அத்தியாயம் 34
வெட்கத்தை உடைத்தாய்
கைகுள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை
என் செய்வாய் நாளும் எனை
தான்யா ஹோட்டலை அடையும்போது இரவு மணி ஒன்பதை நெருங்கி இருந்தது. ஏழு மணிக்கு கார்த்திக்கை சந்திப்பதாக சொல்லி இருந்தாள். கிளம்பிட்டேன், இன்னும் அரை மணி நேரம், ரிச்சிங் இப்படி மெசெஜ் மேல் மெசேஜ் அனுப்பிவிட்டு சாவகாசமாக ஒன்பது மணிக்கு தான் வந்தாள். அவளுக்காக கார்த்திக் பொறுமையாக காத்திருந்தான்.
மேசையை நோக்கி வந்தவளை பார்த்து எழுந்து நின்றான் கார்த்திக். மேசை அருகில் வந்துவிட்டவள் கையை பற்றி குலுக்கி கன்னத்தில் முத்தமிட வந்தான் அவன். அதற்கு வழிவிடாமல் ஹில்சை சரி செய்வது போல் கீழே குனிந்து கொண்டாள் தான்யா.
“உட்காரு தான்யா டியர். நீ என்னோட இன்விடேஷனை ஏத்துகிட்டு டின்னர் வந்ததுல ரொம்ப சந்தோசம்.”
“எனக்கும் தான் கார்த்திக். சோரி, முதல்ல நீ யாருன்னு தெரியாம உன்கிட்ட ஹார்ஷா நடந்துகிட்டேன். அப்புறம் தான் உன்னைப் பத்தி கேள்விப்பட்டேன். ஐ எம் இம்ப்ரெஸ்ட்.” என எல்லா பல்லையும் காட்டினாள் தான்யா.
அவனைப் பார்ப்பதற்காக கேர் எடுத்து அலங்காரம் செய்திருந்தாள். முடியை லூசாக விட்டு மோடர்னாக கவுன் ஒன்றை அணிந்து வந்திருந்தாள்.
அவள் பதிலை கேட்டு ஒரு வித இருமாப்புடன் முடியை கோதினான் கார்த்திக். நம்ம பெர்சனாலிட்டிக்கும் செல்வாக்குக்கும் மயங்காத ஆள் இருக்க முடியுமா என பெருமிதம் அவன் முகத்தில் வந்தமர்ந்தது.
“அதேல்லாம் பரவாயில்லை பேபி. நான் உன்னை மன்னிச்சுட்டேன். பை த வே, நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே. கண்ணை அங்க இங்க திருப்ப முடியலை” என மேசை மேல் இருந்த அவளது கையைப் பற்றி கொண்டு ஒரு ரொமென்டிக் லுக் விட்டான் கார்த்திக்.
‘பேபியா? அப்ப நீ என்ன எனக்கு டாடியா? ஒரு டாடி பார்க்கிற மாதிரியா நீ பார்க்குற. உன் முட்டைக் கண்ணு முழிய நோண்டி காக்காக்கு போடணும். லுக்க பாரு, காதலா பார்க்குறன்னு நினைச்சுகுட்டு கவுண்டமணி மாதிரி பார்க்குற. முதல்ல கைய எடுடா. பக்கத்துல இருக்குற முள்ளு கரண்டியை எடுத்து குத்திற போறேன்’ என மனதிற்குள் அவனை வறுத்தவள், வெளியே சத்தமாக சிரித்து வைத்தாள்.
டேனி அழகாக உடுத்திக் கொண்டு போக சொல்லி இருந்தான். ஏனோ தானோவென்று சென்றாள் அவர்கள் ஆட போகும் இந்த மைன்ட் கேம் சொதப்பி விடுமென சொல்லி இருந்தான்.
