En Jeevan niyadi 5

எது  நடந்ததோ அது நன்றாகவே நடந்தது…
எது நடக்கிறதோ… அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்குமோ… அதுவும் நன்றாகவே நடக்கும்.
-பகவத் கீதை.

அதற்குப் பின் மளமளவென்று காரியங்கள் நடந்தன. பாட்டியைப் பார்த்துக்கொள்ள ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டு உடனடியாக இருந்த விமானத்தில் மதுரைக்குப் புறப்பட்டு சென்றனர் நால்வரும்.

மதுரையை அடையும் போது மணி பனிரெண்டு. உச்சி வெயில் மண்டையைப் பிளக்க தன்னாலே ஒருவித எரிச்சல் வந்து சேர்ந்தது அர்ஜுன் முகத்தில். ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் டிராவல்ஸ் ஏஜென்சியில் புக் செய்திருந்த கார் ரெடியாக நின்றது.

அதில் ஏறியவர்கள் எட்டையபுரத்தை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் ஒரு நல்ல உணவகத்தில் மதிய உணவை முடித்தவர்கள் இரண்டு மணி நேரத்தில் ஊருக்குள் நுழைந்தனர்.

வரும் வழியில் சரஸ்வதி, மாதவன் சேதுபதி நட்பைப் பற்றியும், மாதவனின் பெரும்பங்கு பணத்தைக் கொண்டு சேதுபதி தொழில் தொடங்கியது பற்றியும் விரிவாக அர்ஜுனுக்கு கூறினார்.

ஒரே குடும்பமாக இரட்டை வீடுகளில் வாழ்ந்து வந்த சந்தோஷமான தருணங்களை அவனுக்கு நினைவு படுத்த முயன்றார். மருதமுத்துவும் தன்னிடம் கோமதி கொடுத்திருந்த புகைப்படங்களைக் காட்ட, வாங்கிப் பார்த்தவனுக்கு தனது தந்தையைத் தவிர ஒருவரையும் தெரியவில்லை.

மணிவாசகத்தின் சூழ்ச்சிகளை பற்றி மட்டும் எதுவும் அவனிடம் சொல்லவில்லை. அவன் நம்புவது கடினம். ஆகையால் மாதவன் இறப்பில் மனம் வெறுத்து கோமதி ஊரைவிட்டுச் சென்றதாக அவனிடம் கூறினார் சரஸ்வதி.

வசதியாக வாழ்ந்திருக்க வேண்டியவர்கள் எங்கு கஷ்டப்படுகிறார்களோ என்கிற தவிப்பிலே பாட்டி அவர்களை இருபது வருடங்களாகத் தேடினார் என்றும் கூறினார்.

சரஸ்வதி கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டவன், மாதவனின் வாரிசுக்குச் சேர வேண்டிய அனைத்தையும் முறையாக செய்ய வேண்டிய கடமை சேதுபதியின் மகனாகிய தனக்கு இருப்பதை நன்கு புரிந்து கொண்டான்.

மருதமுத்துவின் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்த காரை, வழியில் இருந்த வீடுகளில் திண்ணையில் அமர்ந்திருந்த அனைவருமே அதிசயமாகப் பார்த்தபடி இருந்தனர்.

மருதமுத்துவின் வீட்டுக்கு கார் வருவது அவர்களது ஊரைப் பொருத்தவரை அதிசயம்தான்.
அவ்வூரில் கார் வைத்திருப்பது ராஜேந்திரன் ஒருவன்தான். அவனுமே எங்காவது வெளியூருக்குச் செல்லவே அதைப் பயன்படுத்துவது.

உள்ளூருக்குள் மொபட்தான்.
மருதமுத்துவின் வீட்டு வாசலில் கார் நின்றதும் இறங்கிய மருதமுத்துவையும் அவருக்குப் பிறகு இறங்கிய ஊருக்குப் புதியவர்களான இரண்டு வாலிபர்களையும் ஒரு பெண்மணியையும் ஆச்சர்யமாகப் பார்த்தபடி சிலர் கூடிவிட்டனர்.

