En Ayul Neelumadi–EPI 9

271657224_1007645346489466_4911458068763803475_n-8001c965

அத்தியாயம் 9

 

“தூக்கமா வருது கிரி”

“சரிம்மா! தோ இப்போ தூங்கிடலாம். முதல்ல இந்த பால குடிப்பியாம், வாய தொடப்பியாம், அப்புறம் கபால்னு குப்புறடிச்சுப் படுப்பியாம்”

“பால் வேணா!”

“பால்தானே குடிக்க சொல்றேன்! பால்டாயில குடிக்க சொன்ன மாதிரி அழிச்சாட்டியம் பண்ணாதே மொழி! ஆ காட்டு” என்றவன் அவள் வாயை பிடிவாதமாகத் திறக்க வைத்து பாலைப் புகட்டினான்.

அவன் தொல்லைத் தாங்காமல் குடித்து முடித்தவள்,

“இப்போ தூங்கவா?” எனப் பாவமாகக் கேட்டாள்.

முடி கலைந்து, மூக்கு சிவந்து, கண்கள் வீங்கி, ஓவென இருந்தவளைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை இவனால்.

“படுத்துக்கோ மொழி!” என்றவன், அவள் கட்டிலில் சரிந்ததும் போர்த்தி விட்டான்.

தலையணையில் தலைப் பட்ட நொடி அவள் உறங்கி இருக்க, இவன் ‘ஹெலோ கிட்டி’ இரவு விளக்கை எரிய விட்டு அறையின் பெரிய விளக்கை அணைத்தான். ஹெலோ கிட்டியின் மெல்லிய ஒளியின் உதவியால் நன்றாக அந்தக் குட்டி அறையை நோட்டமிட்டான் அருணகிரி. ஒற்றைக் கட்டில், துணி அலமாரி, சின்னதாய் ஸ்டடி டேபிள் என சுத்தமாக கச்சிதமாக இருந்தது அவ்வறை. சுவரில் மாட்டி இருந்த படத்தில் இவன் கவனம் பதிய, மெல்ல நடந்துப் போய் அதன் அருகே நின்றான்.

தூங்கிக் கொண்டிருந்தவளின் ஓல்டர் வெர்ஷன் சுவரில் படமாய் தொங்கிக் கொண்டிருந்தது. சாந்தமான முகத்துடன், கண்ணில் ஒரு வித சோகத்துடன் இருந்தார் அமுதமொழியின் அன்னை அஞ்சனா.

பெருமூச்சுடன் மீண்டும் கட்டிலின் புறம் போய் நின்றான் இவன். அழுகை இன்னும் மிச்சம் இருப்பது போல தூக்கத்தில் கூட மெல்லத் தேம்பினாள் துவண்டமொழி. அவள் சோகம் இவனை பலமாய்த் தாக்க, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன் செய்யப் போராடினான் துக்ககிரி.

மேசையின் முன்னே இருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியை அவள் பக்கம் இழுத்துப் போட்டு அமர்ந்தவன்,

“ஒன்னும் இல்லடா! எல்லாம் சரியாப் போய்டும், தூங்கு” எனக் அவள் கைப்பற்றித் தட்டிக் கொடுத்தான்.

ஆறாய் பெருகும் கண்ணீரோடு அவள் கேட்ட,

“என் பிறப்பு அழியா காதலோட சாட்சியா இல்ல அழிக்கப்பட்ட கற்போட அத்தாட்சியான்னு கூட தெரியலையே கிரி! வாழ்க்கையில எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கலாம்! பிறப்பே ஒரு கேள்விக்குறினா எப்படி தாங்கறது? என்னால தாங்க முடியலையே!!” எனக் கதறியவளின் ஓலம் இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

சில மணித் துளிகளுக்கு முன்பு அமுதமொழியிடம் இருந்து மேசேஜ் வந்திருந்த நேரம், அப்பொழுதுதான் வயிறு முட்ட பொங்கல் சாப்பிட்டு முடித்து எடிட்டிங் வேலையில் மூழ்கி இருந்தான். அவளது மேசேஜில் என்னவோ சரியில்லை எனப் புரிந்த நொடி, கையில்லாத பனியனுக்கு மேல் கையில் கிடைத்த சட்டை ஒன்றை மாட்டிக் கொண்டவன், ஜீன்சை அணிந்துக் கொண்டு விடுவிடுவென வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

“மவனே! லஞ்ச் சாப்பிட்டுட்டுப் போடா!” எனும் மைத்தியின் குரல் காற்றோடு கலந்துப் போனது.

