En Ayul Neelumadi–EPI 3

269870723_998653174055350_1983985756058693881_n-ecb2c5d2

அத்தியாயம் 3

 

அமுதமொழி

 

“ரோஜாக்களில்

பன்னீர்த்துளி வழிகின்றதேன்

அது என்ன தேன்?” என மெல்லியக் குரலில் முணுமுணுத்தப்படியே தனது கேமராவால் கேக் துண்டை உதட்டருகே வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் பெண்ணை படம் பிடித்துக் கொண்டிருந்தான் அருண்.

அவன் அருகில் நின்றிருந்த அமுதமொழி,

‘அவ்வா! அவ்வா!’ என கற்பனையிலேயே தலையில் அடித்துக் கொண்டாள்.

சும்மாதான் பாடுகிறானா அல்லது போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணை ரசித்துப் பார்த்துப் பாடுகிறானா என ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள் இவள்.

“என்ன பார்வைலாம் பலமா இருக்கு?” எனும் குரலில் திடுக்கிட்டவள்,

“இல்லல்ல! நான் பார்க்கல!” எனத் தடுமாறி சொன்னாள்.

அவள் தடுமாற்றத்தில் இவனுக்கு சிரிப்பு வந்தது. எப்பொழுதும் போல அவளை வம்பிழுக்கும் எண்ணமும் அதோடு சேர்ந்து வந்தது.

“போட்டோகிராபர்மா நானு! பார்வை எல்லாத் திக்கிலும் இருக்கும், திசையிலும் இருக்கும்! என் ஒரு பக்கப் பார்வை அந்தப் பொண்ணோட க்ரீம் பூசிய உதட்டுல இருந்தாலும் இன்னொரு பக்கப் பார்வை மை ஈஷி இருக்கும் உன் கெண்டை விழியில சிக்கிட்டு நிக்கிது!”

இவள் தோளில் மாட்டி இருந்த பேக்கில் இருந்து டிஷூவை எடுத்துக் கொண்டு சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகம் பார்க்க, காலையில் போட்டிருந்தது போலத்தான் இருந்தது கண் மை.

என்னதிது என்பது போல இவள் நோக்க, தன் வேலையில் மும்முரமாய் இருந்தவனுக்கு சிரிப்பை அடக்கிக் கொண்டதில் உதடு துடித்தது.

“மறுபடியும் என்ன பார்வை? போ, போய், அந்த ரசகுல்லாவோட உதட்டு லிப்ஸ்டிக்க துடைச்சி விட்டுட்டு கண்ணு மட்டும் போகஸ் ஆகற மாதிரி மேக்கப் செஞ்சு விடு” என்றவன் மெல்லிய குரலில்,

“கண்ணால் பேசும் பெண்ணே” என முணுமுணுப்பாய் பாடினான்.

‘கண்ணால் பேசும் பெண்ணேன்னு என்னை சொல்றானா இல்ல அந்த ரசகுல்லாவையா’ என யோசித்தபடியே அவன் சொன்னதை செய்ய ஆரம்பித்தாள் இவள்.

அருணகிரியிடம் இவள் வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரங்கள் ஓடியிருந்தன. இந்த இரு வாரங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் சகஜமாய் அவனிடம் பேச ஆரம்பித்திருந்தாள் இவள். கண்ணைப் பார்த்து சகஜமாய் ஒரு நண்பனிடம் பேசுவது போல சிரிப்பும், கேலியுமாய் பழகும் அவனிடம் தயக்கம் குறைந்திருந்தது அமுதமொழிக்கு.

‘எப்படி எந்நேரமும் இவனால சந்தோஷமா, சிரிச்ச முகமா, பாடிக்கிட்டே எந்த ஸ்ட்ரெசும் இல்லாம வேலைப் பார்க்க முடியுது? எப்படி எல்லார் கிட்டயும் கலகலப்பா பழக முடியுது? கண்ணுலயும் உதட்டுலயும் எப்போதும் எப்படி சிரிப்பு நின்னுட்டே இருக்கு? இவன மைத்தி ஆண்ட்டி பெத்தெடுத்தாங்களா, இல்ல ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?’  