அதிலும் சினிமா கதாநாயகன் போல இருந்த அர்ஜுனை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தது அவனுக்குள் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
“இங்க என்ன ஷோவா காட்றோம். எதுக்குடா இத்தனை பேர் கூடியிருக்காங்க?” என்று மெதுவான குரலில் ஸ்ரீராமிடம் முனுமுனுத்தவன்,

“பெரியம்மா… சீக்கிரம் போய் அந்த பொண்ணைக் கூட்டிட்டு வாங்க கிளம்பலாம்.” என்றான்.

“தம்பி… வராதவங்கலாம் வந்திருக்கீங்க. உள்ள வாங்க தம்பி. சில்லுனு மோர் குடிச்சிட்டு அப்புறம் போகலாம்.” மருதமுத்து அழைக்க, காரின் சப்தம் கேட்டு வெளியே வந்த மங்களமும் அனைவரையும் வரவேற்றார்.

வயதில் பெரியவர்கள் அழைக்கும் போது மறுப்பது அவ்வளவு நாகரீகம் இல்லை என்பதால் உள்ளே நுழைந்தான் அர்ஜுன். அது மட்டுமல்லாமல் ஏதோ பொருட்காட்சியை பார்ப்பது போல அவனை அனைவரும் வேடிக்கை பார்ப்பது வேறு அசௌகரியமாக இருந்தது அவனுக்கு. அதனாலேயே வீட்டினுள் நுழைந்தான்.

மிகச் சிறிய அளவிலான அந்த ஓட்டு வீட்டினுள் அவர்கள் அமர நாற்காலிகளை எடுத்துப் போட்டுவிட்டு சுபத்ராவை அழைத்து வர மங்களத்தின் மகள்கள் இருவரும் சென்றனர். வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டியதில் அவர்களது செல்வநிலை தெளிவாகத் தெரிந்தது.

சுபத்ராவை அழைத்துப் போக வருகிறார்கள் என்ற தகவலை மருதமுத்து அலைபேசியின் மூலம் தெரிவித்து இருந்தார். ஆகவே ஓரளவு கிளம்பிதான் இருந்தாள் சுபத்ரா. தாயின் இழப்பு தந்த வாட்டமும் நினைவு தெரிந்ததிலிருந்து வாழ்ந்த ஊரைவிட்டுச் செல்லப்போகும் வாட்டமும் நிறைந்து இருந்தது அவள் முகத்தில்.

மருதமுத்துவின் வீட்டிற்குள் வந்ததும் அனைவரையும் பார்த்து வணக்கம் வைத்தவளை எழுந்து சென்று கட்டிக் கொண்டார் சரஸ்வதி.

“குட்டிம்மா… நல்லாயிருக்கியாடா? அப்படியே உங்க அம்மா ஜாடையில இருக்கடா. உங்க அம்மாவைத்தான் பார்க்கக் கொடுத்து வைக்கலை எனக்கு.” என்று கண்ணீர் சிந்தியவரைப் பார்த்ததும் வற்றியிருந்த கண்ணீர் மீண்டும் புதிதாக சுரந்தது சுபத்ராவுக்கு.

“அழாத… குட்டிம்மா… நாங்கல்லாம் இருக்கோம்டா. நான் அத்தை முறையாகனும் உனக்கு. பாட்டி உன்னைப் பார்க்கத் தவிச்சிகிட்டு இருக்காங்க. நாம கிளம்பலாம்டா.”
கண்களைத் துடைத்தபடி சரி என்று மெதுவாக தலையசைத்தவளை அளவிட்டுக் கொண்டிருந்தது அர்ஜுனின் விழிகள்.

லேசாக முகம் கழுவி பொட்டிட்டு, நேர் உச்சியெடுத்து பின்னல் பின்னியிருந்தாள். பின்னல் இடையைத்தாண்டி நீண்டிருந்தது. எளிமையான காட்டன் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். காதிலும் கழுத்திலும் பிளாஸ்டிக் வெள்ளை மணிகள். கைகளில் கண்ணாடி வளையல்கள்.

