En Ayul Neelumadi–EPI 6

269870723_998653174055350_1983985756058693881_n-6bdaa370

அத்தியாயம் 6

 

“மீ! நீங்க முதல்ல போங்க! நான் விசிட்டர் பார்க்கிங்ல காரை நிறுத்திட்டு வரேன்!”

சரியென தலையாட்டிய மைத்தி லிப்டில் நுழைந்து போக வேண்டிய தளத்தின் எண்ணைத் தட்டினார். மொழி இல்லாததால் அன்றைய போட்டோ ஷூட்டை இன்னொரு நாளுக்கு மாற்றி வைத்திருந்தான் அருண். கோபப்பட்ட வாடிக்கையாளரிடம் நயமாகப் பேசி, விலை கழிவு கொடுத்து எப்படியோ சமாளித்திருந்தான். அன்று முழுக்க தொலைப்பேசியில் அவளைப் பிடிக்க முடியாமல் போகவும்தான், வேலைக்கு சேரும் போது அவள் கொடுத்திருந்த முகவரி வைத்து வீட்டுக்கே தேடி வந்திருந்தார்கள் இருவரும்.

மறுநாளும், நாளை மறுநாளும் சில அப்பாயின்ட்மென்கள் வரிசைக் கட்டி நிற்க, இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஆள் காணாமல் போனால், கோபம் வராமல் இருக்குமா? அருணுக்கும் சுருசுருவென கோபம் வரத்தான் செய்தது. முதலாளியாய் அவளது பொறுப்பற்றத்தனத்தில் நெஞ்சம் கொதித்தது என்றால், ஒரு நண்பனாய் தன்னிடம் எந்த காரணமும் சொல்லாமல் மட்டம் போட்டது கோபத்தில் குமுற வைத்தது.

வீட்டின் முன் இருந்த அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தார் மைத்ரேயி. சற்று நேரத்தில் ஒரு பெண்மணி வந்து கதவைத் திறந்தார்.

“என்னங்க? யாரு வேணும்?”

“அமுதமொழிய பார்க்கனும், எங்க ஸ்டூடியோவுலதான் அவங்க வேலை செய்யறாங்க”

“யாரு காவேரி?” பின்னால் இருந்து குரல் கேட்டது.

“நம்மா பாப்பாவோட முதலாளியம்மா வந்துருக்காங்க”

“உள்ள விடு!” என வைதேகி சொல்ல,

“உள்ள வாங்கம்மா!” என கிரில் கதவைத் திறந்து விட்டார் காவேரி.

அதற்குள் அருணும் வந்திருக்க, இருவருமே உள்ளே நுழைந்தார்கள்.

“வாங்க” என வரவேற்றார் வரவேற்பறையில் அமர்ந்திருந்த வைதேகி.

“வணக்கம்மா! நாங்க உங்க பேத்தி வேலைப் பார்க்கற இடத்துல இருந்து வந்திருக்கோம்” என கைக் கூப்பினார் மைத்தி.

“நீங்கதான் மைத்தியா? தம்பி யாரு, அவளோட முதலாளியா? உக்காருங்க ரெண்டு பேரும்! காவேரி காபி கலந்துட்டு வா”

காவேரி உள்ளே செல்ல, இவர்கள் இருவரும் சோபாவில் அமர்ந்தார்கள். எங்காவது தென்படுகிறாளா அமுதமொழி என அருணின் பார்வை அந்த வீட்டையே அலசியது.

“தம்பியப் பத்தி என் சின்னப் பேத்தி கதை கதையா சொல்லுவா! என்னமோ அவார்டுலாம் வாங்கிருக்காராம்! ரொம்ப பிரபலமாம்! உங்கள நேருல பார்த்ததுல சந்தோஷம் தம்பி” என சகஜமாகப் பேசினார் வைதேகி.

பக்கத்தில் அமர்ந்திருந்த தாயை ஒரு பார்வைப் பார்த்தான் அருண்.

“உங்க பேத்தி மொழி எங்கம்மா? இன்னிக்கு வேலைக்கு வரலியேன்னு தேடி வந்தோம்!”

