En Ayul Neelumadi–EPI 2

269870723_998653174055350_1983985756058693881_n-031d7b1e

அத்தியாயம் 2

 

அமுதமொழி

 

 

 

‘பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா

துயரம் நிலைதானா உலகம் இதுதானா’

 

எனக் காதில் விழுந்த பாடலின் சத்தத்தில்தான் விழித்தெழுந்தாள் அமுதமொழி. காலையில் எழுந்ததும் கேட்க வேண்டிய பாடலா இது என உள்ளம் சுணங்க பெருமூச்சுடன் கட்டிலில் இருந்து இறங்கினாள். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் காலை மணி ஐந்து எனக் காட்ட,

‘இந்தப் பாட்டி எப்படிதான் அலாரம் இல்லாமலே டான்னு அஞ்சுக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்துக்கறாங்களோ! அவங்க பிறந்தப்பவே உடம்பு உள்ள கடிகாரம் எங்கயோ ஃபிக்ஸ் பண்ணிட்டானோ ஆண்டவன்’ என எப்பொழுதும் போல இப்பொழுதும் அதிசயித்தபடியே குளியலறைக்குள் நுழைந்தாள் இவள்.

அமுதமொழியின் தந்தையைப் பெற்றவர்தான் இந்த வைதேகி பாட்டி. அவருக்கு அதது அந்தந்த நேரத்தில் செய்து விட வேண்டும். காலை ஐந்துக்கு எழுந்து, ஏழுக்கு ஒரு கப் காபி அருந்தி, ஒன்பதுக்கு காலை உணவு உண்டு, பதினொன்றுக்கு எதாவது ஒரு பழம் தின்று, ஒரு மணிக்கு மதிய உணவு முடித்து, மூன்றுக்கு குட்டித் தூக்கம் போட்டு, ஐந்துக்கு இன்னொரு கப் காபி குடித்து, ஆறுக்கு குளித்து, ஆறு முப்பதுக்கு சாமி அறையில் சுலோகம் சொல்லி, ஏழுக்கு இரவு உணவு முடித்து, நடு நடுவே பாட்டுக் கேட்டு, சீரியல் பார்த்து ஒன்பதுக்கு தூங்கிப் போவது எனக் காரியம் யாவும் அச்சுப் பிசகாமல் நடக்க வேண்டும். இல்லையென்றால் பேத்தியைப் போட்டு உருட்டி எடுத்து விடுவார். அவரது தொணதொணப்புக்கு பயந்தே எல்லாமும் அவர் நேரப்படி நடப்பது போலப் பார்த்துக் கொள்வாள் இவள்.(என் பாட்டி இப்படிதான். கரேக்ட்டா டைம் பிரகாரம் எல்லாம் நடக்கனும். இல்லைனா பொலம்பிடுவாங்க. எங்க அத்தைங்க தெய்வப் பிறவிங்க. இவங்கள இறந்து போகிற வரை நல்லாவே பார்த்துக்கிட்டாங்க. 96 வயசுல இந்த வருஷம் தான் பாட்டி குட்பை சொன்னாங்க)

காலையில் எழுந்ததும் குளித்து விட்டுத்தான் வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பிப்பாள் அமுதமொழி. அவள் அம்மா இருந்தப் பொழுது அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. அவர் உலகை விட்டுப் போய் பத்து வருடம் ஆகியும் இன்னும் தொடர்கிறது.

குளித்து முடித்ததும், தனதறை சுவரில் மாட்டி வைத்திருக்கும் அவளது அன்னையின் படத்தின் முன்னே சில நிமிடங்கள் கண் மூடி நின்றவள், பின் அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

பாட்டியின் அறைக்குள் நுழைந்த அமுதமொழி,

“குட் மார்னிங் பாட்டி” எனச் சொன்னபடியே அட்டாச் பாத்ரூமில் அவருக்கான துண்டு, உடுத்திக் கொள்ள உடைகள் எல்லாம் எடுத்து வைத்தாள்.

