ENE— epi 19

ENE— epi 19

அத்தியாயம் 19

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

“டேனி, நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்”

“தனியா போக வேணாம் டான்யா. லிண்டா, டான்யாவோட நீயும் போ”

“டேய்! இங்க இருக்கற ரெஸ்ட் ரூம்க்கு ஒரு துணையா? நானே போய்ட்டு வந்துருவேன். யூ காய்ஸ் என்ஜாய்” என்றவாறே எழுந்தாள் தான்யா. அவளுக்கு வாந்தி வருவது போல் இருந்தது. நண்பர்களானாலும் அவர்கள் அதை அறிவதை அவள் விரும்பவில்லை. கூடவே லிண்டா எழுவதை தடுத்துவிட்டு, கைப்பையை எடுத்து தோளில் மாட்டி கொண்டு வேகமாக வெளியேறினாள்.

அவள் எப்படியும் வெளியில் வருவாள் என அனுமானித்து நரேன் ஆண்கள் டாய்லட் காரிடரில் மறைவாக நின்றிருந்தான். உள்ளேயே இருந்த வினோ, அவள் தனியாக வருகிறாள் என்ற மேசேஜை தட்டி விட்டவன் அவள் வெளியேறியவுடன் தானும் வெளியேறினான். அதிர்ஷ்டம் நம்ம பக்கம்தான் என்ற மிதப்பில் தான்யாவின் வருகைக்காக காத்திருந்தான் நரேன்.

‘இவ எங்கே தனியா இவ்வளவு வேகமாக போறா?’ என எண்ணியவாறே அவளை தொடர எழுந்தான் விபா.

தான்யாவுக்கு நடக்கும் போதே ஒரு மாதிரி மயக்கமாக இருந்தது.

‘என்னடா தண்ணி இது. ஒரு கிளாஸ் தானே குடிச்சோம். இப்படி குமட்டுது, தலை சுத்துது. இதுக்கு மேலே நடக்க முடியாது போல இருக்கே’ என எண்ணியவாறே தள்ளாடினாள்.

மறைந்து நின்றிருந்த நரேன் மெல்ல வெளிப்பட்டான். மெதுவாக நடந்து வந்த தான்யாவை கண்டதும் ஒரு இகழ்ச்சி புன்னகை வந்தது அவனுக்கு.

‘வாடி வா சண்டிராணி, என் கிட்டயா வாலாட்டுறே? நாளைக்கு ஊரே உன்னைப் பார்த்து சிரிக்கும் படி வைக்கல, நான் நரேன் இல்லடி’ என கறுவினான்.

ரெஸ்ட்ரூம் கதவில் தான்யா கையை வைக்கும்போது, பின்னால் இருந்து ஒரு கையால் வாயைப் பொத்தினான் நரேன். மறு கையால் தானுவின் இரு கைகளையும் பின்னால் மடக்கி பிடித்தான்.

“வினோ, சீக்கிரம் வந்து காலை பிடிச்சு தூக்கு. குட்டி மயங்கிட்டா”

இருவரும் அவளைத் தூக்கியபடி எக்சிட் என எழுதியிருந்த கதவு வழியே வெளியேற காலை எடுத்து வைத்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த காட்சியைக் கண்ட விபாவும் செக்குரிட்டியும் பாய்ந்து ஓடி வந்தார்கள். அவர்கள் வெளியேறுவதற்குள் நரேனை பிடித்த விபா, ஓங்கி அவன் முகத்தில் விட்டான் ஒரு குத்து. மூக்கு உடைந்து ரத்தம் தெரித்தது.

இவர்கள் இருவரையும் எதிர்ப்பார்க்காத நண்பர்கள் திகைத்து விட்டார்கள். சட்டென தான்யாவை கீழே போட்டவர்கள் தப்பித்து ஓட முயன்றார்கள். செக்குரிட்டி வினோவையும், விபா நரேனையும் பிடித்து துவைத்து எடுத்து விட்டார்கள்.

