ENE — epi 8

ENE — epi 8

அத்தியாயம் 8

 

தாமிரபரணி திருநெல்வேலி சொதியில ஒரு தனிருசி
வைகையில் புடிச்ச அயிர மீனு கொழம்புக்கு ஒரு தனிருசி
திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு
தென்காசி பரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு
அம்மாவின் வாசம் உண்டு வேப்பம்பூ கொழம்புக்கு
அவ தானே ஊட்டித்தந்தா ஆகாய நெலவுக்கு
உணவிலே ஒரு உறவு இருக்குது
உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது

 

வள்ளி பாட்டியும் சுந்தரமும் வாடகை காரிலிருந்து இறங்கி சோலையூர் மண்ணை மிதிக்கும் போது வேட்டுச் சத்தம் வானை பிளந்தது. மாவிலை தோரணம் கட்டி ஊரே கோலாகலமாக காட்சி அளித்தது. மேளதாள வாத்தியங்களுடன் ஊரே குழுமியிருந்தது அவர்களை வரவேற்க.

“அம்மா, திருவிழா சீசன்ல வந்துட்டமா? ஒரே ஆர்பாட்டமா இருக்கு” என தன் தாயின் காதை கடித்தார் சுந்தரம்.

“அதேல்லாம் ஒன்னும் இல்லப்பா. முத முதலா நீ வர இல்ல அதுக்குத்தான் இந்த வரவேற்பு. தாத்தா பாட்டி இறப்புக்கு கூட நான் மட்டும்தானே வந்தேன். முகத்த சிரிச்சபடியா வச்சிக்க ஐயா. இங்க உள்ள மக்கா மனுஷா எல்லாம் நம்ம முகத்த வச்சே ஆள எடை போட்டுருவாங்க”

ஆர்ப்பாட்டமாக சிரித்து கொண்டே வரவேற்க வந்தார் அந்த ஊரின் பெரிய தனக்காரர் முத்துப்பாண்டி.

“வாம்மா தங்கச்சி. வாங்க மாப்பிள்ளை. பிரயாணமெல்லாம் சுகமா இருந்துச்சிங்களா? எலே ராமு, சாமான் செட்டெல்லாம் கொண்டு போய் வள்ளி தங்கச்சி வீட்டுல வைடா. அப்படியே நம்ம வீட்டுக்கு போய் விருந்து ரெடியாயிருச்சான்னு பாத்துட்டு, மாப்பிள்ளை வீடு வந்துட்டாங்க ஆரத்தி ரெடி பண்ண சொன்னாங்கன்னு சொல்லு. விரசா போ” என்றவாறே அவரின் நடிகர் நெப்போலியன் போல் இருக்கும் மீசையை நீவிக்கொண்டார் முத்துப்பாண்டி.

“அண்ணா, பிரயாணமெல்லாம் நல்லபடியா தான் இருந்தது. நீங்க, அண்ணி, பிள்ளைங்கலெல்லாம் சுகமா?”

“எங்களுக்கு என்னம்மா. நல்லாதான் இருக்கோம். நீ போன் போட்டு விஷயத்தை சொன்னதும் எங்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல”

“வெளியே நின்னுக்கிட்டு என்ன அண்ணா பேச்சு. வாங்க உள்ளே போகலாம்.”

“ஆமாம் மா. உங்களைப் பார்த்ததும் மூளையே வேல செய்யல” என சிரித்தார் அவர்.

‘ஆமா, அப்படின்னு ஒன்னு இருந்தாதானே வேலை செய்யும்’ என மனதிற்குள் அவரை நொடித்து கொண்டே வந்தார் அவரின் மனைவி வேலம்மா.

“வாங்க அண்ணி, வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்றவர், சுந்தரத்தைப் பார்த்து நாணி கோணியபடி முந்தனையை தோளை சுற்றி போட்டு கொண்டார்.