அமுதமொழி மேசேஜில் சொல்லி இருந்தது போல கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு காரை விரட்டினான். இவன் போய் நின்ற சில பல நிமிடங்களில் அவளும் வந்து விட்டிருந்தாள். கையில் சின்ன லக்கேஜ் பேக்கோடு இவனருகே ஓடி வந்தவள், அருணின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“அழனும் கிரி”

அழுது சிவந்திருந்த முகமும், அவளது கையின் நடுக்கமும் என்னமோ பெரிய விஷயம் என கட்டியம் கூற,

“சரி, அழலாம்! கார்ல உட்கார்ந்து அழலாம்! இப்படி நடு ரோட்டுல அழுது வச்சி, பெண்ணிய காவலர்கள் கிட்ட எனக்கு தர்ம அடி வாங்கிக் குடுத்துடாதே தாயே! உடம்பு தாங்காது” எனப் பயந்தது போல இவன் நடிக்க, மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது அவள் இதழ்களில்.

கருத்த மழை மேகங்களின் நடுவே பளீரென வெட்டிய மின்னல் துளி போல அவ்வளவு அழகாக இருந்தது அந்தப் புன்னகை. பெரிதாக மூச்சை இழுத்து விட்ட அருணகிரி, அவளைக் கைப் பிடித்துக் கூட்டிப் போய் காரில் அமர்த்தினான். இவனும் அமர்ந்து காரை செலுத்த ஆரம்பித்த நொடி, அவளின் அழுகை ஆரம்பமாகியிருந்தது. இவனும் அழுது முடிக்கட்டும் என அமைதியாகவே காரை செலுத்தினான். துப்பட்டாவையும், புறங்கையையும் இவள் போட்டுப் படுத்தியப்பாடு கார் ஓட்டிக் கொண்டிருந்தனின் பார்வையில் நன்றாகவே விழுந்தது.

டிஷூ பெட்டியை அவளிடம் எடுத்துக் கொடுத்தவன்,

“ஓ!!!

உப்புக் கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது

என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது” என நாராசமாகப் பாடினான்.   

“உங்க கிட்ட நிம்மதியா அழுகவாச்சும் முடியுதா??? என்ன மேக் நீங்க?” எனக் கேட்டப்படியே அவன் நீட்டிய டிஷீ பாக்ஸாலேயே அவனை அடிக்க ஆரம்பித்தாள் இவள்.

“ஏய் மொழி! இரு, அடிக்காதே! கார் ஓட்டிட்டு இருக்கேன்ல” என ஒற்றைக் கையால் தடுத்தப்படியே சாலையில் கவனத்தை வைத்தான் அருணகிரி.

அவனை அடிப்பதை நிறுத்தியவளுக்கு மெலிதாக சிரிப்பும் வந்து தொலைத்தது.

“என்னாலே இனிமே சிரிக்கவே முடியாதுன்னு நெனைச்சேன்” என்றவளுக்குத் தொண்டை கரகரத்தது.

மெல்ல கை நீட்டி அவளது கரத்தைப் பிடித்துத் தட்டிக் கொடுத்தவன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காரை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தி இருந்தான்.