“யாரு மேலடா கை வைக்க பார்த்தீங்க?” என கேட்டு கேட்டு வெறி பிடித்தவன் போல் இருவரையும் நொருக்கி விட்டான் விபா. ஏற்கனவே தண்ணி வேறு அடித்திருந்தவர்கள், சாரமாரியான தாக்குதல்களால் நிலைக் குலைந்து கீழே விழுந்தனர்.

“சார், சார்! மேடத்தை பாருங்க. நான் பேக் அப்புக்கு ஆள் வர சொல்லிட்டேன். இவனுங்களையும், இவனுங்க கூட்டாளிகளையும் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க அவங்களை கவனிங்க” என்று உலுக்கவும் தான் தன்னிலை அடைந்தான் விபா. கடைசியாய் நரேனின் வயிற்றில் ஓங்கி ஒரு எத்து எத்தியவன், சப்பாத்து காலால் தானுவை தொட்ட கையை அழுந்த மிதித்தான். கத்த கூட தெம்பில்லாமல் இருவரும் சுருண்டு கிடந்தனர். இந்த நிகழ்வு எல்லாம் கொஞ்சம் இருட்டான காரிடரில் நடந்ததால் யாரும் கவனிக்கவில்லை.

பிறகு கீழே கிடந்த தான்யாவை பூப்போல தூக்கினான் விபா. அப்படியே அவன் மேல் வாந்தி எடுத்தவள்  துவண்டு சரிந்தாள். தானுவை மீண்டும் கீழே கிடத்தியவன் டீ சர்டை கழட்டி அப்படியே குப்பை தொட்டியின் புறம் எறிந்தான். பாண்ட் பாக்கெட்டில் உள்ள கார் சாவியை எடுத்து கொண்டு மீண்டும் அவளை ஏந்தியபடி ஹோட்டல் லாபிக்கு ஓடினான். கார் சாவியை கார் வாலட்டிடம் வீசியவன்,

“குவிக், கெட் மை கார்” என கத்தினான்.

சட்டை இல்லாமல் பைத்தியக்காரன் போல் ஒரு பெண்ணை ஏந்தி கொண்டு ஓடி வந்தவனை, ஹோட்டல் சிப்பந்திகள் கலவரமாக பார்த்தார்கள்.  யாரை பற்றியும் கவலை படும் மனநிலையில் இல்லை விபாகர். உதவிக்கு வந்தவர்களை கை அமர்த்தி தடுத்தவன்,கார் வந்து நின்றவுடன் தானுவை சீட்டை சாய்த்து முன் இருக்கையில் படுக்க வைத்தான். ஓடி வந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்த பின் கார் ஜிபிஎஸ்சில் அருகில் உள்ள மெடிக்கல் சென்டரை கண்டுபிடித்தான். பின்பு கார் அவன் கையில் சீறி பாய்ந்தது.

“உனக்கு ஒன்னும் இல்லை தானும்மா. நான் இருக்கேன் உன் பக்கத்துல. ஒன்னும் ஆக விடமாட்டேன்” என சொல்லி கொண்டே இருந்தான்.

அந்த பிரைவேட் மருத்துவமனை எமர்ஜென்ஸி வளாகத்தில் காரை நிறுத்திய விபா, மீண்டும் தான்யாவை தூக்கி கொண்டு உள்ளே ஓடினான். இரவு பணியில் இருந்த தாதிகள் அவர்களை பார்த்ததும், ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு விரைந்து வந்தார்கள். தானுவை ஸ்ட்ரெச்சரில் அலுங்காமல் படுக்க வைத்த விபா, அவர்களுடனே எமெர்ஜன்ஸி வார்டுக்குள் நுழைந்தான்.

“என்ன ஆச்சு இவங்களுக்கு?” என கேட்டார் எமெர்ஜென்ஸி டாக்டர்.

