அத்தியாயம் 41
வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா
“தானும்மா!!!!!!!!!!!!!!!!!!” என கதறினான்.
அவன் கத்திய சத்தம் அந்த அமைதியான நேரத்தில் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பட்டு எதிரொலித்தது.
நெஞ்சில் இனம் புரியாத பயம். கண்களில் கண்ணீர் கரகரவென இறங்கியது. எல்லா கஷ்டங்களையும் தூசியென துடைத்துவிட்டு முன்னேறியவன், தானுவின் பிரிவை தாங்க முடியாமல் மடிந்து அமர்ந்தான். பயத்தில் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
ஹால் கடிகார சத்தத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன் குடுகுடுவென தன் அறைக்கு ஓடினான். போனை எடுத்து எப்பொழுதும் அவளை கண்காணிக்கும் ட்ரேக்கர் அப்ளிகேஷனைத் திறந்தான். அவளது போனும் , லேப்டாப் சிக்னலும் இன்னும் அவளது அபார்ட்மென்ட் வளாகத்தைத் தான் காட்டியது. மனதில் பரவிய நிம்மதியோடு, ஓடி சென்று காரை ஸ்டார்ட் செய்தான். திரும்பவும் உள்ளே வந்தவன், ஆபிஸ் ரூமில் வைத்திருக்கும் அவளின் அபார்ட்மென்ட் கீயையும் மறவாமல் எடுத்துக் கொண்டான்.
அவன் காரை அழுத்திய வேகத்தில் இருபது நிமிடங்களில் தானுவின் அபார்ட்மென்டில் இருந்தான். கதவை தட்டி, தானு தானு என அழைத்தும் சத்தம் இல்லாததால், சாவியைக் கொண்டு திறந்து உள்ளே சென்றான். வீடே இருட்டாக இருந்தது. லைட்டை தட்டியவன், கதவை சாத்திவிட்டு நேராக அவள் ரூமுக்கு சென்றான். கதவு திறந்துதான் இருந்தது. ஆனால் அவள் இல்லை. கட்டிலின் மேல் இருந்த அவளது போனும், லப்டோப்பும் தான் அவனை வரவேற்றன. கால்கள் நடுங்க அருகே சென்றவன், அங்கே போனின் கீழ் இருந்த சிறு பேப்பரை கையிலெடுத்தான். குட் பாய் என சிவப்பில் எழுதி இருந்தாள் தானு. அவன் அங்கே வருவான் என அனுமானித்தே போனை விட்டு சென்றிருந்தாள். ரூமில் எல்லா பொருட்களும் அதன் அதன் இடத்தில் இருந்தன. அவளது துணி மணிகளை மட்டும் தான் எடுத்து சென்றிருந்தாள்.
அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டே வீட்டை ஒரு அலசு அலசினான், எங்காவது ஒளிந்து விளையாடுகிறாளா என எண்ணி. பலன் தான் பூஜியமாக இருந்தது. அப்பொழுதுதான் அவன் கண்ணில் பட்டது லேசாக திறந்திருந்த பவிகாவின் ரூம். அதாவது பூட்டி வைத்திருந்த விபாவின் ரூம்.
‘கண்டுபிடிச்சுட்டாளா’ என புலம்பியவாறே அருகில் சென்று கதவைப் பார்த்தான். ஸ்குரு டிரைவர் கொண்டு கதவின் கைப்பிடியை கழட்டி இருந்தாள். கதவை அகலமாக தள்ளி ரூமின் லைட்டை போட்டான். அறை முழுக்க வித விதமான போஸ்களில் தானு சிரித்துக் கொண்டும் , முறைத்துக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தாள். நான்கு பக்க சுவர்களிலும் ஒரு இடுக்கு விடாது அவளது போட்டோக்களை ஒட்டி வைத்திருந்தான் விபா. பெட்சைட் டேபளின் மேல் இருந்த போட்டோவை கையிலெடுத்து சிறிது நேரம் பார்த்தவன் அவளது முகத்தை தடவி கொடுத்தான் . அதில் தானு பைரவாவுடன் விளையாடி கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவாறே சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் கவனத்தை திறந்திருந்த அலமாரியின் கதவு திசை திருப்பியது. அலமாரியஒ நோக்கி சென்றான் விபா, அவன் சேகரித்து வைத்திருந்த அவள் சம்பந்தபட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் அவனைப் பார்த்து சிரித்தன. பாவி என்று அவள் கையால் எழுதி கொடுத்த ஸ்டார்பக்ஸ் கப், சினிமாவில் அவள் குடித்த கோக் கப் ஸ்ட்ரோவுடன், லேக் கார்டனில் அவன் மேல் ஊற்றிய மினரல் வாட்டர் போட்டல், பினாங்கில் அவள் பேக்கில் இருந்து திருடிய ஹேலோ கிட்டி டீ-சர்ட், அவள் சாப்பிட்டு தூக்கி எறிந்த மேக்னம் ஐஸ்கிரீமின் வ்ரேப்பர், இப்படி பலதும் இருந்தன. எல்லாவற்றையும் சுத்தம் செய்து தேதி இட்டு அழகாக அடுக்கி வைத்திருந்தான்.
