ENE — epi 9

ENE — epi 9

அத்தியாயம் 9

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு
உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சுமுடிச்சு முடிச்சு முடிச்சு

சோலையூரின் பெரிய கோவில் எனப்படும் முத்து மாரியம்மன் சந்நிதியில் அமைக்கப்பட்ட மணமேடையில் அமைதியாக அமர்ந்திருந்தார் சுந்தரம். அவரது மனம் எரிமலைக்குழம்பு போல் கொதித்துக் கொண்டிருந்தது. தான் உயிருக்குயிராய் நேசிக்கும் தன் அம்மா இப்படி ஒரு பச்சை துரோகத்தை செய்வார் என அவர் எதிர்பார்க்கவே இல்லை.

நேற்றைய இரவு அறைக்கு வந்த வள்ளி,

“கண்ணு, உன்கிட்ட கொஞ்சம் பேசனும் அய்யா” என்றார்.

“சொல்லுங்கம்மா. முதல்ல இந்த கட்டிலில உட்காருங்க” என்ற சுந்தரம் அம்மாவின் பக்கத்திலே அமர்ந்து கொண்டார்.

மகனின் வலது கையை எடுத்து தன் கரத்தோடு பிடித்து கொண்ட வள்ளி,

“நான் எது செஞ்சாலும் உன் நன்மைக்கு தான் இருக்கும்னு உனக்கு நம்பிக்கை இருக்கா சுந்தரம்?”

“கண்டிப்பாம்மா. இத்தனை வருஷமா எனக்காகவே மட்டும் வாழுற நீங்க  எனக்கு எது செஞ்சாலும் அது என் நலனை கருதி தான் இருக்கும்” என தழுதழுத்தார் சுந்தரம்.

“அதை நம்பி தான் உன் வாழ்க்கையின் முக்கிய முடிவை நானே எடுத்துட்டேன் ராசா”

“என்னம்மா சொல்லுறீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”

“அது வந்துப்பா. நம்ம முத்துப்பாண்டி மாமா இருக்காருல்ல, அவரு மக கற்பகத்தை உனக்கு கல்யாணத்துக்கு பேசி முடிச்சிட்டேன். நாளைக்கே உடன் பரிசம் போட்டு உனக்கு கல்யாணம்”

“அம்மா!!!!!!!” என கத்திய சுந்தரம் அவரின் கையை உதறிவிட்டு எழுந்து நின்றார்.

“என் மனச பற்றி தெரிந்து இருந்தும் நீங்க எப்படி அம்மா இப்படி ஒரு முடிவை எடுக்கலாம்?” என கத்தினார்.

அதற்குள் சொந்தகார பாட்டி ஒன்று ரூம் கதவை தட்டி,

“வள்ளி, என்னம்மா உள்ள சத்தம்?” என கேட்டார்.

“ஒன்னும் இல்ல அப்பத்தா. சும்மா தான் பேசிக்கிட்டு இருக்கோம் “ என வள்ளி குரல் கொடுத்தார்.

“சரி சரி, பேசிட்டு சீக்கிரம் வா. தாம்பூலம் எல்லாம் அடுக்கணும். தலைக்கு மேல வேல கிடக்குது. அப்படி என்ன அவரமோ, இம்புட்டு விரசா கல்யாணத்தை வச்சிட்டீங்க” என சொல்லிகொண்டே அகன்றார்.

“சொல்லுங்க அம்மா. ஏன் இப்படி செஞ்சீங்க?”

“சுந்தரம், அந்த பொண்ணு மோனா உனக்கு சரி வரமாட்டாப்பா. அவகிட்ட ஒரு போலித்தனம் இருக்கு. அவள கல்யாணம் பண்ணிகிட்டா , நீ ஒரு சம்பாதிச்சி போடும் மிஷினா தான் இருப்ப. வாழ்க்கையே வெறுத்துரும்யா உனக்கு.”