“இவங்க என் மனைவி. நான் டாய்லட்டுக்கு போய்ட்டு வரதுக்குள்ள, டேபிள் மேல மயங்கி கிடந்தாங்க டாக்டர். ப்லீஸ் என்னன்னு பாருங்க டாக்டர்” என அந்த பதட்டத்திலும் உண்மையை மறைத்தான் விபா.

டாக்டர் படபடவென தாதிகளிடம் என்ன டெஸ்ட் செய்ய வேண்டும் என கட்டளைகளை பிறப்பித்தார். உடனே தான்யாவுக்கு ரத்தம் எடுக்கப்பட்டது. பின்பு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது.

விபாவிடம் சில பாரங்களை கொடுத்து நிரப்ப சொன்னார்கள்.

“சிஸ்டர், நாங்க இந்தியாவிலிருந்து ஹனிமூன் வந்திருக்கோம். இது என்னோட பாஸ்போர்ட். இவங்களோடது ஹோட்டல் ரூமில இருக்கு. இவங்க பேர் மட்டும் எழுதி தரேன். மத்த கான்டேக்ட் டீடெய்ல்ஸ் எல்லாம் என்னோடதையே எழுதிக்குங்க” என்றவன், பெயர் என்ற இடத்தில் தான்யாஸ்ரீ வேணு விபாகர் என நிரப்பி தந்தான்.

பிரைவேட் மருத்துவமனையாதலால் டெஸ்ட் ரிசால்ட் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என கூறியவர்கள் அவனை அமர சொன்னார்கள்.

கட்டில் அருகிலே அமர்ந்தவன், அங்கே இருக்கும் சில தாதிகள் தன்னைப்பார்த்து தங்களுக்குள்ளாகவே கிசுகிசுத்து பேசுவதை அப்பொழுதுதான் கவனித்தான். குனிந்து தன்னைப் பார்த்தவன் சட்டை இல்லாமல் இருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தான்.

“சார், லெப்டுல போனிங்கனா ஒரு செவென் இலெவன் கடை இருக்கும். அங்கே டி சர்ட் கூட கிடைக்கும். ” என அவனுக்கு வழியை காட்டினார் ஒரு தமிழ் நர்ஸ். அப்பொழுதும் நகராமல் தானுவையே பார்த்துக் கொண்டிருந்தான் விபா.

” போங்க சார், கொஞ்ச நேரம் தானே. உங்க வைப்பை நான் பத்திரமா பார்த்துக்கிறேன். அவங்களோட ஹார்ட் பீட், பிபீ எல்லாம் நார்மலா தான் இருக்கு. ஒன்னும் பயப்பட வேணாம்.”

” ரொம்ப நன்றி சிஸ்டர்” என்றவன் அப்பொழுதுதான் நன்றாக மூச்சை இழுத்துவிட்டான்.

அவர் கூறிய கடைக்கு சென்று ‘ஐ லவ் பினாங்’ என எழுதியிருந்த டீ சர்டை வாங்கி அணிந்தவன், விரைந்து தானுவிடம் திரும்பி வந்தான்.

” சார், மேடம் போன் திரும்ப திரும்ப அடிச்சுகிட்டே இருக்கு” என்ற அந்த நர்ஸ், ரிசால்ட் வந்துவிட்டதாகவும் டாக்டரை அழைத்து வருவதாகவும் சொல்லி சென்றார்.

தானுவின் கைப்பையை திறந்து தொலைபேசியை வெளியே எடுத்தான் விபா. 20க்கும் மேற்பட்ட மிஸ்ட் கால்கள் வந்திருந்தன டேனியிடம் இருந்து. மெசெஜ்களும் நண்பர்கள் குருப்பிலிருந்தும், டேனியிடமும் இருந்தும் வந்த வண்ணம் இருந்தன.

