ENE— epi 18

ENE— epi 18

அத்தியாயம் 18

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பிணைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போதும் தோள் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

“டேய் மச்சான்! அங்க பாருடா. சாவடி சரக்கு” என்றான் நரேன்.

“ஆமாடா. செம்மையா இருக்கா. ஆனா என்னா அந்த முடிதான் மச்சான், புதினா சட்னியை கொட்டி வச்ச மாதிரி இருக்கு.” என சொன்னான் வினோ.

“ஹாஹாஹா! செம்ம காமெடிலா இது”

“ஏன்டா, நம்ம பையனுங்க யாரும் கிடைக்கவில்லையா? இப்படி வெள்ள தோலு சீன பையன் கூட சுத்திக்கிட்டு இருக்கா”

“நம்ம மாதிரி ஹெண்ட்சமான கைங்கள பாத்திருக்க மாட்டா. வா மைக் ஒரு என்ட்ரி குடுப்போம்”

தான்யாவும் நண்பர்களும் பினாங்கு லிட்டல் இந்தியாவிலுள்ள கடையில் சாப்பிட்டுவிட்டு சுற்றி கொண்டிருந்தார்கள்.  தானுவின் பிறந்தநாளுக்கு மதிய உணவு இந்தியன் ரெஸ்டாரண்டில் சாப்பிடலாம் என அங்கு வந்திருந்தார்கள்.

அங்கிருந்துதான் இந்த இரு இளைஞர்களும் அவர்களின் பின்னாலே வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தமிழிலே பேசி கொண்டு வந்ததால், தான்யாவை தவிர மற்றவர்களுக்கு தப்பாக எதுவும் தெரியவில்லை.

“மச்சி, குட்டிக்கு கேக்குற மாதிரி பாட்டு ஒன்னு எடுத்து விடு பார்ப்போம்” என்றான் முதலாமவன்.

“இரு வினோ, சிட்டுவேஷனுக்கு ஏத்த மாதிரி பாட்டு ஒன்னும் சிக்கமாட்டிக்குது. ஏன் நீதான் பெரிய மண்டையாச்சே. நீ பாடேன்.”

“இப்ப பாரு.

பொளர்ணமி நேரம் பாவை ஒருத்தி

மின்னல் போலே முன்னால் போனாள்

பின்னல் கண்டு பின்னால் போனேன்”

“போ மச்சி, அங்க பின்னலையே காணோம்.அதோட இது என்ன டைனசோர் கால பாட்டெல்லாம் பாடுற. பொண்ணு நம்பள ஓல்டுங்க லிஸ்டுல சேர்த்துற போகுது”

“சரி விடு, புதுசா ட் ரை பண்ணுறேன். உன் பேர் என்ன தெரியாது, ஊர் என்ன தெரியாது, பரவாயில்லை. பழகிக்கலாம் வாட்ஸ் யுர் நேம் அண்ட் நம்பர் கேள், பழகிக்கலாம். ”

“கலக்கிட்ட போ. ஆனா ஒரு ரெஸ்பொன்சும் காணோமே. இரு நான் கூப்புடுறேன். ஏய் புள்ள முத்து, என் முத்தழகி. மாமனுங்கள கொஞ்சம் திரும்பி பாக்குறது. ”

தான்யா ஶ்ரீ அவர்களை திரும்பி பார்த்து முறைத்துவிட்டு வேகமாக நடந்தாள். என்னமோ சரியில்லை என நண்பர்களும் அவளுடனே நடையை எட்டி போட்டனர்.

தானு டேனியின் கையை இருக்கி  பிடித்து கொண்டாள்.

“என்னாச்சு டான்யா? அவனுங்க என்ன சொன்னானுங்க? ”

“ஒன்னும் இல்லை டேனி. நாம போலாம். வெளிய வந்த இடத்துல இதெல்லாம் கண்டுக்க கூடாது.”

“பாருடா, அவன் கையை பிடிச்சுகிட்டு போறா.

“ஏய், நில்லுடி. கூப்புடுறோம்ல. கேக்காத மாதிரி போற. கொழுப்பா?”

தானு வேகமாக நடையை எட்டி போட்டாள்.

“ஏன்டி, நீங்க எல்லாம் இப்படி வெள்ளையா உள்ளவனுங்க பின்னாடி போயிட்டா, நாங்க என்னடி பண்ணுவோம்? இவனை பார்த்தா மட்டும் இனிக்குது. எங்கள பார்த்தா கசக்குதா?”

