ENE — epi 10

ENE — epi 10

அத்தியாயம் 10

பூவச்சு பொட்டும் வச்சு

மேளம் கட்டி கல்யாணம்

பூமஞ்சம் போட்டும் கூட

எங்கே அந்த சந்தோஷம்

 

“ராசாத்தி, இந்தா சொம்புல பால் இருக்கு, கையில புடி. ரூமுக்குள்ள போனவுடனே மாப்பிள்ளை காலுல விழுந்து வணங்கிட்டு பால குடிக்க குடு. அவரு குடிச்சிட்டு குடுக்குற மீத பாலை நீ குடிச்சிரு. அதுக்கு மேல மாப்பிள்ளை பார்த்துக்குவார்” என பால் சொம்பை மகள் கையில் கொடுத்தபடியே நாணி கோணினார் வேலம்மா.

பச்சை பட்டுடுத்தி தலை நிறைய மல்லிகை பூவோடு அன்றலர்ந்த பூ போல் இருந்தார் கற்பகம். மருமகளை நெட்டி முறித்த வள்ளி. ‘இந்த அழகுக்கு மயங்காத ஆளும் இருக்க முடியுமா. மகன் வாழ்க்கை கண்டிப்பாக மலர்ந்து விடும்’ என நிம்மதி அடைந்தார். மகன் வாழ்க்கையை பற்றி மட்டுமே நினைத்த வள்ளி, வீட்டுக்கு புகுந்த மருமகளை மறந்துவிட்டாரா? அல்லது தான் வளர்த்த வளர்ப்பு பொய்க்காது என மகனிடம் முழு நம்பிக்கை வைத்திருந்தாரா என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

சிரிப்பு, கும்மாளம், கேலியுடன் கற்பகத்தை முதலிரவு அறைக்குள் விட்டுவிட்டு கதவடைத்து வெளியேறினர் தோழிகள். நெஞ்சம் படபடக்க, கால்கள் தடதடக்க அடி மேல் அடி எடுத்து உள்ளே சென்றார் கற்பகம். அங்கே அவர் கண்ட காட்சியில் சிறிது நேரம் அப்படியே உறைந்து நின்றார்.

பிறகு பெரிதாக சிரிப்பு மலர்ந்தது கற்பகத்துக்கு. சுந்தரம் கட்டிலில் தலை குப்புற கவிழ்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவரும் என்னதான் செய்வார். கடல் கடந்து பிரயாணம் செய்து வந்தது, அம்மாவினால் ஏற்பட்ட மன உளைச்சல், தீடீர் திருமணம் என வாழ்க்கையே திருப்பி போட்ட நிகழ்வுகளால், அவர் ஓய்ந்து போய் விட்டார்.

‘என்னடா இது. இவரு பாவமா தூங்குறாரே. அம்மா வேற பால் கண்டிப்பா குடுக்கனும்னு சொன்னாங்களே. முதலிரவுல பால் குடிக்காட்டி அபசகுணமா ஆகிடுமோ. இவர எப்படி எழுப்பறது? எழுப்பினா கோபப்படுவாரோ’ என பலவிதமாக சிந்தித்தபடியே நின்றிருந்தார் கற்பகம்.

பால் சொம்பை மேசையில் வைத்த கற்பகம், மேசை இழுப்பறையை மெதுவாக திறந்து எப்போழுதும் தேன் குடிக்கவென்று அவர் வைத்திருக்கும் கரண்டியை எடுத்தார். ‘நல்ல வேளை இந்த வைபவத்த என் ரூமுல வச்சாங்க. இல்லைனா இந்த நேரத்துல கரண்டிக்கு எங்க போவேன். கரண்டியால எப்படியாவது கொஞ்சம் பாலாவது அவருக்கு புகட்டிருவோம். சாங்கியத்துக்கு கொஞ்சமாவது குடிச்சதா இருக்கட்டும்.’ என ஒரு அதி புத்திசாலித்தனமான பிளான் ஒன்றை போட்டார் கற்பகம்.

மெதுவாக சுந்தரத்தின் தலையை தூக்கி தன் மடியில் வைத்தார் கற்பகம். ஒரு கையால் சொம்பை பிடித்து கொண்டு மறுகையால் கரண்டியை அதனுள் விட்டு பாலை எடுத்தார். பிறகு சொம்பை கட்டிலில் வைத்து விட்டு சுந்தரத்தின் உதட்டை பிரித்து கரண்டியால் பாலை உள்ளே விட்டார் அவர்.

