ENE–EPI 28

ENE–EPI 28

அத்தியாயம் 28

அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

 

சென்னை விமான நிலையம்

பெயர்பலகையில் தன்னுடைய பெயருடன் நின்றிருந்த ட்ராவல் ஏஜென்டைப் பார்த்து கை அசைத்தான் பிரபு. சற்று முன் தான் இமிகிரெஷனில் பார்மலிட்டியெல்லாம் முடித்து விட்டு வெளியே வந்தார்கள் அவர்கள் அனைவரும். மற்றவர்களுக்கு தெரியாமல் விபாவின் மூலமாக அவர்களை கைட் செய்ய ஒரு ட்ராவல் ஏஜென்சியை ஏற்பாடு செய்திருந்தான் பிரபு.

தானுவின் கன்டிஷன்படி அவளை இங்கு செட்டில் செய்ய கற்பகம், லெட்சுமி, பிரபு, தருண் என ஒரு குடும்பமாகவே சென்னைக்குக் கிளம்பி வந்திருந்தார்கள். தானுவுக்கு இந்திய மண்ணில் கால் பதிக்கும் போது ஒரு சிலிர்ப்பு உள்ளுக்குள் ஓடியது. . மெல்ல மூச்சை இழுத்து தாய் மண்ணின் காற்றை சுவாசித்தாள். மலேசியன் என அழைக்கப்பட்டாலும் ஆணிவேர் இங்கு தானே இருக்கிறது. அடையாள அட்டையிலும் இனம் என்ற இடத்தில் இந்தியன் என தானே குறிக்கப்பட்டிருக்கிறது.

“தானு! என்ன அங்கயே நின்னுட்ட. சீக்கிரம் வா. ட்ரைவர் வேய்ட் பண்ணறாரு பாரு” என அழைத்தான் பிரபு.

லக்கேஜ்ஜை எல்லாம் வேனில் ஏற்றியவர்கள், ஆசுவாசமாக ஏறி உள்ளே உட்கார்ந்தார்கள். தானு, தருண், லெட்சுமி மூவரும் முதல் முறையாக இப்போதுதான் சென்னை வருகிறார்கள். கற்பகமும் திருமணம் முடிந்து சென்றவர் இப்பொழுதான் வருகிறார். இடை இடையே அவரை பெற்றவர்கள் தான் மலேசியா வந்து மகளையும் பேர பிள்ளைகளையும் பார்த்து செல்வார்கள்.

கண்கலங்க அமர்ந்து இருந்த அம்மாவை கட்டிக் கொண்டாள் தானு. இதற்காகதானே அந்த கன்டிஷனையே அவள் போட்டாள். கற்பகம் உள்ளுக்குள் தாய் மண்ணை எவ்வளவு நேசிக்கிறார் என அவளுக்கு தெரியும். கணவனுடன் வாழாமல் வாழாவெட்டியாக திரும்பி வந்தால் ஊர்க்காரர்கள் என்ன சொல்லுவார்களோ எனும் பயத்தினாலே இங்கு வருவதை தவிர்த்தார். பொறுப்பில்லாமல் கணவர் விட்டு சென்றதற்கு இவர் ஏன் கூனி குறுக வேண்டும்? இங்கே வருவதால் பழைய காயங்கள் மீண்டும் குத்தி கிழிக்கப்படும்தான், ஆனாலும் மருந்தாக பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம் என அவர் உணர வேண்டும். அதற்கு தான் நிபந்தனை இட்டு அவரை இங்கு அழைத்து வந்திருந்தாள் தானு.

மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பிய கற்பகம் இத்தனை வருடங்களில் சென்னை அடைந்திருந்த வளர்ச்சியை விழி அகல நோக்கினார். லெட்சுமியோ இது என்ன அது என்ன என கேள்வி கேட்டு பிரபுவை குடைந்து கொண்டே வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த பிரபு,

“அம்மா! எது கேக்கிறதா இருந்தாலும் ட்ரைவர் கிட்ட கேளுங்க. அவருக்கு என்னை விட இந்த ஊரை பற்றி நல்லா தெரியும்” என அவரை கைக்காட்டி விட்டு தப்பித்து கொண்டான்.

