En Ayul Neelumadi–EPI 22

273046404_1018660852054582_3314744799217173998_n-b3c6d7bd

அத்தியாயம் 22

 

“மொழிம்மா!”

“ஹ்ம்ம்”

“முகத்தைத் திருப்பி கொஞ்சம் லெப்ட் சைட்ல பாரு”

அருண் சொன்னதைப் போல அச்சுப் பிசகாமல் செய்தவள் அதன் பிறகே ஏன் எனக் கேட்டாள்.

“அந்த ஆங்கிள்ல போட்டோ இன்னும் அழகா தெரியும்மா!”

“பெத்த போட்டோகிராபர்னா உங்க கல்யாணத்துக்கும் அதே மைண்ட் செட்லதான் இருக்கனுமா? புகைப்படகிரி மோட்ல இருந்து புருஷன்கிரி மோட்கு வாங்க அருண்!” என்றவளின் புன்னகை அணிந்திருந்த பொன்னகையையும் மீறி ஜொலித்தது.

இன்னும் சில நிமிடங்களில் தன் கையால் தாலி வாங்கி, செல்வியில் இருந்து திருமதியாகப் போகும் தன் முழுமதியின் சிரிப்பு இவனையும் தொற்றிக் கொண்டது. மொழியை இன்னும் நெருங்கி அமர்ந்தவன், தனது உதவியாளனுக்கு சைகைக் காட்டினான். இருவரின் மலர்ந்த முகங்களை அழகாக பதிவு செய்துக் கொண்டான் அவன்.

இவர்கள் இருவரின் அலப்பறையை மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்த ஐயர்,

“அம்பி! போட்டோக்கு போஸ் கொடுத்து முடிச்சிட்டேள்னா, மாங்கல்ய தாரணம் பண்ணிடறேளா?” எனக் கேட்டார்.

இவர்கள் இருவரும் அசடு வழிய, பின்னால் நின்றிருந்த மைத்திக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

அருண் தலையை சம்மதமாய் ஆட்ட,

“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” எனும் ஐயரின் சத்தத்தில் மங்கள மேளம் முழங்க ஆரம்பித்தது.

ஐயர் மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்க, கையில் மாங்கல்யத்தை எடுத்த அருணுக்கு அப்படி ஒரு நடுக்கம். இவ்வளவு நேரம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தவனுக்கு, திடுமென தான் செய்வது சரியா தப்பா என பயம் ஒன்று முளைக்க, மொழியை கலவரத்துடன் பார்த்தான்.

அவனது சஞ்சலத்தையும், பயத்தையும் புரிந்துக் கொண்டவள்,

“இப்ப நீங்க என் கழுத்துல கட்டுறீங்களா? இல்ல நான் உங்க கழுத்துல தாலியைக் கட்டவா?” என மெல்லிய குறும்பானக் குரலில் மிரட்டலாகக் கேட்டாள்.

அந்த படபடப்பிலும் புன்னகை அரும்பியது அருணுக்கு. பயமும் பதட்டமும் வடிந்துப் போக, கையில் மாங்கல்யத்துடன் கண்களை மூடி,

“எனக்காக இல்லைனாலும் என் மொழிக்காகவாச்சும் என்னை நல்லா வச்சிரு ஆண்டவா!” எனப் பிரார்த்தித்தான்.

அதன் பின் நடுங்கும் கரங்களை ஒரு நிலைப்படுத்தி தன் காதல் கண்மணியின் கழுத்தில் தாலியைக் கட்டினான் அருணகிரி.

கழுத்தில் தாலி ஏறிய நொடி, அமுதமொழியின் ஒரு கண்ணீர் துளி அவனது கரத்தில் பட்டுத் தெறித்தது.

“நன்றி ஆண்டவா!” என அவளது உதடுகள் முணுமுணுத்ததைக் கேட்டவன், தோளோடு தன்னவளை அணைத்துக் கொண்டான்.

இருவரின் உணர்ச்சிகரமான போராட்டத்தைப் பார்த்திருந்த மைத்திக்கும் கண்கள் கலங்கிப் போனது.

“என் குழந்தைங்க ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா வாழனும் ஆண்டவா!” என பிரார்த்தித்தவர்,

“கிரி! நம்ம புள்ளைங்கள என்னோட சேர்ந்து ஆசீர்வாதம் செய்யுங்க!” என அருவமாகிப் போன கணவரையும் துணைக்கழைத்தார்.

“சரி, சரி! அடுத்த சாங்கியத்தை எல்லாம் பார்க்கனும்! எழுந்திரிங்க!” எனக் குரல் கொடுத்தார் புவனா.

மளமளவென அடுத்த சாங்கியங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய, பெண்ணும் பிள்ளையும் பெரியவர்களிடம் ஆசி வாங்கினார்கள்.

மைத்தி கட்டி அணைத்து இருவரையும் வாழ்த்த, அடுத்து வைதேகியிடம் சென்றனர் இருவரும். கோயிலுக்கு வந்ததில் இருந்து பேரன் பேத்தி அருகே உர்ரென அமர்ந்திருந்தவர், தன்னிடம் ஆசி வாங்க வந்தவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்.

சிங்கப்பூரில் இருந்தவருக்கு போன் செய்து, அருணை காதலிப்பதாகவும் அவனுடனே அவன் வீட்டில் இனி இருந்துக் கொள்ளப் போவதாகவும் சொல்லி விட்டுதான் வந்திருந்தாள் அமுதமொழி. வைதேகிக்கு அதை தாளவே முடியவில்லை. அதென்ன உன் அம்மாவைப் போலவே அப்படி ஒரு தெய்வீகக் காதல், எப்படி திருமணத்துக்கு முன்னமே வீட்டை விட்டுப் போகலாம், நம் பண்பாடு என்ன, கலாச்சாரம் என்ன என நினைத்தப் பொழுதெல்லாம் போன் செய்து இவளை வாட்டிக் கொண்டிருந்தார். உண்மை அன்பில் சொல்லி இருந்தால் இவளும் கேட்டிருப்பாளோ என்னவோ, அவரின் அன்பிலேயே இவளுக்கு சந்தேகம் இருக்க, அவர் பேச்சைக் கேட்பாளா இவள்!