‘இந்தம்மா எதுக்கு என்னைப் பார்த்து இப்படி வெக்கபடுறாங்க? இவரு வேற கடா மீசைய வச்சிக்கிட்டு அதை முறுக்கி முறுக்கி  காட்டுறாரு. அப்ப அப்ப காதலிய பார்க்கிற மாதிரி என்னை பார்த்து வேற வைக்கிறாரு. ஊருல இருக்கிற நிலபுலனெல்லம் வித்துட்டு, அப்படியே பாட்டி வீட்டையும் வாடகைக்கு விட்டுட்டு வரலாம்னு அம்மா சொன்னப்பவே மறுத்து இருக்கனுமோ. இந்த மக்களோட எப்படி இன்னும் ஒரு மாதம் தாக்கு பிடிக்க போறனோ தெரியலியே’ என மனதிற்குள் புலம்பியபடியே , வெளியே சிரித்த முகமாக நின்றிருந்தார் சுந்தரம்.

ஆரத்தி சுற்றியவுடன் அவர்கள் உள்ளே சென்று உட்காரவும், ஊர் மக்களெல்லாம் திமு திமுவென்று உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

வந்த கூட்டத்தைப் பார்த்து சுந்தரத்துக்கு திகிலாக இருந்தது. கெட்டியாக அம்மா கையைப் பிடித்து கொண்டார்.

“பயப்படாதப்பா. எல்லாம் நம்ம சொந்தம்தான். உன்னைப் பார்த்ததே இல்லைல அதான் கூட்டமா வந்திருக்காங்க. பொதுவா ஒரு வணக்கத்தை வைப்பா” என மெதுவாக முணுமுணுத்தார்.

சுந்தரமும் கை கூப்பி அனைவரையும் வணங்கினார்.

கூட்டத்திலிருந்த ஒரு மூதாட்டி, “ ஏன்டி வள்ளி. சோக்கா சீம துரை மாதிரி தான் இருக்கான் உன் பையன். அதனால தான் எங்க கண்ணுல காட்டாம பொத்தி பொத்தி வளர்க்கிறியா?” என கேட்டார்.

“அதெல்லாம் இல்லைங்க அத்தை. படிப்பு, வேலைன்னு இருந்துட்டான். இப்பத்தான் காலம் கூடி வந்திருக்கு உங்க எல்லாத்தையும் பார்க்க”

சுந்தரத்துக்கு அந்த ஊர் ஆண்களை பார்க்கவே சற்று பீதியாக இருந்தது. முறுக்கு மீசையுடன், மடித்து கட்டிய வேட்டியோடு அடியாட்களை போல் இருந்தார்கள். ‘இவங்க ஒரு குத்து விட்டால், பிளேனில்லாமலே மலேசியாவுக்கு பறந்துருவோம் போல. பத்துமலை முருகா, நான் எந்த சேதரமும் இல்லாம எங்க ஊருக்கு போய் சேரனும்பா. அப்படி நடந்தா இந்த வருஷம் உனக்கு காவடி எடுக்கிறேன்’ என வேண்டிகொண்டார்.

“என்ன மாப்பிள்ளை இன்னும் வாய திறந்தே பேச மாட்டிக்குறாரு? தமிழு தெரியுமா இல்ல மொல்லாயி தான் பேசவாரா” என இன்னொரு பெருசு எடுத்து கொடுத்தது.

‘யப்பா சாமி, அது மலாய், மொல்லாயி இல்ல. இந்த பெருசுக்கு ரொம்பதான் குசும்பு’ என மனதில் புலம்பியவர்,

“பெரியவரே, நான் நல்லா தமிழ் பேசுவங்க” என்றார்.

கூட்டமே கொல்லென சிரித்தது.

‘இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இவங்க எல்லாரும் இப்படி சிரிக்கிறாங்க?’

“என்னாப்பு பட்டுன்னு பெரியவரேன்னுபுட்ட. நான் உனக்கு தாத்தன் முறைய்யா” என சொல்லி கொண்டே துண்டை உதறி தோளில் போட்டு கொண்டார் அவர்.