அந்த வார்த்தையை கேட்ட பிறகு பிரேக் போட்ட மாதிரி படக்கென நின்றாள் தான்யா. திரும்பி அவர்களை நோக்கி நடந்தாள். டேனியும் மற்றவர்களும் அவளை பின் தொடர்ந்தனர்.

“என்னடா சொன்ன?”

“என்ன சொன்னாங்க? அவனை பார்த்தா இனிக்குதான்னு சொன்னேன்” என தெனாவெட்டாக கேட்டான் நரேன்.

அவனருகே சென்றவள், அவன் எதிர்பாராத நேரத்தில் மணிக்கட்டை பற்றி முறுக்கினாள். பெண் தானே என்ன செய்து விடுவாள் என அசால்டாக இருந்தவன், அவள் கொடுத்த அழுத்தத்தில் கத்தி விட்டான். டேனி மற்றவனை பிடித்து கொண்டான். ரஹ்மானும் லிண்டாவும் தான்யாவுக்கு காவலாக நின்று கொண்டார்கள். என்ன நடக்கிறது என புரியாவிட்டாலும் மூவரும் தோழிக்கு பக்கபலமாக நின்று கொண்டனர்.

“ஏ!! விடுடி வலிக்குது”

“காது கேட்கல”

“விடுங்க , வலிக்குது”

“இப்ப நல்லா கேட்குது. ஏன்டா, ஒரு ஆணும் பெண்ணும் ஒன்னா வெளிய வந்தா, அது காதலர்களா தான் இருக்கணுமா? ப்ரண்ட்ஸிப்புன்னு ஒரு வார்த்தை இருக்கே, அதுவா இருக்கக் கூடாதா?” என கேட்டவாறே அவன் கையை விடுவித்தாள்.

கையை உதறி கொண்டவன், அவளை முறைத்துப் பார்த்தான். அதற்குள் அங்கே வந்த ஒரு வாட்டசாட்டமான ஆள்,

“இங்கே என்ன நடக்குது? ஏம்மா, ஏதாவது பிரச்சனையா?” என தான்யாவை பார்த்து கேட்டார். அவர் வேறு யாரும் இல்லை, தானுவின் பாதுகாப்புக்காக விபா ஏற்பாடு செய்திருந்த சேக்குரிட்டி தான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அங்கிள். சும்மா பேசி கிட்டு இருந்தோம்” என்றான் வினோ.

“ஆமாவா மா? நீங்க சொல்லுங்க” என தான்யவை பார்த்து மறுபடியும் கேட்டார்.

வந்த இடத்தில் எதற்கு பிரச்சனை என எண்ணிய தானு ஆமாம் என தலையாட்டினாள்.

“அப்ப சரி, நீங்க போங்க. டேய் தம்பிகளா நீங்களும் கிளம்புங்க”

“வாடா எடத்தை கழுவலாம். ஆளை பார்த்தா மப்டியில வந்த போலீஸ் மாதிரி இருக்கான்” என நண்பனிடம் குசுகுசுத்தான் வினோ.

அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். சிறிது தூரம் சென்று ஒரு கடை ஓரமாக நின்று கொண்டு நண்பர்கள் குழு எங்கே செல்கிறார்கள் என நோட்டமிட்டனர். தான்யாவும் நண்பர்களும் அருகில் உள்ள ஜவுளி கடையில் நுழைந்ததை கவனித்த நரேன், கைத்தொலைபேசியை எடுத்து மற்றொரு நண்பனை அழைத்தான்.

“மச்சி, லிட்டல் இந்தியால இருக்கோம். இன்னும் ஐந்து நிமிசத்துள்ள நீ இங்க இருக்கணும். உனக்கு ஒரு பொண்ண ப்போலோ பண்ணுற வேலை இருக்கு.சீக்கிரம் வா. மீதி கதைய நேருல பேசலாம்.”

“நரேன், என்னடா செய்ய போறே?” என கேட்டான் வினோ.

“மச்சி, ஒரு பொம்பள என் கையை புடிச்சு முறுக்கிட்டாடா. என்னால அதை ஏத்துக்கவே முடியலை. அந்த ராங்கிக்காரிக்கு வைக்கிறேன் பாரு கச்சேரி. சரி, உங்க அம்மா வீட்டுக்கு வந்துருப்பாங்களா?”