“அமுதா! இன்னிக்கு இடியாப்பம் செஞ்சுக் குடு! சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு” எனச் சொன்னபடியே,

‘என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய்’ என பாடிக் கொண்டிருந்த எம்.பி.த்ரீ ப்ளேயரை நிறுத்தி வைத்தார் வைதேகி.

அவர் விருப்பப் பாடல்களை எல்லாம் இவள்தான் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து கொடுத்திருந்தாள். தொலைக்காட்சி சீரியலும் அந்தப் பாடல்களும்தான் அவரது பொழுது போக்கு.

“சரி பாட்டி!” என்றவளுக்குக் குரல் உள்ளே போயிருந்தது.

இடியாப்பம் செய்வது என்ன தோசை ஊற்றுவது போல சட்டென முடிக்கும் வேலையா! இன்று பார்த்து அவளுக்கும் பல வேலைகள் அணிவகுத்து நிற்க, அதோடு இதுவும் சேர்ந்து கொண்டதில் கடுப்பாய் வந்தாலும் வாய் திறந்து முடியாது என சொல்லவில்லை பெண். ‘நோ’ எனும் சொல் அவள் அகராதியிலேயே இல்லை.   

பாட்டியும் பேத்தியும் சென்னையின் மணிவாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். பாதுகாப்பான இடம், அதோடு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் நன்றாக பழகுபவர்கள். அதனால் பாட்டிக்கு பேத்தியும் பேத்திக்குப் பாட்டியும் துணையாக நிம்மதியாகவே(?) வாழ்க்கைப் படகை ஓட்டினார்கள் இருவரும்.

ஓரளவு நன்றாக படித்தாலும், அமுதமொழியின் சித்தியின் தலையீட்டால் டிகிரி முடித்ததும் தொழில் கல்வி கற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இவளுக்கு. ஆறு மாத படிப்பாக முக ஒப்பனை மற்றும் சிகையலங்கார கோர்ஸ் முடித்து சான்றிதழ் வாங்கி இருந்தாள் அமுதமொழி. அந்த கோர்ஸ் கூட அவளது சித்தியின் தேர்வுதான். அழகுணர்வு கொண்டப் பெண்ணுக்கு அலங்காரமும் அழகாய் கை வந்தது. கை சாமார்த்தியம் இருந்து என்ன செய்ய? பாவைக்கு வாய் சாமார்த்தியம் இல்லையே! பெயருக்கு ஏற்றது போல வாயைத் திறந்தால் அமுதமாய்தான் பேச வரும் அமுதமொழிக்கு.

கைத்தொழிலில் கறாராய் இல்லாவிட்டால் பிழைக்க முடியுமா? மணப்பெண் அலங்காரத்துக்கு போட்டு விட்ட கவரிங் நகை திரும்பி வரும் போது, ஒன்றிரண்டு கொக்கி உடைந்திருக்கும். அல்லது தலைக்கு வைத்த அழகு பொருட்கள் சில காணாமல் போயிருக்கும். இவளும் தயங்கி தயங்கிக் கேட்டும் விடுவாள். அங்கிருந்து கொஞ்சம் குரலை உயர்த்தினால் அப்படியே அடங்கியும் போய் விடுவாள். முன் பணம் கொடுத்து விட்டு, வேலை முடிந்ததும் மீதி பணம் கொடுக்க இழுத்தடிப்பார்கள் சிலர். என்னவோ இவள்தான் கடன் பட்டவள் போல பணத்தைக் கேட்கவே கூசி குறுகிப் போவாள் இவள். இப்படி நிலுவையில் நின்ற பணக்கணக்கு ஏராளம், ஏராளம்.

