Ennai Ko(Ve)llum Vennilavei – 21

~21~

கறாராக அவள் சொன்னதை மற்றொரு காதில் வாங்கிய படி போன் பேசிக் கொண்டிருந்த ஆதிக்கின் இதழ் சிரிப்பில் வளைய, ராஜோ குழப்பத்திலும் தயக்கத்திலும் ஆழ்ந்தான்..

அவனது தயக்கத்தை கண்டவள், ஆதிக்கை கை நீட்டித் திருப்ப..அவளின் தொடுகையில் திரும்பியவன்..

“என்ன..?” என்றான் காதில் அலைபேசியுடன்

அவனிடம் ஒரு நிமிஷம் என்றதும், “சார் ஐ வில் கால் யூ பேக்..” அந்தப் பக்கம் உரைத்தவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு இவர்களை நோக்கித் திரும்ப

“நீ..நீங்க தான் ராஜை மிரட்டி வச்சிருக்கீங்களா..?” விழிகளை உருட்டி விழித்து அவள் வினவ

“ஹே..என்ன டி என்னை மிரட்டுற..?” அவனின் கேள்வியில் முறைத்தவள் அங்கிருந்த இருவரையும் கண்டு கொள்ளாமல்

“டேய் ஆதிக் போனா போகுதுன்னு உனக்கு மரியாதை கொடுத்தா என்னையே நீ டி போடுவியா..?” இடுப்பில் கை வைத்து முறைக்கும் மதியையும், அவளது மிரட்டலைக் கண்டு சிரிக்கும் ஆதிக்கையும் கண்டு ஆவென வேடிக்கை பார்த்தனர் ராஜும் ரேகாவும்..

ஆதிக்கை இதுவரை யாரும் மரியாதையின்றி பேசியது இல்லை..அவனுக்கும் அது பிடிக்காது..ஆனால் இன்றோ அவளது பேச்சினை ரசித்துச் சிரிக்கிறான்…

அவனது சிரிப்பை பார்த்து முறைத்தவள், “ராஜ்..நீ இவனுக்கெல்லாம் பயப்படாத..நான் இருக்கேன்..இனி இவங்கள நீ அண்ணா சொல்லு..” என்றவளுக்கு ஒருமையும் பன்மையும் மாறி மாறி வர அதை அங்கிருந்த மூவரும் குறித்துக் கொள்ள தவறவில்லை..

“ராஜ்…நீ என்னை அண்ணா கூப்பிடு அப்புறம் இந்த ரெளடி கிட்ட யார் அடி வாங்குறது..?”இலகுவாய் சொன்னவன்

“எனக்கு முக்கியமான கால் பேசனும்…நீங்க பேசிட்டு இருங்க..குட் நைட் ராஜ்..குட் நைட் மதி…மதியழகி…” என்றவன் அறையின் வாயிலில் நின்றிருந்த ரேகாவையும் அவளது அழுது சிவந்திருந்த விழிகளையும் புருவம் சுருங்கப் பார்த்தவன் அமைதியாய் விலகிவிட்டான்..

அவன் விலகிப் போனதும், திரும்பி ரேகாவை ஒரு முறை பார்த்தவள், “ரேக்ஸ்…எதுக்கு நீ ஓரமா நின்னு ராஜை சைட் அடிக்கிற..சும்மா இங்க நின்னே சைட் அடி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்…” என்றதும் தான் ராஜே அவளை கவனித்தான்..

ஆனால் அவளின் மீதிருந்த கோபத்தின் கடுகடுப்பு சிறிதும் இல்லாமல், “குட் நைட் தனா…” சின்ன சிரிப்போடு அவளின் பெயரை சுருக்கி அழைத்தவன், மதியிடமும் தலையசைத்து அறைக்குள் நுழைந்தான்..

அவன் தலையசைத்து அகன்றதும் ரேகாவின் புறம் திரும்பியவள், “என்ன ரேக்ஸ் அவர் உன்னை தனா சொல்லுறார்..”

“இல்ல மதி, என் பெயர் வதன ரேகா..அதை தான் அவர் தனா’ன்னு சொல்றாங்க..” என்றவளின் உதட்டில் வெட்கச் சிரிப்பு

அவனது இலகுவான முகத்திலும் பதிலிலும் இருந்தே, அவனது மனநிலை ரேகாவிற்கு தெளிவாய் புரிந்தது.
அவளும் சிரிப்புடன் அறைக்குள் நுழைய, மதிக்கு அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் அளவிற்கு காதலோ உறவுகளோ தெரியவில்லை..

