அத்தியாயம் 12
பாரிஜாத பூம்பாவை
பாதியாகி போனாளே
தேகம் எங்கும் புண்ணாகி
தேதி போல தேய்ந்தாளே
செடியை பிரிந்த பிறகும்
செடிக்கு உயிர் தருதே பூவே
“தானு குட்டி, சாப்பிட வா” என அழைத்தார் வள்ளி.
“இருங்க பாட்டி. அப்பா வந்துருவாங்க. அவங்க எனக்கு ஊட்டி விடுவாங்க” என வீட்டு கேட்டை பிடித்தவாறே வாசல் மேல் விழி வைத்து காத்திருந்தாள் ஐந்து வயது தான்யாஸ்ரீ.
“நீங்க வந்து தருண் கூட உட்கார்ந்து சாப்பிடுங்க அத்தை. அவள பற்றி தான் தெரியாதா? காலையிலிருந்து நம்ம கூடவே இருந்தாலும் ராத்திரி 7 மணி ஆகிட்டா வாசலை காவல் காக்க ஆரம்பிச்சிருவா. நாம சாப்பாடு குடுத்துட்டாலும், அவங்கப்பா வந்து சாமி ஆடிருவாரு, ஒரு வேளை கூட என் கையால என் மகளுக்கு ஊட்ட விடமாட்டிங்களான்னு”
“என்னமோ போ மா. இவளுக்கு ஓவரா தான் செல்லம் குடுக்குறான். இந்த தருணை கண்டுக்கிறதே இல்ல. பாவம் மா அவன். புள்ள மனசு என்ன பாடு படும். ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வச்சு பார்க்குறான்.”
“நாம சொல்லி கேக்குற ஆளா அவரு. விடுங்க அத்தை. தருணுக்கு தான் நாம இருக்கோமே, தாய்க்கு தாயா, தந்தைக்கு தந்தையா”
“சாப்பாடு பொருள வாங்கி குடுக்கிறதில கூட ஓரவஞ்சனை காட்டினா எப்படிம்மா? தானுக்கு மட்டும் சாக்லட், ஐஸ்க்ரீம்னு வாங்கிட்டு வரான். இவன் வாய பார்க்குறான். மனசு அடிச்சுகுதும்மா எனக்கு”
‘உங்களுக்கே இப்படி இருக்குனா, பெத்தவ எனக்கு எப்படி அத்தை இருக்கும்’ பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது கற்பகத்தால்.
கற்பகம் பிள்ளைகளை அருமையாக வளர்த்திருந்தார். தனக்கு மட்டும் தகப்பன் உணவு பண்டங்கள் கொடுத்தாலும், தான்யாஸ்ரீ அண்ணனுடன் பகிர்ந்து தான் உண்ணுவாள். சில சமயம் பிரபுவுக்கும் கொடுப்பாள். தருணும் பொறாமை இன்றியே தங்கையுடன் பழகுவான். தந்தை பாசம் தனக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள பழகியிருந்தான் அவன்.
வள்ளி பேரனுக்கு உணவு ஊட்டிக்கொண்டே பேத்தியை கவனித்து கொண்டிருந்தார். கார் உள்ளே நுழையும் போதே, அவள் கைகளை தட்டி கொண்டு அப்பா அப்பா என குதித்து கொண்டிருந்தாள்.
சுந்தரம் தற்பொழுது சிறிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். வீட்டு கடனையும் கட்டி முடித்திருந்தார். உள்ளே நுழைந்தவர் மகளை தூக்கி தட்டாமாலை சுற்றி இறக்கினார். மகளின் குண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டார். வாங்கி வந்திருந்த டோனட் பையை மகளிடம் கொடுத்தவர், அவளை தூக்கி கொண்டு சோபாவில் அமர்ந்தார்.
“செல்ல குட்டி, இன்னிக்கு என்ன செஞ்சீங்க?”
“தானு பாப்பா இன்னிக்கு, அண்ணா கூட ஓடி பிடிச்சி விளையாடினேன். ஓடுறப்ப தொப்புன்னு கீழ விழுந்துட்டேன். இங்க பாருங்க காயம்” என கால் முட்டியை காட்டினாள் தானு.