“பிரபு, திட்டம் போட்ட மாதிரி முதல்ல காலேஜ் போய் ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் முடிச்சிருவோம். அப்படியே தங்கறதுக்கு ஹோஸ்டல், சாப்பாடு விஷயமெல்லாம் செட்டல் பண்ணிட்டு மத்ததை பார்ப்போம்” என்றான் தருண்.

ட்ரைவருக்கு இவர்களின் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்ததால், காலேஜ் நோக்கி பயணப்பட்டார் அவர். தானுவுக்கு தான் , இங்கே வர சம்மதித்து விட்டாலும் புது ஊர், புது மனிதர்கள் எப்படி சமாளிக்க போகிறோம் என உள்ளுக்குள் உதைப்பாகவே இருந்தது.

வேன் காலேஜில் நுழைந்து பார்க் செய்தது கூட உணராமல் சிந்தனையில் மூழ்கி இருந்தாள் தானு. பிரபுதான் இறங்கி செக்குரிட்டியிடம் அட்மிஷன் தாளை காட்டி யாரை சந்திக்க வேண்டும் என விசாரித்தான். அதன் பிறகு தருண், பிரபு. தானு மட்டும் அலுவலக அறைக்கு சென்றார்கள்.

வெளி நாட்டு மாணவர்களின் தேவையை கவனிப்பதற்கு என்று தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர்தான் அவர்களை வரவேற்று அமரவைத்தார். இன்னும் ஒரு மாதத்தில் செமெஸ்டர் தொடங்குவதாகவும், அதற்குள் பார்மலிட்டிக்காக சில தேர்வுகள் எழுத வேண்டும் என்றும், சில செமினார்கள் அட்டேன்ட் செய்ய வேண்டும் என விளக்கினார்.

ஹாஸ்டல் லோக்கல் மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், தங்கும் இடத்திற்கு ஒரு வழியையும் கூறினார்.

“தான்யா மேடம், காலேஜ் பக்கத்திலேயே அபார்ட்மென்ட்ஸ் இருக்கு. உங்களுக்கு சப் லீஸ்ல ஒரு இடம் அரேஞ் பண்ணியிருக்கேன். அந்த வீட்டு ஓனர் ஒரு பொண்ணு. அவங்க பெயர் பவிகா. கனடாவுக்கு ஜோப் ட்ரான்ஸ்பராகி போயிருக்காங்க. அதனால தான் வீட்டை லீஸ்க்கு குடுத்திருக்காங்க. அவங்களோட பொருள் எல்லாம் ஒரு ரூம்ல போட்டு பூட்டி வச்சிருக்காங்க. இன்னும் ரெண்டு ரூம் ப்ரீயா தான் இருக்கு. ப்புல்லா பர்னிஸ் பண்ண வீடு. நீங்க இப்படியே போய் தங்கிக்கலாம். அவங்க இல்லாத போது வீட்டை பார்த்துக்க ஒரு ஆள் வேணும்னு தான் இந்த ஏற்பாடு. செக்குரிட்டி எல்லாம் இருக்கறதனால பாதுகாப்பாகவும் இருக்கும். வாடகையும் குறைவு தான். இந்தாங்க அட்ரெஸ் . இது சாவி. நீங்க போய் பார்த்துட்டு பிடிச்சிருந்தா அங்கயே ஸ்டே பண்ணிக்கலாம். லீஸ் அக்ரிமேன்ட் இந்தாங்க. வீடு புடிச்சா, சைன் பண்ணி இங்க குடுத்துருங்க. காலேஜ் டீடெய்ல்ஸ், சப்ஜெக்ட் டிடேய்ல்ஸ் எல்லாம் இந்த போல்டர்ல இருக்கு. எப்ப வேணும்னாலும் என்னை கான்டேக்ட் பண்ணலாம்” என கூறியவருக்கு நன்றி உரைத்துவிட்டு வெளியே வந்தனர் மூவரும்.