“கல்யாணமாகி முதல் இரவிலே புருஷனுக்கு பால் ஊற்றிய பொண்டாட்டி நீயா மட்டும்தான் இருப்ப” என்ற குரலை கேட்டு துள்ளி எழுந்தார் கற்பகம் அவர் மடியில் படுத்திருந்த சுந்தரம் தலை குப்புற கற்பகத்தின் காலடியில் விழுந்தார்.

“உங்க ஊருல முத ராத்திரிக்கு புருஷன் தான் பொண்டாட்டி காலுல விழனுமோ?” என கேட்டபடியே எழுந்து நின்றார் சுந்தரம்.

“வந்துங்க அத்தான், அம்மா சாங்கியம், பாலு குடிக்கனும்னு” என சொல்ல வந்ததை மென்று முழுங்கியபடி நின்றிருந்தார் கற்பகம். கண்களில் நீர் விழவா விழவா என குளம் கட்டி நின்று கொண்டிருந்தது.

“சரி சரி. இப்படி வந்து உட்காரு. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றவாரே கட்டிலில் அமர்ந்தார் சுந்தரம். அவர் உட்கார்ந்த மறுநொடி படக்கென அவர் காலடியில் அமர்ந்தார் கற்பகம்.

எங்கிருந்து தான் சுந்தரத்துக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தெரியாது,

“பட்டிகாடு, பட்டிகாடு. ஏறி கட்டில் மேல உட்காரு. “ என அதட்டினார்.

பயத்தில் வேகமாக கட்டில் மேல் அமர்ந்த கற்பகம், முன்பு அங்கு வைத்த பால் சொம்பை கவனிக்கவில்லை. சொம்பு கவிழ்ந்து கட்டிலை நனைத்தது மட்டுமில்லது, அங்கே உட்கார்ந்திருந்த சுந்தரத்தின் வேட்டியையும் நனைத்தது.

அவசரமாக கட்டிலில் இருந்து எழுந்து நின்றார் சுந்தரம்.

“மன்னிச்சிருங்க, மன்னிச்சிருங்க அத்தான். குடுங்க வேட்டிய நான் அலசி எடுத்துட்டு வரேன்” என்றவாரு சுந்தரத்தின் வேட்டியை பிடித்து இழுத்தார் கற்பகம்.

திடீரென்று நடந்த இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த சுந்தரம், முட்டி வரை இருந்த பட்டாபட்டி அன்ட்ராயரோடு நின்றிருந்தார். வேட்டி கற்பகத்தின் கையில் இருந்தது.

அப்பொழுது தான் செய்த தவறின் வீரியம் புரிந்த கற்பகம், வேட்டியை கீழே போட்டு விட்டு, இரு கைகளாலும் முகத்தை மூடி கொண்டார்.

“எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு. எல்லாம் என் தலை எழுத்து.” என குரலை உயர்த்தினார் சுந்தரம்.  அம்மா செய்த பிழைக்கு இந்த பெண் என்ன செய்யும். முடிந்த அளவு நல்ல படியே பேசி பழகலாம் என நினைத்த சுந்தரத்துக்கு, கற்பகம் ரூமுக்கு வந்ததில் இருந்து செய்த செய்கைகள் கோபத்தை விசிறி விட்டன.

“இப்படி மரம் மாதிரி வளர்ந்து நிக்கிற. கொஞ்சம் கூட அறிவு இல்லையா உனக்கு. எனக்கு வர ஆத்திரத்துக்கு அப்படியே உன் கழுத்தை நெரிக்கனும் மாதிரி இருக்கு. பட்டிகாடு, பட்டிகாடு. அழகா கிளிய வளர்த்து ஒரு பூனை கிட்ட குடுத்துட்டாங்க. என்ன பார்க்கிற? பூனைன்னு உன்னை தான் சொன்னேன்”

‘அப்ப நீங்க கிளியா? பச்சை கிளியா, பாச கிளியா?’ முகத்தை அழுவது மாதிரி வைத்து கொண்டு மனதிற்குள் கவுன்டர் கொடுத்து கொண்டிருந்தார்.

“மூஞ்சிய பாரு. அப்படியே பச்சை புள்ள மாதிரி வச்சிகிட்டு செய்யுறதெல்லாம் அடாவடித்தனம்”

‘இப்ப என்ன அடாவடித்தனம் செஞ்சுட்டாங்க? பாசமா பாலை ஊட்டுனேன். அது தப்பா? வேட்டிய அலசறதுக்கு உறுவுனேன். அது தப்பா? இல்ல நீங்களே என் காலுல வந்து விழுந்தீங்க. அது என் தப்பா? இப்படி எகுறுறீங்க. கோபமா இருந்தாலும் நீங்க அழகுதான் அத்தான்.’

