ENE–EPI 29

ENE–EPI 29

அத்தியாயம் 29

 

மாற்றினாய் மாற்றினாய்

சிறகின்றி பறக்கின்ற பூவாக
மாறினேன் மாறினேன்

உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக
காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

விபாகர் வீட்டு வாசலிலே தானுவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். ஷாப்பிங் முடிந்துவிட்டதாகவும் இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் போன் செய்திருந்தான் பிரபு.

காலையிலிருந்தே வீட்டில் வேலை செய்பவர்களை ரணகள படுத்தி இருந்தான் விபா. சமையல் தடபுடலாக தயாராகி இருந்தது. மூலை முடுக்கேல்லாம் தூசி தட்டி பெருக்கி துடைத்து வீட்டை இன்னும் பளபளவென ஆக்கியிருந்தார்கள் வேலையாட்கள்.

வேன் வீட்டு வாசலில் வந்து நின்றதும், சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்றான் விபா. வந்தவர்கள் அவனது வீட்டை பார்த்து ஆச்சரியத்துடன் நின்றிருந்தார்கள். விபா பணக்காரன் என்று அவர்களுக்கு தெரியும் தான் ஆனால் இவ்வளவு பெரிய பணக்காரனாக இருப்பான் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பெரிய பரப்பளவில் மலர் தோட்டம் சூழ நட்ட நடுவில் குட்டி மாளிகையாக அமைந்திருந்தது அவனது இருப்பிடம். இவ்வளவு வசதியானவனா நம்மிடம் அவ்வளவு பணிவாக பழகியது எனும் ஆச்சிசரியத்துடனே உள்ளே நுழைந்தார்கள் அவர்கள்.

பிரபு ஏற்கனவே வந்திருந்ததால் சாதாரணமாகவே உள்ளே நுழைந்தான். விபாவின் ஓரப்பார்வை கடைசியாக இறங்கிய தானுவையே வலம் வந்தது.

‘என்னாச்சு இவளுக்கு? முகமெல்லாம் சோர்ந்து போய் களைப்பா தெரியறா’ என ஆராய்ந்தவன், பிரபுவுக்கு மட்டும் கேட்கும் படியாக,

“என்னாச்சுடா தானுவுக்கு?”

“மேடம்கு சாப்பாடு ஒத்துக்கல. இன்னிக்கு முழுக்க வாந்தி எடுத்து கிட்டே இருந்தா. அதான் சோர்வு” என பதில் வந்தது.

யார் தன் வீட்டைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் என நினைத்தானோ, அவளிடம் எந்த ரியாக்சனும் இல்லை. உள்ளே வந்தவர்களை ஹாலில் அமர வைத்தான் விபா. சோபாவின் ஓரத்தில் அமர்ந்த தானு, அதன் கைப்பிடியில் அப்படியே தலையை சாய்த்துக் கொண்டாள்.

“தானு! எந்திரிடி. வந்த இடத்துல அப்படியே தலையை சாய்ச்சுகிட்ட” என மெல்ல அதட்டினார் கற்பகம்.

“தலை பாரமா இருக்குமா. கொஞ்சம் நேரம் சாஞ்சுக்கிறேனே” என கண்ணை மூடி கொண்டே முனகினாள் தானு.

கற்பகம் சங்கடமாக விபாவை நோக்கினார். அவரைப் பார்த்து புன்னகைத்த விபா,

“பரவாயில்லை விடுங்கம்மா. என்னாச்சு அவங்களுக்கு? உடம்பு சரியில்லையோ?” என தெரியாத மாதிரி கேட்டான்.

“ஆமாப்பா. காலையிலே ரெண்டு இட்டிலி சாப்பிட்டா. அதுக்கப்புறம் ஸ்டார்ட் ஆயிருச்சு வாந்தி. நம்ம ஊருல இருந்து மருந்து எல்லாம் எடுத்து வந்தோம். அதை சாப்பிட்டும் ஒன்னும் கேட்கல. சோர்ந்து போயிட்டா பிள்ளை. ஹாஸ்பிட்டல் போகலாம்னு கூப்பிட்டா வரமாட்டேன்ன்னு அடம். சீக்கு வந்துட்டா, நம்மளை ஒரு வழி பண்ணிருவா” என குறைபட்டு கொண்டார் கற்பகம்.

