En Ayul Neelumadi–EPI 18

273046404_1018660852054582_3314744799217173998_n-f2ec5f1f

அத்தியாயம் 18

 

இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டுப் படுத்த அருணகிரிக்கு, காலையில் கேட்ட அலாரச் சத்தத்தில் கண்ணைத் திறக்கவே முடியவில்லை. மெல்ல எழுந்து அமர்ந்தவனுக்கு, தலையை யாரோ சம்மட்டியால் நங்கு நங்கென அடித்தது போல வலி பிளந்தது. கண்களை மூடி இரு கரங்களாலும் தலையை அழுத்திக் கொண்டவனின் புருவ மத்தியில் தியானத்தின் போது ஒளி வட்டம் வருவது போல சட்டமாய் வந்து நின்றாள் அமுதமொழி.

தியானிப்பவர் அந்த ஒளி வட்டத்தில் முழு கவனத்தையும் குவித்து சித்தி அடைய முயல்வது போல, இவனும் தன் முழு கவனத்தையும் அவள் பிம்பத்தின் மேல் பதித்து முக்தி அடைய முயன்றான். இவன் கண்ணுக்குள் அவள் அழகாய் புன்னகைத்தாள், முடியை ஒதுக்கினாள், கண்ணை சிமிட்டினாள், உதட்டை பிதுக்கினாள், திக்கித் திணறிப் பேசினாள், இவன் கொடுத்த முத்தத்தை வெட்கச் சிவப்புடன் ஏற்றுக் கொண்டாள்.

கடைசி பிம்பத்தில் பட்டென கண்ணைத் திறந்தவனுக்கு, மீண்டும் ஓடி வந்து நெஞ்சில் பாராங்கல்லாய் அமர்ந்துக் கொண்டது குற்ற உணர்வு.

“அறிவு கெட்டவனே! தூக்கக் கலக்கமா இருந்தாலும் உன்னோட செல்ப் கண்ட்ரோல் எங்கடா போச்சு! அவ, அவ..இன்னொருத்தனுக்கு மனைவியாகப் போறவடா! அவள போய்! எப்படிடா அருண்!!!!! ப்ளடி பிஸ்கட்! உன்னைலாம் பிஞ்சுப் போன செருப்பால விளாசனும்டா!” எனத் தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், நெற்றியில் பட் பட்டென அறைந்துக் கொண்டான்.

மதி மயங்கி நின்றவளை இறக்கி விட்டு விட்டு, ஒன்றுமே சொல்லாமல் கோழைப் போல ஓடி வந்திருந்தவனுக்கு, தாளவே முடியவில்லை. அவளோ அம்முத்தத்தின் வழி என்ன கண்டுக் கொண்டாளோ, புற முதுகிட்டு ஓடுபவனைக் கண்டு அப்படி ஒரு புன்னகை அந்தப் பூமுகத்தில். சைட் வியூ கண்ணாடி வழி பார்த்தவனை, ‘உன்னை நானறிவேன், என்னையன்றி யாரறிவார்’ என்பது போல பார்த்தவளின் பார்வை, இவன் ஈரக்குலையை நடுங்க வைக்க ஆக்சிலேட்டரை வேகமாய் அழுத்திப் பறந்திருந்தான்.

“முட்டாள்! இவ்வளவும் செஞ்சிட்டு கடைசில ஒரே ஒரு முத்தத்துல எல்லாத்தையும் தட்டிக் கொட்டிக் கவுத்துட்டியேடா!” என ஒரு பக்க மனசாட்சி கீரியாய் கிழித்தெடுக்க,

“அவன் என்ன செய்வான்! தூக்கத்துல இருந்து முழிக்கறப்போ தேவதை மாதிரி ஒரு பொண்ணு, கண்ணுல காதலோட முகத்த உரசிக்கிட்டு நின்னிருந்தா புத்தனும்தான் சித்தம் தடுமாறுவான். இவன் பிசாத்து பித்தன், புத்தி பேதலிக்காம இருக்குமா! குடுத்துட்டான், குடுத்துட்டான்னு மொதப் புடிச்சுத் திட்டிட்டே இருக்கே!” என இன்னொருப் பக்க மனசாட்சி பாம்பாய் படமெடுத்தாடியது.

கீரியும் பாம்பும் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள, தலை இன்னும் வலிக்க ஆரம்பித்தது இவனுக்கு.