“இன்னும் இருக்காதுடா”

“அவங்களுக்கு போனை போட்டு நான் சொல்லுற மருந்த அவங்க வேலை செய்யுற வேட்டினரி கிளினிக்குள்ள இருந்து போர்த்திட்டு வர சொல்லு.” என மருந்தின் பெயரை சொன்னான்.

இவர்களின் திட்டத்தை அறியாத நண்பர்கள் சிரித்து பேசியபடி ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். லிண்டா, தோழியின் திருமணத்திற்கு அணிய லேங்கா ஒன்றை தேடிக்கொண்டிருந்தாள். நால்வரும் கடையையே திருப்பி போட்டு அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர்.

“டான்யா. அவனுங்க என்ன சொன்னானுங்க நீ இந்த அளவு ரியாக்ட் ஆகற அளவுக்கு?”

“என்னை பற்றி பேசுனாங்க பொறுத்துக்கிட்டேன். நம்ம ப்ரண்ட்ஷிப்ப கேவலமா பேசுனா என்னால எப்படி சும்மா இருக்க முடியும் டேனி. நீயும், நானும் கப்பிள்ஸ் மாதிரி பேசுனாங்க. அதான் கையை முறுக்குனேன். எங்க பாட்டி ட்ரைனிங். எலும்ப எண்ண சொல்லி குடுத்துருக்காங்க. என் கிட்டயேவா? அவன் எப்படி கத்துனான் பாத்தியா. ஹாஹாஹா”

டேனி சிரிக்காமல் அமைதியாக இருந்தான்.

‘இதுக்கே இப்படி ரியாக்ட் பண்ணா, என் காதலை எப்படி உன் கிட்ட சொல்லுவேன்? என் காலை கழட்டி கையில குடுத்துருவியோ. என்னடா உனக்கு வந்த சோதனை’ என எண்ணியபடியே கையில் பியானோ வாசிக்க ஆரம்பித்தான்.,

“நீ எதுக்கு இப்ப நெர்வஸ் ஆகுற? வா என் செலவுல உனக்கு இஞ்சி டீ வாங்க தரேன். லிண்டா, ஏதாவது உருப்படியா கிடச்சுதா?”

ஷாப்பிங்கை முடித்து கொண்டு நண்பர்கள் நால்வரும் ஹோட்டலுக்கு திரும்பினர். சற்று நேரம் இளைப்பாறி விட்டு கடலுக்கு குளிக்க செல்லலாம் என முடிவு. ஐந்து மணிவாக்கில் லோபியில் சந்தித்து கொண்டவர்கள் மெதுவாக கடற்கரைக்கு நடந்து சென்றனர். ஹோட்டலில் தங்குபவர்கள் மட்டுமே அந்த பிரைவேட் பீச்சை பயன்படுத்த முடியும்.

தான்யா கருப்பு நிற டீ சர்ட்டும், பெரிய செம்பருத்தி பூக்கள் போட்ட அரைக்கால் பேண்டும் போட்டிருந்தாள். கடலை அடைந்தவுடன், தொப்பென மணலில் அமர்ந்து கொண்டாள் தான்யா.

“டான்யா, கமான். குளிக்கலாம்” என அழைத்தாள் லிண்டா.

“நீ போ. இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன் என்றவாரே எடுத்து வந்திருந்த புத்தகத்தைத் திறந்தபடி மல்லாக்க படுத்து கொண்டாள். கடல் காற்று முகத்தில் மோத, இளஞ்சூரிய கதிர்கள் சிறு வெப்பத்தை பரப்ப, அமைதியாக புத்தகத்தில் ஆழ்ந்து போனாள்.

மற்ற மூவரும் கடலில் தண்ணீரை ஒருவர் மேல் ஒருவர் வாரி அடித்தபடி குளித்து கொண்டிருந்தனர். திடீரென முகத்தில் தண்ணீர் அடிக்கபட்டதில் வாரி சுருட்டி கொண்டு எழுந்தாள் தான்யா. முகத்தை துடைத்து கொண்டு சுற்றிலும் பார்த்தாள் அவள். தூரத்தில் யாரோ ஓடுவது தெரிந்தது.

“டேய், யாருடா நீ? சிவனேன்னு உட்கார்ந்துருக்கறவங்க மூஞ்சில தண்ணி அடிச்சிட்டு போற. நீ நல்லா இருப்பியா? அப்படியே ஜோவ்ஸ் வந்து உன்னை மட்டும் தூக்கிட்டு போக” என கத்தி சாபமிட்டாள்.