இந்த மாதிரி வேலை செய்பவர்கள் பேச்சுத் திறமையானவர்களாக இருக்க வேண்டும். இவளோ அமைதியின் திருவுரு. கல்யாணப் பெண்ணுக்கு அலங்காரம் செய்ய சென்று, அங்கிருக்கும் நண்டு சிண்டு எல்லாம் தலை சீவி விடுங்கள், சேலை கட்டி விடுங்கள் என கேட்கும் போது இதற்கு இவ்வளவு கொடுங்கள் என கேட்க வாய் வராமல், மனதிற்குள்ளேயே முனகிக் கொண்டு செய்துக் கொடுக்கும் மிக நல்லவள் இவள்.

“வாயைத் திறந்து கலகலன்னு பேசுனாதான் என்னா? அப்படியே உங்கம்மா மாதிரியே இருக்கடி நீ!” எனப் பேசவே வாய்ப்புத் தராத பாட்டி திட்டும் போது கூட அதே அமைதிதான் இவள் பதிலாக இருக்கும்.

கைத்தொழில் இவள் கையைத்தான் கடித்தது. ஒழுங்காக அவளுக்குப் பிடித்த ஐ.டியைப் படிக்க வைத்திருந்தாலாவது திருப்பிப் பேசாத கம்ப்யூட்டருடன் ஒன்றாக பிண்ணிப் பிணைந்திருப்பாள் அமுதமொழி. அவளைப் போய் அலங்காரத் தொழிலில் இறக்கி அலைக்கழித்திருந்தனர் அவள் குடும்பத்தார்.

மணப்பெண் அலங்காரத்துக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு, இப்பொழுதெல்லாம் அவள் வசிக்கும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு மட்டும் விசேஷம் என இவளிடம் வந்தால், அலங்காரம் செய்து பணம் சம்பாதிக்கிறாள். எதிர் வீட்டு மாமி நடத்தும் நாட்டியப் பள்ளியில் சலங்கை பூஜை, மற்றும் கச்சேரிகள் நடத்தினால், நாட்டியமாடும் பெண்களுக்கு அலங்காரமும் சிகையலங்காரமும் செய்து சம்பாதிக்கிறாள். அதோடு வீட்டில் இருந்தே ஃபேசியல், த்ரேடிங், இன்னும் பிற உடலைப் பராமரிக்கும் அழகியல் வேலைகள் செய்து பணம் ஈட்டுகிறாள். வருமானம் பிய்த்துக் கொண்டு கொட்டா விட்டாலும் வெட்டி ஆபிசர் என சொல்லாத அளவுக்கு ஏதோ வந்தது.

அவர்களது குட்டி சமையலறைக்குள் நுழைந்தவள், முதலில் தனக்கொரு காபி கலந்துக் கொண்டாள். பாத்திரத்தில் அளவாய் தண்ணீர் வைத்துக் கொதிக்க விட்டவள், அது கொதிக்கும் வரை காபியை ரசித்துப் பருகினாள். டம்ளரை கழுவி அடுக்கியவள், கொதித்திருந்த நீரில் உப்புப் போட்டு கொஞ்சமாய் எண்ணெய் விட்டுப் பின் அரிசி மாவு சேர்த்துக் கிண்டினாள். பிறகு மாவைப் பிசைந்து, பிழிந்து வேக வைத்து இடியாப்பாமாக்கி எடுத்து ஹாட் பேக்கில் வைப்பதற்குள் வேர்த்து வழிந்துப் போய் விட்டாள் பெண். பாட்டிக்குப் பிடித்த காய்கறி குருமாவையும் செய்து வைத்தவள், புதிதாக காபி கலந்து ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்தாள்.

சரியாக காலை மணி ஆறு முப்பதுக்கு அழைப்பு மணி அடிக்க, துப்பட்டாவால் நெற்றியைத் துடைத்துக் கொண்டே கதவைப் போய் திறந்தாள் அமுதமொழி. அங்கே அவர்கள் வீட்டில் வேலைப் பார்க்கும் பெண்மணி காவேரி நின்றிருந்தார்.