அலமாரியில் கீழ் அடுக்கில் இருந்த கலைந்த டாக்குமென்டுகளும் அவள் எடுத்து பார்த்திருக்கிறாள் என அறிவித்தது. இந்த வீட்டை வாங்கிய பத்திரம், அவளுக்கு லீஸ் கொடுத்த பத்திரங்கள், காலேஜ் அட்மிஷனுக்கு பணம் கொடுத்த டீடேய்ல்ஸ் எல்லாம் அங்கு இருந்தன. தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான் விபா. இவை எல்லாம் பெரிய வீட்டின் ஆபிஸ் ரூமில் தான் வைத்திருந்தான். அவள் அந்த வீட்டில் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக சுற்றுவதால், அவள் காலேஜ் சென்றிருந்த ஒரு நாளில் இங்கு கொண்டு வந்து வைத்தான். கண்டிப்பாக மற்றவர் அறையை நோண்டி பார்க்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் அப்படி செய்திருந்தான். தன் மேல் சந்தேகம் வராமல் கண்டிப்பாக தானு இந்த கதவைத் திறந்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம்.அந்த டாக்குமென்டுகளில் இரு இடங்களில் சிவப்பு பேனாவில் வட்டம் இட்டிருந்தாள். Vibakar என்ற ஆங்கில எழுத்தில் r ஐ வெட்டி இருந்தாள். பின்பு திருப்பி போட்டு Bavika என எழுதி பார்த்திருந்தாள். அந்த எழுத்துகளில் தண்ணீர் பட்டது போல் லேசாக அழிந்திருந்தன.
‘பார்த்துட்டு அழுதிருக்கா. இப்படி ஏமாந்து போய்ட்டோமேன்னு துடிச்சிருப்பா. அவளுக்கு தெரிய கூடாதுன்னு தானே பூட்டி வச்சேன். கண்டுபிடிச்சுருவான்னு நினைக்கலியே. இதெல்லாம் பார்த்து அவளை நான் ஏமாத்திட்டேன்னு நினைச்சிருப்பாளே. அதனால தான் நான் சொல்லுவனான்னு முகத்தை முகத்தைப் பார்த்திருக்கிறா. புரியாத முட்டாளா இருந்திட்டனே. அதை விட பழகன இத்தனை நாளுல, அவ புத்திசாலித்தனம் தெரிஞ்சும் இவ்வளவு கேர்லசா இருந்துருக்கேன். நான் அவள முட்டாளடிச்சிட்டேன்னு துடிச்சுப் போயிருப்பா என் தானு.’ அவன் கண்களில் சூடாக கண்ணீர் இறங்கியது.
‘இது உணர்ச்சி வசப்படுற நேரம் இல்லை. அவளை திரும்ப என் கிட்ட கொண்டு வரனும். நான் இல்லாம அவளாலோ, அவ இல்லாம என்னாலோ இருக்க முடியாது.’ கண்ணீரை சுண்டி எறிந்தவன் போனை கையில் எடுத்தான். எப்பொழுதும் தொழில் விஷயமாய் பயன்படுத்தும் லோக்கல் டிடேக்டிவ் ஏஜேன்சி ஹேட்டையே போனில் பிடித்தவன், விஷயத்தை சொல்லி தானுவை தேட சொன்னான். இவர்கள் மூலமாக சென்றால் சீக்கிரம் தகவல் கிடைக்கும் என இந்த ஏற்பாட்டை செய்தான். கண்டிப்பாக டேனியையோ அல்லது அவளது அம்மாவையோ தான் தேடி சென்றிருப்பாள். ஆஸ்திரேலியாவுக்கும், மலேசியாவுக்கும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் செல்லும்படியாக உள்ள விமானத்துக்கு டிக்கட் முன் பதிவு செய்து கொண்டான். தகவல் வரும் வரை பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியாமல், டேனிக்கு போனை போட்டான் விபா.
இரண்டாவது ரிங்கிலே எடுத்தவன்.
“என்னடா வேணு, காலங்காத்தாலே எழுப்புற?” என தூக்கக் கலக்கத்தில் கேட்டான்.
“தானு போன் செஞ்சாளா உனக்கு?”
“இல்லையே. ரெண்டு நாளைக்கு முன்னுக்கு செஞ்சதுதான். “
“அப்ப ஏதாவது சொன்னாளா?”’