மொழி அழைப்பை எடுப்பதைக் குறைத்துக் கொள்ள, அதோடு புவனாவின் தாக்குதலும் கூடிப் போக சென்னைக்குக் கிளம்பி வந்துவிட்டார் வைதேகி. தனியாக ஒன்றும் வரவில்லை. நியாயம் கேட்க மகன் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டுதான் வந்திருந்தார்.

அவ்வளவு கோபமாய்,

“உங்க பேத்திய நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம்! ஆனா என் பொண்டாட்டிய ஒத்த வார்த்தைத் தப்பா பேசுனாலும், வயசானவங்கன்னு கூடப் பார்க்க மாட்டேன்! மரியாதை கெட்டுடும்” எனும் அருணின் கத்தலில் ஆடித்தான் போனார் வைதேகி.

“அவ என் பேத்தி! அவளுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு எனக்குதான் தெரியும்!” என பயத்தை மறைத்துக் கொண்டு சண்டைக்கு வந்தார் அவர்.

மைத்தியோடு ரகுவரனும், புவனாவும் அறைக்குள் நுழைந்தனர்.

“எதா இருந்தாலும் ஆற அமர உட்கார்ந்துப் பேசலாம்மா!” என மைத்தி சொல்ல,

“என் பேத்திய நான் கூட்டிட்டுக் கிளம்பறேன்!” என ஒற்றைக் காலில் நின்றார் வைதேகி.

“உங்க பேத்தியா அவ இன்னும் இருக்கவும்தானே கூட்டிட்டுக் கிளம்பறேன்னு நிக்கறீங்க! இன்னும் ஒரே வாரத்துல அமுதமொழி அருண்மொழியா ஆகிடுவா! அதுக்கு மேல அவ கிட்ட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது! அவ இஸ்டப்பட்டா வந்து உங்களைப் பார்ப்பா, பேசுவா, பழகுவா! நீங்களும் இங்க வரலாம், பேசலாம், பழகலாம்! அதுக்கும் மேல என் வீட்டு மகராணிய யார் வீட்டுக்கும் சேவகம் செய்ய அனுப்ப மாட்டேன்!” என படபடத்து விட்டான் அருணகிரி.

“என்ன, என்ன! இப்படிலாம் ஏன் பேசறீங்க! சேவகம் அது இதுன்னு! என்ன பேச்சு இது! பாட்டிக்கு உதவியா இருந்தத உபத்திரவமாக்கிக் காட்டறதுலாம் தப்பு தம்பி”

“பாட்டி! அருண்!” என அழைத்து இருவரையும் திரும்பிப் பார்க்க வைத்தாள் மொழி.

“பார்டி! என்னை என்னவெல்லாம் சொல்லுது இந்த தம்பின்னு” என வைதேகியும்,

“மொழி, நீ செஞ்சதெல்லாம் போதும்! உன் கூடவே இருந்து நீ பட்ட பாடெல்லாம் பார்த்துருக்கேன்! இனி மேலும் நீ இமோஷனலா கஸ்டப்படறதுல எனக்கு இஸ்டம் இல்ல!” என அருணும் மாறி மாறி வாதாடினார்கள்.

“பாட்டி, அடிக்கடி உங்கள வந்துப் பார்த்துப்பேன்! முடிஞ்ச அளவுக்கு உதவி செய்வேன்! அவ்வளவுதான் இனி என்னால முடியும்! ஆனா முழுசா உங்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடியாது!” என இவள் சொல்ல, வாயடைத்துப் போனார் வைதேகி.

“அருண்! பாட்டி மேல எனக்கு கடலளவு மரியாதை இருக்கு. என்னை பாதுகாப்பா வளர்த்து விட்டதுக்காக அவங்க மேல நன்றியுணர்வும் நெஞ்சு முழுக்க இருக்கு! சட்டுன்னு அத்து விடற உறவு இல்லை இது! பலருக்குப் புரியாம போகலாம் எங்களோட பந்தம். அவங்க மேல எனக்கு கோபமோ, மனஸ்தாபமோ இருந்தாலும் அவங்கதான் என் பாட்டி! என்னால முடிஞ்சத அவங்க இருக்கற வரைக்கும் கண்டிப்பா செய்வேன்!” எனச் சொல்ல, உன் இஸ்டம் என்பது போல தோளைக் குலுக்கினான் இவன்.

“அதான் ரெண்டு பேரும் வேணும்னு மொழி சொல்லிட்டால்ல, இனி ஆக வேண்டியத பார்ப்போம்!” என மைத்தி நடுவில் புகுந்தார்.

“எனக்கு இந்தக் கல்யாணத்துல எந்த பிரச்சனையும் இல்ல! தம்பி ஒரு வாரத்துல வச்சிக்கலாம்னு சொல்லுது! அதுக்குள்ள என்னால பணம் பொரட்ட முடியாது! இன்னும் ஒரு ரெண்டு மூனு வருஷம்னா ஏதோ ஓரளவுக்கு சேர்த்துடுவேன்!” என ரகுவரன் இடைப்புக, மகனை முறைத்தார் வைதேகி.

“என் மவன் இப்படி கால வாருவான்னுதான் இவளுக்காக ஒரு டெப்பாசிட் போட்டு வச்சிருக்கேன்! அத எடுத்துத் தரேன், என் வீட்டோட மாப்பிள்ளையா வந்துடுறீங்களா?” என சைக்கில் கேப்பில் பிட்டைப் போட்டுப் பார்த்தார் வைதேகி.