மாநிறத்தில் மாசுமறுவற்ற முகம். உருவி விட்டது போல உடலமைப்பு. லேசாக துருத்தியிருந்த கழுத்தெலும்புகள், மிக மிக எளிமையான கிராமத்துப் பெண். தங்களுடனே வளர்ந்திருந்தால் நன்கு படித்து மாடர்னாக வளர்ந்திருப்பாள் என்று எண்ணிக் கொண்டான்.

சிறு பெண்ணாகத் தெரிகிறாள். படிக்க விருப்பப்பட்டால் மேற்கொண்டு படிக்கக்கூடச் சொல்லலாம் என்றும் எண்ணிக் கொண்டான். பாட்டியின் இறுதி நேரத்தில் அவரது மனம் அமைதி கொள்ளும்படி அவர் என்ன சொல்கிறாரோ அவ்வளவையும் இந்தப் பெண்ணுக்கு முன்நின்று தானே நடத்தி வைக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டான்.

“கிளம்பலாமா அர்ஜுன்…” என்ற சரஸ்வதியின் குரலில் பார்வையை விலக்கியவன், “கிளம்பலாம் பெரியம்மா.” என்றான்.
அந்த நேரத்தில் சுபத்ரா ஊரைவிட்டுச் செல்லப்போகும் செய்தி ஊருக்குள் பரவி ராஜேந்திரன் காதுகளை அடைந்தது.

கொதித்துப் போன ராஜேந்திரன் மருதமுத்து வீட்டு வாசலுக்கு வந்து நின்றான்.
அந்தப் பெரிய காரைப் பார்த்ததும்அவனுக்கு குழப்பமாயிருந்தது. காரில் வந்து அவளைக் கூட்டிப் போகும் அளவுக்கு அவளுக்கு யார் சொந்தம் என்று யோசித்தபடி,

“யோவ் யாருய்யா வீட்டுக்குள்ள? வெளிய வாங்கய்யா. கைய நீட்டி காச வாங்கிட்டு என்னை ஏமாத்திட்டு ஊரை விட்டு ஓடப் பார்க்குறாளோ.”
ராஜேந்திரனின் கர்ஜனையில் சுபத்ராவின் உடல் தூக்கிவாறிப் போட்டு, முகமும் வெளிறிப் போனது. சுபத்ராவின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த சரஸ்வதி என்னவென்று கேட்க, மெதுவாக விபரத்தைக் கூறினார் மருதமுத்து.

“அவங்கம்மாவுக்கு வைத்தியம் பார்க்க அந்த ஆளுகிட்ட பணம் வாங்கியிருந்துதுங்க சுபத்ரா. அடைக்க முடியல. அதான் அந்த ஆளு வந்து சத்தம் போடுறான்.” என்று கூறிவிட்டு, வீட்டின் முன் கூச்சல் போடுபவனை என்ன செய்வது என்று புரியாமல் மருதமுத்து வெளியே வர, ஸ்ரீராம் கூடவே வந்தான்.

“இங்க பாரு ராஜேந்திரா. வந்திருக்கவங்க பெரிய ஆளுங்க. அந்தப் புள்ள பட்டணத்துக்குப் போயி ஏதாவது நல்ல வேலையில சேர்ந்து உன் பணத்தை உனக்குத் திருப்பிக் குடுக்கும்பா. அதுவரைக்கும் எந்தப் பிரச்சினையும் செய்யாதப்பா.”

“போய்யா… ஏதாவது சொல்லிடப் போறேன். உள்ளூருக்குள்ள இருக்கறப்பவே அவளைப் பிடிக்க முடியல. வெளியூருக்கு தப்பிக்க விட்டுட்டு பணம் வரும்னு வானத்தைப் பார்த்துட்டு என்னை உட்காரச் சொல்றியா?
பணத்தை எண்ணி வச்சிட்டு எங்கன்னாலும் போகச் சொல்லு அவளை. ஆமா யாருய்யா இவங்க திடீர்னு வந்த சொந்தங்க. இத்தனை நாள் இல்லாம இப்ப எங்கேயிருந்து வந்தாங்க?”

