En Ayul Neelumadi–EPI 21

273046404_1018660852054582_3314744799217173998_n-f52e6a05

அத்தியாயம் 21

 

சாப்பாடுத் தட்டுடன் அருணின் அறையில் அவன் கட்டிலருகில் நின்றிருந்தாள் அமுதமொழி. கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவனோ கைகள் இரண்டையும் கொண்டு வாயை மூடி வைத்திருந்தான். அழகன்கிரியின் முகத்தில் கோபம் வழிய, அழகிமொழியின் முகத்தில் கெஞ்சல் வழிந்தது.

இருவரையும் கவனித்தபடி உள்ளே நுழைந்த மைத்தி,

“என்னடா அருண்?” எனச் சலிப்பாகக் கேட்டார்.

“அவட்ட கேளுங்க!’ என எகிறினான் மகன்.

“என்னம்மா மொழி?”

“சாப்பாடு ஊட்ட வந்தா வாயை இறுக்கி மூடிக்கறாரு ஆன்ட்டி.”

“ஏன்டா?”

“எனக்கு சாப்பாடு ஊட்ட அவ யாரு மீ? முதல்ல இவள வீட்ட விட்டுப் போக சொல்லுங்க!”

“அதான் போக சொல்றான்ல! போயேன்மா”

“முடியாது அத்தை! என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க உங்க மகனை! பண்ணிக்கலனா இப்படித்தான் லீவிங் டுகெதர்ல இருப்பேன்!”

“எம்மா மொழி! வீட்டுல பெரிய மனுஷி நான் ஒருத்தி இருக்க, என் கூட, என் ரூம்ல நீ தங்கிக்கறதுலாம் லீவிங் டுகேதர்ல வராதுமா”

“வராதா? அப்போ சரி! நீங்க பெட்டி படுக்கையைக் கட்டிக்கிட்டு, என் வீட்டுல போய் இருந்துக்குங்க!”

“இதுக்கு பேருதான் ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரிய விரட்டறதாம்மா? ஏன்டா மவனே, என்னைப் போக சொல்லுறா, நீயும் கம்முனு கிடக்க! அப்போ நான் ஆரோதானா?”

“மீ!!!!!” என இவன் கத்த,

“எஸ்கேப்!!!!!!” என்றவர், அமுதமொழியைப் பார்த்துக் கண்களை சிமிட்டி விட்டு வெளியே வந்துவிட்டார்.

அவர் வெளியே போய் விட, மீண்டும் ஆரம்பித்தாள் இவள்.

“சாப்பிடுங்க கிரி! மருந்து போடனும்”

“நீ வச்சிட்டுப் போ, நானே சாப்பிட்டுக்குவேன்! எனக்கு கை ரெண்டும் நல்லாதான் வேலை செய்யுது! இன்னும் செயல் இழந்துப் போகல!” எனச் சொன்னவனின் குரல் கமறியது.

தட்டை மேசையில் வைத்த அமுதமொழி, அருணின் அருகே போய் நின்று அவனையே உற்றுப் பார்த்தாள். கண்கள் லேசாய் கலங்கி இருக்க, அவள் முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்தான் அருணகிரி. உள்ளம் பாகாய் உருகிட, அள்ளி அணைத்துக் கொண்டாள் தன்னவனை. அவள் பிடியில் இருந்து விலக போராடியவனை, இன்னும் இன்னும் இறுக்கிக் கொண்டாள் பெண். உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிந்தது போல போராட்டம் மெல்ல, மெல்ல அடங்க அவளது அணைப்பில் அப்படியே ஒண்டிக் கொண்டான் அருண்.

குரல் உடைய,

“பயமா இருக்கு மொழிம்மா! ரொம்ப பயமா இருக்கு” என ஆரம்பித்தவன், அப்படியே உடைந்துப் போனான்.

