En Ayul Nellumadi–EPI 13

273046404_1018660852054582_3314744799217173998_n-d4f831bf

அத்தியாயம் 13

 

ஸ்கூட்டியை வேகமாய் கொண்டு வந்து நிறுத்திய அமுதமொழி, விடுவிடுவென அருணகிரியின் வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

“மைத்தி ஆண்ட்டி!” என இவள் அழைக்க,

“கிச்சனுக்குள்ள வா மொழிம்மா” என அவர் குரல் கொடுத்தார்.

ஓட்டமாய் ஓடி அவர் முன்னே நின்றவள் மூச்சு வாங்க,

“சாருக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள்.

“சாருக்கு சர்ருன்னு சறுக்கிடுச்சு! வேற ஒன்னும் இல்ல!”

“ம்ப்ச் ஆண்ட்டி! வெளையாடாம சொல்லுங்க!” எனப் படபடத்தாள் அமுதமொழி.

அவளது பதட்டத்தை அமைதியாக உள்வாங்கிக் கொண்ட மைத்ரேயி மொழியை ஆழ்ந்து நோக்கினார்.

அவரது பார்வையில் நெளிந்தவள்,

“இல்ல..சாருக்கு..வந்து விபத்துன்னு. அதான் ஆண்ட்டி படபடப்பா போச்சு” என்றாள் மெல்லிய குரலில்.

“உங்க சார் ரூமுலதான் ரெஸ்ட் எடுக்கறாரு! என்னன்னு நீயே போய் பாரு”

அதற்குள்,

“மீ!!!!!” என மாடியில் இருந்து கத்தும் சத்தம் கேட்டது.

“திரும்பவும் என்னடா?” என கடுப்பாய் பதில் கொடுத்தார் இவர்.

“பசிக்குது மீ!”

“இப்போதானடா அரை மணி நேரத்துக்கு முன்ன சாண்ட்வீச் கேட்டேனு, செஞ்சு குடுத்தேன்” என படியின் அருகே வந்து நின்று கத்தினார் மைத்தி.

“அரை………………மணி நேரத்துக்கு முன்னக் குடுத்தது, அரை வயித்துக்குக் கூட கட்டல! ப்ளிஸ் மீ! ஸ்நாக்ஸ் எதாச்சும் குடுங்க!” எனப் பாவமாய் வந்தது குரல்.

“இவனோட!!!!!!!!!!” என முணுமுணுத்தவர்,

“யம்மா மொழி! என்னைக் கொஞ்சம் காப்பாத்தி விடு! காலையில இருந்து அதக் குடு, இத எடுன்னு என்னை பாடாப்படுத்துறான்! நெக்ஸ்டு ரெஸ்டுன்னு நெலைமைக்கு வந்துடுச்சு என் பாடி கண்டிஷன். இன்னிக்குன்னு பார்த்து சமையல் செய்யற ஆளும் லீவு!” என அவள் தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டார்.

அவரது செய்கையில் இவளுக்குப் புன்னகை முளைக்க, தன் கரம் கொண்டு அவரது முதுகைத் தட்டிக் கொடுத்தவள்,  

“நீங்க ரெஸ்ட் எடுங்க ஆண்ட்டி! நான் எதாச்சும் செஞ்சுக் கொண்டு போய் குடுக்கறேன்!” என்றாள்.

ஓடிப் போய் கிரியைப் பார்த்து அவன் நலத்தை அறிந்துக் கொள்ள வேண்டும் என மனம் துடியாய் துடித்தாலும், இவளது பதட்டத்தைக் கவனித்து ஒரு மாதிரியாய் பார்த்த மைத்தியின் செய்கை, ஆவலை அடக்கிக் கொள்ள வைத்தது. மாடிக்கு ஏறத் துடித்த கால்களை கஸ்டப்பட்டு சமையலறைக்குத் திருப்பினாள் அமுதமொழி.

“அப்படியாமா! என்னைக் காக்க வந்த கன்னுக்குட்டிம்மா நீ! அவனுக்கு எது செஞ்சாலும், ஒரு பிடி கூட போட்டின்னா நானும் சாப்பிட்டுக்குவேன்!”

“அதுக்கென்ன ஆண்ட்டி, செஞ்சிடலாம்!” என்றவளோடு மைத்தியும் சமையலறைக்குள் புகுந்தார்.