“காய்ஸ், ஐ அம் டையர்ட். நான் ரூமுக்கு வந்துட்டேன். நாளைக்கு பார்க்கலாம்” என மேசெஜை தட்டி விட்டான்.

மற்ற இருவரும் ஓகே குட் நைட் என முடித்துக் கொண்டாலும், டேனி மட்டும் பிரைவட்டாக மேசெஜ் அனுப்பினான்.

“பேப், ஆர் யூ ஆல்ரைட்??????நான் உன் ரூமுக்கு வரேன். உன்னைப் பார்க்கணும்”

“நோ டேனி. ப்லீஸ் நாளைக்கு பார்க்கலாம். குட் நைட்”

“ஓகே, டேக் ரெஸ்ட் “

‘யப்பா, இந்த வைட் கொசு தொல்லை தாங்க முடியலை’ என நினைத்துக் கொண்டே அவளின் போனை சைலன்ட் மோடில் போட்டு வைத்தான் விபா.

கட்டில் மேல் ஓரமாக அவள் கையைப்பிடித்தபடியே அமர்ந்திருந்தான். அவளது நண்பர்களிடம் மறைப்பது அவனுக்கே சங்கடமாக தான் இருந்தது. இந்த விஷயத்தை சொன்னால், யார் இதை செய்தது என்ற கேள்வி எழும்.  தானுவை கடத்தி அவளை கசக்க நினைத்த கயவர்களுக்கு தான் கொடுக்க போகும் தண்டனையை சிறியவர்கள் இவர்கள் அறிவதை அவன் விரும்பவில்லை. அதோடு டேனி தன்னை இங்கு பார்த்தால், அவனுக்கு கண்டிப்பாக சந்தேகம் தோன்றும். நான் தான் அவளை கடத்த நினைத்ததாக எண்ணினாலும் எண்ணி விடுவான். தானுவும் அவன் சொல்வதை தான் நம்புவாள். அதுதான் ஏன் வம்பு என அவர்களுக்கு மறைத்தான். டாக்டர் வந்து பேசும் வரை அமைதி இன்றியே அமர்ந்திருந்தான்.

“ஹாய் மிஸ்டர்?”

“விபா, டாக்டர்”

“மிஸ்டர் விபா. உங்க வைப்புக்கு கெதமின் வகை ட்ரக்கை தண்ணியிலே கலந்து இருக்காங்க. இந்த மருந்து பிராணிகளுக்கு வலி நிவாரணியா பயன்படுத்தபடறது. ஆனா இப்போ நிறைய ஆட்களால் தப்பாக பயன்படுத்த படுது. இந்த ட்ரக்கை ‘டேட் ரேப் ட்ரக்’ன்னு கூட சொல்லுவாங்க. இதை எடுத்தவங்களுக்கு ஒரு வகையான மயக்கம், கனவுலகத்துல சஞ்சரிக்கற மாதிரி பீலீங் இருக்கும். இதுல நல்ல விஷயம் என்னன்னா, உங்க மனைவிக்கு அளவு குறைவா தான் கலக்கபட்டிருக்கு. அளவு அதிகமா இருந்தா, சில பேருக்கு ஹார்ட் அட்டாக், கிட்னி பெயிலியர், மூச்சு அடைப்பு இப்படி வர சான்ஸ் இருக்கு. உங்க வைப் நல்ல ஹெல்த் கன்டிஷன்ல இருக்கறதனால மயக்கம் மட்டும் வந்துருக்கு. இந்த மயக்கம் அட்லீஸ்ட் 12 மணி நேரமாவது இருக்கும். அதுக்கு அப்புறமும் லேசா காய்ச்சல், தலை வலி, சோர்வு இப்படின்னு இருக்கும். நாங்க ட்ரிப்ஸ் ஏத்தறதனால கொஞ்சம் தெம்பு கிடைக்கும்”

“டாக்டர், வேற ஏதும் பிரச்சனை இல்லையே?”