“ஏன்டி, நான் நாய் மாதிரி கத்துறேன் ஒரு வார்த்தை பேசுறியா? ஊமை குரத்தி மாதிரி நிக்கிற. ஏதாவது பேசு”

“அத்தான்”

“சொல்லு”

“இந்த அன்ட்ராயர எங்க வாங்குனீங்க? அங்க மலேசியாவிலும் விக்கிறாங்களா?”

தலையிலே அடித்து கொண்ட சுந்தரம்,

“இப்ப இது ரொம்ப முக்கியமான விஷயமா? ஏன் மலேசியாவில விற்கலைனா, நீயும் உங்கப்பனும் எக்ஸ்போர்ட் பண்ண போறீங்களா? எல்லாம் உங்கப்பன் அந்த மீசை பண்ண வேலைதான். தலைமுறை தலைமுறையா இத போட்டுகிட்டு தான் முதலிரவுக்கு போவாங்களாம். விட்டா அந்த ஆளே மாட்டி விட்டுருப்பாரு. அவரு பண்ணுற அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா?”

கற்பகத்திற்கு சிரிப்பு எட்டி பார்த்தது.

“என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா? இங்க பாரு கற்பகம், எனக்கு இந்த கல்யாணத்துல அறவே இஷ்டம் இல்ல. எங்கம்மாவுக்காக தான் இதுக்கு ஒத்துகிட்டேன். இனிமே நீ என்கிட்ட நடந்துக்குற முறையில தான் நாம நல்லா வாழுறதும், வாழாதாதும் இருக்கு. புரியுதா?”

“புரியுதுங்க” என சொல்லியவாறே அலமாரியை திறந்து, பெண்கள் அணியும் கைலியை எடுத்து சுந்தரத்திடம் நீட்டினார்.

“இப்போதைக்கு இதை கட்டிக்குங்க”

இன்னோரு கட்டில் விரிப்பை எடுத்து நனைந்த விரிப்பை அகற்றி புதியதை மாற்றினார் கற்பகம்.

பெரிய பெரிய பச்சை பூக்கள் போட்ட நீல நிற கைலியை (லுங்கி) அணிந்து கொண்டு கட்டிலில் அமர்ந்தார் சுந்தரம். அமைதியாக கொஞ்சம் இடம் தள்ளி அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார் கற்பகம். சிறிது நேரம் சுந்தரம் எதையோ சிந்தித்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு தன்னையே உலுக்கி நடப்புக்கு வந்தவர்,

“அம்மாவுக்காக தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்னு சொல்லுறேன். உனக்கு வருத்தமா இல்லையா?” என கேட்டார்.

“நீங்க நல்லா படிச்சவரு, மேனேஜரு வேலை வேற பார்க்குறீங்க. என்னை மாதிரி ஒரு கிராமத்துகாரிய கட்டிக்க சொன்னா கஸ்டமா தான் இருக்கும். எனக்கு புரியுது அத்தான். என்னால முடிஞ்ச அளவு உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குறேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் குடுங்க அத்தான். அதுக்குள்ள என்னை வெறுத்துறாதீங்க.” என கெஞ்சிய கற்பகத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

‘நீ கிராமத்துக்காரிங்கறதனால மட்டும் இல்ல, என் மனசுகுள்ள வேற ஒருத்தி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கா. அவள நினைச்ச இந்த மனசால உன்னைய எப்படி நினைப்பேன்’ என மனதிற்குள்ளேயே எண்ணி கொண்டார்.

இவர் வாயை திறந்து சொல்லி இருந்தாலாவது பின்னாளில் வர போகும் அதிர்ச்சியை சமாளித்திருப்பார் கற்பகம். அம்மாவும், மகனும் மோனாவின் அத்தியாயத்தை அப்படியே மறைத்துவிட்டார்கள். இதுக்கு மேல இவளுக்கு தெரிஞ்சு என்ன ஆக போகுது என சுந்தரமும், மகன் கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும் என்று வள்ளியும் நினைத்துவிட்டார்கள்.

