அத்தியாயம் 33

மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது

தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது

என் நாடி போலவே என் நெஞ்சம் குழைந்தது

நீர் செய்யும் லீலையை நீ செய்ய மனம் ஏங்குது

முகிலாலே நனைந்ததை முத்தத்தால் காயவை

எந்தன் தனிமையை தூள் செய்ய வா !!!

 

இன்றோடு தானு காலேஜில் சேர்ந்து மாதம் ஒன்று ஆகி இருந்தது. ஊரிலிருந்து வந்த பிறகு அவளுடன் ஒரு வாரம் தங்கி இருந்து, இட மாற்றத்துக்கு அவள் பழகியவுடன் தான் குடும்பத்தினர் மலேசியா திரும்பினர்.

தானு காலையில் எழுந்து லெக்சருக்கு செல்வாள். காலை , மதிய உணவை அங்கேயே முடித்துக் கொள்வாள். இரவு உணவு மட்டும் சிம்பிளாக சாண்ட்விச், தோசை, பழங்கள் இப்படி சாப்பிட ட்ரை செய்வாள். ஆனால் அவள் வீட்டுக்கு வரும் முன்னே ட்ரைவர் வந்து காத்திருப்பார், விபா வீட்டில் சமைத்த உணவோடு. அவள் எவ்வளவு மறுத்தாலும் கேட்க மாட்டான் விபா. ஒரு வேளையாவது நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என வாதிப்பான்.

இரவில் உணவை முடித்துக் கொண்டு , அசைன்மென்களை செய்து விட்டு குளிக்கச் செல்வாள். பின்பு வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டே டேனிக்கு வாட்ஸாப் அனுப்புவாள். சில சமயம் பதில் வரும். சில சமயம் வராது. இருந்தாலும் அன்றாடம் காலேஜில் நடப்பதை அவனிடம் பகிர்ந்து கொள்வது அவளுக்கு ஒரு மன அமைதியை கொடுக்கும்.

சரியாக பத்து மணிக்கு விபா அழைப்பான். அவனோடு பேசி அவன் காதை ரத்தம் வரும் வரை அறுப்பாள். அவன் ரொமேன்டிக்காக ஏதாவது பேச ஆரம்பிக்கும் போது, தூக்கம் வருது வேணு என சொல்லி போனை கட் பண்ணி விடுவாள். அவன் தூங்கி கொண்டிருக்கும் விடிகாலை நேரம் வாட்ஸாப்பில் முத்த ஸ்மைலியை அனுப்பி விட்டு மீண்டும் குறட்டை விட்டு தூங்கி விடுவாள். அங்கே அவன் எழுந்து மெசேஜை பார்த்து சிரித்துக் கொண்டே விழித்து கிடப்பான்.

திங்கள் முதல் வெள்ளி வரை அவளை சந்திக்க சொல்லி கேட்க மாட்டான் விபா. படிக்கும் நேரத்தில் அவள் கவனத்தை திசை திருப்ப கூடாது என்பது அவன் நோக்கம். அவளுடைய சனிக்கிழமைகள் மட்டும் அவனுடையது.

காலையிலே காரை எடுத்துக் கொண்டு வந்து விடுவான். அன்று ஒரு நாள் இருவரும் சுத்தோ சுத்து என சுத்துவார்கள். அவனது செல்வ நிலை தெரிந்தும் தானு அவனிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டாள். இன்னமும் சாதாரண ஹோட்டல்களில் சாப்பிட தான் அழைப்பாள். விபா சில சமயங்களில் அவளுக்கு தெரியாமல் ஹை க்ளாஸ் இடங்களில் இடம் ரிசர்வ் செய்து விடுவான். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே சாப்பிடுவாள். பணத்தை இப்படி வீணடிப்பது தான் அவளுக்குப் பிடிக்காதே. ஆனால் ஒரே ஒரு மாற்றம் மேடத்திடம். சாப்பிடும் பணத்தை விபா கொடுக்கும் போது சண்டை பிடிக்காமல் இருக்க பழகி இருந்தாள். சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் தான் இந்த தள்ளுபடி. மற்றபடி அவனை எந்த பொருளும் வாங்கி கொடுக்க அனுமதிக்கமாட்டாள். அவனும் அவள் இந்த அளவு மலை இறங்கியதே போதும் என விட்டுவிட்டான்.

