En Ayul Neelumadi–EPI 23(EPILOGUE)

273046404_1018660852054582_3314744799217173998_n-ba8067e4

அத்தியாயம் 23 (எபிலாக்)

 

பத்து வருடங்களுக்குப் பிறகு

 

காரை அதற்குரிய இடத்தில் பார்க் செய்த அமுதமொழி, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தவாறே இறங்கி நடக்க ஆரம்பித்தாள். வீட்டின் உள்ளே நுழையும் முன்னே, அண்ணாந்து அந்தக் கட்டிடத்தைப் பார்வையிட்டவளுக்கு அவ்வளவு பெருமிதமாக இருந்தது.

ஆரம்பத்தில் அவர்களிடம் வேலை செய்பவளாகவும், அதன் பிறகு அருணின் காதலி(?)யாகவும் வந்துப் போனவள், இப்பொழுது அவனுக்கு மனைவியாகி அந்த வீட்டின் எஜமானியாக வளைய வருகிறாள். நான்கு படி ஏறி, விஸ்தாரமான வாசலைத் தாண்டி கதவுக்குப் போகும்படி வடிவமைக்கப் பட்டிருந்தது அந்த வீடு. இப்பொழுது பக்காவாட்டில் சக்கர நாற்காலி போக ஏதுவாக வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. கையில் வைத்திருந்த ரிமோட்டில் பட்டனை அழுத்த வீட்டின் கதவு அகலமாய் திறந்துக் கொண்டது. அதோடு சேர்த்து இவர்கள் செட் செய்திருந்த சிறிய பறவை பாடலில் வரும் வரிகள் ‘வருகவே! வருகவே! வாழ்கவே! வாழ்கவே!’ என பாடி வரவேற்றது. உள்ளே நுழையும் போதே கேட்கும் அந்த வரிகள் எப்பொழுதும் போல அமுதமொழியின் இதழ்களில் புன்னகையை வர வைத்தது.

லலலல என அந்தப் பாடலை ஹம்மிங் செய்துக் கொண்டே, கிச்சனுக்குப் போனவள் தனக்கும் அருணுக்கும் காபி கலந்து எடுத்துக் கொண்டாள். அவனுக்குப் பிடித்த மில்க் பிக்கீஸ் பிஸ்கட்டை எடுத்துத் தட்டில் அடுக்கித் தூக்கிக் கொண்டாள். என்னவோ அன்று சோம்பலாக இருக்க, படியை விட்டு விட்டு லிப்டில் நுழைந்தாள் அமுதமொழி. அருணின் வசதிக்காக அவ்வீட்டில் பல மாற்றங்களை செய்திருந்தாள் அருணின் மொழி. அவனது எலெக்ட்ரிக் சக்கர நாற்காலி போவதற்கு ஏதுவாக மினிமலான செட்டப்பில் இருந்தது வீடு. மேல் மாடிக்குப் போக லிப்ட் கட்டி இருந்தாள். அதோடு எல்லாமே ரிமேட் சிஸ்டத்தில் இயங்குவது போல ஆட்களைக் கொண்டு வடிவமைத்திருந்தாள். விளக்குப் போடுவது, காற்றாடியை ஓட விடுவது, தொலைக்காட்சியை இயக்குவது, கதவுகளைத் திறப்பது என எல்லாமே பட்டன் தட்டினால் நடந்துவிடும். அதை செய்து முடிக்க செலவு எக்கச்சக்கமாக ஆகியிருந்தாலும், தன்னவனின் மகிழ்வும் சவுகரியமும் மட்டுமே இவளது ஒரே நோக்கமாக இருந்தது.

லிப்டில் எல்லா பக்கமும் ஒட்டப்பட்டிருந்த குட்டிகளின் கைவண்ணத்தைப் பார்த்தவளுக்கு பூரிப்பாய் இருந்தது. இவர்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்கி ஓர் அர்த்தத்தைக் கொடுக்க புவனகிரி, ஆனந்தகிரி என இரு ஆண் மக்களும் இன்பமொழி என ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். மூவருக்குமே இந்த வருடம் எட்டு வயதுப் பூர்த்தி ஆகிறது. பிள்ளைச் செல்வங்கள் மூவரும் இவர்களுக்கு கடவுள் கொடுத்த குழந்தைகள். ஆமாம்! கடவுளின் குழந்தைகள். 