“அம்மா, அவளுக்கே முடியலை. எதுக்கு மத்தவங்க கிட்ட கொம்ப்ளேன் பண்ணுறீங்க?” என கற்பகத்தை கடிந்து கொண்டான் தருண்.

‘நான் மத்தவனா மச்சான்? உங்களோட, எனக்கு தான் அவ மேல அக்கறை ஜாஸ்தி.’ கடுப்பை முகத்தில் காட்டாது,

“என் கிட்ட அதுக்கு மருந்து இருக்குமா. இருங்க எடுத்துட்டு வரேன். நீங்க எல்லாம் உங்க வீடு மாதிரி கம்பர்டபளா இருங்க.” என்றவாறே உள்ளறைக்குள் சென்றான் விபா.

அவன் சென்ற சில நிமிடங்களில் எல்லோருக்கும் பழச்சாறு வந்தது. குடித்து கொண்டே பேசி கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.

“கற்பு, வீட்டை பாரேன். அப்படியே மார்பளிலே இழைச்சு செஞ்சிருக்காங்க. நாம உட்கார்ந்து இருக்கிற சோபாவிலிருந்து மேல தொங்குற சேன்டிலியர் வரைக்கும் என்னை பணம் குடுத்து வாங்கலை பணத்தை கொட்டி வாங்கியிருக்காங்கன்னு சொல்லற மாதிரி இல்லை?” என வாயைப் பிளந்தார் லெட்சுமி.

“ஆமாம் லெச்சு. ஆனாலும் பாரேன், கொஞ்சம் கூட பந்தா இல்லாம பழகுது இந்த புள்ள. பரம்பரை பணக்காரங்கனா இப்படி தான் இருப்பாங்க போல”

மறுபக்கத்தில் தருண், பிரபுவின் காதில்,

“ஏன் பிரபு, இந்த வீட்டுல எத்தனை ரூம் இருக்கும்? ரெண்டு மாடி வீடா இல்லை மூனு மாடியா?” என கேட்டான்.

“ரெண்டு மாடி தான். கீழயே மூனு ரூம் இருக்கு. கெஸ்ட் ரூம் ஒன்னு, வேலைக்காரங்களுக்கு ஒன்னு. இன்னொரு ரூம் ஆபீஸ் ரூமா வச்சிருக்கான். மேல நாலு ரூம் இருக்கு. ஒன்னு இவன் பயன்படுத்துறான். இன்னொன்னு கேம் விளையாடுற ரூம். மத்த ரெண்டையும் சும்மா தான் போட்டு வச்சிருக்கான். கேட்டா அது அவன் வருங்கால பொண்டாட்டி புள்ளைங்களுக்காம்” என சிரித்தான் பிரபு.

“சரிதான். பணம் இருந்து என்ன செய்யறது? அதை கூட சேர்ந்து அனுபவிக்க யாரும் இல்லையே. இப்படி மொட்டு மொட்டுனு தனியா இருக்கானே. பாவமாதான் இருக்கு”

‘ரொம்ப பாவ படாதடா. நம்ப தங்கச்சியை தான் அந்த பொண்டாட்டி போஸ்டுக்கு செலெக்ட் பண்ணி வச்சிருக்கான். நம்ப தானு மட்டும் கல்யாணத்துக்கு யெஸ் சொல்லிட்டா, அதி விரைவில நம்ம ரெண்டு பேருக்கும் தாய் மாமன் போஸ்டையும் குடுத்துருவான்.’ என மனதில் நினைத்து கொண்டான் பிரபு.

மருந்தையும் தண்ணீரையும் எடுத்து வந்த விபா கற்பகத்திடம் கொடுத்தான். அவர் தானுவை எழுப்பி மருந்து கொடுத்து மீண்டும் சோபாவிலே படுக்க வைத்தார்.

“வாங்க, நாம கார்டன் சிட் அவுட்டுக்கு போயிருவோம். டீ அங்க சேர்வ் பண்ண சொல்லியிருக்கேன். இவங்க கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என கூறி அனைவரையும் வெளியே அழைத்து சென்றான் விபா.

