மணி வீட்டில் இறப்பு என்பதால் கடைசி நிமிடத்தில் வர முடியாது எனச் சொல்லி விட, இவளை அழைத்திருக்கிறான் அருணகிரி.

இவர்களைப் போல புகைப்பட நிபுணர்கள், அழகு கலை வல்லுனர்கள், சமையல் கலை வித்தகர்களுக்கு எல்லாம் எந்த ஆபத்து அவசரம் என்றாலும் ஒத்துக் கொண்ட வேலையை செய்தே முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இறப்பு, பிறப்பு எனக் காரணம் சொன்னால், கடைசி நிமிடத்தில், விழா நடத்துபவர்களும் என்னதான் செய்வார்கள்! அதோடு வாக்குத் தவறியதாக வெளியே விஷயம் கசிந்தால், கண்டிப்பாக பெயர் கெட்டு, பிஸ்னஸ் படுத்து விடுவது உறுதி.

“சரி, எங்கன்னு சொல்லு! ட்ராப் பண்ணிடறேன்! வீட்டுக்குப் போகும் போது அருண விட்டிட சொல்லு! நைட்டுல ஆட்டோலாம் வேணாம். எனக்கு மீட்டிங் இருக்கு! இல்லைனா பிக்கப் பண்ணிப்பேன்!”

“இப்போ வீட்டுக்குப் போகனும் நிர்மல். நகை செட்லாம் எடுக்கனும்!”

“சரி! வீட்டுக்குப் போயிட்டு, பங்ஃசன் இடத்துக்குப் போகலாம்” என அவசரப்படுத்த மைத்தியிடம் சொல்லி விட்டுக் கிளமபினார்கள் இருவரும்.

தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, அவசரமாக முகம் கழுவி, ஆரஞ்சு வர்ண அனார்கலி சல்வாரை உடுத்திக் கொண்டவள், அவசரமாக அலங்காரம் செய்து, முடியை அப்படியே விரித்து விட்டுக் கிளம்பி விட்டாள்.

இவளைப் பார்த்ததும்,

“வெரி ப்ரீட்டி!” எனப் பாராட்டினான் நிர்மல்.

“தேங்க்ஸ்” என்றவள் அமைதியாக அமர்ந்து வந்தாள்.

இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு நுழையும் தெரு கார்களால் நிரம்பி வழிந்ததால், வீடு வரை இவன் கார் போக முடியவில்லை. பரவாயில்லை, நடந்து விடுவதாக சொல்லி இறங்கிக் கொண்டாள் இவள்.

வாசலிலே இவளுக்காகக் காத்திருந்தான் அருணகிரி. அவளது அலங்காரத்தையும், ஆடையயும் பார்த்தவன், மூச்சை நன்றாக இழுத்து விட்டு,

“வா, வா! உள்ள ஒரே கலவரமா இருக்கு” என்றான்.

இவள் உள்ளே நுழைய, அழுகை சத்தம்தான் வரவேற்றது.

இவளைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டர் பதட்டமாக அருகே வந்து,

“எம்மா! நல்லா அலங்காரம் பண்ணுவதானே? என் பொண்ணு நெட்டுல தேடித் தேடி ரிவ்யூலாம் அலசி ஆராஞ்சு இந்த மேக்கப் ஆள கண்டுப்புடிச்சா! இவங்க வரலனதும் ரொம்ப அப்செட்டா ஆயிட்டா! பாவம் புள்ள! ஒரே அழுகை! என்ன சொன்னாலும் சமாதானமாக மாட்டறா!” என்றவருக்கு ஒரே பதட்டம்.

என்னதான் வெளியே கெத்தான போலிஸ் என்றாலும் செல்ல மகளுக்கு அப்பாவாயிற்றே! கெத்தெல்லாம் பெத்த பிள்ளையிடம் வெத்தாகிப் போய் விடுகிறதே!

“நான் பார்த்துக்கறேன் சார்” என மெலிதாகப் புன்னகைத்தாள் இவள்.

அறை உள்ளே நுழைய மெல்லிய மேனி கொண்ட சின்னப் பெண் ஒருத்தி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளை சுற்றிப் பெண்கள் கூட்டம் நின்று சமாதானம் செய்ய, அவளோ தேம்பிக் கொண்டே இருந்தாள்.

உள்ளே நுழைந்தவளைப் பார்த்த கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்தி,

“நீதான் அவசர அலங்காரியா? ஆளு பார்க்க அம்சமாதான் இருக்க! இந்த கருத்தக் குட்டிய பூசி மெழுகி செவத்தக் குட்டியாக்க முடியுமா உன்னால?” எனக் கேட்க, அந்தக் குட்டிப் பெண்ணுக்கு இன்னும் பொத்துக் கொண்டு வந்தது அழுகை.

