En Ayul Neelumadi–EPI 20

273046404_1018660852054582_3314744799217173998_n-622b284b

அத்தியாயம் 20

 

“மை டியர் சன் அருண்!!!!

 

இந்த லெட்டர நீ படிக்கற சந்தர்ப்பம் வந்திடக் கூடாதுனு நான் வேண்டாத தெய்வம் இல்லடா! அப்படி ஒரு நிலைமை உனக்கு வந்திருச்சுனா, அந்தக் கடவுளுக்கு கண்ணு, காது, ஏன் இதயமே இல்லைடா அருண். கல்லுல செதுக்கி வச்சிருக்கறதுனால அவன் கல்லா இறுகிப் போய்ட்டான்டா மகனே!

எத்தனையோ பேர் பிள்ளை இல்லைன்னு கோயில் குளமெல்லாம் சுத்தி வர, எனக்கு போய் நீ புள்ளயா பொறந்துருக்கவே வேணாம்டா! பிரசவ வார்ட்ல எவ்ளோ ஆசை ஆசையா உன்னை இந்த ரெண்டு கையால வாங்கி மார்புல பொத்தி வைச்சிக்கிட்டேனோ, அதே கையால நீ என் புள்ளயா பொறந்திருக்க வேணானு எழுத வச்ச விதிய நான் வெறுக்கறேன்! அறவே வெறுக்கறேன்!

தாங்கிக்கவே முடியலடா அருண்! எல்லாத்தையும் உன் கிட்டயும் என் மைத்தி கிட்டயும் சொல்லிடனும்! என் துன்பத்தயும் நான் படும் கஸ்டத்தையும் உங்க ரெண்டு பேர் காலடியில போட்டு சரணாகதி ஆகிடனும்னு மனசு கிடந்து அடிச்சிக்கிது! ஆனா..ஆனா!!!! முடியலையேடா அருண்! எனக்கு ஒன்னுன்னா என்னை விட உங்கம்மாதான் கலங்கித் தவிச்சுப் போவா! இன்பத்தை இனிக்க இனிக்கப் பகிர்ந்துகிட்ட எனக்கு, துன்பத்த அவளோட பகிர்ந்துக்க மனசு வரலையேடா! இது கூட சுயநலமோ?

கை நடுக்கம், கால் மறத்துப் போகிறதுன்னு சிம்டம்ப்ஸ் காட்டுனப்போ வயசாகிடுச்சு, இப்படித்தான் இருக்கும்னு விட்டுட்டேன். கை திடீர் திடீர்னு மறத்துப் போகறதும், காமேராவா தூக்கி வச்சுப் போகஸ் பண்ண கூட முடியாம நடுங்கறதும், அப்புறம் சில நாளுல நார்மலா ஆகிடறதும்னு பெருசா ஒன்னும் கண்டுக்கல நான். ஆனா ஒரு தடவை வலது பக்க கண்ணுல சுத்தமா பார்வை இல்லாம போனதும் ரொம்பவே பயந்துட்டேன். உடனே கேசவன் கிட்ட ஓடுனேன். அது இதுன்னு டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு தலையில குண்டத் தூக்கிப் போட்டுட்டான் படுபாவி.

நமக்கு ஏன்டா இப்படி? நாம என்னடா பாவம் பண்ணோம்? ஜெனிடிக்கலி உனக்கும் வரதுக்கு சின்னதா சான்ஸ் இருக்குன்னு கேசவன் சொன்னப்போ அப்படியே இடிஞ்சுப் போய்ட்டேன் நான். கூடாது, கூடாது! என் கஸ்டம் என் பையன் பட கூடாதுன்னு உடம்பும் உள்ளமும் துடிக்குதுடா அருண். நீ சின்ன வயசுல தடுக்கி விழுந்து லேசா ரத்தம் வந்தா கூட, என் மனசுக்குள்ள ரத்தம் வடியும். ஆம்பள பையனை பொத்தி பொத்தி வளக்காதீங்கன்னு உங்கம்மா கூட திட்டுவா! ஆம்பள பையனோ பொம்பள புள்ளயோ என் புள்ளடி! என் ரத்தம்டி! அவனுக்கு வலிச்சா எனக்கும் வலிக்கும்னு வம்பு பண்ணுவேன். உன் லட்சியம் இதுதான்னு எங்கள விட்டு வெளி நாடு போனப்போ, நெஞ்செல்லாம் ரணமா இருந்தாலும் என் மகன் சாதிக்கனும்னு முகத்துல சிரிப்போட அனுப்பி வச்சேன். உன்னோட வளர்ச்சிய கண் குளிர பார்த்து மகிழ்ந்தேன். இப்படி சீக்கிரம் உன்னை விட்டுப் போய்ட முடிவெடுப்பேன்னு தெரிஞ்சிருந்தா, என்னை விட்டு நீங்கிப் போக அனுமதிச்சிருக்கவே மாட்டேன்டா! நீ தள்ளி இருந்த ஒவ்வொரு நொடியும் இப்போ, கை தவற விட்ட சொர்க்கமா தெரியுதுடா அருண். அப்பா லவ் யூ சோ மச்டா!

