En Ayul Neelumadi–EPI 8

271657224_1007645346489466_4911458068763803475_n-1cf08567

அத்தியாயம் 8

“பொங்கலோ பொங்கல்!!!”

தம்பி தங்கையின் சந்தோஷக் கூச்சலில் சுண்ணாம்பாய் வெளுத்திருந்த முகத்தில் லேசாய் புன்னகை அரும்பியது அமுதமொழிக்கு.

பொங்கலுக்காக இரு வார விடுமுறை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார்கள் ரகுவரனின் குடும்பத்தார். மற்ற பண்டிகைகளை சிங்கப்பூரிலே கொண்டாடிக் கொண்டாலும், பொங்கலுக்கு கண்டிப்பாக தாயாரைப் பார்க்க வந்து விடுவார் ரகுவரன். தங்களது கிராமத்து வீட்டில் பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடி விட்டு, தாயையும் மகளையும் சென்னையில் விட்டு விட்டு இவர்கள் மட்டும் கூர்க், ஊட்டி, கொடைக்கானல், இப்படி நன்றாக சுற்றி விட்டு வருவார்கள். விடுமுறையின் இறுதி இரண்டு நாட்களை ரகுவரனின் மனைவியும் பிள்ளைகளும் கொண்டு வந்திருந்த சிங்கப்பூர் டாலர்களை சென்னைக் கடைகளில் வேட்டு வைக்க, இவர் அம்மாவுடன் ஆற அமர செல்லம் கொஞ்சிக் கொள்வார்.

இந்த வருடமும் தங்களது கிராமமான செங்கல்பட்டுக்கு குடும்பமாய் பெட்டியைக் கட்டி இருந்தார்கள். அமுதமொழிக்கு எப்பொழுதும் போல அங்கே போகவே இஸ்டமில்லை. அருணகிரி வேறு பொங்கலுக்கு எந்த அப்பாயிண்ட்மேண்டும் ஒத்துக் கொள்ளாததால், இவளுக்கு வேலை இருக்கிறது என சொல்லி தப்பிக்கவும் வழியில்லாமல் போனது.

தன்னைத் தேடி வீட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை முற்றிலுமாக இவள் விட்டு விடவில்லை. அருணின் வேலை முழுக்க அப்பாயிண்ட்மேண்ட் பேசிசில் நடப்பதால் இவளுக்கு எங்கே, எத்தனை மணிக்கு வேலை என எல்லாமே முன் கூட்டியே அறிவிக்கப் பட்டிருக்கும். அதில் கேப் இருக்கும் இடைவேளைகளில், அல்லது ஓய்வு நாட்களில் ஃபேசியல், வேக்சிங் என இந்த வேலைகளைப் பகுதி நேரமாக செய்துக் கொண்டுத்தான் இருந்தாள். பொங்கலுக்கு என நிறைய பெண்கள் ஃபேசியலுக்கு அப்பாயின்மேட்ண்ட் கேட்டிருக்க, பலரை ஏற்க முடியாவிட்டாலும் ஆரம்பக் காலத்தில் இருந்து இவளுக்கு ஆதரவுக் கொடுத்தவர்களை தட்டிக் கழிக்க முடியவில்லை இவளால். அதனாலேயே அந்த வாரம் முழுவதும் அருணிடம் வேலை, இரவில் ஃபேசியல் அப்பாயிண்ட்மேன்ட் என பெண்டு நிமிர்ந்திருந்தது பெண்ணுக்கு.

உடல் உழைப்பு ஒரு புறம் இருக்க, வைதேகி வேறு பொங்கலுக்கான ஷாப்பிங் என இவளை இன்னொரு பக்கம் வைத்து செய்தார். மகன் குடும்பம் வரும் போது, பொங்கலுக்கு பானையில் இருந்து கரும்பு வரை எல்லாமே ஆயத்தமாகி இருக்க வேண்டும். எதற்காகவும் அவர்களை அலைய விடக் கூடாது என முனைப்பாய் செயல்பட்டார் வைதேகி. அவர்கள் வந்து கொஞ்ச நேரம் இளைப்பாறிய உடனே புக் செய்திருந்த வேனில் செங்கல்பட்டுக்கு கிளம்பி விட வேண்டும் என பக்காவாய் திட்டம் தீட்டியிருந்தார்.