“குட்டு மார்னிங் பாப்பா”

“மார்னிங்கா! வாங்க”

“என்ன பாப்பா கமகமன்னு வாசம் வருது?”

“இடியாப்பம்கா! நானே செய்துட்டேன்!” என சொல்லியபடியே அவரை உள்ளே விட்டு, கிரீல் கதவைப் பூட்டினாள் அமுதமொழி.

“என்னத்த சொல்லு! நீ எதாச்சும் செஞ்சுத் தந்தா உங்கப் பாட்டி ஒரு வாய் அதிகமா சாப்பிடறாங்க! என் சமையல்னா முக்கி முனகித்தான் வாய்க்குள்ள வைக்கறாங்க!” என்றபடியே அமுதமொழி உபயோகப்படுத்தி இருந்தப் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தார் காவேரி.

அவருக்கு காபியை ஒரு டம்ளரில் ஊற்றி,

“க்கா! காபி குடிச்சிட்டு வேலையைப் பாருங்க!” என்றாள்.

“அங்கன டேபிளிலே வை பாப்பா! கழுவி முடிச்சிட்டுக் குடிக்கறேன். ஏன் பாப்பா, இன்னிக்கு அப்பாயிமெண்டு இருக்குதா?”

“இன்னிக்கு ஃபேசியல் செய்ய வரேன்னு ரெண்டு பேர் மேசேஜ் போட்டுருக்காங்க!”

காவேரி இவர்கள் வீட்டில் வேலைப் பார்ப்பதோடு, வைதேகிக்கும் துணையாக இருப்பார். அவர் இருப்பதால்தான் அமுதமொழி நிம்மதியாக வெளியேத் தெருவே சென்று வருவாள். அதோடு வீட்டிற்கு த்ரேடிங், ஃபேசியல் செய்ய வரும் பெண்களுக்குப் பொறுமையாக செய்து விடுவாள். இல்லாவிட்டால் பாட்டிக்கு இப்பொழுது காபி கொடுக்க வேண்டுமே, உணவுக் கொடுக்க வேண்டுமே என சிந்தனை எல்லாம் அதிலேதான் சுழலும்.

மணி ஏழு ஆகியிருக்க, பூஜையறையில் பிரார்த்தனையை முடித்துவிட்டு உணவு மேசைக்கு வந்தார் வைதேகி. அவருக்குத் தன் கையாலேயே காபி ஊற்றிக் கொடுத்தாள் அமுதமொழி.

“இன்னிக்கு திங்க கிழமைல?”

“ஆமா பாட்டி”

“உங்கப்பா நைட்டுக்குப் போன் போடுவான்ல?”

“ஆமா பாட்டி!”

“ஹ்ம்ம்! போன தடவையே சொன்னேன், உனக்கு வீட்டோட ஒரு பையனைப் பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லி! காதுல போட்டுக்கிட்டானா இல்லையானே தெரியல! இந்த தடவைக் கொஞ்சம் கண்டிச்சு சொல்லனும். சிங்கப்பூருல உக்காந்துக்கிட்டு, அசைய மாட்டறான். இங்க ஒரு அம்மாக்காரி இருக்கா, ஒரு மக இருக்கான்னு அக்கறை இருக்கா பாரேன். மாசா மாசம் கரேக்டா பணத்தைப் போட்டு விட்டுட்டா அதது சொந்தமா நடந்துடுமா? என்னமோ போ! அம்மா அம்மான்னு சர்க்கரையா பேச மட்டும் தெரியுது! காரியத்துல ஒன்னுத்தையும் காணோம்” என புலம்பியபடியே காபி அருந்தினார்.

அவர் பேசிய எதற்கும் இவள் வாயையேத் திறக்கவில்லை. மகனை அவர் எப்படி வேண்டுமானாலும் கழுவி ஊற்றுவார். ஆனால் மற்றவர்கள் அவர் ஒற்றை மகன் ரகுவரனை ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் சாமியாடி விடுவார் வைதேகி. அது அந்த ரகுவரன் பெற்ற மகள் அமுதமொழியாக இருந்தாலும் சரி.

