அத்தியாயம் 30
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நான் தலை தாழ்ந்து தொழுதேன்
என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன்
உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்
என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்
கற்பகத்தின் ஆசைப்படி திருப்பதிக்கு சென்று வெங்கடாசலபதியை ஆசை தீர தரிசித்தனர் தானுவும் குடும்பத்தாரும். விபாவின் தயவால் விஐபி கியூவில் நின்று மனம் நிறைய வழிபட்டுவிட்டு வந்தனர். பிறகு லெட்சுமியின் குடைச்சல் தாங்காமல் காஞ்சிபுரத்துக்கும் ஒரு விசிட் கொடுத்தார்கள். அவருக்கு ஒன்றும் காஞ்சி காமாட்சி மேல் பாசம் என்று சொல்லிவிட முடியாது. அவர் அங்கே சென்றதே பட்டு புடவைகளை நெய்யும் இடத்திலேயே வாங்கலாம் என்பதற்காகதான். அவருக்கு பணத்தை நீட்டி நீட்டியே பிரபுவுக்கு கை வலித்துவிட்டது.
“அம்மா, நம்ப ஊரு மாதிரி இங்கயும் ஜிஎஸ்டி வந்துருச்சு. கண்ணுல பட்டதை எல்லாம் கேட்காதீங்க. அப்புறம் வீட்டுக்கு போய் ஒரு மாசம் ரொட்டியும் கோப்பியும் தான் சாப்பிடனும். ஞாபகம் வச்சிகிங்க” என மிரட்டினான் பிரபு.
“கஞ்சம் பிடிக்காதடா. நான் என்ன எனக்கு மட்டுமா வாங்குறேன்? நாளைக்கு வர போற உன் பொண்டாட்டிக்கும் சேர்த்து தான்டா வாங்குறேன்”
‘இப்படி சொல்லி சொல்லியே என் வாயை அடைக்கிறது. ஆனா பொண்ணு மட்டும் பார்க்கிறது இல்லை.’ என தனக்குள்ளேயே முனகினான் பிரபு.
அம்மாக்கள் இருவரும் சேலைகளை புரட்டி போட்டு கொண்டிருந்த வேளையில், தானு ரோட்டோர கடையில் மாம்பழம் வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தாள். தருணும் அவள் அருகிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் தான் விபா பிரபுவுக்கு போன் செய்தான்.
“மச்சி இப்ப எங்க இருக்கீங்க?”
“காஞ்சிபுரம். பிளான்படி இன்னிக்கு உச்சிபுள்ளையார பார்க்க போகனும். எங்க அம்மா டாச்சர் தாங்க முடியாம பிளான் மாத்தியாச்சு. உன் ஆளு தான் மூஞ்சிய தூக்கி வச்சிருக்கா.”
“ஏன்டா பிரபு?”
“மேடம் தான் புள்ளையார் காத்தாடி ஆச்சே. அதான்டா ப்பேன். பிளான் மாத்தனுதல அவளுக்கு கடுப்பு.”
“ஓ ! இப்ப எப்படி இருக்கா? வாந்தி இன்னும் வருதா?”
“அதெல்லாம் நல்லா தான் இருக்கா. நீதான் நாலு போட்டல் மருந்து குடுத்து விட்டுருக்கியே. இப்ப கூட ரோட்டுல விக்கிற பழம் வாங்கி சாப்பிட்டிகிட்டு நிக்கிறா.”
“டேய் அவளுக்கு அதெல்லாம் ஒத்துக்காதுடா. அவள பத்திரமா பார்த்துக்க சொல்லிதானே அனுப்பினேன்”
“பத்திரமானா எப்படி? அவ என்ன குழந்தையா மிரட்டி ஒரு இடத்துல உட்கார வைக்க? ஒரு வார்த்தைதான்டா சொன்னேன், இங்க வந்ததிலிருந்து சாப்பிட்டுகிட்டே இருக்க. படிப்பு முடிஞ்சு வரப்ப, வீங்கி போய் தான் வருவேன்னு. நான் உட்கார சீட்டுல தண்ணிய ஊத்தி என் பேண்டை நனைச்சுட்டாடா. அவங்க அம்மா கேட்டதுக்கு கை தவறி ஊத்திருச்சுன்னு சீனை போட்டுட்டா.”