என்ன பொருள் எங்கிருக்கிறது என அவர் காட்டிக் கொடுக்க, இருவரும் பத்து வகை மெனுவை அலசி ஆராய்ந்து கடைசியில் அரிசி புட்டு செய்வது என முடிவெடுத்தனர். இவள் புட்டை அவித்து எடுக்க, மைத்தி தேங்காய் துருவலை கவனித்தார். இருவரும் பேசிக் கொண்டே வேலையைப் பார்த்தார்கள். அருணுக்கு என்ன பதத்தில் காபி பிடிக்கும் என கேட்டு அதையும் கலந்து வைத்தாள் அமுதமொழி.

“இந்த தடிப்பயலோட காட்டுக் கத்தல மட்டுமே கேட்ட இந்த வீட்டுல, இன்னிக்கு உன்னோட மென்மையான பேச்சு சத்தத்தைக் கேட்க எவ்ளோ இனிமையா இருக்குத் தெரியுமா! அடிக்கடி வந்துட்டுப் போயேன் மொழி!” என்றவர் அவளது பதில் புன்னகையைப் பார்த்து,

“என்ன சிரிப்பு! ஓஹோ! வேலை இடத்துலயும் எங்க ரெண்டு பேர் மூஞ்ச பார்க்கற, ஓய்வு நேரத்துலயும் இங்க வந்து எங்கள சகிச்சுக்கனுமான்னு நெனைக்கறியா! விடு, விடு! நாங்க என்ன செல்லமா, வெல்லமா!” என சோகமாய் முடித்தார்.

“என்ன ஆண்ட்டி இப்படிலாம் பேசறீங்க! எனக்கும்தான் உங்க ரெண்டு பேர விட்டா வேற யார் இருக்கா! இனிமே அடிக்கடி வரேன்” எனவும்தான் முகத்தில் சிரிப்பைப் படர விட்டார் மைத்தி.

அன்று ஸ்டூடியோவில் அறுபதுகளில் அடி எடுத்து வைத்திருக்கும் கணவன் மனைவி இருவர், ஆங்கிலேய ஸ்டைலில் போட்டோ ஷூட் புக் செய்திருந்தார்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே தேர்ந்தெடுத்திருந்த கோட் சூட், நீள வெள்ளை கவுன் எல்லாவற்றையும் ஆயத்தமாக எடுத்து வைத்து விட்டு, அருணின் வருகைக்கு காத்திருந்தாள் இவள். தம்பதிகள் வந்திருக்க, இவனோ வந்து சேர்ந்திருக்கவில்லை.

அவனது உதவியாளனுக்கும் இவளுக்கும் போன் மட்டும் வந்தது மைத்தியிடமிருந்து. அருணுக்கு விபத்து எனவும், அன்றைய அப்பாயிண்ட்மேண்டை இவர்களே கவனித்துக் கொள்ளும்படியும் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டார் அவர். விபத்து என மைத்தி சர்வசாதாரணமாக சொல்லி விட, இங்கே இவளுக்கோ அதிர்ச்சியில் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அவசரமாக போனை எடுத்து அருணை அழைக்க, அவனோ அழைப்பை ஏற்கவேயில்லை. வேலையாவது மண்ணாவது என இவள் பேக்கைத் தூக்கிக் கொண்டு அவனைப் பார்க்க கிளம்ப முற்படுகையில், வாய்ஸ் மேசேஜ் ஒன்று வந்தது அவனிடமிருந்து.

அவசர அவசரமாக அதை ஒலிக்க விட்டுக் கேட்டாள் அமுதமொழி.

“நான் நல்லாத்தான் இருக்கேன் மொழி! போன் அட்டேண்ட் பண்ணா, நீ பாசத்துல பதறி கதறி அழுதிட்டினா, அத தாங்க எனக்குத் தெம்பில்லம்மா, தெம்பில்ல!” என சிவாஜி மாடுலேஷனில் பேசியவன்,