“உனக்காகவே பார்லர்லம் போய் அலங்காரம் செஞ்சுகிட்டு வந்தேன் கார்த்திக். என்ன இந்த ஹில்சு தான் கொஞ்சம் புதுசு. காலை கடிக்குது. எக்ஸ்கியூஸ்மீ” என மேசைக்கு கீழே குனிந்தாள்.
“சொல்லுடா! இதுக்கு அப்புறம் என்ன செய்யனும்?” என காதில் சொருகி இருந்த புளூதூத்தில் கிசுகிசுப்பாக டேனியிடம் கேட்டாள். காதை மறைத்தபடி முடியை சீவி இருந்தாள். அதனால் யாருக்கும் அவள் காதில் சொருகி இருந்த மிக சிறிய புளுதூத் வேளியிலிருந்து பார்த்தாள் தெரியாது. தேக்கி அவளுக்காக வாங்கி கொடுத்திருந்தான்.
“மெனுல இருக்கிற ஆக எக்ஸ்பென்சிவான சாப்பாடை ஓர்டர் பண்ணு. அப்புறம் அவன் தட்டுல இருக்கிற சாப்பாட்டையும் எடுத்து சாப்பிடு. அதுக்கும் மேல மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டுக்க. உனக்கு சொல்லியா குடுக்கனும். லைன மட்டும் கட் பண்ணாத. நீங்க பேசறத கேட்டு அப்ப அப்ப நான் கைட் பண்ணுறேன்.”
“ஹ்ம்ம், சரி”
நிமிர்ந்து அமர்ந்தவள்,
“சாப்பாடு ஓர்டர் பண்ணலாமா கார்த்திக். எனக்கு செம்மையா பசிக்குது”
“ஓ சுவர் பேப். பேரர் மெனு பிளிஸ்” என அழைத்தான்.
மெனுவுடன் வந்த பேரரை அரை மணி நேரம், இது என்ன டிஷ், அது என்ன டிஷ் என உருட்டி எடுத்து விட்டாள் தானு. இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அமர்ந்திருந்தான் கார்த்திக். டேனி சொன்னது போல் விலை அதிகமான உணவை ஆர்டர் செய்தவள், அவனுக்கும் இவளே ஆர்டர் கொடுத்தாள்.
“கார்த்திக் டியர், உனக்கும் நானே ஆர்டர் பண்ணிட்டேன். உனக்கு ஒகே தானே ?“ என கேட்டாள்.
கஸ்டபட்டு சிரித்துக் கொண்டே ஓகே என தலையாட்டினான் அவன்.
“சாப்பாடு வர வரைக்கும் நாம பேசிகிட்டு இருக்கலாம் கார்த்திக். நம்ம குடும்பத்தை பத்தி சொல்லேன்”
“நம்ம குடும்பமா?”
“ஆமா, உன் குடும்பம் என் குடும்பம் மாதிரி தானே. அதான் நம்ம குடும்பம்னு சொன்னேன். சரி விடு, உன் பேமிலியை பத்தி நானே சொல்லுறேன். மாமா பேரு கணேசன், புல்டைம் மார்பிள் பிஸ்னஸ், பார்ட் டைம்மா அரசியல்ல இருக்காரு. அத்தை பேரு ராதிகா. சமூக சேவை செய்யுறாங்க. ஒரே பையன் நீ, மை கார்த்திக். அப்புறம் சொத்து வெள்ளையில 5சியும் கருப்புல 5சியும் இருக்கு. வீட்டுல அஞ்சு கார் இருக்கு. டோமின்னு ஒரு டாக், இன்னொரு செல்ல பிள்ளையா வீட்டை சுத்தி வருது”
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” நெற்றியில் அரும்பிய வேர்வையை துடைத்துக் கொண்டே கேட்டான் கார்த்திக்.
“என்ன மடத்தனமான கேள்வி இது. நான் வாழ போற வீட்டைப் பத்தி தெரிஞ்சுக்காம இருப்பனா? உன் பேக்கிரவுண்ட் தெரிஞ்சு கிட்டு தானே உன்னைப் பார்க்கவே சம்மதிச்சேன்” என சத்தமாக சிரித்தாள்.