தூரத்தில் ஓடி கொண்டிருந்த விபாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் துரத்தி வரவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு மணலில் அமர்ந்தான்.

‘பீச்சுக்கு வந்துட்டு, மேடத்துக்கு என்ன புக்கு வேண்டி கிடக்கு. இங்க ஒருத்தன் அவளையே நினைச்சிகிட்டு சுத்தி கிட்டு இருக்கேன். இவ என்னன்னா ஈட், பிரேய், லவ்ங்கிற புக்க வைச்சிக்கிட்டு படுத்துருக்கா. புக்குல மட்டும் தான் லவ் எல்லாம். ஒருத்தன் லவ் சொன்னா ஆளை கூட்டி வந்து மிரட்டுறது.’

தண்ணீர் பட்டவுடன் அவள் முகம் போன போக்கை நினைத்து நினைத்து சிரித்தான் விபா. அவளை போலவே மணலில் படுத்துக்கொண்டு வானத்தை வெறித்தான்.

‘என் செல்லக்குட்டி. எனக்கு மட்டும் யெஸ் சொல்லிருந்தா உன் பிறந்த நாளை இப்படியா மறைந்து, மறைத்து கொண்டாடி இருப்பேன். ஹ்ம்ம் எதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்’ என எண்ணியபடியே நேற்றிரவு அவள் அறைக்கு சென்றதை அசைப்போட்டான்.

கட்டிலருகே சென்ற விபா, தூங்கிக் கொண்டிருக்கும் தான்யாவையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். டேபள் லாம்பின் வெளிச்சத்தில் அவளது கன்னம் மட்டும் பளபளவென மின்னியது. கொஞ்சம் நெருங்கி வந்து பார்த்தால், கண்ணீர் கரை.

ஏன் அழுதிருப்பா என யோசிக்கும்போதே மெதுவாக பாடல் சத்தம் கேட்டது.

பூங்காற்றிலே சிறு பூங்கொடிபோல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னைப் பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே”

‘போனில் பாடல் ஓடவிட்டிபடியே தூங்கிட்டா போல’ என எண்ணி கொண்டே பக்கத்தில் நின்றிருந்தான் விபா. அவன் அங்கே இருந்த அரை மணி நேரத்துக்கும் அதே பாடல் திரும்ப திரும்ப ஒலித்து கொண்டு இருந்தது.

‘ரிப்பிட் மோட்ல போட்டுருக்கா போல. அப்பா மகளுக்கு படிக்கிற இந்த பாடலையே திரும்ப திரும்ப கேக்குறானா, அப்பா ஞாபகம் வந்துருச்சு என் குட்டிக்கு. ஹ்ம்ம். எப்படி அழுதிருக்கா பாரு. யோவ் மாமா, நீ மட்டும் என் கையில கிடைச்ச நேரா பரலோகம் தான். என் கண்ணுகுட்டி கடைசியா ஒரு தடவை அழுது முடிச்சுக்குவா. நீ எங்கேயே இன்னும் இருக்கவும் தானே தினம் தினம் அழறா.’ என சுந்தரத்துக்கு மனசுக்குள்ளேயே கருமாதி நடத்தினான் விபா.

திடீரென சடசடவென மழை பொழிந்ததில், தன் நினைவுகளில் இருந்து விடுபட்ட விபா சுற்றிலும் பார்த்தான். எல்லோரும் ஹோட்டலுக்கு திரும்பி சென்றிருந்தார்கள். மெதுவாக எழுந்தவன் மழையில் நனைந்தபடியே நடந்து ரூமை நோக்கி சென்றான்.

