En Ayul Neelumadi–EPI 5

269870723_998653174055350_1983985756058693881_n-9a68a058

அத்தியாயம் 5

 

‘பனி விழும் இரவு

நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு

இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது

பூங்காற்றும் தூங்காது

வா வா வா!!!’

பாடல் பிண்ணனியில் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த இளம் ஜோடி கன்னத்தோடு கன்னம் இழைத்து முடித்து, உதடு நான்கையும் பசைப் போட்டு ஒட்டிக் கொள்ள முயன்ற நேரம்,

“கட்!” என குரல் கொடுத்தான் அருணகிரி.

“என்னாச்சு?” என இந்நாள் காதலன், வருங்காலக் கணவன் கேட்க,

“கன்னம் வரைக்கும் இந்த செட்டிங் அண்ட் லைட்டிங் சரியா இருந்தது. உதடு ஒட்டிக்க இது சரி வராது. ரெண்டு உதடும் டச் பண்ணறப்போ தூரத்தே தெரியற நிலவை அந்த உதட்டு நடுவுல ஒளியா காட்டினா ஆர்டிஸ்டிக்கா, அருமையா இருக்கும். அத நான் கிராபிக்ஸ்ல கொண்டு வந்துடுவேன். அதுக்கு லைட்டிங் வேற மாதிரி செட் பண்ணனும். சோ கொஞ்சம் வேய்ட் பண்ணுங்க” என்றவன் தனக்கு உதவியாளனாக இருப்பவனை லைட்டிங்கையும் செட்டிங்கையும் மாற்ற சொல்லி பணித்தான்.

இந்த ஜோடி அருணிடம் இரண்டு வீடியோவும், அவுட்டோர் போட்டோ ஷூட்டும் வேண்டும் என கேட்டிருந்தனர். பேச்சு வார்த்தை நடத்தும் போதே, பொதுவாக எல்லோருக்கும் காட்டும் மாதிரி ஒரு வீடிவோயும், இவர்கள் இருவர் மட்டும் பார்த்து மகிழ பிரைவெட்டான வீடியோ ஒன்றும் வேண்டும் என சொல்லியிருந்தார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன, எப்படி எடுக்க வேண்டும், உடைகள், லோகேஷன், பட்ஜேட் என எல்லாம் அலசி ஆராய்ந்து, அந்த ஜோடியின் ஆசைப்படிதான் ஊட்டிக்கு வந்திருந்தார்கள்.

அந்த ஜோடிக்கு முன்னே ஊட்டிக்கு வந்திருந்தவன், லோகேஷன் பார்த்து வைத்து, ட்ரோன் கேமரா வழி இயற்கை காட்சிகள், தேயிலைத் தோட்டம், மலை முகடு என படம் எடுத்து முடித்திருந்தான். வீடியோவில் இடை இடையே சேர்ப்பதற்கு இவ்வகை காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்வான் அருண். ஐந்து நிமிட வீடியோவாக இருந்தாலும் அதற்கான உழைப்பு மிக மிக அதிகமே! இவனும் இவனது உதவியாளரும் இவ்வேலைகளைப் பார்த்த நேரம், முதன் முதலாக ஊட்டிக்கு வந்திருந்த அமுதமொழியை ஊர் சுற்ற அழைத்துப் போனார் மைத்ரேயி.

அவருக்கு ஊர் சுற்றுவது என்பது பொருட்களைச் சுற்றிப் பார்ப்பதுதான் என அவருடன் வெளியே வந்ததும்தான் புரிந்தது பெண்ணுக்கு. லோவர் பஷார் சாலையில் ஆரம்பித்தது மைத்தியின் ஷாப்பிங் அட்டகாசம்.

“இங்க பாரேன் மொழி! இந்த சால்வை கலரு செம்மையா இருக்குல்ல! பிங்க் துணியில தங்கப் பூக்கள் எப்படி ஜொலிக்குது பார்த்தியா? இல்ல இந்த ப்ளூ துணில பிங்க் கலர் பூக்கள் போட்டது நல்லாருக்கா?” என இரண்டையும் மேலே போட்டு காட்டினார் இவளிடம்.