“அதனாலத்தான் இந்த வாய்ஸ் மேசேஜ்! உன்னை நம்பி லீவ் போட்ருக்கேன்! என் ஏஜி போட்டோகிராபி ஸ்டூடியோவ காக்கா தூக்கிட்டுப் போயிடாம பத்திரமாப் பார்த்துக்கோ! இன்னிக்கு வந்திருக்கற ஆண்ட்டி அண்ட் ஆங்கிள் ரெண்டு பேரும் ரொம்ப ஸ்வீட்டான ஜோடி! அவங்க கூட பழகிப் பார்த்தா நமக்கும் அவங்கள மாதிரி அந்நியோன்யமா வாழ்ந்துப் பார்க்கனும்னு ஆசையே வந்திடும். அவங்கள நல்லா கவனிச்சுக்கோ! தென்..ஹ்ம்ம்.. முடிஞ்சா ஈவ்னிங் வீட்டுப் பக்கம் வரியா மொழி? ஒரு நாள் உன்னைப் பார்க்கலனா கூட என்னமோ என் உலகம் சுத்தாம நின்னுடற மாதிரி ஃபீல் ஆகுது” என்றவனின் குரல் குழைந்தது.

பின் தொண்டையை செறுமிக் கொண்டவன்,

“அப்படி நான் சொல்லுவேன்னு நெனைச்சேனா……அது ரொம்பத் தப்பு! எடிட்டிங் ரூம்ல, என்னோட பென் ட்ரைவ் ஒன்னு இருக்கு. நெறைய இருக்குமே எதுன்னு யோசிக்கறியா? என் அழகான பல்லை அடிக்கடி நீ அசந்துப் போய் பார்த்துட்டு இருப்பல்ல, அந்த ஞாபகமா பல்லு டிசைன்ல ஒரு பென் ட்ரைவ் வாங்கி வச்சிருக்கேன். அந்தப் பல்ல எடுத்துட்டு வா! எடிட்டிங் செய்ய வேண்டிய ஃபைல்லாம் அதுலதான் இருக்கு. சீ யூ லேட்டர். அடியோஸ் அமீகோ(குட்பை ப்ரேண்ட்—ஸ்பானிஷ்)” என முடித்திருந்தான்.

அதற்கு எந்த வித பதிலும் போடவில்லை இவள்.   

அவனது சாதாரணமான குரலும் அதில் கொப்புளித்த குறும்பும் இவள் அதிர்ச்சியைப் போக்கி இருந்தது. வேலையை இவளை நம்பி அவன் ஒப்படைத்திருக்க கிளம்பும் எண்ணத்தை ஒத்தி வைத்தவள், அலங்கார வேலையில் முழு மூச்சாய் இறங்கினாள்.

புகைப்படம் எடுக்க வந்திருந்த பெண்மணிக்கு அழகாய் கவுனை உடுத்தி விட்டவள், அவரது நிறத்தை எடுத்துக் காட்டும்படி அருமையாய் அலங்காரமும் செய்து விட்டாள். முழுதாய் நரைத்திருந்த அவரது அடர்ந்த சிகையை கீழே மட்டும் பெரிய சுருளாக சுருட்டி முன்னே இரு பக்கமும் இழுத்து விட்டாள். கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு கண்கள் கலங்கி விட்டது.

“என்னாச்சு மேடம்? பிடிக்கலையா?” என இவள் கேட்க அதற்குள் அவரின் கணவர் அங்கே வந்து விட்டார்.

“ஏங்க! நான் அழகா இருக்கேன்ல!”

“தேவதை மாதிரி இருக்கடி!” என்றவருக்கு முகமெல்லாம் புன்னகை.

“நீங்களும் கோட் சூட்ல ராஜா மாதிரி ஜம்முன்னு இருக்கீங்க” என மனைவி புகழ, அவருக்கோ வெட்கத்தில் முகம் சிவந்துப் போனது.

“ரொம்ப நன்றிமா! இந்த வயசுக்கு இப்படி மூஞ்சில பெயிண்டெல்லாம் அடிச்சா எப்படி இருக்குமோனு தயக்கமா இருந்தது. இவருதான் பிடிச்சப் பிடியில நின்னாரு! நீ ரொம்ப அழகா எனக்கு அலங்காரம் பண்ணி விட்டுருக்கம்மா” எனச் சொல்லி அமுதமொழியின் கைகளைப் பிடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

“என வேலையைதான்மா நான் செஞ்சேன்” என்றவளுக்கு மனம் நெகிழ்ந்திருந்தது.