“டேஸ்ட் ரிசால்ட் எல்லாம் ஓகேவா இருக்கு மிஸ்டர் விபா. நீங்க பயப்பட வேணாம். நல்ல வேலை ஏதும் ஆகறதுக்குள்ள காப்பாத்திட்டீங்க. இப்படி சுய நினைவு இல்லாம எத்தனை எத்தனை பொண்ணுங்க சீரழிஞ்சு போயிருக்காங்க தெரியுமா? நாடு இருக்கற நிலைமையில பொண்ணுங்கள பொத்தி பொத்தி தான் வளர்க்கணும்.ஹ்ம்ம்”

அவர் கூறியதை கேட்ட விபாவுக்கு, அப்படிப்பட்ட கோபம் வந்தது. கோபம் என்பதை விட ரௌத்திரம் எனலாம். தானுவுக்கு போர்த்தி விட்டு விட்டு காரிடாருக்கு வந்தவன், நெல்சனை அழைத்தான்.

“கேள்விப்பட்டேன் விபா சார். உங்க கோலுக்கு தான் வெயிட்டிங். மூணு பையனுங்களும் நம்ம கிட்ட தான் இருக்கனுங்க.”

“நெல்சன், அவனுங்களுக்கு ‘உயிர்’ மட்டும் தான் இருக்கணும். புரியுதா?”

“புரியுது சார்”

“அவனுங்கள நல்லா கவனிச்சுட்டு எனக்கு போட்டோ பிடிச்சு அனுப்புங்க. நான் பார்க்கணும்.”

“சரி சார்” என்றவாரே போனை வைத்தார் அவர்.

பத்து நிமிடங்களில் வாட்ஸ்ஆப் மேசேஜில் டிங் டிங் டிங் என போட்டோக்கள் வந்த வண்ணம் இருந்தன. போட்டோக்களை பார்த்த விபாவுக்கு, எல்லையில்லா நிம்மதி வந்தது.

“நைஸ்லி டன்” என நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பியவன், தானுவின் ட்ரிப்ஸ் ஏறாத கையில் மென்மையாக முத்தமிட்டான்.

“இப்போதான் நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் தானும்மா. என் தேவதை பெண்ண நினைக்கிறவனையே சும்மா விட மாட்டேன். உன் மேல கை வைக்க நினைச்சவனுங்கள விட்டுருவனா? நீ எனக்காக மட்டுமே படைக்கபட்ட மாசுமறுவற்ற விக்ரகம்.” என்றவாறே அவளது கையைப் பிடித்து கொண்டான்.

“சார், நைட் இங்கயே ஒப்சர்வேஷனுக்கு வச்சுக்கலாமா? இல்லை நீங்க கூட்டிட்டு போறீங்களா” என கேட்டார் அந்த தாதி.

“பில் ரெடி பண்ணுங்க சிஸ்டர். நான் கூட்டிட்டு போறேன். எழுந்து ஹாஸ்பிட்டலை பார்த்தா பயந்துருவா”

அந்த நர்ஸ் புன்னகையுடனே வேலையை கவனிக்க சென்றார். மெடிக்கல் ரிப்போர்டை வாங்கி கொண்டு , பணத்தை செலுத்திவிட்டு வெளியேற ஆயத்தமானான் விபா.

“சார், திரும்பவும் ஹீரோ மாதிரி உங்க வைப்பை தூக்கிட்டு போக போறீங்களா? கொஞ்சம் இருங்க வரேன்” என சிரித்தமுகமாக சென்று ஒரு தள்ளு நாற்காலியை எடுத்து வந்தார் அந்த தமிழ் நர்ஸ்.

“இதை பயன்படுத்திக்குங்க. நாளைக்கு கொண்டு வந்து திரும்ப ஒப்படைச்சிருங்க. உங்க வைப் ரொம்ப லக்கி, உங்கள மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க.” என சொல்லியவாறே தானுவை அந்த நாற்காலியில் அமர வைக்க உதவினார்.