“பிங்க் துணி நல்லாருக்கு ஆண்ட்டி”

“அப்படிங்கறே? சரி வாங்கிடலாம்! எனக்கு செலெக்ட் பண்ணிக் குடுத்த உனக்கு நானும் செலெக்ட் பண்ணி தரேன்!” என அவள் தடுக்க தடுக்க, அவளுக்கும் ஒன்று வாங்கி விட்டுத்தான் ஓய்ந்தார்.

இவள் பணம் கொடுக்க முயல, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டவர்,

“எனக்கு பொம்பள புள்ளயே இல்ல! கிரிக்கும் எனக்கும் அடுத்தது ஒன்னு பொண்ணா பொறக்காதான்னு அவ்வளவு ஏக்கம். என்னமோ இவன் ஒருத்தனோட நின்னுப் போச்சு! அதே கட்டம் போட்ட சட்டை, கோடு போட்ட சட்டை, வட்டம் போட்ட சட்டைன்னு இந்த அருணுக்கு வாங்கிக் குடுத்து எரிச்சலா ஆகிடுச்சு! வித விதமா போவ் வச்சி, ரோஸ் வச்சி, பார்பி படம் வச்சி, பிங்க், லவேண்டர் கலர்னு எனக்கும் ஒரு பொண்ணு இருந்திருந்தா ஆசை ஆசையா வாங்கிக் கொடுத்திருப்பேன்! மக மாதிரி நினைச்சு உனக்கு வாங்குக் குடுக்கலாம்னு பார்த்தா!!! ஹ்ம்ம்!!!” என முகத்தைப் பாவமாய் வைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டார்.

“சரி ஆண்ட்டி! இது ஒன்னு மட்டும்தான்” என இவள்தான் விட்டுக் கொடுக்கும்படியானது.

ஒன்று ஒன்பதாய் ஆன போதும் இவளால் தடுக்கவே முடிந்திருக்கவில்லை. சும்மாவே வாயில்லாத பிள்ளை பூச்சி இது, மைனா போல கீச்சு கீச்சு என இருக்கும் மைத்தியிடம் ஜெயிக்க முடியுமா!

“ஆண்ட்டி லேக் போலாமா? நான் அத பார்த்ததே இல்ல” என இவள் சொல்லவும்தான் ஷாப்பிங்கை கை விட்டார் மைத்ரேயி.

இடை இடையே அருண் போன் செய்து, சாப்பிட்டாரா, மருந்துப் போட்டாரா என கேட்பதும் இவர் பதில் சொல்வதும் ஒரு பக்கம் நடந்தது. படகு சவாரி போகலாம் என மைத்தி சொல்ல, இருவர் மட்டுமே துடுப்பு போடும் படகை வாடகைக்கு எடுத்து அந்த ஏரியை சுற்றி வந்தார்கள். பந்தாவாக அந்த படகை எடுத்து விட்டு, துடுப்புப் போடத் தெரியாமல் இரு பெண்களும் தடுமாறி, இவள் ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் என துடுப்புப் போட்டு சரி வராமல், பின் ரிதமாக போடக் கற்றுக் கொண்டார்கள். சரியாக படகை செலுத்தும் வரை இருவருக்கும் ஒரே சிரிப்புத்தான்.

“அருண் எங்க கூட இருக்கறதே ரொம்ப ரேர்தான். பண்டிகை, எங்களோட பிறந்தநாள்னுதான் வருவான். களைச்சுப் போய் வர பையனை வீட்டுல வச்சு, சமைச்சுப் போட்டுத் தேத்தி அனுப்பத்தான் தோணுமே தவிர, இப்படி ஜாலியா வெளிய போய்ட்டு வரலாம்டான்னு கூப்ட தோணாது. அப்படியும் சில சமயம் அவனே கூட்டிட்டுப் போவான். பார்த்து பார்த்து எங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் செஞ்சுக் குடுப்பான். ஆனாலும் காமேரா கையில எடுத்துட்டான்னா அவனுக்கு உலகம் மறந்துடும். அப்புறம் நானும் கிரியும் தனி உலகமா ஆகிடுவோம். உன்னைப் படுத்துன மாதிரிதான் ஷாப்பிங்னு அவரயும் படுத்துவேன். கொஞ்ச நேரம் அமைதியா கூடவே வருவாரு. நான் ஓவரா போறேன்னு தெரிஞ்சா, அப்படியே அமுக்கிப் புடிச்சு ஹோட்டலுக்குக் கொண்டு வந்து தள்ளிடுவாரு!” என சொல்லி புன்னகைத்தார் மைத்தி.