பக்கத்து மேசையில் இருந்தவர்கள் அவளை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.
“என்ன பார்வை இங்க? கார்த்திக் என்ன படமா ஓட்டுறான்? “ என அவர்களை பார்த்து முறைத்தபடியே கத்தினாள். அவர்கள் இருவரும் எழுந்து வேறு மேசைக்கு சென்று விட்டார்கள். கார்த்திக் அவளை கலவரமாக பார்த்தான்.
“பாரு கார்த்திக், ஒரு ப்ரைவசியே இல்லை. இனிமே நான் சாப்பிட வரனும்னா தனி ரூம் புக் பண்ணு.” என அவனிடம் சிணுங்கியவள்
“அப்புறம் என்னைப் பத்தி ஒன்னும் கேக்கலியே? நானும் பணக்காரி தான். 10 சிக்கு சொந்தக்காரி. எப்படின்னு கேக்குறியா? உன்னை மேரேஜ் பண்ணிகிட்டா உன்னோட 10சியும் எனக்கு தானே. ஹாஹாஹா” என நகைத்தாள்.
அவளது பேச்சு கார்த்திக்குக்கு பயத்தைக் கொடுத்தது. அவன் அப்பா ஏற்கனவே அவனுக்குப் பெண் பார்த்து வைத்திருந்தார். அவரின் பார்ட்னரின் மகள். படிப்பு முடிந்ததும் கல்யாணம். அவளை கட்டவில்லை என்றால் வீட்டை விட்டே துரத்திவிடுவார். இப்ப எவ்வளவு வேணும்னாலும் எஞ்சாய் பண்ணிக்கோ, கல்யாணம் முடிந்தவுடன் அந்த பொண்ணுக்கு அடங்கி தான் இருக்கனும் என்று ஏற்கனவே மிரட்டி வைத்திருந்தார்.
“கமான் பேபி. அதுக்குள்ள என்ன மேரேஜ் பத்தி பேசிக்கிட்டு. வாழ்க்கைய முதல்ல அனுபவிக்கனும்மா. அப்புறம் தான் கால்கட்டு கைகட்டு எல்லாம்”
‘ஓ! நீ அப்படி வரியா. ஒரு பொண்ணு கண்ணுல சிக்கிற கூடாதே, உடனே லெட்ஸ் எஞ்சாய். இருடா இன்னிக்கு நைட் முடியறதுகுள்ள உன்னை துண்டை காணோம் துணியைக் காணோம்னு தெறிக்க வைக்கிறேன்’
அதற்குள் சாப்பாடு வந்திருந்தது.
“சாப்பிடலாம் பேபி”
நான்கு நாள் சாப்பிடாத மாதிரி உணவை அள்ளி வாயில் அடைத்தாள் தானு. சாஸ் வாயில் இருந்து வழிந்து அவள் சட்டையெல்லாம் தெறித்தது.
‘டேய் டேனி, இந்த மூஞ்சிக்காக ஒரு நல்ல ட்ரெஸ்சை ஸ்போயில் பண்ண சொல்லிட்டியேடா. இந்த கறை டோபிக்கு போட்டாலும் போகாதுடா. எனக்கு வர கடுப்புல ரத்த காயம் பாக்கணும் போல இருக்கு.’ என கருவினாள்.
“சாப்பாடு செம்மையா இருக்கு கார்த்திக். உன்னோட கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்க்கிறேனே” என எழுந்து அவன் தட்டை எடுத்துக் கொண்டாள். அவள் உழப்பி வைத்திருக்கும் தட்டை அவனுக்கு நகர்த்தி வைத்தாள். அவள் தட்டை பார்த்தவன் கரண்டியை கீழே வைத்து விட்டு,
“ஐ எம் புல் தான்யா. நீ சாப்பிடு” என்றான்.