கண்ணீர் ஆறாய் பெருக, தன் இயலாமையை, கவலையை, மனக்கிலேசத்தை, ஆற்றாமையை, பயத்தை எல்லாம் கண்ணீராய் மாற்றி தன் காதலியின் நெஞ்சைத்தை நனைத்தான் இவன். மொழிக்கும் கண்ணீர் கரை உடைத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, கண்ணீரீல் ஆறுதல் தேடினர்.

அன்று மருத்துவமனையில்,

“என்னடி! எனக்கு வாழ்க்கைப் பிச்சைப் போடறியா?” என வெகுண்டவன் அதீத மன உளைச்சலிலும், உடல் சோர்விலும் மயங்கி இருந்தான்.

இவள் பயந்துப் போய் டாக்டரை அழைக்க, அவரும் சோதித்துப் பார்த்து ஓய்வெடுக்கட்டும் என சொல்லிவிட்டார்.

அதன் பிறகு மருத்துவமனையில் அவன் இருந்த நாட்களில் இவள் வாயைத் திறக்கவேயில்லை. அருணின் அருகே இருப்பதே போதுமென அமைதிக் காத்தாள். அவனோ இவள் ஒருத்தி இருப்பதைக் கண்டுக் கொள்ளவேயில்லை. மைத்தியிடம் செல்லம் கொஞ்சினான், சிரித்துப் பேசினான், நர்ஸ்களிடம் அரட்டை அடித்தான், வம்பிழுத்தான். ஆனால் இவளை அப்படியே ஒதுக்கி வைத்தான். அமைதியாக, அவன் செய்கைகளைப் பார்த்திருந்தவள், வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

கடமையாய் இல்லாமல் மனமுவந்து மைத்திக்கு உணவு வாங்கித் தந்தாள், வீட்டிற்கு அவரை அனுப்பி ஓய்வும் எடுக்க வைத்தாள். அருணின் உதவியாளன் புகைப்படம் எடுக்கும் வேலைகளை ஏற்றுக் கொள்ள அலங்கார வேலைக்கு ஸ்டூடியோவுக்கும் சென்று வந்தவள் முன்பை விட இன்னும் அமைதியாக வளைய வந்தாள்.

அருணின் நோய், அவனது புறக்கணிப்பு, நிர்மலின் விடா முயற்சி என பல அம்புகள் உள்ளத்தைத் துளைத்தெடுக்க ஓய்ந்துதான் போனாள் அமுதமொழி. காதல்…அது மட்டுமே அவளை வீழ்ந்துப் போக விடாமல், வாழ்ந்துப் பார் என உந்துதல் தந்து உயிர்ப்பாய் நடமாட வைத்தது.

மைத்தியிடம் பேசும் போதோ, ரவுண்ட்ஸ் வந்த டாக்டரிடம் விவரங்கள் கேட்கும் போதோ, பல தடவை யாருடைய பார்வையோ முதுகைத் துளைப்பது போல தோன்றும் இவளுக்கு. ஆனால் திரும்பிப் பார்த்து அந்தக் கள்ளப் பார்வையாளனை சங்கடப்படுத்தமாட்டாள் அமுதமொழி. அதீத களைப்பில் சில சமயம் அருணின் மருத்துவமனை அறையில் இருக்கும் ஓய்வெடுக்கும் நாற்காலியில் அமர்ந்தவாக்கிலேயே உறங்கி விடுவாள். விழித்தெழும் போது, பட்டென முகம் திருப்பிக் கொள்ளும் அவனது செயலில் புன்னகை அரும்பி விடும் இவளுக்கு. அந்த சொற்ப நேரத்தில், அவன் கண்களில் வழிந்தோடும் காதலையும், ஏக்கத்தையும், ஆசையையும், நிராசையையும் உள்வாங்கிக் கொள்பவளுக்கு உள்ளம் உருகிவிடும்.

இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் கண்டும் காணாமல் இருந்த மைத்தி தனிமையில் இவளிடம்,

“இது சரியா வராது மொழிம்மா!” என ஆரம்பித்தார்.