சண்டே அவளின் டோபி டே. அன்று தான் வீட்டை சுத்தம் செய்து, துணிகளைத் துவைத்து அயர்ன் செய்து வைப்பாள். பாடங்களை மீள்பார்வை செய்வாள். வீட்டினருடன் ஸ்கைப்பில் பேசுவாள். பிரபு அவள் பயன்படுத்த என ஒரு ஆப்பிள் லேப்டோப் வாங்கி கொடுத்துச் சென்றிருந்தான்.

இப்படியாக வாழ்க்கை ஒரு சீராய் சென்று கொண்டிருந்தது தானுவுக்கு. அன்று சனிக்கிழமை. காலையிலேயே விபா வந்திருந்தான் வெளியே அழைத்து செல்ல.

“சொல்லு தானும்மா. இன்னிக்கு எங்க போலாம்? சாப்பிட்டுட்டு எக்ஸ்பிரஸ் அவெனியூ போலாமா? ”

“பீச்சுக்கு போலாம் வேணு.” குரல் ஒரு மாதிரி இருந்தது.

‘என்னாச்சு! முகமெல்லாம் டல்லடிக்குது. எப்போதும் துள்ளி குதிச்சுகிட்டு வருவா. இன்னிக்கு ஒரே சோகமயமா இருக்கா. சரி அவளே சொல்லட்டும்.’

காரை பார்க் செய்துவிட்டு மெல்ல நடந்து சென்று மணலில் அமர்ந்தார்கள். காலை நேரமானதால் பலர் ஜோகிங் செய்து கொண்டிருந்தனர். சிலர் கடலில் விளையாடி கொண்டிருந்தனர். இவள் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவளே ஆரம்பித்தாள்.

“வேணு! பீட்டர்னா என்ன அர்த்தம்?”

“அது வந்து, ரொம்ப ஓவரா இங்லீஸ்ல பேசுனா பீட்டர்னு கிண்டல் பண்ணுவாங்க. எதுக்கு அதை பத்தி கேட்குற?”

“நான் உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல, என் கிளாஸ் கேல்ஸ் யாரும் என் கூட சேர மாட்டிக்கிறாங்கன்னு. முதல்ல எனக்கு ஏன்னு தெரியலை. இன்னிக்கு தான் தெரியும் எதனாலன்னு”

“ஏன்டா பீட்டருக்கும் அவங்க உன் கூட சேராததுக்கும் என்ன சம்பந்தம்? அதோட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். படிப்புல மட்டும் கோன்சென்ட்ரேட் பண்ணு. மத்ததை பத்தி கவலைப்படாதேன்னு.”

“எப்படி வேணு முடியும். கிளாஸ்ல நான் மட்டும் தனி தீவு மாதிரி தனியா இருக்கேன். ராம் மட்டும் இல்லாட்டி நான் என்ன செய்யுறது சொல்லு.”

ராம் அவளின் தற்போதைய ப்ரேண்ட். பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு டெக்னோலோகி படிக்க வேண்டும் என ஆசை. அப்பாவின் வற்புறுத்தலால் மருத்துவத்தில் சேர்ந்திருந்தான். அவனை பார்த்தாலே படிப்ஸ் என்று சொல்லி விடுவார்கள். அப்படி ஒரு தோற்றம். மற்றவர்களுடன் பழகவே பயப்படும் குணம்.

முதல் நாள் காலேஜிற்கு ஜீன்ஸ், தொள தொளவென ஒரு டாப்ஸ்,முடியை ஒரு போனி டைல் போட்டு கொண்டு வந்திருந்தாள் தானு. அறிமுக படலத்தின் போது அழகாக ஆங்கிலத்தில் பேசிய அவளை ஆண்கள் எல்லோரும் ஆசையுடன் பார்த்தார்கள் என்றால் பெண்கள் எல்லாம் கடுப்புடன் பார்த்தார்கள். பெண்கள் வரிசையில் காலியான ஒரு இடத்தில் உட்கார போன போது, அங்கே உட்கார்ந்திருந்த இன்னொரு பெண் பேக்கை வைத்து அவள் உட்காராமல் தடுத்து விட்டாள். வேறு வழி இல்லாமல் தான் தனியாக அமர்ந்திருந்த ராம் பக்கத்தில் அமர்ந்தாள் தானு. பிறகு அப்படியே இருவரும் நண்பர்கள் ஆகி விட்டார்கள்.