மதியத்துக்கும் இரவுக்கும் என்ன உணவு வேண்டும் என பாட்டியிடம் கேட்டு தேவையானவற்றை எடுத்து காவேரியிடம் கொடுத்தாள் அமுதமொழி. பாட்டி அவரது பாடல்களோடு ஐக்கியமாகி விட, பத்து மணி ஃபேசியல் அப்பாயிட்மெண்டுக்கு தயார் செய்ய ஆரம்பித்தாள் இவள்.

அவர்கள் வசிக்கும் வீட்டில் மூன்று அறைகள் இருந்தன. பாட்டிக்கும் இவளுக்கும் தனி தனி அறை. இன்னொரு அறையை இவளது பார்லராக பயன்படுத்தினாள் அமுதமொழி. அங்கே ஒருவர் படுத்துக் கொள்வது போல ஒற்றைக் கட்டில், க்ரீம் மற்றும் அலங்காரப் பொருட்களை அடுக்கி வைக்க மேசை, ட்ரெசிங் டேபிள், அதற்கு நாற்காலி, ஃபேசியலுக்கான உபகரணப் பொருட்கள் என வாங்கிப் போட்டிருந்தாள். எல்லாம் தகப்பனிடமிருந்து பெற்றப் பணத்தில் வாங்கியதுதான். எப்படியாவது பணத்தைத் திருப்பி விட வேண்டும் எனும் எண்ணம் நெஞ்சு முட்ட இருக்கிறது அமுதமொழிக்கு.

சரியாக பத்து மணிக்கு முதல் அப்பாயின்மேண்ட் வைத்திருந்த பெண் வர, இவளுக்கு வேலைத் தொடங்கியது. நார்மல் ஃபேசியல் வேண்டும் என அந்தப் பெண் சொல்ல, அவளது மேல் சட்டையை நீக்க சொல்லி மார்போடு கட்டிக் கொள்ள இவள் பிரத்தியேகமாக வாங்கி வைத்திருக்கும் பாவாடை போல உள்ள துணியைக் கொடுத்து விட்டு அறையின் வெளியே வந்து நின்றாள் அமுதமொழி. அந்தப் பெண்ணுக்கு உடை மாற்ற சற்று நேரம் கொடுத்து, கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். படுக்கையில் அவளைப் படுக்க வைத்து புதிய ஸ்பாஞ் ஒன்றை எடுத்து முகத்தைக் கழுவி, மென்மையாய் முகத்தையும், கழுத்துப் பகுதியையும் மசாஜ் செய்து, மீண்டும் முகத்தைக் கழுவி, சூடான ஆவி முகத்தில் படுமாறு மிசினை ஆன் செய்து டைமரை வைத்து விட்டு, அறையை மெல்லிய வெளிச்சமாக்கி, மெல்லிய இசையை ஒலிக்க விட்டுவிட்டு வெளியேறினாள் பாவை.

ஒவ்வொரு வேலையை செய்யும் போதும் அந்தப் பெண் வாய் ஓயாமல் பேச, இவளோ ஓரிரு வார்த்தை மட்டும் பேசி வேலையில் கவனமாக இருந்தாள். பேச வேண்டாமென நினைக்கவில்லை, ஆனால் பேச வரவில்லை. அறையில் இருந்து வெளியே வந்தவள், பாட்டி என்ன செய்கிறார் என கவனித்து விட்டு, மீண்டும் ஒரு கப் காபி குடித்து விட்டு அந்தப் பெண்ணிடம் விரைந்தாள்.