பதின்ம வயதிலேயே மணம் முடித்து, கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து, கணவனின்/மனைவியின் கூடப் பிறந்தவர்களை கரையேற்ற உதவி, மாமியார் மாமானாரை கவனித்து, பிள்ளைகள் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி, பேரன் பேத்தி எடுத்து, இப்பொழுது எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்க்க, உனக்கு நான் எனக்கு நீ என தங்களது வாழ்க்கையை இப்பொழுதுதான் ரசித்து வாழ ஆரம்பித்திருந்தனர் இருவரும். இதையெல்லாம் இடையிடையே டச்சப் செய்யும் போதும், ப்ரேக் விடும் போது இவளிடம் பகிர்ந்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

“இளமையில எங்களுக்கு தனிமை கிடைக்கறதுன்றது பெரிய வரம்மா. இப்போ அது சாபமா எங்க மேல திணிக்கப்பட்டுருக்கு. யாரும் நம்மள பார்க்க வரலையேன்னு குமைஞ்சு மூலையில முடங்கிடாம இருக்க, நாங்க ரெண்டு பேரும் எங்களோட குட்டி குட்டி ஆசைய நிறைவேத்திக்கலாம்னு லிஸ்டு போட்டு வச்சிருக்கோம். அதுல ஒன்னுதான் இப்படி போட்டா புடிக்கறது. இது என்னோட ஆசை” எனச் சொன்னவருக்கு அப்படி ஒரு வெட்கச் சிரிப்பு.

“போட்டோக்கார தம்பி வரலியாமா? போட்டோ புடிச்சுக் குடுக்க நெறைய கடை ஏறி இறங்குனேன். எல்லா எடத்துலயும் யானை விலை குதிரை விலை சொன்னாங்க! என்னை ஒரு மனுஷனா கூட மதிச்சு யாரும் பேசல. தம்பிதான் உக்கார வச்சுப் பேசி, ஜூசுலாம் குடுத்து போட்டா புடிக்க டிஸ்கவுண்டும் குடுத்துச்சு. அதோட என்னமோ குலுக்கலுல எங்களுக்கு ஊட்டிக்குப் போக பரிசு விழுந்துருக்காம்! தம்பி சொன்னுச்சு! ப்ளேனு டிக்கட்டு, ஹோட்டலு, சாப்பாடு எல்லாம் ஃபிரியாம்!” எனச் சந்தோசமாக சொன்னார் அந்த பெண்மணியின் கணவர்.

“போட்டோக்கார தம்பி புண்ணியத்துல சின்ன வயசுல போகாத தேனிலவ இந்த வயசுல போகப் போறோம் நாங்க!” என இவள் காதில் ரகசியமாக முணுமுணுத்தார் அந்தப் பெண்மணி.

அவர்கள் ஸ்டூடியோவில் அப்படி ஒரு குலுக்கல் எதுவும் நடைப்பெறவில்லை என இவளுக்குத் தெரியும். அருண்தான் விலை விசாரிக்க வந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்து குடும்ப வரலாறையே கறந்திருப்பான் எனப் புரிந்தது இவளுக்கு. கடமையை முடித்து மற்றவர்களுக்கு கடும் சுமையாய் தெரிந்தவர்களை மகிழ்விக்க முக்கால்வாசி விலை குறைத்து, தன் சொந்த செலவில் அவர்களுக்கு ட்ரிப்பும் ஏற்பாடு செய்திருக்கிறான் என உணர்ந்துக் கொண்டவளுக்கு, அவன் மீது இன்னும் மீகி பெருகியது காதல்.  

காதலா???????

காதாலாடி அருணகிரி மேல் எனக் கேட்டால் மனதிற்குள்ளேயே,

“ஆம்! யெஸ்! சி(இத்தாலி)! எவெட்(துர்கி)! டா(ரஷியா)! யா(மலாய்)” என விதவிதமாய் ஆமென்பாள் அருணின் அம்ம்ம்ம்ம்முக்குமொழி!

வெளியே சொல்லத்தான் வார்த்தைகள் சிக்கலாய் சிக்கியது, விக்கலாய் விக்கியது, முக்கலாய் முக்கியது! செவ்விதழால் மொழிய முடியாத காதலை, செயலால் மொழிய முயன்றாள் அன்புமொழி. அதை புரிந்துக் கொள்ளாமல் திரிந்தான் அறியாகிரி.

அன்றையப் பொழுதை நெட்டித் தள்ளியவள், வேலை முடிந்ததும் அவனைப் பார்க்க ஓடி வந்திருந்தாள் அவன் கேட்ட பல்(பென்)ட்ரைவோடு.