“அவ வீட்டுல இல்ல”

பொறுமையை இழந்த அருண்,

“வீட்டுல இல்லைனா, எங்க இருக்காங்க பாட்டி?” எனக் கேட்டான்.

“ஆசுபுத்திரில இருக்கா! அப்பவே தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன், ஊட்டிலாம் வேணாம்னு. எங்க என் பேச்ச கேட்டா! பைனு, சைனுன்னு அடம் புடிச்சுப் போனா! அங்க தண்ணி ஒத்துக்கலியோ, குளிரு ஒத்துக்கலியோ தெரியல! நேத்துல இருந்து ஜொரம் கொதிக்குது. அதோட வறட்டு இருமலு வேற! வீட்டுல இருந்தா எனக்கும் ஒட்டிக்கும்னு பயந்துக்கிட்டு, அவ அப்பா, சிங்கப்பூருல இருந்துகிட்டே இங்க தெரிஞ்சவங்கள வச்சு ஆசுபுத்திரில கொண்டு சேர்த்திருக்கான்.”

ஏதோ கேட்க வாயைத் திறந்த மைத்திக்கு முன்,

“கூட யார் இருக்கா?” என படபடத்திருந்தான் அருண்.

“கணக்குப் பார்க்காம பிரைவெட்டுல கொண்டு சேர்த்திருக்கான் அவ அப்பன்காரன். பெல்லு அமுத்துனா நர்சு வந்து பாத்துக்குமாம்”

படக்கென எழுந்துக் கொண்ட அருண்,

“மீ! எந்த ஆஸ்பிட்டல்னு டீட்டேய்ல் வாங்கிட்டு வாங்க! கார எடுத்துட்டு வந்து பில்டிங் கீழ வேய்ட் பண்ணுறேன்!” என மடமடவென வெளியேறி விட்டான்.

“தம்பி, காபி!” எனும் சத்தம் காற்றோடு போனது.

“என்ன மனுஷங்க இவங்கலாம்! பெல்லு அமுத்துனா நர்சு வருவாங்கலாம்! முதல்ல இவளுக்கு பெல்ல அமுத்த சக்தி இருக்கா இல்லையான்னு கூட யோசிக்க மாட்டாங்களா? வெளி இடத்துல இருக்கறப்போ எப்படியோ சமாளிச்சாலும், வீட்டுல இருக்கறப்ப சின்னதா காய்ச்சல் வந்தா கூட மீயும், அப்பாவும் என்னை அப்படி தாங்குவாங்க! இவ என்னான்னா ஹாஸ்பிட்டல்ல தனியாக் கிடக்கறா! அப்பாக்குத்தான் சிங்கப்பூருல இருந்து வர முடியலனா, அவ அம்மாக்கு கூடவா துடிக்கல! நான்சென்ஸ்” என முணுமுணுத்தப்படியே காரை நோக்கி அகலக் கால் வைத்து ஓடுவது போல நடந்தான் அருணகிரி. அவளை சார்ந்தவர்களை நினைத்து கோபம் பூகம்பமாய் வெடித்தது இவனுள்ளே!

பாவமாய் கண்களை விரித்துப் பார்க்கும் அந்த பூனைமொழியை இப்பொழுதே கண்டு விட வேண்டும் என இந்த பூகம்பகிரிக்கு மனம் அடித்துக் கொண்டது. (இந்த மாதிரி பெயர மாத்தி சொல்லறத ஏற்கனவே சில வருஷங்களுக்கு முன்ன வந்த என்னோட அப்பி(உரசாதே உசுரத்தான்) கதைல செஞ்சிருப்பேன். அபிநயசரஸ்வதி அனாதை சரஸ்வதி, அபிநயசரஸ்வதி அசையாத சரஸ்வதின்னு. அந்த ட்ரேன்ட்தான் இந்தக் கதையிலும் வருது. அதுல கொஞ்சமா வந்தத இதுல ஒவ்வொரு எபிலயும் கொடுக்க ட்ரை செய்யறேன். ரைமிங்க யோசிக்கறதுக்குள்ள, ஷப்பான்னு ஆய்டுது. எங்க தலை டி.ஆர் எப்டித்தான் இப்டில்லாம் பேசறாரோன்னு ஆச்சரியங்கள் வருது!!! 😊) மைத்தி வந்து ஏறிய நொடி, கார் சீறிப் பாய்ந்தது.

