En Ayul Neelumadi–EPI 7(1)

அத்தியாயம் 7

 

கார் சென்னையை நோக்கிப் பயணிக்க, நிஜமாகவே களைத்துக் கருத்திருந்தாள் அமுதமொழி. இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டவள் ஆழ்ந்த மூச்சுடன் கண்களை மூடிக் கொண்டாள்.

பாட்டு சத்தம் கூட இல்லாமல் அமைதியான பயணத்தில் திடீரென கேட்ட,

“பேபி!” எனும் அருணின் குரலில் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது இவளுக்கு.

சோம்பலாகக் கண்ணைத் திறந்தவள்,

“சும்மா இருங்க சார்!” எனப் புன்னகையுடன் சொன்னாள்.

“முடியாது போ! இனிமே நானும் உன்னை பேபின்னு தான் கூப்பிடுவேன்! அவன் கூப்பிட்டப்ப மட்டும் ஈன்னு இளிச்ச, நான் கூப்பிட்டா மட்டும் சும்மா இருன்ற பேபி! பேபி! பேபி! பேபி, அந்த வாட்டர் பாட்டிலை திறந்துக் குடு ப்ளிஸ் பேபி!” என விடாமல் பேபி ஜபம் செய்ய ஆரம்பித்தான் இவன்.

“அவனும் நீங்களும் ஒன்னா சார்!” என சொல்லியபடியே தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திறந்து கார் ஓட்டிக் கொண்டிருப்பவனிடம் கொடுத்தாள் அமுதமொழி.  

அருணகிரியும், அமுதமொழியும் மகாபலிபுரத்தில் ஒரு போட்டோஷூட் முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கணக்கு வழக்கு வேலை நிறைய இருப்பதால், மைத்தி இவர்களோடு வராமல் ஸ்டூடியோவிலேயே இருந்துக் கொண்டார். காலையில் இவர்களோடு வந்த அருணின் உதவியாளன், மறுநாள் விடுமுறை என்பதால் அங்கேயே நண்பனின் வீட்டில் தங்கிக் கொண்டதால் இவர்கள் இருவர் மட்டும் சென்னையை நோக்கிப் பயணப்பட்டார்கள்.

நீரை அருந்தி பாட்டிலை அவளிடம் நீட்டியவன்,

“நாங்க ரெண்டு பேரும் ஒன்னு இல்லதான். நான் ஆறடி அழகன் அவன் அரையடி அழுக்கன்! நான் ஆம்பள புலி, அவன் வாலில்லாத எலி, நான்…”

“நீங்க பல்லில்லாத சிங்கம், அவன் பளபளக்கும் தங்கம்!” என இவள் முடித்து வைக்க, சற்று நேரம் பேரமைதி அந்த காரினுள்ளே!

காரை மெதுவாக ஓரம் கட்டி நிறுத்திய அருண், நன்றாக திரும்பி அவளைப் பார்க்க, தானா இப்படி கிண்டலாக பேசியது என இவள் முழிக்க ஆரம்பித்தாள்.

“சொன்னது நீதானா

சொல் சொல் சொல் என் உயிரே!!!!!” எனப் பாடியபடி, வலது கையால் நெஞ்சைப் பிடித்து அழுத்தியபடி ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்தான் அருணகிரி.    

அவன் கிண்டலில் இவள் தலைக் குனிந்துக் கொள்ள,

“அம்ம்ம்முக்குமொழி, கொஞ்சம் திரும்பி என் முகத்தப் பாரு” என்றான் இவன்.

அமுதமொழி நிமிர்ந்து அவனைப் பார்க்க,

“இனி நீ மைத்தி கூட சேராதே!” என சீரியசாக சொன்னான் அருண்.

“ஏன் சார்?”

“மைத்திய சமாளிக்கவே நான் தலையால தண்ணிக் குடிக்கறேன்! அவங்க கூட சேர்ந்து நீயும் இப்படிலாம் பேச ஆரம்பிச்சா, உன்னை சமாளிக்க மண்டையால மோர் குடிக்க வேண்டி வருமோன்னு பயந்து வருது!”