“வாங்க ஆண்ட்டி! சாருக்குப் போய் சாப்பாடு குடுத்துட்டு வரலாம்” என மைத்தியை அழைத்தாள் அமுதமொழி.

“உன் சார், மோருக்கு நீயே கொண்டு போய் கொடு! மேல ஏறி, ஏறி,  இறங்கி எனக்கு ரெண்டு கால் முட்டியும் வலியா வலிக்குது. நான் இப்படிக்கா உக்காந்து இந்தப் புட்ட, புட்டு புட்டு சாப்டுக்கிட்டு இருக்கேன். அப்படியே உனக்கும் காபி, டிபன் சேர்த்து எடுத்துக்கிட்டு போ!” என்ற மைத்தி சாப்பிடும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

இவள் உணவுத் தட்டைத் தூக்கிக் கொண்டு தட் தட்டென மாடிப் படிகளில் ஏறினாள். அவனது அறை கதவு திறந்திருக்க, கணவன் அறைக்குள் முதன் முதலாய் நுழையும் புதுமணப் பெண்ணைப் போல படபடப்புடன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் அமுதமொழி. இவளது கண்கள் அவசரமாய் அருணை ஸ்கேன் செய்தது. நெற்றியில் சின்னதாய் ப்ளாஸ்திரி இருக்க, இடது கையில் கட்டுப் போடப்பட்டு, கால் முட்டியில் சிராய்ப்புக்குக் மருந்து பூசிய தடயம் தெரிய, குட்டி ஷார்ட்ஸ் அணிந்து, வெற்று மார்புடன் தன் மடியில் வைத்திருந்த லாப்ட்டாப்பில் ஒற்றைக் கையால் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான் அருணகிரி.

சடாரென நிமிர்ந்துப் பார்த்தவன்,

“ஹேய்!!!!!!! திரும்பு, திரும்பு!” எனக் கத்த ஆரம்பித்தான்.

இவள் வீட்டிற்கு வந்ததும், மைத்தியுடன் இவ்வளவு நேரம் இருந்ததும் மேலிருந்தவனுக்கு கேட்டிருக்கவில்லை. சரியாகத்தான் பெயர் வைத்திருந்தான் அவளுக்கு, அம்ம்முக்குமொழியென்று.

 

“பார்த்தாச்சு பார்த்தாச்சு! குட்டித் தொப்பைய பார்த்தாச்சு!” எனச் சன்னச் சிரிப்புடன் சொன்னவள், அவன் கூச்சத்தை மதித்துத் திரும்பி நின்றுக் கொண்டாள்.

லப்டாப்பைத் தூக்கி படுக்கையில் அவசரமாய் வைத்த அருணகிரி, பக்கத்தில் இருந்த போர்வையை ஒற்றைக் கையால் எடுத்துத் தன் மேல் போர்த்திக் கொண்டான்.

“யாரப் பார்த்துத் தொப்பை வச்சிருக்கேன்னு சொன்ன! இந்த அருணகிரிக்கு இன்னொரு பேரு இருக்குத் தெரியுமா?”

“என்ன? தொந்திகிரியா?” எனக் கேட்டப்படியே கட்டிலின் பக்கத்தில் இருந்த சின்ன மேசையில் உணவுத் தட்டை வைத்தாள் மொழி.

“க்ரேட் இன்சல்ட்! என் பேரு அர்ணால்டுகிரிமா! கையைப் பாரு, மசில் எப்படி புடைச்சுக்கிட்டு இருக்குன்னு” எனச் சொன்னபடியே கையைத் தூக்கியவன், ஆவென வலியில் முனகினான்.

அவனை நெருங்கி கட்டிலில் அமர்ந்துக் கொண்டவள்,

“வலிக்குதா கிரி?” எனக் கவலையாகக் கேட்டாள்.

“ரொம்ப வலிக்குது மொழி! மைத்தி பயந்துடுவாங்கன்னு வலிக்காத மாதிரியே நடிச்சிட்டு இருக்கேன்” என்றான்.

“எப்படி அடிப்பட்டுச்சு?”