“யாரடி அவ என் பொண்ண கருத்தக் குட்டின்னு சொன்னது? பெருத்தக் குட்டியா இருந்துட்டு, நக்கல் நையாண்டிய பாரு! வந்தமா, வெட்டிக் குழம்பு வச்ச குரும்பாட்ட தின்னமான்னு ஜோலி கழுதையப் பார்த்துட்டுப் போய்கிட்டே இருக்கனும்! வந்துட்டாளுக என் மகள பத்திப் பேச” என இன்னொரு பெண்மணி கத்த,

“நான் அவளுக்கு அத்தைக்காரிடி! உணக்கையா சீரு மட்டும் கேக்க தெரிதுல! நாலு வார்த்தை சொல்லிட்டா அதை தாங்கிக்கவும் தெரியனும்!”

“யோ இன்ஸ்பெக்டரு! ஒழுங்கு மரியாதையா உங்கக்காவ வெளியே போவ சொல்லிடு! இல்லைனா சடங்குக்கு அடிக்கற மேளத்த சாவு மேளமா மாத்திப்புடுவேன்!”

“எல்லாம் வெளியா போய் பந்தலுல உக்காருங்க! போங்க, போங்க! யக்கா! ஏன்கா இன்னிக்குன்னு பார்த்து ஒரண்டைய இழுக்கற! போ, போ வெளியே போ” என உள்ளே இருந்த பெண்கள் அனைவரையும் வெளியே அனுப்பிய இன்ஸ்பெக்டர், அமுதமொழியையும் அவரது மகளையும் மட்டும் அறைக்குள் இருக்க வைத்தார்.

கதவை சாற்றிய அமுதமொழியை விழி அகலாமல் பார்த்தாள் அந்தப் பெண். கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

“அக்கா! நான் ரொம்ப கருப்பா இருக்கேனாக்கா?” எனக் கேட்டாள்.

அந்தப் பெண், கருப்புக்கும் மாநிறத்துக்கும் நடுவில் இருந்த நிறத்தில் இருந்தாள்.

“ஆமா, கருப்பாதான் இருக்க!”

முகம் தொங்கிப் போனது அந்தப் பெண்ணுக்கு!

“ஆனா பாரேன்! உன்னைப் பார்த்தா எனக்குப் பொறாமையா இருக்கு”

தலையை நிமிர்த்தியவள்,

“ஏன்கா?” எனக் கேட்டாள்.

“ஏன்னா வயசான காலத்துல என் மாதிரி, அதாவது வெள்ளையா இருக்கறவங்களுக்கு ஸ்கின் ஒரு மாதிரி ப்ரவுனிஷா மாறும். அங்கங்கே குட்டி குட்டியா கறுப்புப் புள்ளிகள் வரும். அதோட மினுமினுப்பும் குறைஞ்சிடும். இதென்னா பிரமாதம். இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு தெரியுமா? ஸ்கின் கான்சர், அது கூட வரும்!”

கண்கள் பளிச்சிட,

“ஆமாவாக்கா! வெள்ளையா இருந்தா இவ்ளோ ப்ராப்ளமா?” எனக் கேட்டாள்.

“இல்லையா பின்ன! நம்ம நாட்டோட வெயிலுக்கு, டார்க் ஸ்கின்தான் நல்லது! மத்தவங்க நீ கருப்புன்னு கிண்டல் பண்ணா, அடப் போங்கடா, கடவுளயே கருப்பான சிலையாதான் படைக்கறாங்க! நான் சாமிப்புள்ளைடான்னு சொல்லு. இப்போ, அழுகாம ஓடிப்போய் குளிச்சிட்டு வருவியாம். அக்கா உன்னை அழகான சிலையா மாத்துவேனாம்” என்றாள்.

சிரிப்புடன் குளிக்கப் போனாள் சின்னவள். அவள் வருவதற்குள், அலங்கார சாமான்களை ட்ரேசிங் டேபிளில் கடைப் பரப்பினாள் அமுதமொழி. மனமோ,

‘பாருங்க கிரி! எவ்ளோ அழகா பேசி இவளை சமாதானப் படுத்திட்டேன்! எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்’ என அவனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தது.  

குளித்து வந்தவளை முன்னே பட்டன் போட்ட சட்டை அணிவித்து அமர வைத்தவள், முகத்தையும் கழுத்தையும் ஐஸ் கட்டியை வைத்து தேய்த்து விட்டாள். பிறகு அதை துடைத்து விட்டு, தனது அலங்கார வேலையை ஆரம்பித்தாள். பவுண்டேஷனை அள்ளிப் போட்டு, வேற்றுக் கிரகவாசியாக காட்டாமல், அவள் தோலுக்கு ஏற்றது போல நியூட்டரல் வர்ணத்தில் பூசி விட்டாள். அதன் பிறகு மற்ற கிரீம்களை எல்லாம் பூசி, வயதுக்கு வந்திருந்ததால் எட்டிப் பார்த்த பருக்களை மறைத்து அழகாய் அலங்காரம் செய்து விட்டாள். கண்ணுக்கு கோல்ட் கலரில் ஐ ஷேடோ போட்டு விட்டவள், கடைசியாக உதட்டுக்கு லைட் பிங்க வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வேலையை முடித்தாள்.