அப்படி ஒரு சிரிப்பு அருணுக்கு.

“பாட்டி, பாட்டி!!!! நீங்களாம் அரசியலுக்குப் போயிருக்க வேண்டிய ஆளு! இப்படி நாலு சுவத்துக்குள்ள இருந்து வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டீங்க” என சொல்லி சொல்லி சிரித்தான்.

மொழியின் முறைப்பில்தான் சிரிப்பு அடங்கியது அவனுக்கு.

“இவனுக்காக நெறைய வேண்டுதல் வச்சிருக்கேன் நான். அதுல ஒன்னு கல்யாணம்னு இவனுக்கு நடந்தா, அத கோயிலுல வைக்கனும்ங்கறது! சிம்பிளா கோயிலுல திருமணத்தை முடிச்சிக்கிட்டு, ரிசப்ஷன் வைக்கிற செலவ அப்படியே சில அனாதை ஆசிரமத்துப் புள்ளைங்களுக்கு ட்ரேஸ் எடுத்துக் குடுத்து, மூனு வேளை சாப்பாடு போட்டுடறதுதான் என் ப்ளான்! அதனால செலவை எல்லாம் நாங்களேப் பார்த்துக்கறோம்! உங்க மொழிய எங்க மொழியா குடுத்துடுங்க போதும்” என்றார் மைத்தி.

“எடுத்துக்குங்க! எடுத்துக்குங்க!” என சட்டென சம்மதம் கொடுத்தார் ரகுவரன்.

செலவுக்குப் பயந்து மொழியை அவசரமாக தாரை வார்த்துக் கொடுத்தவருக்கு, தன் தாயை வைத்துப் பார்த்துக் கொள்ளவும் முடியும் என நம்பி அவர்களை இனி மொழியின் வாழ்க்கையில் இருந்து முழுதாய் விலக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாய் விலக்கி வைப்போம்.

அன்றைய தினத்தில் இருந்து அருண் கண்ணில் அகப்படும் நேரமெல்லாம் வீட்டோடு மாப்பிள்ளையாக வாவென நச்சரிக்க மறப்பதில்லை வைதேகி. முதலில் கோபமாக மறுத்தவன், போக போக சிரிப்புடன் கடந்து விட ஆரம்பித்தான். கோபத்தை விட நமது சிரிப்புதான் சிறந்த ஆயுதம் என்பது சிரித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!

“பாட்டி!”

“ஹ்ம்ம்”

“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி”

“நல்லா இருடியம்மா! பதினாறும் பெத்து சுகமா இருடி அமுதா!” என்றவர் தனது கழுத்தில் அணிந்திருந்த கனமான சங்கிலியைக் கழட்டி அமுதமொழியின் கழுத்தில் போட்டார்.

அதன் பிறகு அருணைப் பார்த்து,

“புள்ளய நல்லாப் பார்த்துக்கோங்க!” எனக் குரலில் கடுப்புடன் சொன்னார்.

“கண்டிப்பா என் பொண்டாட்டிய நான் நல்லாப் பார்த்துப்பேன்!” என்றான் இவன்.

“தம்பி!” எனத் தயக்கமாக வைதேகி அழைத்து நிறுத்த,

“கண்டிப்பா முடியாது! முடியவே முடியாது!” எனச் சொன்னவன் திருமணத்திற்கு வந்திருந்த மற்றவர்களைப் பார்க்க சென்று விட்டான்.

“இப்ப என்ன கேட்டுப்புட்டேன்னு இவ்ளோ வேகமா பதில் சொல்லிட்டுப் போறான் உன் புருஷன்! வீட்டோட மாப்பிள்ளையா வரீங்களான்னுதானே கேக்க வந்தேன்! கேக்கறதுக்குள்ள முடியாதுனா என்ன அர்த்தம்!”

“வேற என்ன அர்த்தம்! வைதேகி ஒரு தேஞ்சுப் போன ரெகார்டுன்னு அர்த்தம்!” எனச் சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தார் புவனா.

“நான் தேஞ்சிப் போன ரெகார்டுனா, நீ தீஞ்சிப் போன ரெகார்டு! வந்துட்டா என்னை வம்பிழுக்க!” என ஆரம்பித்தார் வைதேகி.

அமுதமொழிக்கு இருவரையும் பார்த்து சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. சிரித்தால் இன்னொரு பிரளயம் வெடிக்குமென தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ரகுவரன் அங்கே வர மாமியார் மருமகளின் போர் ஒரு நிறைவை அடைந்தது.  

அமுதமொழியின் அருகே வந்த ரகுவரன்,

“நல்லா இருமா! இத்தோட என் கடமை முடிஞ்சது! இனிமே சூதனமா பொழச்சிக்கோ!” என சொன்னார்.

அவருக்குப் பதிலாக தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் பெண்.

“ஓய் உம்மு! ஊமைக்குறத்தி மாதிரி இருந்துகிட்டு அருண் சாரையே வளைச்சிப் போட்டுட்டல்ல! கில்லாடிடி நீ!” எனச் சொல்லி தமக்கையைக் கட்டிக் கொண்டாள் சைந்தவி.

தமையனோ,

“காங்கிராட்ஸ்கா!” எனச் சொல்லிவிட்டு பந்தி நடக்கும் இடத்துக்கு நழுவி விட்டான்.   

‘யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன! எனக்கு என் அருணும் என் மைத்தி அத்தையும் இருக்கிறார்கள்! அது போதும்’ என எண்ணிக் கொண்டவளுக்கு எப்பொழுதும் இவர்களை சுற்றி இருக்கும் போது வரும் ஏக்கமும், நெஞ்சடைக்கும் பாரமும் காணாமலேப் போயிருந்தது.

காலை யாரோ கட்டிக் கொண்ட உணர்வு வர, கீழே குனிந்துப் பார்த்தாள் மொழி.