“சரி பேசல!”

காரை மறுபடி செலுத்த ஆரம்பித்தவன்,

“கடவுளே, இந்தப் பூமி அழிய போற காலம் வந்திடுச்சா????? ஒரு ஆண் இத செய்யாதன்னு சொன்னத எந்த மறுப்பும் இல்லாம ஒரு பெண் சரின்னு ஒத்துக்கிட்டா உலகம் அழிவை நோக்கிப் போயிட்டு இருக்குன்னு பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்களே! எனக்கு வேற இன்னும் கல்யாணம் ஆகல, கஜகஜா நடக்கல, டேய் தகப்பான்னு கூப்புட புள்ளக் குட்டி கூட வரலியே! அதுக்குள்ள உலகம் அழிஞ்சா இந்தக் கன்னிப் பையன் ஆவி செத்தும் கூட சொர்க்கம் போகாதே!! ஏன் பேபி, ஆசை அடங்காத பொண்ணு செத்துப் போனா அவ மோகினியா வருவாளாமே! ஆம்பிள அப்படி செத்துப் போனா என்னவா வருவான்? மோகனன்? இப்படி நான் கேள்வி பட்டதே இல்லையே! ச்சே!!!!!இதுல கூட எங்க ஆண் இனத்துக்கு ஒரு ஒதுக்கீடு இல்ல! நாங்க வெள்ளை வேட்டி வெள்ளை பைஜமா போட்டுட்டு ஆவியா வந்தா உலகம் ஏத்துக்காதாமா? இத நான் வன்மையா கண்டிக்கறேன்!” என நீட்டி முழக்கினான் அருணகிரி.

“ஐயோ! என்னை விட்டுருங்க அருண் சார்!” எனச் சொல்லி கலகலவென நகைத்தாள் அமுதமொழி.

“அதெல்லாம் முடியாது! உன்னை மட்டும் என்னிக்கும் விடவே மாட்டேன்” என சிரிப்புடன் முடித்தான் இவன்.

அதுவரை இருந்த அழுத்தமான மௌனம் சிரிப்போடு களைந்துப் போனது இருவருக்கும்.

அன்றைய போட்டோஷூட் மகாபலிபுரத்தில் இருந்த ஒரு பீச் ஹவுஸில் நடந்தது. இரண்டு வயது நிறைவுற்றிருந்த தங்களது மகனோடு விடுமுறையைக் கழிப்பதற்காக அந்த இடத்தை வாடகைக்கு எடுத்திருந்த பையனின் பெற்றோர் படப்பிடிப்பையும் அங்கேயே வைத்துக் கொள்ளக் கேட்டிருந்தனர்.

விடியலிலேயே கிளம்பி, காலை எட்டு மணிக்கெல்லாம் அந்த வீட்டை அடைந்திருந்தார்கள் இவர்கள். குழந்தைகளை வைத்து புகைப்படம் எடுப்பது என்பது எலிக்கு ஹெலிகாப்டர் ஓட்டச் சொல்லிக் கொடுப்பதை விட கஸ்டமான வேலையாகும். அவர்கள் நமது வழிக்கு வர மாட்டார்கள். அழகான புகைப்படம் வேண்டுமென்றால் நாம்தான் அவர்கள் வழிக்குப் போக வேண்டும். எப்படியும் நேரம் இழுத்துவிடும் எனதான் காலையிலேயே வேலையை ஆரம்பிக்கலாம் என பெற்றவர்களிடம் சொல்லி இருந்தான் அருண்.

இவர்கள் வீட்டை அடைந்த நேரம், வாசலுக்கே வந்து வரவேற்றான் குழந்தையின் அப்பா சாம்சன்.

“வாங்க, வாங்க! உள்ள வாங்க!”