மகளின் காலை வருடியவாறே,
“கற்பகம்!! கற்பகம்!” என சத்தமிட்டார்.
“சொல்லுங்க அத்தான் “ என கையில் டீயுடன் வந்து நின்றார் கற்பகம்.
“என்னடி லட்சணமா பிள்ளைய பார்த்துக்குற? வீட்டுல சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா தானே தூங்குற. இந்த ஒரு வேலையையாச்சும் உருப்படியா செய்ய கூடாதா?” என கடிந்து கொண்டார்.
“அப்பா! அம்மாவ ஏசாதிங்க. அப்புறம் உங்க கூட நான் பேச மாட்டேன். பாப்பாவே தான விழுந்தேன். என்னைய ஏசுங்க. அவங்கள எதுக்கு திட்டுறீங்க” என மிரட்டினாள் தான்யா.
‘உங்களுக்கு தப்பாம பிறந்துருக்கா. எப்படி சமாளிக்கிறீங்கன்னு நானும் பார்க்கறேன்’ சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டார் கற்பகம்.
“என் மக என்னம்மா பேசுறா. பெரிய வக்கீலா வருவா போல இருக்கே” என சொல்லி கொண்டே சாப்பிட தூக்கி சென்றார். சாதத்தை பிசைந்து, மடியிலே அமர வைத்து ஊட்டி விட்டார் சுந்தரம். அவர்களை ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தான் தருண். மகனையே கவனித்து கொண்டிருந்த கற்பகத்தின் உள்ளம் கணத்தது.
“தருண். சாப்பிட்டு முடிச்சிட்ட இல்ல. போ, போய் வீட்டு பாடத்தை செய். அம்மா வந்து செக் பண்ணுறேன்.” என மகனை அனுப்பினார்.
“கண்ணுக்குட்டி, இன்னிக்கு உங்களை தூங்க வச்சிட்டு அப்பா வெளிய போறேண்டா. நீங்க காலையில முழிக்கறதுகுள்ள வந்துருவேன். சமத்தா தூங்கனும். சரியா?”
“அப்பா, நீங்க அடிக்கடி என்னை விட்டுட்டு போறீங்க. உங்க மேல காலு போடாம என்னால தூங்க முடியாதுன்னு தெரியும் தானே. நேத்து, ராத்திரியில முழிச்சிகிட்டு உங்கள தேடுனேன்”
“அது வந்து மா. அப்பா ஆபீசுல கணக்கு முடிக்கிற டைம் மா. ராத்திரி வரைக்கும் வேல இருக்கு. இன்னிக்கு ஒரு நாளுதான். சரியா?”
“இன்னிக்கு மட்டும் தான். திரும்பவும் இப்படி செஞ்சீங்க உங்க கூட நான் கா” என செல்லம் கொஞ்சியபடியே அப்பாவுடன் மாடி ரூமுக்கு சென்றாள் தான்யா.
‘இப்போது எல்லாம் அடிக்கடி ராத்திரியில வெளிய போறாரு. கேட்டா எரிஞ்சி விழறாரு. விடிய விடிய யாரு ஆபிஸ்ச திறந்து வச்சிருக்காங்க ? திரும்பி வரும் போது தண்ணி வாடை வேற அடிக்குது. இத்தனை வருஷ வாழ்க்கையிலே இவரு தண்ணி சாப்பிட்டதில்லையே. இப்போ ஏன் திடீருனு’ கணவரின் போக்கை நினைத்து நெஞ்சில் பயபந்து உருண்டது கற்பகத்துக்கு. வழக்கம் போல் கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு வேலையை கவனிக்க சென்றார்.
தருண் பாடம் செய்யும் வரை காத்திருந்து, இரவு உடை அணிவித்து படுக்க செய்தார். தருணை சிறு வயது முதலே வள்ளியுடன் படுக்க பழக்கி இருந்தார். அவனை கண்டால் தான் சுந்தரத்துக்கு ஆகவில்லையே. பிறகு எங்கே தன்னுடன் படுக்க வைத்து கொள்வது. எல்லா விஷயங்களுக்கும் விட்டு கொடுத்த கற்பகம், தாய் பாசத்தை கூட விட்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டார்.