“அருண்!” எனும் சத்தமும், கதவு திறக்கும் ஓசையும்தான் இவனை ஒரு நிலைப்படுத்தியது.

கையில் காபி கப்புடன், உள்ளே நுழைந்தார் மைத்ரேயி! கண்கள் சிவந்துக் கிடக்க, தலைக் கலைந்து, முகம் கசங்க அமர்ந்திருந்த மகனைப் பார்த்தவருக்கு மனதைப் பிசைந்தது. காபி கப்பை மேசையில் வைத்தவர்,

“என்னடாம்மா? நைட் சரியா தூங்கலியா?” எனக் கேட்டார்.

அருகில் நின்றிருந்த மைத்தியின் இடுப்பைக் கட்டிக் கொண்டவன்,

“என்னால இந்த டார்ச்சர தாங்க முடியலை மீ!” எனக் குரல் கரகரக்க சொன்னான்.

மைத்ரேயியின் வயிற்றில் தலை வைத்திருந்தவனின் அழுத்தம், என்னவோ அப்படியே மீண்டும் தாயின் கருவறையில் நுழைந்து பாதுகாப்பாய், கதகதப்பாய், கவலைகளின்றி அங்கேயே இருந்து விட மாட்டோமா என்பது போல இருந்தது. மகனின் தலையை மெல்ல கோதிக் கொடுத்தார் மைத்தி.

வயிற்றுப் பகுதியில் ஈரத்தை உணர்ந்தவருக்கு மகன் அழுகிறான் எனப் புரிந்தது.

“மீ! தப்புப் பண்ணிட்டேன் மீ!” என விடாமல் பாராயணம் செய்தவனுக்கு அழுகை நிற்கவேயில்லை.

ஒற்றைப் பிள்ளையாய் பிறந்திருந்தவனுக்கு, பெற்றவர்கள் இருவரிடமும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. இவன் எது கேட்டாலும் அது நியாயமானதாய் இருந்தால், இவர்கள் இருவரும் அதை நிறைவேற்றி வைப்பதில் தயக்கம் காட்டியதே இல்லை. அதே வேளை அது சரியில்லை என்றால், கறாராய் நோ சொல்லி விடுவார்கள். அத்திப் பூத்தாற் போல வரும் அந்த நோக்களை இவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அழுது தன் காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்ப்பான். பத்து பன்னிரெண்டு வயது வரை கூட இந்த அழுகை ஆர்ப்பாட்டமெல்லாம் இருந்தது அருணிடம். அதன் பிறகு எங்கிருந்து கேட்டானோ தெரியாது ஆண்கள் அழக் கூடாது என்பதை, இவர்கள் முன்னால் அழுவது அறவே நின்றிருந்தது. தன் காரியத்தை சாதித்துக் கொள்ள மற்ற வழிகளைப் பயன்படுத்துவானே தவிர கண்ணீர் எனும் ஆயுதத்தை எடுப்பதை நிறுத்தி இருந்தான்.    

அப்படிப்பட்ட மகன் அழுவது மைத்திக்கு ரத்தக் கண்ணீரை வரவழைத்தது.

“அழாதடா மை சன்! எனக்கும் அழுகை வருது” என இவர் சொல்ல, அழுகை நின்றுப் போனது இவனுக்கு.

தன் அம்மாவை நிமிர்ந்துப் பார்த்தவன்,

“மீ!” என,

“என்னடா?” எனக் கேட்டார் மைத்தி.

“நான்…”

“நீ…”

“வந்து..”

“சொல்லு..”

“நேத்து நைட், மொழிய கிஸ் பண்ணிட்டேன்!” என பட்டென சொல்லி விட்டான்.

அடுத்த நொடி…பளார்!!!!!!

“மீ!!!!!”

“என்னடா மீ! என்ன மீ!!!! அவள நெருங்காதேன்னு படிச்சு படிச்சுதானே சொன்னேன்! இப்போ வந்து கிஸ் பண்ணிட்டேன்னு என் கிட்டயே சொல்லற?”

பட்பட்டென முதுகில் வேறு விழுந்தது அடி!

“அடி மீ! நல்லா அடி! நீ குடுக்கற ஒவ்வொரு அடியும் அவள பார்க்கறப்பலாம் ஞாபகம் வந்து என்னைத் தள்ளி நிக்க வைக்கனும்! அடி மீ! அடி!”