ஐயோ! எனக்கு என் எழுதன்னு கூட தெரியலையேடா அருண்! நீ படிக்காம போக போற லெட்டரா, இல்லை விதி வசத்தால படிக்கப் போற லெட்டரான்னு கூட தெரியாம அதையும் இதையும் உளறி வைக்கறேன்! இத கை நடுங்க எழுதறப்ப கூட என் பிரார்த்தனையெல்லாம் இந்த லெட்டர நீ படிக்கவே கூடாதுன்றதுதான் அருண்.

பெத்த தகப்பனா ஒவ்வொருத்தனும் சொத்து, அந்தஸ்த்து, கௌரவம், இனிமையான நினைவுகள்னு தன் பிள்ளைக்கு விட்டுட்டுப் போவாங்க! இந்த அப்பா உனக்கு எக்ஸ்ட்ராவா என்னோட நோயையும் விட்டுட்டுப் போறேன்டா! கடவுளே!!!! என் புள்ளைக்கு, என் ராஜாதி ராஜாவுக்கு, என் கண்ணப்பனுக்கு இந்த நோயக் குடுத்துடாதப்பா! யார் காலுலயும் இது வரை விழுந்தது இல்ல நான்! அதுக்கான அவசியமும் இல்லாத ராஜபோக வாழ்க்கை! அதனாலதான் கடவுளான உன் காலடிய கூட நான் தேடி வந்தது இல்ல! இப்போ, இந்த நேரம் உன் காலப் புடிச்சு பிச்சைக் கேக்கறேன்! என் மகனுக்கு இதைக் குடுத்துடாதே! அவன் சந்தோஷமா நீடூழி வாழனும்!

ஐயோ அருண்!!!!  அப்பாவ மன்னிச்சிடுடா! என் செல்லமே, அப்பாவ மன்னிச்சிடுடா! உனக்காக இந்த உலகத்தையே எதிர்த்துப் போராடுவேன்! ஆனா இந்த நோய்கிட்ட தோத்துப் போய் நிக்கறேன்டா உன் அப்பாவி அப்பா! 

உனக்கு இப்படின்னு அம்மா கிட்ட சொல்லிட்டியா? சொல்லி இருக்க மாட்டியே! சொல்லனும்! அப்பாவுக்கு ப்ராமீஸ் பண்ணு அம்மா கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு! அம்மா உன்னை கண்ணுல வச்சிப் பார்த்துப்பாடா! என்னை மாதிரி தனியா தவிக்கக் கூடாது நீ! அம்மா தோளுல உன் கஸ்டத்த சுமத்திடு! அவ உன்னைக் குழந்தைப் போல தாங்கிப்பா! இது போல ஒரு கஸ்டம் வந்துட்டா நாம ஆம்பளைங்க நிலைக்குலைஞ்சுப் போயிடுவோம்! ஆனா பொண்ணுங்க துவண்டுப் போகாம தாங்குவாங்கடா!  