“ஹலோ மிஸ்டர். அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத கேள்வி. உனக்கு எவ்வளவு பணம் குடுக்கனும் அதை மட்டும் சொல்லு.” அழுத்தமான குரலில் பேசியபடி

வெளியே வந்த அர்ஜுனைப் பார்த்த ராஜேந்திரனும் வாயைப் பிளக்க, நொந்து போனான் அர்ஜுன்.

“என்னடா இது எல்லாவனும் இப்படிப் பார்க்குறானுங்க?” என்று ஸ்ரீராம் காதைக் கடிக்க, “நீ அவ்வளவு சூப்பர் ஃபிகரா இருக்க மச்சி.” என்று அவனும் நமுட்டுச் சிரிப்புடன் கூறினான்.

“டேய் பொண்ணுங்க பார்த்தாலும் பரவாயில்லை… இவனுங்க பார்த்து என்ன ஆகப்போகுது” என்று நக்கலடித்தவனிடம், “அந்தப் பொண்ணுங்க ஓகேவா பாரு” என்று கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு கிழவிகளைக் காட்ட…

ஸ்ரீராமைக் கொலைவெறியில் முறைத்தவன், தன்னையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரன் முன்பு சொடக்கிட்டு,

“எவ்வளவு பணம் உனக்கு அவங்க குடுக்கனும்?”
“அது… வட்டியோட சேர்த்து நாலு லட்சம் வருது.”

“எந்தெந்த தேதியில வாங்கினாங்க? எவ்வளவு வாங்கினாங்க? வட்டி எவ்வளவு எல்லா டீடெயிலும் குடு. பாண்டு பேப்பர்ல ஏதாவது கையெழுத்து வாங்கியிருந்தீன்னா அதையும் கொண்டுவா. உனக்கு நான் பணத்தை செட்டில் பண்றேன். சீக்கிரம் எடுத்துட்டுவா.”
அர்ஜுன் கூறியதும் அந்தத் தகவல்களை எடுக்க ஓடினான் ராஜேந்திரன்.

காது வளர்த்து பாம்படம் மாட்டி, வெள்ளைப் புடவையை கண்டாங்கிச் சேலையைப் போல அணிந்திருந்த அந்த இரண்டு கிழவிகளும் தமக்குள்,

“ஏன்டி இந்தப் புள்ள பார்க்க எம்ஜிஆரு மாதிரியே அழகா இருக்கு பாரேன்.” என்று கேட்க,

“அடிப்போடி… அப்படியே அரவிந்தசாமி மாதிரில்ல இருக்கு” என்று கூறி தான் கொஞ்சம் அப்டேட்டாக்கும் என்று நிரூபித்தார்.

“பாட்டி அஜீத்த விட்டுட்டீங்க.” என்று ஸ்ரீராம் எடுத்துக் கொடுக்க, அவனை முறைத்தவன் அசட்டுச் சிரிப்பு ஒன்றை கூடியிருந்தவர்களைப் பார்த்து வீசிவிட்டு உள்ளே சென்றான்.

“ஏன் தம்பி அந்த புள்ள சினிமாவுலயா நடிக்குது?” என்று ஒருவர் கேட்க… “இதுவரைக்கும் இல்லைங்க… இனிமேல் நடிச்சாலும் நடிப்பான். இத்தனை ரசிகர்கள் இருக்கீங்க இல்ல.” என்று சிரித்தபடி பதில் கொடுத்த ஸ்ரீராம் வீட்டினுள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய டம்ளர் நிறைய கொத்தமல்லி இலையும் சீரகமும் தூவப்பட்ட மணக்கும் மோரை ஸ்ரீராமிடம் நீட்டினாள் சுபத்ரா.