தனது இருபத்தொரு வயது பிறந்தநாளுக்காக இண்டோர் போட்டோஷூட்டுக்கு வந்திருந்த பெண்ணை நாற்காலியில் அமர்த்தி அருண் கேட்டதைப் போல டச்சப் செய்ய ஆரம்பித்தாள் அமுதமொழி. அவளது பெற்றோரும் உடன் பிறந்தோரும் கூட வந்திருக்க, அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தான் அருண். அவனது பேச்சுத் திறமையில் இனிமேல் அந்தக் குடும்பமே எந்த விழா என்றாலும் இனி இவனது சேவையைதான் நாடப் போகிறார்கள் என நன்றாகப் புரிந்தது இவளுக்கு.

‘இவளோ நல்லா பேசற இவன் நாலு வார்த்தைப் பேச நாப்பது நிமிஷம் யோசிக்கற என்னை ஏன் வேலைக்கு எடுத்தான்?’ என யோசித்தவளுக்கு நினைவலைகள் நேர்முகத் தேர்வுக்கு வந்த நாளை நோக்கிப் போனது.

மாலை மூன்று மணிக்கு இவளது நேர்க்காணல் நேரம் என இன்ஸ்டாவில் மேசேஜ் வந்திருக்க, பாட்டியிடம் வெளி வேலை இருக்கிறது என சொல்லி கிளம்பி இருந்தாள் அமுதமொழி. இன்ஸ்டாகிராம் மேசேஜ் வழியாகவே கேள்வி கேட்கப்பட்டிருக்க, அதற்கு திருப்திகரமாக இவளது பதில் இருந்ததாலும், இவள் அனுப்பி வைத்த அலங்காரத்துக்கு முன், அலங்காரத்துக்குப் பின் படங்கள் பிடித்திருந்ததாலும்தான் நேர்க்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.

அலங்கார சாதனங்கள் வாங்க, மேக்கப் அப்பாயிண்ட்மேண்ட் என அடிக்கடி வெளியே போய் வருவதால், தான் வரும் வரை காவேரியை பாட்டிக்குத் துணையாக விட்டு செல்வாள் அமுதமொழி. அதற்கான கூடுதல் தொகையை இவளே தனது வருமானத்தில் இருந்துக் கொடுத்து விடுவாள். அதோடு இரவிலும் எட்டு மணிக்குள் வீட்டில் இருப்பதைப் போல பார்த்துக் கொள்வாள்.

“நீ சம்பாதிச்சுக் கிழிச்சுக் கொண்டு வர பணத்துக்கு நைட்டெல்லாம் பாட்டியைத் தனியா விடுவியா?” எனக் கேட்டு மனதைப் புண்படுத்துவார் இவளது தகப்பனார்.

வேண்டாத பொண்டாட்டி கைப் பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்பது போல வேண்டாத மகள் எது செய்தாலும் குற்றமாகித்தான் போனது. எடுக்கவும் பிடிக்கவும் ஆள் இருந்தால் போதும், வைதேகி இவள் வெளியேப் போவதைக் கண்டுக் கொள்வதில்லை.

‘நானென்ன பாட்டிக்கு காவலா? இவரோட கடமையை என் தலையிலக் கட்டிட்டுத் தப்பிக்கப் பார்க்கறாரா? நானென்ன இவங்களுக்கு எல்லாம் எடுப்பார் கைப்பிள்ளையா? சம்பாதிக்கத் துப்புல்லன்னு திட்டறது! வேலைன்னு போனா பாட்டிக்கு யார் பொறுப்புன்னு கத்தறது! நான் என்னதான் செய்யட்டும்?’ என மனதில் கத்தித் தீர்ப்பாள். ஆனால் வாயில் இருந்து ஒற்றை வார்த்தை வராது.