பூட்டிக் கிடக்கும் அவர்களின் செங்கல்பட்டு வீட்டை மாதத்திற்கு ஒரு முறை அமுதமொழிதான் போய் சுத்தப்படுத்தி வைத்து விட்டு வருவாள். இந்த முறை இருந்த வேலைப் பளுவில் வீட்டை சுத்தம் செய்யக் கூட செல்ல முடியவில்லை அவளால்.

வேனில் போய் எல்லோரும் வீட்டில் இறங்க, அமுதமொழி அவசர அவசரமாக கிரில் பூட்டைத் திறந்து, கதவையும் திறந்து விட்டாள். அடைத்துப் போட்டிருந்த  வீட்டில் மக்கிய வாடை அடித்தது. வீடும் தூசியாக இருந்தது. உள்ளே நுழைந்த சைந்தவி அச்சு அச்சென விடாமல் தும்ம ஆரம்பித்தாள்.

“வேலைக்குப் போயிட்டா, மத்த கடமைலாம் மறந்துப் போயிடுமா? சைந்துக்கு சைனஸ் இருக்குன்னு தெரியும்தானே! வீட்ட சுத்தம் பண்ணி வைக்கறதுக்கு என்ன?” என சன்னமாக முனக ஆரம்பித்த ரகுவரனின் மனைவி புவனா, அவசரமாக வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தார்.

வேக வேகமாக ஜன்னலை எல்லாம் திறந்து விட்டுக் கொண்டிருந்த பெரிய மகளை முறைத்தார் ரகுவரன். சைந்து மூக்கைப் பொத்திக் கொண்டு வெளி வாசலில் போய் அமர்ந்துக் கொள்ள, அவளோடு வைதேகியும் அமர்ந்துக் கொண்டார். சைந்துவின் தம்பி ஷ்யாமோ வீட்டைச் சுற்றிக் கிடந்த இலைதளைகளை கூட்டி சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

“என்னமோ உலகத்துலயே உனக்கு மட்டும்தான் மூக்கு இருக்கு! அந்த மூக்குல மட்டும்தான் சளி இருக்குன்ற மாதிரி ஓவர் பில்டப் குடுப்ப நீ! சோம்பேறி பஃபலோ!”

“டேய்!! போடா! அச்ச்ச்! ப்ளாக்..அச்ச்ச்! பஃபலோ” எனத் தும்மியபடியே தம்பியைத் திட்டினாள் சைந்தவி.

வெளக்கமாறும் கையுமாக புவனா வர,

“குடு புவி! நேத்தும் பேக்கிங்னு சரியா தூங்கல நீ! ப்ளைட்டுலயும் தூங்கல! மைக்ரேன் வந்துடப் போகுது! நீ வெளியே போய் உட்காரு! நான் சுத்தம் பண்ணுறேன்!” என ரகுவரன் வாங்கிக் கொண்டார்.

மகனின் கையில் வெளக்கமாறைப் பார்த்த தாயுள்ளம் வெகுண்டது!

“டீ அமுதா! என்னடி மரமாட்டம் நிக்கற! அப்பா கையில உள்ளத வாங்கி வீட்டப் பெருக்கித் துடை! வெளிய போய் சம்பாரிக்கறவன், வீட்டுலயும் கிடந்து சேவகம் பாக்கனும்னு என்ன தலையெழுத்து!” எனப் பொங்கி விட்டார்.

இத்தனைக்கும் இன்னொரு பக்கம் ஏற்கனவே பெருக்க ஆரம்பித்திருந்தாள் அமுதமொழி. பாட்டியின் கத்தலில், மெல்லிய பெருமூச்சுடன் ரகுவரனின் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டவள், மடமடவென வேலையில் இறங்கினாள்.

