ENE — epi 7

ENE — epi 7

அத்தியாயம் 7

ராவு பகல் கண் முழிச்சி

நாளும் உன்னை பார்த்திருப்பா

தாலாட்டு பாடி வச்சி

தன் மடியில் தூங்க வைப்பா

புள்ளைகள தூங்க வச்சி

தன் உறக்கம் தள்ளிவைப்பா

தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் விபாகர். மாடியில் இருந்த பிரபுவின் அறையை தான் அவனுக்கு ஒதுக்கி கொடுத்திருந்தார் லெட்சுமி அம்மா. பரவாயில்லை சிறிய அறையை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லியும் கேட்கவில்லை.

“வசதியா வளர்ந்த பிள்ளை, இந்த ரூமுல தான் அட்டாச் பாத்ரும் இருக்கு, ஏர்கோன் இருக்கு என சொல்லிவிட்டார்.” இந்த ரூமில் இருப்பது அவனுக்கு இன்னொரு வசதியையும் கொடுத்தது.

கண்ணாடி வைத்த பெரிய ஜன்னல் வாயிலாக பக்கத்து வீட்டு வாயில்புறம் நன்றாக தெரிந்தது. அவள் வெளியே வந்தால் இங்கே இருந்தே கவனிக்கலாம். பக்கத்தில் தான்யாஶ்ரீயும் இதே அறையில் தான் இருப்பதாக பிரபு சொல்லியிருந்தான். சுவர் தடுத்தாலும் , அவள் பக்கத்தில் இருக்கிறாள் என்பதே அவனுள் பரவசத்தை விதைத்தது.

கட்டிலில் சாய்ந்து கொண்டே அன்று பிரபு கூறிய விஷயங்களை அசைப்போட்டான் விபாகர்.

” ஒரு நல்ல நண்பனா உனக்கு என்ன சொல்லறேன்னா, அவள மறந்திடு. அதுதான் உன் எதிர்காலத்துக்கு நல்லது. இவ்வளவு கஷ்டங்களை அனுபவிச்ச நீ இனியாவது சந்தோஷமா இருக்கனும்டா. தானுவ காதலிக்கிறது, கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் அவ்வளவு சுலபம் கிடையாது. நீ ரொம்ப போராட வேண்டி இருக்கும். “

“அந்த தேவதை பெண் எனக்கு கிடைக்க எந்த அளவுக்கும் இறங்கி போராட நான் தயார்.”

”தான்யாவோட குடும்ப கதை அவ பாட்டி மூலமா எங்க அம்மாவுக்கு தெரியும். அதை பற்றி எனக்கு தெரிஞ்சத சொல்லுறேன். ஆரம்பத்திலிருந்து தெரிஞ்சா தான் உன்னால அவள கொஞ்சம் புரிஞ்சிக்க முடியும்“ என சொல்ல ஆரம்பித்தான் பிரபு.

தான்யாஶ்ரீயின் கொள்ளு தாத்தா தான் மலேசியாவுக்கு பிழைப்பு தேடி வந்தவர். வந்தவர் ஏற்கனவே இங்கே வந்திருந்த  ஒரு தமிழ் குடும்பத்துப் பெண்ணைப் பார்த்து திருமணமும் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் தான்யாவின் பாட்டி வள்ளி. இந்த ஊரிலே பிறந்ததால் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. வள்ளி பாட்டியின் அப்பா இங்கே சம்பாதித்ததை வைத்து சொந்த ஊர் சோலையூரில்  பல ஏக்கர் நிலம் வாங்கி போட்டிருந்தார். பாட்டிக்கு திருமணம் செய்து இங்கேயே விட்டு விட்டு பெற்றவர்கள் மீண்டும் இந்தியாவுக்கே சென்றுவிட்டனர்.

தான்யாவின் அப்பா சுந்தரம் பிறந்த போது பாட்டிக்கு வயது 17. பாட்டி, கணவர் குழந்தை என சந்தோஷமாக தான் வாழ்ந்தார். கஷ்டபட்டு ரப்பர் மரம் சீவி வேலை செய்தாலும், அந்த பிரிட்டிஷ்காரன் அமைத்து கொடுத்த எஸ்டேட் வாழ்க்கை சந்தோஷமாக தான் சென்றது. மீதி நேரத்தில் மாடு வளர்ப்பது, காய் கறி தோட்டம் போடுவது என அயராது உழைத்தனர் கணவன் மனைவி இருவரும். சுந்தரத்துக்கு 3 வயது இருக்கும் போது தான் ஜப்பானின் படை மலேசியாவை ஊடுருவியது. பிரிட்டிஷ்காரர்கள் ஊரடங்கு சட்டத்தை விதித்திருந்தனர். பசியால் அழுத பிள்ளைக்கு மரவள்ளி கிழங்கு பிடுங்கி வர தோட்டத்துக்கு சென்ற வள்ளி பாட்டியின் கணவர் பிணமாக தான் வீடு வந்து சேர்ந்தார். ஜப்பானியர்களால் கொடூரமாக கொல்லபட்ட கணவரை கட்டி அழுத பாட்டிக்கு ஆறுதல் சொல்ல இருந்தது தாயாய் சேயாய் பழகிய அக்கம் பக்கத்து வீட்டுகாரர்களே.