“எப்படி தானு? வீடு போய் பார்க்கலாமா?” என கேட்டான் தருண்.

“போகலாம் அண்ணா. புடிச்சா தங்கிக்கிறேன். இல்லைனா கொஞ்சம் தூரமா இருந்தாலும் பரவாயில்லை ஏதாவது ஹாஸ்டல் பார்த்துக்கலாம்”

வேன் டிரைவரிடம் அந்த அட்ரசை கொடுத்துவிட்டு மூவரும் ஏறி அமர்ந்தார்கள்.

“இது நல்ல இடந்தாங்க. பாதுகாப்பான அபார்ட்மெண்ட். தங்கறவங்களும் கொஞ்சம் வசதியுள்ள டீசண்டான ஆளுங்கதான். நீங்க நம்பி புள்ளையை அங்க தங்க வைக்கலாம்” என டிரைவரும் சர்டிபிகேட் குடுத்தார்.

குடியிருப்பு வளாகத்துக்குள் நுழையும் முன்னே பாஸ்போர்ட் வாங்கி பேர், போன் நம்பர் எல்லாம் எழுதி கொண்டு தான் உள்ளே விட்டார்கள். அதிலேயே கற்பகம் நிம்மதி அடைந்துவிட்டார். ஏ பிளாக்கில் 10வது மாடியில் இருந்தது அவர்கள் பார்க்க வந்த அபார்ட்மெண்ட். கதவை திறந்த உடனே பெரிய விநாயகர் படம் தான் அவர்களை வரவேற்றது. ஹாலில் ஆங்கில எல் வடிவில் சோபா ஒன்று வீற்றிருந்தது. பெரிய டீவி ஒன்று சோபாவின் எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.

ஆண்கள் ஹோலையும் பால்கனியையும் சேக் செய்த வேளையில் தாய்மார்கள் இருவரும் கிச்சனுக்குள் நுழைந்திருந்தனர்.

“நல்ல மோடர்ன் கிச்சனா இருக்கு. கேஸ் கனேக்சன் கூட இருக்கு கற்பகம். இந்த ஓனர் பொண்ணு சமைச்சு தான் சாப்பிடும் போல. பண்ட பாத்திரம் எல்லாம் இருக்கு. நம்ப பாப்பா எல்லாத்தையும் யூஸ் பண்ணிக்கலாம்ன்னு அக்ரிமேன்ட்ல இருக்காமே.”

“எனக்கும் பிடிச்சுருக்கு லெச்சு. இவ என்ன சொல்லுறான்னு பார்ப்போம்”

தானு முதல் ரூமை திறந்து பார்த்தாள். பூட்டி இருந்தது.

‘அந்த பொண்ணோட ரூமா இருக்கும். சரி அடுத்ததை திறந்து பார்ப்போம்’. கதவை திறந்தவள், அம்மா என கூவினாள். என்னமோ ஏதோ என அனைவரும் ஓடி வந்தார்கள்.

“என்ன பாப்பா? என்னாச்சு?” என பதறிவிட்டான் தருண்.

அவர்களை பதறவிட்டவள் கூலாக,

“நான் இங்கயே தங்கிக்கிறேன் அண்ணா” என கூறினாள்.