அந்தப் புன்னகையிலிருந்த சோகத்தைக் கண்டுக் கொண்டாள் இவள். எப்படி அவரைத் தேற்றுவது எனத் தெரியவில்லை. மனது பிசைந்தது மொழிக்கு. சட்டென ஒரு கையால் தண்ணீரை அள்ளி அவர் முகத்தில் அடித்தாள்.

“ஏய், என்னடி?” என பதறினார் மைத்தி.

“கொசு ஆண்ட்டி! கன்னத்துல கொசு” என சொல்லியவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவள் சிரிப்பு, முகத்தில் பட்ட நீரால் சட்டென நின்றுப் போனது.

“என்ன ஆண்ட்டி!!!”

“பசு மொழி, கன்னத்துல பசு” என அவர் சொல்ல இவளுக்கு இன்னும் பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு.

“கன்னத்துல…எப்படி..பசு..நிக்கும்…” என சிரிப்புனூடே கேட்க,

“ரைமிங்கா அதுதான் வந்துச்சு!” என சொன்னவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு.

இருவரும் சிரித்துக் கொண்டே படகு சவாரியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு வந்தனர். வரிசையாக இருக்கும் வில்லா வகை ஹோட்டலை தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தான் அருண். அங்கேயே அழகான லாண்ட்ஸ்காப்பிங் இருப்பதால், இரவு நேர பிரைவெட்டான வீடியோவை வில்லா வளாகத்திலேயே முடித்துக் கொள்ள திட்டம்.

அன்றிரவு பனி விழும் இரவு பாட்டுக்கான ஷூட்டிங்கும் அங்குதான் நடந்தக் கொண்டிருந்தது. ஒட்டிக், கட்டி, தொட்டு, தடவி எனப் போனது அப்பாடலின் ஷூட்டிங். இப்படியான ப்ரீ வேடிங் ஷூட்களை வீடியோவாக இவளும் பார்த்திருக்கிறாள்தான். ஆனாலும் இப்படி லைவ்வாக இருவரின் நெருக்கத்தை நேரில் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது மொழிக்கு.

‘அவங்க பணம் அவங்க இஸ்டம்! வாழப் போற ஒரு வாழ்க்கையை அனுபவிச்சு வாழனும்னு நினைக்கறாங்க. பல்லு போன வயசுல, இப்படிலாம் நாங்க இருந்துருக்கோம்னு வீடியோவ பார்த்துப் சிரிச்சுப்பாங்க! இதுல நான் ஜட்ஜ் பண்ண என்ன இருக்கு’ என நினைத்தப்படியே மேக்கப்பை போட்டு, அந்தப் பெண் உடைமாற்ற உதவி முடித்து விட்டு ஓர் ஓரமாக அமர்ந்துக் கொண்டாள் மொழி.(இது என்னோட கருத்து மட்டும்தான். சிலருக்கு ப்ரீ வெடிங் ஷூட் பிடிக்காது. எனக்குமே பப்ளிக்கா கிஸ்ஸிங், அங்கிங்க டச்சிங் பண்ண வீடியோவ சிலர் ஷேர் செய்யறத பார்க்க ஒரு மாதிரியாத்தான் இருக்கும். சில சமயம் ப்ரைவெட்டா இவங்களூக்காக மட்டும் எடுத்துக்கற வீடியோஸ் இப்படி வெளிய கசிஞ்சறதும் உண்டு. ஆர்ட்டிஸ்டிக்கா உள்ளத ரசிப்பேன்! அப்படி இப்படி இருக்கறத கடந்து போய்டுவேன். ஆனாலும் அங்கப் போடப்படற கமேண்ட்ஸ் படிக்கறப்போ, அப்பப்பா மனுஷ பயங்கலுங்ககுள்ள இவளோ வன்மமா, இவ்ளோ காழ்ப்புணர்ச்சியான்னு தோணும்! அதையும் கடந்து வந்திடுவேன்!)