‘கிழவா நானே இன்னிக்கி தான் இந்த ஊருக்கே வந்திருக்கேன். இவ்வளவு பேரும் என்ன உறவுன்னு நான் தெரிஞ்சிக்கிறதுக்குள்ள எனக்கு உன் வயசே ஆயிரும்யா. என் வாய கிண்டாம அப்படிக்கா போயிரு’

“எம்மா, ஏன் மா எல்லாரும் வந்ததிலிருந்து என்னை மாப்பிள்ளை மாப்பிளைன்னு கூப்பிடுறாங்க?” என அம்மாவின் காதை கடித்தார் சுந்தரம்.

“அது வந்துய்யா, வந்து..இந்த ஊருல இப்படிதான் மாமா, மச்சான், மாப்பிள்ளைன்னு உறவு முறை வச்சி கூப்பிடுவாங்க. அது அவங்க வழக்கம் அய்யா”

“என்ன அதுக்குள்ள மாப்பிள்ளை அம்மா காதுக்குள்ள குசு குசுங்கிறாரு?” என கேட்டது தாவணி ஒன்று.

“அதுவாம்மா, பிரயாண களைப்பா இருக்காம். கொஞ்ச ஓய்வு எடுக்கனும்னு கேக்குறான்.” என சமாளித்தார் வள்ளி பாட்டி.

“சரி சரி, எல்லாரும் கிளம்புங்க. அங்க நம்ம வீட்டுல விருந்து நடக்குது. அங்க போய் சாப்பிடுங்க. மாப்பிள்ளை ரெஸ்டு எடுக்கனும்” என எல்லோரையும் துரத்தினார் வேலம்மா.

“மாப்பிள்ளை மூக்கும் முழியுமா நல்லாதான் இருக்காரு”

“இந்த வேலம்மாக்கு வந்த பவுச பாருங்கடி. நம்ம கிட்டயே இங்கிலிபீசு பேசி காட்டுறா”

என தங்களுக்குள் பேசி கொண்டே எல்லோரும் களைந்து சென்றனர். அவர்கள் சென்றவுடன், சுந்தரத்துக்கு சுற்றி போட்டார் வேலம்மா.

“ஊரு கண்ணே உங்க மேல தான் மாப்பிள்ளை. நீங்க போய் குளிச்சிட்டு அம்மாவோட அடுத்த தெருவுல இருக்கிற நம்ம வீட்டுக்கு வந்துருங்க. மாப்பிள்ளை விருந்து அங்கதான்” என்றவர் தன் வீடு நோக்கி கிளம்பினார்.

“அம்மா, ஏன் ஒரே சோகமா உட்கார்ந்திருக்கீங்க?”

“இந்த வீட்டுக்குள்ள வந்ததிலிருந்து எங்க அம்மா, அப்பா ஞாபகமா இருக்குப்பா. உன்னைய மட்டும் நினைச்சேனே தவிர, அவங்கள நினைச்சிப்பார்க்கலைய்யா. நான் உன் மேல பாசத்த வச்ச மாதிரி தானே, அவங்களும் என் மேல வைச்சிருந்திருப்பாங்க. அவங்க வருந்தி வருந்தி கூப்பிட்டும் பிடிவாதமா இங்க வர மறுத்துட்டேனே. எப்படி நொந்து போயிருப்பாங்க. அப்படி இருந்தும் எல்லா சொத்தையும் எனக்கு தான் குடுத்துட்டு போயிருக்காங்க. பெத்த மனசு பித்து, பிள்ள மனசு கல்லுன்னு நான் நிருபிச்சிட்டேன். என்னவோ போ காலம் கடந்த ஞானோதயம். சரி சரி போ. வலது பக்கமிருக்கிற ரூமை எடுத்துக்கோ. வேலைக்காரங்க யாராவது ஒரு ஆள நிப்பாட்டி வச்சிட்டு போறேன். அவங்க கூட வந்துரு விருந்துக்கு. நான் இப்பவே போய் அவங்கள எல்லாம் நலம் விசாரிக்கிறேன்” என கையில் ஒரு பையுடன் கிளம்பினார்.