“ஏன் அத்தை?”

“அவனோட இந்த நிலையில, உன்னை மருமகளா ஏத்துக்கிட்டா அது தெரிஞ்சே ஒரு வயசுப் பொண்ணுக்கு நான் செய்யற துரோகம் இல்லையாடா! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா! என் மகனுனோட நல்வாழ்வுக்காக உன்னை பலிகடா ஆக்கனுமா! ஆரோக்கியமான ஒருத்தன கல்யாணம் செய்து, குழந்தைக் குட்டின்னு சந்தோஷமா வாழனும்டா நீ”

“என் அருண தவிர வேற யாரயாச்சும் கல்யாணம் செஞ்சா கட்டாயத்தின் பேருல குழந்தைக் குட்டின்னு வேணா வாழுவேன்! ஆனா சத்தியமா சந்தோஷமா வாழ மாட்டேன் ஆன்ட்டி! அது இன்னொரு ஆணுக்கு நான் செய்யற துரோகம் இல்லையா!” எனக் கண் கலங்க கேட்டவளை அணைத்துக் கொண்டார் மைத்தி.      

“எனக்கு என்ன சொல்லன்னு தெரியலையேம்மா மொழி! அருணோட அம்மாவா உன்னோட பிடிவாதத்தை நினைச்சு எனக்கு அவ்வளவு பூரிப்பா இருக்கு! அதே வேளை ஒரு சாதாரணப் பெண்ணா என்னால இத ஒத்துக்கவே முடியலைம்மா!”

“என்னால அருண் ஒரு ஆளயே சமாளிக்க முடியல ஆன்ட்டி. நீங்களும்..நீங்களும் அவர் கூட சேர்ந்து எனக்கு எதிரா நின்னா நான்..நான் எப்படி என் காதலுல ஜெயிப்பேன்!”

“உன் முகத்தப் பார்த்தாலே உன் உள்ளத்துல என்ன இருக்குன்னு சொல்லிடலாம்.

‘அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்’னு வள்ளுவர் சொன்னது உனக்கே சொன்னது போலதான் இருக்கு மொழி. என் மகன் மேல நீ வச்சிருந்த காதல் அப்படியே உன் முகத்திலும், உன் உடல்மொழியிலயும் அப்பட்டமா தெரிஞ்சது. எனக்கே தெரியறப்போ அருணுக்குத் தெரியாம இருக்குமா? எம்.எஸ்னு தெரிஞ்சதும் என் கிட்ட ஓடி வந்தவன், அழுததெல்லாம் உனக்காகதான். அவனுக்காக கலங்காதவன், உன்னால இத தாங்கிக்க முடியுமான்னுதான் தவிச்சான். அவனோட சேர்த்து உன்னையும் இந்த சூழலுக்குள்ள, சுழலுக்குள்ள இழுக்கக் கூடாதுன்னு கதறனான். என் மகனோட துடிப்பையும், தவிப்பையும் பார்த்து சொல்லாத காதல் இல்லாமலே போகட்டும்னு நான்தான் சொன்னேன். அருணோட சேர்ந்து உன்னை நிர்மல் கிட்ட சேர்த்து விட முயற்சி செஞ்சேன்.”

 

“இது இல்லைனா இன்னொன்னுன்னு சாய்ஸ் குடுக்க இது என்ன ஹோட்டல் மெனுவா? காதல் அணு! உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் உருட்டிப் புரட்டற காதல் அணு ஆன்ட்டி. அருண் இல்லைனா தருண், தருண் இல்லைனா வருண்னு நான் மனச மாத்திட்டுப் போய்கிட்டே இருப்பேன்னு எப்படி ஆன்ட்டி நீங்க நெனைக்கலாம்?”