நேர்காணல் போகும் தினத்தன்று மதிய உணவை சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு, அழகாய் ஒப்பனை செய்துக் கொண்டவள், நடு முதுகு வரை இருந்த அடர்த்தியான கூந்தலை சீவி வலது பக்கம் கொஞ்சமாக முடி எடுத்து சடைப் பின்னி, பின் எல்லா முடியையும் ஒன்றாய் சேர்த்து போட்டிருந்த டாப்ஸ்க்கு ஏற்றதுபோல பிங்க் வர்ண ரப்பர்பேண்ட் போட்டு லூசாக கட்டினாள். பார்க்க முடி கலைந்தும் கலையாமலும் இருப்பதைப் போல இருந்தது அந்த சிகையலங்காரம். அது அப்படியே நிற்பதற்காக கொஞ்சமாய் ஹேர் ஸ்ப்ரே செய்தவள், தனது பெரிய கைப்பையுடன் கிளம்பி விட்டாள்.

“வரேன் பாட்டி!” என்றவள் எங்கே சொல்கிறாள் என சொல்லவில்லை.

“பார்த்துப் போயிட்டு வா! வரும் போது ஆனந்த பவன்ல டைமண்ட் கேக் வாங்கிட்டு வந்திடு”

‘நான் போற இடம் ஒரு மூலையில இருக்கு! அந்தக் கடை இன்னொரு மூலையில இருக்கு! என்னால முடியாது பாட்டி!’ என மனதில் நினைத்தவள்,

“சரி பாட்டி!” என சொல்லிக் கிளம்பி இருந்தாள்.

வேலைக் கிடைத்தால் சொல்லிக் கொள்ளலாம் என நேர்முகத்தேர்வுக்கு போவதை பாட்டியிடம் மறைத்து விட்டாள். வேலைக் கிடைக்கா விட்டால், அது வேறு சித்தியின் மறைமுக கேலிக்கு ஆளாக்கி விடும் எனும் முன்னெச்சரிக்கைதான் காரணம்.

அவர்களுக்காக சின்னதாய் ஒரு கார் இருந்தாலும், இவளுக்கு அதை ஓட்டத் தெரிந்தாலும், தனக்காக வெளியே போவதென்றால் ஸ்கூட்டியைத்தான் உபயோகிப்பாள். அந்த கார் தனது அம்மாவிற்காக வாங்கிக் கொடுத்திருந்தார் ரகுவரன். வைதேகியை செக்கப், ஷோப்பிங், கோயில் குளம் என அழைத்துச் செல்ல மகளை ட்ரைவிங் வகுப்பில் சேர்த்து லைசென்சும் வாங்க வைத்திருந்தார். அந்தக் காரைப் பார்க்கும் போது பாட்டியின் கார் எனத் தோன்றுமே தவிர, தனக்கும் அது சொந்தமென தோன்றாது இவளுக்கு. இந்த செகண்ட் ஹேண்ட் ஸ்கூட்டியை இவளே பணம் சேமித்து வாங்கி இருந்தாள். சில சமயம் அந்த ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தாலும், இன்னொன்று வாங்க பணம் போதாததால் அதை வைத்தே சமாளித்துக் கொண்டிருந்தாள் மொழி.

ஸ்கூட்டியைக் கிளப்பியவள், நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கான முகவரியை கூகுள் மேப்பில் போட்டு போனை சொறுகுவதற்காக வைத்திருக்கும் இடத்தில் பொறுத்தியவள் படபடக்கும் மனதை ‘யூ கென் டூ இட் அமுதமொழி’ என சொல்லி சமாதானப்படுத்தியபடியே வெளியேறினாள். மூன்று மணி நேர்முகத் தேர்வுக்கு இரண்டரை மணிக்கெல்லாம் கடையை அடைந்து விட்டவள், ஹெல்மெட்டைக் கலட்டி, கலைந்திருந்த தலைமுடியை சரி செய்தாள். அதன் பிறகே கடைக்குள் நுழைந்தாள் அமுதமொழி. வெளியே அடித்த வெயிலுக்கு, உள்ளே ஏசி ஜில்லென வரவேற்றது காரிகையை.