கண்ணாடியில் முழுதாக தன்னைப் பார்த்தப் பெண்ணுக்கு அவ்வளவு சந்தோசம்.

“அக்கா, நான் அழகா இருக்கேன்க்கா! ரொம்ப தேங்க்ஸ்கா! என் ப்ரேண்ட்லாம் மேக்கப் போட்டா நான் பஃபூன் மாதிரி இருப்பென்லாம் சொன்னாங்கக்கா! ஆனா நீங்க என்னை அவ்ளோ அழகா மாத்திட்டீங்க!” என ஆர்ப்பரித்தாள்.

“நீ நேச்சுரலாவே அழகுடா! அக்கா இன்னும் கொஞ்சம் மெருகேத்தி விட்டேன்!” என்றவள், முடியலங்காரத்தையும் முடித்தாள்.

அதன் பிறகே பட்டன் வைத்த சட்டையைக் கழட்டி விட்டு, அவளது லெஹங்காவை அழகாய் அணிவித்து விட்டாள். அதன் துப்பட்டாவை ஸ்டைலாக போட்டு விட்டவள், அதற்கு மேட்சிங்காக தான் கொண்டு வந்திருந்த, கவரிங் நகைகளையும் அணிவித்து விட்டாள்.

கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்த பெண்ணின் தாய், அசந்துப் போய் விட்டார்.

“ரொம்ப நன்றிம்மா! உன் மேக்காப்புல என் பொண்ணு என்னம்மா ஜொலிக்கறா! விழா முடிஞ்சதும், சுத்திப் போடனும் என் கண்ணுக்கு” என்றவர் மகளை நெட்டி முறிக்கப் போக,

“அம்மா! மேக்கப் கலைஞ்சுடும்! தொடாதே!” எனக் கத்தினாள் பெண்.

“சரிடி, சரிடி!” எனச் சிரித்தவர்,

“கொஞ்ச நேரத்துல என்ன ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா இவ! யம்மா பொண்ணு, உன் புருஷனுக்கும் உனக்கும் டிபன் எடுத்து வைக்கறேன்! வந்து சாப்பிடுங்க! பங்ஃசன் ஆரம்பிச்சிட்டா அந்த தம்பிக்கும் வேலை சரியா இருக்கும்!” என அழைத்தார்.

உணவுப் பந்தலில் இவளை அமர வைத்தவர், அருணையும் போய் அழைத்து வந்தார். இலை போட்டு இருவருக்கும் பரிமாறியவர்,

“ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் அவ்ளோ அருமையா இருக்கு! சீக்கிரம் புள்ளக் குட்டிங்கள பெத்து சௌபாக்கியமா இருக்கனும்” என வாழ்த்தி விட்டு நகர்ந்தார்.

“ரெண்டு பேரும் தனித்தனியா பிள்ளைக் குட்டிப் பெத்துக்கப் போறோம்னு தெரியாம வாழ்த்திட்டாங்க! நீ மைண்ட் பண்ணிக்காதே மொழி” என்றவன், அவளுக்குப் பிடித்த ஜாங்கிரியை தன் இலையில் இருந்து எடுத்து அவள் இலையில் வைத்தான்.

“உங்க ஜாங்கிரியும் வேணா, ஒரு மண்ணும் வேணா!” எனக் கோபமாக எழ முயன்றவளைக் கைப்பிடித்து அமர வைத்தான் இவன்.

“மொழி, மொழி! இன்ஸ் கிட்ட எனக்கு மொத்து வாங்கிக் குடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா! அம்மா தாயே, இங்கிருந்து கிளம்பற வரைக்கும் என் ஆசை பொண்டாட்டியா நடிச்சிடும்மா! இல்லைனா எனக்கு லாடம் கட்டிடப் போறாரு!” எனச் சொல்லி முடிப்பதற்குள் ஜாங்கிரியை அவன் வாயில் திணித்திருந்தாள் இவள்.

“என் பொண்ணுக்குதான் இன்னிக்கு விழா! உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண விழா போல ஊட்டி விட்டுக்கறீங்க” எனக் கிண்டலடித்தபடி இலையை நிரப்பி விட்டுப் போனார் இன்ஸ்.