அப்படி என்னத்த பார்த்து புடிச்சு போச்சு என அனைவரும் அவளை உள்ளே தள்ளிவிட்டு அவர்களும் நுழைந்தார்கள். இது தான் மாஸ்டர் பெட் ரூம் போல. ரொம்ப பெரியதாக இருந்தது ரூம். ரூமின் நடுவில் கிங் சைஸ் கட்டில் ஒன்று வீற்றிருந்தது. புத்தகங்கள் அடுக்க ஒரு புத்தக அலமாரியும், உடைகள் அடுக்க ஒரு கண்ணாடி பதித்த வார்ட்ரோபும் இடது பக்க சுவற்றில் பிக்ஸ் செய்ய பட்டிருந்தது. கட்டிலின் வலது பக்கத்தில் சிகப்பு நிறத்தில் வட்ட வடிவ கார்ப்பேட் போடபட்டு அதன் நடுவில் ஊஞ்சல் நாற்காலி வைக்கப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து ஆடி கொண்டே,

“ஐ லவ் திஸ் ப்ளேஸ். இந்த வீட்டுல ஒரு குட் வைப்ரேஷன் இருக்கு. வாடகை,கொஞ்சம் அதிகமா கேட்டிருந்தா கூட கண்டிப்பா இங்க நான் தங்கி இருப்பேன்” என்றாள் தானு.

அங்கே இருந்த இன்னொரு கதவை திறந்த லெட்சுமி,

“தானு, அட்டாச் பாத்ரூம் கூட இருக்கு. உனக்கு இந்த வீடு பிடிச்சதில ரொம்ப சந்தோசம்.”

இன்னொரு ரூம் கொஞ்சம் சிறியது தான். அங்கேயும் கட்டில் மெத்தை என எல்லாம் இருந்தது.

“அண்ணா லீஸ் அக்ரிமேன்ட் சைன் பண்ணி குடுத்துரலாம். நீங்க எல்லாம் கிளம்பற வரைக்கும் இங்கேயே தங்கிக்கலாம். எதுக்கு ஹோட்டல் செலவு வேற” என சொன்னாள் தானு.

ஆண்கள் இருவரும் வேனில் இருந்து பெட்டிகளை எடுக்க செல்ல, பெண்கள் மூவரும் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என லிஸ்ட் போட ஆரம்பித்தார்கள்.

“அம்மா, ப்ளான் பண்ண மாதிரி இன்னும் ரெண்டு நாள் சென்னையிலே இருந்து ஷோப்பிங் பண்ணிறலாம். காலேஜ்ல பொண்ணுங்க எல்லாம் சுடிதார், டாப்ஸ், லெக்கிங் இப்படி தான் போட்டுருக்காங்க. என் கிட்ட கிழிஞ்ச ஜீன்ஸ் தான் இருக்கு. சுடியும் ரெண்டு மூனு செட் தான் இருக்கு. நீங்க சூஸ் பண்ணி வாங்கி குடுங்க”

“யாரு உங்க அம்மாவா? அப்புறம் நீ பாட்டி கோலத்துல தான் காலேஜ் போவ. நான் உனக்கு அழகா செலக்ட் செஞ்சு குடுக்கிறேன்” என முன் வந்தார் லெட்சுமி.

“நானும் தலைப்பாடா அடிச்சுக்குவேன் நல்லதா சேலையும் சுடிதாரும் வாங்கி வச்சுக்கம்மான்னு. கேட்டா தானே. இப்ப பாரு, முழி முழின்னு முழிக்கிறத. ஷோப்பிங்லே நேரம் போய்ட்டா கோயில் குளமேல்லாம் எப்ப சுத்தி பார்க்கிறது?” என சத்தம் போட்டார் கற்பகம்.

“யாரோ இந்தியாவுக்கு போகலாம்னு கூப்பிட்டப்போ வரவே மாட்டேன்னு சொன்னாங்களாம். இப்போ என்னனா கோயில் குளம் பார்க்கணுமாம். லெச்சும்மா, அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா?” என தானுவும் லெட்சுமியும் ஹைபாய் கொடுத்து சிரித்து கொண்டார்கள்.