பனியாக இருக்கவும், மைத்தியை வில்லாவிலேயே ஓய்வெடுக்க சொல்லி விட்டான் அருண்.  

இவனது உதவியாளன் லைட்டிங் சரி செய்து, அவர்களை ஒரு பொசிஷனில் நிற்க வைக்கும் நேரம், இவனது பார்வை தனியாக இருட்டை வெறித்தப்படி, தன் கைகளினாலே தன்னைக் கட்டிக் கொண்டபடி அமர்ந்திருக்கும் அமுதமொழி மீது பாய்ந்தது. காமிராவில் கண் இருக்கும் வரை சுற்றுப் புறம் மறந்திருந்தவனுக்கு, இப்பொழுதுதான் அவள் கண்ணுக்குத் தெரிந்தாள்.

‘ஸ்வெட்டர் போட்டு அது மேல சால்வையைப் போட்டும் இப்படி நடுங்கறா’ என எண்ணியவன், தனது ஸ்போர்ட் ஜாக்கேட்டைக் கழட்டினான்.  

மெல்ல அவள் அருகே நடந்துப் போய் பின்னாலிருந்து ஜாக்கேட்டைப் போர்த்தி விட்டவன், அவள் இரு கன்னத்தில் தன் இரு கரங்களையும் வைத்தான். சட்டென எழுந்து ஓரடி தள்ளிப் போய் நின்ற மொழி, திரும்பி இவனை அச்சத்துடன் பார்த்தாள்.

அவளது செயலில் அப்படி ஒரு கோபம் முளைத்தது அருணகிரிக்கு. தலையில் போட்டிருந்த தொப்பியைக் கழட்டி அவளை நோக்கி விட்டடித்தவன்,  

“உன்னை என்ன செஞ்சிருவேன்னு இப்படி பயப் பார்வைப் பார்க்கற? ராஸ்கேல்!!!!! குளிருல நடுங்கறியேன்னு கன்னத்துக்கு சூடு குடுத்தேன்! அவ்வளவுதான். குளிருல நடுங்கற தன் பிள்ளைக்கு அம்மா கையை சூடு பறக்கத் தேய்ச்சி விடறது இல்லையா! அது மாதிரிதான் இதுவும். போர்த்தி இருக்கற உன் உடம்புல முகம் மட்டும்தான் தெரிஞ்சது! அதனால கன்னத்துல கையை வச்சேன்! அத என்னமோ கன்னம் வைத்த கள்வன் ரேஞ்சுக்குப் பார்க்கற! திஸ் இஸ் ரிடிக்குலஸ் மொழி!” என மெல்லியக் குரலில் படபடத்தவன் ஆத்திரத்துடன் தனது வேலையைப் பார்க்கப் போனான்.  

திடீரென யாராவது பின்னால் வந்து நின்றால், பயமாயிருக்காதா? வந்த உருவம் கன்னத்தைத் தொட்டால் சிரித்துக் கொண்டா நிற்பார்கள்? பதறித்தானே போவார்கள்! அனிச்சை செயலாய் எழுந்து நகர்ந்து நின்றிருந்தவளுக்கு, இவனைப் பார்த்ததும் வந்த பயம் கூட காணாமல் போயிருந்தது. அதற்குள்தான் இவன் ஓவனில் வைத்த பாப்கார்னாய் வெடித்து சிதறி இருந்தான்.

மேலும் இரண்டு மணி நேரம் போனது அந்த ஷூட்டிங். அவ்வப்பொழுது தனது டச்சப் வேலையை செய்தவள், அதற்கு பிறகு இருட்டை வெறிக்காமல் இவனையே வெறித்திருந்தாள்.

‘அம்மா மாதிரி தொட்டேன்னு சொல்லிட்டானே!’ என அதையே அசைப் போட்டவள், அவன் பேசுவது, காமேராவை அட்ஜஸ்ட் செய்வது, இடது புறம் நகர்வது, வலது புறம் நகர்வது, கீழே மண்டி இட்டு அமர்வது என அந்த இரண்டு மணி நேரமும் அவன் செய்கையையேப் பார்த்திருந்தாள்.