கரண்டி பிடித்திருந்த கையை ஆட்டிக் கொண்டே சிரித்து சிரித்து பேசினாள் அவள். கரண்டியிலிருந்த ச்சிலி சாஸ் பறந்து நேராக அவன் கண்ணில் சென்று விழுந்தது.
“அம்மா!! ஆஆஆஆ” என கத்தி விட்டான் கார்த்திக்.
“என்னாச்சு கார்த்திக்” என எழுந்தவள் அவன் கண்களை துடைப்பது போல் கையிலிருந்த மீத சாஸை இன்னும் அப்பி விட்டாள்.
“ஆ எரியுது, எரியுது” என கத்தியவன் முகத்தில் ஐஸ் நீரை எடுத்து ஊற்றிவிட்டாள் தான்யா.
“இப்ப எரிச்சல் போயிருச்சா கார்த்திக்? சோரி கார்த்திக் என்னால தான் இப்படி ஆயிருச்சு. சோரி” என மன்னிப்பை கேட்டுக் கொண்டே இன்னும் தண்ணீரை கையில் கொட்டி அவன் முகத்தில் தேய்த்தாள். அவன் சட்டை , பேண்ட் எல்லாம் தண்ணீரீல் நனைந்து விட்டது. இவர்கள் மேசையில் நடந்த கூத்தை மற்ற மேசைக்காரர்கள் சவாரசியமாக கவனிக்கத் தொடங்கி விட்டனர்.
“ஸ்டாப் இட் தான்யா. நான் ரெஸ்ட் ரூம்கு போய் முகம் கழுவிட்டு வரேன்.” என அவசரமாக எழுந்து சென்றான் அவன்.
‘ஹிஹிஹி, பேபி போயி தான்யா வந்துருச்சு. செம்ம டிரீட்மென்ட்ல. நான் விட்டு அடிச்சது உனக்காக நானே மிக்ஸ் பண்ண ப்ளாக் பேப்பர் கலந்த ச்சில்லி சாஸ். மவனே ரெண்டு நாளுக்கு ஒத்த கண்ணோட சுத்துடா.’
மேசைக்கடியில் குனிந்தவள்,
“டேனி, செஞ்சிட்டேன் அவனை. முகரையேல்லாம் சிவந்து போய், ஒரு பக்க கண்ணு வீங்க ஆரம்பிச்சிருச்சு. பாவமா இருக்கு விட்டுரலாமா?”
“இப்ப விட்டீனா, மறுபடியும் டேட் கேப்பான். ஓகேவா?”
“சரி, வரட்டும். அடுத்த ஸ்டெப்பை ஆரம்பிக்கிறேன்”
ஒரு கண்ணில் பேப்பர் நேப்கினை வைத்தபடியே, தடுமாறி நடந்து வந்தான் கார்த்திக்.
“இப்ப எப்படி கார்த்திக் இருக்கு?”
“ஹ்ம்ம் ஓகே. இப்ப கிளம்பலாமா?”
“அதுக்குள்ளயா? நான் இன்னும் டிசர்ட் கூட ஆர்டர் செய்யலை. கொஞ்சம் வெய்ட் பண்ணு.” பேரரை அழைத்து மேசையை சுத்தம் செய்ய சொன்னவள், புட்டிங் கேக் ஆர்டர் செய்தாள்.
“கார்த்திக், நம்ம ரிலேசன்ஷிப் பத்தி கொஞ்சம் பேசி கிளியர் பண்ணிக்கலாமா?”
அலெர்ட் ஆன கார்த்திக் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“என்ன பேசனும்?”
“பேசறதுக்கு முன்ன, இந்த டாக்குமென்டுல எல்லாம் சைன் போட்டுரு.” என சில பேப்பர்களை அவன் புறம் நகர்த்தினாள்.
பிரித்துப் பார்த்த கார்த்திக் அதிர்ந்து விழித்தான். அவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய தேவையான பத்திரங்கள் அவை.