“இல்ல மாமி, இப்போல்லாம் முன்ன மாதிரி எனக்கு உடம்புக்கு முடியறது இல்ல! உங்க மகனுக்கு என் மேல எவ்வளவு அக்கறைன்னுத் தெரியாதா! உடனே உதவுறேன்னு வந்து நின்னுடுவாரு!” என மாமியாரிடம் சிரித்து சிரித்துப் பேசினார் புவனா.

குடும்பமே வெளியே இருக்க, வேக வேகமாக வீட்டைக் கூட்டித் துடைத்து, சமையலுக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தாள் அமுதமொழி. தோசைக்கு மாவு ஏற்கனவே வாங்கி வந்திருக்க, கழட்டி வைத்திருந்த கேஸ் சிலிண்டரைப் பொறுத்தி தோசைக் கல்லை அடுப்பில் வைத்தாள். இன்னொரு அடுப்பில் சென்னையில் இருந்து கொண்டு வந்திருந்த பொருட்களைக் கொண்டு சட்னிக்கு தாளித்தவள், ஏற்கனவே சமைத்து எடுத்து வந்திருந்த சாம்பாரையும் சூடு செய்ய ஆரம்பித்தாள்.

ஒவ்வொருவராக குளித்து வர, இரவு உணவு பேச்சும் சிரிப்புமாகப் போனது. அதன் பிறகே குளிக்கப் போனாள் அமுதமொழி. வைதேகியின் மாமனார் மாமியார் வாழ்ந்த வீடு அது. அவர்களுக்குப் பிறகு வைதேகிக்கும் அவர் கணவருக்கும் வந்தது. பழைய வீடாக இருந்தாலும் அம்மாவுக்கு அதன் மேல் உள்ள பாசத்தில், வீட்டை கொஞ்சம் மார்டனாக மாற்றி மறுசீரமைப்பு செய்திருந்தார் ரகுவரன். மருத்துவமனை வசதி, மற்றும் பாதுகாப்பு கருதி சென்னையில் அபார்ட்மெண்டில் குடி இருக்க சம்மதித்தாலும் இந்த வீட்டை வாடகைக்குக் கூட விடாமல் பாதுகாத்தார் வைதேகி.

நான்கு அறை கொண்ட அந்த வீட்டில் ஒரு அறையை ரகுவரன் தம்பதியினர் எடுத்துக் கொள்ள, மற்ற இரு அறைகளை அவரது செல்வங்கள் எடுத்துக் கொள்ள, எப்பொழுதுமே பாட்டியுடன் ஒரு அறையைப் பகிர்ந்துக் கொள்வாள் அமுதமொழி.

குளிக்கத் துணி எடுப்பதற்காக அறைக்கு வந்தவள், தொலைபேசியில் மேசேஜ் வந்த சத்தத்தில், தனது கைப்பையைத் தேடினாள். கட்டிலுக்கு கீழே கிடந்த பையில் இருந்த தொலைப்பேசியை எடுத்து மேசேஜை திறந்தாள்.

“வேர்?”

“ரிச்ட்?”

“ஈட்டன்?”

“அம்ம்ம்ம்ம்முக்குமொழி!!!!!!!!!!!” என வரிசையாக அரை மணி நேரத்துக்கு ஒன்றாக மேசேஜ் வந்திருந்தது அருணிடம் இருந்து.

நேரில் காதில் ரத்தம் வருமளவுக்கு பேசினாலும், மேசேஜில் என்றுமே அவன் சிக்கனம்தான்.

பொங்கல் விடுமுறை ஆரம்பிக்கும் முந்தைய தினம்,

“அப்புறம் மொழி, பொங்கலுக்கு என்ன விஷேசம்?” என அவன் விசாரிக்க,

“பொங்கலுக்கு பொங்கல்தான் விஷேசம்” என பதிலளித்திருந்தாள் இவள்.

கையில் வைத்திருந்த கேமராவின் லென்சை மூடும் மூடியை எடுத்து இவள் மீது விட்டடித்தவன்,

“மைத்தி கூட சேராதேன்னு சொன்னா கேக்கறியா!!!” எனச் சிரிப்பை அடக்கியபடி கேட்டான்.