வைதேகி சொல்லி இருந்த தகவல்களை வைத்து, நாற்பது நிமிடங்களில் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்தார்கள் அம்மாவும் மகனும். கதவைத் திறக்கும் முன்பே பெண்ணவளின் இருமல் ஒலி நாராசமாக காதில் வந்து விழுந்தது. இவர்கள் உள்ளே நுழைய, காச நோய் கண்டவள் போல நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமியபடியே நிமிர்ந்துப் பார்த்தாள் அமுதமொழி. இவர்கள் இருவரையும் கண்டவளின் கண்கள் மின்னியது.

அவசரமாக இவர்கள் அருகே போக, பட்டென எட்டி அருணகிரியின் கையைப் பிடித்துக் கொண்டவள்,

“கிரி!!!”

இருமல்…..

“தண்ணி”

இருமல்….

கையை இறுக்கப் பிடித்துக் கொண்டால், அவன் எப்படி தண்ணீரை எடுத்துக் கொடுப்பான்! மைத்தி மேசையில் இருந்த கிளாசில், ஜக்கில் இருந்த தண்ணீரை ஊற்றி மகனை நகர்த்தி விட்டு புகட்டி விட்டார்.

தண்ணீர் குடித்ததும் கொஞ்சம் ஆசுவாசமானவள், அருகில் இருந்த புதிய முகக் கவசத்தை எடுத்து மைத்தியிடம் நீட்டினாள்.

“போடுங்க”

இருமல்…

“ஆண்ட்டி”

இருமல்…

“வைரஸ்”

இருமல்…

“ஒட்டிக்கும்!” என்றாள்.

“அப்போ எனக்கு ஒட்டிக்கிட்டா பரவாயில்லையா?” என கேட்டப்படியே அதை வாங்கி மைத்திக்குப் போட்டு விட்டான் அருண்.

அவனுக்கும் இன்னொன்றை இவள் எடுக்க,

“விடு,விடு! வைரஸ்லாம் இந்த வைரம் பாஞ்ச கட்டைய ஒன்னும் பண்ணாது!” என்றவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.

ஊட்டியில் பார்த்ததற்கு இப்பொழுது பாதியாய் ஆகியிருந்தாள். அவனின் பார்வையைக் கவனித்தவள்,

“சாப்பிட முடியல!”

இருமல்…

“இருமி, வாந்தி வந்திடுது”

இருமல்…

மெல்ல அவள் நெஞ்சையும் முதுகையும் நீவி விட்டார் மைத்தி. இவன் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, இன்னும் காய்ச்சல் கொதித்தது.

மைத்தியைத் தள்ளி நிறுத்தியவள்,

“வேணா ஆண்ட்டி! தள்ளிப் போங்க. ஒ……..”

இருமல்…

“அம்மா தாயே! கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா? கிட்ட வரக் கூடாது, உங்க ஆண்ட்டிக்கு ஒட்டிக்கும்! அவ்ளோதானே! நானே சொல்லிடறேன்! மீ! மொழி கிட்ட போகாத! அவ லொக்கு லொக்கு ஒனக்கும் ஒட்டிக்குமாம்! சொல்லிட்டேன்! போதுமா?”

பொதுமென தலையாட்டியவள், தலையணையில் சாய்ந்துப் படுத்துக் கொண்டாள்.

“மீ! எனக்கு ட்ரென்ஸ்லேட்டரா இருந்து தொண்டை காஞ்சுப் போச்சு! காண்டீன்ல போய் மேடத்துக்கு கஞ்சியும், எனக்கும் உங்களுக்கும் காபியும் வாங்கிட்டு வரீங்களா?” என கேட்டான் அருண்.