லிப்ட் கதவு திறந்துக் கொள்ள, தங்களது அறையை நோக்கி நடந்தாள் அமுதமொழி. ஒரு கையால் தட்டைப் பிடித்து பாலன்ஸ் செய்தவள், இன்னொரு கையால் ரிமோட் பட்டனைத் தட்டிக் கதவைத் திறந்தாள். உள்ளே ஒரே கும்மிருட்டாக இருந்தது.

“தூங்கறாரா?” என கேள்விக் கேட்டுக் கொண்டவள்,

“கிரி செல்லம்!” என மெல்லியக் குரலில் அழைத்தாள்.

பட்டென விளக்குகள் ஒளிர, தனது சக்கர நாற்காலியின் விசையை அமுக்கி சர்ரென அவள் முன்னே வந்து நின்றான் அருணகிரி.

“என்ன கண்ணாமூச்சி விளையாட்டு இது?” எனக் கேட்டவள் தட்டைக் கட்டிலின் பக்கம் இருந்த மேசை மேல் வைத்தாள். குனிந்தவள் நிமிர்வதற்குள் பின்னால் இருந்து அணைத்திருந்தான் அருணகிரி. படக்கென திரும்பியவள்,

“கிரி! கிரி! எப்போதுல இருந்து???? ஏன் என் கிட்ட சொல்லல?” எனக் குதிக்க ஆரம்பித்தாள்.

சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்றிருந்தவன், அவளது ஆனந்தத்தை சிரிப்புடன் பார்த்திருந்தான்.

“ஒரு வாரமா கொஞ்சம் கொஞ்சமா எழுந்து நிக்க முடிஞ்சது! ரெண்டு நாளா நடக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னும் கொஞ்சம் காலுக்குத் தெம்பு வரட்டும்னுதான் உன் கிட்ட சொல்லாம சர்ப்ரைஸா வச்சிருந்தேன்!” என்றவன் முகம் முழுக்க மத்தாப்பூப் பூக்க நின்றிருந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஹேப்பி, ஹேப்பி சோ ஹேப்பி!” எனக் கூவியபடியே தன்னவனின் முகம் முழுக்க முத்தமிட்டாள் அமுதமொழி.

“இந்த கிக்கான கிஸ் வேணும்னுதான்டி அப்போவே சொல்லல!” எனச் சொல்லி மாயக்கண்ணனாய் சிரித்தான் மன்மதகிரி. எப்பொழுதும் போல அந்தச் சிரிப்பில் மயங்கி நின்றாள் மங்கைமொழி.

வாழ்க்கையை ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்கள் சின்ன சின்ன உபாதைகளுடன் போக, அடுத்த ஐந்து வருடம் பல சோதனைகளைத் தந்தது அருணகிரிக்கு. ஒரு தடவை கரம் ஒன்று செயலிழந்துப் போய் படாதபாடுபட்டவனை பிசியோதெரப்பி, மருந்துகள், ஆயூர்வேத சிகிச்சைகள் எனப் போராடி நான்கு மாதங்களில் சரிப்படுத்தினர். அதன் பிறகு அடுத்த வருடத்தில் அதே போல இன்னொரு கைக்கும் ஆனது. அப்பொழுதும் அதே பாடுபட்டு ஐந்து மாதங்களில் சரியாகிப் போனது. அதன் பிறகு நார்மலாக இருந்தவனுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடக்க முடியாமல் போனது. அவனோடு சேர்ந்து அவன் மனைவியும், அம்மாவும் ஏன் பிள்ளைகளும் கூட நோயை எதிர்த்துப் போராடினார்கள். எந்த நேரத்திலும் அருண் ‘சீ போ’ என சோர்ந்துப் போய் விடாமல் அவனை தாங்கித் தூக்கிப் பிடித்தனர் அவனது குடும்பத்தினர். அவர்களின் அன்பும் ஆதரவுமே ஒவ்வொரு முறையும் எம்.எஸ்சை எதிர்த்துப் போராடி வென்று வரும் உந்துசக்தியைக் கொடுத்தது அருணகிரிக்கு.