“தப்புதான்மா, தப்புதான்! உன்னைத் திசைத் திருப்பி விட, மனச மாத்த ஒவ்வொரு முறையும் அந்தஸ்த்து, குடும்பப் பெருமை, அருணுக்கு பொண்ணு பார்த்தாச்சுன்னு சொல்லிட்டு நான் தவிக்கற தவிப்பு இருக்கே! ஒரு பக்கம் இவனோட நிலையை நினைச்சு வேதனைனா, இன்னொரு பக்கம் உன் சோக முகத்தப் பார்த்து கவலையா வரும். உன் இடிஞ்சுப் போன தோற்றத்தைப் பார்த்து, இல்லடாம்மா ஒன்னும் இல்லன்னு சொல்லி உன்னை ஆரத் தழுவிக்கனும்னு மனசு பரிதவிக்கும். எல்லாமே உன் நன்மைக்குதான்னு இதயத்தை இரும்பாக்கிக்குவேன். ஆனா கடைசி கடைசியா என் அருண என் கிட்ட குடுத்துடுங்கன்னு தைரியமா கேட்டப்பவே புரிஞ்சுடுச்சு இந்த அமைதியான மொழிக்குள்ள ஒரு பிடிவாத மொழி உக்காந்துருக்கான்னு. அவன் நோயப் பத்தித் தெரிஞ்சும் அவன்தான் வேணும்னு நிக்கறப் பார்த்தியா, உன் அன்பு முன்னுக்கு, உன் காதல் முன்னுக்கு நான் தோத்துட்டேன்மா. இனிமே இன்பத்திலும் துன்பத்திலும் உனக்கு பக்கபலமா நான் இருப்பேன்!”

மைத்தியின் சம்மதம் கிடைத்ததே யானை பலம் கொடுத்தது இவளுக்கு. அதன் பிறகு அருண் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குப் போக, அவனுக்கு முன்னரே மொழியின் பெட்டி படுக்கை அங்கே குடிபெயர்ந்திருந்தது. பெட்டி படுக்கையுடன் சேர்த்து அமுதமொழியும் பால் காய்ச்சாமலே புது வீடு புகுந்திருந்தாள்!

தாயையும், அவர் நடமாடிய அந்த வீட்டையும் இவள் எவ்வளவு நேசிக்கிறாள் என அறிந்தவனாயிற்றே அருண்! எல்லாவற்றையும் உதறி விட்டு தனக்காக தன் வீட்டிற்கு வந்தவளை இரு கரம் நீட்டி அன்பாய் அரவணைத்துக் கொள்ள முடியாத தனது நிலையை எண்ணி உள்ளுக்குள் குமைந்தான். வெளியில் அவளைத் திட்டினான், ஏசினான், போ போ என விரட்டினான். அடித்தாலும், பிடித்தாலும் தாயின் காலை சுற்றி வரும் மழலைப் போல, தன்னையே சுற்றி வரும் இந்த மங்கையை என்னதான் செய்வது எனப் பரிதவித்துப் போனான் அருண்.

தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்ட அமுதமொழி, அவனது கண்களைத் துடைத்து விட்டாள். சுயபச்சாதாபத்தில் இருந்து விழித்துக் கொண்டவன், பட்டென அவளது கைகளைத் தட்டிவிட்டான்.

“என்னை விட்டுப் போடி”

“முடியாது”

“ஞாபகமிருக்கா மொழி, ஜாக்சனையும் அவனோட குடும்பத்தையும்?”

ஆமென தலையாட்டினாள் இவள்.

“அது மாதிரி உனக்கும் ஒரு குடும்பம் வேணும்னு ஏங்கினதுலாம் மறந்துப் போச்சா? நிர்மல கல்யாணம் செஞ்சிக்கிட்டனா உனக்குன்னு ஒரு ஆரோக்கியமான புருஷன், அழகான குழந்தைன்னு வாழ்க்கை வண்ணமயமா இருக்கும் மொழி! தயவு செஞ்சு நான் சொல்றத கேளு! என்னையும், இந்த வீட்டையும் விட்டுப் போ!”

“முடியாது!”