இன்முகத்துடன் அருண் தனது காமிராவையும், கிம்பாலையும்(gimbal-காமிராவை இதில் பொருத்திக் கொண்டால், பிடிமானத்திற்கு வசதியாக இருக்கும், அதோடு இடது, வலது, மேலே, கீழே என வீடியோ எடுக்கும் போது நமது கை ஆடினாலும், எடுக்கும் வீடியோ பாதிக்கப்படாமல் அழகாய் வரும்) தூக்கிக் கொண்டு வர, அவனது உதவியாளன் படப்பிடிப்புக்குத் தேவைப்படும் பந்து, உட்காரும் குட்டி நாற்காலி, பையனின் பெயர் எழுதிய அலங்கார அட்டை என மற்ற பொருட்களைத் தூக்கிக் கொண்டு வந்தான். அவர்கள் பின்னாலேயே அமுதமொழி தனது பெரிய பையைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.

இவளைப் பார்த்ததும் மலர்ந்து சிரித்த சாம்சன், ஆண்களுக்குக் கொடுக்காத கையை இவள் முன் நீட்டி,

“குட் மார்னிங் பியூட்டி! உள்ள வாங்க!” என அழைத்தான்.

இவள் கையைத் தயக்கத்துடன் நீட்ட, அழகாய் பற்றிக் கொண்டது ஒரு பெண் கரம்.

புன்னகையுடன் முன்னே நின்றிருந்த பெண்ணைப் பார்த்து இவளும் மெலிதாய் புன்னகைத்தாள்.

“நான்தான் நீங்க போட்டோ எடுக்கப் போற ஜேக்சனோட அம்மா ஏஞ்சலின். இவர் என்னோட பெட்டர் ஹால்ப் சாம்சன். என்னைத் தவிர எல்லா பொண்ணுங்களும் இவருக்கு சிஸ்டர் மாதிரி! பார்த்ததும் சகோதரப் பாசத்துல பாசத்தைப் பொழிஞ்சிடுவாரு! தப்பா எடுத்துக்காதீங்க!” என்றவள் கணவனை குறும்பாய் பார்க்க அவனோ,

“பேருதான் ஏஞ்சலின்! பண்ணறதெல்லாம் டெவில் வேலை! உன்னை வச்சிக்கிட்டு ஒரு பொண்ண சைட் அடிக்க முடியுதா!!!!” எனச் சொல்லி அவள் கன்னத்தில் செல்லமாய் தட்டிவிட்டு உள்ளேப் போனான்.

“உங்க பேர் என்னன்னு சொல்லலியே?”

“அமுதமொழி!”

“ரொம்ப அழகான பேரு ஆளப் போலவே! எங்க வீட்டு பெரிய மனுஷன் இன்னும் எழுந்திரிக்கல! எழுப்ப எழுப்ப புரண்டு சுகமா தூங்கிட்டு இருக்கான். நீங்க ப்ரேக்பஸ்ட் சாப்பிடுங்க! ஆர்டர் பண்ணி வச்சிருக்கேன்! அதுக்குள்ள அவன எழுப்பி ரெடி பண்ணப் பார்க்கறேன்” என கலகலவென பேசியபடியே எல்லோரையும் டைனிங் டேபிளில் அமர வைத்து விட்டு உள்ளேப் போனாள் ஏஞ்சலின்.

அமுதமொழி அருணின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

அவள் அருகே வந்து நின்ற சாம்சன்,

“வெஸ்டெர்ன் ப்ரேக்பஸ்ட் ப்ளேட் நீங்க எடுத்துக்குங்க அமுதமொழி. சன்னி சைட் ஏக் இருக்கு! யூ நீட் எனெர்ஜீ! என் மகன பிடிச்சு ஒரு இடத்துல வச்சி நீங்க அழகுப் படுத்தறதுக்குள்ள ஓஞ்சிப் போய்டுவீங்க! இட்லி தோசை இவங்க ரெண்டு பேரும் சாப்பிடட்டும். கமான் ஈட் அப்” என்றவனை ஏஞ்சலின் அழைக்க,

“வரேன் டார்லிங்” என்றபடியே உள்ளேப் போனான்.