“எனக்குப் பசிக்கல”

“துக்கமா இருந்தாலும் சரி, வருத்தமா இருந்தாலும் சரி, கோபமா இருந்தாலும் சரி, கொலைவெறியில இருந்தாலும் சரி, வயிறு முட்ட சாப்பிட்றனும் மொழி. அப்போத்தான் நல்லபடி சிந்திக்க முடியும். நிறைஞ்ச வயிறுதான் பிரச்சனையை சால்வ் பண்ண வழி சொல்லும். புரியுதா? உன் முகத்தப் பார்த்தா நாலு நாள் சாப்பிடாதவ மாதிரி இருக்கு! ரெண்டே ரெண்டு இட்லி சாப்பிடு! அதுக்குப் பிறகு எவ்ளோ வேணா அழுக விடறேன். டீலா?” என இவன் கேட்க, சரியெனத் தலையாட்டினாள் இவள்.

ஹோட்டலின் உள்ளே அழைத்துப் போய் அமர்த்தினான் அமுதமொழியை. ஆர்டர் எடுக்க வந்தவனிடம்,

“தம்பி, லஞ்ச் டைம்ல இந்த ஹோட்டல்ல டிபன் ஐட்டம் கிடைக்குமா?” எனக் கேட்டான்.

“கிடை…”க்கும் என சொல்ல வந்தவன், அருண் கண்ணைக் காட்டி தலையை உருட்டிய விதத்தில்,

“கிடைக்காது சார்! ஒன்லி மீல்ஸ்தான்” என்றான்.

குட்டிக் கண்ணாடி வைத்து, முகத்தை ஈர டிஷூ வைத்துத் துடைத்துக் கொண்டிருந்தவள் இந்த நாடகத்தைக் கவனிக்கவில்லை.

“டிபன் இல்லையாம் மொழி! மினி மீல்ஸ் சொல்லவா?”

சரியென தலையாட்டினாள் இவள்.

“மினி மீல்ஸ் ஒன்னு! மினிமினி மீல்ஸ் ஒன்னு”

“மினிமினி மீல்ஸா?” எனக் குழப்பமாகக் கேட்டான் ஆர்டர் எடுத்தவன்.

“மினி மீல்ஸ் ப்ளஸ் மினி மீல்ஸ் ஈக்குவல் டூ மினிமினி மீல்ஸ்”

“சார்!!!!! ஒன்னும் புரியலையே!”

“அவருக்கு பெரிய மீல்ஸ் ஒன்னு வேணுமாம்!” எனச் சொல்லி அனுப்பி விட்டாள் அமுதமொழி.

தலையை பெரிதாக ஆட்டி விட்டுப் போனவன்,

“இவன் மாதிரி நாலு பேர் வந்தா கடை மெனுவே எனக்கு மறந்துடும்! பொங்கலும் அதுவுமா நம்மளயே பொங்க வைச்சிடுவானுங்க போல” என முனகியபடியே போனான்.

“ஏன் இப்படி?”

“அடுத்த தடவை வந்தா என்னை ஞாபகம் வச்சிருக்கனும்ல! அதுக்குத்தான்” என்றான் அருணகிரி.

“கண்டிப்பா ஞாபகம் வச்சிருந்து கெட்டுப் போன சொதிய கலந்து குடுக்கப் போறான்! நல்ல சொதி ப்ளஸ் கெட்டுப் போன சொதி ஈக்குவல் டூ வாந்தி பேதின்னு திரியப் போறீங்க” என்றவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

சிரிப்பவளையே வாஞ்சையுடன் பார்த்திருந்தான் அருணகிரி. சற்று நேரத்தில் உணவு வந்தது. அவள் சாப்பிட, சாப்பிட தன் தட்டில் இருந்து எடுத்து அவள் தட்டில் வைத்துக் கொண்டே இருந்தான் அருண். வயிற்றைப் பிடித்துக் கொண்டு போதுமென அவள் முனகவும்தான் விட்டான்.   

அதன் பிறகு காரில் இன்னொரு பயணம். பூங்கா ஒன்றில் காரை பார்க் செய்தவன், சீட்டைப் பின்னால் தள்ளி அவளைப் பார்ப்பது போல வசதியாக திரும்பி அமர்ந்துக் கொண்டான்.