நல்ல களையான மஞ்சள் பூசிய முகம். திருத்தப்படாத இயல்பான அடர்ந்த புருவங்கள். சற்று அளவில் பெரிய கரிய விழிகள். நேர் நாசி. செயற்கை பூச்சு எதுவுமே இல்லாத இதழ்கள். அவள் மீதிருந்து வீசிய சன்னமான மஞ்சள் மணம் ஒரு நொடி ரசனையாகப் பார்க்கத் தூண்டியது ஸ்ரீராமை.
அவனது விழிகளின் மாற்றத்தை உடனடியாக உணர்ந்து கொண்டவள்,

“மோர் எடுத்துக்கோங்க அண்ணா” என்றாள்.
அவளை மெச்சுதலாகப் பார்த்தவன்

‘அடேங்கப்பா கிராமத்துப் பொண்ணுங்க படு ஷார்ப்தான். ஒரு நொடி என் ரசனைப் பார்வையை உணர்ந்ததும் அண்ணான்னு கூப்பிட்டு பிரேக்க போட்டுட்டாளே. க்ளவர் கேர்ள்.’ என்று எண்ணிக் கொண்டவன்,

“எடுத்துக்கறேன் தங்கச்சி” என்றபடி மோரை எடுத்துக் கொண்டு வந்து அர்ஜுன் அருகில் அமர்ந்தான்.
அர்ஜுன் அலைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க,

சரஸ்வதியும் சுபத்ராவும் சேர்ந்து அவள் ஊருக்குக் கொண்டுவரப் போகும் உடைமைகளை எடுக்க அவளது வீட்டிற்குச் சென்றனர்.
அந்த நேரம் அனைத்து கடன் பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான் ராஜேந்திரன். அவற்றை சரிபார்த்த ஸ்ரீராம், “டேய் அநியாய வட்டி போட்டிருக்கான்டா.” என்க… அர்ஜுன் ராஜேந்திரனை முறைக்கவும்,

“தம்பி உங்க மாமியாருக்கு வைத்தியம் பார்க்க சுபத்ரா கேட்டப்பல்லாம் பணம் நான்தான் குடுத்தேன். இந்த ஊருல இதுதான் தம்பி வட்டி.” ஏதோ அவனுக்குப் புரிந்த வகையில் அர்ஜுனை சுபத்ராவின் அத்தை மகன் என எண்ணிக் கொண்டு பேசினான்.

“வாட்…? மாமியாரா…?” மிகவும் கடுப்பேறியது அர்ஜுனுக்கு.
அப்பொழுது உள்ளே நுழைந்த சரஸ்வதி, “கோமதியை நீ அத்தைன்னுதான் கூப்பிடுவ அர்ஜுன். அதைத்தான் அவர் சொல்றார்.” எனவும் லேசாகச் சமாதானம் ஆனவன், ஒரே செக்காக நான்கு லட்சத்துக்குப் போட்டு ராஜேந்திரனிடம் நீட்டினான்.

“தம்பி… இந்தப் பேப்பர்ல எழுதித் தர்றதெல்லாம் வேண்டாம் தம்பி. நீங்க பணமாவே குடுத்திடுங்க” என்க மிகவும் நொந்து போனான்.

“ஹலோ… இது பேப்பர் இல்ல செக். பேங்க்ல போய் போடுங்க உடனே உங்களுக்குப் பணம் கிடைக்கும்” என்று எடுத்துக் கூறியும் ராஜேந்திரன் ஒப்புக் கொள்ள மறுக்க,

சரஸ்வதி தன்னிடம் வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தார். “எதுக்கும் தேவைப்படலாம்னு எடுத்து வந்தேன் அர்ஜுன். இதுல நாலு லட்சத்தை அவர்கிட்ட குடுத்திட்டு ஒரு லட்சத்தை மருதமுத்துகிட்ட குடுத்திடு”
அதன்படியே ராஜேந்திரனிடம் நான்கு லட்சத்தைக் கொடுத்து அனைத்துப் பத்திரங்களையும் சரிபார்த்து வாங்கிக் கொண்டு அவனை அனுப்பிவிட்டு,

மருதமுத்துவிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்தான்.
வாங்க மறுத்தவரிடம் சரஸ்வதி,

“நீங்க எங்களுக்குச் செய்திருக்கற உதவிக்கும், கோமதி சுபத்ரா இரண்டு பேர் மேல காட்டிய அன்புக்கும் எங்களால என்னைக்குமே விலை வைக்க முடியாது ஐயா.