குளித்து முடித்து முடியை ஹேர் டிரையாரில் காய வைத்தபடியே தனது முகத்தை ஆராய்ந்தாள் தான்யா. ‘போச்சு போ, சன் பேர்ன் ஆயிருச்சே. லோசன் போட மறந்துட்டேனே. இப்ப டேனி பார்த்தா கத்த போறான். சரி, சரி, நமக்கா சமாளிக்க தெரியாது’ என தனக்குள்ளே முனுமுனுத்தவள் மெல்ல பேபி பவுடரை முகத்துக்கு ஒற்றினாள். கொஞ்சமாக லிப் பால்ம் பூசி கொண்டவள், அறைக்குள் வந்து பேக்கை திறந்தாள். இன்று எல்லோரும் ஹோட்டல் உள்ளேயே இருக்கும் பார் அன்ட் பிஸ்ட்ரோவுக்கு செல்வதாக ஏற்பாடு. அதற்கு தோதாக கவுனை எடுத்து அணிந்து கொண்டாள். நீலமும் வெள்ளையும் கலந்த கலரில் முட்டிக்கு கொஞ்சம் மேலே இருக்கும் கவுன் அது. இடுப்புக்கு மேலே உடம்பை கவ்வி பிடித்த படியும், இடுப்புக்கு கீழே விரிந்து பாவாடை போலவும் இருக்கும். காதுக்கு வெள்ளை கல் பதித்த தோட்டை அணிந்து கொண்டு கிளம்பி கீழே போனாள்.

அவளை பார்த்த டேனி,

“வாவ் டான்யா. யு லுக் ஸ்தன்னிங்”

“டேய், அடங்குடா. போன பேர்த்டேக்கு நீ வாங்கி குடுத்தது தான்.” என பேசியபடியே பிஸ்ட்ரோ உள்ளே சென்றார்கள். ஆட்கள் நிரம்பி வழிந்தார்கள் அதன் உள்ளே. ஏற்கனவே புக் செய்திருந்ததால், அவர்களுக்கு உட்கார இடம் கிடைத்தது. உணவை ஆர்டர் செய்து விட்டு சுற்றிலும் கவனித்தாள் தான்யா. பெரிய இடம் தான், இசை காதை கிழிக்காமல் தென்றலாய் வருடி சென்றது. டீஜே சிஸ்டம் அருகே ஆடுவதற்கு இடம் இருந்தது. சில ஜோடிகள் ஏற்கனவே ஆட்டத்தை தொடங்கி இருந்தனர். சிகரேட் வாடை எதுவும் இல்லாமல் டீசன்டாக இருந்தது அவ்விடம். ரிலாக்ஸ் ஆக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஆடுபவர்களை வெடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள் தான்யா. விபாவும் அங்கே தான் தூரமாக அமர்ந்திருந்தான். கூசிங் கிளாசுடன் , கேப் பிராண்ட் தொப்பியும் அணிந்திருந்தான். அவனுக்கு அடுத்த மேசையில் தான் நரேனும், வினோவும் குரோதத்துடன் தான்யாவை பார்த்த படி அமர்ந்திருந்தனர்.

‘இவ எதுக்கு இப்படி உடம்ப பிடிக்கற மாதிரி சட்டை போட்டுட்டு வந்துருக்கா? இங்க உள்ளவனுங்கெல்லாம் அவளையே பார்க்கிறானுங்க. இந்த டேனி கூட இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்க்குறான். டேய், வந்தேன் அந்த கண்ணை நோண்டிருவேன்’ என்னம்மோ தன் காதலி தான் உலக அழகி என்ற ரேஞ்சுக்கு பில்ட் அப் செய்தபடி அமர்ந்திருந்தான் விபாகர்.

“டான்யா, கோக்டேயில் குடிக்கிறீயா?” என கேட்டான் ரஹ்மான்.

“வேணாடா, வெறும் கோக் போதும்”

“சும்மா ட்ரை பண்ணி பாரு டான்யா. அல்கோஹல் கொஞ்சம் தான் கலக்குவாங்க. மேய்னா பழரசம் தான் இருக்கும்” என கூறினாள் லிண்டா.

டேனியின் முகத்தைப் பார்த்தாள் தானு.

“பரவாயில்லை குடி. ஒன்னும் செய்யாது. ஒரு கிளாஸ் தானே. ‘மலிபு’ நல்லா இருக்கும். அன்னாசி சாறு கலப்பாங்க. இரு நான் ஆர்டர் செய்யுறேன்.”

பிங்கும், மஞ்சளும் கலந்த கலரில் வந்தது மலிபு. அன்னாசி துண்டு ஒன்று கிளாசில் சொருக பட்டிருந்தது. சிறு குடை குச்சியும் சொருக பட்டிருந்தது.