கை வலிக்க ஆரம்பிக்க, அடிப்பதை நிறுத்தியவர் பொத்தென அவன் அருகே அமர்ந்தார்.

“என்னடா செய்யறது இப்போ?”

இப்பொழுது தலையைப் பிடித்துக் கொள்வது இவர் முறையானது.

“இப்படி சொதப்பிட்டேனே மீ! செத்தா, சத்தியமா எனக்கு நரகம்தான்!”

“அடப்போடா! வாழறப்பவே நரகத்த கண் முன்ன கொண்டு வந்துக் காட்டறான் மேல உள்ளவன். மேலோகத்து நரகம், கீழோகத்து நரகத்த விட பெட்டராதான் இருக்கும். அந்த நரகத்துல தப்பு செஞ்சவங்களுக்குத்தான் தண்டைனையாம், இந்த நரகத்துல தப்பே செய்யாதவங்களையும் போட்டு கண்ட மேனிக்கு தண்டிச்சிடுறாங்க! கேட்டா விதிப்பயன், கர்மா, பித்ரு தோஷம்னு சொல்லிடறாங்க!” என்றவரின் குரலில் ஆற்றாமையும் இயலாமையும் பொங்கி வழிந்தது.

“மீ!!!” என்றவனுக்கு மீண்டும் கண்கள் உடைப்பெடுத்தது.

விட்டால் இன்னும் இன்னும் அழுவான் என நினைத்தவர், அவனைத் திசைத் திருப்ப,

“இன்னிக்கு பல்ல விளக்குவியா?” எனக் கேட்டார்.

“ஏன் மீ? ஏன் இந்தக் கேள்வி?”

“கதாநாயகி கையில முத்தம் குடுத்துட்டா, குளிக்காம, கையைக் கழுவாம திரிவாங்க நம்ம ஹீரோங்க. அந்த மாதிரி வாயக் கழுவாம திரியப் போறியோன்னு கேட்டேன்!”

அழுகை முகம் மாறி புன்னகை முளைக்க,

“மொழி ஞாபகமா, வெளக்காம இருந்துடவா மீ?” எனக் கேட்டான் அருண்.

“வெளக்கமாரு பிஞ்சிடும்! ஓடு, ஓடு! போய் ப்ரஷ் பண்ணிட்டு வா! காபி ஆறுது”

குளியலறைக்குள் அவன் நுழைந்ததும்தான் இவருக்கு கண்களில் அருவி இறங்கியது.

“ஐ ஹேட் யூ கிரி! ஐ ஹேட் யூ!” என இறந்துப் போன கணவரை கண்ணீருடன் திட்டித் தீர்த்தார் மைத்ரேயி!

அன்று காலை பத்து மணிக்கெல்லாம் ஒரு போட்டோஷூட் இருந்தது ஸ்டூடியோவில். அப்பொழுதுதான் காலேஜ் முடித்திருந்த மூன்று இணைப்பிரியா தோழிகள் புகைப்படம் எடுக்க வந்திருந்தார்கள். ஒரே மாதிரி சேலை, கவுன், சுடிதார், ஜீன்ஸ், டீஷர்ட் என பல உடைகள் மாற்றி, அதற்கேற்றது போல முக அலங்காரம், தலை அலங்காரம் என அல்லோலகல்லோலப்பட்டது ஏ.ஜி ஸ்டூடியோ.

ஒற்றை ஆளாய் மூன்று துடிப்பான பெண்களை சமாளிப்பதற்குள் போது போதுமென ஆகிவிட்டது அமுதமொழிக்கு. அருணோ புகைப்படம் எடுக்கும் வேலையை மட்டும் பார்த்தான். இவளிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும், இந்த தலையலங்காரம் வை, அந்த லிப்ஸ்டிக் போடு, மஸ்காராவை இன்னும் அழுத்தமாக போடு என ஆயிரம் சொல்பவன் இன்று ஊமைகிரியாய் வலம் வந்தான். அமைதியே உருவாக வலம் வரும் இவளோ இன்று உற்சாகமொழியாய் அவதாரம் எடுத்திருந்தாள்.

இவள் அடிக்கடி அருணை நோக்கி காதல் பார்வைகளை வீச, அவனோ கர்மமே கண்ணாகிப் போனான். புகைப்படம் எடுத்ததும் பெண்கள் கிளம்பிப் போக இவன் எடிட்டிங் அறையில் புகுந்துக் கொண்டான்.

