~23~
அலுவலகத்திற்குச் சென்ற ஆதிக் அடுத்த நாளில் தன்னைக் கொஞ்சம் மீட்டெடுத்தவன், வார இறுதியில் வைத்திருந்த தொழில் முறை வரவேற்பு நிகழ்ச்சிக்கு அடித்திருந்த பத்திரிக்கையை மாற்றக் கொடுத்து வீட்டிற்கு வந்த போது மாலை ஆகியிருந்தது..
அச்சகத்தில் இருந்து தர்மருக்கு தகவல் கொடுத்திருக்க, குடும்பம் மொத்தமும் அவன் வருகைக்காகக் காத்திருந்தது..
அழுத்தமான நடை…. ஒரே ஒரு நாளில் முன்பைவிட இன்னும் அழுத்தத்தைக் கூட்டியிருந்த நடையில் இருந்தே அவனது இறுக்கம் அனைவருக்கும் புரிந்துவிட, ஹாலில் குழுமியிருந்த விகாஷ், தர்மர், வேணி ராஜ் அவனைத் தான் பார்த்திருந்தனர்..
அவனுக்கும் அவர்கள் தனக்காகத் தான் காத்திருக்கிறார்கள் என்று புரிந்தாலும், ஏதும் பேச விரும்பாதவன் மாடிப் படியில் ஏற முற்பட்ட..அவனைத் தடுத்து நிறுத்தியது விகாஷின் அழைப்பு
“ஆதி..” அவனின் அழைப்பில் நின்று நிதானமாய் திரும்பி வெறித்த பார்வை பார்த்தான்
தனது முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்திருந்த அனைவரின் மீதும் பார்வையை பதித்து, “இந்த வாரம் ராஜ் ரிஷெப்சன் மட்டும் தான் நடக்கும்..மதியழகி வரமாட்டாங்க..அவங்க பேரன்ட்ஸ் அட்டென்ட் பண்ணுவாங்க..அன்ட் ஆல்சோ கேட்குறவங்க கிட்ட என்ன சொல்லனும்னு எனக்குத் தெரியும்..அவ்வளவு தானே..” பேசி முடித்தவன் வேகமாய் படியேற, அங்கே அறையின் வாயிலில் தவறிழைத்த குழந்தையாய் நின்ற ரேகாவின் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரைக் கண்டவனின் நடை அவளது அருகே சென்று நிதானித்தது..
“ரேகா…மதி என்கிட்ட சொல்லிட்டு தான் இந்த முடிவெடுத்தா..சோ நீ இதைவிட்டு உன் வாழ்க்கைய பாரு..”அவளிடம் மெதுவாய் சொன்னவன், “ராஜ்..” எனச் சத்தமாய் அழைத்திருந்தான்..
ஆதிக்கின் சத்தத்தில் படிகளில் தாவியேறிய ராஜ், “அண்ணா..” என்றழைக்க
நேற்றைய போலவே அவனது இதழில் ஒரு கசப்பான புன்னகை தோன்றி மறைந்தது..
ரேகாவின் கண்ணீர் சிந்திய விழிகளைக் கேள்வியாய் பார்த்த ராஜ் ஆதிக்கை பார்த்து நிற்க, “ராஜ்..உனக்கு ரேகாவை பிடிக்கும்னு எனக்குத் தெரியும் அவளுக்கும் உன்னைப் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டா அப்படி இருக்கும் போது கல்யாணமான இரண்டு நாளில் இவள அழுத முகமா மட்டும் தான் பார்க்கிறேன்..எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசி பிரச்சனைய தூர ஒதுக்கி வாழுற வழியைப் பாருங்க…” பொறுமையை இழுத்துப் பிடித்து பேசியவன், அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்..
அவனைத் தொடர்ந்து ரேகாவும் அறைக்குள் சென்றுவிட, தலையைப் பிடித்து கொண்ட ராஜ் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான்..
இரண்டு நாளில் அவளிடம் சரியாக பேசவில்லை..நேற்று முதலிரவு அறையில் அவள் வரும் முன்பே சோபாவில் படுத்துவிட்டான்..இதை எதிர்பார்த்தே வந்தவளும் உடை மாற்றி கட்டிலில் படுத்துக்கொள்ள..இப்போது வரையிலும் அவளது முகத்தை ஏறெடுத்தும் பாராமல் தான் நடந்து கொண்டது தவறோ என நினைத்து வருந்தியவன் மெதுவாய் அறைக்குள் நுழைந்தான்..
அறைக்குள் ஆதிக் நுழைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மதியின் பெற்றோர் அலைபேசியில் தொடர்பு கொள்ள ஒருமுறை தலையை அழுந்தக் கோதியவன் அழைப்பை ஏற்று,
“மாமா…நானே உங்கள மீட் பண்ணனும்னு நினைச்சேன்..நீங்க வரீங்களா இல்ல நான் வரட்டுமா..?” என்றான் ஹலோவியை தவிர்த்து..