அதன் பிறகு பேக்கப் செய்து அவரவர் தங்குமிடத்துக்கு நடந்தார்கள். அருணும், அவன் உதவியாளனும், இவளும், மைத்தியும் ஒரே வில்லாவில்தான் தங்கி இருந்தார்கள். இரண்டு பெரிய அறைகள், ஒரு குட்டி சமையலறை, சோபா, தொலைக்காட்சி, மேசை, நாற்காலி என ஒரு வரவேற்பறை இருந்தது அங்கே. ஆண்கள் இருவரும் ஓர் அறையிலும், பெண்கள் இருவரும் ஓர் அறையிலும் தங்கிக் கொண்டார்கள்.

மைத்தி தூங்கி இருக்க, முகம், கை, கால் மட்டும் கழுவி விட்டு அவர் அருகே படுத்துக் கொண்டாள் அமுதமொழி. உடம்பு களைத்துப் போய் இருந்தாலும், மனம் தூங்காமல் சண்டித்தனம் செய்தது.

‘என் கிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசுன அருண் சார் எங்க? இப்போலாம் ஏன் இவ்ளோ கோபம் வருது அவருக்கு? நான் என்ன தப்புப் பண்ணேன்? என் கிட்ட பழக ஆரம்பிச்சாலே எல்லாருக்கும் இப்படித்தான் கோபம், எரிச்சல் எல்லாம் வருமோ!’ என யோசித்தப்படியே ஒரு மணி நேரம் விட்டத்தை பார்த்திருந்தாள்.

லேசாய் பசிப்பது போல இருக்க,

‘ஃப்ரிட்ஜ்ல ஆண்ட்டி பால் வாங்கி வச்சாங்களே! அத மைக்ரோவேவ்ல சூடு பண்ணி குடிச்சிட்டு வருவோம்’ என எண்ணிக் கொண்டே எழுந்து அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

அங்கே சோபாவில் அமர்ந்து, லாப்டாப்பில் ஏதோ வேலையாக இருந்தான் அருணகிரி. அமைதியாக அவனைக் கடந்து குட்டி சமையலறையில் நுழைந்தாள் மொழி. தன்னைக் கடந்து போனவளை தலை நிமிர்த்திப் பார்த்தவன், எதுவும் பேசாமல் வேலையைத் தொடர்ந்தான்.

இவள் பாலை எடுத்து இரண்டு மக்கில் ஊற்றி, மைக்ரோவேவ் ஓவனைத் திறந்தாள்.

“என்ன, பசிக்குதா?” எனும் அருணின் குரலில் தலை தானாக ஆடியது இவளுக்கு.

“இன்னொரு மக் யாருக்கு? எனக்கா?”

அதற்கும் ஆமென தலையாடியது.

“எனக்கு இருக்கற பசிக்கு பாலெல்லாம் பத்தாது! எட்ட நகரு” என்றவன், குளிர்சாதனப் பெட்டியில் ஏற்கனவே வாங்கி அடுக்கி இருந்த ரெடிமேட் சாண்ட்விச் பாக்கேட்களை வெளியே எடுத்தான்.

“ஏன் அங்கயே நிக்கற மொழி! வந்து நாற்காலில உட்காரு! சும்மாவே எனக்கு அடிக்கடி பசிக்கும்! அதுவும் இந்த குளிருக்கு கொலை பசி பசிக்குது” என பேசிக் கொண்டே அந்த சாண்ட்விச்சை மைக்ரோவேவில் சூடு காட்டினான்.

இவளோ இவன் என்ன அம்பியா, அந்நியனா என்பது போல அவனையேப் பார்த்திருந்தாள். கன்னம் தொட்ட சம்பவம் நடக்கவே நடக்காதது போல சாதாரணமாக அவன் பேசியதில்தான் மேடத்துக்கு இந்த சந்தேகம்.

இருவருக்கும் சாண்ட்விச்சை தட்டில் இட்டவன், சூடான பாலையும் எடுத்து வந்தான். அவளிடம் ஒரு தட்டைக் கொடுத்தவன், அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான். அவன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க, இவளும் உண்ணத் தொடங்கினாள்.

“சாரி மொழி”

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“இல்ல, பரவால்ல சார்” என்றாள்.

“பரவாயில்லையா? அப்போ இன்னொரு தடவை கன்னத்தைப் புடிச்சிக்கவா?”