அசடு வழிந்த கற்பகம்,

“சரி சரி சீக்கிரம் லிஸ்ட் எழுதிட்டு குளிச்சு ரெடியாகுங்க. அண்ணன் மத்தியான சாப்பாட்டுக்கு வெளிய போகலாம்னு சொன்னான். அப்படியே மளிகை சாமான் கொஞ்சம் வாங்கி வச்சிரலாம்”

அவர் கிச்சனுக்குள் பக்கத்தில் இருந்த பாத்ரூமுக்குள் சென்று மறைந்தவுடன்,

“தானு, உங்கம்மா சோலையூர் போறத பத்தி பேச்சே எடுக்க காணோம்?”

“நாம வரோம்னு பாட்டி தாத்தாகிட்ட கூட சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க அம்மா. அண்ணன் தான் அருண் மாமாக்கு போன் போட்டு இன்னும் மூனு நாளுல நாம எல்லாம் ஊருக்கு வரதா சொல்லி இருக்காங்க. எனக்கு தான் ஒரு பக்கம் பயமா இருக்கு. ஊரு பக்கமா போனதும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாங்கன்னா என்ன செய்யுறது? இவங்களுக்கு போகனும்னு ஆசை இருக்கு, ஆனா மத்தவங்களை பார்த்து பயந்தா எப்படி? மாமா கல்யாணத்துக்கு கூட போகல. தாத்தா பாட்டி ரெண்டு பேரும் மனசு ஒடிஞ்சு போயிட்டாங்க.”

“எல்லாம் சரியா போயிரும். நீ கவலை படாதே” கற்பகம் வெளியே வரும் அரவத்தில் இவர்களின் பேச்சு நின்றது.

டிரைவரிடமே கேட்டு நல்ல உணவகத்தை தேடி சாப்பிட உட்கார்ந்தார்கள் ஐவரும். கை கழுவ செல்வதாக கூறி எழுந்து சென்றார் கற்பகம். இருக்கைக்கு திரும்பும் போது ஒரு குரல் அவரை தடுத்து நிறுத்தியது.

“அம்மா, நீங்க எங்க இங்க? வாட் அ பிளசன்ட் சர்ப்ரைஸ்”

“விபா தம்பி! எப்படி பா இருக்க? உலகம் ரொம்ப சின்னது தான் இல்லையா? நம்ப தானுவை சென்னையில தான் படிக்க சேர்த்திருக்கோம். அது விஷயமா தான் நாங்க எல்லோரும் கிளம்பி வந்துருக்கோம்”

“ஆமாவாம்மா. தம்பி தம்பின்னு கூப்பிடறதெல்லாம் சும்மா தான் இல்லையா. இதை பத்தி என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே. இந்த பிரபு கூட இங்க வரத பத்தி மூச்சு விடல பாருங்க” என முகத்தை சோகமாக வைத்து கொண்டான் விபா.

“அப்படி எல்லாம் இல்லைப்பா. நீ வேலை பிசியா இருப்ப. உன்னை எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு தான் சொல்லல. கோவிச்சுகாதப்பா. சாப்பிட தான வந்த, வா எங்க கூட வந்து சாப்பிடு” என அழைத்தார்.

“இல்லம்மா. நீங்க பேமிலியா வந்திருக்கீங்க. நான் ஏன் தொந்தரவா?” என பிகு செய்தான் விபா.

“அப்படிலாம் சொல்லாதப்பா. நீயும் எங்க பேமிலி தான், வாப்பா. ஏன் ஒரு மாதிரியா பார்க்கிற?ஓ பேமிலின்னு சொல்லிட்டு பாப்பா இங்க படிக்க வரத சொல்லலைன்னா. சரிப்பா மன்னிச்சுரு. அவ பொறுப்பை உன் கிட்ட ஒப்படைச்சுட்டு போறேன். ஆபத்து அவசரம்னா ஒரு எட்டு பார்த்துக்க. இப்ப சரியா?”