“நிறுத்துங்கம்மா. கடைசியிலே நீங்களும் ஒரு சராசரி மாமியாருன்னு நிரூபிச்சிட்டீங்க இல்ல. மோனா படிச்சிருக்கா, வேலை பார்க்குறா. அதனால உங்க காலடியில விழுந்து கிடக்க மாட்டான்னுதானே இப்படி செஞ்சீங்க? உங்க மகன சந்தோஷமா வச்சிக்க போறவளோட, உங்க கால சுத்தி சுத்தி வர ஒருத்திதான் வேணும்னு தானே இந்த பட்டிக்காட்டுல வந்து எனக்கு பொண்ணு பார்த்து இருக்கீங்க”

“பட்டிக்காடுன்னா என்னப்பா கேவலம். இங்க உள்ளவங்களும் மனுஷ பிறவிதான். என்னை கேட்டா இங்க உள்ளவங்கதான் உண்மையான மனுஷங்கன்னு சொல்லுவேன்”

“இவங்க மனுஷனா இருக்கட்டும், இல்ல தெய்வமாகவே இருக்கட்டும். அதை பற்றி எனக்கு கவலை இல்ல. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நான் விடிஞ்சவுடனே இந்த ஊரை விட்டு கிளம்புறேன். நான் வேணும்னா, நீங்களும் கிளம்பி வாங்க. இல்ல இங்கயே கிடங்க” என அவ்வளவு தான் பேச்சு வார்த்தை என கட்டிலில் தலையணையை தட்டி போட்டார் சுந்தரம்.

“சாமி, உன்னை நம்பி நான் பாண்டி அண்ணன்கிட்ட வாக்கு குடுத்துட்டேன் பா. இந்த கல்யாணம் நடக்காட்டி நான் வாக்கு தவறுனவளா ஆகிருவேன். கற்பகம் ரொம்ப நல்ல பொண்ணுப்பா. உன் மனம் கோணாம நடந்துக்குவா. இந்த அம்மா பேச்ச கொஞ்சம் கேளுய்யா “

“இவ்வளவு நாள் நீங்க சொன்னத தானம்மா நான் கேட்டு நடந்தேன். அப்பொழுதெல்லாம் உங்க மேல மலை போல நம்பிக்கை இருந்துச்சு. இப்ப அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டிருச்சும்மா. மோனா உங்கள நம்பாம திருமணம் செஞ்சுக்கலாம்னு வற்புறுத்துனப்ப எல்லாம், எங்க அம்மா குறுகிய மனசுக்காரங்க இல்லை. நம்மள திறந்த மனசோட ஏத்துக்குவாங்கன்னு சொல்லுவேன். ஆனா அவ சொன்னத தான் உண்மைன்னு நீங்க நிருபிச்சிட்டீங்க”

கல்யாணத்திற்கு முன்பே மகன் மனதில் மோனா நன்றாக நஞ்சை விதைத்துள்ளதை வள்ளி உணர்ந்து கொண்டார். இல்லாமலா முதலில் நீ வீடு , காரேல்லாம் வாங்கு, பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருப்பாள். உண்மையாய் காதலிப்பவள் நாம் திருமணம் செய்து கொண்டு இருவரும் சேர்ந்து வாங்கலாம் என்று தானே சொல்லியிருப்பாள். இதை எல்லாம் பகுத்து அறிய தெரியாத பச்சை மண்ணாக இவனை வளர்த்து விட்டோமே என வருந்தினார் வள்ளி. அந்த பண பேயிடம் இருந்து மகனை காக்க என்ன வேண்டுமென்றாலும் செய்ய  துணிந்தார் அந்த தாய்.

சுந்தரம் எதிர்ப்பார்க்காத தருணத்தில், நெடுஞ்சாண்கிடையாக மகனின் காலில் விழுந்தார் வள்ளி.

“அம்மா!!!!!!” என அலறிவிட்டார் சுந்தரம்.

“எழுந்திரிங்க மா. என்னை பாவபட்ட பிறவியா ஆக்காதிங்க” என கண்ணீர் வழிய கெஞ்சினார் அவர்.

“கற்பகத்த கட்டிக்கிறேன்னு ஒரு வார்த்த சொல்லுய்யா” என அழுதபடியே கேட்டார் வள்ளி.

“அம்மா, உங்க பிடிவாதத்துல ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைய நீங்க வீணாக்குறீங்க” என கதறினார் சுந்தரம்.