மெலிதாய் புன்னகை சிந்தியவள், தன் அப்பா சிங்கப்பூரிலிருந்து வருவதையும் ஊருக்குப் போவதையும் பகிர்ந்திருந்தாள். அதற்குத்தான் ஊருக்கு வந்து விட்டாயா என கேட்டு வரிசையாக வந்திருந்தது அவனிடம் இருந்து மேசேஜ்கள். மற்ற நாட்களில் இரவில் மட்டும் குட் நை8(gd n8) என ஒரு மேசேஜ் வரும் அவனிடம் இருந்து.

மென்னகையுடன் அவனுக்கு பதில் அளித்தவள், குளிக்கப் போனாள். அலுப்புத் தீர சுடுநீரில் குளித்து விட்டு வந்தவள், ஏற்கனவே தனக்கு சுட்டு எடுத்து வைத்திருந்த தோசையை தனியாக அமர்ந்து சாப்பிடலானாள்.

அவள் அருகே வந்து அமர்ந்த ஷ்யாம்,

“க்கா!” என அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“மூஞ்சுல பிம்பில்ஸா வந்து தொலைக்குது! என்ன செய்யட்டும்? சைனீஸ் கேர்ள் ஒருத்திய சைட் விட்டுட்டு இருக்கேன்! நெருங்கிப் போய் ப்ரோபோஸ் பண்ணலாம்னா, என் முகரைய எனக்கேப் புடிக்கல! அவளுக்குப் பிடிக்குமான்னு நெர்வஸ்சா இருக்கு. எதாச்சும் டிப்ஸ் குடேன்!”

இப்பொழுதுதான் பதினான்கு வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் தம்பியை சிரிப்புடன் நோக்கினாள் அமுதமொழி. அந்தக் குடும்பத்தில் இவன் வேறு மாதிரி. மூட் இருந்தால் வந்து பேசுவான்! மூட் அவுட்டேன்றால் இவளிடம் மட்டுமல்ல மற்றவர்கள் எல்லோரிடமும் கூட முகம் கொடுத்துப் பேசமாட்டான்.

“அடிக்கடி கையை முகத்துல வைக்காதே ஷ்யாம்! சாக்லேட்லாம் ஓரளவுக்கு குறைச்சிக்கோ! கொழுப்பு உள்ள சாப்பாட்டையும் குறைச்சிக்கோ!” என சொன்னாள்.

“ப்பா! நம்ம உம்மு நாலு வார்த்தை சேர்ந்தாப்பல பேசிட்டாப்பா! இன்னிக்கு இடி, மழை, புயல்னு வச்சி அடிக்கப் போகுது” என ரகுவரனின் அருகே அமர்ந்திருந்த சைந்தவி கிண்டலடித்தப்படி பாடினாள்.

“தக்சிக்கு தகஜிம் தக்சிக்கு தகஜிம்

மேகம் கருக்குது

மின்னல் சிரிக்குது” எனக் கையாட்டியபடி பாடியவள், அமுதமொழியைப் பார்த்து பழிப்புக் காட்டவும் தவறவில்லை.

சின்ன வயதில் இருந்தே ரகுவரனுக்கு தான் மட்டுமே எல்லாம் எனக் காட்டிக் கொள்வதில் சைந்தவிக்கு ஒரு வெறித்தனமே உண்டு.

“மை அப்பா! நோட் யுவர்ஸ்!” எனச் சொல்லி,

“ஆமாத்தானப்பா?” எனக் கேட்டு ரகுவரன் ஆம் சொல்லும் வரை விடமாட்டாள்.