“இப்போ சொல்லு மொழி, என்ன பிரச்சனை?”

கேட்டதுதான் தாமதம் கண்களில் இருந்து கண்ணீர் மழை பொல பொலவென இறங்க ஆரம்பித்தது அமுதமொழிக்கு.

“அவரு..அவரு..எனக்கு..அப்பா இல்லையாம்!!!!” எனத் திக்கித் திணறி சொன்னவள் பாய்ந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

காரில், அந்த சின்ன இடத்தில், இடக்கு மடக்கான பொசிஷனில் அவளைக் கட்டிக் கொண்டவன்,

“அழுகாம சொல்லுமா! இப்படி பிச்சிப் பிச்சி சொன்னா நான் என்னன்னு புரிஞ்சுக்கறது! மொழிம்மா! அழுகாதே ப்ளீஸ்” எனக் கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்.

“அழுதுட்டு சொல்லறேன்! அழ விடுடா டேய்!” எனத் தேம்பியபடியே சொன்னவள் அவன் டீஷர்ட்டை உப்பு நீரில் நன்றாய் கழுவிய பின்பே நகர்ந்து அமர்ந்தாள். (கண்ணீரால் கழுவினாள்னு சொல்ல வரேன்! பீச்லயா இருக்காங்க, உப்பு நீர் எங்க வந்துச்சுன்னுலாம் கேக்கக் கூடாதுல! அதுக்குத்தான் இந்த விளக்கம்)

புறங்கையால் கன்னத்தைத் துடைத்துக் கொண்டவள்,

“நேத்து மிட்நைட்ல ப்ரெட் சாப்பிடலாம்னு கிச்சன் பக்கம் போனேனா! அங்க அவரும் சித்தியும் பேசிட்டு இருந்தாங்க! திரும்பி வந்திடலாம்னு நெனைச்சேன்! அப்போத்தான் என் தலையில பெரிய இடி விழுந்துச்சு”

மொழியின் மனம் நேற்றைய நிகழ்வை அசைப் போட ஆரம்பித்தது.

“அவள பார்க்கறப்பலாம் என்னால தாங்க முடியல புவி!”

“உங்கம்மாட்ட நீங்க உண்மையை சொல்லிருக்கனும் டியர்”

“நோ! தாங்கமாட்டாங்கடி அவங்க!”

“இப்படியே எத்தனை நாளைக்கு மறைச்சு வைப்பீங்க? அவளுக்கு சீர் செனத்தி கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சு, அவ பெத்துப் போடற புள்ளைங்களுக்கு தாத்தா ஸ்தானத்துல உட்கார்ந்து தாலாட்டுப் பாடப் போறீங்களா?”

“என்னடி புவி! என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் இப்படி நீ பேசலாமா? ஆசை ஆசையா கட்டனவள கட்டிப் புடிக்காம தொட்டு அணைக்காம புள்ளப் பெத்தவன் நான் ஒருத்தனாத்தான் இருப்பேன்!”

“ஓஹோ! அவ மேல வச்ச ஆசை ஐயாவ இன்னும் விட்டுப் போகல போல! அதான் அவ பெத்தப் புள்ள மேல அப்படியே பாசம் பொங்கி வழியுது! டைவர்ஸ் பண்ணியும் உங்கம்மா கூட உட்கார வச்சி அவ பெத்து எடுத்தப் புள்ளைக்கு இனிஷியல் கொடுத்துன்னு உருகி உருகி எல்லாம் பண்ணினப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்! அம்மா தனியா இருக்கறதுக்கு அவ ஒரு துணையா இருந்துட்டுப் போறா! நாமத்தான் சிங்கப்பூர்ல செட்டில் ஆகிட்டோமேன்னு என்னை ப்ரேன் வாஷ் பண்ணிட்டீங்க. புருஷனோட முதல் தாரத்துக் கூட போட்டிப் பொறாமைன்னு இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன்! ஆனா கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ள பெத்தும், முதல் தாரத்து ஆவி கூடலாம் போராடனும்னு எனக்கு தலையில எழுதி வச்சிருக்கு!” என அழவே ஆரம்பித்து விட்டார் புவனா.