“பைத்தியமாடி உனக்கு? குழந்தைக்கு சொல்ற மாதிரி தானே அழகா சொல்றேன்! முடியாது, முடியாதுன்னா என்னடி அர்த்தம்?”

“முடியாதுக்கு வேற என்ன அர்த்தம் இருக்க முடியும்! முடியாதுதான்!”

“அப்படியே ஒரு அப்பு அப்பிடுவேன்! என் கிட்டயே, உன் குரு கிட்டயே உன்னோட வாதத் திறமையைக் காட்டறியா? தீட்டன மரத்துலயே கூர் பார்க்கறியா? கொன்னுடுவேன் பார்த்துக்கோ!”

“கொல்லுங்களேன்! மனசுல புருஷனா நெனைச்சு வச்சிருக்கறவரே அவர் பொண்டாட்டிக்கு வேற ஒரு புருஷன் பார்த்துக் கொடுக்கற கொடுமைய சகிச்சிக்கிட்டு வாழறத விட, கொன்னுடுங்க, நிம்மதியா போய்டறேன்”

“ஐயோ, கடவுளே! எனக்கு அந்த அமைதிமொழிய திருப்பிக் கொடு! இந்த அறுவைமொழிய என் கண்ணுல இருந்து மறைஞ்சுப் போக வைச்சிடு ப்ளிஸ்”

“எனக்கும்தான் வேண்டிக்க தெரியும்! கடவுளே, கடவுளே! எனக்கு என் இனியகிரிய திருப்பிக் குடு! இந்த இடியட்கிரிய மறைஞ்சுப் போக வை ப்ளிஸ்”

“யார்டி இடியட்! பல்லைத் தட்டிக் கையில குடுத்துடுவேன் பார்த்துக்கோ!”

“நீங்க பல்லைத் தட்டுற வரைக்கும் நான் என்ன பாங்ரா ஆடிட்டு இருப்பேனா? பல்லைத் தட்டற அளவுக்கு தெம்பில்லைனானும், கன்னத்தையாச்சும் தட்டிடுவேன்”

“எங்க தட்டுப் பார்ப்போம்!” என கோபமாக அவன் நெஞ்சை நிமிர்த்த,

“நீங்க சொன்னா உடனே செஞ்சுடுவேனா! நோ வே!” என்றவள் திரும்பி கதவை நோக்கி நடந்தாள்.

“முறத்தால புலிய அடிச்சு விரட்டனாளாம் வீரத் தமிழச்சி! இப்படி புறமுதுகிட்டு ஓடல! பயந்தாங்கொள்ளி, போ போ! அப்படியே வீட்ட விட்டும் போ!” எனக் கடுப்படித்தவன் மெல்ல சரிந்துப் படுத்துக் கொண்ட அடுத்த நிமிடம், அவனது வயிற்றில் ஏறி அமர்ந்திருந்தாள் அமுதமொழி.

அவளது மின்னல் வேகத்தில் திடுக்கிட்டவன், வாயைத் திறப்பதற்குள், படபடவென கன்னத்தில் மாறி மாறி விழுந்தது.

“என்னடி பண்ணற? விடு, விடு!”

“யாரப் பார்த்து பயந்தாங்கொள்ளின்னு சொன்னீங்க! இந்தப் புலி பதுங்கறது பாயறதுக்குதான்னு இப்போ தெரிஞ்சிருக்குமே மிஸ்டர் எலி!” என கலகலவென சிரித்தவளை படக்கென புரட்டிக் கட்டிலில் சரித்தவன்,

“வர வர இந்த வாய் என்னா பேச்சு பேசுது! பேசுமா, என்னை எதிர்த்து இனி பேசுமா?” எனக் கேட்டப்படியே அவளது உதட்டைப் பிடித்துக் கிள்ளினான்.

“ஹா! வலிக்குது கிரி! வலிக்குது!”