உள்ளே இருந்த சோபாவில் மூன்று பெண்கள் அமர்ந்திருந்தார்கள். கண்ணாடி கதவைத் தள்ளித் திறந்து வந்த இவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டு விட்டு ஒருத்தி முகத்தைத் திருப்பிக் கொள்ள, இன்னொருத்தி புன்னகைக்க, மூன்றாமவள் என்னவென கூட கவனிக்காமல் போனில் ஆழ்ந்திருந்தாள்.

‘நம்மள போல இண்டெர்வியூக்கு வந்திருக்காங்க போல’

“வெல்கம்மா!” எனும் குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள் அமுதமொழி.

அங்கே அழகாய் ஒரு பெண்மணி சிரித்த முகமாய் நின்றிருந்தார்.

“உன் பேர் என்னம்மா?” என அவர் கேட்க,

“அ..அமுதமொழி” என திக்கினாள் பெண்.

கையில் வைத்திருந்த பேப்பரில் அவள் பெயரை டிக் செய்தவர்,

“என் பேரு மைத்ரேயி! மூனு மணி அப்பாயின்மேண்டுக்கு சீக்கிரமாகவே வந்துட்டம்மா நீ! ரிலேக்‌ஷா உட்காரு! உன் டேர்ன் வந்ததும் கூப்பிடறேன்!” என சொல்லி உட்கார இருக்கையைக் காட்டினார் மைத்தி.

கையோடு ஒரு பாரத்தைக் கொடுத்தவர்,

“அப்படியே இத ஃபில் அப் பண்ணிடுமா!” என சொல்லி நகர்ந்துவிட்டார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்துக் கொடுத்தாள் ஒரு பெண். வெயிலில் வந்தது தொண்டைக் காய்ந்திருக்க, சின்னப் புன்னகையுடன் வாங்கிப் பருகினாள் அமுதமொழி. மற்றவர்களுடன் பேசிப் பழக தயக்கமாய் இருக்க, மென் புன்னகையை மட்டும் கொடுத்தாள் தன்னைப் பார்த்துப் புன்னகைத்த பெண்ணுக்கு. அதன் பிறகு பார்வையை அந்த ஸ்டூடியோவை சுற்றி சுழல விட்டாள் அமுதமொழி. சுவரில் சின்னதும் பெரிதுமாய் அழகழகாய் படங்கள் கலைநயமாய் மாட்டப் பட்டிருந்தன. இயற்கை காட்சிகள், ஆட்களின் போட்ரேய்ட் என படங்கள் இருக்க, இவளது கருத்தைக் கவர்ந்தது ஒரு ஜோடி சிங்கத்தின் படம்.

மெல்ல எழுந்துக் கொண்டவள், அந்த படத்தின் அருகே போய் நின்றுப் பார்த்தாள். ஆண் சிங்கம் ஒன்று பெண் சிங்கத்தின் நெஞ்சில் சாய்ந்து ஆறுதல் தேடுவது போல இருந்த அப்படத்தை அழகாய் எடுத்திருந்தார்கள். அதில் வாட்டர்மார்காய் ஏ.ஜி என இருக்க, ஸ்டூடியோ ஓனர் அருண் பிடித்தப் படமென புரிந்துக் கொண்டாள் அமுதமொழி. என்னவோ அந்தப் படம் இவளைக் கட்டிப் போட்டது. தனது போனை வெளியே எடுத்து, யாராவது கவனிக்கிறார்களா என பார்த்து விட்டு அதை படம் எடுத்துக் கொள்ள முனைந்தாள்.

“மீ!” எனத் திடீரென கேட்ட சத்தத்தில் கையில் இருந்த போன் கீழே விழ, குரல் வந்த திசையை நோக்கினாள் அமுதமொழி.