நாங்க உங்களுக்கு ரொம்பவே கடமைப் பட்டிருக்கோம். இது நீங்க கோமதியோட இறுதிச் சடங்குக்கு கடன் வாங்கி செலவு செஞ்சீங்கன்னு சுபத்ரா வருத்தப் பட்டுச்சு.

அதுக்காகத்தான் கொடுக்குறோம். அதை அடைச்சிடுங்கய்யா” என்று வற்புறுத்திப் பணத்தைக் கொடுக்க வாங்கிக் கொண்டார்.

“சுபத்ராவைப் பார்க்க அடிக்கடி வாங்க. இத்தனை வருஷமா இங்க வளர்ந்த பொண்ணு. உங்களைத்தான் தாத்தா பாட்டியா நினைச்சு வளர்ந்திருக்கு. அடிக்கடி வந்து பார்த்துக்கோங்க.” என்று அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சரஸ்வதி அர்ஜுன் ஸ்ரீராம் மூவரும் வெளியேறினர்.

மங்களத்தை அணைத்துக் கொண்டு சிறிது நேரம் கண்ணீர் விட்டவள்,

“போய்ட்டு வர்றேன்” என்று அனைவரிடமும் கண்ணீர் மல்க விடைபெற்றுக் கொண்டாள்.
தன்னுடைய உடைமைகள் அடங்கிய ஒற்றை பையையும், கல்விச் சான்றிதழ்கள் அடங்கிய சிறிய கைப்பையையும், அவளது அப்பா அம்மா புகைப்படங்கள் இருந்த பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வர ஸ்ரீராம் அவற்றை வாங்கி வண்டியில் வைத்தான்.

வெளியே நின்றிருந்த ஊர்காரர்களிடமும் விடைபெற்றவள், காரில் ஏறி அமரவும் கார் கிளம்பியது. இத்தனை வருடங்களாக இருந்த ஊரை விட்டு தெரியாத ஊருக்கு, இதுவரை ஒருமுறைகூட பார்த்திராத மனிதர்களுடன் செல்வது மிகுந்த சோர்வையும் உள்ளூர சிறு பயத்தையும் கொடுத்தது.

எதுவுமே பேசாமல் அமைதியாக வந்தாள். சரஸ்வதியும் களைப்பில் சற்று கண்ணயர்ந்துவிட, வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தவளைக் கண்டு அர்ஜுனுக்கும் பாவமாக இருந்தது.

மெல்ல பேச்சுக் கொடுத்தான். “என்ன படிச்சிருக்க சுபத்ரா?”
“இளநிலை வணிகவியல்”
படித்த பள்ளி கல்லூரி விபரங்களைக் கேட்க, பதில் கூறினாள்.

“பயப்படாம ஃபிரியா இரும்மா. பாட்டி உன்னைப் பார்க்க ரொம்பவே ஆவலா இருக்காங்க. சொல்லமுடியாது உன்னைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாலும் உட்கார்ந்துடுவாங்க” என்று சொன்னவனுக்குள்ளும் அந்த ஆசை இருந்தது. அப்படியாவது பாட்டி நலமாகிவிடமாட்டார்களா என்ற ஏக்கம் குரலில் தெரிந்தது.
அதை உணர்ந்து கொண்டவள்,

“கண்டிப்பா பாட்டிக்கு சரியாகிடும் கவலைப் படாதீங்க” என்றாள்.
அவனைப் பற்றியும் சரஸ்வதி கூறியிருந்தார். அவனுமே பெற்றவர்கள் யாருமில்லாமல் பாட்டியிடம் வளர்ந்தவன்தானே என்ற பரிதாபம் அவளுக்குள் இருந்தது.

ஒரு விபத்து அனைவரது வாழ்க்கையையுமே புரட்டிப் போட்டுவிட்டது என்று எண்ணிக் கொண்டாள்.