“வலிக்கட்டும், நல்லா வலிக்கட்டும்!” என்றவனின் சிரிப்பு, கட்டிலில் அழகிய சுரசுந்தரி சிலையாக வீழ்ந்துக் கிடந்தவளின் எழிலில் அப்படியே உதட்டோடு உறைந்துப் போனது.

நடுங்கிய கரத்தை நீட்டி மொழியின் முகவடிவை மெல்ல அளந்தவன்,

“என்னை உசுரோட கொல்லவே பொறந்திருக்கடி நீ! உன்னை விட்டுக் குடுக்கவும் முடியல, கிட்ட சேர்த்துக்கவும் முடியல! பைத்தியம் புடிக்குதுடி மொழி!” என அவள் சிகையை அளைந்தான்.

“இந்த முடிக் காட்டுல தொலைஞ்சிப் போயிட மாட்டோமான்னு ஏக்கமா இருக்குடி”

விரல் மெல்ல கீழிறங்கி அவள் நெற்றியை வருடியது.

“இந்த பிறை நெற்றியப் பார்த்துப் பித்துப் பிடிக்குதுடி எனக்கு!” என்றவனின் விரல் மூக்கின் வரிவடிவத்தை அளக்க,

“இந்த கிளிமூக்கு என் கன்னத்தக் கீறிப் போகாதான்னு ஆசையா இருக்கு மொழி!” என்றான் கரகரத்துப் போன குரலில்.

ஆட்காட்டி விரல் அவனது அனுமதியையும் மீறி அவளது உதட்டை உரசிப் பார்க்க,

“வெளிநாட்டு வேலையில எத்தனையோ அடிக்‌ஷன கடந்து வந்தவன் நான். ஆனா உன் உதடு குடுத்தப் போதைய மட்டும் கடக்கவே முடியலடி மொழி! முடியவே இல்ல! என்னை உயிரோட புதைக்கற புதைக்குழிடி இது!” என்றவன் மெல்ல அவளது உதட்டைத் தன் உதட்டால் பற்றிக் கொள்ள குனிந்தான்.

அவளது மூச்சுக் காற்று முகத்தில் மோத, பட்டென சித்தம் தெளிந்தது காதல் பித்தனுக்கு. சட்டென எழுந்து கட்டிலின் ஓரம் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்துக் கொண்டவன் மெல்லிய குரலில்,

“என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டனா இந்த சுகத்தக் கூட உனக்கு  எத்தனை நாளுக்கு என்னால குடுக்க முடியும்னு தெரியாதுடி மொழி! நான் வேணாம்டி உனக்கு!” என்றவனின் முதுகு அழுகையில் குலுங்கியது.

தாவி பின்னால் இருந்து அவனை அணைத்துக் கொண்ட மொழி,

“இது மட்டும்தான் வாழ்க்கையா கிரி?” எனக் குரல் அடைக்கக் கேட்டாள்.

“இதுவும்தான்டி வாழ்க்கை! காமம் இல்லாத காதல் கசந்துடும் மொழிம்மா! உனக்கு, உன் இளமைக்கு என்னால நியாயம் செய்ய முடியாம போய்ட்டா, அதுவே என்னைக் கொல்லாம கொன்னுடும்!”

“இதே நமக்கு கல்யாணம் ஆகி, உங்களுக்கு எம்.எஸ் இருக்குன்னு தெரிய வந்திருந்தா இப்படிதான் எனக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைக்கனும்னு நெனைப்பீங்களா கிரி? லைப்ல எதுக்கும் கேரண்டி கிடையாது! இன்னைக்கு இருக்கறவன் நாளைக்கு இல்ல. எம்.எஸ்சோட நீங்க நூறு வருஷம் இருக்கலாம். நார்மலா இருக்கற நான் பட்டுன்னு நாளைக்குக் கூட செத்துடலாம். எதுவும் நம்ம கையில இல்ல கிரி! தூங்கி எழுறதே நமக்கு அடுத்தப் பொறப்புதான்!”