அப்போ நீங்க ஏன் அம்மா கிட்ட இதை சொல்லாம மறைச்சீங்கன்னு கேக்கறியாடா? ஏன்னா ஐ லவ் ஹேர்! லவ் ஹேர் சோ மச்! கடைசி வரைக்கும் என் மைத்தி என்னை புருஷனாத்தான் பார்க்கனும்! ஒரு குழந்தையா என்னைப் பார்த்துக்க வேண்டிய கடமைய, கட்டாயத்த என் மைத்தி மேல நான் திணிக்க மாட்டேன்! எப்படிடா உன் கிட்ட நான் ஓப்பனா சொல்லுவேன்! அது..அது! என் மைத்தி மனசுல நான் கொடுத்த சுகமான நினைவுகள் மட்டும்தான் இருக்கனும்! ஆசையாக் கட்டிப் புடிச்ச இந்தக் கரங்கள், அசையாம போகறத அவ பார்க்கக் கூடாது. ஓடி பிடிச்சு விளையாடுன இந்தக் கால்கள் ஓஞ்சுப் போகிறத அவ பார்க்கக் கூடாது! பேசி சிரிச்ச இந்த வாய் பேச்சிழந்துப் போறத அவ பார்க்கக் கூடாது! என் மைத்தியோட ஞாபக அடுக்குள கம்பீரமான கிரிதரனா மட்டும்தான் நான் இருக்கனும்.  

உன் நினைவுல திடகாத்திரமான ஹீரோ ஃபிகரா மட்டும்தான் நான் இருக்கனும். திடமழிஞ்சு, கண்ணு தெரியாம, கைகால் வராம நோயாளியா உங்க முன்ன நின்னுடக் கூடாது நான்.  

அதனால…நான், ஐ மீன், நீ இந்த லெட்டர படிக்கறப்போ நான் உயிரோட இருக்க மாட்டேன் அருண். இந்த நோயோட மத்த மக்கள் மாதிரி நாமளும் அறுபது எழுபது வயசு வரைக்கும் கூட வாழலாமாம்! ஆனா என் மைத்திக்கு சுமையா நான் ஒரு நிமிஷம் கூட வாழ மாட்டேன்! யெஸ்! நான் கடவுள் குடுத்த கெடு முடியும் முன்னமே, எனக்கு நானே கெடு வச்சிக்கப் போறேன்! ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்ச்சார்ச் பண்ண சொல்லி கேட்டிருக்கேன்!(ஊட்டிக்கு போட்டோகிராபி கான்பிரேண்ஸ் போறேன் சொல்லிட்டு ஹாஸ்பிட்டல்லதான் இருக்கேன்!) மருந்து, இன்ஜெக்‌ஷன்னு இப்போ கண்ணு ஓரளவுக்கு நல்லா தெரியுது!

ட்ரீட்மெண்ட் முடிச்ச கொஞ்ச நாளைக்கு அடுத்த அட்டாக் வராதுன்னு கேசவன் சொல்லிருக்கான்! உன்னைப் பார்க்க வரதுக்கு டிக்கேட் போட்டிருக்கேன்! நானும் அம்மாவும் வருவோம்! உன் கூட சில நாட்கள் இருந்துட்டு, அம்மாவ கூட்டிட்டு ஸ்விஸ் போறேன்! இது எங்களோட லாஸ்ட்(ஹனி)மூன்! திரும்பி வந்ததும், நான் மட்டும் போய்டுவேன், தனிமூன் போய்டுவேன்! எமன் என்ன என்னைத் தேடி வரது! நான் அவனத் தேடிப் போய்டுவேன்!

கோழையா, எதிர்த்துப் போராடாம உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போறேன்னு எனக்கே தெரியுது! மன்னிச்சிடுடா மை சன்!

இது என் மைத்திக்கான வரிகள்…நீயும் படிக்கலாம் தப்பில்ல!

“மைத்திமா…..

நம்ம பையனை..நம்ம குல விளக்க..உன் கையில ஒப்படைச்சிட்டுக் கோழையா செத்துப் போறேன்டா நானு! நீ அவன தாய் பறவையா சிறகுக்குள்ள பொத்தி வச்சிக்குவன்னு எனக்குத் தெரியும்! கவனமா பார்த்துக்கோடா அவன!

அதோட உன்னையும் பார்த்துக்கோடா கண்ணம்மா! நேரத்துக்கு சாப்பிடனும், தூங்கனும், ஷாப்பிங் போகனும்! நான் இல்லைனாலும் பொட்டு வச்சிக்கனும், பூ வச்சிக்கனும், அழகா உடுத்திக்கனும்! நான் இப்படி ஒரு முடிவெடுக்காம இருந்திருந்தா பொட்டு, பூவெல்லாம் ரொம்ப காலத்துக்கு வச்சிக்கிட்டு இருந்துருப்பத்தானே! என் தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்க வேண்டாம்டி கண்ணம்மா! அடுத்த ஜென்மத்துலயாச்சும் இந்த கிரிக்கு மைத்தி கூட நூறாண்டு வாழ வரம் கொடுன்னு கடவுள வேண்டிக்கறேன்.

