En Ayul Neelumadi–EPI 19

273046404_1018660852054582_3314744799217173998_n-6b012da7

அத்தியாயம் 19

“மல்டிபிள் ஸ்க்ளோரோசிஸ்”

“ஹான்!!!! தமிழ்ல என்னன்னு சொல்லுங்க டாக்டர்” எனக் கேட்ட அமுதமொழிக்கு படபடவென வந்தது.

“தண்டுவட மரப்பு நோய்னு சொல்லலாம்”

“இதனால என்..என்..கிரியோட உயிருக்கு ஆபத்தா டாக்டர்?”

முகம் முழுக்க பயமும் கவலையும் அப்பிக் கிடக்க, உதடு துடிக்க அழுகையை அடக்கியபடி தன் முன்னே அமர்ந்திருக்கும் இந்த அழகியப் பெண்ணை பரிதாபமாகப் பார்த்தார் டாக்டர் கேசவன். எழுந்துப் போய் தனது குட்டி குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து வந்தவர், அவள் முன்னே வைத்தார்.

“முதல்ல தண்ணி குடிம்மா”

வேகமாய் அதை எடுத்துத் திறந்து கடகடவென பருகியவள், வாயைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

“சொ..சொல்லுங்க டாக்டர்!”

“உடனடியா இதனால உயிருக்கு ஆபத்து இல்லம்மா! இந்த நோய் பத்தி நம்ம நாட்டுல அவ்ளவா அவேர்னஸ் இல்ல! ஏன்னா இங்க லட்சத்துல ஒருத்தருக்குதான் இது பீடிக்குது. அந்த லட்சத்துல ஒருத்தரா அருணகிரியும் இருக்கறது ரொம்ப வேதனையான விஷயம்தான்” என்றவர் தனது இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டார்.

இவருக்குமே மனது வலிக்கதான் செய்தது. அவரது அருமை நண்பன் கிரியின் மகனல்லவா இந்த அருணகிரி. அவனது பிறப்பில் இருந்து, வாழ்க்கையின் அடுத்த அடுத்தக் கட்டத்துக்குப் போகும் போதெல்லாம் பெருமையாக ‘என் மகன்டா’ எனும் கிரியின் சந்தோச ஆர்ப்பாட்டங்களைக் கூட இருந்துப் பார்த்தவராயிற்றே இவர். பெருமூச்சுடன் தன் முன்னே அமர்ந்திருந்தவளை ஏறிட்டு நோக்கினார் அவர்.  

‘ஏன்! ஏன்! என் கிரிக்கு ஏன் இப்படி ஆகனும்? நாட்டுல எத்தனையோ ரேப்பீஸ்ட் இருக்கான், கொலைகாரன் இருக்கான், கஞ்சா விக்கறவன் இருக்கான், புள்ளைங்கள கடத்தறவன் இருக்கான்! அவனுக்கெல்லாம் வர வேண்டியதுதானே! என் கிரிக்கு ஏன் வரனும்!’ என இவள் மனம் துடியாய் துடித்தது.

“இந்த தண்டுவட மரப்பு நோய் பத்தி எனக்குப் புரியற மாதிரி தெளிவா..தெளிவா சொல்லுறீங்களா டாக்டர்?”

டாக்டர் தொழிலிலே கஸ்டமான விஷயம் என்பது என்னவென்றால் ஒரு நோயாளி இறந்து விட்டதை சொந்தங்களிடம் தெரிவிப்பதும், தனக்குயிரானவர்களுக்கு உடலளவில் என்ன நடக்கிறது என கதறும் சுற்றத்திடம் பிரச்சனையை விளக்குவதும்தான். இத்தனை வருடங்களில் பல துக்க நிகழ்வுகளைக் கடந்து விட்டாலும், மனது மட்டும் மறத்துப் போகாமல் இருந்து விடுகிறது சில ஈரமுள்ள மருத்துவர்களுக்கு.