“கற்பகம், இந்த திருமணத்தினால எனக்கும் எங்க அம்மாவுக்கும் பேச்சு வார்த்தை இல்லாம போயிருச்சி. எங்க ரெண்டு பேருக்கும் இனிமே நீ தான் பாலமா இருக்கணும். எந்த காரணத்த கொண்டும் அவங்க கிட்ட பேச நான் பிரியபடல. அவங்க இவ்வளவு நாளா எனக்கு செஞ்ச வேலையெல்லாம் இனிமே நீ தான் செய்யனும். அவங்க கையால ஒரு தம்ளர் பச்சை தண்ணி  குடிக்க கூட எனக்கு இஷ்டமில்ல. நீங்க ரெண்டு பேரும் எப்படி இருந்துகிட்டாலும் எனக்கு அக்கறை இல்ல. அதோடு நம்ம ரெண்டு பேருக்குள்ள நடக்கிற குடும்ப விவகாரம் வெளியே போறது எனக்கு பிடிக்காது. அது எங்க அம்மாவா இருந்தாலும் சரிதான்”

கணவர் சொன்னதுக்கு சம்மதம் என மௌனமாக தலையை ஆட்டினார். ‘பாவம் எங்க வள்ளி அத்தை. எனக்காக அவங்க அருமை மகனையே பகைச்சிகிட்டாங்களே. இனிமே அவங்கள என் கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குவேன்’ என வள்ளிக்கு மனதில் கோவில் கட்டினார் கற்பகம்.

“என்னால மத்த ஆம்பிளைங்க மாதிரி ஓவரா வழிஞ்சிகிட்டு, கொஞ்சிகிட்டு, பொண்டாட்டி முந்தானைய புடிச்சிகிட்டு சுத்தறதேல்லாம் முடியாது. அதனால நீ என்கிட்ட இந்த மாதிரி சலுகை எதையும் எதிர்பார்க்க கூடாது” என்றார்.

‘அந்த ஆசை கனவெல்லாம் என் மோனாவோட முடிஞ்சி புதைஞ்சி போயிருச்சி .என் வாழ்க்கையில நான் எப்படி எல்லாம் எதிர்ப்பார்த்த இரவு இது. என் மோனாவும் நானும் எப்படி எப்படி எல்லாம் வாழ்ந்திருக்க வேண்டியவங்க. எல்லாம் பாழா போச்சி’ என வெதும்பினார். வருத்தம் கோபமாக மாறியது.

மோனாவின் இழப்பு, எதிரில் உள்ளவளை குத்தி கிழிக்க தூண்டியது. வள்ளியின் மகன் மறைந்து, மோனாவின் மாஜி காதலனாக மாறினார் சுந்தரம்.

“இங்க பாருடி. இந்த ஊரை விட்டு நாம ஒரேடியா போகணும். நான் என்ன சொல்ல வரேன்னு உன் மரமண்டைக்கு புரியுதா? இனிமே அப்பன், ஆத்தான்னு இங்க திரும்பி நீ கால வைக்க கூடாது. இங்க இருந்து யாரும் அங்க வரவும் கூடாது. அப்படி வந்தாங்கனா, நீயும் அவங்க கூட நிரந்தரமா இங்க திரும்பி வர வேண்டி இருக்கும்” என இரக்கம் இல்லாமல் கூறினார்.

கற்பகத்துக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ‘சில நேரம் பொறுமையா பேசுறாரு. அப்புறம் இப்படி கொதறி வைக்கிறாரு. பதினெட்டு வருஷமா பாசத்தோடு வளர்த்தவங்கள அடியோடு வெட்டிகிட்டு வர சொல்லுறாரே. இவரு நல்லவரா கெட்டவரா?’ என எண்ணியபடியே கண்ணீர் உகுத்தார்.

“இப்படி கண்ணீர் விட்டு தான் என் கூட வாழனும்னா, நீ இங்கயே இருந்திரு. சும்மா சும்மா குழாயில தண்ணி வர மாதிரி கண்ணுல தண்ணி வர வைக்காத. எனக்கு பார்க்கவே கடுப்பா இருக்கு” என அதற்கும் பாட்டு விழுந்தது.

கற்பகம் அவசரமாக கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

எழுந்து விளக்கை அணைத்த சுந்தரம், கற்பகத்தையும் இறுக அணைத்துக் கொண்டார். அவர் நடந்து கொண்ட விதம், ஏதோ துரத்தும் நினைவுகளில் இருந்து தப்பிப்பது போலிருந்தது.