வெளியே காற்றோட்டமாக அவர்கள் உட்கார்ந்ததும் டீயும் பலகாரமும் கொண்டு வந்து வைத்தார்கள் பணியாளர்கள். சிரித்து பேசியபடியே டீ அருந்தினார்கள் அனைவரும்.

“சாப்பிட்டு கிட்டு இருங்க. டின்னர் எப்படி வந்திருக்குன்னு விசாரிச்சிட்டு வரேன்” என உள்ளே சென்றான் விபா. நேராக கெஸ்ட் ரூமுக்கு சென்றவன், ஒரு போர்வையையும் சில தலையணைகளையும் எடுத்துகொண்டு தானு உறங்கும் இடத்துக்கு வந்தான். சுற்றிலும் பார்த்தவன் யாரும் கவனிக்கவில்லை என உறுதிபடுத்தி கொண்டு அவளது நெற்றியை தொட்டு பார்த்தான். சூடு இல்லை. மெல்ல குனிந்து, அவள் தலையை தூக்கி தலையணையை வைத்தான். இன்னொரு வட்ட வடிவிலான சிறிய தலையணையை அவள் அணைத்துக் கொள்ள இரு கைகளுக்கும் நடுவில் வைத்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் கன்னத்தில் மெதுவாக இதழ் ஒற்றியவன், அவளுக்கு போர்த்தி விட்டு விட்டு அவசரமாக மற்றவர்களை நாடி சென்றான்.

“அம்மா, வேலைக்கார பொண்ணுகிட்ட உங்க மகளுக்கு தலையணையும் போர்வையும் குடுக்க சொல்லி இருக்கேன். ஹோல்ல ஏர்கோன் ஓடுதுல அதனாலதான். தப்பா எடுத்துக்காதிங்க” என கற்பகத்திடம் சொன்னான்.

“ரொம்ப நன்றிப்பா. அவ குளிர் தாங்க மாட்டா. நானே உன் கிட்ட போர்வை கேட்கனும்னு நினைச்சேன். பேச்சு சுவாரசியத்துல மறந்துட்டேன்.”

டீ குடித்தவுடன் வீட்டை சுற்றி பார்க்க அவர்களை அழைத்து சென்றான் விபா. கற்பகம் மகளை பார்க்க ஹாலுக்கு செல்வதை பார்த்து, பிரபுவிடம் சுற்றி காட்டும் பொறுப்பை கொடுத்தவன் கற்பகத்தைப் பின் தொடர்ந்தான். ஹாலில் அவர்கள் கண்ட காட்சியில் விபா திகைத்து போனான் என்றால் கற்பகம் சிரித்துவிட்டார்.

சோபாவில் இருந்து தானு கீழே இருந்த கார்பேட்டில் தலைகுப்புற விழுந்து கிடந்தாள்.

“இவ இருக்காளே, ஒரு இடத்துல ஒழுங்கா படுக்க மாட்டா. சின்ன பிள்ளையில இருந்தே இப்படிதான். பக்கத்துல படுக்கறவங்கள எட்டி உதைச்சு கீழ தள்ளிருவா. அதனால தான் அவளை தனியா படுக்க பழக்கினேன். கரப்பான் பூச்சியை கவுத்துப்போட்ட மாதிரி எப்படி கீழ விழந்து கிடக்கா பாரு” என சிரித்தவர் தலையணையை சரி செய்து மீண்டும் போர்வையை போர்த்தி விட்டார்.

‘அதுக்கேன்ன செல்லம். மாஸ்டர் பெட்ரூம் கட்டிலை நீ கீழ விழாத அளவுக்கு இன்னும்  பெருசா மாத்திருறேன். அதோட என்னை எத்தனை தரம் எட்டி உதைச்சாலும் உன்னை தனியா படுக்க விடாம நான் பக்கதுலேயே படுத்துக்குவேன்.’ என மனதில் தானுவுடன் பேசி கொண்டான்.

வீட்டை சுற்றி பார்த்து பல விஷயங்களும் பேசி கொண்டிருந்ததில் மணி 8 ஆகியிருந்தது. இரவு உணவு சாப்பிட அவர்களை டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்றான் விபா. தானு இன்னும் எழுந்து வந்திருக்கவில்லை. மற்றவர்களை அமர வைத்து தானே பறிமாறினான் அவன். கற்பகம் அமரும்படி வற்புறுத்தியும் பிறகு சாப்பிடுவதாக மறுத்துவிட்டான் விபா.