பெரியவளாகி கூட இன்னும் அந்த சின்னப்பிள்ளைத்தனம் மட்டும் சைந்துவை விட்டுப் போகவில்லை. தன் அப்பாவுக்கு தான் மட்டுமே பிரின்ஸசாக இருக்க வேண்டும் எனும் குணம் இன்னுமே தலை விரித்தாடியது. வயதில் மூத்தவள் என்ற மரியாதைக் கூட கொடுக்க மாட்டாள் அமுதமொழிக்கு. பெற்றவர்கள் செயல்களைப் பார்த்துதானே பிள்ளைகள் வளருவார்கள். தந்தை மொழியிடம் காட்டும் எரிச்சலையும், தாய் அவளிடம் காட்டும் கடுப்பையும், பாட்டி அவளிடம் காட்டும் அலட்சியத்தையும் பார்த்து வளர்ந்தவளுக்கு அமுதமொழி என்பவள் ஆயிரம் ரூபாயைப் போல செல்லாத நோட்டாகிப் போனாள். அமுதமொழி ஊட்டிக்கு செல்ல அனுமதி வாங்கிக் கொடுத்தது கூட லூசி அவார்ட் வாங்கிய அருணகிரியை ஓசியில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் நல்லெண்ணம்தான் காரணம்.   

“உங்கக்கா பேசுன பேச்சுல முத்து எதாச்சும் சிந்திக் கிடக்குதான்னு பாரு! அதை எடுத்து வித்தாச்சும் உங்கப்பன் அவளுக்கு ஒரு கல்யாணத்தை முடிப்பானான்னு பார்க்கலாம்” என நடுவில் புகுந்தார் வைதேகி.

‘ஆரம்பிச்சிட்டாங்கடா! அவங்கம்மா போடுற போட்டுல, இவர் என்னைப் பேயோட்டுவாரே! வந்ததும் வராததுமா இந்தப் பாட்டி பாம்பாட்டி வேலையைப் பார்க்கலனாத்தான் என்ன!” என மனதினுள்ளேயே புலம்பினாள் அமுதமொழி.

“நாங்க மட்டும் வரன் பார்க்காமலா இருக்கோம்! என் பக்க சொந்தத்துலயும், தெரிஞ்சவங்க கிட்டயும் சொல்லி வச்சிருக்கோம் மாமி! நேரம் காலம் கூடி வரனும்ல” என இடை வெட்டினார் புவனா.

‘வீட்டோட மாப்பிள்ளைன்னா கொட்டிக் குடுத்தாத்தான் வருவானுங்க இந்தக் காலத்துல! அதுக்கு எங்க போறதுன்னு யோசிக்க வேணா! கிழவிக்கு கட்டையில போகற வரைக்கும் பேத்தி, காலடியில நின்னு சேவகம் செய்யனுமாம்! எந்த விஷயத்துல மடங்கனாலும், ஆத்தான்னு வந்துட்டா மட்டும் இந்தாளும் நம்மள எதிர்த்து விடைச்சுக்கிட்டு நிக்கும். இவள எவனுக்காச்சும் கட்டி வச்சிட்டு, கிழவிய நர்சிங் ஹோம்ல சேர்த்துட்டு, அபார்ண்ட்மெண்டையும் இந்த வீட்டையும் வித்து சிங்கப்பூருல நான் என் குடும்பம்னு செட்டிலாகலாம்னு பார்த்தா, ஒரு எழவுக்கும் இந்தாள் ஒத்து வர மாட்டுது. இவளாச்சும் எவனையாச்சும் லச்சு கிவ்வு பண்ணித் தொலைக்கிறாளா! அதுக்கும் புண்ணியம் இல்ல. உதவாக்கரை’ என மனதில் எல்லோரையும் போட்டுத் தாளித்தார் புவனா.

“இங்கப்பாரு ராசா! அடுத்தப் பொங்கலுக்குள்ள அமுதாவுக்குக் கல்யாணத்த முடிக்கற வழியப் பாரு!” என்றவர்,

“டீ அமுதா! படுக்கையத் தட்டிப் போடு! நான் படுக்கனும்” என எழுந்துக் கொண்டார்.