“என்ன சொல்லுறான்” என லைனில் இருந்த டேனி கேட்டான்.
கீழே குனிந்தவள்,
“பேய் முழி முழிக்கிறான். இனிமே என் பக்கமே தலை வைக்க மாட்டான்” என நிமிர்ந்தவள் ஹோட்டலுக்குள்ளே நுழைந்த ஆளைப் பார்த்து அதிர்ந்து போய் மீண்டும் கீழே குனிந்தாள்.
“டேனீ!!!!”
“என்ன டான்யா? என்ன ஆச்சு?”
“வேணு உள்ள வராண்டா”
‘வந்துட்டானா? எப்படி கரெக்டான நேரத்துல வரான்?’ என நினைத்தவன்,
“புட்டிங் சாப்பிட்டு முடிச்சுட்டீயா?”
“நான் என்ன சொல்லுறேன், நீ என்னடா கேக்குற?”
“சாப்பிட்டு முடிக்காட்டி, இனிமே ரிலேக்ஸா சாப்பிடு. இதுக்கு மேல வேணு பார்த்துக்குவான். நான் போனை கட் பண்ணுறேன். வீட்டுக்கு போய் மீதி கதைய சொல்லு. டேக் கேர் டான்யா” என லைனை கட் செய்தான் டேனி.
மெல்ல நிமிர்ந்து விபாவைப் பார்த்தாள் தான்யா. கோபத்தில் அவன் முகம் இறுகி கிடந்தது. நேராக அவர்களின் மேசையை நோக்கி வந்தவன் தான்யாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
“ஏ! யாரு நீ? எதுக்கு இங்க வந்து உட்காருர?” என குரலை உயர்த்தினான் கார்த்திக்.
“டேய் அடங்குடா ! ஓவரா சவுண்ட குடுத்துகிட்டு” என்றவன் மேசையில் இருந்த காகிதங்களை எடுத்துப் பார்த்தான். கண்கள் ஜிவு ஜிவு என சிவந்தது. தான்யாவை உறுத்து விழித்தவன்,
“வெளிய போய் கார்கிட்ட நில்லு” என உத்தரவிட்டான்.
“இல்ல வேணு, நான் சொல்லுறத கேளு”
“போன்னு சொல்லுறேன்ல.” குரலில் கடுமை ஏறி இருந்தது. அவனை முறைத்துப் பார்த்தவள், சீட்டை விட்டு எழுந்தாள்.
“என்ன நடக்குது இங்க? நீ யாரு அவள வெளிய போக சொல்ல?” என கார்த்திக் கேட்டதற்கு,
“நான் அவ புருஷன்” என விபா பதிலளிப்பதை கேட்டு கொண்டே விடுவிடுவென வெளியேறினாள் தானு.
வெளியே வந்தவள், அடுத்த கடையில் நிற்க சொல்லி இருந்த தேக்கியை அழைத்தாள்.
“என்ன தான்யா? மிஷன் சக்சஸா?”
“நீ வேற கடுப்ப கிளப்பாதே. அதுக்குள்ள வேணு வந்துட்டான். அவன் இருக்குற ஆத்திரத்துல உன்னையும் பார்த்தான்னா அவ்ளோதான். நீ அப்படியே கிளம்பு. நான் ஆட்டோ பிடிச்சு இப்படியே கிளம்பிருறேன்”
ஒரு மணி நேரம் கழித்து தானுவின் வீட்டு கதவு படபடவேன தட்டப்பட்டது.
“யாரும் இல்ல. நீ போகலாம்” என உள்ளிருந்து குரல் கொடுத்தாள் அவள்.
“தானு!!! ஒழுங்க வந்து கதவை திறந்துரு. நான் செம்ம கோபத்துல இருக்கேன். உன்னைய கார் கிட்ட தானே நிக்க சொன்னேன். இந்த ராத்திரி நேரத்துல ஏன் தனியா ஆட்டோ எடுத்து வந்த?”