மனைவியின் இரு பக்கக் கன்னங்களையும் பற்றிக் கொண்டவன்,

“இந்த சந்தோசத்தக் கொண்டாடிடலாமா கன்னுக்குட்டி?” எனக் கேட்டான்.

“புள்ளைங்க ஸ்பெஷல் கிளாஸ்ல இருந்து வந்துடுவாங்கடா கிரி”

“அதுக்கு இன்னும் ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருருருருரு மணி நேரம் இருக்குடி! ப்ளிஸ்!” எனக் கெஞ்சினான்.

“இத்தனை நாளா இதெல்லாம் நமக்குள்ள நடக்கவே நடக்காத மாதிரி என்ன ஒரு பில்ட் அப்!” என்றவளுக்கு முகம் சிவந்துப் போனது.

“கொஞ்ச நாளா குவின் கண்ட்ரோல்லதானே போய்ட்டு இருக்கு! இப்போதான் கிங்குக்கு பவர் கிடைச்சிருக்கு! இனி மேல நான்தான்”

வாய் விட்டு சிரித்தவள்,

“இனி மேல நான்தான்ல டபுள் மீனிங் எதாச்சும் இருக்கா கிரி?” எனக் கேட்டாள்.

“டபுள் மீனிங்லாம் இல்ல! ஒன்லி சிங்கிள் மீனிங்தான்!” என்றவன் மெத்தையை மூடி வைத்திருந்து போர்வையை விலக்கினான்.

அங்கே ரோஜா இதழ்களும், மல்லி மொட்டுக்களும் தூவிக் கிடந்தன.

“இன்னொரு ஃபர்ஸ்ட் நைட்டா கிரி சார்?”

“உன்னை மாதிரி அழகான, அறிவான, அன்பான, அனுசரணையான, அருமையான, ஆத்மார்த்தமான மனைவி இருந்தா நித்தமும் முதல் இரவுதான் மொழிம்மா! உனக்காகதான் சோர்ந்துப் போகாம, வீழ்ந்துப் போகாம வாழ்ந்துப் பார்த்துட்டு இருக்கேன்! என் சொர்க்கம்டி நீ!” என்றவனைக் கட்டிக் கொண்டாள் அமுதமொழி.

கணவன் மனைவியாய் மட்டும் இருந்தால் காதலில் எந்நேரமும் திளைத்து மகிழலாம். அதே அம்மா அப்பாவாகி விட்டால் எல்லாவற்றுக்கும் நேரம் காலம் இருக்கிறதே. கூடிக் களித்து பிரிந்து நின்றவர்கள், அவசர அவசரமாக கட்டிலை சுத்தப்படுத்திக் குளித்துவிட்டு வந்தார்கள்.

அப்பாடாவென அமர, அறையின் வெளியே பாட்டுக் குரல் கேட்க ஆரம்பித்தது. அருணின் முகம் அஷ்டக் கோணலாக, அமுதமொழி கெக்கெபெக்கெவென சிரிக்க ஆரம்பித்தாள். பிள்ளைகள் மூவரும் அப்படியே மைத்தியின் வளர்ப்பு. அவரது குறும்பும், கலகல சுபாவமும் மூவருக்குள்ளும் இறங்கி இருந்தது. இவள் அருணோடு சேர்ந்து ஏ.ஜி போட்டோகிரபியைப் பார்த்துக் கொள்வதோடு தனது அலங்காரப் பணியையும் தொடர, மைத்தி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிக் கூட்டி வருவதைப் பார்த்துக் கொண்டார்.