“என்னடி நீ! அம்மா ஆசையா தேர்ந்தெடுத்த பொண்ணு அவ. நானும் அஞ்சனாவோட அழகுல மயங்கி கல்யாணம் கட்டிக்கிட்டேன். கல்யாணத்தன்னிக்கு அவ கால் விரல பிடிச்சதும், அக்னிய சுத்த கையைப் பிடிச்சதும், தாலியக் கட்ட கழுத்த தொட்டதும் மட்டும்தான் எனக்கும் அவளுக்கும் இருந்த ஒட்டும் உறவும். எப்போ முதல் இரவுல படார்ன்னு என் காலுல விழுந்து, நான் மூனு வாரம் முழுகாம இருக்கேன்னாலோ, அப்பவே அவ மேல வச்சிருந்த ஆசை சனியன் அமுங்கிப் போச்சிடி! என்னையும் என் குடும்பத்தையும் இப்படி நம்ப வச்சிக் கழுத்தறுத்துட்டாங்களேன்னு அப்படி ஒரு கோபம்.”

இன்னும் அந்தக் கோபம் மனசுக்குள் இருப்பது போல பல்லை நறநறவென கடித்தார் ரகுவரன்.

“அந்த ஆள்மயக்கி நீலி கண்ணீர் விட்டு, கையெடுத்துக் கும்பிட்டு, ‘செத்துப் போய்டலாம்னுதான் நெனைச்சேன். ஆனா வயித்துல இருக்கற குழந்தையக் கொல்ல மனசு வரல. அதுக்கு இனிஷியல் மட்டும் குடுங்க! வேற எந்த உரிமையையும் உங்க கிட்ட நான் கேட்க மாட்டேன். என்னோட நகை, என் பேருல பெத்தவங்க போட்டிருக்கற டெப்பாசிட் எல்லாத்தையும் உங்களுக்கே தந்திடறேன்! பிள்ளப் பொறக்கற வரைக்கும் வேலைக்காரி மாதிரி ஒரு மூலையில இருந்துக்கறேன். அது பொறந்ததும் நீங்க விவாகரத்து வாங்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோங்க! என் வழிய நான் பார்த்துக்கறேன்’னு கதறவும் அட, இந்த டீல் நல்லாருக்கேன்னு ஒத்துக்கிட்டீங்க நீங்க” எனப் படபடத்தார் புவனா.

“உளறாதேடி! அப்போத்தான் அம்மாவும் ஒரு அட்டாக்கில இருந்து தேறி வந்த சமயம். அவங்க தோழியோட பொண்ணுன்னு ஆசையா அவசரமா இவளப் பார்த்து எனக்குப் பேசி முடிச்சாங்க! அவங்கட்ட போய் நீங்கப் பார்த்த பொண்ணு மூக்கும் முழியுமா மட்டுமில்ல வாயும் வயிறுமா வேற இருக்கான்னு சொல்லப் போய் பட்டுன்னு போய்ட்டாங்கன்னா, நான் எப்படிடி தாங்கிப்பேன்! அவ அப்பாம்மாட்ட நீங்கப் பெத்த பொண்ணோட லட்சணத்தப் பாருங்கன்னு குடுத்த வரதட்சணைய மூஞ்சில விட்டடிக்கலாம்னா, அத போட்டுத்தான் சிங்கப்பூருல அவ கூட வாழறதுக்கு அபார்ட்மேண்ட் வாங்க பாதி பணம் கட்டனேன்.”