பக்கத்தில் அமர்ந்திருப்பவளின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்த அருண்,

“ஏன் நெர்வெஸ் ஆகுற நீ? ரிலேக்ஸ் மொழி! சாம்சன் இஸ் ஹார்ம்லெஸ்! அக்கறையாப் பழகறவங்களுக்கும், அலைஞ்சான் கேஸ்களுக்கும் வித்தியாசம் இருக்கு. பொண்டாட்டி முன்னுக்கும், நாலு பேர் நடுவுலயும் அலைஞ்சான் கேசுங்க ரொம்ப நல்லவன் மாதிரி வேஷம் போடுவாங்க. அடுத்த பொண்ணுங்கள ஏறேடுத்தும் பார்க்க மாட்டாங்க. தனிமைல சந்தர்ப்பம் கிடைச்சா, கேப்ல கெடா வெட்டிருவானுங்க. அதனால நீ எப்பவும் கவனமா இருக்கறது நல்லதுதான். ஆனாலும் உன் நண்பன் நான் பக்கத்துல இருக்கறப்ப மத்தவங்க உன் கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணற அளவுக்கு விட்டுடுவேனா மொழி! கால்ம் டவுன்! இப்போ சாப்பிடு” எனச் சமாதானப்படுத்தினான்.

சரியென தலையாட்டியவள், சாப்பிட ஆரம்பித்தாள்.

அறை உள்ளே வீலேன அழுகை சத்தம் கேட்க,

“அடடே! அழுகையோட நாள ஆரம்பிக்கறானே! அழுது முடிச்சு சமாதானமாகி நாம போட்டோ எடுத்து, வீடியோ ஷூட் பண்ணி முடிக்கறதுக்குள்ள பொழுது பொசுக்குன்னு போயிடும் போல” என முனகினான் அருண்.

கதறும் மகனைத் தூக்கிக் கொண்டு பெற்றவர்கள் சாப்பிடும் அறைக்கு வந்தார்கள். அங்கே அமர்ந்திருந்த இரு ஆண்களைப் பார்த்த சின்னவன், இன்னும் ஓங்கி அழு ஆரம்பித்தான். அவன் பார்வை வட்டத்தில் அமுதமொழி விழ, அழுகை மெல்ல மெல்ல அடங்கியது. கண்கள் மின்ன, உதடு லேசாய் சிரிப்பைப் பூசிக் கொள்ள, இரு கைகளையும் அவளை நோக்கி நீட்டியவன்,

“பேபி!” என அழைத்தான்.

“பேம்பர்ஸ் சரியா போடாத பய புள்ளலாம் உன்னை பேபின்னு கூப்பிடுது பார்த்தியா! கலிகாலம்!” எனப் பக்கத்தில் அமர்ந்திருந்தவளிடம் முணுமுணுத்தான் அருண்.

“எங்க ஜேக்சனுக்கு அவங்க அப்பா மாதிரியே லேடிஸ் செண்டிமேண்ட் அதிகம். குழந்தைல இருந்து கிழவி வரை எல்லா பொண்ணுங்களயும் பேபின்னுதான் கூப்டுவான்!” எனச் சிரித்தாள் ஏஞ்சலின்.

மனைவி தன்னைப் பெருமையாகப் பேசியது போல டீ ஷார்ட் காலரைத் தூக்கிக் விட்டுக் கொண்டபடியே, அமுதமொழியைப் பார்த்து கண் சிமிட்டினான் சாம்சன். படக்கென தலையைக் குனிந்துக் கொண்டாள் இவள்.    

தாயின் பிடியில் இருந்து நெளிந்து, வளைந்து இறங்கி மெல்ல நடந்து வந்த ஜேக்சன் அமுதமொழியின் காலைக் கட்டிக் கொண்டான்.

“பேபி, தூக்கு!” எனத் தன் பச்சரி பல் வரிசையைக் காட்டி மாயக் கண்ணனாய் புன்னகைத்தான் குட்டிப்பையன்.