இருவரும் சென்றதும் திரும்பி ஆதிக் சென்ற திசையைப் பார்க்க, அவன் மொபைலை நோண்டிக் கொண்டே படியேறிக் கொண்டிருந்தான்..

அவளது அருகே வந்து அலைபேசியை பாக்கெட்டுள் போட்டவன், “மதி..போய் தூங்கு..குட் நைட்..” தலையசைத்து அவன் சொல்ல, ஆமோதிப்பாய் சிரித்து மதி சென்றதும், தானும் அறைக்குள் நுழைந்து கொண்டான்..

அறைக்குள் நுழைந்த மதி, “ரேக்ஸ்…எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறியா..?” என்றாள் எடுத்ததும்.

தனது கணவனின் முகத்தில் சிரிப்பை வரவழைத்தவளுக்கு தான் உதவாமலா..? “சொல்லு மதி..உனக்கு இல்லாத ஹெல்ப்பா..” அவளது பதிலில் சிரித்த மதி, என்னோட திங்க்ஸ் எல்லாம் ரெண்டு மூணு பெரிய பேக்ல இருக்கு அதை சார்ட் பண்ணனும்…” மதி சொன்னதும் சரியெனத் தலையசைத்த ரேகா, அவளுக்கு உதவ முன்வர, தாய் வாங்கி கொடுத்த புடவையை அங்கிருந்த டேபில் மீது அடுக்கியவள், தனது நவநாகரீக உடைகளைப் பெட்டியில் அடுக்கத் தொடங்கினாள்..

என்ன? ஏது? எனக் கேள்வி கேட்காவிட்டாலும் அவளுக்கு ரேகா உதவி செய்ய, அனைத்தையும் தயார் செய்தவள் தனது கைப்பையையும் தயார் செய்து, அலைபேசியை சார்ஜில் போட்டாள்..

அனைத்தையும் தயார் செய்து விட்டாள், இங்கிருந்தவற்றில் பெட்டியில் இடம் பெற்றது ஆதிக் வாங்கிக் கொடுத்ததாய் சொன்ன சேலையும், அவளின் துவைக்காத முகூர்த்த பட்டும் தான்…

பெட்டிகளைத் தூக்கி ஓரமாய் அடுக்கியவள், ரேகாவிடம் நன்றி உரைத்துவிட்டு பால்கனிக்கு சென்றவள், தெரிந்த ட்ராவல் ஏஜென்ஸிக்கு அழைப்பு விடுத்து நாளை மாலை தனது பயணத்தை உறுதி செய்தாள்..

நினைத்ததை முடித்த திருப்தியில் அறைக்குள் நுழைந்தவள், ரேகாவை பார்த்து சிரிக்க, “மதி, நாளைக்கு மார்னிங் ஆதிக் அண்ணா ரூம்ல இதையெல்லாம் அடுக்கி வைக்குறப்போ இதையெல்லாம் பண்ணியிருக்கலாம் தானே…அர்த்த ராத்திரில இதெல்லாம் தேவையா..” ரேகாவின் கவலையில் வாய்விட்டு சிரித்தவள்

“ஹய்யோ ரேக்ஸ்..நான் நாளைக்கு கலீபோர்னியா கிளம்புறேன்..” என்றாள் சிரிப்பினூடே

அவளது விளையாட்டுத் தனத்தை ரசித்தவள், “அட காமெடி பண்ணாத…” மதி ஒற்றைப் பதில் அளித்துவிட்டுப் படுத்து கொள்ள

“ஹே ரேக்ஸ்..தட்ஸ் ட்ரூ…நான் நாளைக்கு ஈவினிங் ஸ்சூ…” கையைப் பறப்பது போல் வைத்துக் காட்டியவள் மறுபுறம் வந்து படுத்து விட்டாள்..

ரேகாவிற்கு இவள் உண்மையைச் சொல்கிறாளா பொய் சொல்கிறாளா? என்ற குழப்பத்தில் மதியை எழுப்பத் திரும்ப, அங்கே மதியோ தூங்கி ஒரு சாமம் ஆகியிருந்தது..