“சரி சொல்லு. என்ன நடந்தது?”

“நேத்து சீனியர் ஜீனியர் கெட் டுகேதர் மாதிரி நடந்தது. எல்லோரும் ஆடிடோரியம்ல இருந்தோம். எப்போதும் போல நானும் தேக்கியும் அதான் ராம். தேக்கி நான் வச்ச நிக் நேம். அவன் லேட்டஸ்ட் தெக்னோலோஜி என்சிக்லோபேடியா. அதான் அந்த பேரு வச்சேன். நாங்க ரெண்டு பேரும் பின்னால உட்கார்ந்து ஹார்ட் பீட் பத்தி டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருந்தோம். அப்ப ஸ்டேஜ்ல இருந்து ஜீனியர் க்ரூப்ல இருந்து யாராவது மேடைக்கு பாடவாங்கன்னு கூப்பிட்டாங்க. என் கிளாஸ் பிசாசுங்க தான்யாஸ்ரீ! தான்யாஸ்ரீனு என் பேரை ஏலம் போட்டுருச்சுங்க. நான் அப்படியே ஷோக் ஆயிட்டேன். அப்புறம் அந்த லெக்சரர் யாரும்மா தான்யா? மேடைக்கு வாங்கன்னு கூப்புட்டாரு. இதுங்க எழுந்து நின்னு என்னை கை காட்டி குடுத்துருச்சுங்க. நான் வேற வழி இல்லாம எழுந்து போனேன். நெர்வஸ்ல கால் கொஞ்சம் சிலிப் ஆயி விழ பார்த்தேன். அப்ப ஒரு பையன் தான் தூக்கி விட்டான்”

விபாவுக்கு கோபம் எட்டி பார்த்தது.

“ஹ்ம்ம் மேல சொல்லு” குரல் கோபத்தை அடக்கி கொண்டு வரவும், அவனை நிமிர்ந்து பார்த்த தான்யா, அந்த பையனைப் பற்றி மேலே சொல்லவில்லை.

“அவனுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு ஸ்டேஜிக்கு போனேன். மைக்கை என் கையில குடுத்தாங்க. தமிழ் பாட்டு லிரிக் எதுவும் சட்டுன்னு மைண்ட்ல வரல வேணு. எப்பவும் டேனி என்னை பாட சொல்லுற அலிசியா கீய்ஸ்சோட ‘திஸ் கெர்ள் இஸ் ஓன் பையர்” பாட்டை கண்ணே மூடிட்டு பாடினேன். பாடி முடிச்சதும் செம்ம க்ளாப்ஸ். அதுக்கு அப்புறம் குடு குடுன்னு இறங்கி ஓடி வந்துட்டேன்.”

“நல்லா தானேடா பாடி இருக்க. அப்புறம் ஏன் அப்செட்?”

“நிகழ்ச்சி முடிஞ்சி வரப்போ, என் கிளாஸ் கேர்ள்ஸ் நான் பின்னால வரேன்னு தெரியாம என்னைப் பத்தி பேசிகிட்டு வந்தாங்க. அதை கேட்டதும் கொஞ்சம் அப்சேட் வேணு”

“என்னவாம்?”

“நான் ஓவரா பீட்டர் விட்டுகிட்டு திரியறனாம். லெக்சரர்ஸ்கு கூஜா தூக்குறனாம். அவங்க எதுக்கெடுத்தாலும் என்னை தான் கூப்பிடுறாங்க, நேத்து லெசன் எங்க ஸ்டோப் பண்ணோம்னு கேட்க, போர்ட்ல டையகரம் வரைய, அசைன்ட்மேன்ட் பேப்பர் எல்லாம் அவங்க ரூமுக்கு எடுத்து போகன்னு. அதுக்கு நான் என்ன செய்ய வேணு? இத்தனைக்கும் நான் எதுக்குமே வாலண்டியர் பண்ணதில்ல.”

‘நீ தான் எங்க போனாலும் எல்லாரையும் மயக்கி வச்சிருற. அப்புறம் உன்னை அவங்க பெட்டா தான் பார்ப்பாங்க’ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் விபா.