வாழை மரம், மாவிலை தோரணம் என முத்துப்பாண்டியின் வீடு அமர்க்களமாக அலங்கரிக்கபட்டிருந்தது. ஒரு பக்கம் மைக் செட் மாட்டப்பட்டு அப்போதைய புத்தம் புது பாடல் ‘தம்தன தம்தன தாளம் வரும், புது ராகம் வரும்’ என பாடி கொண்டிருந்தது. மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். கறி வாசம் ஊரையே தூக்கியது.

எதிர்பட்டவர்களிடம் பேசி கொண்டே உள்ளே நுழைந்தார் வள்ளி.

“வா தங்கச்சி. உள்ளாற வா. முதல்ல வந்து சாப்புடு. உனக்கு பிடிக்குமேன்னு ஆட்டு கால் சூப்பு செய்ய சொல்லி இருக்கேன். அடியே வேலம்மா. தங்கச்சி வந்துருக்கு பாரு.” என உள்ளே குரல் கொடுத்தார்.

கூட பிறக்காவிட்டாலும், இங்கே வரும்போதேல்லாம் பாசத்தைக் காட்டுவது மட்டுமில்லாது, முடிந்த போது கடுதாசியும் போட்டு நலம் விசாரிக்கும் இந்த ஒன்றுவிட்ட அண்ணனை நம்பி தானே இவ்வளவு பெரிய விஷயத்தில் இறங்கினார் வள்ளி. முதுமையில் தன் பெற்றோரை இவர்தானே கவனித்து எல்லாமும் செய்தார். வள்ளிக்கு கண் கலங்கியது.

“அண்ணா, என் மேல தான் உங்களுக்கு எவ்வளவு பாசம். இந்த பாசத்துக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேனோ தெரியல”

“என்னம்மா இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசுற. எனக்கும் உன்னை விட்டா தங்கச்சின்னு வேறு யாரு இருக்கா” என அவரும் கண் கலங்கினார்.

வாசலில் நடக்கும் இந்த காட்சியை பார்த்துக் கொண்டே வந்த வேலம்மா ‘ இந்த ஆளுக்கு சொந்த புத்தியும் கிடையாது, சொல் புத்தியும் ஏறாது. எல்லாம் என் தலை எழுத்து’ என மனதினில் திட்டி கொண்டே,

“என்னங்க, வாசலில நிக்க வைச்சி எதுக்கு அண்ணிய அழுகை மூட்டிகிட்டு இருக்கீங்க. போங்க போய், பந்திய கவனிங்க” என விரட்டினார்.

“நீங்க வாங்க அண்ணி. சாப்பிட போகலாம்”

“இருங்க அண்ணி. அப்புறம் சாப்பிடறேன். எங்க பிள்ளைகளை கண்ணுலயே காணல. பார்த்து எத்தனை வருஷமாச்சு. நல்லா வளர்ந்திருப்பாங்க”

“சின்னவன் இங்கத்தான் பந்தி பக்கமா சுத்திகிட்டு இருப்பான். வயசு எட்டு ஆவுது. இன்னும் விளையாட்டு தான். எலே மட பயலே பாண்டி” (கணவனை நேராக திட்ட முடியவில்லை என, மகனை அந்த பெயரை வைத்து திட்டுகிறாரோ?) என அழைத்தார்.

குடுகுடுவென ஓடி வந்தான் அருண்பாண்டி.

“என்னம்மா? என் கூட்டாளி எல்லாம் வந்திருக்காங்க. இப்படி கூப்புடாதிங்க. என் மானமே போயிரும்” என சிடுசிடுத்தான்.