மறுநாள் சுந்தரம் வேலைக்கு சென்றவுடன், லெட்சுமி கற்பகத்தை அழைத்தார். இரண்டு வீட்டிற்கும் நடுவிலும் தாழ்வான மதில் சுவர் தான் இருக்கும். அவர்கள் எப்பொழுதும் அங்குதான் நின்று பேசி கொள்வார்கள். அங்கே தான் உணவு பதார்த்தங்களையும் பரிமாறி கொள்வார்கள்.
“சொல்லுங்க அக்கா. என்ன விஷயம்?”
“கற்பகம், எப்படி சொல்லுறதுன்னு தெரியலை. சொல்லாமலும் இருக்க முடியலை” என மென்று முழுங்கினார் லெட்சுமி.
“சும்மா சொல்லுங்கக்கா. ஏன் கிட்ட எதுக்கு தயக்கம்?”
“நேற்று என் வீட்டுகாரரு, உன் கணவரை ஒரு காப்பி ஷாப்ல ஒரு பொண்ணோட பார்த்தாராம்.”
“யாராவது கூட வேலை செய்யரவங்களா இருக்கும்கா”
“கூட வேலை செய்யறவங்க கைய தான் அரை மணி நேரமா பிடிச்சிகிட்டு இருப்பாங்களா? பக்கத்துல ஒரு பாப்பாவும் இருந்ததாம்.”
“என்னக்கா சொல்லுறீங்க?” என அதிர்ச்சியாக கேட்டார் கற்பகம்.
“ஆமா கற்பகம். அந்த பொண்ணு கண்ண கசக்கிகிட்டு இருந்துச்சாம். உன் வீட்டுக்காரரு தான் துடைச்சி விட்டாராம். என்னமோ சரி இல்லைன்னு இவரு என்கிட்ட சொல்லிகிட்டு இருந்தாரு. உனக்கு கண்டிப்பா தெரியனும்னு தான் சொன்னேன். பார்த்து கற்பகம், மேம்போக்கா இருந்துராதே.” என எச்சரித்துவிட்டு உள்ளே சென்று விட்டார் லெட்சுமி.
பாராங்கல்லை தூக்கி நெஞ்சில் வைத்தது போல் இருந்தது கற்பகத்துக்கு. அப்படியே இடிந்து போய் நின்றுவிட்டார். கண் முன்னே தன் இரு செல்வங்களும் வந்து போயினர். ‘கடவுளே இது மட்டும் நெஜமா இருக்க கூடாது. அவரு எனக்கு மட்டும்தான். என் வாழ்க்கையிலே மண்ண அள்ளி போட்டுறாதே’ என மனதில் கடவுளை வேண்டி கொண்டே இருந்தார். எந்த வேலையும் ஓடவில்லை. அத்தையிடம் சொல்லிவிடலாமா என நினத்தவர் பிறகு முடிவை மாற்றி கொண்டார். கணவரிடம் பேசும் முன் அத்தைக்கு சொல்லி அவரை கலவரபடுத்த விரும்பவில்லை கற்பகம்.
“அத்தை எனக்கு தலைவலியா இருக்கு. மீதி சமையல முடிச்சிடுறீங்களா?”
“சரி மா. நீ போய் ஒரு தலைவலி மருந்து போட்டுட்டு கொஞ்சம் நேரம் படு. தானுவ நான் பார்த்துகிட்டே சமைச்சிருறேன்.”
மேலே அறைக்கு வந்த கற்பகம் தன் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் உகுத்தபடியே தூங்கி போனார்.
மாலையில் வீடு வந்த சுந்தரம் எப்பொழுதும் போல் மகளிடம் விளையாடாமல் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தார். ஆசையாக வந்த மகளை விலக்கி நிறுத்திவிட்டு குளிக்க சென்றுவிட்டார்.
“என்ன ஆச்சி இவனுக்கு? பிள்ளயை கூட தூக்காம மேல போயிட்டான். நீ வாடி ராஜாத்தி பாட்டி இன்னிக்கி ஊட்டுறேன்” என பேத்தியை சாப்பிட அழைத்து சென்றார் வள்ளி.