அந்த பக்கம் சிரிக்கும் சத்தம் கேட்டது.
“சிம் கார்ட் குடுக்க சொன்னேன்னே குடுத்துட்டீயா?”
“அதெல்லாம் போன்லயே போட்டு குடுத்துட்டேன்.”
“நாளைக்கு சோலையூர் பிளான் தானே?”
“ஆமான்டா. அப்படி இப்படின்னு கற்பகம் அம்மாகிட்ட பேசி சம்மதிக்க வச்சிட்டோம். ஒரு வழியா ஊருக்கு வர ஒத்துக்கிட்டாங்க”
“அப்ப சரி. நாளைக்கு நானும் உங்க கூட ஊருக்கு வரேன். “
“என்னடா, விளையாடுறியா? உன்னை எப்படிடா கூட்டிட்டு போறது”
“டிரைவரா தான்”
“புரியற மாதிரி சொல்லுடா”
“உன் ட்யூப் லைட் மண்டைக்கு விளக்கி சொன்னாதான் புரியும். நாளைக்கு டிரைவர் எமெர்ஜென்சி விஷயமா சொந்த ஊருக்கு போயிட்டாரு, நாம லாஸ்ட் மினிட்ல வேற யாரை ஏற்பாடு பண்ணுறதுன்னு ஒரு டிராமாவ போடுற.”
“என்ன பண்ணுறது, உன்னை மாதிரி அதி புத்திசாலி கூட இருக்கேன்ல நான் டியூப் லைட்டா தான் தெரியுவேன். மேல சொல்லு”
“எல்லாரும் முழிக்கிறப்ப, நீ விபாவை கேப்போம்னு குளம்புன குட்டையில மீனை புடிக்கிற.”
“தருண் வேணான்னு சொல்லுவானே”
“அவனை எப்படி சமாளிப்பியோ, அது உன் பிரச்சனை. நாளைக்கு நான் கூட வரேன். டோட்.”
“டேய்! உனக்கு பெரிய எந்திரன்னு நினைப்பாடா? இங்க பாரு, அப்படியெல்லாம் சாதாரணமா சமாளிக்க முடியாது. டேய், விபா, விபா” பேசி கொண்டிருக்கும் போதே அந்த பக்கம் போன் துண்டிக்கப்பட்டது.
‘ஐயோ கொல்லுறானே. இவன் லவ் பண்ணி கல்யாணம் செய்றதுக்குள்ள நான் டெட் பாடி ஆயிருவேன் போல இருக்கே. ஏழு கொண்டல வாடா என்னை காப்பாத்துப்பா’
மறுநாள் விபா அவர்களை ஏற்றுவதற்காக தன்னுடைய இன்னோவாவுடன் வந்தான். பிரபு அவன் பக்கத்தில் அமர்ந்து கொள்ள மற்ற நால்வரும் பின்னால் அமர்ந்து கொண்டார்கள்.
“எங்களால உனக்கு தான் விபா சிரமம்.” என வருத்தப்பட்டார் கற்பகம்.
“அதனால என்னம்மா. திடீர்ன்னு இப்படி நடக்கும்னு யாருக்கு தெரியும். நல்ல வேலை சனிக்கிழமையா போச்சு. நான் ப்ரீயா தான் இருக்கேன். உங்களுக்கு ட்ரைவர் வேலை பார்த்த மாதிரியும் ஆச்சு அப்படியே உங்க எல்லாரோடும் டைம் ஸ்பெண்ட் பண்ண மாதிரியும் ஆச்சு”
“பிரபு, உன் டிரைவர நல்ல பாட்டா போட சொல்லு. எனக்கு தூக்கம் வருது” என குரல் கொடுத்தாள் தானு.
“என்னம்மா, தம்பி ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே அப்படி கூப்பிடறதா?” என கடிந்து கொண்டார் கற்பகம்.