“அது மட்டும் இல்ல. எனக்கு ட்ரெஸ்சிங் சென்சே இல்லையாம். என்னமோ ஒரு வோர்ட் யூஸ் பண்ணுச்சுங்களே. ஹ்ம்ம். பக்கி. ஆமா அந்த வோர்ட் தான் பக்கி மாதிரி வரேனாம். ஆம்பிள மாதிரி நடக்கிறேனாம். இவ கிட்ட என்ன இருக்குன்னு இந்த பையனுங்க வழியறானுங்கன்னு தெரியலை அப்படி இப்படின்னு பேசுனாங்க. மனசு கஸ்டமா இருக்கு வேணு. நான் அவங்க சொன்ன மாதிரியா இருக்கேன்?” என பாவமாக பார்த்தாள் தானு.

“எந்த பையனுங்க உன்னைப் பார்த்து வழியிறானுங்க? சொல்லு தீர்த்துருறேன்”

“இப்ப அது தான் முக்கியமா? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

நன்றாக திரும்பி அவளை பார்க்கும் மாதிரி அமர்ந்தான் விபா.

தானுவின் முடியை தடவியவன்,

“இந்த முடி சேரும் போடாம எப்படி இப்படி பளபளன்னு இருக்குன்னு அவங்களுக்கு ஸ்டமக் பெர்னிங்”

அப்படியே கையை இறக்கி கண்களை அளந்தவன்,

“மஸ்காரா போடாம எப்படி இந்த கண்ணு ரெண்டும் மீன் மாதிரி இருக்குன்னு அவங்களுக்கு பொறாமை”

அவள் கன்னத்தை இரு கைகளாலும் நிமிண்டியவன்,

“ரூஜ் போடாமலே எப்படி இந்த கன்னம் சிவக்குதுன்னு காண்டு”

விரல்களால் உதட்டை தடவியவன்,

“லிப்ஸ்டிக் இல்லாம எப்படி இந்த உதடு செரி பழம் போல இருக்குன்னு கடுப்பு”

அவன் கைகள் செய்த மாயத்தில் ஒருவித மயக்கத்தில் இருந்த தானு, அவன் கை இன்னும் கீழே இறங்கவும் பட்டேன பிடித்து முறுக்கினாள்.

“மேக்கப் கடை முதலாளின்னு நிரூபிச்சிட்ட பார்த்தியா? எனக்கு தெரியாத மேக்கப் ஐட்டம் எல்லாம் ஐயாவுக்கு தெரியுது”

“ஆவ்ச், கையை விடுடி வலிக்குது” என நடித்தான் விபா.

“அந்த பயம் இருக்கட்டும். கொஞ்சம் கேப் குடுத்தா கெடா வெட்ட பார்ப்பியே. பிச்சுப்புடுவேன்” அவள் கையை தளர்த்தியதும், அவளையும் இழுத்துக் கொண்டு மணலில் மல்லக்க சாய்ந்தான் விபா.

“என்னடா பண்ணுற. விடு என்னை”

“சுப்! என் கையிலே படுத்துகிட்டு அப்படியே அந்த வானத்தைப் பாரு தானு. நீலமா எவ்வளவு தெளிவா இருக்கு.”

அவன் கையில் தலையை வைத்துக் கொண்டவள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள்.

“மழை மேகம் வந்து மறைச்சாலும், அந்த வானம் மீண்டும் மீண்டு வந்து தெளிவாகிரும். அதே மாதிரி தான் யார் உன்னை என்ன சொன்னாலும், நீ நீயா இருக்கணும் தானும்மா. எக்காரணம் கொண்டும் மாற கூடாது. அழகு, அறிவு, அன்பு இது மூனும் கலந்து கடவுள் படைத்த யுனிக் பெர்சன் நீ. அவங்க உன்னை என்ன பேசனாலும் அது உன் காதை தாண்டி மனசுக்குள்ள விடக்கூடாது. அடுத்த காதுல விட்டுறணும். ஓகேவா? சரி இப்ப சொல்லு, எவன் உன்னை சைட்டடிக்கிறான்னு?”

“அதை மட்டும் விட மாட்டியா? வேற எதாச்சும் பேசு வேணு”

“அப்ப சரி, ஒரு கதை சொல்லுறேன் கேக்குறீயா?”