கடித போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து எல்லாம் அந்த சமயம் முடக்கபட்டிருந்தது. ஒற்றை பிள்ளையை வைத்துக் கொண்டு, தனி ஆளாய் நின்று சமாளித்தார் பாட்டி. பிறகு நாடு சுதந்திரம் அடைந்து , சகஜ நிலைமை வந்தும் பாட்டி கணவர் இறந்த நாட்டை விட்டு பெற்றவர்களுடன் இந்தியா  செல்ல மறுத்து விட்டார்.

மகனே வாழ்வின் ஆதாரம் என இருந்தார் வள்ளி பாட்டி. சுந்தரமும் நன்றாக படித்தார். அந்த காலத்திலேயே பல்கலைகழகம் வரை சென்றவர் அவர். படித்து முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் மேனேஜர் பதவியில் அமர்ந்தார். எஸ்டேட்டில் இருந்து அம்மாவை அழைத்து வந்து கோலாலம்பூரில் இப்பொழுது இருக்கும் வீட்டை வாங்கினார். அம்மா என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். அதனாலேயே வீட்டை அம்மா பெயருக்கு எழுதிவைத்தார்.

பாட்டிக்கு கோலாலம்பூர் நகர வாழ்க்கை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆடு, மாடு,தோட்டம் என்று இருந்தவர்க்கு நான்கு சுவர்களை பார்த்து கொண்டு இருக்கமுடியவில்லை.

“எப்பா சுந்தரம். நீ வேலைக்கு போனதும் இப்படி மொட்டு மொட்டுனு வீட்டுல உக்காந்து இருக்கிறது கஸ்டமா இருக்குப்பா. ஏன் ராசா, சீக்கிரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி எனக்கு பேரன் பேத்திய பெத்துக் குடுக்க கூடாதா?”

வள்ளி பாட்டிக்கு மகனை கடிந்து ஒரு வார்த்தை பேச தெரியாது. அய்யா, ராசா, அப்பா என்றுதான் வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுவார். அம்மாவின் கேள்வியால் சுந்தரத்துக்கு ரகசிய சிரிப்பு மலர்ந்தது.

“அதுக்கு என்னம்மா அவசரம். கொஞ்ச நாள் பொறுங்க. நானே நல்ல முடிவா சொல்லுறேன்” என மழுப்பினார்.

“சீக்கிரம் சொல்லுப்பா. நம்ம கூட எஸ்டேட்ல இருந்தாங்களே செல்லம்மா, அவங்க சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்காம். கொஞ்சம் படிச்சிருக்காளாம். நல்லா சமையல் செய்வாளாம். குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு சொன்னாங்கப்பா. பாக்கலாமா?”

“அம்மா!!! இப்ப இதைப் பற்றி பேசவேணாம். நான் வேலைக்கு கிளம்பனும். சாவகாசமா பேசலாம்” என்றவாறே கிளம்பி சென்று விட்டார்.

‘என்ன இந்த பையன் எதுக்கும் பிடி குடுக்க மாட்டிக்கிறான். பொறுத்து தான் பார்ப்போம்’ என நினைத்தவாறே பக்கத்து வீட்டு லெட்சுமியிடம் பேச சென்றார் வள்ளி பாட்டி.

மறுநாள் வேலை முடிந்து வரும்போது சுந்தரம் ஒரு பெண்ணையும் உடன் அழைத்து வந்தார். அம்மாவிடம் அப்பெண்ணின் பெயர் மோனா என்று அறிமுகபடுத்தினார்.

“அம்மா, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருங்க. நான் போய் முகம் கழுவிட்டு வரேன்.”

வீட்டிற்கு வந்த பெண்ணை அன்பாக வரவேற்று உபசரித்தார் வள்ளி பாட்டி.

வந்தவர் பாட்டியின் முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டார். அந்த கால மனுஷியான பாட்டிக்கு அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. முகமெல்லாம் மாறி விட்டது.