மேல் மாடிக்கு செல்லும் படியின் கடைசிப் படியில் நின்று இவளைத்தான் பார்த்தபடி நின்றிருந்தான் ஓர் இளைஞன். பார்த்தவுடன் அவன்தான் அருண் என புரிந்தது இவளுக்கு. அவனது இண்ஸ்டா அக்கவுண்டில் அவன் உருவப் படங்களையும் பல சமயங்களில் ஷேர் செய்வான் அருண். அவனது சிங்கப் படத்தைத் திருட்டுத்தனமான இவள் படமெடுத்ததைப் பார்த்திருப்பானோ எனும் ஐயத்தில், லேசாய் அசட்டு சிரிப்பொன்றை அவனை நோக்கி உதிர்த்தவள், கீழே விழுந்திருந்த போனை எடுத்துக் கொண்டு தனக்குக் கொடுக்கப் பட்ட இடத்தில் போய் பவ்யமாய் அமர்ந்துக் கொண்டாள். அவள் போய் அமரும் வரை அவனது பார்வை இவளையே தொடர்ந்தது போல மாயைத் தோன்ற நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை அமுதமொழி.

“யெஸ் சார்!” என மைத்ரேயின் பதில் குரல் கேட்க,

“நெக்ஸ்ட்!” என குரல் கொடுத்தான் அருண்.

நேர்முகத்தேர்வு முடித்தப் பெண் கீழே இறங்கி வர, அடுத்த பெண் மேலே ஏறினாள். அமுதமொழிக்குப் பின்னும் இன்னும் மூன்று பேர் இண்டெர்வியூக்கு வந்திருந்தார்கள். இவளுக்குக் கொடுக்கப்பட்ட மாதிரியே அவர்களுக்கும் ஜூஸ் வழங்கப்பட்டது.

“மா!!! நெக்ஸ்ட்” எனும் குரல் கேட்க.

“அமுதமொழி! உன்னோட டெர்ன்மா! ஆல் தி பெஸ்ட்” என சொல்லி அனுப்பி வைத்தார் மைத்ரேயி.

படபடக்கும் இதயத்துடன் படிகளை ஏறி மேலே சென்றாள் அமுதமொழி. மேல் மாடிக்கு வந்தவுடன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது பெண்ணுக்கு. மேலே செய்திருந்த செட்டிங் அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு பக்கம் ட்ரான்ஸ்பெரெண்ட் பை போட்டு வரிசையாக பெண்கள் அணியும் கவுன்களும், ஆண்களுக்கான கோட் சூட்களும் அதற்குறிய இடத்தில் தொங்க விடப்பட்டிருந்தன. தரையில் அழகான பொசு பொசு கார்ப்பேட், ஒரு பக்க சுவரையே கண்ணாடியால் அமைத்திருந்த பாங்கு, உடை மாற்றுவதற்காக கனமான துணியால் அமைக்கப்பட்டிருந்த வட்ட வடிவ அறை, வட்ட மேசை ஒன்று, அமர்ந்துக் கொள்ள சோபா, போட்டோ எடுக்கவென ஒதுக்கப்பட்டிருந்த மேடை போல இருந்த இடம் என மார்டனாகவும் அழகுறவும் இருந்தது அவ்விடம்.

“சிங்கமா இருந்தாலும் அவனும் ஒரு ஆண்தானே! ஆத்துக்காரி அணைப்பில் ஆசுவாசம் அடையும் ஒரு ஆண்மகனை ஆன்னு பார்க்கறது அசிங்கமா இல்ல?” எனும் கண்டன குரல் கேட்க, பரிதாபமாக முழித்துக் கொண்டே குரல் கொடுத்தவனை நோக்கித் திரும்பினாள் அமுதமொழி.

அங்கே சிரிப்புடன் நின்றிருந்தான் அருணகிரி.

வலது கையை அவளை நோக்கி நீட்டியவன்,

“ஐம் அருண்!” என சொன்னான்.

மெல்ல கை நீட்டி அவன் கரத்தைப் பற்றிக் கொண்டவள்,

“ஐ அம் அமுதமொழி!” என மெல்லியக் குரலில் மொழிந்தாள்.

“அம்ம்ம்ம்முதமொழின்னு பேர் இருக்கறதுனால இப்படி அம்ம்ம்ம்ம்முக்கி பேசனும்னு அவசியம் இல்ல. கொஞ்சம் சத்தமாவே பேசலாம்” என்றவன், சோபாவைக் காட்டினான் அமர சொல்லி.