“இப்படிலாம் பேசாதடி!” என்றவன் தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருப்பவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டான்.

“எனக்கு ஒன்னுன்னா உங்களுக்குத் துடிக்குதுல்ல! அதே போலத்தான் உங்களுக்கு ஒன்னுன்னா எனக்கும் துடிக்குது கிரி! உங்க கஸ்டத்தப் பகிர்ந்துக்கனும், ஆறுதலா இருக்கனும்னு மனசு துடிக்குது! என்னை நீங்க ஒதுக்கி வைக்க, வைக்க மனசு ஒடஞ்சிப் போகுது! எதிர்காலத்தப் பத்தி யோசிச்சு நிகழ்காலத்தப் பாழாக்காம, வாழ்ந்துப் பார்த்துடலாம் கிரி! ப்ளிஸ்”

தலையை முடியாது என இவன் இடம் வலம் ஆட்ட, அப்படி ஒரு ஆத்திரம் வந்தது இவளுக்கு. இப்படி எல்லாம் பேசிப் போராடி பழக்கமில்லாதவளுக்கு கண்ணீர் கரைக் கடந்தது. அவன் மடியில் இருந்து எழுந்துக் கொண்டவள், விரிந்துக் கிடந்த முடியை அள்ளிக் கொண்டையிட்டாள்.

“அப்பா கிரிக்கும் மகன் கிரிக்கும் இவளோ சுயநலம் ஆகாது! அவர் உயிரை விட்டு மைத்தி ஆன்ட்டிய கதற விட்டாருன்னா, நீ என்னை ஒதுக்கி வச்சி கதற விடற! போதும்டா சாமி போதும்!” எனத் தேம்பியவள்,

“உன் சங்காத்தமே வேணாம் எனக்கு! நாள பின்ன உன்னைக் கல்யாணம் பண்ணி எனக்கு எதாச்சும் சீக்கு வந்தா, என்னை ஒதுங்கிப் போக சொல்லற மாதிரி, நீயும் என்னை ஒதுக்கி வச்சிடுவ போல” எனக் குமுறினாள்.

“இந்த தேள் கொடுக்கு நாக்க இத்தனை நாள் எங்கடி ஒளிச்சு வச்சிருந்த! பாவி! பாவி! இப்படிலாம் பேச்சுக்குக் கூட சொல்லாதே மொழி!”

“சொல்லுவேன்! இப்படிதான் சொல்லுவேன்! கண்ணு அழகு, லிப்ஸு அழகு, கன்னம் அழகுன்னு தொட்டுத் தொட்டு தடவிட்டு, இப்போ பெரிய தியாகி மாதிரி என்னை இன்னொருத்தனுக்கு விட்டுக் குடுக்கற நீயெல்லாம் மனுஷன்லயே சேர்த்தி இல்ல! நீ வேணா தியாகியா இரு! நான் இருக்கமாட்டேன்! எனக்கு என் கிரி வேணும்!”

“கிரி கிரின்னு உசுர விடறியே மொழி, உனக்கு அம்மாமொழியா ஆகனும்னு ஆசை இல்லையாடி? இந்த ஜெனிடிக் டிசீஸ் நம்ப புள்ளைக்கும் வர சான்ஸ் இருக்குடி! தெரிஞ்சே என்னால ஒரு குழந்தைய உருவாக்கி அது துன்பப் படறத பார்க்க முடியாதுடி மொழி! சத்தியமா முடியாது! ஒரு பெண் பிறக்கறப்ப 25 மார்க் வாங்கறாளாம், பூப்படையறப்ப 50 மார்க் வாங்கறாளாம், கல்யாணமானதும் 75 மார்க் வாங்கறாளாம்! கடைசியா ஒரு குழந்தைக்கு அம்மாவா ஆகறப்பதான் 100 மார்க் வாங்கறாளாம்னு எங்கயோ படிச்சேன் மொழி! உனக்கு 100 மார்க் வேணாமா? என் காதலுக்காக உன் தாய்மையை விட்டுக் கொடுக்க சொல்லறது நியாயமாடி? காதல்னா வார்த்தையால சொல்லறது இல்ல மொழி! செயலால காட்டனும்! காதலுக்காக, காதல(உன்னை) விட்டுக் குடுத்து என் காதல நிரூபிக்கறேன்டி நான்!”