“பெரிய மனுஷன்தான்டா நீ. பாரு யாரு உன்னை பார்க்க வந்துருக்காங்கன்னு. வள்ளி அத்தைடா. “

“அத்தை, நல்லா இருக்கீங்களா? எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க” என கேட்டவாறே கையை நீட்டினான்.

படீரென அவன் கையில் ஒன்று போட்ட வேலம்மா, ‘புத்திய பாரு. அப்படியே அவங்கப்பன உரிச்சிகிட்டு வந்திருக்கு’ என முணுமுணுத்தார்.

“விடுங்க அண்ணி, சின்ன பையன் தானே. இந்தாய்யா, உனக்குன்னு இந்த அத்தை வாங்கி வந்தது” என ஒரு பையை கொடுத்தார்.

பையின் உள்ளே ஒரு பட்டு ஜிப்பாவும், ஒரு பெரிய விளையாட்டு காரும் இருந்தது.

“காடி, காடி.. எவ்வளவு அழகா இருக்கு. ரொம்ப நன்றி அத்தை “ என மேலும் கீழும் குதித்தான்.

அவனை பாசத்துடன் அணைத்து கொண்டார் வள்ளி.

“இன்னோரு பை யாருக்கு அத்தை?”

“அது உங்க அக்காவுக்குப்பா”

“அருணு , அத்தைய அக்கா ரூமுக்கு கூட்டிட்டு போப்பா. மாப்பிள்ளை வந்துட்டாரு பாரு, நான் போய் அவருக்கு பந்திய கவனிக்கிறேன்” என வாசலில் முழித்து கொண்டு நின்ற சுந்தரத்திடம் சென்றார் வேலம்மா.

“வாங்க மாப்பிள்ளை. சாப்பாடு ரூமு இப்படி லெப்டுக்கா இருக்கு” என அவரின் ஆங்கில புலமையை காட்டியவாறே அழைத்து சென்றார்.

சுந்தரத்தை ஒரு இடம் பார்த்து அமர வைத்தவர், கணவரை அழைத்தார் பந்தி பறிமாற.

பெரிய தலை வாலை இலையை சுந்தரத்துக்கு போட்டவர், பங்காளிகளை அழைத்தார் சாப்பாடு போட.

“மச்சான், சோத்தை இங்க கொண்டு வந்து நம்ப மாப்பிள்ளைக்கு அள்ளி வையுங்க. அப்படியே அந்த கோழி வறுவல், கறி குழம்பு எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க.”

சுந்தரத்துக்கு தலையே சுற்றிவிட்டது. அவர் வாழ்க்கையிலே ஆளுயர இருக்கும் வாழை இலையையே இப்பொழுதுதான் பார்க்கிறார். அதில் மலை போல் அவர்கள் அள்ளி போட்ட சோற்றை பார்த்தவுடனே அவருக்கு வயிறு நிறைந்துவிட்டது. முத்துப்பாண்டியோ நல்ல நல்லி எழும்புகளை அள்ளி அள்ளி அவர் இலையில் போட்டார்.

“சாப்புடுங்க மாப்பிள்ளை. நல்லா அள்ளி சாப்புடுங்க. எலும்ப புடிச்சி நறுக்கு முறுக்குன்னு கடிங்க மாப்பிள்ளை. யோ மாமா, மாப்பிள்ளைக்கு ஆட்டு ரத்தத்த எடுத்துட்டு வாய்யா, இதெல்லாம் அங்க எங்க சாப்பிட்டு பார்த்துருக்க போறாரு” என அலம்பல் பண்ணி கொண்டிருந்தார் முத்துப்பாண்டி.

இலையை சுற்றி இருந்த பதார்த்தங்களை பார்த்த சுந்தரத்துக்கு குமட்டி கொண்டு வந்தது.’டேய் பாவிங்களா. இன்னிக்கு ஒரு ஆட்டு வம்சத்தையே காலி பண்ணிட்டீங்களா? யோவ் மாமா, இதெல்லாம் ஒரு ஆளு சாப்பிடற சாப்பாடாய்யா. உனக்கு மனசாட்சியே இல்லையா?’ என திட்டோ திட்டு என மனதிற்குள்ளே திட்டிகொண்டிருந்தார். வெளிய திட்டற அளவுக்கு தைரியம் ஏது.