“கதையா? சரி சொல்லு கேட்கலாம்”

“ஒரு ஊருல ஒரு சூனியக்கார கிழவி இருந்தாளாம்”

“ஹேரி போட்டர் மாதிரி கதையா?”

“இடையில டிஸ்டர்ப் பண்ணாதே தானும்மா. ப்ளோ விட்டு போயிரும்”

“சரி சொல்லு, டிஸ்டர்ப் பண்ணல”

“அந்த கிழவி மந்திர புக்குல சொன்னபடி சக்தி வேணும்னு ஒரு கருப்பு பூனைய புடிச்சு தின்னுட்டாளாம்”

“அய்யே!!”

“இப்ப கதை சொல்லவா வேணாமா?”

வாயில் கையை வைத்துக் கொண்டு தொடரும்மாரு சைகை செய்தாள் தானு.

“அந்த கிழவிக்கு தெரியாதாம் அந்த பூனை அப்பத்தான் ஒரு எலிய புடிச்சு சாப்புட்டுச்சுன்னு. அந்த பூனைக்கும் தெரியாதாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எலி ஒரு குட்டி தவலைய புடிச்சு சுவாகா பண்ணுச்சுன்னு. பாவம் அந்த எலிக்கு தெரியாதாம் அந்த தவலை அப்பத்தான் ஒரு ஈயை முழுங்குச்சுன்னு. அப்புறம்”

மெல்ல எழுந்த தானு மணலை அள்ளி அவன் தலையில் கொட்டிவிட்டு,

“உன் மண்டைகுள்ள இருந்த மணல் இப்ப வெளியவும் வந்துருச்சு. இனிமே இந்த மாதிரி கதை சொல்லுறேன்னு மொக்க போட்ட, துவைச்சுருவேன்டா” என்றவள் கீழே குனிந்து அழுத்தமாக அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு,

“போடா சொங்கி” என கத்திவிட்டு ஓடினாள்.

“ஹே! என்னடி வோர்ட் இது? அந்த தேக்கி கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்டடி” என எழுந்து அவளை துரத்த ஆரம்பித்தான். அவர்களின் சிரிப்பு சத்தம் கடல் காற்றோடு சங்கமித்தது.

அன்று இரவு, தான்யா டேனிக்கு எப்பொழுதும் போல் வாட்ஸாப் அனுப்பினாள்.

தான்யா : “டேனி எனக்கு ஒரு பிரச்சனைடா”

அனுப்பிய இரு நிமிடங்களில் அவனிடமிருந்து கோல் வந்தது.

“சொல்லு டான்யா, யாரவன்?”

“அவன் பேரு கார்த்திக். என்னோட சீனியர்”

“ஒன்னு விடாம சொல்லு”

“உனக்கு என்ன என் மேல திடீர்ன்னு அக்கறை? இத்தனை நாள் நான் அனுப்பனதுக்கு ஏனோ தானோன்னு ரிப்ளை பண்ணுவ. இப்ப மட்டும் என்ன பாசம்?”

“டான்யா!! இப்ப உன் பிரச்சனைய பத்தி மட்டும் பேசுவோம். நம்ம சண்டைய இன்னொரு நாள் வச்சிக்கலாம்”

“சரி சொல்லுறேன்.” நேற்று ஆடிட்டோரியத்தில் நடந்த அனைத்தையும் ஒப்பித்தவள், விபாவிடம் மறைத்த விஷயங்களை இவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

“நான் கீழ விழப்போனப்போ இவன்தான் தூக்கி விட்டான். நான் சிரிச்சுகிட்டே தேங்க்ஸ் சொல்லிட்டு போய்ட்டேன். பாடிட்டு இறங்கி வரப்போ படி கிட்டயே ஒரு ரோஜாவோட நின்னான். நீ பாடின பாட்டு மாதிரியே உன் கிட்டயும் ஒரு ப்பையர் இருக்கு. அதை அணைக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குன்னு சொன்னான். எனக்கு சட்டுன்னு கோபம் வந்துருச்சு. இருந்தாலும் பிரச்சன வேணான்னு. சோரி ஐ எம் நோட் இன்டெரெஸ்டேட்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறம் நிகழ்ச்சி முடிஞ்சு நானும் தேக்கியும் வெளிய வரும்போது அங்கேயும் நின்னான். நான் தெரியாத மாதிரி போக பார்த்தேன். என் கையை புடிச்சு, பேப் ஷல் வீ கோ போர் அ கோப்பின்னு கேட்டான். கையை புடிச்சு முறுக்கிருப்பேன். இன்னும் ரொம்ப நாள் இங்க படிக்கணுமே. கற்பு வேற யாருகிட்டயும் பிரச்சனை வச்சிக்காதேன்னு படிச்சு படிச்சு சொல்லுட்டு போனாங்க. அவன் கையை உதறிட்டு வந்துட்டேன்”