“நீ எதுக்கு கற்பு, பிள்ளை ஒரு கிண்டல் பண்ணா கூட இப்படி பொங்குற? அடுத்த ஸ்டாப்ல நீ என்கூட உக்காந்துக்க தானு.” என அவளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தார் லெட்சுமி.
“பேசாம நீங்க பிரபுவை இவங்களுக்கு தத்து குடுத்துட்டு, என்னை அடாப்ட் பண்ணிக்குங்க லெச்சும்மா. “ என சிலிர்த்துக் கொண்டாள் தானு.
“ஒரு பாட்டுக்கு இந்த அக்கப்போரா. இவங்க சத்தத்துக்கு பாட்டு சத்தமே தேவலாம். தயவு செய்து ரேடியோவ ஆன் பண்ணுங்க விபா” என கேட்டுக் கொண்டான் தருண்.
இவர்கள் அடிக்கும் லூட்டியைப் பார்த்து விபாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. இப்படிபட்ட குடும்ப பாசத்தை அனுபவித்திராததால் அவர்கள் பேசி சிரித்து கொள்வதையும், சண்டை இட்டு கொள்வதையும் ஆர்வத்துடனே கவனித்தான். பயணத்தின் போது அங்கங்கே நிறுத்தி அவர்கள் சாப்பிட குடிக்க என ஏதாவது வாங்கி கொடுத்து கொண்டே இருந்தான் விபா.
பேச்சு சுவாரசியத்திலும், தூக்க கலக்கத்திலும் வண்டி திருச்சியை நோக்கி சென்றதை யாரும் உணரவில்லை. வண்டியை உச்சி பிள்ளையார் கோவிலில் கொண்டு நிறுத்தினான் விபா. கோவிலை பார்த்துவிட்டு லெட்சுமி தான்,
“எங்கப்பா விபா வந்துருக்கோம். கோவில் மாதிரி இருக்கு.” என கேட்டார்.
“இது தான் மா உச்சி பிள்ளையார் கோவில். போற வழி தானே அதான் இவரையும் பார்த்திரலாமேன்னு நிறுத்துனேன். உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லையே?” என அடக்கமாக கேட்டான் விபா.
துள்ளி குதித்து கொண்டு முதலில் இறங்கியது தானு தான்.
“இது தான் அந்த பிள்ளையார் டெம்பிளா? வாவ்! கீழ இருந்து பாக்கவே ஆவ்சமா இருக்கு.” என குதித்தவள், கோபுரம் பின்னால் தெரிவது போல் ஒரு செல்பி எடுத்துக் கொண்டாள்.
“மேல போலாம், சீக்கிரம் வாங்க. சீக்கிரம்”
அவள் அவசரத்தை பார்த்து சிரித்து கொண்ட மற்றவர்கள் அவளை பின் தொடர்ந்தனர்.
“படி கொஞ்சம் ஸ்டீபா இருக்கும். பார்த்து மெதுவா ஏறுங்க” என பொதுவாக சொன்னான் விபா.
பிள்ளையாரை தரிசித்துவிட்டு கீழே இருந்த கடைகளை சுற்றி வந்தார்கள். ஒரு அழகிய பிள்ளையார் சிலையை கையில் வைத்துக் கொண்டு திருப்பி திருப்பி பார்த்து கொண்டிருந்தாள் தானு. விபாவும் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான். பிரபுவிடம் சொல்லி வாங்கி கொடுக்கலாம் என்றால், மற்ற நால்வரும் அடுத்த கடையில் சீரியசாக எதையோ பேரம் பேசி கொண்டிருந்தார்கள். விலையை விசாரித்து விட்டு திரும்பவும் அந்த சிலையை எடுத்த இடத்திலேயே வைத்தாள் தானு.
அவளருகில் வந்த விபா கடைக்காரரிடம் பணம் செலுத்தி அந்த சிலையை பேக் செய்ய சொல்லி அவள் கையில் கொடுத்தான்.
“வேணாம் வேணு. விலையா இருக்கு. நான் சும்மா தான் எடுத்துப் பார்த்தேன்” என ஆட்சேபித்தாள்.