அதன் பிறகு அருணின் வேலை ஆரம்பித்தது. இவனது உதவியாளன் விடுமுறை எடுத்திருந்ததால் தனியாகதான் வந்திருந்தான் அருண். இவள் வந்திருக்கவும், கிடைத்து அடிமையென இதை செய் அதை செய் என அமுதமொழியை வேலை வாங்கி விட்டான். நிகழ்ச்சியை முடித்து, இன்னும் பெண்ணைத் தனியாக வித விதமாகப் படம் எடுத்து கிளம்பவே மணி பத்துக்கும் மேலாகிப் போனது.

“மொழி, ஐம் டேம்ன் ட்யர்ட்! நீ ட்ரைவ் பண்ணறியா?” எனக் கேட்டு அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் சாவியை அவளை நோக்கி வீசியவன், மறுபக்கம் வந்து அமர்ந்துக் கொண்டான்.

இவள் காரை செலுத்த, சீட்டில் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டான் அருண். இவளும் ஒன்றும் பேசாமலே வந்தாள். வீட்டு வளாகம் வந்தும் கூட, உறக்கத்தில் இருந்தான் அருண். காரை பார்க் செய்தவள், காரின் முன் விளக்கை அணைத்து விட்டு, அவன் தூங்கட்டும் என அப்படியே அமர்ந்திருந்தாள்.

நிலவொளியில் வரிவடிவமாக தெரிந்தவனையே கண்ணெடுக்காமல் காதல் மிகப் பார்த்திருந்தாள் கன்னி. காரின் ரேடியோவோ மெல்லிய சத்தத்தில், கொடியிலே மல்லிகைப்பூ என பாடலை ஆரம்பித்திருந்தது.

தனிமை, இனிமை, குளுமையென மூன்று மையும் காதல் கொண்ட வஞ்சியின் இளமையைத் தூண்ட, மெல்ல நகர்ந்து அவனது முகத்தை நெருங்கி, உள்ளே வெளியே என சடுகுடு ஆடிக் கொண்டிருக்கும் அவன் மூச்சுக் காற்றை சுவாசித்து முழுமைப் பெற்று முக்தியடைய முயன்றாள் முல்லைக்கொடி.

“மனசு தடுமாறும்

அது நெனைச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும்

ஒரு தயக்கம் தடை போடும்”

தயக்கம் உடைத்து அவன் கன்னத்தை மெல்ல இரு கைக் கொண்டு தீண்ட, பட்டென விழித்துக் கொண்டான் அருணகிரி.

தன் முன்னே முழு நிலவாய் ஆரஞ்சு வர்ண பெண் பிம்பம் கண்டவனுக்கு கனவா நனவா எனப் புரியாத மயக்க நிலை. நடுங்கிய கைகளைத் தூக்கி அவளை இழுத்து மடி மேல் அமர்த்திக் கொண்டவன், பெண் முகத்தை கைகளால் ஏந்திக் கொண்டான்.

கண்ணும் கண்ணும் கலக்க, அவள் கண்ணில் தெரிந்த மயக்கம் இவனைத் தாக்க, மொழியின் முகம் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், அவள் உதடெனும் புதைக்குழியில் விழுந்துப், புதைந்து, சிதைந்துப் போனான். பல நாள் நீரில்லாமல் பாலைவனத்தில் தத்தளித்த வழிப்போக்கனாய், உமிழ்நீரை அள்ளிக் கொடுத்து தாகம் தணித்தவளின் செம்பவழ வாய் மலரில் கட்டுண்டு கிறங்கிப் போனான்.

மூச்சு விட சிரமப்பட்டவளை, தன் உதடெனும் சிறையில் இருந்து விடுவித்தவன்,

“மொழி! மொழி! மொழி!” என மந்திர உச்சாடனம் செய்தவன் அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தான்.

தவிப்பு அடங்காமல் இன்னும் இன்னும் கூடிப் போக, தனது நெஞ்சில் அவள் முகத்தைப் பொத்தி வைத்துக் கொண்டவனின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிந்தது.

“பொத்தி வச்சா அன்பு இல்ல

சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல

இன்ப துன்பம் யாரால!!!!”

(நீளுமா….)

(இன்னிக்கு எபிய படிச்சுட்டு கண்டிப்பா நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போங்க டியர்ஸ்… 😊 போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட செல்லங்களுக்கு நன்றி. பாப்பா லேப்டாப் குடுக்க மாட்டறான்னு சொன்னதுக்கு லேப்டாப், போன்லாம் தரேன்னு சொன்ன அந்த அன்பு கண்மணிக்கும் நன்றி. நீங்க சொன்னதே எனக்கு பெரிய பூஸ்ட் டியர். அதுவே போதும் 😊 அடுத்த எபில சந்திக்கலாம் டியர்ஸ்! லவ் யூ ஆல்.)