அவர்கள் பாதி உணவில் இருக்கும் போது, தானு எழுந்து அவர்களை தேடி வந்தாள். போர்வையை உடம்பு முழுவதும் சுற்றி கொண்டு நடுங்கியபடியே வந்தவள்,

“அம்மா! பாத்ரூம் எங்க இருக்குன்னு கேளு”

விபாவை கேள்வியாய் நோக்கினார் கற்பகம்.

“இப்படி வாங்க. நான் காட்டுறேன் ” என தானுவை அழைத்து சென்றான் விபா.

மற்றவர்கள் கண்பார்வையை விட்டு அகன்றதும்,

“இப்போ எப்படி இருக்கு தானு? ”

“ஹ்ம்ம், ஓகே” இரண்டு வார்த்தை பதில் தான் வந்தது.

கெஸ்ட் ரூமில் இருந்த அட்டாச் பாத்ரூமுக்கு  அழைத்து சென்றான் விபா. ரூம் கதவை திறந்து உள்ளே செல்லுமாறு சைகை காட்டியவன் தானும் பின்னாலேயே நுழைந்தான்.

அவள் எதிர்பார்காத சமயத்தில் இறுக அணைத்தவன் “ஐ மிஸ்ட் யூ சோ மச் டியர்” என உருகினான்.

இன்னும் தூக்க மயக்கம் முற்றும் விலகாத நிலையில் இருந்த தானு குளிருக்கு இதமாக அவன் நெஞ்சில் வாகாக தலையை சாய்த்து கொண்டாள்.

என்றுமே தானாக அவனை நெருங்கி வந்திராதவள் மறுப்பேதும் இன்றி அவன் நெஞ்சில் சாய்ந்ததும், விபா சந்தோஷத்தில் திண்டாடிவிட்டான்.

‘வெளிய அவ அம்மாவும் அண்ணனும் இருகறப்ப இப்படி ஒட்டிகிட்டு நிக்கிறாளே. ஏண்டி என்னை இப்படி சோதிக்கிற’

“தானும்மா” ஆசையுடன் கூப்பிட்டவாறே உச்சந்தலையில் மெல்ல முத்தமிட்டான்.

“ஹ்ம்ம்” ஒற்றை வார்த்தையாக  பதில் வந்தது.

“தானு” மெல்ல தலையை இறக்கி கன்னத்தில் முத்தமிட்டான்.

“ஹ்ம்ம்” அதற்கும்  ஓற்றை  வரி பதில்தான்.

கொஞ்சம் தைரியம் வந்தவனாக அவளது முகத்தை நிமிர்த்தினான் உதட்டில் முதல் காவியம் படைக்கலாம் என்று.

அவளோ மீண்டும் அவன் நெஞ்சில் முகத்தைப் பதித்து கொண்டு விட்ட தூக்கத்தை தொடர முற்பட்டாள்.

‘அடிபாவி! மனுஷன் லவ் மூட்ல இருக்கேன். இவ என்னன்னா என்னை டெடி பேர் மாதிரி கட்டி புடிச்சுகிட்டு தூங்குறாளே’

“தானு!!!” என சத்தமாக அழைத்தான் விபா.

திடுக்கிட்டு விழித்தவள்,

” என்ன ? என்னாச்சு வேணு? ” என திரு திருவென முழித்தாள்.

“ஒன்னும் ஆகல. அதுதான் பிரச்சனையே. போ , பாத்ரூம் போய்ட்டு வா. சாப்பிடலாம்” என அவளை பாத்ரூம் பக்கம் நகர்த்திவிட்டு வெளியேறினான்.

‘தூக்க கலக்கத்துல செம கியூட்டா இருக்கா. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா எதையாவது செஞ்சு அவ கிட்ட மொத்து வாங்கிருவேன். இப்படியே எஸ்கேப் ஆகுறது தான் நல்லது’

நல்ல பிள்ளையாக மீண்டும் டைனிங் டேபிளில் மற்றவர்களுடன் இணைந்து கொண்டான் விபா.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் பாத்ரூம் சென்றவளை காணோம். விபா அடிக்கொரு முறை திரும்பி பார்த்து கொண்டே இருந்தான் அவள் வருவாளா என்று.