கையில் காபியுடன் அவனைத் தேடிப் போனாள் அமுதமொழி. பாதி வழியில் அவளை இடைமறித்த மைத்தி,

“என்னம்மா?” எனக் கேட்டார்.

“அருண் சாருக்கு தலை வலி போல! நெத்திய தடவிட்டே இருந்தாரு! அதான் காபி!”

“நான் குடுத்துடறேன்! நீ மத்த வேலையைப் பாரு மொழி” என சொல்லி அவள் கையில் இருந்த கப்பை வாங்கிக் கொண்டார் மைத்தி.

இரண்டு எட்டு எடுத்து வைத்திருக்க,

“எனக்கு என் கிரி வேணும்!” எனும் குரலில் அப்படியே அசையாமல் நின்றார் இவர்.

“ப்ளிஸ் மைத்தி ஆண்ட்டி! என் குடும்ப பிண்ணனியால என்னையும் கிரியையும் பிரிச்சிடாதீங்க! அவருக்கு என் மேல அன்பு, அக்கறை, பாசம், கனிவு எல்லாமே இருக்கு! முக்கியமா நெஞ்சு முழுக்க காதலும் இருக்கு! அந்தஸ்த்து, தராதரம், பரம்பரை மேல நீங்க வச்சிருக்கற மதிப்புனாலதான் உங்களையும் விட்டுக் குடுக்க முடியாம, என்னையும் விட்டுக் குடுக்க முடியாம தவிக்கிறாரு அருண்! ப்ளிஸ், ப்ளிஸ் ஆண்ட்டி! ப்ளிஸ் எனக்கு என் கிரி வேணும். எங்கள சேர்த்து வைங்க ஆண்ட்டி” என மைத்தியின் இன்னொரு கரத்தைப் பற்றிக் கொண்டு கெஞ்சவே செய்தாள் பெண்.

அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்த மைத்தி,

“கண்டபடி உளறாதே மொழி! அவனுக்கு உன் மேல பரிதாப உணர்வு மட்டும்தான். தோழியா நினைச்சானே தவிர துணையா நினைக்கல!” எனக் கடுமையாக சொன்னார்.

மெல்ல தலையை இடம் வலம் ஆட்டியவள்,

“இத்தனை நாளா கிரிக்கு என் மேல நாட்டம் இருக்குன்னு என் உள்ளுணர்வு சொல்லிட்டே இருந்துச்சு! நேத்து அத அவர் ரெண்டு கண்ணுலயும் பார்த்தேன்! என் மேல வச்சிருக்கற கடலளவு காதல அந்த ரெண்டு கண்ணுலயும் பார்த்தேன் ஆண்ட்டி!” என்றவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

ஒரு சீறலான மூச்சுடன்,

“கிரி, கிரின்னு பினாத்துறியே, அப்போ அந்த நிர்மலுக்கு அல்வா குடுத்துட்டியா?” எனக் கேட்டவரின் உடலெல்லாம் ஆடியது.

“ஆண்ட்டி!!!” என அதிர்ந்தவள், பின் மெல்லிய குரலில்,

“நீங்களா ஆண்ட்டி இப்படிலாம் பேசறீங்க? மனசு வலிக்குது ஆண்ட்டி!” என விம்மினாள்.

முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்ட மைத்தி, அழுத்தமாக நின்றார்.

“உங்க மகன்தான் நிர்மல பார்க்கக் கூட்டிப் போகும் போது, சட்டுன்னு நோ சொல்லிடாதே, யோசிச்சு சொல்லறேன்னு சொல்லுன்னு சத்தியம் கேட்டாரு! நிர்மல் கிட்ட யோசிச்சு சொல்லறேன்னு சொன்னேனே தவிர சரின்னு ஒத்தை வார்த்தை சொல்லல! அதுக் கூட மனச உறுத்தவும்தான் என் குடும்பப் பிண்ணனிய படார்னு போட்டு உடைச்சேன்! அதுக்கும் நிர்மல் அசரல. டின்னர் போகலாம்னு கூப்பிட்டப்போ, எனக்கு எல்லாமே கிரிதான்னு உடைச்சு சொல்லிடலாம்னுதான் கிளம்பிப் போனேன். அதுக்குள்ள போலீஸ் அது இதுன்னு” என நிறுத்தியவள், ஆழ மூச்செடுத்து,

“அன்னைக்கு நைட், கிரி எங்கள தனியா விட்டுட்டுப் போனதும்”….