“நாங்களே வரோம் மாப்பிள்ளை..” அவசரமாய் சொன்ன செழியன், குழலியுடன் ஆதிக்கின் வீட்டை நோக்கி காரை செலுத்த, இவர்களின் வரவை எதிர்நோக்கி ஹாலில் அமர்ந்திருந்தான் ஆதிக்..
இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், இருக் கைகளையும் பிரித்துச் சேர்த்து தீவிர சிந்தனையில் ஆழ, தர்மரும் வேணியும் கூட அங்கே தான் அமர்ந்திருந்தனர்..
ஆனால் எதுவும் கேட்கவில்லை..செழியனின் கார் வாயிலில் நிற்கும் அரவம் கேட்டதும் இருக்கையில் இருந்து எழுந்தவன், “அம்மா ஒரு பத்து நிமிஷம் கழிச்சு மூணு காபி தோட்டத்துக்கு கொடுத்துவிடுங்க..அப்படியே நைட் டின்னர் இன்னும் இரண்டு பேருக்கு சேர்த்துப் பண்ண சொல்லுங்க..” வேணியின் முகத்தைப் பார்த்து சொன்னவன் அவன் பதிலளிக்கும் முன்னே வாயிலை அடைந்திருந்தான்..
ஆதிக் வாயிலுக்கே வருவான் எனத் தெரியாத செழியன், புருவம் நெறித்துப் பார்க்க
“வாங்க..” எனப் பொதுவாய் அழைத்தவன் தோட்டத்தை நோக்கி கை காட்டினான்..
‘என் வீட்டின் படியை கூட மிதிக்க உங்களுக்கு அருகதை இல்லன்னு சொல்லாம சொல்லுறாரோ மாப்பிள்ளை..” என நினைத்த குழலி அதையே வார்த்தையாகவும் ஆதிக்கிடம் கூற
“நம்ம மேல தப்பிருக்கு குழலி..ஷட் அப்” செழியன் அடிக்குரலில் சீறியதில் இருந்தே அவரும் அவ்வாறு தான் நினைத்திருக்கிறார் என்பது ஆதிக்குப் புரிந்தது..
ஆனாலும் பதில் கூறாமல் அங்கிருந்த இருக்கையைக் காட்டி அமரச் சொன்னவன்..
“டிக்கெட் புக் பண்ணிட்டிங்களா..?” அவனது கேள்வி செழியனுக்கானதாய் இருந்தாலும், பார்வை என்னவோ தூரத்தில் காபி எடுத்துக் கொண்டு வந்த வேணியிடம் இருந்தது..
“அடுத்த வாரம் தான் டிக்கெட்..” என்றவர் சொல்லி முடிக்கும் முன் இவர்களை நெருங்கியிருந்த வேணி காபியை வைத்துக் கொண்டே நலம் விசாரிக்க, சிறிது நேரத்தில் வேணி வீட்டினுள் நுழைந்த பின் இவர்களின் பக்கம் திரும்பியவன்
“உங்க பொண்ணு வீட்டுக்கு போயாச்சா..?” என்றான் கைகளை மார்பின் குறுக்கே கட்டி
“எனக்கு இன்னும் போன் பண்ணல மாப்பிள்ள..” செழியன் தான் பதில் சொன்னார்,
குழலியின் புறம் திரும்பியவன்,”அத்தை சொல்லுங்க வீட்டுக்கு போய் சேர்ந்துட்டாளா..?”
கணவனை ஒருமுறை திரும்பி பார்த்தவர் எச்சிலைக் கூட்டி விழுங்கி, “வீட்டுக்கு போயிட்டா மாப்பிள்ளை..” என்றவரின் குரலில் தெரிந்த பயத்தில்
“மாமா…அவங்கள ஒண்ணும் சொல்லாதீங்க நான் தான் மதி கிளம்பும் போது அத்தை கிட்ட இன்பார்ம் பண்ணச் சொன்னேன்..” குழலியிடம் பார்வையைப் பதித்து சொன்னவனைச் செழியன் நம்பவில்லை என்றாலும் அந்தப் பேச்சை அத்தோடு விட்டுவிட்டார்..
சில நொடிகள் மௌனத்தை தொடர்ந்து, “இந்த வாரம் வரவேற்புக்கு குறித்த தேதியில ராஜ்-ரேகா வரவேற்பு மட்டும் நடக்க ஏற்பாடு பண்ணிருக்கேன்..” தகவலாய் மருமகன் உரைத்ததும்…
“நான் வேணும்னா மதியை எப்படியாச்சும் வர வைக்கவா..?” குழலி மன்றாடும் குரலில் கேட்க
“வேணாம் அத்தை..யார் சொல்லியும் மதியழகி இங்க வரக் கூடாது..அதுவும் இல்லாம இது எனக்கும் என் மனைவிக்கும் இருக்கிற பிரச்சனை..சோ” இறுகிய குரலில் உரைத்தவன் கை கோர்த்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்..