“பேபி!” எனக் கொஞ்சல் சிரிப்புடன் நின்றிருந்தான் ஜாக்சன்.

சந்தோஷத்துடன் குனிந்து அவனை அள்ளிக் கொண்டாள் மொழி.

“பேபி! ப்ரீட்டி!” எனச் சொன்னவன் இவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“தேங்க் யூ செல்லம்!”

“தாலி கட்டன நானே தள்ளி நிக்கறேன்! நேத்துப் பேஞ்ச மழையில இன்னிக்கு முளைச்ச மஷ்ரூம்! எவ்ளோ அசால்ட்டா என் பொண்டாட்டி கன்னத்தை நனைச்சி வைக்குது பாரேன்” எனப் பின்னால் இருந்து அருணின் குரல் கேட்ட, திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள் மொழி.

“என் ஜாக்சன மஷ்ரூம்னுலாம் சொல்லாதீங்க! எனக்கு கெட்டப் கோபம் வரும்!” என்றவள் இறுகக் கட்டிக் கொண்டாள் சின்னவனை.

அவனது அம்மாவும் அப்பாவும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு, தங்களது மகனைப் பிரிக்க முடியாமல் பிரித்து எடுத்துக் கொண்டு சாப்பிடப் போனார்கள்.

“அப்புறம் தம்பி! இது எத்தனையாவது கல்யாணம்?” எனக் கேட்டப்படி வந்து நின்றார் இன்ஸ்பெக்டர்.

அவரது மகளோ,

“அக்கா! அழகா இருக்கீங்கக்கா!” எனச் சொல்லி மொழியைக் கட்டிக் கொண்டாள்.

“வாங்க சார்!” என வரவேற்றவன்,

“அப்போ நாங்க மனசால தம்பதி! இப்போ (திரு)மணத்தால தம்பதி!” எனச் சொல்லிப் புன்னகைத்தான்.

“நல்லா வெவரமாத்தான் பேசறீங்க தம்பி!” என்றவர் மொழியிடம்,

“சந்தோஷமா இருமா! உன்னாலதான் என் பொண்ணு இப்போலாம் நிமிர்ந்து நிக்கறா! ரொம்ப நன்றிமா!” என்றார்.

திருமணத்திற்கு, அமுதமொழியின் பக்கம் ஆள் அவ்வளவாக இல்லாமல் போக தங்கள் இருவருக்கும் தெரிந்த மக்களை எல்லாம் அழைத்திருந்தான் அருண். போட்டோ எடுக்க வந்த, இவள் பார்த்துப் பழகி இருந்தவர்கள் பலர் வந்திருந்தனர். ஊட்டி ஜோடி, வயதான தம்பதி, காலேஜ் முடித்தப் பெண்கள் என எல்லோரும் வந்திருந்து சிறப்பித்திருந்தனர். அவள் பக்கம் நின்று யோசித்த அருணின் அன்பில் அகமகிழ்ந்துப் போனாள் அமுதமொழி.

கோயிலின் பக்கத்தில் இருந்த காலி மனையில் பந்தல் போட்டு, உணவு வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. அருணும் மொழியும் வந்திருந்தவர்களை சாப்பிட்டுப் போகுமாறு உபசரித்துக் கொண்டிருந்தனர். (சாரி டியர்ஸ்! கோயில் கல்யாணம்னால சைவம்தான். அசைவம் வேணும்னா அவங்க ஆசிரமத்துப் பிள்ளைகளுக்கு சாப்பாடு போடும் போது வந்து கலந்துக்குங்க! அப்படியே உங்களால முடிஞ்சத டொனேட் பண்ணிட்டுப் போங்க!)

“வாழ்த்துகள்” எனும் குரலில் குற்ற உணர்வுடன் அருணும், சந்தோசத்துடன் மொழியும் திரும்பிப் பார்த்தார்கள்.

“கடைசில என்னை வச்சுக் காமேடி பண்ணிட்டீங்கல்ல அருண்! காலம் காலமா ‘அலைபாயுதே’ கார்த்திக் குமார், ‘மின்னலே’ அபாஸ், ‘காதல் மன்னன்’ கரண், ‘யூத்’ யுகேந்திரன்னு தமிழ் சினிமா செகண்ட் ஹீரோவ வச்சி செஞ்சது போல என்னை வச்சி செஞ்சிட்டீங்கல்ல!” என சோகமாய் சொன்னபடியே, அமுதமொழியின் கையில் பரிசுப் பொட்டலத்தைத் திணித்தான் நிர்மல்.

“நிர்மல்! அது.. வந்து..” என மொழியைப் போல அருண் திக்கித் திணற மொழியோ,

“பொண்ணுன்னு ஒருத்தி இருந்தா, தரகர் சொன்னார்னு ஆயிரம் பேர் பொண்ணுப் பார்க்க வருவாங்க! எத்தனைப் பேர் வந்தாலும், வாழ போற பொண்ணோட இஸ்டம்தான் அங்க முக்கியம். அருணும் ஒரு தரகர் போலதான். நம்மளோட மீட் ஆப்கு அவர் காரணமா இருந்தாலும், என்னோட சம்மதம் இங்க முக்கியம்னு உங்க ரெண்டுப் பேருக்கும் தோணலியா! ஆரம்பத்திலேயே சரி வராது, மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டப் பிறகும் எதிர்ப்பார்ப்ப வளத்துக்கிட்டது யார் தப்பு? என் மனசுல இவர் இருக்காருன்னு தெரிஞ்சும் உங்கள கோர்த்து விட நினைச்சது யார் தப்பு? ரெண்டு பேரும் அங்கிட்டுப் போங்க! கடுப்பா இருக்கு உங்க ரெண்டு பேர் முகத்தையும் பார்க்க” என பொரிந்துத் தள்ளியவள், மைத்தியைத் தேடிப் போய்விட்டாள்.