அதன் பின் நண்பர்கள் இருவரும் அவர்களது வியாபாரத்தைப் பற்றி பேசிக் கொண்டு வர, அவள் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி வந்தாள். மதுரை ஏர்போர்ட் வந்து சேர்ந்ததும், விமானப் பயணம் என்றதும் பயம் வந்தது அவளுக்கு.

முதல் விமானப் பயணம் ஆதலால் பயந்தவளை சரஸ்வதி வாஞ்சையாக அருகமர்த்திக் கொண்டு பேசியபடி வர, அவரை மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு. அவரோடு வெகுவாக ஒட்டிக் கொண்டாள்.

அவர்கள் சென்னையை அடையும் போது மணி இரவு எட்டு. நேராக பாட்டியைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்வோம் என்று கூறியதும், அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றனர்.
மருத்துவரிடம் அனுமதி பெற்று சுபத்ராவை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றனர் சரஸ்வதியும் அர்ஜுனும். உறக்கத்தில் இருந்த அலர்மேல்மங்கை இவர்களின் அரவம் கேட்டதும் லேசாக கண்திறந்து பார்த்தார்.

காலையிலிருந்தே எப்போது பேத்தியைப் பார்ப்போம் என்று ஆவலாய் இருந்தவருக்கு, சுபத்ராவைப் பார்த்ததுமே அவருடைய முகம் மலர்ந்தது.

அப்படியே கோமதியின் வார்ப்பில் இருந்தாள். நடுங்கிய கரங்களை மெல்லத் தூக்கி அவளை அருகே அழைத்தவர், அவளது கைகளைப் பற்றிக் கொண்டார்.

அலர்மேல்மங்கையின் கண்களில் இருந்து லேசாக கண்ணீர் கசிந்தது. அவரது கண்களைத் துடைத்து விட்ட அர்ஜுன், “ஷ்ஷ்… பாட்டி ஏன் கண் கலங்குறீங்க? இனி சுபத்ரா உங்ககூடவே இருப்பா. நீங்க சீக்கிரம் உடம்பை சரி பண்ணிட்டு வீட்டுக்கு வரப் பாருங்க.”

அதை மெதுவாக ஆமோதித்த அந்த முதியவளின் முகம் மலர்ந்து இருந்தது. பேச வேண்டும் என்று சைகை செய்ய மாஸ்க்கை கழட்டி விட்டவன், “உணர்ச்சி வசப்படக் கூடாது. நிதானமா பேசனும் சரியா?”
பாட்டியையும் பேரனையும் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தன் பாட்டியின் மீது அவன் உயிரையே வைத்திருப்பது புரிந்தது.

அலர்மேல்மங்கை பாசத்தோடு அவளைத் தொட்டுத் தடவி மகிழ, அவளுக்குப் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. முதன் முதலில் பார்ப்பதால் பாசமெல்லாம் அவளுக்குப் பொங்கிக் கொண்டு வரவில்லை. ஆனால் இவர்கள் அனைவருமே மிகவும் நல்லவர்கள். தான் ஒரு பாதுகாப்பான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்று மட்டும் எண்ணிக் கொண்டாள்.

அவளது கைகளை ஆசையாகப் பற்றிக் கொண்டு அவளைப் பற்றி விசாரிக்க, அவளும் மெதுவாக அனைத்தையும் கூறிக்கொண்டு வந்தாள். அர்ஜுனையும் சுபத்ராவையும் ஆசையாகப் பார்த்தபடி அலர்மேல்மங்கை கூறிய வார்த்தைகள் இருவரையுமே விதிர்விதிர்க்கச் செய்தது.

சட்டென்று இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்டிருந்தார். இருவரது பெற்றோரின் விருப்பமும் அதுதானே. ஒருவேளை அர்ஜுன் ஒப்புக் கொண்டால் அனைவரது விருப்பமும் நிறைவேறுமே என்ற ஏக்கம் அந்த மூதாட்டியின் கண்களில் தெரிந்தது.
ஆனால், சுபத்ராவுக்கு மிகுந்த சங்கடமாக இருந்தது. இவர்களைப் பார்த்து முழுதாக ஒருநாள்கூட ஆகவில்லை. அதற்குள் எதற்காக இப்படிப்பட்ட பேச்சுக்கள் என்று எண்ணினாள்.