தேநீர் கலக்கும் சாக்கில் உள்ளே சென்று விட்டார். தேநீருடன் வெளியே வந்தவர் கண்ட காட்சி அவருக்கு மயக்கத்தையே வரவைத்தது. சுந்தரமும் அந்த பெண் மோனாவும் நெருங்கி அமர்ந்து பேசி சிரித்து கொண்டிருந்தனர். மோனா சுந்தரத்தை தொட்டு தொட்டு பேசி கொண்டிருந்தார். சுந்தரம் சொல்வதற்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார். சுந்தரமோ மோனாவையே வைத்த கண் வாங்காமல் காதலுடன் பார்த்து கொண்டிருந்தார்.

அம்மா வரும் அரவம் கேட்டு சுந்தரம் நகர்ந்து உட்கார்ந்தும் மோனா அவரை மறுபடியும் இடித்து கொண்டு அமர்ந்து கொண்டார்.

“அம்மா, மோனா எனக்கு சேக்ரட்டரியா வேலை செய்யுறாங்க. ரொம்ப நல்ல மாதிரிமா.” என சொல்ல வந்ததை மென்று முழுங்கி கொண்டிருந்தார்.

அடுத்து என்ன வர போகிறது என வள்ளிக்கு பாட்டிக்கு தெரிந்து போனது.

“என்ன சுந்தரம் இப்படி தயங்குறிங்க. நாம ரெண்டு பேரும் காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்க விரும்பறோம்னு பளிச்சுனு சொல்ல வேண்டியதுதானே.”

வள்ளி அமைதியாக மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஆமாம் மா. நாங்க ரெண்டு பேரும் ஒரு வருஷமா உயிருக்குயிரா விரும்புறோம்மா. இன்னும் கொஞ்ச வருஷத்துல காரும், ஒரு சொகுசு அப்பார்ட்மென்டும் வாங்கினவுடன் திருமணம் செஞ்சுக்கலாம்னு முடிவு எடுத்திருந்தோம். அதுக்குள்ள நீங்க அவசரபடவும் சொல்ல வேண்டியதாயிருச்சி”

வள்ளி பாட்டிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தோளுக்கு மேல் வளர்ந்த மகன் காதலிக்கிறேன், அவளையே கல்யாணம் செய்ய போகிறேன் என்று முடிவெடுத்துவிட்டு தான் சொல்கிறான். சம்மதத்தை எதிர்ப்பார்க்கவில்லை.

பாட்டி ஒன்றும் காதலுக்கு எதிரியில்லை. பக்கத்து வீட்டு லெட்சுமியும் காதல் என்றுதானே குடும்பத்தாரை எதிர்த்து கல்யாணம் செய்து கொண்டாள். அவர்கள் சந்தோஷமாக தானே இருக்கிறார்கள். இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்வது தப்பில்லை என்பது பாட்டியின் கொள்கை.

இருந்தாலும் இந்த பெண் மோனாவிடம் ஏதோ சரி இல்லாததை போலவே பாட்டிக்கு தோன்றியது. சிறு வயதிலே கணவரை இழந்து ஒற்றை ஆளாய் உலகத்தை எதிர் கொண்டவர்க்கு மனிதர்களை படிக்கும் ஆற்றல் இருந்தது. இந்த பெண்ணிடம் ஏதோ ஒரு போலித்தனம் தெரிந்தது. கண்டிப்பாக மகன் இவளை மணந்தால் மண்ணோடு மண்ணாகி விடுவான் என தோன்றியது. ‘முள்ளை முள்ளால தான் எடுக்கனும்’ என்று நினத்தவர்,

“ரொம்ப சந்தோஷம் பா. இப்பவாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சே. “

“எனக்கு தெரியும் மா. என் ஆசைக்கு நீங்க குறுக்க வரமாட்டீங்கன்னு. இவ தான் உங்கம்மா பழைய கால மனுசி. இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க. நாம முதல்ல திருமணம் செஞ்சுக்கலாம். அப்புறம் அம்மா கிட்ட சொல்லலாம்னு ஒரே அடம். எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்குமா.” சுந்தரம் பட்டென்று விஷயத்தைப் போட்டு உடைத்ததால் மோனாவின் முகம் பேயறைந்ததை போல் மாறியது.

வள்ளி பாட்டி மனதிற்குள்ளே நகைத்து கொண்டார். ‘என் மகனை நான் நல்லா தான் வளர்த்திருக்கேன். இந்த மினுக்கி தான் இவனை மயக்கி வச்சிருக்கா. இருடி உனக்கு வைக்கிறேன் ஆப்பு’ என மனதிற்குள்ளேயே பேசி கொண்டார் பாட்டி.

பாட்டி விதியை மதியால் வெல்ல எண்ணினார். ‘நானா விட்டு குடுப்பேன். வள்ளி இனி நான்தான் உன் முதுகை சொறிய போற கொள்ளி’ என்று விதி அவரை பார்த்து கை கொட்டி சிரித்தது.

எட்டி நில்லு….

error: Content is protected !!