“எப்படி பிட்டப் போட்டு, கல்யாணத்தன்னிக்கே பிரிச்சு வச்சேன் பார்த்தீங்கல்ல! இன்னிக்கு நைட்டுக்கு,

‘தொட தொட மலர்ந்ததென்ன பூவே’ கிடையாது! ஒன்லி

‘தொடு வானம்

தொடுகின்ற நேரம்

தொலைவினில் போகும்’தான்! வந்த வேலை சிறப்பா முடிஞ்சது! நான் சாப்பிட போறேன்! வர்ட்டா!” என சிரிப்புடன் கிளம்பியவனை இழுத்து அணைத்துக் கொண்டான் அருண்.

“மன்னிச்சுடுடா என்னை!”

“ஏய் ப்ரோ! ரெண்டு கண்ணு நல்லா தெரியற எவனுமே கண்டுப்புடிச்சிடுவான் நீ அவ மேல வச்சிருக்கற அன்பையும் காதலையும். தெரிஞ்சும், புரிஞ்சும் நம்மால முடியாததான்னு ஆணவமா இறங்கனதுக்கு, உன் மொழி செம்ம காட்டுக் காட்டிட்டா! எனிவே, ரெண்டுப் பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கனும் ப்ரோ” எனப் புன்னகையுடன் நிர்மலும் அருணை அணைத்துக் கொண்டான்.

அடுத்த ஏழு நாட்களுக்கு வேலைகளை உதவியாளனுக்கு மாற்றி விடுவது, வேறு நாட்களில் அப்பாயிண்ட்மெண்ட்களை மாற்றி வைப்பது, ஆசிரமத்தில் கொண்டாட்டம் என ரெக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது நேரம். எட்டாவது நாளன்று மணாலியில்தான் விடிந்தது இருவருக்கும். குளு குளு மணாலியில் தங்களது தேனிலவைக் கொண்டாட வந்திருந்தனர் புதுமணத் தம்பதிகள்.

பகலெல்லாம் காமிராவும் கையுமாக திரிந்தவன், தனது மனைவியை அழகழகாகப் புகைப்படம் எடுத்துத் தள்ளினான். இரவானால் அவள் முகத்தைப் பார்ப்பதும், வெளியில் தெரியும் அந்தகாரத்தை வெறிப்பதும், ஏதோ பேச வருவதும், பின் தூங்கலாமா எனக் கேட்டுத் தூங்கிப் போவதுமென இரு நாட்களைக் கடத்தி இருந்தான் அருண். திருமணம் முடித்ததில் இருந்து, தள்ளிப் போகும் கணவனை அமைதியாக அவதானித்துக் கொண்டுதான் இருந்தாள் அமுதமொழி. தானாக எதையும் பேசவும், ஆரம்பிக்கவும் வெட்கம் வந்து தடுக்க, மிகப் பொறுமையாகவே இருந்தாள்.

மூன்றாம் நாள் இரவு,

“ரொம்ப குளிருது அருண்! டீ குடிக்கலாமா?” என இவள் கேட்க,

“இரு மொழி! நானே கலந்துத் தரேன்!” என அந்த லக்சரி ரிசார்ட் அறையில் இருந்த பொருட்களை வைத்து இரு மக்கில் டீ தயாரித்தான் அருண்.

முன்னறையில் இருந்த சோபாவில் அருகருகே அமர்ந்து இருவரும் தேநீரை அருந்தினர்.

“கிரி”

“ஹ்ம்ம்”

“போரடிக்குதுல்ல!”

“இல்லையே!”

“எனக்கு அடிக்குதே!”

“சரி என்ன செய்யலாம்?”

“நான் கதை சொல்லறேன்! நீங்க கேக்கறீங்களா?” என இவள் கேட்க, நெடுமூச்சொன்றை நிம்மதியாக இழுத்து விட்டவன்,

“ஹ்ம்ம் சொல்லு!” என காலை மேசையில் நீட்டி வைத்துக் கொண்டு ரிலேக்சாக அமர்ந்தான்.

அவன் மடியில் சடாரென சரிந்துப் படுத்துக் கொண்டவள், புன்னகையுடன் அவன் முகத்தை ஏறிட்டாள்.

“உ..உக்காந்துட்டு சொல்லலாமே மொழி!”

“இதுதான் எனக்கு வசதி!” என்றவள், அவனது கையை இழுத்து தன் வயிற்றில் போட்டுக் கொண்டாள்.

“ஒர் ஊருல ஒரு அழகான பொண்ணு இருந்தாளாம்!”

“உன்னை மாதிரியா?”

“ஆமாம்!”

“சரி!”

“அவளுக்கு ரொம்பவே தாழ்வு மனப்பான்மையாம்!”

“அழகா இருந்தா கான்பிடண்ட்டா இருப்பாங்களாமே!”

“இவ அப்படி இல்லையாம்! அவளோட அம்மாவும் அப்பாவும் டிவோர்ஸ் பண்ணிட்டதனால, ஸ்கூலுல அவள எல்லாம் கிண்டல் அடிப்பாங்களாம். உனக்கு ரெண்டு அம்மா, ஒரே அப்பான்னு கேலி பண்ணி சிரிப்பாங்களாம்! அதனாலேயே நெறைய பேர் கூட பேச்சு வச்சுக்க மாட்டாளாம்”

“ஹ்ம்ம்!” என சொன்னவனின் கரம் அவளது வயிற்றை மெல்ல வருடியது.

“வளர, வளர அதுவே அவளோட குணமாகவும் மாறிடுச்சாம். வீட்டுல பேசவே அவளுக்கு சான்ஸ் கிடைச்சது இல்லையாம். அதனால வெளியவும் ப்ரேண்ட்ஸ் வச்சிக்காம, வீட்டுலயும் அமைதியா இருந்து ஒரு வாயில்லா பூச்சியா வளந்தாளாம்”

“ஹ்ம்ம்” போட்டவனின் கரம் அவளது இடுப்பை வருட ஆரம்பித்தது.