“சரிதான்மா” என சிரித்தவன் அவருடன் மற்றவர்கள் அமர்ந்திருந்த மேசையை நோக்கி சென்றான். அம்மாவுடன் விபாவை பார்த்த தானு முதலில் அதிர்ந்தாலும், பிறகு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.

‘இங்க வந்தா என்னிக்காவது பார்க்க நேரிடும்னு நினைச்சேன். ஆனா இன்னிக்கே பார்ப்பேன்னு நினைக்கலையே’ என மறுகினாள் தானு.

பொதுவாக எல்லோரையும் நலம் விசாரித்தவன், தானுவை திரும்பி கூட பார்க்காமல் தருணின் அருகில் அமர்ந்து கொண்டான்.

‘பரவாயில்லையே, நாம கூட இவனை ஒரு மாதிரி நினைச்சோம். நம்ப தங்கச்சி பக்கம் தலைய கூட திருப்பலையே. பக்கத்து வீட்டுல இருக்கும்போது வச்ச கண்ணு வாங்காம மேல ரூமுல இருந்து தானு பைரவா கூட விளையாடறத பார்த்த மாதிரி இருந்ததே. ஒரு வேளை பைரவாவை தான் பார்த்தானோ? நாம தான் தப்பா நினைச்சுட்டமோ?’ என யோசிக்க ஆரம்பித்தான் தருண்.

அந்த நேரம் பார்த்து விபா,

“எல்லோரும் இங்க வந்துட்டீங்க, பைரவாவை யாரு பார்த்துகுறாங்க?” என சரியாக கேட்டான்.

“அவனை பெட் ஷோப்ல இருக்கிற கேர்டேக்கர் கிட்ட விட்டுட்டு வந்துருக்கோம். நாம் போய் கூப்பிட்டுகிற வரைக்கும் அங்க பார்த்துகுவாங்க.” என விளக்கினார் லெட்சுமி.

அதன் பிறகு தருண் விபாவிடம் சகஜமாக உரையாட ஆரம்பித்தான். தானு மட்டும் கடைக் கண்ணால் விபாவை நோட்டம் விட்டு கொண்டிருந்தாள்.

‘கண்ணு கீழேல்லாம் கருவளையம் விழுந்துருக்கு. சரியா தூங்கறது இல்லையோ. கொஞ்சம் இளைச்ச மாதிரியும் இருக்கு. என்னாச்சு வேணுவுக்கு? போன் அட்டன்ட் பண்ணல, மேசெஜ் ரிப்ளை பண்ணலை, இங்க படிக்க வரத சொல்லலைன்னு என் மேல கோபம் இருக்கும்தான் அதுக்குன்னு திரும்பி என் முகத்தை கூட பார்க்கலையே.’ என உள்ளுக்குள் புலம்பினாள்.

‘அவன் அப்படி இருக்கணும்ன்னு தானே இதை எல்லாம் செஞ்ச, அப்புறம் இப்ப என்ன புலம்பல்?’ என தன்னைத் தானே சமாதானமும் செய்து கொண்டாள்.

“நான் அங்க வந்தப்ப என்னை நீங்க எல்லாரும் நல்ல கவனிச்சுகிட்டீங்க. கண்டிப்பா நாளைக்கு நம்ம வீட்டுக்கு நீங்க எல்லாம் சாப்பிட வரணும். பிரபுவுக்கு என் வீடு தெரியும். அப்படியே நம்ம வீட்டிலயே ஸ்டே பண்ணிக்கலாமே. லெச்சும்மா,சென்னை வந்தா என் கூட தான் தங்கனும்னு சொல்லி இருக்கேன்ல.அப்புறம் ஏன் வேற எங்கயோ தங்கறீங்க?” என வருத்தமாக கேட்டான்.