“சிப் பண்ணி குடி. பெசிக்கலி இது அன்னாசி சாறு தான். ரஹ்மான் இதுக்கு மேல டான்யாக்கு வேற ட்ரிங்க்ஸ் எதுவும் ஆர்டர் செய்யாதே”

பேசியபடியே நண்பர்கள் உணவு உண்டனர். ஆடி கொண்டிருப்பவர்களையும் தங்களுக்குள்ளே கலாய்த்து சிரித்தனர்.

“ஷல் வீ டான்ஸ்” என கையை ஆங்கிலேயர்கள் பாணியில் நீட்டி கேட்டான் டேனி.

சிரித்தபடியே அவளும் அவனுடன் எழுந்து சென்றாள். லிண்டாவும் ரஹ்மானும் அவர்களுடனே எழுந்து சென்றார்கள். நண்பர்கள் நால்வரும் மாற்றி மாற்றி ஒருவரோடு ஒருவர் ஆடினார்கள். தானு வளைந்து நெளிந்து ஆடுவதை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் விபா.

‘அடிப்பாவி. இப்படி ஆடுறே? ஏற்கனவே என்னை ஆட்டி வைக்கிற. இதுல இப்படி ஆடுனா நான் டோட்டல் சரண்டர் தான். தானும்மா, போதும்மா வந்து உக்காந்துரு. இல்லைன்னா நான் விடுற ஜொள்ளுல தரையே வழுக்கிரும்மா.’

விபா உள்ளே இருக்கவும், செக்குரிட்டி வாசலிலேயே நின்று கொண்டார். விபாவும் தானுவை சைட்டடித்து கொன்டிருந்ததால் நடந்த விபரீதத்தை பார்க்கவில்லை.

நண்பர்கள் நால்வருமே சிறு வயதினர். இப்படி அடிக்கடி பாருக்கு வந்து பழக்கப்படாதவர்கள். அதனாலேயே, மேசையை அப்படியே விட்டு விட்டு  நால்வருமே ஆட சென்றிருந்தனர். இந்த மாதிரி இடங்களுக்கு வரும் போது, குடித்து முடிக்காத பானங்களை ஒருத்தராவது கவனித்து கொள்ள வேண்டும் என்ற சூட்சுமத்தை அறியாதவர்கள்.

மெதுவாக எழுந்த நரேன், பில் பே செய்ய செல்வது போல் நடந்து சென்று மாத்திரையை தான்யாவின் பானத்தில் கலந்து விட்டான். பிறகு வேகமாக திரும்பி வந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

“மச்சி, இந்த ட்ரக் கலந்த பானத்தை குடிச்ச உடனே என்ன ஆகும்” என கிசுகிசுப்பாக கேட்டான் வினோ.

“முதல்ல வாந்தி வர மாதிரி இருக்கும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அப்படியே மயங்கிருவா.”

“சரி மருந்த போட்டுட்ட, அதுக்கப்புறம் என்ன பிளான்?”

“டேய், இவ்வளவு நேரமா நான் சொன்னதை எதுவும் கேக்கலியா?”

“இல்லை மச்சி, பயத்துல சரியா கேக்கல”

“வெளங்கிரும் டா. எப்படியும், வாந்தி வருதுனா பாத்ரூம் போவா. அந்த கோரிடார்ல வச்சி தூக்கிரலாம். டாய்லட் பக்கத்துல ஒரு எக்ஸீட் இருக்கு. வெளிய நம்ப கூட்டாளி கார்ல காத்துகிட்டு இருக்கான். ஒரே எஸ்கேப்பு. என் கையையா முறுக்குனே. இருக்குடி உனக்கு.”

“மச்சி, அவ பிரண்ட் கூட வந்தா என்னடா செய்யுறது?”

“ஹோட்டல்ல வேலை செய்யுற எனக்கு தெரிஞ்ச பையன் கிட்ட ஹோக்கி ஸ்டிக் குடுத்து கோரிடர் கிட்ட ஒளிச்சு வைக்க சொல்லியிருக்கேன். நீ கூட வரவங்க மண்டையிலே போட்டுரு.”

“செம்ம பிளான் மச்சி. இரு இன்னும் கொஞ்சம் தண்ணிய போட்டுகிறேன். அப்பத்தான் தைரியமா இருக்கும்.”

இந்த சூழ்ச்சியை அறியாத நண்பர்கள் ஆடிய களைப்புடன் தங்கள் மேசைக்கு வந்தார்கள். தான்யா சிரித்தபடியே கிளாசில் இருந்த மீதி பானத்தை வாயில் சரித்தாள்.

error: Content is protected !!