“பணக் கஸ்டம், மனக் கஸ்டம்னு போயிட்டு இருந்த அவ வாழ்க்கை சூ மந்திரக்காளி போட்டது போல திடீர்னு மாற ஆரம்பிச்சதாம்!”

“எப்படியாம்?” எனக் கேட்டவனின் கரம் மொழியின் தோளைப் பிடித்து விட ஆரம்பித்தது.

“அவளுக்கு ஒரு நல்ல இடத்துல வேலைக் கிடைச்சதாம். அவளுக்கு வேலைக் குடுத்த ஆள் ரொம்ப ஹேண்ட்சமாம்! இவள போல இல்லாம எந்நேரமும் சிரிச்சிட்டே இருப்பாராம்! பேச்சுத் திறமையால எதிர்ல உள்ளவங்கள தன் வசப்படுத்திடுவாராம்!”

“ஓஹோ!” என்றவன் இவள் கன்னக் கதுப்புகளை தடவினான்.

“அவர் கூடவே இருந்ததுல, அவரோட பேச்சுல, அவரோட கனிவுல, அவரோட கோபத்துல, அவரோட அக்கறையில, அவரோட அன்புல, அவரோட இனிமையில, அவரோட பாசத்துல, அவரோட உரிமையில இவ கொஞ்சம் கொஞ்சமா அவர் மேல காதலுல விழ ஆரம்பிச்சாளாம். அவர் இல்லைனா தனக்கு வாழ்க்கையே இல்லைன்னு உணர்ந்துக்கிட்டவ, அவரோட போராடி அவரையே கரம் பிடிச்சாளாம்!”

புன்னகையுடன்,

“அப்புறம்?” எனக் கேட்டான் இவன்.

“உள்ளத்தால அந்தப் பொண்ணோட கலந்துட்ட அந்த அவருக்கு, அவளோடு உடலால கலக்க பயந்து வந்ததாம். தூக்கம் வருது, களைப்பா இருக்கு, காலு வலிக்குதுன்னு நெதம் ஒரு சாக்கு சொல்லி தள்ளித் தள்ளிப் படுக்கிறாராம். நடு இரவுல இவ கண் முழிச்சுப் பார்த்தா, அந்தப் பொண்ண வெச்சக் கண்ணு எடுக்காம பார்த்துட்டே தவம் பண்ணுறாராம். இவளும் பொறுத்து பொறுத்துப் பார்த்தாளாம்!”

புன்னகை சிரிப்பாக மாற,

“பொறுத்துப் பார்த்துட்டு…” எனக் கேட்டான் அருண்.

“பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, இப்போ இவளே அவர் மேல பாய போறாளாம்!” என்றவள் அதிரடியாக இரு கைகளையும் அவன் கழுத்தில் போட்டு முகத்தைக் கீழே இழுத்து முத்த யுத்தத்தை ஆரம்பித்தாள்.

அவள் ஆரம்பித்த முத்தத்தை இவன் தொடர, சோபாவில் இருந்து எப்பொழுது கட்டிலுக்கு இடம் மாறினார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அமைதிமொழியின் அனத்தல்கள் ஸ்வரங்களாய் மாற, அதிரடிகிரியின் ஆக்ரமிப்பு ராகங்களாய் மாறி அங்கொரு காமனின் கச்சேரியை அரங்கேற்றியது. குளு குளு மணாலி காதலர்களின் அழகிய சங்கமத்தில் தீக்குழம்பைக் கக்கும் எரிமலையாகிப் போனது. அருணகிரியாய் அவளை நாடியவன் அமுதகிரியாகிப் போக, அமுதமொழியாய் நெகிழ்ந்தவள் அருண்மொழியாகிப் போனாள்.

கூடலின் முடிவில் அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கிக் கொண்டவளின் தலைக் கோதியவன்,

“நான் ஒரு கதை சொல்லவா?” எனக் கேட்டான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், அவன் பார்வையில் வெக்கி மீண்டும் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“சொல்லவா வேணாமா?” என சிரிப்புடன் இவன் கேட்க,

“ஹ்ம்ம்! சொல்லுங்க!” என்றாள் மொழி.

“ஓர் ஊர்ல ஒரு அருமையான பையன் இருந்தானாம்”

“உங்கள மாதிரியா?”

“ஆமாம்”

“சரி”

“அந்தப் பையனுக்கு அமைதினா என்னென்னே தெரியாதாம். எப்போதும் கலகலன்னு சிரிச்சுட்டே, தன்னை சுத்தி இருக்கறவங்கள சிரிக்க வச்சிட்டே இருப்பானாம்.”

“ஹ்ம்ம்!”

“அவனுக்கு சரி சமமா அவன் கூட பழகறவங்களும் ரொம்ப நல்லா பேசுவாங்களாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில இருந்தவன், ஒரு நாள் ஒரு அழகான தேவதைய இன்ஸ்டால பார்த்தானாம். வேலை வேணும்னு அப்ளை பண்ணியிருந்துச்சாம் அந்த தேவதைப் பொண்ணு! அதோட ப்ரோபைலை அலசிப் பார்த்தவனுக்கு அந்த அழகியோட காந்தக் கண்ணுல இருந்து தன் கண்ணைப் பிரிச்சு எடுக்கவே முடியலையாம்! என்ன சொல்லுறது..ஹ்ம்ம்.. பார்த்தவுடனே பச்சக்குன்னு அந்த முகம் நெஞ்சுக்குள்ள ஒட்டிக்கிச்சாம்.”

“பார்டா! அப்போவேவா???”

“கேள்விக் கேக்காம இருந்தாதான் கதை சொல்லுவேன்!” என இவன் முறுக்கிக் கொள்ள, முத்த லஞ்சம் கொடுத்து மீண்டும் பேச வைத்தாள் தன் கணவனை.