அர்ஜுன் ஓரளவு பாட்டியிடமிருந்து இதை எதிர்பார்த்தே இருந்ததால் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை அவன். காணாமல் போன பெண் கிடைத்ததும் பரபரப்போடு உடனடியாகத் தன்னை அனுப்பி அவளை அழைத்து வரச் செய்தபோதே அவனுக்குத் தெரியும் பாட்டி இப்படி கேட்பார் என்று.

ஆனால், பதட்டப் படாமல் தன்னுடைய மனதை விளக்கிக் கூற வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்ததால், அமைதியாக பாட்டியின் கைகளைப் பற்றிக் கொண்டவன்,

“பாட்டி ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்கன்னு சொன்னேன் இல்லையா? பாருங்க அந்தப் பொண்ணு பயந்து போச்சு. பாட்டி அந்தப் பொண்ணு இன்னைக்குதான் நம்மையெல்லாம் பார்க்குது.

கண்டிப்பா அது மனசுல இப்படி ஒரு நினைப்பு இருக்க வாய்ப்பேயில்லை.
என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்புறமும் ஏன் பாட்டி இப்படி கேட்கறீங்க? நான் நீங்க எது சொன்னாலும் உடனே செய்வேன்தான். ஆனா இது வாழ்க்கை. மனசுக்கு ஒப்பாம காலம்பூரா எப்படி சேர்ந்து வாழ முடியும்?

நீங்க வேற என்ன சொன்னாலும் கேட்கறேன். ஆனா இது மட்டும் வேணாம் பாட்டி ப்ளீஸ்.” சற்றுக் கெஞ்சலான குரலில் பேசிய பேரனின் முகத்தைப் பார்த்தவரின் விழிகள் நிராசையால் சுருங்கிய போதும், அவனது பேச்சின் நியாயம் புரிந்தது.

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்தானே. அர்ஜுன் மிகத் தெளிவானவன். அவனுடைய வாழ்க்கையையும் தெளிவோடு அமைத்துக் கொள்வான் என்று தோன்றியதால் சுபத்ராவுக்குச் செய்ய வேண்டியதை மட்டும் அவனிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்தவர்.

“அர்ஜுன்… உன் வாழ்க்கை உன் கையில். நீ என்னைக்குமே சந்தோஷமா வாழனும் அதுதான் இந்தப் பாட்டியோட ஆசை. என்னைக்கும் என் ஆசீர்வாதம் உனக்கு இருக்கும். நல்லாயிரு ராஜா” என்று வாழ்த்தியவர் சற்று மூச்சுக்களை எடுத்து விட்ட பிறகு,

“சரஸ்வதி உனக்கு உங்க அப்பாவைப் பத்தியும் மாதவனைப் பத்தியும் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். நீ உன் பேர்ல இருக்கற எல்லா சொத்துக்கள்லயும் தொழில்லயும் சரிபாதியை சுபத்ரா பேருக்கு மாத்தி எழுத ஏற்பாடு பண்ணு.

அவ நம்ம வீட்டுப் பொண்ணு. அவ சந்தோஷமா வாழறது உன்னோட பொறுப்பு. அவளுக்குப் பிடிச்ச மாதிரி நல்ல பையனாப் பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதும் உன்னோட பொறுப்புதான் சரியா? உடனே சொத்துக்களை மாத்தி எழுத ஏற்பாடு செய். நாளைக்கே நம்ம வக்கீல வரச் சொல்லு.”

பாட்டி கூறியதற்கு ஒரு நொடிகூட யோசிக்கவில்லை அர்ஜுன். உடனடியாக ஒத்துக் கொண்டவன், பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு உறுதியும் கொடுத்தான்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை…!

தொடரும்…