“ஏன் காலையிலே இந்த குறுக்கு விசாரணை? என்னாச்சு சொல்லு வேணு? டான்யா எங்க?” சட்டென பிரச்சனையின் நூலைப் பிடித்து கேட்டான் டேனி.
“காணோம்டா. என்னை விட்டுட்டு போய்ட்டா”
கொஞ்ச நேரம் அந்த பக்கத்தில் சத்தம் இல்லை.
“வேணு. கால்ம் டவுன். என்ன நடந்தது. கரேக்டா சொல்லு. அப்பத்தான் என்னால உதவி செய்ய முடியும்”
எல்லாவற்றையும் சொன்னான் விபா. கடைசியாக தானு தூக்க மாத்திரை கொடுத்து தன்னை தூங்க வைத்து விட்டு போனதையும் சொன்னான். அந்த கலவரத்திலும் டேனி விழுந்து விழுந்து சிரித்தான்.
“டேய், நான் ரொம்ப பயந்து போய் இருக்கேன். சிரிக்கிறதை நிறுத்திட்டு எனக்கு ஹெல்ப் பண்ணுடா”
“நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்ணனும்? இவ்வளவு தில்லு முள்ளு பண்ணியிருக்க, அவ எவ்வளவு மனசு ஒடிஞ்சு போயிருப்பா? உனக்கு இதெல்லாம் பத்தாது. கொஞ்ச நாள் பிரிஞ்சே இரு”
“வைட்டு, விடியகாலையிலே போயிருக்காடா. எங்க இருக்கா, எப்படி இருக்கான்னு எனக்கு மனசு அடிச்சுக்கிது. இந்த விஷயத்துல விளையாடதடா” கிட்டதட்ட கெஞ்சினான் விபா.
“ஆஸ்திரேலியா வரமாட்டா. டிக்கட் விலை அதிகமா இருக்கும்னு. கண்டிப்பா மலேசியா தான் கிளம்பியிருப்பா. அன்னிக்கு பேசறப்ப கூட ஓரு மாதிரியா தான் இருந்தா. கேட்டதுக்கு ஒன்னும் இல்ல, கோல்ட்னு சொல்லிட்டா. உன் மேல எவ்வளவு பாசம் இருந்தா இந்த விஷயத்தை என் கிட்ட கூட மறைப்பா. இப்படி மரமண்டையா இருக்கியே வேணு. இதெல்லாம் பிளான் பண்ணி தான் செஞ்சிருக்கா. அதனால பத்திரமா தான் இருப்பா. கவலை படாம சீக்கிரமா தேடு. நானும் என்னால முடிஞ்ச அளவு ட்ரை பண்ணுறேன். அப்புறம் எரியற நெருப்புல எண்ணைய ஊத்துறன்னு நினைச்சுக்காத. இப்ப உனக்கு ஒரு ஈமேயில் அனுப்புறேன். படிச்சுட்டு இன்னும் வேகமா தேடு. ஒகேவா. பாய்” என போனை வைத்திருந்தான் டேனி. அவன் போன் வைத்த ஐந்து நிமிடங்களில், விபாவிற்கு ஈமேயில் வரும் அலர்ட் வந்தது. போனை எடுத்துக் கொண்டு தானுவின் அறைக்கு சென்றவன், அவளது போர்வையை எடுத்து தன் மேல் சுற்றிக் கொண்டே கட்டிலில் அமர்ந்து படித்தான். டேனிக்கு தன் காதலை அறிவித்து தானு அனுப்பியிருந்தது தான் அது. டியர் டேனி என ஆரம்பித்த அதை படிக்க ஆரம்பித்தவன், முடிக்கும் போது மனம் கனத்துப் போனது.
‘என்னை நெஞ்சுக்குள்ள சிம்மசனம் போட்டு உட்கார வச்சவ, இப்ப தூக்கி கீழ எரிஞ்சிட்டு போயிட்டாளே. என்னை அவ அப்பாவோட பெருசா நினைச்சிருக்காளே. இதெல்லாம் தெரிஞ்ச உடனே, அவ அப்பா மாதிரியே நானும் ஏமாத்திட்டேன்னு பயந்துட்டாளோ. தானும்மா, நான் செஞ்சதெல்லாம் உன் மேல் உள்ள அளவு கடந்த காதலினால தான்னு ஏன் உனக்கு புரியாம போச்சு. அதை நீ புரிஞ்சுக்கிற அளவுக்கு நான் என் பாசத்தைக் காட்டலியோ. வந்துடு தானு. எங்கிருந்தாலும் வந்துடு’ அவன் மனம் ஓலமிட்டது.
போன் அடிக்கும் ஓசையில் தான் சுற்றுப்புறம் உணர்ந்தான் விபா. மறுமுனையில் அவர்கள் சொன்ன தகவலை பெற்றுக் கொண்டவன், அவசரமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.