சுந்தரம் சாப்பாடைக் கொறிப்பதைப் பார்த்த முத்துப்பாண்டிக்கு மனசே ஆறவில்லை.

“என்னங்க மாப்பிள்ளை இப்படி சாப்பிடுறீங்க. பொட்ட புள்ள வளர்ப்புங்கறது சரியா தான் இருக்கு. இந்த மாமன் சொல்லி குடுக்குறேன் எப்படி சாப்பிடரதுன்னு” என்றவர் நாற்காலியை நகர்த்தி சுந்தரத்துக்கு எதிரே அமர்ந்து கொண்டார்.

சுந்தரத்தின் சாப்பாட்டை கை விட்டு பிசைந்தவர், பெரிய உருண்டை பிடித்து தன் வாயில் அமுக்கினார். அப்படியே மென்று கொண்டே,

“இப்படி அள்ளி சாப்பிடாமா, கோழி மாதிரி கொறிக்கிறீங்க “ என்றவர் இன்னொரு பெரிய உருண்டையை உருட்டி சுந்தரத்தின் வாயில் திணித்தார். திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுந்தரம் திக்கு முக்காடிவிட்டார். புரை ஏறி, இரும்பி பாதியை தின்றும் பாதியை துப்பியும் தவித்துவிட்டார். அவர் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

‘அட பாவிங்களா..விருந்துன்னு சொல்லி என்னை கொல்ல பார்க்கறாங்களே’ என தவித்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார் யாராவது காப்பாற்றுவார்களா என்று. இந்த முத்துப்பாண்டி வேறு அடுத்த உருண்டையோடு களமிறங்க ரெடியாகி இருந்தார். அங்கே வந்து கொண்டிருந்த வேலம்மாவை கண்களாலே கெஞ்சினார்.

“ஏங்க, கடா வெட்டுற எடத்துல என்னம்மோ கைகலப்பாம். போங்க, வேட்டு குத்துன்னு வரதுக்குள்ள போயி தீர்த்து வைங்க”

“இவனுங்களுக்கு இதே ஒரு பொழப்பா போச்சி. மாப்பிள்ளைக்கு நாலு வாயி சோறு ஊட்ட விட மாட்டிக்கிறானுங்க. அடேய் ராமு, எடுறா அந்த அருவாள. பொளந்துறறேன் இன்னிக்கு” என்றவாறே வெளியேறினார்.

அருவாள் என்ற வார்த்தைக்கே நடுநடுங்கி போனார் சுந்தரம். அதற்கு மேல் உணவு இறங்குவது எங்கே.

“அவரு அப்படி தான் மாப்பிள்ளை. ரொம்ப பாசக்காரு. நீங்க இப்ப உக்காந்து நல்லா சாப்புடுங்க. டேங்சு(thanks). என்ன இப்படி பாக்குறீங்க. இந்த ஊருலே எனக்கு மட்டும் தான் நல்லா இங்கீலீசு தெரியும்.” என பெருமையாக நாணி கோணி கொண்டே சொன்னார் வேலம்மா.

‘இந்த பட்டிக்காட்டு கூட்டத்துக்குள்ள என்ன கொண்டு வந்து தள்ளிட்டாங்களே இந்த அம்மா. ஆமா எங்க அவங்கள ஆளையே காணோம்’ என யோசித்தார் சுந்தரம்.

அங்கே உள்ளறையில் வள்ளி நுழைந்ததும், அத்தை என கூவி கொண்டே வந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் முத்துப்பாண்டியின் மகள்.

“எழுந்திரும்மா என் ராஜாத்தி, கற்பகம்”

 

எட்டி நில்லு….

error: Content is protected !!