கடைசியில் சீக்கிரமாக சாப்பிட்டு முடித்த தருண் தான் ரூமிற்குள் சென்றான் அவள் எங்கே இன்னும் காணோமென்று. திரும்பி வந்தவன்,

“அம்மா, கெஸ்ட் ரூம் கட்டிலிலேயே மறுபடியும் படுத்து தூங்கிட்டா. எப்படிமா இப்போ?”

” அவ உடம்பு சரியில்லைன்னா இப்படி தானே சுருண்டு சுருண்டு படுத்துகுவா. நாம அப்பவே டின்னர் பிளான கேன்சல் பண்ணிட்டு தங்கற இடத்துக்கு போயிருக்கனும். இப்ப பாரு வந்த இடத்துல, இப்படி நம்மள  சங்கட படுத்துறா. தம்பி நம்மள பத்தி என்ன நினைச்சுக்கும். மணி வேற பத்தை நெருங்குது. போடா அவளை எழுப்பு. கை பிடிச்சு கூட்டிட்டு போயிரலாம்.” என தருணை விரட்டினார் அவர்.

“இருங்கம்மா. உடம்பு முடியாம தூங்குறவங்களை ஏன் கஸ்டப்படுத்துறீங்க. இங்க இருந்து தூங்க தானே அங்க போக போறீங்க. அதை  இங்கயே செய்யலாமே. இத்தனை ரூம் இருக்கு. அப்புறம் என்ன. காலையிலே எழுந்து கிளம்புங்க. பாருங்க லெச்சும்மாவுக்கும் தூக்கம் வந்துருச்சி. பிரபு சொல்லேண்டா.”

“ஆமாம்மா, நான் டிரைவர காலையிலே வர சொல்லுறேன். புதுசா வாங்குன துணிகளேல்லாம் தான் வேனுல இருக்குதே. அவசரத்துக்கு அதை பயன்படுத்திகுங்க. ஓகேவா தருண்?”

அவனும் சரி என தலை ஆட்டினான். வேற வழி. அவளை எழுப்பி மல்லு கட்டுவதற்கு பதில் ஒரு பாய் கொடுத்தாலும் மூலையில் சுருண்டு கொள்ளலாம் எனும் மன நிலையில் இருந்தான் தருண்.

டிரைவரிடம் பேச சென்ற பிரபுவோடு உடன் சென்றான் விபா.

” டேய் பிரபு.  அவ இன்னும் ஒன்னுமே சாப்பிடலடா”

” அதுக்கு நான் என்னடா செய்யமுடியும். தூங்குறவ வாயில சோத்தையா திணிக்க முடியும்”

” எனக்கு தெரியாது. அவங்க அம்மாகிட்ட பேசி எதையாவது சாப்பிட குடுக்க சொல்லு”

“உன் டாச்சருக்கு அளவில்லாம போச்சுடா. சரி சொல்லி தொலைக்கிறேன். ”

“அப்படியே   மெத்தை  கொண்டு  வந்து  குடுக்க சொல்லுறேன். அவங்க  அம்மாவ  துணைக்கு  கீழ படுக்க சொல்லு. அவ தாராளமா கட்டில்ல தூங்கட்டும்.”

“ஐயோ சாமி! யாராவது இந்த காதல் பைத்தியம் கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்கப்பா” என புலம்பியவன்  முதுகில் ஓங்கி ஒன்று போட்டான் விபா.

“சொன்ன வேலையை போய் ஒழுங்கா செய்டா” என அனுப்பி வைத்தான் பிரபுவை.

தானு தன் வீட்டில் இருக்கிறாள் என்ற விஷயமே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. தன்னோடு பேச என வந்துவிட்டு தன் கட்டிலிலேயே குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் பிரபுவை பார்த்து தலையில் அடித்து கொண்டான் விபா.