“நான் பேச வந்தப்ப, நீ காது குடுத்து கேட்டீயா? அப்புறம் நான் மட்டும் நீ சொன்னத ஏன் கேக்கனும்?”
“எதுவா இருந்தாலும், கதவை திறந்துட்டு பேசேன்டி”
“முடியாது. எங்கம்மா நான் தனியா இருக்கும் போது உன்னைய உள்ள விட கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அவங்க பேர நான் காப்பாத்துனுமாம்”
“அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்?” மண்டை காய்ந்தது அவனுக்கு.
“அவங்கள செல்லமா நான் எப்படி கூப்பிடுவேன்?”
“கற்பு?”
“ஆமாம், அதை தான் நான் காப்பாத்துனமாம்”
வெளியே அவன் சிரிக்கும் சத்தம் கேட்டது.
“உன் கற்புக்கு நான் கேரண்டி. இப்ப கதவை திற தானும்மா. நான் பேச வந்தத பேசிட்டு போயிருறேன். ப்ளீஸ்”
“இப்படி அழகா கேட்டு பழகு வேணு. அதை விட்டுட்டு ஆர்டர் போடுற” என்றவள் கதவை திறந்தாள்.
அவளை உள்ளே தள்ளிவிட்டு நுழைந்தவன் கதவை தாள் போட்டான்.
“ஏன்டா தாள் போடுற?”
“நீ வெளிய ஓடாமா இருக்கத்தான்”
“வேணு, தனியா இருக்கிற பொண்ணுகிட்ட வந்து வம்பு பண்ணாதே. என் காராத்தே கிக் பத்தி உனக்கு தெரியாது. பிரபுகிட்ட போய் கேட்டுப்பாரு” என்றவள் கையை முன்னே நீட்டி சண்டை போட தயாரானாள்.
ஒரே எட்டில் அவளை நெருங்கி தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன்,
“இப்ப கிக் பண்ணு பார்க்கலாம்” என சிரித்தான்.
அவளை அசைய முடியாதபடி இறுக்கமாக அணைத்திருந்தான் வேணு.
“விடு வேணூ!! வலிக்குது. மூச்சு முட்டுது. விடு” என கத்தினாள் தானு.
அவசரமாக அவளை விலக்கி நிறுத்தினான் விபா.
“தானும்மா, எங்க வலிக்குது?” என கேட்டு முடிக்கும் முன்னரே அவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டு விட்டு ஓடி போய் சோபாவின் பின்னால் நின்று கொண்டாள் தானு. நாக்கை துருத்தி அழகு காட்டியவள்,
“எப்படி இருந்துச்சு ஜாக்கி சான் குத்து?” என சிரித்தாள்.
தன் கையில் பிடித்திருந்த பாலிதின் பையை காபி டேபிளில் வைத்தவன்,
“தானும்மா, திஸ் இஸ் சீட்டிங்” என்றான்.
“சோ வாட்? என் கிட்ட வச்சுகிட்டனா இப்படி தான் வாங்கி கட்டனும். பீ கேர்பூல்”
“அன்னிக்கு நீதான் வச்சுக்க வச்சுக்கன்னு சொன்ன. இப்ப பிளேட்ட மாத்தற” என பேச்சுக் கொடுத்துக் கொண்டே மெல்ல அவளை நெருங்கினான்.
அவன் நெருங்க நெருங்க பின்னே நகர்ந்தவள்,
“ஒழுங்க ஓடி போயிரு வேணு. இதுக்குத்தான் உன்னை உள்ள விடவே யோசிச்சேன்.”
“நானும் உன் கிட்ட பேச மட்டும் தான் வந்தேன் தானும்மா. இப்படி அரைகுறையா சட்டை போட்டுகிட்டு, நீதான் சும்ம இருந்தவனை வம்பு பண்ண வந்தியான்னு கேட்டு உசுப்பேத்தி விட்ட.”