“உன் வாழ்க்கை கண்டிப்பா சந்தோஷமா இருக்கும்பா” என கண்ணீர் வழிய அப்படியே கீழே கிடந்தார் வள்ளி.

“சரிம்மா. கற்பகத்த நான் கட்டிக்கிறேன். நீங்க எழுந்திரிங்க” என்றவர் அவரை கைபிடித்து தூக்கிவிட்டார்.

“உங்க பிடிவாதத்துல நீங்க ஜெயிச்சிட்டீங்கம்மா. ஆனா நானும் உங்க ரத்தம் தான்கிறதை மறந்திடாதீங்க. எனக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை செஞ்ச உங்கள நான் மன்னிக்கவே மாட்டேன். இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த பேச்சு வார்த்தையும் கிடையாது. ஒரு அம்மா என்கிற கடமையிலிருந்து நீங்க தவறிட்டாலும், மகன்கிற கடமையிலிருந்து நான் தவற மாட்டேன். இனிமே உங்களுக்கு எல்லாம் கிடைக்கும், என் அன்ப தவிர” என கண்ணீரை துடைத்து கொண்டு கூறினார் சுந்தரம்.

“அப்படி எல்லாம் பேசாதப்பா. இந்த அம்மா உன் நல்லதுக்குதான்” என பேசியவரை போதும் என கை காட்டி நிறுத்திய சுந்தரம்,

“கடைசியா ஒரு வாக்கு கேக்குறேன். குடுப்பீங்களா அம்மா?”

“சொல்லுப்பா”

“திருமணம் முடிஞ்சதும், எங்க குடும்ப வாழ்க்கையில நீங்க தலையிட கூடாது. முடியுமா?”

“சரிப்பா சுந்தரம்”

இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை, நீங்கள் கிளம்பலாம் என்பதை போல் கதவு பக்கம் கை காட்டினார் சுந்தரம்.

மகனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார் வள்ளி.

“பொண்ண வர சொல்லுங்க. முகூர்த்தத்துகு நாழியாகுது” என்ற ஐயரின் குரலில்தான் நடப்புக்கு வந்தார் சுந்தரம்.

மணமகளே மருமகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என மைக் செட் முழங்க அன்ன நடையிட்டு மணமேடைக்கு வந்தார் கற்பகம். பச்சை கரையிட்ட மஞ்சள் நிற புடவையில் அழகிய சிற்பம் ஒன்று நடந்து வருவது போல் இருந்தது. கண்களில் அஞ்சனம் தீட்டி, கழுத்தினில் வைர அட்டிகை அணிந்து, இல்லாத இடுப்புக்கு ஒட்டியாணம் பூட்டி, தங்க கொலுசு சப்தமிட அசைந்து வந்தார் கற்பகம். அவரின் மஞ்சள் நிற பொன்மேனி அலங்காரத்தால் தகதகத்தது. அனைவர் கண்களுக்கும் கற்பகிரகத்து மாரியம்மனே எழுந்து வந்தது போல் இருந்தது. ஒருவரைத் தவிர.

இப்பொழுது தான் முதன் முதலாக கற்பகத்தை பார்க்கிறார் சுந்தரம்.

‘யப்பா சேலை கலர உத்து ரெண்டு தடவ பார்த்தா கண்ணு அவிஞ்சுரும் போல. அவ நிறத்த பாரு ரத்த சோகை உள்ள மாதிரி வெளீர்னு இருக்கு. நகைய அள்ளி போட்டுகிட்டு, நடமாடும் நகை கடை மாதிரி வரா. நடைய பாரு, தஞ்சாவூர் யானை மாதிரி. சேச்சே, தஞ்சாவூருக்கு நாம போனதே இல்லையே. சரி டிவியில பார்த்த யானை மாதிரி இருக்கு. இந்த பிகேய (அதாங்க பட்டிக்காடுக்கு ஷார்ட் போர்ம்) வச்சிக்கிட்டு நான் எப்படி தான் குப்ப கொட்ட போறனோ, தெரியலையே’ என மனதிற்குள்ளே புலம்பி கொண்டிருந்தார்.