மறுநாள் அதிகாலையே எழுந்த மதி, குளிரில் குறுக்கி படுத்திருக்கும் ரேகாவிற்கு போர்வையை போர்த்தியவள் ஜாகிங் உடைக்கு மாறிக் கீழிறங்கி விட்டாள்..

வீட்டின் மருமகள், இங்கு வந்து ஒரு நாள் தான் ஆகிறது என்ற எந்தக் கூச்சமும் இல்லாமல், ஹாலைத் தாண்டி வெளியேற அவளுக்கு முன் ஆதிக் வெளிவாசலைக் கடந்து போயிருந்தான்..

வேகமாய் அவனுடன் இணைந்தவள், “ஆதிக் நில்லு..நானும் வாரேன்..” என்றவளின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன்,

“மெதுவா வா..” வேகத்தைக் குறைத்து அவளுடன் இணைந்து கொண்டான்..

மெளனமாய் தங்களது நடையை எட்டிப் போட்டவர்களில், “தூக்கம் வரலையா மதியழகி…” என்றவனின் பார்வை சாலையில் இருந்தாலும் கேள்வி அவளிடம் இருந்தது..

அவனது முழுநீள அழைப்பில் முறைத்தவள், “நல்லா தூங்கினேன் ஆதிக் வர்மா..” என்றாள் விடாமல்
அவளின் பதிலில் சிரித்தவன், “உனக்கு ரொம்ப தைரியம் தான்..”

“ஆமா என் தைரியத்துக்கு என்ன குறை..சரி அது இருக்கட்டும்..அத்தைய எப்போ ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போற..” அவளின் கேள்வியில் திரும்பி அவளை ஒருமுறை உற்றுப் பார்த்தவன்

“ஏன்?” அவனுக்குத் தெரியும் அவளது கேள்வியின் முடிவு எதுவாய் இருக்கும் என்பது

அவனின் துளைக்கும் பார்வையில் தனது பார்வையை மாற்றிக் கொண்டவள், “ஹேய் என்ன ஆதிக் இப்படி பார்க்குற..?”

“ஒண்ணுமில்லை..இன்னைக்கு மார்னிங் 10.30க்கு போகணும்..” என்றவன் தனது ஓட்டத்தைத் தொடர, அவனுக்கு இணையாய் ஓடியவள்

“எப்போ வருவ..?” என்றாள் சாலையில் தனது பார்வையை பதித்து

“தெரியல ஹாஸ்பிட்டல் போனா தான தெரியும்..” என்றவன் எதையோ எதிர்பார்த்து அவளது முகம் பார்க்க, அவனை ஏமாற்றாமல்

“அப்போ சரி ஆதிக்..இன்னைக்கு ஈவினிங் நான் கிளம்புறேன்..” நிற்காமல் தனது ஜாகிங்கை தொடர்ந்தவளைக் கண்டு கொள்ளாமல் அவனும் தொடர

“உனக்கு நான் சொன்னது கேட்டுச்சா..?” குழப்பமான அவளது முகத்தை ஏறிட்டவன்

“சரி போ…ஆறு மணிக்கு முன்னாடி வீட்டுக்கு வந்திடு..” எங்கே போகிறாய் என எதுவும் கேட்காமல் இத்தனை மணிக்கு வந்துவிடு எனச் சொல்லும் அவனிடம் இதற்கு மேல் என்ன சொல்வது எப்படி சொல்வது என்பது அவளுக்குப் புரியவில்லை..

பல யோசனையுடன் ஓட்டத்தை முடித்தவள் வீட்டுக்குள் நுழைந்ததும் எதிர்பட்ட வேணிக்கும் தர்மருக்கும் தனது காலை வணக்கத்தை தெரிவிக்க அவர்களும் சிரிப்புடன் அதை ஏற்றுக் கொள்ளவும் அவர்களுடனே அமர்ந்து கொண்டாள்..

அவர்களின் பேச்சை அமைதியாய் காதில் வாங்கி கொண்டு படிகளில் ஏறியவனுக்குத் தெரியும் மதியின் முடிவு எதுவென..?

ஆதிக் அறைக்குள் சென்றது வேணியின் புறம் தனது கவனத்தை திருப்பியவள் பேச ஆரம்பிக்கும் முன், மதியின் பெற்றோர் வந்து சேர..