“நீயே போயேண்டா மை சன்!”

“கார் ஓட்டினது கால் வலிக்குது மீ”

அவனை முறைத்தவர், அவனது வாலட்டை அப்படியே புடுங்கிக் கொண்டு வெளியேறினார்.

அடுத்த நிமிடம் மீண்டும் இரும ஆரம்பித்தாள் அமுதமொழி. தண்ணீர் வேண்டுமா என இவன் கேட்க, வேண்டாமென தலையாட்டியவள் இன்னும் இன்னும் இருமினாள். கண் கொண்டு பார்க்க முடியாது, பட்டென அவளை இழுத்து தனது வயிற்றோடு கட்டிக் கொண்டவன், முதுகை மெல்ல நீவி விட்டான்.

நீவியபடியே அவள் இருமலுக்கு எசப்பாட்டாய் பாடல் வேறு பாட செய்தான் இந்தக் குசும்புக்காரன்.

“பாதை மாறி போகும் போது…”

இருமல்….

“ஊரும் வந்தே சேராது….”

இருமல்…

“தாளம் மாறி போடும் போது..ஆ!!!!!!!!!”

இருமல்….

“ராகம் தோ….” என அந்தப் படத்தில் மோகன் பாடுவதை இவள் இருமலோடு இணைத்துப் பாடியதில் மொழிக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது.

கண்ணில் நீர் வர சிரிக்கவும் முடியாமல், இருமவும் முடியாமல் போராடியவள், பட்பட்டென, குனிந்து முதுகை நீவிக் கொண்டிருந்தவனின் நெஞ்சில் அடித்தாள்.

“ஏய்! நெஞ்சுல மட்டும் அடிக்காதே! உள்ள இருக்கற என் ஆளுக்கு வலிக்கும்” என்றவனுக்கும் சிரிப்பு வந்தது.

அந்த நேரம் டாக்டர் ரவுண்ட்ஸ் வர, அவரிடம் எல்லாம் கேட்டுத் தெரிந்துக் கொண்டான் அருணகிரி. வைரல் காய்ச்சல், அதனோடு சேர்ந்த இருமல் எனவும்தான் இவனுக்கு நிம்மதியானது. எப்படியும் குணமாக ஒரு வாரமாவது ஆகுமென சொன்னவர், இவளுக்கு காய்ச்சல் அதிகரித்திருக்க, ஓர் ஊசியையும் போட்டு விட்டார். இவ்வளவு நேரம் எல்லாவற்றையும் நர்ஸ் உதவியுடனும், தனியாகவும் தாங்கியவள், ஆதரவுக்கு ஒருவன் இருக்க, ஊசிப் போடும் நேரம், அவனது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இவனும் அதைப் பார்க்காதபடி அவள் முகத்தைத் தன் புறம் திருப்பிக் கொண்டான்.  

டாக்டர் புன்னகையுடன்,

“இவங்க உங்க கேர்ள் ப்ரேண்டா?” என கேட்க,

ஒருவரும் கோரஸாக,

“வெறும் ப்ரேண்ட்தான்” என்றார்கள்.

“ஓஹோ!!!!” என இழுத்து சொன்ன அந்த ஆண் டாக்டர், தன் வேலையைப் பார்க்க கிளம்பும் முன் சில விஷயங்களைப் பேசினான் அருணகிரி.

அவர் சென்றதும் சட்டென தன் கையை விலக்கிக் கொண்ட அமுதமொழி, கட்டிலில் சரிந்துப் படுத்துக் கொண்டாள்.

“இப்போ எதுக்கு நீ கையை இழுத்துக்கிட்ட மொழி?”