“நம்ம உடல்ல நரம்போட செயல்பாடு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நரம்புகள பாதுகாக்கற பெட்டகம் அல்லது உறைய நாம மையலின்னு சொல்லுவோம். இந்த மையலின(myelin) நோய் எதிர்ப்பு சக்தி அணுக்கள் தாக்கறப்போ, அது சேதமடைஞ்சிடுது. அது சேதமடைஞ்சிட்டா என்னாகும்? நம்ம நரம்போட செயல்பாடு பாதிக்கப்படும். இதுதான் மல்டிபிள் ஸ்க்ளோரோசிஸ்! மல்டிபிள்னா பல தடவைன்னும், ஸ்க்லோரோசிஸ்னா மையலின்ல ஏற்படுற காயங்கள்னும் சொல்லலாம். இது நம்ம மூளை மற்றும் தண்டுவடத்தைதான் ரொம்ப அபெஃட் பண்ணும்”

“டாக்டர்! புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு! வந்து..எங்கள மாதிரி சாதாரண மக்கள் புரிஞ்சுக்கற மாதிரி சொல்றீங்களா?” எனக் கேட்டாள் இவள்.

“இன்னும் சிம்பிளா சொல்லனும்னா, நம்மோட மனித உடல் செயல்பாடே மூளை நரம்புகளுக்கு அனுப்பற சிக்னலாலதான் நடக்குது. இப்போ தாகம் எடுக்குதுன்னு வையேன்! நீ என்ன செய்வ?”

“தண்ணிக் குடிப்பேன்!”

“யெஸ்! ஆனா அந்த தண்ணி குடிக்கற சாதாரண செயலுக்குப் பின்ன எவ்வளவு நரம்புகள் வேலை செய்யுதுன்னு தெரியுமா உனக்கு? தாகம் எடுக்குதுன்னா தண்ணி குடிக்கனும்னு மூளை, நரம்பு மூலமா சிக்னல் அனுப்பி நம்ம உடம்ப செயல்பட வைக்கும். நரம்பு கொண்டு வந்த சிக்னல ஏத்து நம்ம கால் கிச்சனுக்கு நடந்து போகுது. கை கிளாச எடுத்து தண்ணிய ஊத்தி, வாயில வச்சி குடிக்க வைக்குது! தொண்டை அதை முழுங்கிக்குது. தாகம் தீர்ந்ததுனா, நரம்பு வழி சிக்னல் மூளைக்குப் போய் தண்ணி தாகம் தீர்ந்ததுனு சொல்லுது. அப்படி தீரலையா, இன்னும் தண்ணி வேணும்னு மூளை, நரம்பு மூலம் சிக்னல் அனுப்ப, நம்ம உடல் அதே தண்ணி குடிக்கற ப்ரோசெச மீண்டும் செய்யுது. இதே மாதிரிதான் நாம செய்யற ஒவ்வொரு காரியமும் மூளை, நரம்பு வழி அனுப்பற சிக்னலாலதான் செய்யப்படுது. அந்த நரம்ப பாதுகாக்கற மையலின் சேதமடைஞ்சா நரம்புக்கு சிக்னல் போகிறது தடைபடுது. சிக்னல் போகலைனா நடக்க வேண்டிய காரியங்கள நம்மால செய்ய முடியாம போயிடும்! இந்த நோய் ஏன் வருது, எதுக்கு வருதுன்னு இன்னும் சரியான காரணங்கள் கண்டுப்பிடிக்கப்படல. நம்ம ஊர்ல ஹார்ட் அட்டாக் எப்படி சர்வ சாதாரணமோ அது போல மேலை நாடுகள்ல இந்த எம்.எஸ்(மல்டிபிள் ஸ்க்ளோரோசிஸ்) நெறைய பேருக்கு வந்துட்டு இருக்கு!”

“அதாவது இனிமே கிரியால எந்த காரியத்தையும் சொந்தமா செஞ்சுக்க முடியாதுன்னு சொல்றீங்களா?” எனக் கேட்டவளுக்கு அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்துக் கிளம்பியது.