‘இவங்களையும் சமாளிக்கனுமா..?’ என்ற மலைப்பு மதிக்கு வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்
மதியின் கோலத்தைக் கண்டு தலையில் அடித்து கொண்ட குழலி, “மதி போய் குளிச்சிட்டு புடவை மாத்திட்டு வா..” என்றவரின் முகத்தில் இருந்த கடுமை குரலில் இல்லை..

அன்னையின் கடுமை எதற்காகவென புரியாத போதும் தனக்கு காரியம் ஆக வேண்டியுள்ளது என்பதால் அமைதியாய் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்..

“சாரி சமந்தி…அவளை இன்னும் சின்ன புள்ள மாதிரியே..” குழலி முடிக்கும் முன் இடையிட்ட வேணி

“மதி இப்படி இருக்கிறது எங்களுக்கு பிடிச்சிருக்கு மதினி..விடுங்க போக போக சரியாகிடும்..” என்றவர்களின் பேச்சு திசை மாறியிருந்தது..

குளித்து முடித்து பூஜை அறையில் இருந்து வெளி வந்த ரேகாவும் இவர்களை வரவேற்று அமர்ந்து கொள்ள, அலுவலகத்திற்குச் செல்ல கிளம்பி வந்த ராஜ் ஒற்றைத் தலையசைப்போடு விடைபெற்று யாரும் கேள்வி கேட்கா வண்ணம் வீட்டை விட்டு வெளியேறியிருந்தான்.

ஆதிக் குளித்து முடித்து வருவதற்குள் தானும் குளித்து ஆதிக்கின் அறையில் மதி காத்திருக்க, குளித்து முடித்து மேல் சட்டையின் பொத்தானை அணிந்து கொண்டே வெளிவந்தவனுக்கு மதியை கண்டு எந்த ஆச்சர்யமும் எழவில்லை..

அவளை கேள்வியாய் பார்த்தவன், “என்ன வேணும்..?” என்றான் இறுக்கமான குரலில்

“ஆதிக்..” தயக்கமான அவளது குரலில் ஒருமுறை திரும்பி பார்த்தவன்

“சொல்லு மதி…எனக்கு டைம் ஆகுது..”கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டே அவன் சொல்ல

“அத்தைக்கு ஹாஸ்பிட்டல் போய்ட்டு என்ன சொன்னாங்கன்னு பார்த்துட்டு எனக்கு போன் பண்ணுவியா..?” இதுதானா நீ கேட்க வந்தது என்ற நம்ப முடியா பார்வை பார்த்தான்..

“சரி” எனத் தலையசைத்து கீழே வந்தவன், மதியின் பெற்றோரோடு உணவருந்தியவாறு தன்மையாய் பேசினான்..

குழலிக்கும் செழியனுக்கும் ஆதிக்கின் அலட்டல் இல்லா பேச்சு பிடித்துவிட, தன் பெண் கொடுத்து வைத்தவள் என எண்ணிக் கொண்டே மகளைப் பார்க்க அவளோ இவ்வுலகத்தில் இல்லாமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்..

ரேகாவிற்கு மதி நேற்று இரவு பேசியதே காதில் ஒலித்து கொண்டிருக்க, இப்போது அவளது அமைதியை பார்த்த பின் தான் ஆசுவாசமாகயிருந்தது..

ஆனால் மதியின் அமைதி தான் ஆபத்து என்பது செழியனைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
ஆதிக், “அம்மா நான் ஆபிஸ் போயிட்டு ஒரு சின்ன வொர்க் இருக்கு அதை முடிச்சிட்டு ஹாஸ்ப்பிட்டல் வந்திடுதேன்..நீங்களும் அப்பாவும் டிரைவர் கூட வந்துருங்க..” அலைபேசியை பார்த்தவாறு சொன்னவனை தடுத்த செழியன்

“மாப்பிள்ளை நாங்களும் வரோம்…” அவசரமாய் சொன்னவர்

“மதி நீயும் வா மா..” என்றார் மகள் ஏதும் கிறுக்குத் தனம் செய்து விடக் கூடாதே என்பதில் கவனமாய்

தந்தையின் பேச்சில் அவரை முறைத்தவள் மறுத்து பதிலளிக்கும் முன், “இல்ல அண்ணா…நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு இன்னைக்கு ஹாஸ்ப்பிட்டல் வர வேணாம்..மதி ரேகா ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க..” வேணி மறுத்து கூறியதும்

தந்தையை நோக்கி ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கியவளை செழியன் முறைக்க, ஆதிக் கவனித்து வாசலை நோக்கி நகர்ந்தான்.