அடிக்கடி என்னைப் பார்த்து

‘உன் கூட நான் கூடி இருந்திட

எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா

நூறு சென்மம் வேணும்

அத கேக்குறேன் சாமிய’னு பாடுவ. அடுத்த வரிய என்னைப் பாட சொல்லிப் பாடாப்படுத்துவ! நான் வெட்கப் பட்டுக்கிட்டு ‘போடி உனக்கு வேற வேலை இல்லை’ன்னு ஓடிடுவேன். ஆனா இப்போ, இந்த நேரம் உனக்காக அதை பாடி இருக்கனுமோன்னு தோணுது! உன் கூடவே கடைசி வரைக்கும் வரதுக்கு என்னோட தன்மானம், சுயகௌரவம், ஈகோ இடம் குடுக்கலடி! என்னை, இந்த சுயநல புருஷன மன்னிச்சிடுடி மைத்திக்குட்டி! அடுத்த ஜென்மத்துல உனக்காகவே பொறந்து வந்து உன்னைப் பார்த்து சத்தியமா பாடுவேன்!

‘நூறு சென்மம் நமக்குப் போதுமா

வேற வரம் ஏதும் கேட்போமா

சாகா வரம் கேப்போம்

அந்த சாமிய, அந்த சாமிய!’

நான் போறேன்மா! நம்ம உசுர நாமே எடுத்துக்கிட்டா ஆவியா திரிவோமாமே!! ஆவியாவாச்சும் உங்க ரெண்டு பேர் பக்கத்துலயே இருப்பேன் மைத்திமா!

அருணைப் பார்த்துக்கோ!

லவ் யூ மைத்தி! லவ் யூ அருண்!

இப்படிக்கு,

அன்பு கிரிதரன்.

பி.கு.

(என்னோட தற்கொலை முடிவு கேசவனுக்குத் தெரியாது. மைத்திமா, அவனப் போட்டு வாட்டிடாதே! நான் கெஞ்சிக் கேட்டுக்கிட்டதுனாலதான் என் நோயைப் பத்தி உன் கிட்ட எதுவும் சொல்லல அவன். அருணுக்கு இப்படி எதாச்சும் ஆனா லெட்டர குடுடான்னு சொன்னப்பவே சந்தேகமா பார்த்தான். இன்னிக்கு உள்ளவன் நாளைக்கு இல்லன்னு தத்துவம் பேசி திசைத் திருப்பி விட்டுட்டேன் அவன! நம்ம மகனுக்கு பெஸ்ட் ட்ரீட்மெண்ட், பிசியோதெராப்பி, மெண்ட்டல் சப்போர்ட் எல்லாத்துக்கும் கேசவன் ஹெல்ப் பண்ணுவான்.

அருண்,

நீ பார்க்க என்னைப் போல இருந்தாலும், குணத்துல அப்படியே உங்கம்மா மாதிரி! என்னை மாதிரி ஓடி ஒளியாம, வாழ்க்கையை தைரியமா எதிர் கொள்வன்னு நம்பிக்கை இருக்கு! டேக் கேர்டா! முடிஞ்சா அப்பாவ மன்னிச்சிடு!)

(கிரிதரன கோழைன்னு சொல்லுவோம் நாம! எனக்குமே அவர் மேல மனத்தாங்கல் இருக்கு! ஆனாலும் இந்த மாதிரி டெர்மினல் இல்னெஸ் அதாவது குணப்படுத்த முடியாத, தொடர்ந்து கூடவே வரப் போற நோய் உள்ளவங்க மனநிலையில இருந்து இவர் கேரெக்டர எழுதிருக்கேன். அந்த டைம்ல நோயாளிய குளிப்பாட்டி விடறது, ஊட்டி விடறது, பெட்பேன் வைக்கறதுன்னு அவங்க சொந்தங்கள் செய்யறப்போ, நோயாளி மனநிலை எப்படி இருக்கும்? இவங்களுக்கு கஸ்டம் குடுக்காம என்னை சீக்கிரம் எடுத்துக்கடா ஆண்டவான்னு கண்டிப்பா தோணும்! அத வச்சிதான் கிரிதரன் கேரெக்டர எழுதனேன். அவர் வரைக்கும் அவர் செஞ்சது நியாயம்! ஆனா மைத்திக்கும் அருணுக்கும் அவர் செஞ்சது அநியாயம்! உள்ளத உள்ளபடி குடுத்துருக்கேன்! நீங்க யார் பக்கம்னு சொல்லிட்டுப் போங்க!)  

