தன் தங்கையை சில வருட இடைவெளிக்கு பின் பார்த்ததில் ஆனந்தன் அதிர்ச்சியில், “நீயா?” என்றான்.

“அண்ணா” என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்து நின்றாள் அர்ச்சனா.

அண்ணனை பார்த்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பால் அதிர்ச்சி மறுபக்கம் என்று உணர்ச்சிகளின் கலவையாய் திகைத்து போய் நின்றாள் அர்ச்சனா.

அர்ச்சனா சிலையாகி பேசாமல் நிற்பதை பார்த்த மற்றவர்கள் திகைத்து நின்றார்கள்.

“அர்ச்சனா யாரு பார்க்க வந்திருக்காங்க?” என்று கேட்டபடி வந்த ஆகாஷ் வெளியில் நின்ற ஆனந்தனை பார்த்து திகைத்து நின்றான்.

காவியா, ஜெனிபருடன் நின்ற கண்ணாத்தாளுக்கும் கூட எதுவும் புரியாமல் நின்றாள்.

ஆனந்தன் கண்ணீரையும் கோபத்தையும் அடக்கியபடி இறுக்கமாக நின்று கொண்டு இருந்தான்.

அர்ச்சனாவோ அழுகையை அடக்கி கொண்டு மகிழ்ச்சியை வெளியில் காட்டாமல் நின்றாள்.

“இவங்களை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அங்கிள்” என்று காவியாதான் அங்கே நிலவிய மெளனத்தை கலைத்தாள்.

“நல்லாவே தெரியும் காவியா என்னம்மா அப்படித்தானே” என்று ஆனந்தன் கேட்க அவளும் ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.

ஆனந்தனுக்கு தன் தங்கை அர்ச்சனா மீது அடங்கா கோபம் கொந்தளித்தாலும் காவியா, ஜெனிபர் முன் அதை அவன் காட்ட விரும்பாமல் அடக்கி கொண்டான்.

“ஜெனி… இவங்களை ஏற்கனவே அங்கிளுக்கு தெரியுமாம்டி” என்றாள் காவியா.

“எப்படி தெரியும் அங்கிள்? இவங்க சொந்தமா இல்லை பிரெண்டா” என்றாள் ஜெனிபர்.

“சொந்தம்தான் காவியா. எனக்கு இவங்க தங்கை மாதிரி” என்று ஆனந்தன் கூற கூட நின்ற கண்ணாத்தாளுக்கு எல்லாம் புரிந்தது.

அர்ச்சனா அக்காவேதான் என்று உறுதி செய்து கொண்டு கண்ணாத்தாள் பார்க்க,

“சிஸ்டரா அங்கிள்? உங்க சிஸ்டரை பார்த்து ஏன் திகைத்து நிற்கிறிங்க?” என்றாள் காவியா.

“ரொம்ப வருசம் கழித்து நான் பார்க்கிறேன் அதான் ஷாக் ஆகி நிற்கிறேன்” என்று ஆனந்தன் சமாளித்தான்.

“அர்ச்சனா… அவங்களை உள்ளே கூப்பிடு” என்றான் ஆகாஷ்.

“எல்லோரும் உள்ளே வாங்க” என்று அழைத்து விட்டு ஒதுங்கி நின்றாள் அர்ச்சனா.

“வாங்க அங்கிள்… வாங்க ஆண்டி” என்று ஆனந்தனையும் கண்ணாத்தாளையும் அழைத்து கொண்டு காவியா, ஜெனிபர் உள்ளே சென்றார்கள்.

ஆனந்தனும் வேறு வழி இல்லாமல் உள்ளே சென்று அமர கண்ணாத்தாளும் அவனுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.

“அர்ச்சனா அக்கா… நாளைக்கு இவங்களுக்கு  ரிசப்ஷன். எங்க வீட்டுக்கு இன்வைட் பன்ன வந்தாங்க. நான்தான் உங்களை பற்றி சொல்லி கூட்டிட்டு வந்தேன் ” என்றாள் ஜெனிபர்.

“இங்கே வந்து பார்த்தால் நீங்க அங்கிளுக்கு சிஸ்டர். நல்ல வேடிக்கையாக இல்லை ஜெனி” என்றாள் காவியா

“ஆமாம் காவியா. இதுல நான் அறிமுகம் வேறு செய்ய வந்தேன்” என்றாள் ஜெனிபர்.