நடப்பதை அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தார் கற்பகம். குளித்து விட்டு வெளியே செல்ல தயாராகி வந்த சுந்தரத்தை அழைத்தார் கற்பகம்.
“அத்தான், நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்”
“என்னது, சீக்கிரம் சொல்லு. நான் வெளிய போகனும்” என அவசரபடுத்தினார் அவர்.
“இப்ப எங்க போறீங்க?”
அமைதியாக திரும்பி கற்பகத்தை ஊடுறுவி பார்த்தார் சுந்தரம். அவர் முகத்தில் ஆச்சரியமும், குற்ற உணர்ச்சியும் ஒருங்கே தோன்றியதை குறித்துக் கொண்டார் கற்பகம்.
“என்ன புதுசா கேள்வி எல்லாம் கேட்கிற?”
“உங்க பழக்கங்கள் புதுசா இருக்கிறதனால எனக்கு கேள்வி கேட்கிற நிர்ப்பந்தம் ஆகி போச்சி”
“என் அருமை பட்டிக்காட்டுக்கு பேச்சு திறமை அதிகரிச்சிரிச்சி போல. சுகமா உட்கார்ந்து சாப்பிடற கொழுப்போ?”
கற்பகத்துக்கு கண்ணீர் வழிந்தது. ‘இப்படி அழ வச்சி திசை திருப்பனும்னு தான் இப்படி பேசுறாங்க. இதுல ஏமாந்துற கூடாது’ என அறிவுறுத்தி கொண்டவர்,
“பேச்சை மாத்தாதீங்க. இப்ப எங்க போறீங்கன்னு சொல்லுங்க” என கேட்டார்.
தனது தந்திரம் மனைவியிடம் பலிக்கவில்லை என்றவுடன் சுந்தரத்துக்கு பெரும் கோபம் வந்தது.
“எங்கன்னு சொன்னா மட்டும் உனக்கு எந்த எடம்னு தெரிஞ்சிருமா? நாலு சுவத்துக்குள்ள இருக்கிற கிணற்று தவளை நீ, என்னையே கேள்வி கேக்குறயா?”
“அத்தான், இப்படி திரும்ப திரும்ப என்னை மட்டம் தட்டறதனால நீங்க செய்யுற தவறு எனக்கு தெரியாதுன்னு நெனைக்காதீங்க”
“என்னடி தெரியும் உனக்கு. சொல்லு பாப்போம். பெருசா பெரிய இவ மாதிரி பேச வந்துட்டா.”
“யாரு அந்த பொம்பள?”
அந்தக் கேள்வியை எதிர்ப்பார்க்காத சுந்தரம் திகைத்து நின்றுவிட்டார்.
“சொல்லுங்க அத்தான், யாரு அவ?” என கத்தினார் கற்பகம்.
சண்டை சத்தம் கேட்டு வள்ளியும் பிள்ளைகளும் ஹாலுக்கு ஓடி வந்தனர். பெற்றவர்களின் கோப முகத்தை பார்த்த பிள்ளைகள் இருவரும் பாட்டியின் காலை இருக கட்டி கொண்டனர்.
“ஓ தெரிஞ்ரிருச்சா!” என கேட்டவாறே மூச்சை ஆழ எடுத்துவிட்டார் சுந்தரம். அவரது செய்கை மனதின் பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருந்தது.
அவர் இறக்கி வைத்த பாரம் இப்பொழுது கற்பகத்தின் நெஞ்சில் ஏறியது. அப்படி ஒன்றும் இல்லை என கணவர் மறுப்பார் என்ற நப்பாசையின் மேல் மண் விழுந்ததில் அதிர்ந்து போனார் அவர்.
“எப்படி சொல்லுறதுன்னு நானே சில நாளா தவிச்சுக்கிட்டு இருந்தேன். உனக்கே தெரிஞ்சு போனதுல எனக்கு நிம்மதி.”
“சுந்தரம், என்னப்பா பேசுற நீ?” என அதட்டினார் வள்ளி.