செழியனுக்கும் குழலிக்கும் ஆதிக்கை புரிந்து கொள்ள முடியவில்லை…வெகு நிதானமாய் தனது வேலையைத் தொடர்ந்தான்..அவனது முகத்தில் இருந்து எந்த உணர்வையும் அவர்களால் அறிய முடியாமல் போனது..
“மாப்பிள்ள இப்போ மதியில்லாம வரவேற்பு நடந்தா கேள்வி நிறைய வருமே..?” என்ற செழியனின் கேள்வியில் தலை நிமிர்ந்தவன்..
“யா..ஐ நோ..என்கிட்ட இந்தக் கேள்விய கேட்க யாருக்கும் தைரியம் இருக்கிறதா எனக்கு தெரியல..அப்படியே அம்மா அப்பா கிட்ட கேட்டாலும் உங்கள வச்சி தான் சமாளிக்க சொல்லனும்..சோ நீ அப்பா அம்மா கூட இருந்து இந்த பங்ஷன முடிங்க..” அவன் குரலில் இருந்த ஆளுமையை மீறி யாராலும் பேச முடியாது என்பதைக் கண்ட குழலியின் முகத்தில் ஒரு பெருமை..என்னயிருந்தாலும் மருமகன் அல்லவா..
அவனும் அவரது முகத்தைக் கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை…
“அப்புறம்…மதி உங்க கூட எப்படியும் இருக்க மாட்டா..என்னோட கணிப்பு படி நீங்க ஊருக்கு போறதுக்கு முன்ன அவள் ட்ரான்ஸ்பர்’க்கு அப்ளை பண்ணிருக்கனும்..எதுவாயிருந்தாலும் அவளை நீங்க எந்தக் கேள்வியும் கேட்க கூடாது..அவளை எப்படி பாதுகாக்கனும்னு எனக்குத் தெரியும்…சோ நீங்க கவலைப்பட வேணாம்…”
“உங்க பொண்ணுக்கும் எனக்குமான விசயத்தை உங்க கிட்ட சொன்னதே அவள் உங்க வீட்டுக்கு வந்ததுனால தான்…இதைப் பத்தி எங்க வீட்டுல அதுவும் என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத இந்த நிலையில நான் சொல்ல விரும்பல…அதனால மட்டும் தான் உங்கள நான்…” அமர்ந்திருந்த இடத்தை சுட்டிக் காட்டியவன்
“இங்க கூட்டிட்டு வந்தேன்…” முன்னதாக அவர்கள் கேட்ட கேள்விக்கு இப்போது பதிலளித்தவன்
“சரி மாமா அத்தை சாப்பிட போகலாம்..டைம் ஆகிட்டு..” கை கடிகாரத்தைப் பார்த்தபடி சொன்னவன் முன்னே நடக்க, அவனது பின்னே குட்டி போட்ட பூனையாய் போகும் செழியனைப் பார்க்க இந்த நிலையிலும் குழலிக்கு சிரிப்பு வந்தது…
ராஜ் ரேகா வரவேற்பு முடிந்து அடுத்த இரண்டு நாட்களில் செழியன் குழலி ஊருக்கு கிளம்ப, ஒற்றைத் தலையசைப்போடு ஆதிக் விடை கொடுத்தான்..
ஆதிக்கின் மனம் மொத்தமாய் வரவேற்பு நிகழ்ச்சியில் அவனின் காதுபட பேசிய சிலரது வார்த்தையால் அடிவாங்கியிருந்தது.. அவனது எதிரில் மூச்சுவிட தயங்கியவர்கள் எல்லாம் மதியை முன்னிறுத்தி கேள்வி கேட்க, யாருக்கு அவன் பதிலளிக்காமல் பார்த்த பார்வையில் மொத்த கூட்டமும் வாயை மூடிக் கொண்டது..
ஆனாலும் மற்றவர் கேட்ட கேள்வி அவனது மனதை விட்டு அகலுமா என்ன..? அதுவும் திருமணம் முடிந்த மறுநாளே பெண் மாப்பிள்ளையை விட்டுப் பிரிந்துவிட்டாள் என்றால் இந்த உலகம் என்ன கேள்வி கேட்கும் என்பதை நாம் சொல்லி தான் தெரிய வேண்டுமா..?