கோலாலம்பூர், மலேசியா
பூச்செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்த கற்பகம் கேட்டில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பி பார்த்தார். அங்கே விபா நின்றிருந்தான். அவசரமாக கேட்டைத் திறந்தவர்,
“வாங்க தம்பி. பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. நல்லா இருக்கீங்களா?” என பேசியவாறே உள்ளே அழைத்துச் சென்றார்.
அமைதியாக உள்ளே வந்தவன்,
“தானு எங்கம்மா? வர சொல்லுங்க” என்றான்.
அவனை மேலும் கீழும் பார்த்த கற்பகம்,
“தானுவா? அவ அங்க ஊருல தானே இருப்பா? இங்க வந்து கேட்கறீங்க? என்னப்பா ஆச்சு? எங்க தானு? “ என பதறினார் கற்பகம்.
அவரின் பதட்டத்தைப் பார்த்து தடுமாறி போனான் விபா. டிடேக்டிவ் ஏஜேன்சியிலிருந்து அவள் மலேசியாவுக்குத் தான் பிளைட் ஏறியிருப்பதாக தகவல் கொடுத்திருந்தனர். இவர் இப்படி கேட்கவும், அவனுக்கு தலையே சுற்றியது.
‘எங்கடி தானு போன?’
அதற்குள் கற்பகம் பல முறை மகள் எங்கே என கேட்டு உலுக்கி விட்டார். வேறு வழி இல்லாமல், தங்களின் காதலையும், சிறு பிணக்கு ஏற்பட்டு இங்கே வந்து விட்டாள் எனவும் சமாளித்தான் விபா. சந்தேகமாக அவனை நோக்கியவர், அவனை வேறு ஒன்றும் துருவவில்லை.
“இங்க வரல தம்பி. என் கிட்டயும் ஒன்னும் சொல்லல. பத்திரமா தான் இருப்பா. கோபம் குறைஞ்சதும் தானா வருவா. அது வரைக்கும் வேய்ட் பண்ணுவோம்” என சாதாரணமாக சொன்னவர்,
“வாங்க சாப்பிடலாம். பயணம் பண்ணி வந்துருக்கீங்க” என அழைத்தார்.
‘என்னடா இது? மகள காணோம்னு சொல்லுறேன். ரிலேக்கா சாப்பிட வான்னு கூப்பிடறாங்க. முதல்ல பதட்டப்பட்டது கூட என்னமோ ஓவர் டிராமா மாதிரி இருந்தது. நான் கூட பிள்ளைய காணோம்னு இப்படி பிஹேவ் பண்ணுறாங்களோன்னு நினைச்சேனே. இங்க வச்சிகிட்டே இல்லைன்னு சொல்லுறாங்களோ’ என சந்தேகமாக பார்த்தான் விபா.
“சாப்பாடு வேணாம். கோப்பி மட்டும் கலக்கி குடுங்க” என கேட்டான். அவர் கிச்சனுக்குள் நுழைந்ததும் குடுகுடுவென மாடிக்கு ஏறி இரு அறைகளையும் திறந்து பார்த்தான். அவள் வந்த சுவடே இல்லை. போன வேகத்திலேயே இறங்கி வந்தான். படி அருகிலேயே கற்பகம் நின்றிருந்தார்.
“என்ன தம்பி, பாத்ரூம் போய்ட்டு வரீங்களா” என கேட்டார். ஆமாமென அவசர அவசரமாக தலையை ஆட்டினான் விபா.
“சரிதான். வந்து கோப்பி குடிங்க மாப்பிள்ளை” என கப்பை நீட்டினார் அவனிடம்.
“மாப்பிள்ளையா?” என அதிர்ந்தான் விபா.
“அப்புறம்? இப்ப தான் என் பொண்ணை காதலிக்கிறேன், சண்டை போட்டு கிட்டோம்னு சொன்னீங்க. அப்போ நீங்க எனக்கு மாப்பிள்ளை தானே?”
தலை ஆம் என ஆடியது விபாவுக்கு.
‘”நீங்களும் இனிமே என்னை அத்தைன்னே கூப்பிடுங்க. அப்புறம் என்னிக்கு கிளம்புறீங்க?”
‘என்னடா இது? நானே அவளை காணோமேன்னு நொந்து போய் வந்துருக்கேன். இவங்க என்னை துரத்துறதிலேயே இருக்காங்க.’
“அத்தை, தானு எங்கன்னு உங்களுக்கு நெஜமா தெரியாதா?” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான் விபா.
கொஞ்சம் தயங்கியவர், பின்,
“எனக்கு எப்படி மாப்பிள்ளை தெரியும்? அவ காணோம்னு நீங்க சொல்லிதான் எனக்கே தெரியும். இங்க வரல அத மட்டும் கன்பர்மா சொல்லுறேன். சீக்கிரம் கண்டுபிடிச்சுட்டு எனக்கும் சொல்லுங்க.”