“நீங்க சும்மா இருங்கம்மா. உங்களால தான் என் வாழ்க்கையின் சந்தோஷமே போச்சு. என்னை இமோஷனல் ப்ளாக்மேல் பண்ணி, மோனாவ என்கிட்ட இருந்து பிரிச்சி இவள என் தலையில கட்டி வச்சீங்க. அப்பவே என் வாழ்க்கையின் மொத்த நிம்மதியும் போச்சி. என் மேல உள்ள கோபத்துல நல்லா விசாரிக்காம ஒருத்தன கல்யாணம் செஞ்சு இல்லாத கொடுமையெல்லாம் அனுபவிச்சிட்டா மோனா. அவன் விட்டுட்டு போனதில இப்ப அனாதரவா நிக்கிறா. என்னால எப்படி மா பார்த்துகிட்டு இருக்க முடியும்.
“இனிமே அவள என்னால விடமுடியாதுமா. உங்களுக்காக நான் விட்டு கொடுத்ததெல்லாம் போதும். இனிமே எனக்காக, என் சந்தோஷத்துக்காக வாழ போறேன்.”
“சுந்தரம், என்ன பேசறன்னு புரிஞ்சி தான் பேசுறியா? உன்னை நம்பி உன் பொண்டாட்டி இருக்கா, ரெண்டு பிள்ளைங்க இருக்கு. யாரோ ஒருத்திக்காக இவங்கள அனாதையா விட போறீயா”
“யாரோ ஒருத்தின்னு சொல்லாதிங்கம்மா. கட்டின கடமைக்கும், பெத்த கடமைக்கும் வேணும்னா, மாதா மாதம் ஜீவனாம்சம் மாதிரி பணம் தரேன். அவள அவங்க அப்பா வீட்டுக்கே போக சொல்லுங்க” என இரக்கமின்றி கூறினார் சுந்தரம்.
தன் கணவர் வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பெண் இருக்கிறாள், தனக்கு மறைத்தே திருமணம் செய்திருக்கிறார்கள் என்ற செய்தியே கற்பகத்தை நிலைகுலைய வைத்தது. இப்போது சுந்தரம் பேசியது அவர் பெண்மைக்கே அவமானமாக இருந்தது.
கணவனின் முன்பு வந்து நின்றவர், கொத்தாக அவரது சட்டையை பிடித்து,
“என்ன சொன்னீங்க? எங்க அம்மா வீட்டுக்கு போகனுமா? இப்படி நிராதரவா விடத்தான் என்னை கல்யாணாம் செஞ்சீங்களா? வேற ஒருத்திய மாய்ஞ்சு மாய்ஞ்சு காதலிச்சவங்க ஏன் என்னை கட்டிகிட்டீங்க? ஏன் என்னை அங்கிருந்து பிரிச்சி கூட்டி வந்தீங்க? எதுக்கு என் கூட குடும்பம் நடத்துனீங்க? எதுக்கு பிள்ளைய பெத்துக்கிட்டீங்க? சொல்லுங்க சொல்லுங்க” என பேய் பிடித்தவர் போல் சுந்தரத்தை உலுக்கினார்.
கற்பகத்தின் கையை பிரித்து நகர்த்தி தள்ளினார் சுந்தரம். தள்ளிய வேகத்தில் கீழே விழுந்த கற்பகம் மேசை நுனியில் இடித்துக் கொண்டு மூர்ச்சையானார். ரத்தம் நெற்றியிலிருந்து பீறிட்டு கொண்டு வந்தது. பிள்ளைகள் கதறி கொண்டு ஓடி வந்து அம்மாவை அணைத்து கொண்டனர். வள்ளி ஓடி சென்று தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தார். கைலியை கிழித்து நெற்றியில் கட்டினார். இத்தனையையும் சுந்தரம் உணர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
மயக்கம் தெளிந்த கற்பகம், அருகில் கவலையுடன் இருந்த வள்ளியை கட்டிக்கொண்டு கதறிவிட்டார்.
“நீங்க கூட என்னை ஏமாத்திட்டீங்களே அத்தை. உங்களை தெய்வமா மதிச்சேனே. உங்க மகளா இருந்தா இந்த மாதிரி துரோகத்தை செய்வீங்களா?” என தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
“ஐயோ கற்பு, என்னை மன்னிச்சிரும்மா. இவன் இப்படி பண்ணுவான்னு நான் நெனைக்கலியே” என அவரும் அழுதார்.