பெண்களுக்கு அழுகை என்பது வரப்பிரசாதமல்லவா! எந்த துன்பம் வந்தாலும் சற்று நேரம் அழுது தீர்த்து விடுவதால், அடுத்து என்ன செய்யலாம் என அதன் பிறகு தெளிவாகவோ, தைரியமாகவோ முடிவெடுக்க முடிகிறது. அமுதமொழியையும் அப்படியே அழுக விட்டார் டாக்டர். அழுது தீர்த்தவள் அவர் நீட்டிய கைக் குட்டையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“கிரிக்கு எவ்ளோ சிவியரா இருக்கு இந்தப் பிரச்சனைன்னு சொல்லுங்க டாக்டர். நான் ஒரு கேர் டேக்கரா என்னென்ன செய்யனும்னும் சொல்லுங்க!” எனக் கேட்டாள் அமுதமொழி.

உணர்ச்சிவசப்பட்டாலும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல், நேரிடையாகக் கையில் இருக்கும் பிரச்சனைக்கு வந்தவளை அவ்வளவு பிடித்தது டாக்டருக்கு.

‘டேய் கிரிதரா! உன் பையன் அழகுல மயங்கிட்டான்னு நெனைச்சேன்! அருமையான, புத்திசாலியான பொண்ணாதான் பார்த்திருக்கான்’ என சிலாகித்துக் கொண்டார்.

“இங்க நான் எம்.ஆர்.ஐ, ப்ளட் டெஸ்ட்லாம் எடுத்துப் பார்த்துட்டேன். வெளிநாட்டுக்குப் போயிருந்தப்போ அங்கயும் டெஸ்ட் பண்ணிருக்கான் அருண். இப்போ பிகினிங் ஸ்டேஜ்ல இருக்கு. கண் பார்வை மங்கறது, சில சமயம் பார்க்கறதுலாம் டபுளா தெரியறது, கால் மரத்துப் போகிறது, உடம்புல தள்ளாட்டம், கையில நடுக்கம், ஓவர் டயர்ட்னஸ், சில சமயம் மயக்கம்னு நெறைய சிம்ப்டம்ஸ் இருக்கு அருணுக்கு. போக போக கண் தெரியாம போகலாம், கைகால் இழுத்துக்கலாம், நடக்க முடியாம போகலாம், மெமரி லாஸ் ஆகலாம். ஆனா கண்டிப்பா இதெல்லாம் நடந்துதான் ஆகும்னு இல்ல! வரலாம், வராமலும் போகலாம்! இப்போதைக்கு ஸ்டெரோய்ட்தான் மருந்தா குடுத்துட்டு இருக்காங்க. மருந்து எடுத்துகறப்ப சிம்ப்டம்ப்ஸ் குறைஞ்சு, நல்லா போயிடறது உண்டு. லெட்ஸ் சே, எம்.எஸ்னால ஒரு கண் தெரியாம போயிடுச்சுன்னா, மருந்து எடுத்துகறதுனால மீண்டும் பார்வை வரும். ஆனா மறுபடி சில மாதங்கள் அல்லது ஆண்டுகள்ல பார்வை போயிட சான்ஸ் இருக்கு. அல்லது இன்னோரு பக்க கண்ண பாதிக்கற வாய்ப்பு இருக்கு. இது அதோட இஸ்டத்துக்குதான் வேலையைக் காட்டும். யாராலும் ப்ரெடிக்ட் பண்ண முடியாது. அந்தந்த மனிதரோட உடல்நிலையைப் பொறுத்தும், நோயோட தாக்கத்தப் பொறுத்தும் சிம்ப்டம்ஸ் மற்றும் ரிக்கவரி மாறுபடும்! எதையும் அறுதியிட்டு இது இப்படிதான்னு சொல்ல முடியாது இந்த நோய்க்கு. கோரோனாவோடு சேர்ந்து வாழ்னு சொல்ற மாதிரி எம்.எஸ் உள்ளவங்க வாழ்நாள் முழுக்க அதோட வாழ்ந்துதான் ஆகனும்!”

இன்னும் கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் கேட்டு துளைத்தெடுத்தவள், இப்பொழுது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையெனும் விஷயத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் சமாதானமடைந்து அருணகிரியைப் பார்க்கக் கிளம்பினாள்.

“அமுதமொழி!” எனும் டாக்டரின் அழைப்பில் கதவில் கை வைத்தவள், திரும்பிப் பார்த்தாள்.

“இன் ஆட் அவுட்?”

“புரியல டாக்டர்!”

“இனி அருண் வாழ்க்கையில நீ இன்னா அவுட்டான்னு கேட்டேன்”

“டெபினட்லி இன்!” என்றவளின் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.