“ஹ்ம்ம்ம்!!! அவன பத்தி டீடெய்ல்ஸ் கலேக்ட் பண்ணீயா டான்யா?”

“தேக்கி அவன் ஹிஸ்டரியே வச்சிருக்கான். இவன் யாரோ விஐபியோட மகனாம். பார்க்க வெள்ளையா வேற இருக்கான். பொண்ணுங்க எல்லாம் இவன் கடை கண் பார்வைக்கு தவம் இருக்குதுங்களாம். அப்புறம் என்னமோ சொன்னானே. ஹ்ம்ம் இவரு தான் காலேஜ் மன்மதராசாவாம்”

“ஓ! அவனுக்கு எல்லாரும் யெஸ் சொல்லியே பழகிட்டதனால நோ சொன்ன உன்னை தார்கேட் பண்ணிட்டான். யூ ஆர் அ சேலஞ் டூ ஹும். நீ கிடைக்குற வரைக்கும் சும்மா இருக்க மாட்டான். போன் நம்பர்லாம் இந்நேரம் ட்ரேஸ் பண்ணிருப்பானே”

“எப்படிடா கரேக்டா சொல்லுற? மேசேஜ் பாட்டுக்கு வந்துகிட்டே இருக்குடா அவன் கிட்ட இருந்து. ஒரே இரிட்டேட்டிங்கா இருக்கு. வேணான்னா அப்படியே போக வேண்டியது தானே. ஏன்டா இப்படி பண்ணுறான்?”

“இது தான் சில ஆண்களின் குணம் டான்யா. பொண்ணுங்க நோ சொல்லிட்டா அவங்க ஈகோவுக்கு விழுந்த அடியா எடுத்துக்குறாங்க. ஒண்ணு அவள துரத்தி துரத்தி மடக்கிறனும், இல்ல அவ யாருக்கும் கிடைக்காம ஆக்கிறனும். சிக்கனிங் ப்பேல்லோவ்ஸ்”

“இப்ப நான் என்னடா செய்யுறது?”

“அதான் பெரிய மனுஷர் ஒருத்தர் இருக்காறே? அவருகிட்ட சொன்னியா?”

“யாரு?வேணுவா? சொல்லலாம்னு தான் போனேன். அந்த கார்த்திக் தூக்கி விட்டதை சொன்னதுமே, வேணுவோட போடி லேங்குவேஜ் மாறிருச்சு. டென்சன ஆயிட்டான். அப்புறம் அவன் கிட்ட சொல்லி பெரிய பிரச்சனை ஆயிர வேணான்னு விட்டுட்டேன்”

‘உன் கிட்ட யாரு நெருங்கினாலும் அவனுக்கு பொறுக்காதே. துரத்திருவானே. தேக்கிய மட்டும் எப்படி விட்டான்?’ என யோசித்த டேனி,

“தேக்கி உன் பிரண்டுனு வேணுக்கு தெரியுமா?”

“தெரியுமே. ஒன் டைம் மீட் பண்ணியிருக்கான்.”

‘ஓ ஹார்ம்லெஸ்னு விட்டு வச்சிருப்பான். ‘

“சரி டான்யா. கார்த்திக்கை வச்சி செஞ்சிரலாமா?”

“நான் ரெடி. அவன் தொல்லை விட்டா சரி”

“நெக்ஸ்ட் டைம் அவன் கோல் பண்ணுறப்ப, சிரிச்சிகிட்டே எடு. வெளிய கூப்பிட்டா வரேன்னு ஒத்துக்க”

“சரி”

“லெட்ஸ் பிகீன் தெ கேம் டான்யா”

error: Content is protected !!