மிசினை மூடி தள்ளி வைத்தவள், அந்தப் பெண்ணின் முகத்தில் இப்பொழுது நன்றாகத் தெரிந்த வைட் அண்ட் ப்ளாக் ஹெட் என சொல்லப்படும் முகம் மற்றும் மூக்கில் இருக்கும் தோல் துவாரங்களில் இருந்த அழுக்குகளை குத்தி வெளியே எடுத்து சுத்தம் செய்தாள். அந்தப் பெண் வலியில் ஹா ஹோவென முனக, இவளுக்கு மெல்லிய சிரிப்பு.

‘அழகா இருக்கனும்னா சும்மாவா? எவ்ளோ தியாகம் பண்ணனும், எவ்ளோ வலியை அனுபவிக்கனும்! இயற்கையா அழகு கொட்டிக் கிடக்கறது கொஞ்சே கொஞ்சப் பேருக்குத்தான். மத்தவங்கலாம் அந்த அழக கை வசப்படுத்த என்னப் பாடு படறாங்க! டயட், முக பராமரிப்பு, விடாம ஃபேசியல், டே க்ரீம், நைட் க்ரீம், கழுத்துக்குக் க்ரீம், அண்டர் ஆர்ம் லேசர் சிகிச்சைன்னு எவ்ளோ பாடு! கண்ணுக்கு ஒருத்தி அழகா தெரிஞ்சா, நாம ஒத்த வரியில மேனாமினுக்கின்னுட்டுப் போயிடறோம்! அப்படி மினுக்கறதுக்கும் அவ என்ன பாடு பட்டுருப்பான்னு எனக்குதானே தெரியும். லைப்ல எதுவும் ஈசியா கிடைக்காதுமா!’ என மனதில் மட்டும் நினைத்துக் கொண்டாள் அமுதமொழி.

ஃபேசியல் முடிந்ததும்,

“அமுதா சிஸ், காலுல முடிலாம் கரடு முரடா வளந்து நிக்கிது! எவ்ளோ ஷேவ் பண்ணாலும் மறுபடி வரப்போ ரொம்ப ராஃபா வருது! கால உரசிட்டாலே, எட்டப் போடி கரடின்னு கிண்டல் பண்றாரு என் ஹஸ்பேண்ட். ஸ்மூத்தா இருக்க எதாச்சும் டிப்ஸ் குடுங்களேன்” என கேட்க,

“வேக்சிங் செஞ்சுப் பார்க்கறீங்களா?” என கேட்டு அதையும் செய்து விட்டாள் அமுதமொழி.

காலிலும் தொடையிலும் சூடான மெழுகை தடவி, அதன் மேல் வேக்சிங் செய்யும் தாளை வைத்து பலம் கொண்ட மட்டும் இவள் இழுக்க, ரோமங்கள் பிய்ந்துக் கொண்டு வந்தன. அந்தப் பெண் கத்திக் கதறிய சத்தம் அந்த வீட்டையே அதிர வைத்தது.

வலியையும் அனுபவித்து பணத்தையும் அள்ளிக் கொடுத்து விட்டு அவள் செல்ல, அப்பாடா என அசந்துப் போய் அமர்ந்து விட்டாள் இவள். கை இரண்டும் வலி எடுக்க ஆரம்பித்து விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் இன்னொரு பெண் வரவிருக்க, அந்த அறையை சுத்தம் செய்து தயாராகினாள் அமுதமொழி.

அன்றிரவு சரியாக சிங்கப்பூர் நேரம் ஒன்பது மணிக்கு ரகுவரனிடம் இருந்து வீடியோ அழைப்பு வந்தது.

“நல்லா இருக்கீங்களாம்மா?”

“எனக்கென்னடா நான் நல்லா இருக்கேன்! எனக்கு இருக்க வீடு வாங்கிப் போட்டிருக்க, மாசா மாசம் கைச்செலவுக்குக் காசு போடற, உன்னை நேருல பார்க்கலன்றத தவிர வேற என்ன குறை இருக்கப் போகுது!” என வாயெல்லாம் பல்லாக மகனிடம் பேச ஆரம்பித்தார் வைதேகி.