தனனனதனனன என புவனகிரி ஆரம்பிக்க, தத்தத்தரத்தத என ஆனந்தகிரி இடைப்புக, அழகிய குரலில் அவர்களின் பெண்ணரசி

‘முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்’ என ப்ரதீப் குமார் பாடிய புதிய அருணகிரி பாடலைப் பாடி அறைக்குள் வர அனுமதி கேட்பது அவர்களுக்கு மைத்தி கற்றுத் தந்திருந்த பழக்கம்.

சிரிப்புடன் அமுதமொழி,

“உள்ள வரலாம்” எனக் குரல் கொடுக்க மூன்று வாண்டுகளும் உள்ளே ஓடிவந்தார்கள்.

அருண் கட்டிலில் அமர்ந்திருக்கவும்,

“மை செல்ல அப்பா!” எனச் சொன்னபடியே கட்டிலின் மேலே ஏறி அமர்ந்து அருணின் முதுகைக் கட்டிக் கொண்டாள் இனியமொழி.

பின்னால் சாய்ந்து தன் பெண்ணரசியின் கன்னத்தில் முத்தமிட்டான் அருண்.

“அப்பா கால் வலிக்குதாப்பா? நான் பிடிச்சு விடறேன்!” என ஆனந்தகிரி வலது காலைப் பிடிக்க, இடது காலை புவனகிரி பிடித்து விட ஆரம்பித்தான்.

“நானும் நானும்” என்ற மகள், அருணின் தோளை பிடித்து விட ஆரம்பித்தாள்.

கண்கள் கலங்கிப் போனது அருணகிரிக்கு. இந்த உலகிற்கு சாபம் வாங்கி வந்தவன் தான் என நினைத்திருக்க, வரம் வாங்கி வந்தவனடா நீ என அவனைச் சுற்றி நல்லுள்ளங்களை அனுப்பி அடிக்கடி உணர்த்திக் கொண்டிருந்தார் கடவுள்.

அப்பாவிற்கு தங்களது பணிவிடையை செய்து முடித்தவர்கள், பாய்ந்து அமுதமொழியைக் கட்டிக் கொண்டனர். அருணுக்கு அன்பை வாரி வழங்கும் பிள்ளைகள் தங்கள் சேட்டைகளையெல்லாம் அமுதமொழியிடம்தான் இறக்கி வைப்பார்கள். அருண் மைத்தியைக் கூப்பிடுவது போலவே அவனது வாரிசுகளும் மொழியை மீ எனதான் அழைப்பார்கள்.

“மீ! இன்னிக்கு மிஸ் ஆம்பிஷன் பத்தி கட்டுரை எழுத சொன்னாங்க” என ஆனந்தகிரி சொல்ல,

“மூனு பேரும் என்ன எழுதுனீங்க?” எனக் கேட்டாள் மொழி.

“நான் பெருசா வந்தா அப்பா மாதிரியே போட்டோகிராபரா வருவேன்னு எழுதனேன் மீ” என்றாள் மகள்.

அப்படியே அருணின் வழித்தடத்தைப் பின்பற்றுபவள் அவள். இப்பொழுதே அப்பாவிடம் இருந்து புகைப்டம் எடுக்கக் கற்று வருகிறாள். ஜூனியருக்கான போட்டிகளில் பரிசும் வென்றிருக்கிறாள் அவள்.

“புவனகிரி என்ன எழுதுனீங்க?” எனக் கேட்டான் அருண்.

பிள்ளைகளிலே மிக அமைதியானவன் அவன். படிப்பில் புலி.

“நான் சய்ண்ட்டிஸ்ட்டா வருவேன்பா! எம்.எஸ்ச குணப்படுத்த வழி கண்டுப்புடிப்பேன்” என்றான் அவன்.

நெகிழ்ந்துப் போய் விட்டது அருணுக்கும் மொழிக்கும்.