அவருக்கு தெரியும் ஆனால் மறைக்கிறார் போல் தோன்றியது விபாவுக்கு.
‘அவங்க அம்மாவுக்கு சொல்லாம எதையும் செய்ய மாட்டா. எப்படி இவங்க வாயில இருந்து விஷயத்தை வர வைக்கிறது?’ செண்டிமென்டை கையில் எடுத்தான் விபா.
“அத்தை அவ காணோம்னு தெரிஞ்சதில இருந்து நான் இன்னும் ஒன்னும் சாப்பிடலை. தெரியர வரைக்கும் சாப்பிடவும் மாட்டேன். உங்க மக உங்களுக்கு போன் பண்ணா கண்டிப்பா இதை சொல்லுங்க” என எழுந்து கொண்டான்.
கையைப் பிசைந்தார் கற்பகம். செண்டிமென்ட் நன்றாக வேலை செய்தது.
“மாப்பிள்ளை, தொலைச்ச எடத்துல தான் தேடனும்னு சொல்லுவாங்க. இதுக்கு மேல என்னால ஒன்னும் சொல்ல முடியாது” என ஒரு க்ளுவைக் கொடுத்தார்.
தொலைச்ச எடத்துலனா, என் வீட்டுலயா? ஆனா மலேசியாவுக்கு வந்ததா டிடேய்ல்ஸ் எல்லாம் காட்டுதே. மண்டை காய்ந்தது அவனுக்கு. கற்பகத்தின் வீட்டை கண்காணிக்க ஆள் செட் செய்து விட்டு அன்று ஹோட்டலில் தங்கினான். அவளுடன் பழகிய தருணங்களை அசை போட்டுக் கொண்டும், அவள் அனுப்பிய வீடியோவை பார்த்துக் கொண்டும் பொழுதை நெட்டி தள்ளினான். டேனியும் அவள் அம்மாவும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதால், அவள் பத்திரமாக தான் இருக்கிறாள் என புரிந்தது. தன்னிடம் மட்டும் இருப்பிடத்தை அறிவிக்க விருப்பபடவில்லை எனவும் தெரிந்தது. டேனி முன்பே சொன்னது ஞாபகம் வந்தது. கிவ் ஹெர் சம் ஸ்பேஸ் என சொல்லியிருந்தான். அது போல் அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவெடுத்தான். இப்படியே இரண்டு நாள் சென்றது. அவள் இங்கே இருப்பதாக எந்த அறிகுறியும் தென்படவில்லை. மனம் சோர்ந்து இருக்கும் பொழுது தான், சென்னை வீட்டிலிருந்து அவனுக்கு போன் வந்தது.
“ஹலோ”
“தம்பி, சாமிண்ணா பேசுறேன்” சமையல்காரர் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க சாமிண்ணா. அங்க ஏதாவது பிரச்சனையா?” எப்பொழுதும் அவர் அப்படி அழைப்பவர் அல்ல.
“இல்ல தம்பி. வந்து” அவர் தயங்குவது போல் இருந்தது.
“சொல்லுங்கண்ணா, என்ன விஷயம்?”
“நம்ப பாப்பா இங்க தான் தம்பி இருக்கு” பட்டென விஷயத்தை உடைத்தார்.
“தானுவா?” அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“ஆமா தம்பி. அவங்க தான்”
“எப்ப இருந்து அங்க இருக்காங்க?”
“நீங்க மலேசியாவுக்கு கிளம்புன அன்னிக்கு நைட்டு வந்தாங்க”
‘என்னை கிளப்பட்டு என் வீட்டிலயே இருந்துகிட்டு என்னை மட்டும் டாக் மாதிரி சுத்த விட்டுட்டாளே. இதுதான் தொலைச்ச இடத்துல தேடறதா? அடியே! உனக்கு இவ்வளவு ஏத்தம் கூடாதுடி’
அதற்குள் பேக்ரவுண்டில் அவள் குரல் கேட்டது.
“நான் சொன்னத சொல்லிட்டீங்கல்லே, அப்புறம் ஏன் சாமிண்ணா போனை பிடிச்சுகிட்டு தொங்குறீங்க. அவரு பறந்தடிச்சிகிட்டு வருவாரு. நீங்க போய் நல்லதா சமைங்க” என சொல்லி கொண்டே போனை வைத்திருந்தாள் தானு.
‘வேலைக்காரங்க எல்லாத்தையும் இவ கையில போட்டு வச்சிருக்காளே. இப்ப கூட இவளா தான் தகவல் குடுக்க சொல்லியிருக்கா. மேடத்துக்கு என் மேல கருணை வந்துருக்கு போல.’ மனம் சந்தோஷ வானில் பறக்க, அவசர அவசரமாக அடுத்த பிளைட்டை பிடிக்க ஆவன செய்தான் விபா.