எதிரெதிரே இருவரும் அமர்ந்ததும்,

“உங்களோட மேக்கப் ஸ்கில் ரொம்ப நல்லா இருந்தது அமுதமொழி! ஆனாலும் இந்த வேலைக்கு இன்னும் கொஞ்சம் தகுதிகள் இருக்கிறது ஏடட் அட்வாண்டேஜா இருக்கும்! அது சம்பந்தமா பேசித் தெரிஞ்சுக்கத்தான் இந்த மீட் ஆப்!” என்றவன் ரிலேச்ஷாக சோபாவில் சாய்ந்துக் கொண்டான்.

பிண்ணனியில் மெல்லிய இசை ஓடிக் கொண்டிருக்க, மனதை மயக்குவது போல மெல்லிய லாவண்டர் மணம் அந்த இடமெங்கும் விரவியிருக்க, ஜில்லென ஏசி காற்று உடலை தழுவிப் போக, கண்ணை உறுத்தாத விளக்கொளி இதமளிக்க, இண்டெர்வியூ என சொல்லாமல் மீட் அப் என அவன் சொல்லியது இறுக்கத்தைக் குறைத்திருக்க இவளுமே பதட்டமெல்லாம் வடிய அவனைப் போலவே மெல்ல சாய்ந்து அமர்ந்தாள்.

அதன் பிறகு மெல்ல கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தான் அவன். ஒரு தோழியிடம் பேசுவது போல சிரிக்க சிரிக்க பேசினான். இவளும் பதட்டம் அகன்று கேட்ட கேள்விகளுக்கு நீளமாக இல்லாவிட்டாலும் நிறைவாகவே பதிலளித்தாள்.

“சரி சொல்லுங்க! ஃப்ரீ டைம்ல என்ன செய்வீங்க? அதாவது உங்க ஹோபி என்னன்னு கேக்கறேன்”

“ஹோபி..ஹ்ம்ம். ஸ்டாம்ப் கலேக்டிங் சார்”

“ஈமேயில் வந்திட்ட காலத்துல ஸ்டேம்ப் கலேக்‌ஷனா? ஸ்டாம்ப்லாம் இன்னும் வெளியிடறாங்களா?” என ஆச்சரியப்பட்டான் இவன்.

தலையை ஆமென ஆட்டியவள் தனக்குப் பிடித்த விஷயமென்பதால், வாய் பூட்டைக் கொஞ்சமாய் கலட்டி வைத்தவள் தனது பொழுதுபோக்கைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள்.

“ஒரு வருஷத்துக்கு உலகளவுல சுமார் பத்தாயிரம் தபால் தலை வெளியிடறாங்க சார்”

“ஓஹோ!!! இண்ட்ரெஸ்ட்டிங்”

“என் கிட்ட அஞ்சு பெரிய ஸ்டாம்ப் ஆல்பம் இருக்கு சார்” என சொல்லியவள் ரொம்ப பேசி விட்டது போல அமைதியாகி விட்டாள்.

“என்னமோ போ! ஸ்டாம்புனாலே எனக்குப் பாம்ப பார்த்த மாதிரி அலர்ஜியாகிடுது” என்றவன் அவள் மேலும் எதாவது கேட்பாளா என முகம் பார்க்க, அங்கே பெரும் அமைதி.

“நீ ஏன்னு கேட்காட்டியும் நான் சொல்லுவேன்! ஸ்டாம்ப்னதும் என் க்ரஷ் புட்டுக்கிட்டுப் போன சம்பவம் ஞாபகம் வந்துடுச்சு” என்றவனுக்கு முகமெல்லாம் புன்னகை.