‘குறட்டை விட்டாலும் பரவாயில்லை பொறுத்துக்கலாம். காலை வேற தூக்கி மேல போடுறான். தங்கச்சிக்காரி காலை தூக்கி எப்ப நம்ம மேல போடுவான்னு நாம கனவு கண்டா என் விதி அண்ணன்காரன் கூட என்னை சேர்த்து வச்சிருக்கு’ தூக்கம் வராமல் புரண்டவன் ரூமில் இருந்து எழுந்து வந்து தானு முன்பு ஹாலில் படுத்திருந்த கார்ப்பேட்டிலே படுத்து கொண்டான்.

ஐபேட்டில் பங்கு சந்தையை அலசி கொண்டிருந்தவன் கண்களுக்கு கெஸ்ட் ரூமில் இருந்து ஒரு உருவம் மெல்ல வெளியேறி கிச்சனுக்குள் நுழைவது தெரிந்தது.ஐபேட் கடிகாரம் மணி மூன்று என காட்டியது.

‘யாருடா இத்தனை மணிக்கு கிச்சனுக்குள்ள போறது?’ விளக்குகள் எல்லாம் மூடப்பட்டு, கிச்சனில் விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் யாரென்று சரியாக தெரியவில்லை.

விபாவும் மெல்ல எழுந்து கிச்சனுக்குள் சென்றான். அங்கே பிரிட்ஜை திறந்து தலையை உள்ளே விட்டு கொண்டு நின்றிருந்தாள் தானு.

‘மேடம் தானா? அவங்கம்மா சாப்பிட எழுப்ப எழுப்ப போர்வையை தலை வரை மூடிக்கிட்டு தூங்கிட்டு இப்ப பூனை மாதிரி வந்து உருட்டறத பாரு’

“பசிக்குதா தானு?”

திடீரென கேட்ட சத்தத்தில் திகைத்துப் போய் திரும்பியவளை பார்த்து சிரித்து விட்டான் விபா. மூக்கு வாய் எல்லாம் ஐஸ்கிரீம் ஒட்டி கொண்டு இருந்தது.

“வேணு!!! இன்னொரு முறை இப்படி திடீர்ன்னு பின்னால வந்து பயம் காட்டாதே. பாரு ஐஸ்கிரீம் டப்பா உள்ளுக்கு முகத்தை விட்டுகிட்டேன்.” என அவனை கடிந்தவள் சுற்றும் முற்றும் துணி ஏதும் இருக்கிறதா முகத்தை துடைக்க என தேடினாள்.

மேசையில் இருந்த பேப்பர் நேப்கினை எடுத்து அவள் முகத்தை துடைத்து விட்டான் விபா.

“பசிக்கு ஐஸ்கிரீம் தான் சாப்பிடுவியா நீ?”

“நீ பழமா வாங்கி அடுக்கி வச்சிருக்க. கேக், புட்டீங், சாக்லேட் இப்படி ஹேல்த்தியா வாங்கி வைக்க மாட்டீயா? பசிக்குது வேணு.”

“வேலைக்காரங்க எல்லாம் தூங்குறாங்க. நான் ஆம்லட் செஞ்சு குடுக்கிறேன். நாற்காலியில உட்காரு.”

“நெஜமாவா? ஏற்கனவே எனக்கு வயிற்று வலி. உன்னை நம்பி சாப்பிடலாமா?”

அவளை செல்லமாக முறைத்தவன்,

“நான் நல்லாதான் சமைப்பேன். சத்தம் போடாமா உட்காரு. யாராவது எழுந்து வந்திற போறாங்க”

“வேணு, ஆம்லட்ல கொஞ்சம் ச்சீஸ் பொடுசா வெட்டி போடு. அப்புறம் குடை மிளகாய் இருந்தா அதையும் சின்னதா வெட்டி போடு. அப்புறம்”

“அப்புறம் உன் வாயில தான் ஒன்னு போட போறேன் தானும்மா.”

“சரி, கோவிச்சுக்காதே. சீக்கிரமா செஞ்சு குடு. பசி உயிர் போகுது.”

அவன் சமைக்கும் போது, இதை வெட்டுனது சரி இல்லை, அதை கிண்டனது சரி இல்லை என குறை சொல்லி கொண்டே அமர்ந்திருந்தாள் தானு.

“முடியலைடி. இப்ப வாயை மூடுறியா இல்லை ஒரு முத்தம் வச்சு நான் மூடட்டா?” என அவன் செய்யும் வேலையை நிறுத்தி விட்டு கேட்கவும் தான் வாயை மூடினாள் தானு.