அவன் அவசரத்துக்கு மாலை ஐந்துக்கு தான் பிளைட் கிடைத்தது. ஏர்போட்டிலாவது உட்கார்ந்து இருப்போம் என ரூமை வேகெட் செய்தவனது போன் பாடி அழைத்தது.
“ஹாலோ மாப்பிள்ளை. அத்தை பேசுறேன்பா.”
“சொல்லுங்க அத்தை”
“கிளம்புறீங்கலாமே? அப்படியே வீட்டுப் பக்கம் ஒரு எட்டு வந்துட்டு போங்க. கொஞ்சம் பொருள் கொடுத்து அனுப்பனும். என் மகளை கண்டுபிடிச்சோன அவகிட்ட சேர்த்துருங்க”
‘ட்ராமாவ பாரேன். கிளம்புறது தெரியுது, ஆனா மகள கண்டுபிடிச்சது மட்டும் தெரியாதாம். முடியலைடா சாமி’
“வரேன் அத்தை”
கொஞ்சம் பொருள் என்பது பல பெட்டிகளாக அங்கே உட்கார்ந்திருந்தது. கேள்வியாக நோக்கியவனை,
“தானுவுக்கு பிடிச்ச நொறுக்கு தீனி, அப்புறம் அவளோட புக்ஸ் கலேக்ஷன், துணிங்க, பொம்மை எல்லாம் இருக்கு. இது அவளோட பேர்த் சர்டிபிகேட் ஒரிஜினல். இதையும் எடுத்துட்டு போங்க”
“இது எதுக்குத்தை இப்போ?”
“யாருக்கு தெரியும்? சொன்னத தான் செய்யுறேன்”
“யாரு சொன்னத?”
“யாரும் சொல்லலையே. அடுப்புல பால் கொதிக்குது. இருப்பா வரேன்.” என உள்ளே சென்று விட்டார் கற்பகம்.
ஒரு வழியாக சென்னையை அடைய இரவு ஒன்பது ஆகி விட்டது. தயக்கத்துடனே வீட்டுக்குள் கால் எடுத்து வைத்தான் விபா. அவன் உள்ளே நுழையும் போது மாடியில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தாள் தானு. இருவரின் பார்வையும் சில நிமிடங்கள் மோதிக் கொண்டு நின்றன. பார்வையை விலக்காமலே அவனை நோக்கி வந்தாள் தானு.
“தேவதாஸ்ன்னு நினைப்பா? தாடில்லாம் விட்டுருக்க. இதை எல்லாம் நாங்க ‘நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையான்னு’ மோகன் பாடுவாறே, அந்த படத்திலேயே பார்த்துட்டோம்.இரு இரு, சால்வை ஒன்னு தான் மிஸ்சிங். அதையும் தோள்ல போட்டுக்க. செம பீல் குடுக்கும்.” என நக்கலடித்தவள்,
“போய் ஷேவ் பண்ணி குளிச்சுட்டு டைனிங் ஹாலுக்கு வா” என கட்டளையிட்டு விட்டு சமயலறைக்குள் புகுந்து கொண்டாள்.
‘மனுஷன் இவள காணோம்னு கவலையில இப்படி ஆயிட்டானேன்னு ஒரு பரிதாபம் கூட இல்லாம எப்படி நக்கலடிச்சுட்டு போறா பாரு. இன்னும் என்ன காத்துகிட்டு இருக்குதோ தெரியலையே. ஏதா இருந்தாலும், இன்னிக்கே எல்லாத்தையும் செட்டல் பண்ணிரனும்’ என்ற உறுதியோடு அவள் சொன்னதை செய்ய சென்றான்.
அவன் கீழிறங்கி வந்த போது டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள் தானு. எப்பொழுதும் உட்காரும் இடத்தில் அமைதியாக உட்கார்ந்தான் விபா.
“சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு?” கேள்வி வந்தது அவளிடமிருந்து.
பதில் சொல்லாமல் அமைதியாகவே அவளை நிமிர்ந்து பார்த்தான் விபா. எழுந்து அவன் அருகில் வந்தவள், அவனது தட்டில் உணவை இட்டு நிரப்பினாள். அவன் முன்னே மேசை மேல் ஏறி அமர்ந்தவள், தட்டை கையில் எடுத்து உணவை பிசைந்தாள்.
“வாயை திற வேணு”
கண்கள் கலங்க மெல்ல வாயைத் திறந்தான் விபா.
“இப்ப எதுக்கு கண்ணு கலங்குது?”
“எனக்கு விவரம் தெரிஞ்சு இது வரைக்கும் யாரும் ஊட்டி விட்டதில்ல தானும்மா.”