சுந்தரம் தூங்கிய பின்னும், விழித்தபடியே படுத்திருந்தார் கற்கம். ‘இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்ன நடந்தது? இந்த அத்தான் நம்ம என்ன செஞ்சாரு? என்னவோ பெரிய கடமைய முடிச்சிட்ட மாதிரி திரும்பி படுத்துகிட்டாரே. கல்யாணம் ஆன ஆம்பிளைங்க எல்லாம் அதிரடியா இப்படி தான் நடந்துக்குவாங்களா? இத பற்றி அம்மா ஒன்னுமே சொல்லலியே. மாப்பிள்ளை மனம் கோணாம நடன்னு சொன்னதுக்கு இது தான் அர்த்தமா?’ என கண்டதையும் நினைத்து கண்ணீர் வழிய விழித்திருந்தார்.

எழுத படிக்க ஓரளவு தெரிந்து இருந்தாலும், அவர் படித்ததேல்லாம் சிறுவர் மலர், அம்புலிமாமா போன்ற புத்தகங்களே. அந்த ஊரில் காதல் எனும் வார்த்தையை பப்ளிக்காக பேசுவதே தப்பு. ஊர் கொட்டகையிலும் சாமி படங்கள் தவிர வேறு ஓடாது. இப்படி பட்ட சூழ்நிலையில் வளர்ந்த கற்பகம், சுந்தரம் நடந்து கொண்டது தான் காதல் போல என தன்னையே சமாதானம் செய்து கொண்டார். அதற்கு பிறகு தான் அவருக்கு உறக்கமே வந்தது.

எப்பொழுதும் போல் மலர்ந்த முகமாகவே வளைய வந்தார் கற்பகம். மருமகளின் முகத்தை வைத்து வள்ளியாம் எதையும் கணிக்க முடியவில்லை. ஜாடை மாடையாக கேட்டுப்பார்த்தார். கற்பகத்திடமிருந்து புன்னகையை தவிர வேறு ஒன்றும் பெறமுடியவில்லை.

சுந்தரத்தை விழுந்து விழுந்து கவனித்தார் கற்பகம். எள் எனும் முன் எண்ணெய்யாய் நின்றார். சுந்தரமும், மனைவிக்கு விசா எடுப்பது, நிலங்களை விற்க ஏற்பாடு செய்வது என பிசியாகவே இருந்தார்.

கணவன் வீட்டில் இல்லாத போதெல்லாம், தம்பியை கட்டிக்கொண்டும், அம்மாவை ஒட்டிக்கொண்டும், தந்தையை கண்களால் நிரப்பி கொண்டும் திரிந்தார் கற்பகம்.

‘இனிமே உங்கள எல்லாம் எப்போ பார்க்க போறேன்னோ தெரியலையே. உங்கள எல்லாம் பிரியறத நெனச்சா, இருதயத்துல கத்திய கொண்டு திருகின மாதிரி இருக்கு. இவரு இப்படி நிபந்தனை போடுவாருன்னு நான் நெனச்சி கூட பார்க்கலியே. காதல் மயக்கத்துல, என் தலையில நானே மண்ணை அள்ளி போட்டு கிட்டேனே.’ என மறுகுவார்.

புறப்படும் நாளும் வந்தது. முத்துப்பாண்டி ஏர்போட்டிற்கு செல்ல ஒரு பஸ்சையே வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கே எல்லோரும் ஆள் மாற்ற ஆள் கற்பகத்தை கட்டி கொண்டு கதறினர்.

“புத்திக்கார புள்ளையா பொழைக்கனும்”

“அடிக்கடி கடுதாசி போடனும்”

“உடம்பை நல்லா பார்த்துக்க. சனி தோறும் எண்ணை தேய்ச்சி குளி”

“வருஷத்துக்கு ஒரு தடவையாவது மாப்பிள்ளையும் , நீயும் ஊருக்கு வாங்க”

இப்படி பலவித அறிவுரைகள்.

கற்பகம் குடும்பத்தினரை கட்டி கொண்டு அழுதார். பிறகு ஒரு வைராக்கியத்துடன் கண்களை துடைத்து கொண்டார். ‘நான் இப்படி வருந்த வேண்டும் என்றுதானே இந்த நிபந்தனைய போட்டாங்க. நான் வருந்துறத வெளியே காட்டி அந்த சந்தோஷத்த அவருக்கு குடுக்க கூடாது’ என முடிவெடுத்தார். சிரித்த முகமாகவே கை அசைத்து செக் இன் பகுதிக்குள் கணவரோடும், மாமியாரோடும் நுழைந்தார்.

காலம் கற்பகத்துக்கு வைத்திருப்பது என்ன?

 

எட்டி நில்லு….

error: Content is protected !!