“ஆமா ஆமா! அந்த அஞ்சனா கூட ஆசையா வாழ வாங்குன வீட்டுலத்தான் இந்த புவனாவ கொண்டு வைக்க வேண்டிய துரதிஷ்டசாலியா ஆகிட்டீங்க! பாவம்தான்”

“இதுக்குத்தான்டி கட்டனவகிட்ட எல்லா உண்மையையும் சொல்லக் கூடாது! கரேக்டான டைம்ல அத புருஷனுங்கள தாக்கற ஆயுதமா பயன்படுத்திக்குவீங்க!”

“சாகற வரைக்கும் இந்த துக்கிரி மொழிக்கு அப்பன் யாருன்னு அவ சொல்லவே இல்லைல?”

“அந்தப் பரதேசி யாரா இருந்தா நமக்கென்ன!” என இவர் கடுப்பில் பேச,

“அந்தப் பரதேசி இந்தப் பரதேசியா இல்லாம போயிட்டேனேன்னு துக்கம் தொண்டைய அடைக்குது போல ரகுவரன் சாருக்கு!” என்றார் புவனா.

“ச்சீ போடி!”

“ஆமா ஆமா, போறேன்! நான் போனதும் அஞ்சனாவுக்கு பதிலு இன்னொரு சஞ்சனாவ தேடிக்கோங்க”

“ஐயோ என்னை விட்ருடி புவி! நீ பேசற பேச்சுல மண்டை வலி பொளக்குதுடி”

“உள்ள வந்துப் படுங்க! புடிச்சு விடறேன்!” என புவனா சொல்ல, இருவரும் உள்ளே அறைக்குப் போனார்கள்.

கேட்டிருந்த இவளுக்கோ நெஞ்சே வெடித்தது.

“என் மேல ஏன் இவருக்கு பாசமே இல்லைன்னு அடிக்கடி நெனைச்சிப்பேன், விவாகரத்து செஞ்சிட்டா பெத்தப் புள்ள, புள்ள இல்லாம போயிடுமான்னு தோணும். விவரம் தெரிஞ்ச நாளுல இருந்து உள்ளுக்குள்ள இருந்த கோபத்துல அவர வாய் திறந்து அப்பான்னு கூப்பிடறத விட்டுட்டேன் கிரி. ஆனா இப்போ அவர் எனக்கு அப்பாவே இல்லைன்னு தெரிஞ்சப்போ உசுரே போய்ட்ட மாதிரியாகிடுச்சு.

‘அம்மா வந்து சொன்னால்தான்

அப்பாவின் பேர் தெரியுமடா

அவளும் சொல்லைவில்லையென்றால்

தப்பாகத்தான் போகுமடா’னு ஒரு பாட்டுல வரும். அது எவ்வளவு உண்மை! என் அப்பா யாரு கிரி? நான் தப்பான பிறப்பா? என் பிறப்பு அழியா காதலோட சாட்சியா இல்ல அழிக்கப்பட்ட கற்போட அத்தாட்சியான்னு கூட தெரியலையே கிரி! வாழ்க்கையில எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கலாம்! பிறப்பே ஒரு கேள்விக்குறினா எப்படி தாங்கறது? என்னால தாங்க முடியலையே!! எனக்கு மட்டும் ஏன் இப்படி!!!” எனக் கதறியவளை இப்பொழுது இவன் இழுத்து அணைத்துக் கொண்டான்.

லைப் இஸ் அ மிஸ்டரி எனச் சொல்லுவார்கள். இங்கே இவள் பிறப்பு ஒரு மிஸ்டரிதான். அப்பா இவர்தான் என சொல்ல அம்மா கல்லறையில் இருந்து எழுந்து வரப் போவதில்லை. ஆகவே வாழ்நாள் முழுக்க இவராய் இருக்கலாமோ, அவராய் இருக்கலாமோ என எண்ணித் துன்பப்படுவதுதான் இவளுக்கு விதிக்கப்பட்ட விதி.