“அப்போ நான் ஃபோர்த் ஸ்டாண்டர்ட்! கிளாஸ்லயே ரொம்ப கியூட்டான பையன்னு வையேன்! எங்க கிளாஸ்க்கு ஜெனிபர்னு ஒரு கொழுக் மொழுக் பொண்ணு புதுசா வந்து சேர்ந்தா! மிஸ் அறிமுகம் பண்ணி வச்சப்போ, என் பேரு ஜெனிபர், வயசு 8, அம்மா பேர் ரீனா, அப்பா பேரு ஜான், ஐ லைக் சிக்கன் சாண்ட்விச் அண்ட் பெப்ஸி, மை ஹாபி இஸ் ஸ்டாம்ப் கலேக்டிங்னு தலையை ஆட்டி ஆட்டி சொன்னா! அவ ரெட்டை ஜடை லெப்டு, ரைட்டுன்னு ஆட நானும் பரவசமாப் பார்த்துட்டே இருந்தேன்” இன்னும் கூட அந்தப் பரவசம் மிச்சம் இருப்பது போல ரசித்து சொன்னவனை, மெல்லிய புன்னகையுடன் நோக்கினாள் இவள்.

“அப்புறம் சார்!!!” என இவளையும் அறியாமல் வாயில் இருந்து வார்த்தை வந்து விழுந்தது.

“ஜெனி கிட்ட எப்படியாவது ப்ரேண்டாகனும்னு எங்கம்மாட்ட வந்து ஐடியா கேட்டேன். அவங்க உடனே போஸ்ட் ஆபிஸ் போய் ரெண்டு மூனு ஸ்டாம்ப் வாங்கிட்டு வந்து தந்தாங்க. அவட்ட குடுத்து ப்ரேண்ட் புடிச்சிக்கோன்னு சொன்னாங்க! மறுநாள் ரொம்ப ஆசையா கிளாஸ்கு போய் ஸ்டாம்ப அவட்ட நீட்டி ஈன்னு இளிச்சிட்டே ‘கென் வீ பீ ப்ரேண்ட்ஸ்’னு கேட்டேன். அவ மூஞ்ச தொடச்சிக்கிட்டே என் கிட்ட பேசாத போடான்னு சொல்லிட்டுப் போய்ட்டா! மனசே ஒடஞ்சிப் போச்சி”

“ஏன் அப்படி?” என்னவோ அவன் கதையைக் கேட்க ஆர்வம் வந்து தொலைத்தது இவளுக்கு.

“ஐயாக்கு முன் வரிசையில மூனு பல்லு விழுந்திருந்த நேரமது! பேசறப்போ எதிர இருக்கறவங்க மேல கொஞ்சமா அபிஷேகம் நடக்கும்! அதுக்குப் போய் என் ப்ரேண்ஷிப் வேணான்னு சொல்லிட்டா ஜெனி! அந்த வயசுல அம்மாவ கட்டிப் புடிச்சிட்டு ரெண்டு நாள் அழுதேன்! இப்போ நெனைச்சா சீப்பு சீப்பா வருது” எனச் சிரித்தவனின் பல்லைக் கூர்ந்துப் பார்த்தாள் அமுதமொழி.

“என்ன என் வாயையே பார்க்கறீங்க? பல்லு முளைச்சிடுச்சா இல்ல இன்னும் எல்லாருக்கும் அபிஷேகம் பண்ணறேனான்னா?” என சிரிப்புடன் அவன் கேட்க, இவளுக்கும் புன்னகை தொற்றிக் கொண்டது.

வேடிக்கையாய் பேசியபடியே நிறைய கேள்விகள் கேட்டான்.

“கேமிரா ஹேண்டில் பண்ணிருக்கீங்களா?”

“இல்ல சார்!”

“டான்ஸ் ஆடத் தெரியுமா?”

‘டான்ஸா? இதென்னடா வம்பா போச்சு! அலங்காரத்துக்கும் ஆட்டத்துக்கும் என்ன சம்பந்தம்!’ என இவள் யோசிக்க, சம்பந்தத்தை விளக்கினான் அருண்.