“சாப்பிட வீட்டுக்கு வரோம் விபா. ஆனா நாளைக்கு ஷோப்பிங் முடிச்சுட்டு, மறுநாள் கோயில் குளம்னு சுற்றி பார்க்க கிளம்பறோம். இனிமே அடிக்கடி இங்க வருவோம்ல, அப்ப தங்கிக்கிறோம்” என சமாதானம் செய்தார் லெட்சுமி.

“சரி.நாளைக்கு ஷோப்பிங் முடிச்சுட்டு நம்ம வீட்டுக்கு வந்திருங்க. டீ டைமும், டின்னரும் என் கூட தான். ஓகேவா?”

அவர்கள் ஓகே எனும் வரை அவன் விடவில்லை. கடை வெளியே வந்தவர்களை சிறிது நேரம் காத்திருக்க சொன்ன விபா பக்கத்து பூ கடையில் நுழைந்தான். வெளியே வந்தவன் கையில் இரு பூங்கொத்து இருந்தது. கற்பகத்திடமும், லெட்சுமியிடமும் பூங்கொத்தை நீட்டியவன்,

“வெல்கம் டூ சிங்கார சென்னை” என அழகாக சிரித்தான்.

இரு தாய்மாருக்கும் உச்சி குளிர்ந்து விட்டது. சந்தோஷமாக வாங்கி கொண்டவர்கள் சிரிப்புடனே வேனில் ஏறினார்கள். தானுவும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். தான் அங்கு இருப்பதையே உணராத மாதிரி நடந்து கொண்டான் விபாகர். உள்ளுக்குள் வலித்தாலும் சிரிப்புடனே நின்றிருந்தாள் தானு.

அவர்கள் கிளம்பிய வேன் கண்ணை விட்டு மறையும் வரை அப்படியே நின்றிருந்தான் விபா. பிறகு காரில் ஏறி அமர்ந்தவன், ஸ்டீரிங் வீலில் தலையை கவிழ்த்து கொண்டான்.

‘என் தானும்மா. ஐ ரியலி மிஸ்ட் யூ. இந்த மூனு மாசத்துல இன்னும் எவ்வளவு அழகா ஆயிட்டே நீ. இப்போ தோள் வரை  புரளும் உன் காற்குழல் வா வா என்னை தொட்டு பாருன்னு கூப்பிடும்போது, எவ்வளவு கஷ்டபட்டு கையை பேன்ட் போக்கேட்டுல கட்டுபடுத்தி வச்சிக்கிட்டேன் தெரியுமா. பியர்சிங்கை ஏன்டா எடுத்துட்ட? அது தானே என்னோட பேவரேட்.  படிச்சு முடிச்சோன திரும்பவும் போட்டுக்கனும். ஓகேவா. உன் பக்கம் பார்வையை திருப்பாம இருக்க எவ்வளவு கஸ்டப்பட்டேன் தெரியுமா. என் மேல கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் உங்க அண்ணன் உஷாரா ஆயிருவான். அதுக்கு தான் இந்த டிராமா. உன் முகம் வாடி போனதை நான் கவனிக்கலன்னு நினைச்சியாடா? அந்த தவிப்பை போக்க முடியாத பாவியா என்னை நிக்க வச்சிட்டியே தானு. என் கண் முன்னலேயே நீ தள்ளி நிக்கிற கஷ்டத்தை என்னால தாங்கவே முடியலைடா. இன்னும் எவ்வளவு நாள் தானு, இன்னும் எவ்வளவு நாள் என்னை தள்ளி நிறுத்தி இப்படி சோதிப்ப?’

அவளை நேரில் பார்த்தவுடன், அவள் வேண்டும் வேண்டும் என துடித்த இதயத்தை எப்படி சமாதான படுத்துவது என தெரியாமல் திண்டாடினான் விபா.

 

பெண்ணே

கரம் கொண்டு அணைப்பாயா

இல்லை

விழி வாள் கொண்டு அழிப்பாயா?

error: Content is protected !!