“டாக்டர்!” என ஆரம்பித்தவள் இரும ஆரம்பிக்க,

“டாக்டர் கேர்ள்ப்ரேண்ட்னு சொன்னா நீ கேர்ள்ப்ரேண்ட் ஆகிருவியா? ரிலாக்ஸ் மொழி. கேர்ள்ப்ரெண்ட் பாய்ப்ரேண்ட்னா அடிக்கடி நான் இங்க இருக்கேன், நீ எங்க இருக்க பேபின்னு மேசேஜ் போட்டுக்கனும், கால் மணி நேரத்துக்கு ஒருக்க கால் பண்ணிப் பேசிக்கனும், பார்க்கறப்போலாம் கிரீட்டிங் கார்ட், கிப்டுன்னு குடுத்துக்கனும், அழகே பார்த்துப் பொறாமைப்படும் பேரழகி நீன்னு நான் புகழனும், ஆண்மையேப் பார்த்து ஆராதனை செய்யும் ஆணழகன் நீன்னு நீ புகழனும், ஐஸ்க்ரீம் கரைய கரைய உனக்கு நான் ஊட்டனும், காபி ஆற ஆற எனக்கு நீ புகட்டனும், மொட்டை வெயில் மண்டையைப் பொழக்க பீச் மணல்ல நீ கோலம் போடனும், அதே வெயில் என்னை கருவாடா காய வச்சாலும் உன் கோலத்தை நான் மெய் மறந்து ரசிக்கனும். இதுல எதையாச்சும் நாம ரெண்டு பேரும் செஞ்சிருக்கோமா?”

அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு முளைக்க, இல்லையென தலையாட்டினாள் அமுதமொழி.

“அப்போ நாம வெறும் ப்ரேண்ட்ஸ்தான்! சோ தள்ளிப் போகாதே, எனையும் தள்ளிப் போக சொல்லாதே!” எனப் பாடியவன் அவள் நன்றாக சாய்ந்துக் கொள்ள முதுகுக்கு தலையணையை இணைவாய் வைத்தான்.

மைத்தியும் திரும்ப வந்திருக்க, அவள் இரும இரும கொஞ்சமாய் கஞ்சியைப் புகட்டி விட்டார் அவர். பிறகு அம்மாவும் மகனும் காபி அருந்தியபடியே பேசிக் கொண்டிருக்க, அதையே தாலாட்டாகக் கொண்டு உறங்கி இருந்தாள் அமுதமொழி. நெஞ்சில் இருந்த சலியால், உறங்கும் போது அவள் மூச்சு விடுவதே மென் குறட்டை ஒலியாய் கேட்க, கவலையுடன் மகனைப் பார்த்தார் மைத்தி.

“என்னடா இப்படி புடுங்கிப் போட்ட செடி மாதிரி கிடக்கா!” என மெல்லியக் குரலில் அவர் கேட்க,

“ஒன்னும் இல்ல மீ! வைரல் ஃபீவர்தான், நல்லாயிடும்னு டாக்டர் சொன்னாரு!” என்றான் இவன்.

“என்னமோ போ! என்னை சுத்தி படபடன்னு பேசறவங்களாப் பார்த்துப் பழகி, இப்படி அமைதியான ஒருத்திக் கூடப் பழகனதும் பட்டுன்னு புடிச்சுப் போச்சு! நைட்டு மொழி கூட நான் தங்கிக்கவாடா மை சன்?”

“எதுக்கு? நீங்க இன்னும் பேஷண்ட் கேட்டகரியிலதான் இருக்கீங்க மைத்தி! இன்னொரு பேஷண்ட பார்த்துக்கறேன்னு நீங்களும் பேஷண்டா ஆகிட்டா, ஒரே நேரத்துல ரெண்டு பேஷண்ட சமாளிக்கறதுக்குள்ள நான் பேஷண்டா ஆகிடுவேன்!”

“அடேய்!!! எத்தனை பேஷண்ட் டா! உன்னை மாதிரி ஒரு வாயாடனப் புள்ளயா பெத்ததனாலத்தான், இந்த வாயில்லாப் பூச்சிய எனக்கு ரொம்பப் புடிக்குது போல!”

மைத்தி சொன்ன விதத்தில் புன்னகை வந்தது இவனுக்கு.