ஆம்லட்டை ஒரு தட்டில் வைத்து கொடுத்தவன், தனக்கும் ஒரு தட்டை எடுத்து கொண்டான். பாலை சூடு செய்து அதையும் ஒரு கப்பில் ஊற்றி கொடுத்தான்.

“எனக்கு பால் வேணாம் வேணு. பிடிக்காது. சாக்லேட் மில்க் இருக்கா? ஐஸ் கட்டி போட்டு குடு ப்ளீஸ்”

“பால் குடிக்க மாட்ட. ஆனா சாக்லேட் பால் மட்டும் வாயில இறங்கும். என்ன டிசைனோ.” ப்ரீஜில் இருந்து அவள் கேட்டதை கிளாசில் ஊற்றி கொடுத்தான்.

“ஏன் வேணு உனக்கும் பசிக்குதா?” என கேட்டவாறே சாப்பிட்டாள் தானு.

“முதன் முதலா நம்ப வீட்டுக்கு வந்த்திருக்க. நீ சாப்பிடாதப்போ நான் மட்டும் எப்படி சாப்பிடறது சொல்லு”

அவனை நிமிர்ந்து பார்த்தவள் மறுபடியும் தலையை குனிந்து கொண்டாள். அதற்கு பிறகு இருவரும் அமைதியாகவே சாப்பிட்டார்கள்.

அவள் சாப்பிட்டு முடித்தவுடன், தட்டுக்களை கழுவி வைத்தான் விபா. மீண்டும் ஒரு மாத்திரையை அவளிடம் நீட்டியவன்,

“சாப்பிடு தானு. ரொம்ப நேரம் கழிச்சு சாப்பிட்டுருக்க இல்ல, வயித்துல காத்து புகுந்துருக்கும். இதை சாப்பிட்டா திரும்பவும் வாந்தி வராது.”

“இங்க நீ டாக்டரா? இல்லை நானா?” என மாத்திரையை வாங்கி விழுங்கினாள்.

“பாப்பா, நீங்க இனிமே தான் படிக்கவே போறீங்க. அதுக்குள்ள இந்த பில்ட் அப் குடுக்காதீங்க”

“என்னை பாப்பான்னு கூப்பிடற வேலை வைச்சுக்காதே வேணு. நான் கடுப்பா ஆயிருவேன். எங்க வீட்டுல உள்ளவங்க தான் அப்படி கூப்பிட்டு மானத்தை வாங்குறாங்கனா, நீயுமா?”

“அப்புறம் நான் எப்படி கூப்பிட்டா உனக்கு பிடிக்கும்?”

“தானும்மான்னே கூப்பிடு. அது தான் எனக்கு பிடிச்சுருக்கு” என யோசிக்காமல் சொன்னவள், அவன் கண்களும் முகமும் மலர்வதை கண்டவுடன் தான், என்ன சொன்னோம் என்பதையே உணர்ந்தாள்.

‘அவன் முன்னுக்கு ஏன் இப்படி கட்டுப்பாடு இழந்து போயிருறோம். ஒரு தடவை போடான்னு தூக்கி போட்டுருறேன். அப்புறம் வாடான்னு கூட சேர்த்துக்கிறேன். வேணு என்னையைப் பத்தி என்ன நினைச்சுகுவான்? சீப்பான கேரக்டர்னு நினைச்சுகுவானோ’ கண்கள் லேசாக கலங்கியது தானுவுக்கு.

“இப்ப எதுக்கு இந்த கண்ணீர்? எதையும் நினைச்சு குழம்பாம வாழ்க்கையை அதன் போக்குலயே வாழ பழகு தானும்மா. இப்ப போய் தூங்கு. குட் நைட்” என சொன்னவன் அவளது கண்களை துடைத்து ரூமிற்கு அனுப்பி வைத்தான். பின்பு மெல்ல விசில் அடித்து கொண்டே படுக்க சென்றான் விபா.

தானு எழுந்து வந்தது முதல் அங்கே நடந்த ஒவ்வொன்றையும் ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்ததை அவர்கள் இருவருமே அறியவில்லை.

error: Content is protected !!