அவரோடு அவரது மனைவியும் வைதேகியோடு பேசினார். மாமி, மாமி என அவர் கொஞ்சிய கொஞ்சலில் எப்பொழுதும் போல அப்படியே உச்சிக் குளிர்ந்துப் போய் விட்டார் வைதேகி. அன்று பேரனும் பேத்தியும் கூட லைனில் வர அவ்வளவு சந்தோஷம் அவருக்கு. கொஞ்சி குலாவி முடித்து,

“ராசா ரகு! அன்னைக்கு சொன்னேனப்பா..” என வைதேகி ஆரம்பிக்க,

“அம்மா! பொங்கலுக்கு சென்னை வருவோம். அப்போ நேர்லயே பேசிக்கலாம்மா!” என சொன்னார் ரகுவரன்.

குடும்பமே பேசி சிரிப்பதை அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்திருந்தாள் அமுதமொழி. மனம் எப்பொழுதும் போல கனத்துப் போனது. இறுதியாக தொலைப்பேசியை பேத்தியிடம் நீட்டினார் வைதேகி.

“உங்கப்பா பேசனுமாம், பேசு”

“ஹலோ”

“உன் கிட்ட தனியாப் பேசனும். ரூமுக்குப் போ”

சரியெனத் தலையாட்டியவள், அறைக்குள் நுழைந்து கதவடைத்தாள்.

“சொல்லுங்க”

“என்னத்த சொல்ல? ஏற்கனவே உனக்குப் படிப்பு, தொழில் படிப்பு, தொழில் வைக்கப் பணம்னு நெறைய செலவு செஞ்சிட்டேன். இப்போ கல்யாணம்னு வந்து நின்னா, காசுக்கு நான் எங்கப் போவேன்னு யோசிக்க வேணா? உன்னை மட்டும் பார்த்தா போதுமா? இங்க எனக்கு ரெண்டுப் புள்ளைங்க இருக்காங்க! அவங்க எதிர்காலத்தப் பார்க்க வேணாமா? சிங்கப்பூருல வேலை செஞ்சா மட்டும், கொட்டியா குடுக்கறாங்க? தொழில் வச்சுக் குடுத்தேனே, கெட்டிக்காரியா இருந்தா இன்னேரம் உன் கல்யாணத்து நீயே சம்பாதிச்சிருப்ப! இங்கெல்லாம் பொண்ணுங்க அப்படித்தான் இண்டிபெண்டண்டா இருக்காங்க! நீ ஒன்னுக்கும் உதவாம உங்கம்மா மாதிரியே இருக்க! எனக்குன்னு வந்து வாச்சிருக்கப் பாரு!” என படபடவெனப் பொரிந்துத் தள்ளினார் ரகுவரன்.

தலையைக் குனிந்துக் கொண்டாள் இவள். அழுவதை அவருக்குக் காட்ட மனமில்லை அமுதமொழிக்கு.

“எவ்ளோ பேசறேன், திருப்பி எதாச்சும் பேசறியா? அப்படியே உங்க அம்மா மாதிரியே தத்தியா பிறந்திருக்க!” என மீண்டும் திட்ட ஆரம்பிக்க, கண்ணில் இருந்து பெரிய நீர்மணிகள் திரண்டு கீழே விழுந்தன.

“உடனே அழ ஆரம்பிச்சிரு!” என அதற்கும் காய்ந்தார் ரகுவரன்.

“அவட்ட பேசி நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க! போனை வச்சிட்டு சாப்பிட வாங்க டியர்” என பின்னால் இருந்து சத்தம் வர,

“வரேன்மா!” என பதிலளித்தவர் இவளிடம்,

“பாட்டிய நல்லாப் பார்த்துக்கோ! செக் அப் வருது அடுத்த வாரம், கரேக்டா அழைச்சிட்டுப் போ!” என சொன்னவர் ஒரு பாய் கூட சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தார்.