எத்தனை முறை அந்தக் கடிதத்தை வாசித்திருப்பாரோ தெரியாது! அருண் அவர் கையில் அந்த கடித்தைக் கொடுத்த தினத்தில் இருந்து பல முறை வாசித்து விட்டார். ஆனாலும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் கண்ணீர் கரை புரண்டு ஓடத்தான் செய்தது மைத்திக்கு. நெஞ்சத்தில் அழுத்திய பாரம் உடம்பையும் போட்டு அழுத்த, அப்படியே கட்டிலில் சரிந்து கண்ணீர் உகுத்தார் அவர். கடிதத்தை நெஞ்சாரத் தழுவிக் கொண்டவர்,

“உங்க கூட சிரிக்கவும், படுக்கவும் மட்டும்தான் இந்த மைத்தி தேவையா இருந்துருக்கேன்ல கிரி! கஸ்டம்னு வந்ததும் என்னைக் கழட்டி விட்டுட்டீங்கல்ல. ஐ ஹேட் யூ கிரி, ஹேட் யூ சோ மச்! இன்ப துன்பத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்போம்னு சொல்லிதான் தாலி கட்டி மத்த சடங்கெல்லாம் செய்யறோம்! அதுல இன்பத்தை மட்டும் காட்டிட்டு, துன்பம் வந்ததும் என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டீங்கல்ல! நீங்க இல்லாம நான் என்ன பாடு படறேன்னு உங்களுக்குத் தெரியுமா? வெளிய சிரிச்சுப் பேசுனாலும் உள்ளுக்குள்ள எவ்ளோ லோன்லியா ஃபீல் பண்ணறேன் தெரியுமா! கார் ஆக்சிடேண்ட்ல நீங்க இறந்துட்டீங்கன்னு தெரிஞ்சப்பவே ஸ்ட்ரோக் வந்துடுச்சு! இப்போ அது தற்கொலையா இருக்குமோன்னு நெனைக்கறப்போ நெஞ்சு அடைக்குது கிரி! என் சின்ன நெஞ்சு இதையெல்லாம் தாங்கிக்குமான்னு தெரியல!” எனக் கதறி அழுதார் மைத்ரேயி.

திருமணம், கணவனோடு ஆசையாய் கூடிக் களித்தது, அருணை சுமந்துப் பெற்றெடுத்தது, கிரியோடு சேர்ந்து அவனை அன்பாய் வளர்த்தது, வெளிநாடு அனுப்பியது, கணவனின் இறப்பு செய்தி கேட்டு மயங்கி விழுந்தது, உயிரற்ற கிரியின் உடலின் முன்னே கத்திக் கதறி அழுதது என ஒவ்வொரு நினைவுகளாய் மனத்திரையில் வந்து மூச்சடைக்க வைத்தது. வேக வேகமாய் மூச்செடுத்தவர், படக்கென எழுந்து அமர்ந்துக் கொண்டார்.

“தாங்கிப்பேன், எல்லாத்தையும் தாங்கிப்பேன்! என் மகன் இருக்கானே என்னை நம்பி, அவனுக்காக எதையும் தாங்கிப்பேன்! அவனை நம்பி வீட்டுல ஒரு பொண்ணு வேற வந்து உக்காந்துருக்காளே! அவளுக்காகவும் எல்லாத்தையும் தாங்கிப்பேன்!” என முனகியவர் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

“மீ!!!!”

“அத்தை!!!”

இருவரின் குரலில் மெல்லியப் புன்னகை எட்டிப் பார்த்தது மைத்ரேயிக்கு.

“இப்ப என்ன பஞ்சாயத்துன்னு தெரியலையே ரெண்டுக்கும்!”  

 

(நீளுமா….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! அடுத்த எபியில மீண்டும் சந்திக்கலாம்! லவ் யூ ஆல் டியர்ஸ்)