அனைவரும் கிளம்பி சென்றதும், வாசலை பூட்டிய மதி, நிலையில்லாமல் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ரேகாவின் கேள்விகள் அனைத்தும் காற்றில் கரைந்தது..

காலையும் உண்ணவில்லை மதியமும் உண்ணவில்லை நடக்கும் நடையையும் நிறுத்தவில்லை…கேள்வி கேட்கும் ரேகாவையும் மதி பொருட்படுத்தவில்லை..

மணி மூன்றைத் தொட்டதும் விமானத்திற்கு நேரமாகுவதை உணர்ந்தவள் அவசரமாய் அலைபேசியை எடுத்து ஆதிக்கை விடுத்து ராஜிற்கு அழைக்க

அருகே அமர்ந்திருந்த ரேகாவும் இவளது வாயைத் தான் பார்த்து கொண்டிருந்தாள், “ராஜ்..நான் மதி பேசுறேன்..” அவளின் பேச்சில் ரேகா என்னவென்று ஊன்றி கவனிக்க

“ராஜ்…அத்தைக்கு டாக்டர் என்ன சொன்னாங்க..” என்றாள் அடுத்த கேள்வியாய்

“ஒண்ணுமில்லை அண்ணி..ஷி இஸ் நார்மல்..ஆப்ரேஷன் வேணாம் சொல்லிட்டாங்க…டேப்லட் எடுத்துக்க சொல்லிருக்காங்க..” என்றவனை அந்தப் பக்கம் ஆதிக்கின் குரல் தடுக்க

“அண்ணா அண்ணி தான் கால் பண்ணிருக்காங்க… இந்தாங்க..” மதியின் அனுமதியில்லாமல் அலைபேசி ஆதிக்கின் கரங்களுக்கு தாவியிருக்க..

ஆதிக்கின் கனீர் குரலை ஒரு நிமிடம் உள்வாங்கியவளின் உடல் ஒரு முறை தூக்கி போட திரட்டியிருந்த தைரியத்தை வரவழைத்து கொண்டவள், “ஆதிக் வர்மா..” என்றவளின் குரலில் இருந்த உறுதி அவனை ஒரு நிமிடம் வரப் போகும் புயலை உள்வாங்க சொன்னது..

“சொல்லு மதியழகி..” என்றவனின் குரலும் உன்னை நானறிவேன் என்பதை எடுத்துரைக்க

“பை பாஸ்..” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள்..

சொற்ப நிமிடங்களில் முடிவை எடுத்து அதைச் செயல்படுத்துமளவிற்கு அவளது மனவுறுது இருந்தது..

கால் டாக்சியை வரச் சொன்னவள், நேற்று தங்கியிருந்த அறைக்குச் சென்றவள் தனது பேக்கை மாட்டிக் கொண்டு
கீழே வர, திகைத்து அமர்ந்திருந்த ரேகா என்னும் சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது..

“ஹேய் மதி நீ என்ன பண்ண போற..?” நடுக்கத்துடன் அவள் கேட்கவும் திரும்பி அவளது முகம் பார்த்தவள்..

“ரேக்ஸ் நேத்தே உன்கிட்ட சொல்லிட்டேன்..எனக்கு இப்போ நின்னு பேசுற அளவிற்கு டைம் இல்ல…ப்ளைட்டுக்கு நேரம் ஆகிட்டு..நான் உனக்கு கால் பண்ணுறேன்..டோன்ட் மிஸ்டேக் மீ ரேக்ஸ்…” நடந்த வாக்கில் அவளிடம் உரைத்தவள், அதே வேகத்தோடு வண்டியில் ஏறிக் கையசைத்து சென்றுவிட்டாள்..

என்ன ஏது என்று சுதாரிக்கும் முன் அனைத்தும் நடந்து முடிந்துவிட, என்ன செய்ய வேண்டும் என்ற வழியறியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் வதனரேகா..

ஆதியும் மதியும் பிரிவார்கள்…