குழலியின் கரங்களைப் பிடித்து கொண்ட வேணி தனியே அழைத்துச் சென்று, “மதினி..எனக்கு தெரியும் நம்ம புள்ளைங்களுக்கு நடுவுல ஏதோ பிரச்சனை இருக்குன்னு..என்னால ஆதி கிட்ட கேட்க முடியாது ஆனா நீங்க நினைச்சா மதிக்கு புத்தி சொல்லி அனுப்பி வைக்கலாம் தானே..?” ஒரு தாயாய் வேணியின் ஏக்கம் புரிந்தவருக்கு தனது மகளின் மடத்தனம் கூனிக் குறுகச் செய்ய
“மதினி..எங்களால தான் மாப்பிள்ளை வாழ்க்கை இப்படி ஆகிட்டு..” குற்றம் சுமந்த விழிகளுடன் மன்னிப்பு கேட்பவரை தடுத்த வேணி..
“அண்ணி இதுல உங்க தப்பு எங்க தப்பு எதுவும் இல்லை..எனக்கு நம்பிக்கை இருக்கு கூடிய சீக்கிரமே மதியும் ஆதிக்கும் ஒண்ணா சேருவாங்க..” என்றவரின் பெருந்தன்மைக்கு முன்னால் தாங்கள் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்த இருவருமே கனத்த மனதோடு விடைபெற்றனர்..
மதியின் வெளிநாட்டு வாசம் ஆறு மாதத்தைத் தொட்டு நிற்க, இப்போது தனித்த மரமாய் அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு கிளைக்கு மாற்றல் வாங்கியிருந்தாள்..
யாருமில்லாத தனிமைக்கும் அமைதிக்கும் தன்னைத் தானே பழக்கிக் கொண்டவளின் கரங்கள் அவளின் வெறுங் கழுத்தை தடவியது..
ஆம்..அமெரிக்க வந்த அடுத்த நாளே உடைக்குப் பொருந்தாத மாங்கல்யத்தை அதன் புனிதம் அறியாமல் கழற்றி வைத்திருந்தாள்..
குழலி வந்த அன்றே அதைப் போட சொல்லிச் சண்டையிட, தனது உடைக்குப் பொருந்தாத நகை என்று சொன்னவள் அதிலிருந்து இரண்டு நாட்களில் இடம் மாறி வந்து விட்டாள்..
இன்று வரையில் தன்னை ஏன் இப்படி செய்தாய் எனக் கேள்வி கேட்காத தாயையும்..இங்கிருந்து போகாதே எனக் கெஞ்சாத தந்தையையும் நினைத்து அவளுக்கு ஆச்சர்யம் தான்..
முதல் ஒரு வாரம் தனித்து வாழ, வேலை செய்ய அவளுக்கு கடினமாகத் தானிருந்தது..ஆனால் அடுத்தடுத்து நேரத்தை ஒதுக்கி அனைத்தையும் செய்ய பழகிக் கொண்டாள்..
அவள் அங்குக் குடிவந்த மூன்று மாதத்தில் பக்கத்து அப்பார்ட்மென்டில் ஒரு தமிழ் ஜோடி குடிவர, அழகாய் அவர்களோடு பொருந்தி கொண்டவளது எண்ணத்தில் முதன் முதலாய் ஆதிக்கை பற்றிய விதையை விதைத்தனர் அத்தம்பதியினர்.
அலுகலகத்தில் தனது கவனத்தை முழுவதும் செலுத்திய ஆதிக், வீட்டிற்கு வருவதைத் தவிர்க்க வெளியூர் பயணம் மேற் கொண்டான்..
யாராலும் அவனிடம் நெருங்க முடியவில்லை..அனைவரிடமும் ஒரு ஒதுக்கமும் தேவைக்கு பேசும் பேச்சுகள் தான்..விகாஷ் மதியைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தால், ஒற்றைப் பார்வை பார்த்து விலகிவிடுவான்..
தனக்கான ஒரு வட்டத்தைப் போட்டு கொண்டு எக்காரணம் கொண்டும் வெளிவர விரும்பவில்லை..அதே சமயம் மதியை அவனின் பார்வை வட்டத்திற்குள் தான் வைத்திருந்தான்..
செழியனும் குழலியும் தினமும் வேணியிடம் பேசினாலும் மகனின் வாழ்வுக்கு என்ன வழி என்பதை அவரால் கேட்க முடியவில்லை..
இறுதியாக மதியின் பெற்றோரிடம் விமான நிலையத்தில் வைத்துப் பேசியது தான்…செழியனும் ஆதிக்கிடம் பேச விழையவில்லை அவனும் அதைக் கண்டு கொள்ளவில்லை..
ஆனால் இருவரும் அவர்களின் நிலையில் இருந்து மாறி வந்திருந்தனர்..
மதி ஆதியாய் வளர்வாள்…