“ஆல் தீ பெஸ்ட் மை சைல்ட்!”

“தேங்க்ஸ் டாக்டர்”

‘கிரிதரா! மருமக உன் மகன கண்டிப்பா நல்லாப் பார்த்துப்பா! ஆனா நீதான் என் தங்கச்சியப் புரிஞ்சுக்காம சுயநலமா முடிவெடுத்துட்டடா ராஸ்கல்’ என நினைத்தவருக்குத் துக்கத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது.

அன்றைய தினம் எடிட்டிங் அறையில் இருந்த அருணகிரி, திடுமென தலை சுற்ற சரிந்து விழுந்திருந்தான். விழும் வேகத்தில் மேசையின் கூர் முனை நெற்றியைக் கிழித்திருக்க, அந்த இடமே ரத்த வெள்ளமாகி இருந்தது. பெண்கள் இருவரும் கத்தியக் கத்தில் ஓடி வந்த அருணின் உதவியாளன் ஆம்புலன்சை அழைத்திருக்க, இவர்கள் இருவரும் அதன் பின்னால் காரில் விரைந்தனர். தாங்கள் எப்பொழுதும் சிகிச்சை மேற்கொள்ளும் குடும்ப மருந்துவர் கேசவனின் மருத்துவமனைக்கே அருணைக் கொண்டு செல்லும்படி பணித்திருந்தார் மைத்ரேயி. பெண்கள் இருவரும் அங்கேயே ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருந்தனர்.

இரவெல்லாம் பொட்டுக் கண் மூடாமல் ஒருத்தர் கையை ஒருத்தர் பற்றியபடி அருண் கண் விழிக்கக் காத்திருந்தனர். நெற்றியில் தையல் போட்டு, கீழே விழுந்ததால் தலையில் வேறு எதாவது பிரச்சனை எதாவது ஆகியிருக்கிறதா என ஸ்கேன் எல்லாம் முடித்து அவனை அப்சர்வேஷனிலேயே வைத்திருந்தனர். இரவெல்லாம் மயக்கம் தெளியாமல் இருக்கவும் பயந்துதான் போனார் மைத்தி. டாக்டரும் அவரும் சின்னக் குரலில் பேசியதைக் கேட்டதில்தான் அருணுக்கு வேறு என்னவோ நோய் இருக்கிறது எனக் கண்டுக் கொண்டாள் இவள். அது மைத்திக்கும் தெரிந்திருக்கிறது எனவும் புரிந்துக் கொண்டாள்.

அருணுக்கு மயக்கம் தெளிந்து நார்மல் வார்டுக்கு மாற்றியதும், அவனைக் கூடப் போய் பார்க்காமல் காண்டினுக்குப் போவதாக மைத்தியிடம் சொல்லிவிட்டு டாக்டரைப் பார்க்க வந்திருந்தாள் இவள். முதலில் எதையும் சொல்ல மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்த டாக்டர் கேசவன் மைத்தியை அழைத்து விட்டார். அவரது அறைக்கு வந்த மைத்தி, இவளை ஒரு பார்வைப் பார்த்தார். பின் பெருமூச்சுடன், சொல்லுங்கள் என்பது போல டாக்டரிடம் தலையை மெல்ல ஆட்டியவர் கலங்கிய கண்களுடன் மகனைப் பார்க்கப் போய் விட்டார். அதன் பிறகே இவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொண்டார் டாக்டர் கேசவன்.     

கட்டிலில், நெற்றியில் கட்டுப் போட்டிருக்க, சாந்தமாய் உறங்கிக் கொண்டிருந்த மகனை வாஞ்சையுடன் பார்த்திருந்தார் மைத்ரேயி. மென்மையான பெண்களுக்குள் தங்களது குழந்தைக்கு ஏதாவது ஒன்றென்றால் எப்படிதான் அப்படி ஒரு திடச்சித்தம் வருமோ தெரியாது! தன் பிள்ளைக்காக எமனுடன் கூட போராடத் தயங்கமாட்டாள் பெண். மங்கையின் உடலை மென்மையாகப் படைத்த இறைவன், உள்ளத்தை திண்மையாகப் படைத்து தன் தவறை தானே சரி செய்து விட்டான் போல.