விரக்தியாகப் புன்னகைத்த மொழி,

“பரீட்சைக்குத்தான் மார்க் போடுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்! பொண்ணு வாழ்க்கைக்கும் இப்படி மார்க் போடுவாங்கன்னு இப்பத்தான் கேக்கறேன். மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்னு சொன்னவர் மட்டும் இந்த மார்க்கிங் சிஸ்டத்தைப் பார்த்திருந்தா மாரைப் பிடிச்சிக்கிட்டு கீழ விழுந்துருப்பாரு கிரி. கல்யாணம் செய்யறதும், பிள்ளைப் பெத்துக்கறதும் முக்கியம்தான். அதுக்குன்னு அத அவ மேல, ஒரு செஞ்சே தீர்க்க வேண்டிய கடமையா சுமத்தறது ரொம்பத் தப்பு கிரி! பெண் இஸ்டப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கனும். ஊரும் உலகமும் என்ன பேசும்னு பயத்துல கஸ்டப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது. எத்தனையோ பேர் குழந்தை இல்லாம வாழலியா கிரி? அவங்கல்லாம் வாழ்க்கையில 100 மார்க் வாங்காம தோத்துப் போனவங்களா! கேக்கவே கேணைத்தனமா இருக்கு! எத்தனையோ குழந்தைங்க நம்மள மாதிரி அம்மா அப்பா வேணும்னு ஏக்கத்தோட இருக்காங்க கிரி! நானே பாசத்துக்கு ஏங்கன ஒரு அனாதையாதான் வளந்தேன். அப்படி ஏங்கித் தவிக்கற பிள்ளைங்க ஏக்கத்தத் தீர்ப்போம் கிரி! பிரிஞ்சுப் போக ஆயிரம் காரணம் சொல்லலாம்! என் கூட சேர்ந்து வாழ காதல்ன்ற ஒரு காரணம் போதும் அருண். ப்ளீஸ்! கிவ் அஸ் அ சான்ஸ்! ப்ளிஸ் அருண்” எனக் கெஞ்சியவளை அணைத்துக் கொண்டான் மொழியின் கிரி.

படாரென அவர்களது அறைக் கதவு திறக்க, சட்டென விலகினார்கள் இருவரும்.

“ஏன்டி அமுதா! என்னை சிங்கப்பூருக்கு விரட்டி விட்டுட்டு இவன் கூட கூத்தடிச்சிட்டு இருக்கியா? கடைசில நீயும் உங்கம்மா மாதிரி…” எனச் சொல்ல வந்தவரை, அருணின் கர்ஜனைக் குரல் தடுத்து நிறுத்தியது.

“உங்க பேத்திய நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம்! ஆனா என் பொண்டாட்டிய ஒத்த வார்த்தைத் தப்பா பேசுனாலும், வயசானவங்கன்னு கூடப் பார்க்க மாட்டேன்! மரியாதை கெட்டுடும்”

 

(நீளுமா…)

(போன எபிக்கு லைக், கமேன்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். சாரி! போன வாரம் ஒரு எபிதான் குடுக்க முடிஞ்சது! அந்த எபி என்னை ரொம்பவே டவுனாக்கிடுச்சு! மனச தேத்தி, மீண்டும் எழுத டைம் எடுத்துடுச்சு! அருணோட காதல் எப்போ வந்தது, இத்யாதி, இத்யாதிலாம் அடுத்த எபில பார்க்கலாம்! கல்யாண சாப்பாடு போடுறேன், இலையோட வந்துடுங்க டியர்ஸ். லவ் யூ ஆல்! டேக் கேர்)