“சாமி சிலையை குடுக்கறப்ப வேண்டாம்னு சொல்ல கூடாது. பணமும் திருப்பி குடுக்க கூடாது தானும்மா. அப்புறம் சாமி கண்ணை குத்திங்”
“சரி வாங்கிக்கிறேன். காசு தானே குடுக்க கூடாது. அதுக்கு பதிலா வேற ஏதாச்சும் வாங்கி தரேன். நூறு ரூபாய்குள்ள ஏதாவது பாரு” என பெரிய மனதாய் ஆஃபர் கொடுத்தாள் தானு.
‘அடிப்பாவி! நூறு ரூபாய்கு என்னடி கிடைக்கும் இங்க. இப்படி டாச்சர் பண்ணுற என்னை’ அவன் முழிப்பதை பார்த்த கடைக்காரருக்கும் சிரிப்பு வந்தது.
“அதே மாதிரி சிலை இன்னொன்னு குடுங்க. நூறு ரூபாவ மட்டும் மேடத்துகிட்ட வாங்கிக்கிங்க. மீதத்தை நான் தரேன்” என இன்னொன்றையும் வாங்கி கொண்டான் விபா.
இவர்கள் அருகே வந்த தருண் என்னவென்று கேட்டு, அந்த சிலைக்கு விபாவிடம் பணம் கொடுக்க முன்வந்தான்.
“விடு தருண். அவரும் நம்ம குடும்பத்துல ஒருத்தர் மாதிரிதான். சாமி சிலை தானே வாங்கி குடுத்தாரு. அதுக்கேல்லாம் போய் கணக்கு பார்த்துகிட்டு” என அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கற்பகம்.
தானு அவர் பேசியதை நோர்மலாக எடுத்து கொண்டு வாகனத்தை நோக்கி சென்று விட்டாள். விபாதான் கற்பகம் தன்னை பார்த்த பார்வையில் இருந்தது என்ன என குழம்பியவாறே ட்ரைவர் சீட்டில் அமர்ந்தான் .
சோலையூர் நோக்கி செல்லும் பயணத்தின் போது, களைப்பில் மற்றவர்கள் உறங்கிவிட விபாவும் கற்பகமும் மட்டுமே விழித்திருந்தார்கள். ஊர் நெருங்க நெருங்க கற்பகம் கண்களை துடைத்து கொள்வதை ரியர் வியூ கண்ணாடி வழியாக கவனித்த விபா,
“என்னாச்சும்மா? ஏன் கண் கலங்கறீங்க? என் கிட்ட சொல்லனும்னு தோணுனா சொல்லுங்க. கொஞ்சம் பாரம் குறையும்” என கேட்டான்.
கொஞ்ச நேரம் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. சொல்ல பிரியப்படவில்லை என விபாவும் விட்டுவிட்டான். பிறகு அவராகவே,
“எனக்கு அங்க போகவே ரொம்ப பயமா இருக்கு தம்பி. பிள்ளைங்க ரொம்ப கட்டாயப்படுத்தனதால தான் ஒத்துக்கிட்டேன். என்னால அவங்க பாட்டி தாத்தா பாசத்தையும் சொந்த ஊருங்குற உரிமையையும் இழந்துற கூடாது பாருங்க. “
“நீங்க தானு அப்பாவ பிரிஞ்சி இருக்கீங்க என்கிறவரைக்கும் எனக்கு தெரியும்மா. இதுல உங்க மேல எந்த தப்பும் இல்லையே அப்புறம் ஏன் பயப்படுறீங்க?”
“என் தப்பு ஒன்னும் இல்லைதான்பா. இதை நான் எத்தனை பேருகிட்ட போய் சொல்ல முடியும். அவங்க எல்லாம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு வாழறவங்க. இப்படி புருஷனை எதிர்த்துகிட்டு தனியா இருக்கேன்னு அவங்களுக்கு தெரியும். புள்ளைங்க முன்னுக்கு அட்வைஸ் பண்ணுறேன்னு எங்க என்னை தர்மசங்கடமாக்கிருவாங்களோன்னு மனசு அடிச்சுக்கிது. தருணாச்சும் பேசாமா போயிருவான். மடியில படுத்துருக்காளே இவ, எங்கம்மாவ பேச நீங்க யாருன்னு மல்லுக்கு நிப்பா.” சொல்லும்போதே புன்னகை எட்டிப்பார்த்தது அவருக்கு.