“அர்ச்சனா… நீ போயி காபி போட்டு கொண்டு வா” என்றான் ஆகாஷ்.

“இல்லை… இப்பதான் ஜெனிபர் வீட்டில் சாப்பிட்டோம்” என்று அவசரமாக மறுத்தான் ஆனந்தன்.

“நீங்க ரொம்ப நாள் கழித்து சந்தித்து இருக்கீங்க. நீங்க பேசி விட்டு வாங்க அங்கிள். நான் அதுவரை ஜெனி வீட்டில் இருக்கிறேன் அங்கிள். வா ஜெனி… நாம் போகலாம்” என்று பெரிய மனுஷி போல் பேசி விட்டு ஜெனிபரை கிளப்பி கொண்டு சென்றாள் காவியா.

ஜெனிபரும் காவியாவும் சென்ற பின்னர் அண்ணனும் தங்கையும் மறுபடியும் ஒருவரை ஓருவர் பார்க்க மறுபடியும் சூழ்நிலை இறுகியது.

“அண்ணா… என் மேல் இருக்கிற கோபம் இன்னும் உனக்கு குறையவில்லையா” என்று அர்ச்சனா கேட்டாள்.

ஆனந்தன் அமைதியாக இருக்க, ஆகாஷ் உள்ளே படுக்க வைத்து இருந்த தன் மகளை தூக்கி வந்தான்.

“அண்ணா… எனக்கு பொண்ணு பிறந்திருக்காள். ஆனந்த ஜோதி என்று அவளுக்கு உன்னுடைய ஞாபகமாகதான் பெயர்   வைச்சிருக்கேன்” என்று குழந்தையை காட்டினாள் அர்ச்சனா.

அர்ச்சனாவின் குழந்தை அழகாக அவனை பார்த்து சிரிக்க அதில் அவன் மயங்கினாலும் அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“அண்ணா… என் மேல் இருக்கும் கோபம் குறையாது ஏனென்றால் நான் செய்தது அப்படி” என்றாள் அர்ச்சனா.

“அர்ச்சனா உங்களை எல்லாம் நினைத்து அழாத நாளே இல்லை” என்றான் ஆகாஷ்.

“ஆமாண்ணா… என்னால் நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம். அப்பா வேறு என் கவலையில் இறந்துட்டார் அதில் இருந்து என்னால் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க முடியலை” என்றாள் அர்ச்சனா.

“ஆமாங்க இவ பிரக்னன்டா இருந்த பொழுது கூட உங்களை பற்றியும் உங்கள் பேமிலியை பற்றியும்தான் அதிகம் பேசுவாள். குழந்தை பிறந்த பொழுது கூட நீங்கள் யாரும் வரலைன்னு கவலை பட்டாள்” என்றான் ஆகாஷ்.

“அண்ணா… என்னை மன்னித்து நீ ஏற்றுக் கொள்ள மாட்டியா” என்று அழுகையுடன் கேட்ட அர்ச்சனா தன் குழந்தையுடன் சட்டென்று அவன் காலில் விழ ஆனந்தன் பதறினான்.

“அர்ச்சனா என்ன பன்றே நீ” என்று பதறி தங்கையின் பெயரை சொல்லி விட்டான் ஆனந்தன்.

“இல்லைண்ணா… நீ என்னை மன்னிக்கிற வரைக்கும் நான் எழுந்திரிக்க மாட்டேன்” என்றாள் அர்ச்சனா.

“நான் உன்னை மன்னித்து விட்டேன். நீ முதலில் எழுந்திரிம்மா” என்று ஆனந்தன் சொல்ல அர்ச்சனா எழுந்து குழந்தையை தர அவன் வாங்கி கொள்ள அர்ச்சனாவுக்கு மகிழ்ச்சி.

“கண்ணா… இவள்தான் என் தங்கை அர்ச்சனா” என்று ஆனந்தன் சொல்ல,

“அதான் பார்த்துட்டுதான் நிற்கிறேனே” என்றாள் கண்ணாத்தாள்.

“அர்ச்சனா… இது உன் அண்ணி பேரு கண்ணாத்தாள்” என்று கண்ணாத்தாளை தங்கைக்கு அறிமுகம் செய்தான் ஆனந்தன்.

“அண்ணி அழகாக சூப்பராக இருக்காங்க. எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா” என்றாள் அர்ச்சனா.

“எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் கண்ணாத்தாள்.