“ரொம்ப நன்றி சிஸ்டர். உங்க உதவியை கண்டிப்பா நான் மறக்க மாட்டேன்.”

அவரிடம் விடைபெற்று, மீண்டும் காரில் அமர்த்தி ஹோட்டலை நோக்கிப் பயணப்பட்டான் விபா. இவ்வளவு நடந்தும் ஒன்றும் தெரியாமல், தானு மயக்கத்திலேயே இருந்தாள். பாதி வழியில் அவள் குளிரில் நடுங்குவதை கண்ட விபா சாலை ஓரத்தில் காரை நிறுத்தி பின் சீட்டில் அவன் எப்பொதும் வைத்திருக்கும் கோட்டை அணிவித்துவிட்டான்.

ஹோட்டலை அடைந்ததும், வாலட்டிடம் காரை பார்க் செய்ய கொடுத்துவிட்டு தன்யாவை அந்த தூக்கி தள்ளு நாற்காலியில் அமர வைத்தான். மறக்காமல் அவள் முகத்தை மறைக்கும் அளவுக்கு தொப்பியையும் அணிவித்தான்.

மெல்ல நாற்காலியை தள்ளி கொண்டே லிப்டில் ஏறி தங்கள் தளத்துக்கு வந்தான். லிப்ட் கதவு திறந்தவுடன், அவன் கண்ட காட்சியில் திகைத்தவன், மறுபடியும் லிப்டை மூடி கீழ் தளத்துக்கு பட்டனை அழுத்தினான்.

தானுவின் ரூம் கதவின் முன்னே டேனி நின்று கொண்டிருந்ததைப் பார்த்து தான் விபா திகைத்து விட்டான். பத்தொன்பதாவது தளத்தில் வெளியாகி காரிடரில் நின்றபடியே, தானுவின் தொலைபேசியை எடுத்துப்பார்த்தான். டேனியிடம் இருந்து பல கோல்களும், மெசெஜ்களும் வந்திருந்தன.

“டான்யா, எனக்கு மனசே சரியில்லை. ஒரு தடவை நீ எப்படி இருக்கன்னு பார்த்துட்டு போயிருறேன். ப்ளீஸ்” இப்படி பல மேசெஜ்கள் அவனிடமிருந்து. அவளிடம் இருந்து எந்த ரிப்ளையும் வராததால் தான் அவள் ரூம் முன்னே கோலிங் பெல்லை அழுத்தியபடி நின்றிருந்தான்.

விபா கடிகாரத்தைப் பார்த்தான். காலை மணி இரண்டை காட்டியது.

‘இவனை எப்படி சமாளிக்கிறது?’ விபாவுக்கு தலை வலிக்க ஆரம்பித்திருந்தது.

‘டேய், எல்லாத்தையும் நான் ஆட்டி படைக்கிறேன். நீ எனக்கே எமனா வந்து நிக்கிறீயேடா’ என சலித்துக் கொண்டான்.

தானுவின் போனிலிருந்து,

“டேனி, பேசாமா என் ரூம் வெளியே இருந்து ஓடி போயிரு. எனக்கு செம்ம தலை வலி. எழுந்து வந்தேன், மொத்திருவேன்” என பதில் அனுப்பினான்.

“யப்பாடா. பைனலி யு ரிப்ளைட். ஐ வாஸ் வோர்ரிட் அபாவ்ட் யூ. சரி நீ தூங்கு. காலையிலேயே வருவேன்” என பதில் வந்தது.

லிப்ட் மேலே செல்வதும், 20வது தளத்தில் நின்று மீண்டும் ஐந்தாவது தளத்துக்கு இறங்கும் வரை காத்திருந்தவன், பிறகே தங்களது அறைக்கு திரும்பினான்.