“இப்போலாம் மக்கள் போட்டோ மட்டும் பிடிக்கறது இல்ல அமுதமொழி! அஞ்சு நிமிஷ வீடியோ வேற கேட்கறாங்க! ப்ரீ வேட்டிங் ஷூட்டுல இருந்து நாய் குட்டிப் போட்ட சம்பவம் வரை இப்படி வீடியோ எடுத்து சோசியல் மீடியால போட்டுக்கறாங்க! இது ஒரு ட்ரேண்டாவே ஆகிருச்சு. அவங்களே ஸ்டேப்ஸ் சொல்லித் தர ஆள் கூட்டிட்டு வருவாங்க! ஆனாலும் நமக்கும் தெரிஞ்சிருக்கிறது அட்வாண்டேஜா இருக்கும். சோ, கொஞ்சம் ஆடிக் காட்டறீங்களா?”

“ஆ..ஆடனுமா!”

முகமெல்லாம் சிவந்துப் போய், கை மெல்ல நடுங்க, கண்கள் வேண்டாமே என அவனைப் பார்த்துக் கெஞ்ச, அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,

“மீட் அப் இஸ் ஓவர் அமுதமொழி! நீங்க செலெக்டானா கால் பண்ணுவோம்! ஆல் தி பெஸ்ட்” என புன்னகைத்தான்.

முகம் விழுந்து விட்டது இவளுக்கு.

‘போச்சு, சொதப்பிட்டேன் போல!’ பெருமூச்சுடன் முயன்று புன்னகைத்தவள்,

“தேங்க்ஸ் சார்!” மென்று முழுங்கி சொல்லிவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டிவிட்டாள்.

விடுவிடுவென படி இறங்கியவள், மேலே ஏறிட்டுப் பார்க்க அங்கிருந்து இவளையேப் பார்த்தப்படி நின்றிருந்தான் அருண். இவள் பார்க்கவும் அவன் புன்னகைக்க, இவள் தலையை மட்டும் ஆட்டிவிட்டு வந்து விட்டாள்.

‘எனக்கில்ல சொக்கா, எனக்கில்ல!’ என மனம் சோர்ந்துப் போய் மூன்று நாட்கள் பேய் போல உலாத்தினாள் அமுதமொழி.

மூன்றாவது நாள் மைத்ரேயி போன் செய்து, வேலை இவளுக்குத்தான் என சொன்ன நொடி அப்படி ஒரு ஆசுவாசம் பெண்ணிற்கு. வாய் அதன் பாட்டுக்கு நன்றி சொல்ல, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

‘இனி நான் வெட்டி ஆபிஸர் இல்ல! நானும் மாசம் வந்தா டான்னு சம்பளம் வாங்குவேன்’ என மனம் சந்தோஷ கூச்சலிட்டது.

ஓரளவு வேலைப் பிடிபட, அங்கு ஒரு குழுவாய் இயங்கிய அனைவரையும் பார்த்தால் இரண்டு வார்த்தைப் பேசும் அளவுக்கு முன்னேறி இருந்தாள் அமுதமொழி.

அன்றைய பிறந்தநாள் படப் பிடிப்பு முடிந்திருக்க, வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்த அமுதமொழியை நிறுத்தி வைத்துப் பேசினான் அருணகிரி.

“ரெண்டு வாரத்துல ஊட்டில ஒரு ப்ரீவெடிங் ஷூட் இருக்கு மொழி! மூனு நாள் தங்கற போல தேவையானத ப்ரீப்பேர் பண்ணிக்கோ!”

பேவென முழித்தவள்,

“நானும் வரணுமா?” என திக்கித் திணறிக் கேட்டாள்.

வந்ததே அவனுக்குக் கோபம்! அருணகிரி ஆங்கார கிரியாகி இருந்தான். அவன் கோபத்தைப் பார்த்து, அமுதமொழி அமைதிமொழியாகிப் போனாள்!

 

இவளுக்குப் போகனுமே ஊட்டி

வச்சி செஞ்சிருவாங்களே பாட்டி!!!!!!!!!!!!!!!

 

(நீளுமா……)

 

(கஸ்டப்பட்டு 2000 வோர்ட்ஸ் கை வலிக்க எழுதிருக்கேன். அருண்மொழி(ரெண்டு பேரோட பெயர் காம்போ!!! பார்டா எனக்குப் புடிச்ச சிங்கர் பேர் வந்திடுச்சு) பத்தி உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க டியர்ஸ். அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல்!!!)