இவ்வளவு சின்னக் குழந்தைகளிடம் பழகியதில்லை அமுதமொழி. இவள் அலங்காரம் செய்யும் நாட்டியப் பள்ளி குழந்தைகள் கூட ஆறு வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். ஆனாலும் சின்னவனின் சிரிப்பு மனதைக் கொள்ளைக் கொள்ள, ஆசையாய் தூக்கி அணைத்துக் கொண்டாள். அவள் கழுத்தைக் கட்டிக் கொண்ட ஜேக்சன், தோளில் சுகமாய் சாய்ந்துக் கொண்டான்.

இவர்கள் இருவரையும் இமைக்காமல் பார்த்திருந்த அருணகிரி,

“லவ்லி!” என முணுமுணுத்தவாறே, பக்கத்தில் வைத்திருந்த கேமராவில் இந்தக் காட்சியை சட்டென படம் பிடித்துக் கொண்டான்.

“அமுதமொழி, இப் யூ டோண்ட் மைண்ட், அவன தூக்கிட்டு ரூமுக்கு வரீங்களா? அப்படியே கிளப்பி விட்டுருவோம்!” என அழைத்தாள் ஏஞ்சலின்.

பெண்கள் இருவரும் அறைக்குள் நுழைய, ஆண்கள் உள்ளே எடுக்கப் போகும் ஷூட்டுக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். மஞ்சள் சாயம் பூசப்பட்டிருந்த ஒரு பக்க சுவரில் ஜாக்சன் என அழகான நீல வர்ணத்தில் எழுதப் பட்டிருந்த பேனரை சாம்சனின் உதவியுடன் ஒட்டினான் அருணின் உதவியாளன். பல வண்ணக் கலவைக் கொண்ட பொசுபொசு கார்ப்பேட்டை தரையில் விரித்து விட்டார்கள். அதோடு நீலமும், வெள்ளையுமாக பலூன்களை ஊதி தரையை நிறைத்தார்கள். நிழல் விழுவதை தடுக்கவும், புகைப்படம் எடுக்கும் போது வெளிச்சம் நன்றாக விழுவதற்காகவும் சாப்ட்பாக்ஸ் என அழைக்கப்படும் சதுர வடிவில் குடை போல இருக்கும் கருவியைப் பொருத்த ஆரம்பித்தான் அருண்.

அரை மணி நேரத்தில் கலகல சிரிப்புடன் அமுதமொழியின் இடையில் ஒய்யாரமாய் அமர்ந்தபடி வந்தான் ஜாக்சன். இவள் முகத்திலும் புன்னகை வழிந்தது.

“மயக்கிட்டானே மாயாவி!” என முணுமுணுத்த அருணகிரி, அடுத்து என்ன செய்வது என பெற்றவர்களிடம் விளக்க ஆரம்பித்தான்.   

இவர்கள் பலகையில் அழகாய் செய்து எடுத்து வந்திருந்த எண் இரண்டை பிள்ளையின் கையில் பிடித்துக் கொள்ள வைத்தவர்கள், கார்ப்பேட் மேல் ஜாக்சனை நிற்க வைத்தார்கள். துருதுருவென ஒரு இடத்தில் நிற்காமல் அட்டகாசம் செய்தான் சின்னவன். பலூனைப் பிடிக்க ஓடினான், கார்ப்பெட்டில் விழுந்து புரண்டு எழுந்தான், “பேபி” என அழைத்துக் கொண்டே மொழியிடம் ஓடி வந்தான். அவனது நடவடிக்கை ஒவ்வொன்றையும் படக், படக்கென படமாகப் பிடித்துத் தள்ளினான் அருணகிரி. ஸ்டூடியோவுக்குப் போனதும் போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரில் நல்லதாய் வந்த ஷாட்களை தேர்ந்தெடுத்து, நீர்க்குமிழ்கள், மிருகங்கள், ரேஸ் கார்கள், சூப்பர் ஹீரோக்கள், கார்ட்டூன் கேரெக்டர்கள் என பெற்றவர்கள் விருப்பப்படும் விஷயங்களை இணைத்து புகைப்படத்தை வடிவமைத்து விடுவான்.      