நாற்காலியில் இருந்து மெல்ல தூக்கி தானுவை கட்டிலில் கிடத்தினான். டாக்டர் சொன்னது போல் உடம்பு சுட ஆரம்பித்திருந்தது. அவளது பேக்கை ஆராய்ந்து, பெரிதாக இருந்த நைட்டி ஒன்றை எடுத்தான். அறையின் எல்லா விளக்குகளையும் அணைத்தவன், பாத்ரூமின் விளக்கை மட்டும் எறிய விட்டான். அவள் முகத்திலேயே பார்வையை பதித்து சட்டையை மட்டும் அகற்றி நைட்டியை மாற்றினான். பாத்ரூமுக்கு சென்று டவலை நனைத்து, அவள் முகம்,கழுத்து, கை, கால் எல்லாம் துடைத்துவிட்டான். பிறகு சிறிய டவலை ஈரமாக்கி நெற்றியில் வைத்தவன், ஏசியை அதிகப்படுத்தினான். அவள் கால் மட்டில் அமர்ந்தவன், காலை தூக்கி அவன் மடியில் வைத்து கொண்டான். பாதங்களை மெதுவாக அழுத்தம் கொடுத்து பிடித்து விட்டான்.

காய்ச்சல் கொஞ்சம் இறங்கியவுடன், அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலையை கோதியபடியே சன்னமாக பாடினான் விபாகர்.

“மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியுமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு”

காலை எட்டு மணியளவில் மெல்ல அசைவு தெரிந்தது தானுவிடம். தூங்காமலே விழித்திருந்த விபா, அவளை தலைகாணியில் படுக்க வைத்துவிட்டு மென்மையாக நெற்றியில் முத்தமிட்டான். ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட கையை தூக்கி பார்த்தான். லேசாக சிவந்திருந்தது. அதற்கும் ஒரு முத்தம் வைத்தவன், அவளது தொலைபேசியை எடுத்து நண்பர்கள் குருப்புக்கு ஒரு மேசெஜை அனுப்பினான்.

“காய்ஸ், எனக்கு கொஞ்சம் காய்ச்சலா இருக்கு. யாராவது வாங்க”

பிறகு, தான் அங்கே இருந்ததுக்கு ஏதாவது தடயம் இருக்கிறதா என ஆராய்ந்தவன், கதவை அன்லாக் செய்து விட்டு அவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.

மெசேஜ் சென்று ஐந்து நிமிடம் கூட இருக்காது, கதவு தட்டப்பட்டு திறக்கும் ஓசை கேட்டது. பாய்ந்து சென்று கொன்னக்டிங் டோரை திறந்து தன் பகுதிக்கு சென்று கதவை மூடினான் விபாகர். பின், கதவிலே காதை வைத்து அங்கே என்ன நடக்கிறது என கேட்க ஆரம்பித்தான்.

“டான்யா பேபி, டான்யா.என்னாச்சி உனக்கு” எனும் டேனியின் குரலும்.

“டேனி, நீ இங்க என்ன செய்யுற?” என தானுவின் மெல்லிய குரலும் கேட்டது.

“நீ தான் உடம்பு முடியலைன்னு மேசேஜ் பண்ண டான்யா”

“டேனி, எனக்கு ரொம்ப தலை வலிக்குது. ஒன்னும் ஞாபகம் வரல” என அவள் குரல் தொய்வதும்,

“நான் இருக்கேன் டான்யா. நான் உன்னை பார்த்துக்கிறேன்” என டேனியின் பதற்ற குரலும் கேட்டது.

‘என்ன ஒரு ஓட்டமா ஓடி வந்துருக்கான்.’ மனதில் பொறாமை எட்டிப் பார்த்தாலும் இனிமேல் டேனி கவனித்து கொள்வான் என்ற தைரியத்தில் அப்படியே கட்டிலில் சரிந்தான் விபா.

error: Content is protected !!