“உனக்கு ஒன்னும் இல்லைல மொழி? ஆர் யூ ஓகே?” எனக் கேட்டான் நிர்மல்.

“நான் நல்லா இருக்கேன் நிர்மல் சார்”

“சாரி மொழி! ரியலி சாரி!”

“பரவாயில்ல! உட்காருங்க சார், நான் பேசனும்”

யோசனையாக அவளைப் பார்த்தவன்,

“நோ சொல்லப் போறியா?” எனக் கேட்டான்.

இவள் வாயைத் திறப்பதற்குள்,

“இல்ல இல்ல சொல்லாதே! டைம் எடுத்துக்கோ! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோ! நோ மட்டும் சொல்லாதே!” என சொன்னவன் கிளம்ப முற்பட,

“நான் அருண காதலிக்கறேன் நிர்மல் சார்! அவர மனசுல வச்சிக்கிட்டு யாரையும் எதையும் என்னால யோசிக்க முடியாது! என்னை மன்னிச்சிடுங்க” என பட்டென சொல்லி விட்டாள் இவள்.

“நீ காதலிச்சா போதுமா அமுதமொழி? அவன் உன்னைக் காதலிக்கலியே! என் கூட சேர்த்து வைக்கல்ல ட்ரை பண்றான்!”

“அவர் காதலிக்கலனா என்ன சார்! அவருக்கும் சேர்த்து நானே காதலிச்சுட்டுப் போறேன்!”

“அதையே நானும் சொல்லலாம்ல அமுதமொழி?”

“சார்!!!” எனப் பரிதாபமாக முழித்தாள் இவள்.

“ஈசி! ஈசி! எத்தனையோ பொண்ணுங்கள சர்வ சாதாரணமா ரிஜேக்ட் பண்ணேன்! இப்போ என்னை ஒரு பொண்ணு ரிஜேக்ட் பண்ணுறப்போ ரொம்ப வலிக்குது! என்னமோ போ, என்னைத் திரும்பிப் பார்க்காமலே, சிரிச்சுப் பேசாமலே, கண்ணை சிமிட்டாமலே என் மனசைத் திருடிட்டே! உன்னை விட்டுக் குடுக்கவே முடியல! அட் லிஸ்ட் உன் ப்ரேண்டாவாவது இருக்க விடுவியா?”

“வேணா சார்! ரெண்டு பேருக்குமே அது தர்மசங்கடமா இருக்கும்”

“உனக்கு அருண் வேணுமா வேணாமா?”

“வேணும்!”

“அப்போ நீ இன்னும் யோசிக்கற மோட்ல இருக்கற மாதிரியே காட்டிக்கலாம்! இப்போ லேசா பொசெசிவ்னஸ்ல என்னை அறைஞ்ச மாதிரி, இன்னொரு முறை கோபத்துல உன் கிட்ட லவ்வ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்குவான்! அப்படியும் ஒத்துக்காம வேற கல்யாணம் காதல் அப்படின்னு போய்ட்டா, நீ எனக்குதான்! காலம் முழுவதும் அவனுக்கு ஏங்கி நிக்காம, ப்ராக்டிக்கலா மனச கழுவி விட்டுட்டு, என்னை ஏத்துக்கனும்! சரியா?”

“என் மனசு என்ன மார்கழி மாசத்து வாசல் தரையா? அழிச்சு, அழிச்சு வேற கோலம் போட! கிரின்னு பச்சைக் குத்தியாச்சு நிர்மல் சார்! அழிக்க முடியாது”