“அப்ளை செஞ்ச மத்தவங்கள விட அந்தப் பொண்ணுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ரொம்பவே கம்மியா இருந்தாலும், இண்டர்வியூக்கு வர சொன்னானாம் அந்தப் பையன். அவளும் வந்தாளாம்! இவன் அடுத்த கேண்டிடேட்ட வர சொல்லிட்டு பார்வையால இவ வந்துருக்காளான்னு மேல் மாடியில இருந்து அலசினானாம். வந்திருந்த எல்லோரும் போன் பார்த்துக்கிட்டு, வேடிக்கைப் பார்த்துகிட்டு இருக்க அந்தப் பொண்ணு மட்டும், இவன் நாலு நாள் பிஸ்கட், வெறும் தண்ணின்னு காத்திருந்து கஸ்டப்பட்டுப் படம் புடிச்ச ஜோடி சிங்கத்தோட அந்நியோன்யத்த ரசிச்சிட்டு நின்னிருந்தாளாம். மனசுக்குள்ள சரசரன்னு சாரக்காத்து வீச, அவளையே ரசிச்சுப் பார்த்துட்டு நின்னிருந்தானாம் இவன். டீனேஜர் போல அந்தப் பொண்ணத் தன்னைத் திரும்பிப் பார்க்க வைக்க ‘மீ’ன்னு அவன் அம்மாவ கூப்பிடற மாதிரி குரல் குடுத்தானாம். பதட்டத்துல போனைக் கீழ போட்டவ, அசடு வழிய ஒரு வெட்கப் பார்வையை அவன நோக்கி வீசினாளாம்! அந்தப் பார்வை இவன் நெஞ்சுக்குள்ள காதல் அம்பை தைச்சதாம். ஆனா பாவம்! அதை அந்தப் பையன் அப்போ உணரலயாம்”      

“பிறகு?”

“இண்டெர்வியூல இன்னிக்கு சந்திக்கறப் பொண்ணு கிட்ட பேசறது போல இல்லாம காலங்காலமா பழகிய ஒருத்திக் கிட்ட பேசறது போல ஃபீல் ஆச்சாம் அவனுக்கு. படபடன்னு பேசறவங்கள பார்த்துப் பழக்கப்பட்டவனுக்கு அவளோட அமைதி என்னமோ தாயோட தாலாட்டுப் போல ரொம்ப இனிமையா இருந்ததாம். அவளோட படபடப்பு, பயம், தயக்கம், அமரிக்கை எல்லாம் இவன ரொம்பவே கவர்ந்து இழுத்ததாம். அவ தயங்கறப்பலாம் தட்டிக் கொடுத்தானாம். நெர்வஸ் ஆகறப்பலாம் சிரிக்க வச்சானாம். கடைசியா ஆடிக் காட்ட சொன்னப்போ, சிவந்துப் போன அவ முகமும், துடிதுடிச்ச அவளது உதடும், மெல்ல நடுங்கிய உடலும் அவள அணைச்சு ஆறுதல் தர சொல்லி இவனைத் தூண்டவும், பயந்துப் போய் கிளம்புன்னு சொல்லிட்டானாம். அவ படி இறங்கிப் போக போக, என்னவோ இவன் வாழ்க்கையையே விட்டுப் போகிற மாதிரி தோற்ற மயக்கம் வர மேல நின்னு அவளையேப் பார்த்திட்டு இருந்தானாம்”

“அடப்பாவி! அப்புறம் ஏன்டா கிரி என்னைத் திட்டிட்டே இருந்த!” எனக் கோபம் கொண்டாள் பெண்ணவள்.

“எப்பவும் ஆப்போசிட் அட்ராக்ட்ஸ்னு சொல்வாங்க மொழி! ஆனா எனக்கு அதுல நம்பிக்கை இல்ல! ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் கொஞ்சமாச்சும் ஒத்த சிந்தனை, சேம் இண்ட்ரேஸ்ட் இப்படி இருக்கனும். அப்போதான் உடல் மயக்கம் தீரும் போது, மன மயக்கம் தீராம இருக்கும். காமம் தீரும் போது, கார்ல் மார்க்ஸ் பத்தி பேசிட்டு இருக்கலாம். கலவி முடியும் போது, கம்பன சேர்ந்து ரசிக்கலாம். உறவு நிறைவுறும் போது உமர் கயாம் பத்தி உரையாடலாம். இதெல்லாம்தான் சலிப்புறாம ஒரு தாம்பத்தியத்தை பிடிச்சு வைக்கும். நான் பத்து வார்த்தைப் பேசுனா நீ ரெண்டு வார்த்தைல முற்றுப் புள்ளி வைக்கற! நான் போட்டோஷாப்ப பத்திப் பேசனா நீ போண்ட்ஸ் பவுடர பத்திப் பேசற! நமக்குள்ள எந்த விதமான ஒற்றுமையும் இல்ல! இருந்தும் உன் கிட்ட மயங்கி நின்னேன். என் கிட்ட நம்பிக்கை இல்லாம ஊட்டிக்கு வர மாட்டேன்னு சொன்னது, நான் ஊட்டியில கன்னத்தைத் தொட்டப்போ பயந்தது எல்லாம் ரொம்பவே பாதிச்சது என்னை. நாம இப்படி இவளையே நினைக்கறோமே, ஆனா இவ தள்ளி வைக்கிறாளேன்னு அவ்வளவு கோபம் வந்தது. என் கோபத்தப் பார்த்து நீ பயப்படறப்ப, சேச்சே ஏன்டா அருண் உனக்கு இவ்வளவு கோபம்னு என்னையே திட்டிப்பேன். நீ அழுதா, துக்கப்பட்டா என்னால தாங்கிக்கவே முடியலை. அப்பா விசயத்துல கதறனதுல நான் ரொம்பவே டிஸ்டபர்ப் ஆகிட்டேன் மொழி. நீ வேணும், வேணான்னு எனக்குள்ளவே கபடி ஆடிட்டு இருந்தப்போதான் உன்னோட மாற்றத்தைக் கண்டுக்கிட்டேன்.”