“நைட்டுக்குக் கூடவே இருந்துப் பார்த்துக்கற மாதிரி டாக்டர்ட்ட நர்ஸ் அரேஞ் பண்ணிருக்கேன் மீ! பகல்லயும் நர்ஸ் இருப்பாங்க. இருந்தாலும் நீங்களும் நானும் மாறி மாறி வந்துப் பார்த்துக்கலாம். போட்டோ ஷூட்லாம் கான்சல் பண்ண முடியாது! சோ மொழி நல்லாகி வர வரைக்கும் பார்ட் டைம்மா மேக்கப் ஆர்ட்டிஸ்ட் யாராச்சும் பார்க்கனும் மீ!”

“ஹ்ம்ம்ம்! பார்த்துடலாம்டா! அப்பா இல்லைனா கூட ஃபைனான்சியலா கஸ்டப்பட்டாலும் புள்ளைங்க தட்டுத் தடுமாறி வளந்துடறாங்க! அம்மா இல்லைனா எவ்ளோ கஸ்டம் பார்த்தியா!” என மொழியைப் பார்த்தபடியே பெருமூச்சு விட்டார் மைத்தி.

“மொழிக்கு அம்மா இல்லையா மீ?”

“ஆமாடா அருண். குடும்பத்த பத்தி கேட்டப்போ பாட்டி கூட இருக்கேன், அம்மா இறந்துட்டாங்கன்னு மட்டும்தான் சொன்னா! அதுக்கு மேல அமைதியாகிட்டா!”

உறங்கிக் கொண்டிருக்கும் மொழியைப் பார்த்தபடியே,

“எத்தனை வயசானாலும் அம்மாவும் அப்பாவும் கூட இருக்கனும் மீ! அணைச்சுக்க அம்மா இருந்தாலும், சாஞ்சிக்க அப்பா தோள் வேணும்னு ஏக்கமா இருக்கும் மீ” என்றவனின் குரல் கரகரத்திருந்தது.  

எழுந்து மகனருகே வந்த மைத்தி, அவனை நெஞ்சோடு கட்டிக் கொண்டார்.

“நானும் உங்கப்பாவ மிஸ் பண்ணறேன்டா மகனே”

“தெரியும் மீ!”

“எங்க இருந்தாலும் உங்கப்பா நாம சந்தோஷமா இருக்கமான்னு பார்த்துட்டே இருப்பாரு. நாம கலங்கினா அவர் ஆத்மாவும் கலங்கும்டா! திரும்பி நம்ம கிட்ட வரத் துடிக்கும். அப்படி ஒரு நிலைமைல அவர தள்ளலாமா மை சன்?”

“கூடாது மீ”

“அப்போ ஹேப்பியா இருக்கனும் சரியா?”

“சரி மீ! மை டாடி சந்தோஷமா மறுபிறவி எடுத்து, அந்தப் பிறவியிலயாச்சும் ஒரு அழகான பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும் மீ!”

“அப்போ நான் அழகில்லையாடா?” எனக் கேட்ட மைத்தி, தன் மகனை வாகாகப் பிடித்து,

“இனிமே இப்டி பேசுவ?” என கேட்டு கேட்டுக் கொட்டினார்.

“வலிக்குது மீ!” என மெல்லிய குரலில் இவன் அலற, கண் விழித்த மொழி இருவரையும் வாஞ்சையாகப் பார்த்திருந்தாள்.

ஐந்து நாட்களில் உடல் தேறி எழுந்தவள், ஆறாவது நாள் வேலைக்கு வந்திருந்தாள். அவுட்டோர் ஷூட்டிங் வந்ததில், அமுதமொழியையே விடாமல் சுற்றி வந்தான் ஒருவன். கிரியாலும் அவனை அடக்க முடியவில்லை, மொழியாலும் அவனை தடுக்க முடியவில்லை.

 

நட்பே பொறாமைப்படும் நட்பு நம் நட்பூ

யப்பா கிரி

சொறுகாதடா எங்க காதுல பூசணி பூ!!!!!!

 

(நீளுமா….)

 

(டைம் கிடைச்சது எழுதிட்டேன். எழுது வச்சி என்ன செய்ய போறேன்னு இன்னிக்கு போட்டுட்டேன். போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி..அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல்…)