உள்ளே வேலை முடிய இரண்டு மணி நேரமானது. அதன் பின் வெளியே புல் தரையில் விளையாட விட்டு சில புகைப்படங்கள் எடுத்தார்கள். சவர்காரத்தூளில் பெரிய பபல்ஸ் வருவது போல செய்து, அதன் பின்னால் சின்னவன் ஓடுவதை அழகாய் புகைப்படமாக்கினான் அருண். புகைப்படத்துக்காக சில முகபாவங்களை மகனுக்கு சொல்லிக் கொடுத்து நொந்துப் போனார்கள் சாம்சனும் ஏஞ்சலினும். கடைசியில் அந்த வேலை அமுதமொழியின் தலையில் விழுந்தது. இவள் செய்து காட்டுவது போல அச்சுப் பிசகாமல் செய்தான் சின்னவன்.

“ஓவரா போறடா நீ!” என சாம்சனே சலித்துக் கொள்ளும் அளவுக்கு சேட்டை செய்தான் சின்னவன்.

முக அலங்காரம் பார்ட் டைம் வேலையாகிப் போக ஃபுல் டைம் வேலையாக ஜாக்சனுக்கு பொம்மையாகிப் போனாள் இவள். உணவு உண்ண மட்டும் ஏஞ்சலினிடம் போனவன், மீத நேரமெல்லாம் இவள் பின்னாலேயே பேபி, பேபி என ஓடினான். மற்றவர்களால் அவனை அடக்கவே முடியவில்லை. ஒரு வழியாக போட்டோ ஷீட் முடித்தவர்கள், வீடியோ ஷூட்டுக்கு ஆயத்தமானார்கள்.

வீடியோவுக்கு குடும்பமாய் பங்கேற்கவிருக்க, அம்மா, அப்பா, மகன் என மூவருக்கும் மேக்கப் போட்டு விட்டாள் அமுதமொழி. திட்டமிட்டப்படி காட்சிகளை கடற்கரையில் எடுப்பதற்கு கிளம்பினார்கள் எல்லோரும். இவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் ப்ரைவெட் பீச் இருந்தது.

பாடல், அதற்கேற்ற நடனம், அசைவுகள் எல்லாம் கணவன் மனைவி இருவருமே முடிவு செய்திருந்தார்கள். கிம்பாலில் வீடியோ காமிராவை பொருத்திய அருண், உதவியாளனிடம் பாட்டை ஒலிக்க விட சொன்னான்.

“உங்கப்பன் மவனே வாடா

உங்கப்பன் மவனே வாடா

என் ரத்ததுக்கே அர்த்தம் தந்தவன்

நீதான்டா” என பாடல் ஒலிக்க,

பையனைத் தூக்கிக் கொண்டு மணலில் அழகாய் ஆடினார்கள் சாம்சனும் ஏஞ்சலினும்.

கடல் பிண்ணனியில் அழகாய் பாதிவாகியது வீடியோ. அடுத்து சின்னவன் ஆட வேண்டிய இடம் வர, அவனோ ஏஞ்சலின் சொல்லிக் கொடுத்ததைக் கண்டு கொள்ளாமல், அமுதமொழியைக் கைக் காட்டினான்.

“பேபி, டான்ஸ்”

“இவனோட!!!” எனப் புலம்பிய ஏஞ்சலின்,

“நான் உங்களுக்கு சொல்லிக் குடுக்கறத, அப்படியே இவனுக்கு சொல்லிக் குடுக்கறீங்களா அமுதமொழி!” என பாவ முகத்துடன் வந்து நின்றாள் மொழியிடம்.

“டான்ஸா? நானா?” என்றவளுக்கு முகமெல்லாம் சிவந்துப் போனது.