தொலைபேசியையே வெறித்தபடி சற்று நேரம் அமர்ந்திருந்தாள் அமுதமொழி.

“அமுதா, டைமாச்சுடி! டின்னர் ரெடியா?” எனும் பாட்டியின் சத்தத்தில் கண்ணைத் துடைத்துக் கொண்டவள், பெருமூச்சுடன் வெளியே வந்தாள்.

முகம் சிவந்து, கண்கள் கலங்கிப் போய் வந்த பேத்தியைக் கவனித்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை வைதேகி. காவேரி இரவு உணவு சமைத்து வைத்து விட்டு சென்றிருக்க, தட்டில் பரிமாறி பாட்டியின் முன் வைத்தாள் அமுதமொழி.

“நீ சாப்புடல?”

“பசிக்கல பாட்டி?”

“தட்டு எடுத்து வச்சு சாப்பிடு! உங்கப்பன் வேத்து நாட்டுல கஷ்டப்பட்டு உழைச்சு நமக்குப் பணம் அனுப்பறான். அதை இப்படித்தான் வேஸ்ட்டுப் பண்ணுவியா நீ?” என சத்தமாகத் திட்டியவர், மெல்லிய முனகலாய்,

“தண்டசோறுன்னு நினைக்காம பார்த்து பார்த்து எல்லாம் செய்யற அப்பன்காரன், நாலு வார்த்தை ஏசிட்டா மட்டும் எங்கிருந்துதான் கோபம் பொத்துக்கிட்டு வருமோ தெரியல போ” என்றார்.

அமைதியாக தட்டை எடுத்து அமர்ந்தவள், இரண்டு இட்லிகளை கஷ்டப்பட்டு உள்ளேத் தள்ளினாள். அதன் பிறகு பாட்டி உறங்கும் வரை அவர் பழைய கதையில் இருந்து, இன்றைய சீரியல் வரைப் பேசுவதை ஹ்ம்ம் கொட்டி கேட்டவள், அவர் தூங்கியதும் தனதறைக்கு வந்தாள்.

முகம் கழுவி, நைட் க்ரீம் பூசிய பின் வந்து கட்டிலில் சாய்ந்தவள் தொலைபேசியை எடுத்து இன்ஸ்டா அக்கவுண்டில் நுழைந்து மற்ற மேக்கப் கலைஞர்கள் பதிவேற்றி இருந்த வீடியோக்களைப் பார்வையிட்டாள். அவள் விரும்பி பின் தொடரும் ஏ.ஜி.(AG) போட்டாகிராபி அக்கவுண்டில் ஓர் அறிவிப்பு வந்திருந்தது. முகம் யோசனையைத் தத்தெடுக்க, மனம் பல முட்டுக்கட்டைகளைப் போடும் முன் மடமடவென தனது விவரங்களை அந்த அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தாள் அமுதமொழி.

‘நான் தத்தியில்ல, தண்டசோறும் இல்லன்னு உங்க ரெண்டு பேருக்கும் நிரூபிச்சுக் காட்டல, நான் அமுதமொழியில்ல’ என மனதில் சபதம் பூண்டவள் அப்படியே உறங்கிப் போனாள்.

எப்பொழுதும் நடப்பது போல இந்த சபதமும் பூட்ட கேசாகுமா இல்லை இந்த வாயில்லா பூச்சியின் வாழ்க்கையைப் புலர செய்யுமா?   

 

(நீளுமா….)

(ஹீரோக்கு அப்படியே அப்போசிட் ஹீரோயின். எதிர் துருவம்தான் ஈர்க்குமாமே!!! இங்க எப்படி ஈர்க்குதுன்னு உங்களோட சேர்ந்துப் பார்க்க நானும் ஆவலா காத்திருக்கேன். அடுத்த அப்டேட்ல சந்திக்கும் வரை லவ் யூ ஆல் டியர்ஸ்)