அர்ச்சனா தீடிரென்று அவளிடம், “நீ தனலட்சுமி சிஸ்டர்தானே?” என்றாள்.

தன் தங்கையை பற்றி அர்ச்சனா கேட்டதும் கண்ணாத்தாள் “ஆமாம்… உங்களுக்கு அவளை தெரியுமா” என்று கேட்டாள்.

“நல்லா தெரியும். அவள் என் குளோஸ் பிரண்ட். பக்கத்து பிளாட்டில் தான் இருக்கிறாள்.” என்றாள் அர்ச்சனா.

கண்ணாத்தாளுக்கு தன் அக்கா அருகில் இருக்கிறாள் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும்,

ஆனந்தமும் ஒரு சேர அடைந்து சிலையாகி அமர்ந்து இருந்தாள்.

“அண்ணா… அண்ணி… வாங்க தனாவை பார்ப்போம். அவளுக்கு நாம் சர்ப்ரைஸ் ஷாக் தந்து அண்ணியும் அவளும் என்ன பன்றாங்க என்று பார்ப்போம்” என்றாள் அர்ச்சனா.

“சரி வாங்க போகலாம்” என்று ஆனந்தன் சொல்ல எல்லோரும் கிளம்பி சென்றார்கள்.

கண்ணாத்தாளுக்கு நீண்ட வருடம் கழித்து காண இருக்கும் அக்காவை காண தன் மனதை தயார் செய்தபடி சென்றாள்.

“தனாவுக்கு செம ஷாக்காக இருக்கும் இல்லீங்களா” என்றாள் அர்ச்சனா.

“ஆமாம் அர்ச்சனா…  தனசேகர் என்னை மாதிரி ஷாக்காகி நிற்கிறதை நான் பார்க்கனும்” என்றான் ஆகாஷ்.

“எனக்கு பரவாயில்லைங்க. என் அண்ணா காலில் விழுந்து அவரை சமதானபடுத்த வாய்ப்பு இருந்தது. அவளுக்கு அதுவும் இல்லைங்க. என்ன பன்ன போகிறாள் பார்ப்போம்” என்றாள் அர்ச்சனா.

தனலட்சுமியின் பிளாட்டுக்கு சென்ற அர்ச்சனா காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள்.

தனலட்சுமி கதவை திறக்கும் பொழுது கண்ணாத்தாளை பார்க்க அவளும் ஷாக்காகி நின்று விட்டாள்.

“தனா… யார் வந்திருக்காங்க” என்று கேட்டபடி வந்த தனசேகர் தன் மனைவி அதிர்ச்சியாகி நிற்பதையும் எதிரில் அவள் தங்கை நிற்பதையும் கண்டு அவனும் ஷாக்காகி நின்றான்.

அர்ச்சனா அவள் காதல் கணவருடன் நின்று அதை ரசிக்க ஆனந்தன் எதுவும் பேசாமல் நின்றான்.

கண்ணாத்தாளும் அவள் அக்கா இருவரும் அழுகையை அடக்கி கொண்டு அதே சமயத்தில் சந்தோஷத்தை வெளி படுத்த முடியாமல் வார்த்தைகள் அற்று கண்களில் உணர்ச்சிகளை காட்டியபடி நின்றனர்.

“மந்தையில் பிரிந்த ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றன… இரண்டும் திரும்பி சந்தித்த பொழுது பேச முடியவில்லையே” என்றாள் அர்ச்சனா.

அர்ச்சனாவின் டயலாக்கால் அனைவரும் சிரித்துவிட தனலட்சுமியும் அதை கேட்டு சிரித்துவிட்டு பின்னர்,

“எங்களை கிண்டல் பன்றியாடி” என்று தோழியை முறைத்தாள்.

“தனா… அவங்களை எல்லாம் உள்ளே கூப்பிடு” என்று அவள் கணவன் தனசேகர் கூறினான்.

“வா கண்ணா… வாங்க மாமா…” என்று தனலட்சுமி கூற,

“அப்ப நாங்க தனா” என்றாள் அர்ச்சனா..

“உனக்கு அழைப்பு வேறு கொடுக்கனுமா உள்ளே வாடி” என்றாள் தனலட்சுமி.

“அந்த பயம் இருக்கட்டும்”என்று அர்ச்சனா தோழியை பார்த்து கிண்டலாக சொல்லிவிட்டு சிரித்தாள்.

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!