“மொழிம்மா! ‘வொய் மீ’ன்னு கேக்கறத விட்டுட்டு ‘ட்ரை மீ’ன்னு கேட்டுப் பாரேன், எவ்வளவு அடிச்சாலும் இவ தாங்கறாடா! வேற ஆளப் பார்ப்போம்னு அபாவ் டர்ன் எடுத்து ஓடிடுவாரு கடவுள்! உனக்காச்சும் அம்மா யாருன்னு தெரிஞ்சிருக்கு! அவங்களோட அன்ப அனுபவிச்சு சில வருஷம் வாழ்ந்திருக்க! ஆமாத்தானே?”

“ஆமா! அம்மா என்னைக் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கிட்டாங்க. ரொம்ப அமைதியான கேரெக்டர் அவங்க. கண்ணே மணியேன்னு கொஞ்சனது இல்ல! ஆனா என் கண்ணசைவுல எனக்கு என்னத் தேவைன்னு புரிஞ்சு நடத்திக் குடுப்பாங்க! அதட்டனது இல்ல, திட்டினது இல்ல! ஒரே ஒரு தடவைத்தான் எனக்குத் தெரிஞ்சு கை நீட்டி இருக்காங்க கிரி! பாட்டிய எதிர்த்துப் பேசனேன்னு அடி வெளுத்துட்டாங்க! அவங்க நமக்கு தெய்வத்துக்கும் மேல! இனிமே பாட்டிய எதிர்த்துப் பேசக் கூடாது! அவங்க என்ன சொன்னாலும் கேக்கனும்னு நைட்டெல்லாம அழுதுட்டே திருப்பி திருப்பி சொன்னாங்க! விட்டா பாட்டி நடக்கற திசையெல்லாம் விழுந்துக் கும்பிடுவாங்க இந்த அம்மான்னு நெனைச்சிப்பேன். ஏன் கிரி, ஒரு சமயம் பாட்டிக்கு நான் அவங்க பேத்தி இல்லைன்னு தெரிஞ்சிருக்குமோ? இது தெரிஞ்சும் ஆதரிச்சதுனாலத்தான் அம்மா அவங்கள தெய்வமா பார்த்தாங்களோ?”

அம்மாவைப் பற்றி கண்ணீர் மல்க பேசிக் கொண்டிருந்தவள் இப்படி கேட்க, தாடையைத் தடவினான் அருணகிரி.

அஞ்சனாவின் தவிப்பில், துக்கத்தில், இயலாமையில் குளிர் காய்ந்திருப்பாரோ வைதேகி பாட்டி என இவனுக்கும்தான் தோன்றியது. இல்லாவிட்டால் தான் பார்த்துக் கட்டி வைத்தப் பெண்ணை மகன் விவாகரத்து செய்து வேறு மணம் முடிக்க ஒத்துக் கொண்டிருக்க மாட்டாரே!(இது கிரி அண்ட் மொழியோட பாய்ண்ட் ஆப் வியூ! பாட்டியோட பாய்ண்ட் ஆப் வியூ கண்டிப்பா வரும். அப்போ நாம யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு முடிவு எடுக்கலாம். சரியா டியர்ஸ்!!!)

“உங்கம்மா சைட் உறவுக்காரங்க யாரும் இல்லையா மொழி?”

“தாத்தா பாட்டி நான் பொறந்த ரெண்டு மாசத்துல ராமேஸ்வரத்துக்கு போன இடத்துல விபத்துக்குள்ளாகி இறந்துட்டாங்க! கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. மத்த சொந்தபந்தங்க கிட்ட இவங்க ரொம்ப ஒட்டிக்கல! அம்மாவுக்குத்தான் பாட்டிக்கு சேவகம் செய்யவே நேரம் சரியா இருந்ததே!”

“முடிஞ்சது முடிஞ்சதாகவே போகட்டும் மொழி! பாட்டிக்கு விஷயம் தெரியுமா, பாட்டிக்குத் தெரிஞ்சிருக்குன்னு மிஸ்டர் ரகுவரனுக்குத் தெரியுமான்னு நாம குழப்பிக்கத் தேவையில்ல. இதையெல்லாம் விட்டு ஒழிச்சிட்டு புதுசா பிறந்த குழந்தையப் போல வாழ ஆரம்பி”

“அப்பா யாருன்னு தெரியாம இருக்கறது என்னைக் கொன்னுப் போடுதே கிரி!”