“நீங்க?” என ஆனந்தகிரியைக் கேட்க,

“நான் நம்ம பிஸ்னச பார்த்துப்பேன்பா! பெரிய லெவலுக்கு எடுத்துட்டுப் போய் நெறைய சம்பாரிப்பேன். புவனோட ரிசர்ச்சுக்கு ஸ்பான்சர் பண்ணுவேன், இனியாவுக்கு நெறைய காமிரா வாங்கிக் குடுப்பேன்” என்றான்.

“அம்மாவுக்கு ஒன்னும் இல்லையா?”

“நீங்க செவென் டேய்ஸ்சும் பிஸ்னஸ் பார்த்து களைச்சு வரீங்கல்ல, உங்களுக்கு ரெஸ்ட் குடுப்பேன்” என்றவனைக் கட்டிக் கொண்டாள் அமுதமொழி.

அந்நேரம் தட்டில் ஜூஸ்சுடன் உள்ளே வந்தார் மைத்ரேயி.

“வந்ததும் ஒன்னும் குடிக்காம நேரா மேல ஓடி வந்துடுச்சுங்க மூனும். வாங்க, வாங்க ஜூஸ் குடிங்க!”

மூவரும் பானத்தைப் பருகி முடித்ததும், கையைத் தட்டி எல்லோரின் கவனத்தையும் தன் புறம் திருப்பினாள் அமுதமொழி.

“இப்போ நான் ஒரு மேஜிக் ஷோ காட்டப் போறேன்! எல்லாரும் ரெடியா?”

“என்னம்மா மொழி? முட்டையில இருந்து முயல் எடுக்கப் போறியா! இல்ல மட்டையில இருந்து மயில் எடுக்கப் போறியா?” எனக் கேட்டார் மைத்தி.

பாட்டி பெரிய ஜோக் சொல்லி விட்டது போல விழுந்து விழுந்து சிரித்தார்கள் பிள்ளைகள்.

“ரெடியா அருண்?”

“ரெடி!”

“சூ மந்திரக்காளி!” என கையைப் பல முறை இப்படியும் அப்படியும் ஆட்டியவள், அருண் முகத்தில் ஊத, படக்கென எழுந்து நின்றான் அருண்.

குழந்தைகள் கத்தி ஆரவாரம் செய்ய, மைத்தி ஓடி வந்து மகனைக் கட்டிக் கொண்டுக் குதித்தார். குழந்தைகளின் சத்தத்தோடு பெரியவர்களின் சத்தமும் சேர அவ்விடமே கோலாகலமானது.

குழந்தைகளுடன் சற்று நேரம் தோட்டத்தில் ஓடி விளையாடி அவர்களின் ஏக்கத்தைத் தீர்த்தான் அருணகிரி. பிள்ளைகளும் அவனை அசதியாக்காமல் சமத்தாய் விளையாடினார்கள்.

அருண் எழுந்து நடந்ததைக் கொண்டாட்டமாக்கி அன்றைய இரவு உணவை ஜமாய்த்து விட்டார்கள் மொழியும் மைத்தியும். உணவை முடித்துக் கொண்டு குடும்பமே தொலைக்காட்சி அறையில் குழுமி இருந்தது. அருணுக்கு சாதனையாளர் விருது கொடுத்த நிகழ்வு அன்றைய தினம்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்தது. அவ்வளவு நேரம் சளசளவென பேசிக் கொண்டிருந்தவர்கள் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் சட்டென அமைதியாகிப் போனார்கள். குழந்தைகள் மூவரும் கீழே அமர்ந்திருக்க, அருணின் இரு பக்கமும் மைத்தியும் மொழியும் அமர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் எம்.எஸ் என்றால் என்ன என ஆரம்பித்து அதைப் பற்றி விலாவரியாக விளக்கி, அதனால் பாதிக்கப்பட்டிருந்தாலும் எப்படி தனது போட்டோகிராபி தொழிலைத் திறம்பட நடத்துகிறான் அருண் என்பதில் இருந்து, நோய் விழிப்புணர்வுக்காக தனது வாழ்க்கை முறைப் பற்றியும், நோயை எதிர்கொள்ள தான் எடுக்கும் நடவடிக்கைப் பற்றியும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறான் என்பதைப் பற்றியும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அருண் ஓர் அற நிறுவனம் தொடங்கி நடத்துவது பற்றியும் பகிர்ந்துக் கொண்டார். சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்த அருணிடம் விருதை வழங்கிய முதலமைச்சர் குனிந்து அவனைக் கட்டிக் கொண்டதை அழகாய் ஜூம் செய்துக் காட்டினார்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர். மைக் அவனிடம் நீட்டப்பட்டு, எப்படி உங்களால் நோயோடு போராடிக் கொண்டே சாதிக்கவும் முடிந்தது எனக் கேள்விக் கேட்கப்பட்டது.