“ரெண்டு பேரும் அழுது முடிச்சிட்டீங்கனா அடுத்து என்ன செய்யறதுனு பேசலாம்” என நக்கலாக பேசினார் சுந்தரம்.
வள்ளி மருமகளை மெதுவாக எழுப்பி நாற்காலியில் அமர வைத்தார். பிறகு அவரின் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து சுந்தரத்தைப் பார்த்தார்.
“கடைசியா கேக்குறேன், என் மருமக கூட வாழ போறியா இல்லையா?”
மெதுவாக என்றாலும் தீர்க்கமாக அந்தக் கேள்விக்கு பதில் அளித்தார் கற்பகம்.
“இனிமே அவரா என் கிட்ட திரும்பி வந்தாலும் எனக்கு வேணாம் அத்தை. எப்ப இன்னொருத்திய மனசுல வச்சிக்கிட்டு என் கூட வாழ்ந்தாரோ, அப்பவே என் காதல் செத்து போச்சி. செத்த பிள்ளைக்கு ஜாதகம் பார்க்கிற மாதிரி, செத்த என் வாழ்க்கைக்கு நீங்க போராடாதீங்க” என தேம்பினார்.
“ஒன்னுக்கும் வக்கு இல்லாத போதே , உனக்கு இந்த வாய் நீளுது இல்ல. உன் பிள்ளைகளை கூட்டிகிட்டு என் வீட்டை விட்டு போடீ” என கத்தினார் சுந்தரம். கற்பகம் காலில் விழுந்து கெஞ்சுவார், தன் அம்மாவை பார்த்துக் கொள்ளவாவது இங்கேயே வைத்து கொள்ளலாம் என நினைத்த அவருக்கு, கற்பகம் ரோசத்தோடு பேசவும் ஆத்திரம் வந்துவிட்டது.
வள்ளிக்கு எங்கிருந்து தான் அப்படிபட்ட ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை, மகனை மாறி மாறி அறைந்து தள்ளி விட்டார்.
“அவ எதுக்குடா வீட்ட விட்டு போகனும்? நீ போடா! இது என் வீடு. என் பேருல இருக்கு. இத்தனை வருஷமா உன்னை பெத்து வளர்த்ததுக்கு நீ குடுக்குற விலையா நெனைச்சிக்கிறேன்.”
“என்னையா வெளிய போக சொல்லுறீங்க. நான் இல்லாட்டி நீங்க எல்லாரும் சோத்துக்கு சிங்கி அடிக்கணும். அதை மறந்திராதிங்க”
“போடா போடா இவனே! உங்கப்பன் போன பின்னாடி ஒத்தை மனுசியா உன்னை வளர்த்தவடா நான். அந்த திடம் இன்னும் எனக்கு இருக்கு. என் மருமகளையும் , பேர புள்ளைங்களையும் என்னால காப்பாத்த முடியும்டா. இப்ப சொல்லுறன் கேட்டுக்கோ. என் மகன் இன்னியோட செத்து போய்ட்டான். இனிமே எனக்கு இருக்கிறது மகதான். நான் செத்தா கூட இந்த வீட்டுல நீ கால வைக்காத. என் மக கற்பகம் எனக்கு கொள்ளி போடுவா” என சூளுரைத்தார் வள்ளி.
சுந்தரம் கோபத்துடன் தனது துணிமணிகளை எடுத்து கொண்டு வெளியேற போனார். அப்பா என ஓடி வந்து தான்யா அவர் கால்களை கட்டி கொண்டாள்.
“சீ போ எட்ட. உங்க பாட்டிக்கு நான் மகனே இல்லைன்னு சொல்லிட்டாங்க. எங்க இருந்து வந்தது இந்த அப்பன் உறவு” என அவளை உதறி தள்ளிவிட்டு வெளியேறினார் சுந்தரம். அவர் தள்ளிய வேகத்தில் கற்பகத்தின் காலடியில் விழுந்தாள் தான்யாஸ்ரீ.
மகளை வாரி எடுத்து அணைத்துகொண்டார் கற்பகம். அவள் அப்பா என கத்திய ஓலம் அந்த குடியிருப்பு எங்கும் எதிரொலித்தது.
எட்டி நில்லு….