“அப்போ என் லவ் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்திருக்கீங்க!”

“உன் லவ்வும் புரிஞ்சது, என்னோட சேம் இண்ட்ரேஸ்ட் அட்ராக்ட்ஸ்ன்ற கோணம் தப்பாகி, நானும் உன்னை லவ்வறேன்னும் தெரிஞ்சது! ஆனாலும் உன் திருவாயால லவ் சொல்லிக் கேக்கனும்னு அவ்ளோ ஆசை. அதனால நீ காட்டன சிக்னல எல்லாம் தெரியாத மாதிரி நடந்துக்கிட்டேன். உன்னை புரியாத மாதிரி நாடகம் ஆடினேன்! ஆனா..ஆனா”

“கிரி, ப்ளிஸ்!” என்றவள் அவனை அந்த நோயிலிருந்துக் காப்பது போல இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

“ஜாகிங் போறப்ப கீழ விழுந்ததும், என்னடா இதுன்னு தோணுச்சு! அடிக்கடி நடுக்கம், மயக்கம் எல்லாம் வர மாதிரி இருக்கவும் கேசவன் அங்கிள் கிட்டப் போனேன்! சொன்ன டெஸ்டெல்லாம் செஞ்சேன்! பெரிய இடியா விழுந்தது எனக்கு எம்.எஸ் இருக்குன்றது! அப்போ எனக்கு நிம்மதியா தோணுன விஷயம் என்ன தெரியுமா மொழி? அப்பாடா, நல்ல வேலை என் மொழிக்கிட்ட காதல சொல்லலன்றதுதான்! என் காதல் உன்னைக் காக்கனுமே தவிர, காலமெல்லாம் கஸ்டமென்னும் சிறையில தள்ளிடக் கூடாதுன்னு தோணுச்சு! என் காதல ஆழமா உள்ளப் போட்டுப் புதைச்சிட்டு, உனக்கு இன்னொருத்தன ஜோடி சேர்த்தேன்! ஆனா..ஆனா மொழி! என்னால உன்னை நிர்மல் கூட வச்சிப் பார்க்கவே முடியல! அவ்வளவு கோபம் வந்தது, என் மேலேயே வெறுப்பு வந்தது! உனக்காக, எனக்கு நீ இல்லேன்றத தாங்கிக்கிட்டேன். ஆனா மொழி, எவ்வளவுதான் முடியாது, சரி வராதுன்னு சொன்னாலும், பாட்டி கேவலமா பேசவும், அதை ஒரு காரனமா எடுத்துக்கிட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! நானும் ஆசாபாசம் உள்ள சராசரி மனுசன்றத நிரூபிச்சிட்டேன்! அந்தக் குற்ற உணர்வுதான் உன்னை நெருங்கவே விடாம தடுத்துட்டு இருந்துச்சு! ஆனா உன் விஷயத்துல இந்த அருண் ரொம்ப வீக்கானவன்றது நீ குடுத்த ஒத்த முத்தத்துல புரிஞ்சிருச்சு! என்னை நெனைச்சா எனக்கே ஆத்திரமா வருது மொழி! நான் ஒரு சுயநலப் பிசாசு இல்லையா மொழி?”

“ஆமா”

“ஆமாவா?”

“ஹ்ம்ம் ஆமாதான்! காதலுல சுயநலம் பார்க்காம பொதுநலமா பார்ப்பாங்க! எனக்கு இந்த சுயநல கிரியத்தான் பிடிச்சிருக்கு. எனக்காக யோசிக்கறது, என் நலத்தை நாடறது, என் சந்தோசத்துல மகிழறது, என் துக்கத்துல துடிச்சுப் போறது, என் கண்ணீருல கரைஞ்சிப் போகிறது எல்லாம் சுயநலம்னா, எனக்கு இந்த சுயநல கிரிய ரொம்பவேப் பிடிச்சிருக்கு”

“வர வர நல்லாப் பேசறடி நீ!”

“சகவாச தோஷம்!” என அவள் சொல்ல இவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது.

“எம்.எஸ்னு தெரிஞ்சதும் இடிஞ்சுப் போய் நின்ன நான், இனி நீ எப்பொழுதும் என் பக்கத்துயே இருப்பன்னு தெரிஞ்சதும் ஒரு இடித்தாங்கியா மாறிட்டேன்டி! என் அருகே நீ இருந்தால் எதையும் தாங்கிப்பேன் கண்ணம்மா” எனக் கண் கலங்கியவனை, பெண் சிங்கம் தன் இணையை நெஞ்சில் சாய்த்து ஆறுதல் அளித்தது போல, தன்னவனை தன் நெஞ்சமெனும் மஞ்சத்தில் சாய்த்து ஆற்றுப்படுத்தினாள் அமுதமொழி.

“நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே

என் ஜீவன் வாழுதடி

நீ ஆதரவாக தோள் சாய்ந்தால்

என் ஆயுள் நீளுமடி!”

 

(ஆயுள் நீளும்)

 

(அப்பாடான்னு இருக்கு இத எழுதி முடிச்சதும். இந்தக் கதைக்கு எபிலாக் எழுதலாமா வேணாமான்னு ஒரே யோசனை! ஆனா எந்தக் கதைக்கும் விட இந்தக் கதைக்குதான் எழுதியே ஆகனும்னு ஒரு வெறி வருது. சோ எபிலாக் இருக்கு. போடறப்போ பயப்படாம வந்துப் படிச்சிட்டுப் போங்க! போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். இதோட எபிலாக்ல சந்திக்கலாம்! லவ் யூ ஆல்! ஸ்டே ஹேப்பி!)