“மேடம் பெரிய சண்டைக்காரி. இவ அப்பா ஓடி போயிட்டார்ன்னு முன்னுக்கு வீட்டு பையன் கிண்டல் பண்ணதால, அவங்க கார் கண்ணாடியை கல்லை விட்டு அடிச்சு நொருக்கிட்டா. போலிஸ் எல்லாம் வந்து பெரிய பிரச்சனையா போச்சு. பிரபு அப்பா தான் பேசி பணம் கொடுத்து செட்டல் பண்ணாரு. செம்ம அடி அன்னிக்கு. ஒரு சொட்டு கண்ணீர் விடலையே. அடிக்க அடிக்க அப்படியே நின்னா. அவங்க பாட்டி மட்டும் தடுக்கலைனா, என்ன ஆகியிருக்குமோ. எனக்கு அப்படி ஒரு கோபம். அடிச்சிட்டு நான் அழுவுறேன், அவ தான் வந்து என் கண்ணை துடைச்சா. வலி கொடுத்தவங்களே மருந்தா இருப்பாங்கன்னு சொல்லுவாங்களே. அது இவளுக்கு அப்படியே பொருந்தும்” என சொல்லிக் கொண்டே மகளின் தலையை தடவி கொடுத்தார்.
“இவளை நீங்க பத்திரமா பார்த்துகுவீங்கன்னு நான் நம்புறேன் தம்பி” என திடீரென அவர் கூறியதை கேட்டு கார் பிரேக் அடித்து ஒரு குலுங்கு குலுங்கி மீண்டும் நார்மல் ஆனது.
“என்னாச்சு விபா? ஓ நான் சொன்னதை வேற மாதிரி நினைச்சுகிட்டீங்களா. இவ இங்க இருக்கறப்ப ஒரு எட்டு பார்த்துக்குங்கன்ற அர்த்தத்துல சொன்னேன் தம்பி.”
“கண்டிப்பா பார்த்துக்கிறேன்மா.” விபாவுக்கே அவரின் பேச்சும் பார்வையும் ஐயத்தை கொடுத்தது.
‘கண்டுபிடிச்சுட்டாங்களா? அதுக்கு சான்ஸ் இல்லையே. இவங்க பேசறதே ஒரு மாதிரி தான் இருக்கா இல்லை குற்ற உணர்ச்சியில நான் தான் தப்பு தப்பா நினைச்சுக்கிறேனா’ என குழம்பினான் விபா.
அதற்குள் ஊர் எல்லையை அடைந்திருந்தார்கள். கற்பகம் தூங்கி கொண்டு வந்தவர்களை எழுப்பிவிட்டார். அனைவரும் வீட்டு வாசலிலே இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
எகிறி குதித்து ஓடிய தானு, ஆஜானுபாகுவாக நின்று கொண்டிருந்த ஒருவனை தாவி கட்டிக்கொண்டாள். அவனும் சிரித்த படியே தானுவை அலேக்காக தூக்கி தட்டாமாலை சுற்றி இறக்கி விட்டான்.
அந்த காட்சியைப் பார்த்த விபாவுக்கு மீண்டும் ரத்த அழுத்தம் எகிறியது.
‘எனக்கு மட்டும் எங்கிருந்துடா டிசைன் டிசைனா வில்லனுங்க வரீங்க?’
பிரபுவை பார்வையால் தேடினான்.
அவன் தூர போய் நின்று கொண்டு, அஸ்க்கு புஸ்க்கு என்பது போல் சைகை காட்டினான்.
‘நல்ல வேளைடா சாமி எட்ட வந்துட்டோம். இல்லாட்டி கையை பிடிச்சு ஒடியற அளவுக்கு அழுத்தி இருப்பான்’ என நிம்மதி பெருமூச்சை விட்டு கொண்டான்.