உணவை அவன் வாயருகே கொண்டு சென்ற தானுவின் கை அப்படியே நின்றது.
“இனிமே நான் ஊட்டி விடறேன். இப்ப சாப்பிடு” என ஊட்டி விட்டாள். கண்கள் பளபளக்க, உதட்டில் விரிந்த புன்னகையோடு அவள் ஊட்ட ஊட்ட சாப்பிட்டுக் கொண்டே இருந்தான் விபா. அவள் அம்மா சொன்ன ‘வலியைக் கொடுத்தவங்களே மருந்தா இருப்பாங்க. அது இவளுக்கு அப்படியே பொருந்தும்’ என்ற வார்த்தைகள்தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவள் காட்டிய அரவணைப்பில் இத்தனை நாள் உறக்கம் இன்றி அலைந்ததெல்லாம் பின்னுக்கு சென்று விட்டது விபாவுக்கு.
ஊட்டி முடித்து, அவனுக்கு வாயையும் துடைத்துவிட்டாள் தானு. பின் தனக்கு தட்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.
“நான் ஊட்டவா தானு?”
“ஒழுங்கா ஓடி போயிரு. நான் சாப்பிட்டு வரவரைக்கும் வெளிய சிட் அவுட்டுல உட்கார்ந்து என்னா சமாதானம் சொல்லி என்னை ஏமாத்தலாம்னு யோசிச்சிகிட்டு இரு. வரேன்.” என விரட்டினாள். அவள் சாப்பிடும் வரை கோபப்படுத்த வேண்டாமென சிட் அவுட்டில் சென்று அமர்ந்தான்.
பத்து நிமிடத்தில் குட்டி தலையணையுடன் வந்தவள், அதைக் கட்டிக் கொண்டு அவன் முன்னே அமர்ந்து கொண்டாள்.
“சொல்லு வேணு”
‘அய்யய்யோ! ஆயுதத்தை எடுத்துட்டாளே. இப்படி மொட்டையா கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன். இவளுக்கு எதுவரைக்கும் தெரியும்னு தெரியலையே’ என பேய் முழி முழித்தான் விபா.
“என்ன முழிக்கிறே? எத சொல்லலாம், எத மறைக்கலாம்னா? இங்க பாரு வேணு, இது தான் நான் உனக்கு குடுக்குற கடைசி சான்ஸ். ஒழுங்கு மரியாதையா எல்லா விஷயத்தையும் சொல்லுற. இதுக்கு அப்புறம் நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. புரியுதா?”
தலையை ஆட்டியவன்,
“எல்லாத்தையும் சொல்லறேன் தானு. இந்த போன் விஷயத்தை மட்டும் எப்படி கண்டுபிடிச்சேன்னு சொல்லு. எனக்கு மண்டை வெடிக்குது”
அவனை முறைத்தவள்,
“போன் மக்கரு பண்ணுதுன்னு சொல்லி புதுசு வாங்க போனோம் நானும் தேக்கியும். என் பட்ஜட்குள்ள எதுவும் வரல. நடந்து நடந்து கடுப்பாயிட்டான் தேக்கி. அப்புறம் அவனே போனை பழுது பார்த்து தரேன்னு என் கூடவே வீட்டுக்கு வந்தான். கழட்டி பார்த்து அவன் தான் கண்டு பிடிச்சான். அவன் சொன்னப்ப எனக்கு அதிர்ச்சி தான். யாரு போன் வாங்கி குடுத்தாங்கன்னு கேட்டான். பிரபுன்னு சொல்லுறப்ப தான் எனக்கே ஸ்ட்ரைக் ஆச்சு. எப்பவும் கவர் மட்டும் வாங்கி குடுக்குற பிரபு திடீர்ன்னு ஏன் இவ்வளவு விலை குடுத்து போன் வாங்குனான்னு. அப்புறம்தான் உன் வேலையா இருக்கும்னு கெஸ் பண்ணேன். பிரபு குடுத்த லேப்டோப்பையும் கழட்டி பார்க்க சொன்னேன். அதுலயும் ட்ராக்கர் இருந்தது.” சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.
ஆறுதலாக தொட வந்த விபாவை தடுத்தவள்,
“ஏன் இப்படி செஞ்ச வேணு? நான் அந்த போன்ல என்ன செஞ்சாலும் உனக்கு தெரியுமாமே? என் பிரண்ட்ஸ் கிட்ட பேசறது, மேசேஜ் அனுப்பறது, ஈமெயில், எந்த எந்த வெப்சைட் போறேன், நான் பிடிக்கிற போட்டோஸ், என் சோசியல் நெட்நோர்க், பேங்கிங் எல்லாமே உனக்கு தெரியுமாமே?” கண்ணீர் பொல பொலவென வழிந்தது. சுண்டி எறிந்தவள், கையிலிருந்த தலையணையை அவன் மேல் விட்டு அடித்தாள்.