முகம் நிறைந்தப் புன்னகையுடன்,

“உங்களை நேசிக்கற குடும்பம் இருந்தா எவ்வளவு வேணும்னாலும் போராடலாம்ங்கற தைரியம் தானாகவே வந்துடும். எம். எஸ்சோட போராடனது நான் மட்டும் இல்ல, என் மொத்தக் குடும்பமும்தான். அவங்க சப்போர்ட் இல்லாம என்னால எதையும் சாதிச்சிருக்க முடியாது! ஐ டெடிகேட் திஸ் அவார்ட் டூ மை அஞ்சாநெஞ்சம் கொண்ட அம்மா மைத்தி. மீ, ஐ லவ் யூ! இந்த விருத என் போராட்டக் குணம் கொண்ட என் அன்பு மனைவி அமுதமொழிக்கு சமர்ப்பிக்கிறேன்! மொழிம்மா, ஐ லவ் யூ! கடைசியா என் அன்பு பசங்க ஆனந்தகிரி, புவனகிரி அண்ட் மை பியூட்டிபுள் இனியமொழிக்கு சமர்ப்பிக்கிறேன். அப்பா லவ் யூ கைஸ்!

‘தடை அதை உடை

புது சரித்திரம் படை

நாளை நமதே

வலி அதை ஒழி

புது வழி பிறந்திடும்

மாற்றம் உறுதி’

இதுதான் என்னோட தாரக மந்திரம்!” எனச் சொல்லி முடித்தான்.

அவ்ன் பேசி முடிக்க, கரகோஷம் வானைப் பிளந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறைவுற்றதும் பிள்ளைகல் சந்தோஷ நடனம் ஆட, மைத்தியும் மொழியும் கூட அவர்களோடு சேர்த்துக் கொண்டார்கள்.  

ஒரு மனிதனை எவ்வளவு சோதனைகள் தாக்கினாலும், குடும்பத்தின் அன்பும் ஆதரவும் இருந்தால் எதையும் தாங்கிக் கொள்வான் அவன். சதுரங்க ராஜாவாய் அருண் இருக்க, அவனைச் சுற்றி ராணி, மந்திரி சிப்பாய் என  உறவுகள் அரணாய் நிற்கிறது. ஆடிக் கொண்டிருக்கும் தன் உறவுகளைப் பார்த்தவனுக்கு சந்தோசத்தில் நெஞ்சம் விம்மியது.

“தேங்க் யூ காட்! தேங்க் யூ சோ மச்!”

 

முற்றும்.

(கதையோட என் கூடவே பயணிச்ச அனைவருக்கும் மிக்க நன்றி டியர்ஸ். என்னால முடிஞ்ச அளவுக்குக் கதைக்கு நியாயம் செஞ்சிருக்கேன். உங்களுக்கும் பிடிச்சிருக்கும்னு நம்பறேன். இதோட அருணும், மொழியும் என் நினைவுகள்ல இருந்து கொஞ்சம் மறைஞ்சதும் அடுத்தக் கதையோட வரேன்! லவ் யூ ஆல் டியர்ஸ். ஸ்டே ஹேப்பி! உங்களோட ரிவ்யூவ கண்டிப்பா எதிர்ப்பார்ப்பேன். தேங்க்ஸ்)