மகன் நெற்றியை மெல்லத் தடவியவர்,

“அம்மா உன் கூடவே இருப்பேன்டா கண்ணா! எந்த கஸ்டத்திலும் உனக்கு தோள் கொடுத்து தாங்கிப்பேன்டா நான்! ஐ லவ் யூ சோ மச் மை சன்!” எனக் கண்ணில் நீர் வழிய மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.

அந்த நேரத்தில் கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அமுதமொழி. கத திறக்கும் ஓசையில் விழித்துக் கொண்டான் அருணகிரி. அம்மாவையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தவள்,

“அத்தை!” என மைத்தியை அழைத்தாள்.

“அ..அத்தையா?”

“ஆமா, அத்தைதான்! உங்க மகன கல்யாணம் செஞ்சிக்கிட்டா நீங்க எனக்கு அத்தைதானே?”

“ஆ..ஆமா! ஆமா”

“அப்போ, இனி நீங்க எனக்கு அத்தைதான்! உங்க மகன்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்! நீங்க ஒரு அரை மணி நேரம் காண்டீன் போய்ட்டு வரீங்களா?”

அமைதி மொழி படபடவென பேச ஆர்ப்பாட்ட மைத்தி அப்படியே அடங்கிப் போனார். மகனைத் திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டே கதவடைத்து விட்டு வெளியேறினார் அவர்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவனைக் குறும்பாய் பார்த்து,  

“வெல் மிஸ்டர் கிரி! நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” எனக் கேட்டாள் அராத்துமொழி!

கண்கள் செவசெவவென சிவந்துப் போக,

“என்னடி! எனக்கு வாழ்க்கைப் பிச்சைப் போடறியா?” என வெகுண்டான் அனக்கோண்டாகிரி.

வாழ்க்கை ஒரு மீன்(கார) குழம்பு (சைவம் அசைவம்னு ரெண்டா கவிதை எழுத வைக்கறீங்க மக்களே!)

அதில் உப்பாய் பெண்

உறைப்பாய் ஆண்

உப்பில்லா விட்டால் சுவைக்காது

உறைப்பில்லா விட்டால் ருசிக்காது

இரண்டும் பிண்ணிப் பிணைந்தால் மட்டுமே

குழம்பு(வாழ்க்கை) ருசிக்கும்

இந்த உப்புமொழியும் உறைப்புகிரியும்

பிண்ணிப் பிணைவார்களா இல்லை

நமக்கு பில்லி சூனியம் வைப்பார்களா????????

(நீளுமா….)

(இது சின்ன எபிதான். இந்த நோயோட இபெக்ட் மனசுல பதியனும்னா வேறு எதையும் சேர்த்து எழுத முடியாது! நம்ம கவனம் வேற விஷயத்துக்குத் தாவிடும். அதனாலதான் குட்டி எபி. அருண் அப்பா மேல எதுக்கு மைத்திக்கு கோபம், இதுக்கு மேல அருணுக்கு என்னாகும், இவங்க சேர்வாங்களா இல்லையா, இதெல்லாம் அடுத்தடுத்த எபில பார்க்கலாம். அருணோட நிலமைய கதை தலைப்புலயே ஹிண்ட்டா குடுத்துருக்கேன். நெறைய பேர் அத கண்டுப் புடிச்சிட்டீங்க! அதோட அவனோட சிம்ப்டம்ஸ்லாம் பல அத்தியாயங்களா அங்கங்கே குடுத்துட்டுதான் இருக்கேன். அவனோட கை நடுக்கம், ஜாகிங் அப்போ கீழ விழுந்தது, இன்ஸ் வீட்டுல இருந்து வரப்போ பார்வை ஒரு மாதிரி இருக்கவும் இவள கார் ஓட்ட சொன்னதுன்னு(அப்படியே பார்வை பிரச்சனைன்னு உடச்சி சொல்லல! அப்படி சொன்னா கதை ப்ளோ கெட்டுடும்).இந்த நோயப் பத்தி ஒரு வீடியோ அட்டாச் பண்ணிருக்கேன். கண்டிப்பா பாருங்க! போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல்)