அரைகுறை சட்டை என அவன் சொல்லவும் கீழே குனிந்து தன்னைப் பார்த்தாள் தானு. எப்பொழுதும் தூங்கும் போது போடும் தொடை வரை இருக்கும் ஹேலோ கிட்டி நைட்டி தான் போட்டிருந்தாள். செக்சியா ஒன்னும் இல்லையே என நினைத்துக் கொண்டே அவள் நிமிரும் கேப்பில் அவளை மீண்டும் பற்றி இருந்தான் விபா.
மெல்ல அவளது முகத்தை நிமிர்த்தியவன்,
“உன் மேல எவ்வளவு கோபமா வந்தேன் தெரியுமா? ஆனா உன் முகத்தை பார்த்தவுடனே, அப்படியே கோபமேல்லாம் மாயமா மறைஞ்சி போயிருச்சு. என்னை என்னடி பண்ணி வச்சிருக்க? உன் முன்னால நான் நானா இல்லடி.” என்றவன் அவள் கண்களையே ஊடுருவி பார்த்தான். அவனது விழி அம்பை தாளாது, பார்வையை தழைத்துக் கொண்டாள் அவள்.
“தானூ!!” ஹஸ்கியாக வெளி வந்தது அவன் குரல்.
“என்னைப் பாருடி”
முடியாது என தலை அசைப்பு மட்டுமே வந்தது.
‘கொல்லுறாளே’
அவளது தாடையை ஒரு கையால் நிமிர்த்தியவன் , மறு கையால் அவள் உதட்டை மிருதுவாக வருடியவன்
“தானு, ஒன்னே ஒன்னு. ப்ளீஸ்டா” என கிட்டதட்ட கெஞ்சினான் விபா.
கண்ணை திறந்து அவன் கண்களை நோக்கியவள், அதில் தெரிந்த தாபத்தில் பேச்சிழந்து போனாள்.
‘கண்ணைப் பார்க்கதே தானு. அதுக்குள்ள தான் வசிய மருந்து வச்சிருக்கான். பார்க்காதே’ என புத்தி சொன்னாலும் அவள் மனம் அவன் பார்வையில் கட்டுண்டு கிடந்தது. அவளிடம் மறுப்பு எதுவும் வராமல் போகவும், மெல்ல குனிந்து அவள் உதடுகளில் தன் உதட்டை பொருத்தினான் விபா. ஷாக் அடித்த மாதிரி இருவருக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கியது. உதடு வழியாக தன் உயிரையே அவளுக்குள் அனுப்பினான் அவன். ஒன்று என்றவன், மீண்டும் மீண்டும் அவளது உதட்டை முற்றுகையிட்டான். ஒருவருக்குள் ஒருவர் உருகி கரைந்து கொண்டிருந்தவர்களை டெலிபோன் மணி தான் நிஜ உலகுக்கு அழைத்து வந்தது.
விபாவை தன்னிடமிருந்து விலக்கி தள்ளியவள், போனை கூட எடுக்காமல் ரூமுக்குள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள். உள்ளே இருந்து விசும்பல் சத்தம் கேட்டது.
இந்த மாதிரி விஷயங்களில் பாலபாடம் கூட அறியாத சிறு பெண்ணின் உணர்ச்சியோடு விளையாடி விட்டதை நினைந்து தன் மீதே வெறுப்பு வந்தது விபாவுக்கு.
‘இவ கிட்ட மட்டும் என்னால கட்டுப்பாடாவே இருக்க முடியலையே. இப்ப எப்படி சமாதானம் பண்ணுவேன்? இனிமே என்னை நம்பி என் கூட வெளிய வருவாளா?
விசும்பல் இப்போது அழுகையாக மாறி இருந்தது. அவள் ரூமின் கதவருகே நின்றவன், வார்த்தைக்கே வலிக்கும் என்பது போல,
“தானும்மா” என அழைத்தான்.
“போடா” அழுகையினூடே கத்தினாள். உள்ளே என்னவோ உடையும் சத்தம் கேட்டது.