“அடப் போம்மா! பச்சைக் குத்துனத அழிக்க முடியலைனாலும் அது மேலயே இன்னொரு டிசைன் போட்டு வேற மாதிரி மாத்திடலாம்” என தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் நிற்பவனை இயலாமையுடன் பார்த்தாள் மொழி. (இங்க நான், நிர்மல கெட்டவனா/ வில்லனா காட்டலாம்! அப்படி காட்டுனா அவன திட்டிட்டு நாம கைக் கழுவிடுவோம்! ஆனா எனக்கு அப்படிக் காட்டப் புடிக்கல! ஏன் காட்டனும்? அவனோடதும் காதல்தான். ஓன் சைட் லவ்! அதை நிறைவேத்திக்க அவன் முயற்சி செய்யறான். சில பெத்தவங்க தன் குழந்தைக்கு இது பண்ணனும் அத பண்ணனும்னு என்னென்னவோ பண்ணுவாங்க! ஆனா குழந்தையோட ஆசை என்னென்னு கேக்கமாட்டாங்க! அந்த பெத்தவங்க மாதிரிதான் அருணும் நல்லது செய்யறேன்னு நெனைச்சி இவளை நிர்மலோட கோர்த்து விடறான். இதுல ரெண்டு பேருமே அமுதமொழியோட மனசப் புரிஞ்சுக்கல! இந்த சிட்டுவேஷன்ல அமுதமொழிதான் விக்டிம் என்னைப் பொறுத்த வரை)

விஷயத்தை மைத்தியிடம் சொன்னவள்,

“நான் என் மனச தெளிவா நிர்மல் கிட்ட சொல்லிட்டேன் ஆண்ட்டி! ஆனாலும் பிடிவாதமா இருக்காரு! நீங்க போன் செஞ்சு அழைக்கவும் விருந்துக்கும் வந்தாரு! என்னை பேச்சுல சீண்டிட்டே இருந்தாரு! நீங்களும் அவருக்கு பரிஞ்சு ஏன், ஏன் புடிக்கலன்னு என் கிட்ட கேட்டீங்க! உங்க முன்னுக்கு அவர அவமானப்படுத்தக் கூடாதுன்னுதான் ஏற்கனவே முடியாதுன்னு சொல்லி இருந்தும், உங்க முன்னே யோசிக்கறேன்னு சொல்லி வச்சேன்! ஆனா ஆண்ட்டி, கட் அண்ட் கிளியரா சொன்ன பிறகும் நிர்மலும் என்னைப் புரிஞ்சுக்கல! கிரியும் என்னைப் புரிஞ்சுக்கல! அவங்க ஆம்பிளைங்க ஆண்ட்டி! இன்சென்சிடிவா பிஹேவ் பண்ணுவாங்க! ஆனா என் மைத்தி ஆண்ட்டி!!!! எப்படி ஆண்ட்டி, இப்படிலாம்!!! இந்த மாதிரிலாம் இனி பேசாதீங்க ஆண்ட்டி! என் அம்மாவுக்கு பிறகு உங்களதான் அந்த இடத்துல வச்சிருக்கேன்! கிரிய குடுக்க முடியாதுன்னு வேணா சொல்லுங்க! நான் கஸ்டப்பட்டு அத தாங்கிக்க முயற்சி பண்ணுவேன்! ஆனா நீங்க…நீங்க..உங்க நல்ல பிம்பம் சுக்கு நூறா உடைஞ்சிப் போறத என்னால தாங்கிக்கவே முடியாது ஆண்ட்டி!” எனக் கண்கள் கலங்கிப் போய் சொன்னாள்.

மைத்தியின் கண்களில் இருந்தும் கண்ணீர் கரகரவென இறங்கியது. இருவரும் மூடி இருந்த எடிட்டிங் அறை வெளியே நின்றுதான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே இருந்து படாரேன சத்தம் வர, காபி கப் ஒரு பக்கம் விழ மைத்தியும், அமுதமொழியும் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே ஓடினார்கள். அங்கே கடற்கரையில் நடனமாடிய மொழி, மழையில் நனைந்து நின்ற மொழி, ஊட்டி குளிருக்கு கன்னத்தைத் தேய்த்துக் கொண்டிருந்த மொழி, மங்களகிரி சேலையில் எழிலாய் நின்றிருந்த மொழி, ஜாக்சனை அணைத்திருந்த மொழி, ஸ்கூட்டரில் இருந்து இறங்கி தலை முடியை சரி செய்யும் மொழி, மஜெந்தா கவுனில் எழில் ஓவியமாய் புன்னகைத்த மொழி என மொழியின் நிழற்படங்களின் மத்தியில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துக் கிடந்தான் அருணகிரி.  

“கிரி!!!!!!!!”

“அருண்!!!!!!!”

 

 

(நீளுமா………)

 

(கதைய நெறைய பேர் கெஸ் பண்ணிட்டீங்க! அடுத்த எபில எல்லாம் தெரிஞ்சிடும்! போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! அடுத்த எபியில் சந்திக்கும் வரை லவ் யூ ஆல்……)