சட்டென கன்னத்தைத் தன் இரு கை கொண்டு பொத்திக் கொண்டவள், ஆவேன இவனைப் பார்க்க, அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

“ஏய் மொழி! சும்மா வம்பிழுத்தேன் உன்னை! ரிலாக்ஸ்” என்றவனுக்கு முகத்தில் இன்னும் சிரிப்பு மிச்சம் இருந்தது.

“திடீர்ன்னு…நீங்க..பின்னால வரவும், பயந்துட்டேன் சார்! அதோட ஹ்ம்ம்.. நீங்க கன்னத்த தொட்டது தப்புத்தானே!” என ஒரு வழியாக மனதில் இருந்ததை சொல்லி விட்டாள்.

“என்னை நீ முதலாளியா நெனைச்சிருந்தா நான் செஞ்சது ரொம்பவே தப்பான காரியம்தான். அதே என்னை ப்ரேண்டா நெனைச்சிருந்தா நான் செஞ்சது தப்பில்ல! இப்போ சொல்லு, நான் உனக்கு முதலாளியா இருக்கனுமா இல்ல நல்ல ப்ரேண்டா இருக்கனுமா?”

‘டேய் என்னடா இப்படிலாம் பேசற! நீதானடா பல நாளுக்கு முன்ன இந்த அம்ம்ம்ம்முக்குமொழிய இனிமே வொர்க்கரா மட்டும்தான் பார்ப்பேன்னு சொன்ன! இப்போ வந்து நான் உனக்கு பாஸா இருக்கனுமா இல்ல ப்ரேண்ட்ஸா இருக்கனுமான்னு வெக்கமே இல்லாம கேள்வி கேக்கற! சீச்சீ! உனக்குப் போய் என்னை மனசாட்சியா படைச்ச அந்த கடவுள் மட்டும் என் கையில கெடச்சாரு!!!!!!’ என அவன் மனசாட்சியே அருணைக் காரித்துப்பியது.

கொஞ்சமும் கல்மிஷம் இல்லாமல், சிரித்த முகத்துடன், கண்ணைப் பார்த்து பேசிய அருணையே சிறிது நேரம் இமைக்காமல் பார்த்திருந்தாள் அமுதமொழி. மெல்ல கையை அவன் முன் நீட்டியவள்,

“ப்ரேண்ட்ஸ்?” என கேட்க, முகம் முழுக்க புன்னகையுடன் அவள் கைப்பற்றிக் குலுக்கினான் அருணகிரி.   

அன்றிலிருந்து மீண்டும் அவளிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினான் அருணகிரி. இவளும் நான்கு வார்த்தைகளில் இருந்து எட்டு வார்த்தைக்கு ப்ரோமோட் ஆகியிருந்தாள் அம்மாவிடமும் மகனிடமும். ஊட்டியில் வேலை திருப்திகரமாக முடிய, சந்தோஷமாக வீடு திரும்பினார்கள் அனைவரும். வீடு திரும்பிய இரண்டாவது நாள் இண்டோர் ஷூட் ஒன்று இருந்தது.

எப்பொழுதும் காலை ஒன்பதுக்கே வேலைக்கு வந்துவிடும் அமுதமொழி, கஸ்டமர் வந்தும் கூட ஸ்டூடியோவுக்கு வந்திருக்கவில்லை. மைத்தியும், அருணும் மாறி மாறி போன் செய்தும் எல்லாமே வாய்ஸ் மெயிலுக்கே போனது.

“இவள!!!!!”

இங்கே அருணகிரி திரிசூலிகிரியாய் அவதாரம் எடுத்திருக்க, அங்கே அமுதமொழி திடமற்றமொழியாய் வீழ்ந்துக் கிடந்தாள்.

 

 

லவ் ஃபீல் குடுடான்னா,

ஓவன்ல சுட வச்ச பால குடுக்கறான்!

ஆத்தருக்கு ஆத்திரங்கள் வருது மக்களே!

அடேய் கிரி!!! வேணா, வலிக்குது, அழுதுருவேன்….

 

 

(நீளுமா….)

 

(ஹேப்பி பொங்கல் டியர்ஸ்.. போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட தங்கங்களுக்கு எனது நன்றி. அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல் 😊 )