“இனிமே நீ கடவுள் குழந்தை! அந்தக் கடவுள்தான் உன்னோட அப்பா! அனாதைப் பிள்ளைங்க எல்லாருக்கும் அவர்தான் அம்மையப்பன். அவரே இனி அம்மா பேரு மட்டுமே தெரிஞ்ச உனக்கும் அப்பாவா இருப்பாரு மொழி. உன் பிறப்பையோ, கடந்து வந்தப் பாதையையோ உன்னால மாத்த முடியாது! ஆனா இனி கடக்கப் போகிற பாதைய சீரா அமைச்சுக்க உன்னால ஆனத செய்ய முடியும். இதுக்கும் மேல அந்த வீட்டுல நீ இருக்க வேணாம்டா! என் கூட வந்திடு”

“மாட்டேன்!”

“ஏன்? ஏன், ஏன்?”

“வேலைக் குடுத்திருக்கீங்க, நல்ல சம்பளம் குடுக்கறீங்க! நண்பனா நான் சாஞ்சி அழ தோள் தரீங்க! அது போதும் சார்! என் வழிய இனி நான் பார்த்துப்பேன்”

“என்ன மொழி? மீண்டும் அவங்களுக்கு அடிமையா வாழப் போறியா?” எனக் கோபமாகக் கேட்டான் இவன்.

இல்லையெனத் தலையாட்டியவள்,

“வீமன் ஹாஸ்டலுக்குப் போயிடறேன் சார்! மூச்சு முட்டிப் போகிற இந்த சூழலுல இருந்து வெளியாகி தனியா வாழ்ந்துப் பார்க்கறேன்! எனக்கே எனக்காக வாழ்ந்துப் பார்க்கறேன்” எனத் திடமாக சொன்னவள், மீண்டும் உடைந்து அழுதாள்.

வருடி, தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்ததான் முடிந்தது இவனால். வாய் வார்த்தையால் என்ன சொல்லி இவளின் துன்பத்தைத் தீர்க்க முடியும்! வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தவளுக்கு பெட்டிக் கட்ட உதவத்தான் அவளது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான். அழுது அழுது களைத்துப் போயிருந்தவளை பால் குடிக்க வைத்துப் படுக்கவும் விட்டிருந்தான் அருணகிரி.

நன்றாக தூங்கி எழட்டும் என எண்ணியவன், முன்னே வந்து சோபாவில் இவனும் படுத்துக் கொண்டான். மைத்திக்கு அழைத்து இரவு வெளியேத் தங்க வேண்டியுள்ளது, நாளை வீட்டில் வந்து என்ன விஷயமென்று சொல்கிறேன் என முடித்துக் கொண்டான்.

மறுநாள் காலை பெட்டிப் படுக்கையுடன் இவர்கள் கிளம்பி நிற்க, வாசற்கதவு படக்கென திறந்தது.

அங்கே வைதேகியும் அவர் பின்னால் அவரது குடும்பமும் நின்றிருந்தது.

கலங்கிய முகத்துடன், பெட்டியும் கையுமாக நின்ற அமுதமொழியைப் பார்த்த வைதேகி,

“என்னை விட்டுப் போக முடிவு பண்ணிட்டியாடி அமுதா?” என கண்ணில் நீர் வழியக் கேட்டார்.

 

பாட்டி வச்சது பாசமா

இல்ல வெறும் வெளி வேஷமா?????? (படிச்ச வரைக்கும் நீங்க என்ன நினைக்கறீங்க? வைதேகி பாட்டிக்கு பாசம் இருக்குன்னு நெனைக்கறீங்களா? இல்ல ஒரு பாயசத்தப் போடனும் கிழவிக்குன்னு நெனைக்கறீங்களா?)

 

(நீளுமா….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் என் நன்றி. அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல் டியர்ஸ்..)