“எப்போவும் பக்கத்துல இருக்கற பார்க்குக்கு ஜாகிங் போவேன். இன்னிக்கும் போனேன்! ஓடிட்டே இருக்கேன், திடீர்னு பார்த்தா கீழ விழுந்து கிடக்கேன். கால என்ன தட்டி விட்டுச்சுன்னு தெரில! கைல அடி, காலுல லேசா காயம். தோ இங்க நெத்தில கல்லுக் குத்திருச்சு”

அவனை நெருங்கித் தாடையைப் பிடித்து முகத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தாள் மொழி.

நெற்றிக் காயத்தை மெல்ல வருடியவள்,

‘அடிச்சா நெத்தியடியா அடிப்பேன்

எடுத்தா தங்கப் புதையல் எடுப்பேன்னு’ கீழ விழுந்து நெத்தில காயமும், கையில புதையலும் எடுத்துட்டு வந்தீங்களா?” என மிக மெல்லியக் குரலில் கேட்டாள் இவள்.

அவளது ஹஸ்கி குரலும் கையின் வருடலும் என்னவோ செய்ய, அவளையேப் பார்த்தப்படி இருந்தான் அருணகிரி.

“மொழி”

“ஹ்ம்ம்ம்”

“எனக்கு….”

“உங்களுக்கு….”

“அது வந்து..”

“ஹ்ம்ம் சொல்லுங்க” என கண்கள் மின்ன, கன்னம் சிவக்க எதிர்ப்பார்ப்புடன் அவன் முகத்தைப் பார்த்தாள் அமுதமொழி.

“பசிக்குது”

“என்ன!!!!”

“எனக்குப் பசிக்குது மொழி!”

“ஓ!!!!!” என்றவள், எதிர்ப்பார்ப்பு சொத்தென போக சட்டென கட்டிலில் இருந்து எழுந்துக் கொண்டாள்.

பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன்,

“ஊட்டி விடறியா மொழி? கை வலிக்குது!” என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான்.

“ஊட்டி விடனுமாம் ஊட்டி! வர ஆத்திரத்துக்கு ஊட்டிக்குக் கூட்டிப் போய் உருட்டி விட்டுருவேன்! தத்தி, தத்தி!” என வாய்க்குள்ளேயே முனகியபடி தட்டைக் கையில் எடுத்தாள் இவள்.

சின்னக் குழந்தையைப் போல இவன் ஆவென வாயைத் திறக்க, இவளுக்கு கோபம் எங்கேயோ ஓடிப் போக அவ்விடத்தை தாய்மை தழுவிக் கொண்டது. அவளையும் சாப்பிட வைத்தவன், வலி நிவாரண மருந்தையும் அவள் கையாலேயே வாங்கிப் போட்டுக் கொண்டான். அதன் பிறகு இருவரும், சற்று நேரம் வேலை விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கண்கள் சொக்க,

“படுங்க கிரி” என்றவள், அவனுக்குப் போர்த்தியும் விட்டாள்.

தூங்கும் முன் மெல்லிய குரலில்,

“மொழி!” என அழைத்தான் அருணகிரி.

“ஹ்ம்ம்!”

“ஐ”

“ஹ்ம்ம்”

“ஐ”

“சொல்லுங்க”

“லைக் யூ!” எனப் புன்னகையுடன் சொன்னபடியேத் தூங்கிப் போனான் அவன்.

தூங்குபவனையே அன்பாய், காதலாய் பார்த்திருந்தவள், அவன் நெற்றியில் புரண்ட கேசத்தை ஒதுக்கி விட்டு, பட்டும் படாமல் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்து,

“ஐ லவ் யூ!” எனக் கடவுளுக்கே கேட்காத சத்தத்தில் சொன்னாள்.

 

பூட்டி வைத்தக் காதல் பூட்டக் கேசாகிடும்

சொல்லாத காதல் செல்லாக் காசாகிடும்!!!

விளையாட்டு கிரியின் நட்பான காதலும், பேசா மொழியின் காதலான நட்பும் இனி என்ன ஆகும்? பூட்டக் கேசாகுமா? பூத்துக் குலுங்குமா????????????

 

(நீளுமா….)

 

(வணக்கம் டியர்ஸ்..வாரத்துக்கு எப்படியாவது ரெண்டு எபி குடுத்துட்டுத்தான் வரேன். இந்த வாரத்துக்கான ரெண்டாவது எபி இது. மீண்டும் சந்திக்கலாம் டியர்ஸ். போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! லவ் யூ ஆல் 😊 )