கற்பகத்தின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடியது. முன்பொரு முறை வந்த போது, வள்ளி  காட்டிய குடும்ப போட்டோவில் சுந்தரத்தின் படத்தை மட்டும் களவாடி, தன் மனதையும் அவரிடத்தில் களவு கொடுத்தவர் கற்பகம். தன் ஆசை நிறைவேறுவது ரொம்பவும் கஸ்டம் என்று தெரிந்து இருந்தும், அவரை மறக்க முடியாமல் துடித்தவர். திடீரென அத்தை போன் செய்து பெண் கேட்ட போது, சிறகே இல்லாமல் வானத்தில் பறந்தார் கற்பகம். பெற்றவர்கள் மகளை வெளிநாட்டில் கொடுக்க தயங்கிய போது, அவர்களை சமாதான படுத்தி சம்மதிக்க வைத்தார்.

சுந்தரத்தின் பக்கத்தில் அமர்ந்தவர், தன் மனதிற்கு பிடித்தவரையே மணவாளனாய் அளித்த அம்மனுக்கு கண் மூடி நன்றி சொன்னார். பிறகு ஓரக்கண்ணால் பக்கத்தில் அமர்ந்திருந்த சுந்தரத்தை நோக்கினார். ‘என்ன ஒரு அழகு. போட்டோல பார்த்ததுக்கும், நேருல பார்க்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம். அப்படியே  முகத்துச் படிச்ச களை சொட்டுதே. நான் தான் எவ்வளவு கொடுத்து வைச்சவ’ என எண்ணி பூரித்துக்கொண்டார்.

பல பேர் முன்னிலையில் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் கற்பகத்தைப் பார்த்து சுந்தரத்துக்கு ஆத்திரமாக வந்தது. ‘பிகே பிகே! கொஞ்சமாவது அச்சம், மடம், நாணம் இருக்கா பாரு.’ சபை நாகரீகம் கருதி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் சுந்தரம்.

ஐயர் தாலியை சுந்தரத்தின் கரத்தில் எடுத்து கொடுத்து’

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்றார்.

மங்கள வாத்தியம் முழங்க சுந்தரம் கற்பகத்தின் முகத்தை கூட ஏறெடுத்து பார்க்காமல் தாலியை கட்டினார். கற்பகமோ தன் அன்பையெல்லாம் தேக்கி வைத்த கண்களால் சுந்தரத்தையே பார்த்து கொண்டிருந்தார். அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

‘இவள கட்டனதுக்கு நான் தான் அழுவனும், இவ எதுக்கு சீன போடுறா’ என கடுப்பானார் சுந்தரம்.

மாலை மாற்றும் வைபவம் எல்லாம் முடிந்தவுடன், முத்துப்பாண்டி மணமக்களிடம் வந்தார். சுந்தரத்தை இருக்கி கட்டி கொண்டவர்,

“மாப்பிள்ளை, என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். அவ கண்ணுல இனிமே நான் ஆனந்த கண்ணீரை தான் பார்க்கணும்” என சொல்லியவாறே தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல் அழுதார்.

ஊர் பெரிய தனக்காரரே அழுவதைப் பார்த்து, கல்யாணத்திற்கு திரண்டிருந்த ஊரே அழுதது. வள்ளிதான் எழுந்து முத்துப்பாண்டியை சமாதானம் செய்தார்.முத்துப்பாண்டியின் வீடு நோக்கி பயணப்பட்டனர். மனம் கொள்ளா சந்தோஷத்தோடு கற்பகமும், உள்ளம் முழுக்க சோகத்தோடு சுந்தரமும், நெஞ்சு நிறைய சஞ்சலத்தோடு வள்ளியும் மெது நடை போட்டனர் வீடு நோக்கி.

திருமணத்தை முடித்து விட்டால், மகனை காப்பாற்றி விடலாம் என்று நினைத்த வள்ளி, அதற்கு கற்பகத்தை பலிகடா ஆக்கினார். ஒரு பெண்ணை ஒழிக்க இன்னொரு பெண்ணை கேடயமாக பயன்படுத்தினார் அவர். திருமணத்தால் அவர்களை இணைக்க முடிந்த வள்ளியால், திருமண பந்தத்தில் அவர்களை இணைக்க முடியுமா..

 

எட்டி நில்லு….

error: Content is protected !!