தந்தையின் கூர்ப்பார்வைத் தன்னைத் துளைப்பதை உணர்ந்துக் கொண்ட அமுதமொழி அவசர அவசரமாக பாதி உணவில் எழுந்துக் கொண்டாள். பாட்டிக்கு பால் சூடு செய்துக் கொடுத்து, அவர் தூங்குவதற்கு படுக்கையைத் தட்டிப் போட்டு, அவரது பாடல்களை ஒலிக்க விட்டவள் விளக்கணைத்து தானும் படுத்துக் கொண்டாள். நடு இரவில் மெல்ல விழிப்புத் தட்டியது மொழிக்கு. கடுமையான உடல் உழைப்பினால், பாதி தோசை தனக்குப் பத்தாது என வயிறு சத்தமிட அலுப்புடன் எழுந்துக் கொண்டாள் அமுதமொழி. ப்ரேட்டாவது சாப்பிடலாம் என சமையல் அறைக்குப் போக, அங்கே இவளது தந்தை மேசையில் தலைக் கவிழ்ந்து படுத்திருக்க, புவனா அவரது தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பக்கத்தில் ஆவி பறக்க காபி கோப்பைகள் அமர்ந்திருந்தன.

“அவள பார்க்கறப்பலாம் என்னால தாங்க முடியல புவி!”

“உங்கம்மாட்ட நீங்க உண்மையை சொல்லிருக்கனும் டியர்”

“நோ! தாங்கமாட்டாங்கடி அவங்க!”

கணவன் மனைவி அந்தரங்க நேரத்தில் தான் இடைப் புகுந்தது போல உணர்ந்த அமுதமொழி, சத்தம் செய்யாமல் வந்த வழியே கிளம்பப் பார்க்க, மின்னாமல் முழங்காமல் இடி ஒன்று அவள் தலையில் வந்து விழுந்தது. அப்படியே ஆடிப் போனாள் பெண்.

மறுநாள் பொங்கல் வைத்து முடித்ததும், திடீரென வந்த அசைன்மெண்டுக்காக வேலைக்கு வர சொல்லி இருக்கிறார்கள் என பாட்டியிடம் சொல்லியவள் தனது பேக்கைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள். பாட்டி கோபப்பட்டதையோ, தகப்பன் எரிச்சல் காட்டியதையோ, சித்தி சிலிர்த்துக் கொண்டதையோ, தம்பி தங்கை அலட்சியப்படுத்தியதையோ எதையும் கண்டுக் கொள்ளவில்லை இவள்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் ஏறி அமர்ந்தவள், அருணுக்கு ஒரு மேஜேச் அனுப்பினாள்.

“ஐ நீட் யூ கிரி!” என எழுதியவள் கண்களில் கண்ணீர் வழிய பயணப்பட்டாள்.

இங்கே பெண்ணிவள் கண்ணீர்மொழியாகி இருக்க, அங்கே அந்த ‘ஐ நீட் யூ கிரி’ எனும் நான்கு வார்த்தைகளைக் கை நடுங்க வருடியபடி கண்கள் பணிக்க நின்றிருந்தான் கனிவுகிரி.

நட்பு பாதி

காதல் பாதி

கலந்து செய்த கலவையா!!!

வெளியே நட்பு உள்ளே காதல்

விளங்க முடியா கவிதையா??????

(நீளுமா….)

(வணக்கம் டியர்ஸ்!!! கதை எப்படி போகுது? எட்டாவது எபிலயே என்ன ஆப்புன்னு யாருக்காச்சும் புரியுதா? இவங்களுக்குள்ள காதல் இருக்கா இல்லையான்னு பலருக்கும் குழப்பம். அவ கஸ்டத்துல, பிரச்சனைல, கவலைல அவன எப்படி கூப்படறான்னு பார்த்தீங்கன்னாலே இவளோட சைடு புரிஞ்சுடும். கதையோட அட்டைப்பட கேப்ஷனும் இவனோட நடவடிக்கையையும் வச்சுப் பார்த்தாலே இவனோட சைட் புரிஞ்சிடும்..இன்னும் புரியாதவங்களுக்கு, போக போக புரிஞ்சிடும்…ஹஹஹ! ஓகே டியர்ஸ், போன எபிக்கு லைக் அண்ட் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த எபில சந்திக்கலாம். லவ் யூ ஆல்)