“சொல்லுடா, எதுக்கு என்னை வேவு பார்த்த? உனக்கு வெட்கமா இல்லை, உன் காதலியா இருந்தாலும் நான் ஒரு தனி மனுஷி. என் பெர்சனல் ஸ்பெஸ்ல நீ எப்படி நுழையலாம்? சொல்லு வேணு? தேக்கி முன்னுக்கு எனக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சு தெரியுமா? அப்படியே செத்து போயிரலம்னு இருந்துச்சு”
“தானும்மா!!!”
“வாய மூடு வேணு. நான் இன்னும் முடிக்கல. போன் குடுத்தது பிரபு, லேப்டோப் குடுத்தது பிரபு, இங்க காலேஜ் அப்ளை பண்ண சொன்னது பிரபு. அப்பத்தான் பொறி தட்டுச்சு. தேக்கிய விட்டு காலேஜ் சிஸ்டத்தை ஹேக் பண்ண சொன்னேன். அதுல தெரிஞ்சது உன் வண்டவாளம். எனக்கு சீட்டுக்கு எவ்வளவு டொனேஷன் குடுத்தன்னு விலாவாரியா தெரிஞ்சது.. வந்தது பாரு வெறி. நீ மட்டும் அப்ப என் கையில மாட்டிருந்த, பங்கமாயிருப்ப.” பல்லைக் கடித்தாள் தானு.
“படிப்பு வாங்கி குடுத்த மகராசன், வீட்டை மட்டும் விட்டு வச்சிருப்பியா? தேக்கி போன உடனே, பூட்டி வச்சிருந்த அந்த ரூமை திறந்தேன். அப்படியே ஆடி போயிட்டேன்.”
“அதெல்லாம் என் பொக்கிஷம் தானும்மா.”
“அப்படியே அறைஞ்சிற போறேன். சைக்கோ மாதிரி என் போட்டோவ ரூம் முழுக்க ஒட்டி வச்சிருக்க. நீ என்ன காதல் கொண்டேன் தனுஷா இல்ல மன்மதன் சிம்புவா?” கடுப்பானாள் தானு.
“அவங்களவிட நான் ஒரு படி மேல தானும்மா. அவங்க மத்தவங்க உயிர எடுப்பாங்க, நான் என் உயிர குடுப்பேன்”
சட்டென எழுந்து அவன் அருகில் சென்றவள் அவன் மடியில் அமர்ந்து அவனை கட்டிக் கொண்டாள்.
“தெரியும் வேணு. அதனால தான் உன்னை விட்டு என்னால போக முடியலை. எனக்கு டைம் தேவைபட்டுச்சு இதையெல்லாம் கிரகிச்சுக்க. நீ வேற அன்னிக்கு நைட்டே வந்துட்ட. நீயா சொல்லுவியான்னு ரொம்ப எதிர்பார்த்தேன். அதுக்கு அப்புறம் தான் இந்த முடிவை எடுத்தேன். அவசரப் பட்டு டிக்கட் வாங்குனது நெஜம்தான். ஆனா உன்னை விட்டு போக முடியலை. தேக்கி கிட்ட சொல்லி வேப் செக்கின் பண்ணி உன்னை திசை திருப்புனேன். நீ கிளம்புன உடனே, இங்க வந்துட்டேன். டேனிக்கும், அம்மாவுக்கும் இந்த விஷயம் தெரியும். நீ என்னை தேடி அலைஞ்சதுல எனக்கு ஒரு குரூர திருப்தி. ஏதோ நீ செஞ்சதுக்கெல்லாம் என்னால திருப்பி குடுக்க முடிஞ்ச பரிசுன்னு வெச்சுக்க”
‘டேய் தேக்கி, புள்ள பூச்சி மாதிரி இருந்து கிட்டு என வாழ்க்கையிலே புயலயே அடிக்க வச்சிட்டீயேடா. ‘
அவளை இருக அணைத்துக் கொண்டவன்,
“நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன் தானு. ஆனா என்னை விட்டுட்டு மட்டும் போகாதே. நான் செஞ்சதயெல்லாம் நியாயப்படுத்த நினைக்கல. ஆனா ஏன் செஞ்சேன்னு சொல்லுறதுக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் குடு தானு”
“கண்டிப்பா வேணு, அதுக்கு முன்னால ஒன்னு கேட்கணும் வேணு”
“சொல்லும்மா”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”
மின்னாமல் முழங்காமல் வந்த அதிர்ச்சி தாக்குதலில் ஞே என விழித்தான் விபா. அவனது தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்திய தானு,
“வில் யூ மேரி மீ வேணு?” என கேட்டாள்.